20 January 2014

சென்னை புத்தகக் கண்காட்சி 2014

#புத்தகக் கண்காட்சியில் ஒரு கடைக்கு நடுவே சின்னதாக மரம் முளைத்திருந்தது. அந்த மரத்தில் கூடுபோல ஒரு செட்டும் அதில் குயில் போல ஏதோ பொம்மையும் அதன் குஞ்சுகளுமாக ஏதோ வைத்திருந்தார்கள். அந்த மரமே கடைக்குள் நம்மை ஈர்க்கும்படி இருந்தது. அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையாக அமைக்கப்பட்டிருந்த கடைக்குள் நுழைந்து நோட்டமிட்டபடி… கடைக்காரரிடம் ‘’சார் இந்த மரம் உண்மையானதா.. இல்ல கடைக்கு அழகு சேக்குறதுக்காக.. சும்மா வச்சிருக்கீங்களா?’’ என்று விசாரித்தேன். ‘’இல்லைங்க இது நிஜ மரம், இது இங்கயேதான் இருந்திருக்கு..’’ என்றவர்…

‘’இந்த மரம் நடுவுல இருக்கறதால இந்த ஸ்டாலை யாருமே எடுக்க மாட்டேனுட்டாங்களாம்.. மரம் ரொம்ப தொந்தரவா இருக்குனு அதை வெட்டிட்டு வேணா ஸ்டால் குடுங்கனு கேட்டுருக்காங்க.. அதனால யாருமே இந்த ஸ்டாலை எடுக்கல.. நல்லவேளை நாங்க போய் ஆர்வமா அந்த ஸ்டாலை எடுத்துகிட்டோம்.. மரம் தப்பிச்சிது’’ என்றார்.

நெகிழ்ச்சியாக இருந்தது. அது ‘’இயல்வகை’’ பதிப்பகத்தின் கடை. அங்கே விற்பட்டிருந்தவை நம்மாழ்வார் எழுதிய இயற்கை தொடர்பான நூல்கள் என்பதில் பெரிய ஆச்சர்யமில்லை.

****

#இன்ஸ்டன்ட் காப்பி போல ஐம்பதுக்கும் அதிகமான ‘திடீர் படீர் வெடீர்’ புத்தக வெளியீடுகள் புத்தகக் கண்காட்சியின் வெவ்வேறு கடைகளில் அன்றாடம் நடைபெற்றன. இதில் பெரும்பாலானவை கவிதைத்தொகுப்புகள். ஒருசில கட்டுரை தொகுப்புகள். மிகமிக குறைவாக சிறுகதை தொகுப்புகள் அதைவிட குறைவாக நாவல்கள்.

எல்லாமே மிக மிக துரிதமாக பதினைந்து பேர் கொண்ட குழுவோடு ‘’நண்பரும் எழுத்தாளருமான **** வின் இந்த நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன்’’ என்று ஒருவர் அறிவித்தபடி வெளியிட இன்னொருவர் பெற்றுக்கொள்ள நான்குபேர் கைதட்ட அங்கே ஒரு எழுத்தாளன் முகத்தில் பெருமிதம் பொங்க புதிதாக இலக்கிய உலகில் உதயமாக… வரிசையில் அடுத்ததாக நூல் வெளியிட காத்திருக்கும் அடுத்த உதயர் தன்னுடைய நூலோடு வர. மீண்டும் வெளியிட கைதட்ட…. முப்பது சொச்சம் விநாடிகளில் புத்தக வெளியீடுகள் நடந்தன.

புத்தகக் கண்காட்சிக்கு முன்பு புக்பாய்ன்ட் அரங்கிலும், சர்பிட்டிதியாகராயர் அரங்கிலும் நடந்த எண்ணற்ற மூன்றரை மணிநேரம மொக்கைப்போட்டிங் புத்தக வெளியீடுகளைக்காட்டிலும் இவ்வகை முப்பது செகன்ட் வெளியீடுகள் சிறப்பானவை. புத்தகத்தை வெளியிட்ட அடுத்த நொடி இஷ்டமிருந்தால் வாங்கலாம்.. வேண்டாமென்றால் அடுத்த கடையில் விற்கிற லிச்சி ஜூஸை வாங்கி இரண்டு மொடக்கு குடித்துவிட்டு நடையை கட்டலாம்! நீட்டி முழக்கி ‘’அன்பான.. இலக்கீய பெருங்குடி..மக்கேளே’’ டைப் கச்சேரிகள் கிடையாதென்பதே மிகப்பெரிய மகிழ்ச்சி!

****

#கான்டீனில் விலை அதிகம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவரையும் அவருக்கு சப்போர்ட்டாக சென்ற சில மாணவர்களையும் ஹோட்டல் நிர்வாகத்தினரும் காவல்துறையினர் சிலரும் அடித்து உதைத்தது பற்றி தி இந்து தவிர்த்து வேறெங்கும் செய்திகள் இல்லை. நானும் பார்க்கவில்லை. அதைப்பற்றி யாருக்குமே அதிக விபரங்கள் தெரியவில்லை. (எழுத்தாளர் குட்டிரேவதியைத்தவிர்த்து).

முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிட்டால் புத்தகக் கண்காட்சியில் உணவு விலை உயர்வாக இருப்பது ஒன்றும் புதிதில்லை. கடை போட்டிருந்த ‘’சாப்பிட வாங்க’’ கடைக்காரர்கள் பதிப்பாளர்களை விடவும் அதிகமாக கல்லா கட்டியிருப்பார் என்றுதான் நினைக்கிறேன். ஆமென்.

