Pages

06 November 2013

கும்பகோணம் குப்புசாமி தீட்சிதர் கதைகள்
தெனாலிராமன்,பீர்பால்,முல்லா கதைகளை விரும்புகிறவராக இருந்தால் தீட்சிதர் கதைகளையும் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும். இந்த மூவரின் நவீன வார்ப்புதான் தீட்சிதர். கும்பகோணத்தை சேர்ந்த குப்புசாமி தீட்சிதர் சரியான குறும்புக்கார கிழவர். அவருடைய அங்கதமும் தந்திரமும் கலந்த சேட்டைகள்தான் இந்த எளிய கதைகளின் மையம். சில கதைகள் மேலே குறிப்பிட்ட மூவரின் கதைகளின் சாயலிலேயே எழுதப்பட்டுள்ளது.

இது குழந்தைகள் கதைகள் கிடையாது. பெரியவர்களுக்காக அக்காலத்தில் எழுதப்பட்ட கதைகள். இந்த தீட்சிதர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்கிற சுவாராஸ்யமான மனிதர்கள், அல்லது சம்பவங்களை ஒட்டி இக்கதைகளை எழுதியிருக்கிறார் பம்மல் சம்பந்தமுதலியார்.

1936 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இக்கதைகளில் அக்காலகட்டமும் , அதன் நகரத்து மனிதர்களும் அச்சு அசலாக வருகிறார்கள். டிராம் வண்டி,கொடியாட்டினால் ரயில்கள் நிற்கிற ஸ்டேஷன்கள், தமிழகத்திற்கு விஜயம் செய்கிற இங்கிலாந்து சக்கரவர்த்தி, ஆங்கிலேய கலெக்டரோடு தீட்சிதரின் அனுபவம் என இன்னும் நிறைய அதிசயக்கிற விஷயங்கள் உண்டு.

ஒரு கதையில் தீட்சிதர் ஏப்ரல் ஃபூல் பண்ணி விளையாடுகிறார் , 80 ஆண்டுகளுக்கு முன்பே! இன்னொரு கதையில் டிராம் வண்டியில் டிக்கெட் எடுக்காமல் ஏமாற்றுகிறார். இன்னொரு கதையில் பேய் பிடித்ததாக ஏமாற்றும் பெண்ணுக்கு சரியான பாடம் கற்பிக்கிறார். எல்லாகதைகளிலும் மையமாக நகைச்சுவையும் ஆச்சர்யப்படுத்துகிற ட்விஸ்டுகளும் உண்டு.

இன்று நாம் நம்முடைய திரைப்படங்களில் திரும்ப திரும்ப பார்க்கிற சில காமெடிகளின் ஆதிமூலத்தை இக்கதைகளில் காண முடிகிறது. வில்லன்களுக்கு பேதி மாத்திரை கொடுப்பது, டிரைனில் டிக்கட் எடுக்காமல் டிடிஆரை ஏமாற்றுவது, பேய் பிடித்தவரை வைத்து செய்யப்படுகிற நகைச்சுவை, கடன்காரனுக்கு காசு கொடுக்காமல் டபாய்ப்பது, டிக்கட் எடுக்காமல் பஸ்ஸில் (இவர் காலத்தில் ட்ராம்) பயணித்து தப்பிப்பது என நிறைய இந்நூலில் உண்டு.

ஒரு முறை தீட்சிதர் வீட்டில் திருடன் ஒருவன் நுழைந்து விடுகிறான். அவன் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு தூங்கட்டும் என கொல்லைபுறத்தில் காத்திருக்கிறான். சாப்பிட்டு முடித்து கை கழுவ போன தீட்சிதர் அவனை பார்த்துவிடுகிறார். ஆனால் உடனே எதுவும் செய்யாமல் அமைதியாக அருகில் இருக்கிற அண்டாவில் தண்ணீரை மோந்து வாயில் ஊற்றி ஊற்றி கொப்புளிக்க ஆரம்பிக்கிறார்.

