Pages

15 January 2014

உங்க குலதெய்வம் யார் சார்?




காலை டிவியில் ஒரு பிரபலமான நிகழ்ச்சியில்... பங்கேற்ற பொது ஜனங்களிடம் அதன் தொகுப்பாளர் அல்லது நடத்துனர் ''உங்க குலதெய்வம் என்ன'' என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வங்களை சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவிஷயம் என் நினைவுக்கு வந்தது.

முதல்சந்திப்பிலேயே என்னிடம் குலதெய்வம் என்னவென்று விசாரிக்கிற விசாரிக்கும் ஆட்கள் சிலரை சந்தித்திருக்கிறேன். நாற்பது அல்லது ஐம்பது ப்ளஸ் வயதுடைய இந்த ஆட்களிடம் என் குலதெய்வத்தின் பெயரைச் சொன்ன அடுத்த நொடி, கொஞ்சம் கூட தாமதிக்காமல் கடகடவென்று நம்முடைய பூர்வாசிரம ஜாதகத்தையே ஒப்பிப்பார்கள்.

நான் என்ன சாதி.. அந்த சாதியில் உப சாதி... என்ன குலம் எந்த கோத்ரம் யாருடைய வம்சாவழி.. என பல விஷயங்களை அப்படியே அடுக்கிக்கொண்டே போவதை பார்த்திருக்கிறேன். நிச்சயமாக ஸ்டன்னிங் மோமன்ட் அது! நம்மைப்பற்றி நமக்கே தெரியாத சங்கதிகளைச்சொல்லி அசத்துவார்கள்.

வெறும் குலதெய்வம் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எப்படித்தான் இந்த மனிதர்கள் நம்முடைய ஊரையும் சாதியையும் சகல விஷயங்களையும் சரியாக கண்டுபிடிப்பார்களோ என்று ஆச்சர்யமாக இருக்கும். இதற்கென்றே எதும் மென்பொருள் வைத்திருப்பார்களோ என்று வியந்திருக்கிறேன். வெறும் குலதெய்வம் பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி சாதிக்குள் சாதியான உபசாதிகளைக் கூட கணிக்கிறார்கள் என்பதும் மர்மமானதுதான்!

ஆனால் பாருங்கள் இது ஒருவகையான ''சாதி கண்டுபிடிக்கும் டெக்னிக்'' என்று புரிந்துகொள்வதற்கே எனக்கு பல வருடங்கள் ஆனது. நண்பர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்தில் இருக்கிற ''ஐயர்'' அஃபீசியல் ஒருவர் சாதி கண்டுபிடிக்கும் டெக்னிக் பற்றி எப்போதும் சொல்வார். புதிதாக வேலைக்கு வரும் பையன்களின் தோள்மீது கைபோட்டபடி ஜாலியாக நடப்பார். அப்படியே முதுகை லேசாக வருடிப்பார்த்து ''ஓக்கே..இவன் அவன் இல்லை'' என்று முடிவெடுத்துவிடுவாராம். இவை தவிர தாத்தா பேரை கேட்பது, சொந்த ஊர் குறித்து விசாரிப்பது, நீங்க வெஜிடேரியனா என்று விசாரிப்பது.. என சாதி கண்டுபிடிக்கவே நம்மூர் ஆட்கள் லியார்னாடோ டாவின்சி கணக்கான ஏகப்பட்ட வித்தைகளை கற்று வைத்திருக்கிறார்கள்.

தலித் நண்பர்கள் சிலர் இந்த பேர்வழிகளிடம் சிக்கி... மிக ஜாலியாக தங்களுடைய குலதெய்வங்களைப்பற்றி சொல்லி... இந்த நபர்கள் "அய்ய நீ அவிங்க ஆளா'' என்று முகம்சுழிக்கிறவகையில் பேசி அசிங்கப்பட்ட கதைகள் கூட உண்டு. அதனாலேயே இந்த குலதெய்வம் ராஜகோபால்களை கண்டாலே கன்னங்கள் சிவக்கும் படி ஓங்கி நாலு அப்பு அப்பலாம் போல இருக்கும். இருந்தாலும் இந்த நபர்கள் நமக்கு மிக நெருங்கியவராக அல்லது உடன் வேலைபார்ப்பவராக அல்லது நண்பர்களின் நண்பர்களாக இருந்துதொலைப்பார்கள்.

அதிலிருந்து இதுபோல யாராவது குலதெய்வம் குறித்து கேட்டாலே கோவமாக ''புத்தர்'' என்று கூறிவிடுவது என்று முடிவெடுத்திருந்தேன். அப்படி ஒருவர் என்னிடம் கேட்க நானும் புத்தர் என்று கூற... சில நாட்கள் கழித்து அவர் என்ன புரிந்துகொண்டார் என்பது வேறு நண்பர்கள் வாய்வழியாக வந்தடைந்தது. ''அவன் புத்தர்ன்றான்ப்பா.. தாழ்த்தப்பட்ட சாதியா இருப்பான் போல..'' என்றாராம்.

பெரியாரப்பா!