கொப்புளித்த நீரை மறைந்திருக்கும் திருடன் மீது துப்ப ஆரம்பிக்கிறார். தொடர்ந்து துப்ப நனைந்துகொண்டேயிருந்தாலும் திருடன் பதுங்கியே இருக்கிறான். கைகழுவ போன மனுஷனை காணோமே என தீட்சிதரின் மனைவி வந்து பார்க்க இந்த ஆளோ துப்பிக்கொண்டே இருக்க.. என்னங்க நீங்க என்னாச்சு உங்களுக்கு என கேட்கிறார். தீட்சிதரோ மனைவியின் மீதே இப்போது துப்ப தொடங்கிவிடுகிறார். அதுவும் விடாமல்.. இவருக்கு பித்து பிடிச்சிடுச்சி போலருக்கே என்று பக்கத்து வீடுகளில் போய் சொல்ல.. அவர்கள் சிலர் மொத்தமாக வந்து என்ன ஓய் உங்க ஆத்துகாரி மேல துப்பறேளாமே என்று கேட்க.. தீட்சிதர்..

''கேளுங்கோ முதலியார்... என் ஆத்துக்காரிக்கு நூரு ரூபாவுக்கு நகைநட்டு பட்டுசேலை எல்லாம் வாங்கிகொடுத்திருக்கேன்.. ஆனா நான் ஒருவாட்டி துப்பக்கூடாதா.. என்ன அநியாயம்.. இங்கே கிணத்துக்கு பின்னால ஒரு நல்லவர் இருக்கிறார். அவர் மேல அரைமணிநேரமா துப்பறேன் ஆனா அவர் ஏன் துப்பறீங்கனு ஒரு வார்த்தை கேட்டிருப்பாரா.. எவ்வளவு மரியாதை. அந்த நல்லவருக்கு இருக்கற பொறுமை என் ஆத்துக்காரிக்கு இல்லையே.. '' என்று சொல்ல.. பக்கத்து வீட்டுக்காரர்கள் சேர்ந்து திருடனை பிடிக்கிறார்கள். அதோடு தீட்சிதரின் தந்திரத்தையும் ரசிக்கிறார்கள் என கதை முடிகறிது.

இதேபோல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீட்சிதர் பண்ணுகிற அலும்புக்கு அளவே இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் வெள்ளைக்கார துரையோடு ரயிலில் பயணித்து அவருடைய கர்வத்தை அடக்குகிறார்.

ஒருமுறை கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்து ஜட்கா வண்டி ஒன்றை பிடிக்கிறார். கட்டணம் பேரம் பேசி ரேட் படியாமல் சண்டைபோடுகிறார்கள் தீட்சிதரும் ஜட்காவண்டிக்காரனும்.

இப்போது ஆட்டோவுக்கு மீட்டர் கட்டணம் போல அந்தகாலத்திலும் ஜட்கா வண்டிக்கு கூட அரசே ரேட் நிர்ணயத்திருக்கிறது என்பதை இக்கதையில் பார்க்க முடிகிறது. நிர்ணயித்த தொகைக்கு மேல் கேட்கிற ஜட்காவண்டிக்காரனை தந்திரமாக காவல்துறையிடம் பிடித்துக்கொடுக்கிறார் தீட்சிதர். நூல்முழுக்க குறும்புக்கார தாத்தாவின் கதையோடு அக்காலக்கட்டத்தின் வாழ்க்கைச் சூழலும் சொல்லப்படுகிறது.

தாத்தாவின் இந்த குணத்தைதான் கும்பகோணம் குசும்பு என்று சொல்வார்களோ என்னவோ.. ஆனால் படிக்க செம சுவாரஸ்யம். கூடவே ஒரு நூறு ஆண்டுக்கு முந்தைய காலத்து மனிதர்களையும் சூழல்களையும் கூட அறிந்துகொள்ள முடிகிறது.

28 கதைகள் கொண்ட இந்த குட்டிபுத்தகத்தை ஒரு மணிநேரத்தில் ஏதாவது புத்தகக்கடையிலேயே சும்மா புரட்டுவது போல பாவனை செய்துகொண்டேகூட படித்துமுடித்துவிடலாம். எழுத்து நடையும் எளிமையாகத்தான் இருக்கிறது.

புத்தகமெங்கும் இடம்பெற்றுள்ள கார்டூன் போன்ற ஓவியப்படங்கள் நூலுக்கு மேலும் சுவைசேர்க்கிறது. அவை அக்காலகட்டத்திலேயே வரையப்பட்டதா தெரியவில்லை. அதுபற்றிய குறிப்பும் புத்தகத்தில் இல்லை. ஆனால் வரைந்தவர் நிச்சயம் சிறப்பாகவே வரைந்துள்ளார். நகைச்சுவை கதைகள் பிடிக்குமென்றால் நிச்சயம் வாசிக்கலாம்.

தீட்சிதர் கதைகள்
சந்தியா பதிப்பகம்
விலை 55