****

#புத்தகக் கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு கடையில் வித்தியாசமான ஐஸ்க்ரீம் ருசிக்கக்கிடைத்தது. மினிமெல்ட்ஸ் (MINI MELTS) என்ற பெயர் கொண்ட சின்ன வண்டிகடைக்காரர் யாரோ மிகப்பெரிய கோடீஸ்வரர் போல.. அந்த ஐஸ்க்ரீம் விளம்பரத்திற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு போர்ஷ் (PORSCHE) காரில் ஸ்டிக்கர் ஒட்டி நடு மைதானத்தில் நிறுத்தியிருந்தார். மக்கள் ஐஸ்கிரீம்வாங்கித்தின்றார்களோ இல்லையோ அதை சுற்றி சுற்றி வந்து ரசித்தனர். ஒரு குடும்பஸ்தர் கையில் குழந்தையோடு தன் மனைவியிடம் ‘’பாத்துக்கடி இதான் பெராரி.. அம்பதுகோடி ரூவா காரு..’’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். பாப்பா ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடித்துக்கொண்டிருந்தது. எனக்கும் எச்சில் ஊற.. நானும் கடைபக்கம் ஒதுங்கினேன். எழுத்தாளர் நண்பர் சுரேகா அந்த கடை வாசலில் நின்றுகொண்டிருந்தார். அவர்தான் அந்த ஐஸ்கம்பெனியின் முக்கிய நிர்வாகி என்பது பேச ஆரம்பித்த சிலநிமிடங்களில் தெரியவர.. அப்பாடா அப்ப காசுகுடுக்காம ஒசிலயே மங்களம் பாடிடலாம் என்கிற எண்ணமும் வந்தது. அதற்கேற்ப.. சும்மா சாப்ட்டு பாருங்க என்று ஒரு கப்பு என்னிடம் நீட்டினார். பொரிகடலைபோல ஐஸ்கீரிம் பொலபொலவென பால்பேரிங் போன்று விதவிதமான கலர்களில் இருந்தது.. ‘’என்னங்க இது’’ என்று விசாரிக்க.. அதன் அருமைபெருமைகளை விளக்கினார்.

இது cryogenically frozen ice cream மாம். அதாவது மிக அதிக குளிர்ச்சியில் (-45 டிகிரியில்) வைத்து கல்லுமாதிரி ஐஸ்க்ரீமை ஆக்கி அவற்றை குட்டிகுட்டி க்ரிஸ்டல்களாக மாற்றிவிட்டால்.. எந்த ஃப்ளேவரையும் எதனோடும் பொரிகடலைபோல கலந்து சாப்பிடலமாம். நானும் சாக்லேட்டையும் மேங்கோவையும் கலந்து தின்றுபார்த்தேன்.. செம டேஸ்ட். விலைதான் கொஞ்சம் கூட போலிருக்கிறது ஒரு சின்ன கப்பு 60ரூபாயோ என்னவோ…

நான் ஒசியில்தான் சாப்பிட்டேன் என்றாலும் செமயாக இருந்தது. Minimelts.com என்ற தளத்தில் இந்த பொரிகடலை ஐஸ்கீரிம் பற்றிய மேலதிக விபரங்களை காணலாம்.

****

#கண்காட்சியின் நடுவில் மைய அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு அங்கும் பல்வேறுவிதமான வினோதமான நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்றன. அதில் சிறப்பானது மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட 31 நூல்களின் பிரமாண்ட வெளியீட்டு விழா. நாள்முழுக்க அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் பொன்வண்ணன், நடிகை தேவயாணி அவருடைய கணவர் ராஜகுமாரன் என மூன்று பிரபலங்கள் கலந்துகொண்டனர். அவர்கள் தவிர்த்து 31 நூல்களை எழுதிய எழுத்தாளர்கள் அவர்களுடைய சொந்தக்காரர்கள் ஒன்றுவிட்ட மச்சான் மாமா என ஒரு நூற்றம்பதுபேரும் அதே மேடையை அலங்கரித்தனர். காலை பதினோரு மணிக்குதொடங்கி நிகழ்ச்சி மாலை ஆறுமணிவரைநடந்தது. அவ்வப்போது எட்டிப்பார்த்தால் யாராவது புத்தகத்தை இன்னொருவரிடம் கொடுத்து கொடுத்து சோர்ந்து போய்க்கொண்டிருந்தனர். பொன்வண்ணனையும் தேவயானியையும் பார்க்கதான் பாவமாக இருந்தது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் எழுந்து நிற்பதும் பிறகு மீண்டும் அமர்வதுமாக.. பெண்டு கழண்டிருக்கும்.

****

#இந்த மைய அரங்கில் கவிதை வாசிப்பு நிகழ்வு ஒன்றும் நடந்தது. தமிழின் மிகமுக்கியமான சமகால கவிஞர்கள் ஒவ்வொருவரும் கவிதைகள் வாசித்தனர். இதில் வண்ணதாசன் மனுஷ்யபுத்திரன் மற்றும் கலாப்ரியாவும் கூட கலந்துகொண்டனர். நிறைய பெண்கவிஞர்கள் மேடையை ஆக்கிரமித்திருந்தது சிறப்பு. நிகழ்ச்சி துவங்கியபோது ஆங்காங்கே மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த பலரும் நம்முடைய கவிஞர்களின் கவிதை வீச்சில் மதிமயங்கி அப்படியே மகுடிக்கு கட்டுண்ட பாம்பாக அமர்ந்து கவிதைகளை கேட்டு ரசித்து கைதட்டினர். எத்தனை பேருக்கு கவிதைகள் புரிந்தது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு சில கவிதைகளைத்தவிர்த்து ஒன்றும் புரியவில்லை.

****

#மைய அரங்கு தவிர்த்து உயிர்மை கடைக்கு பக்கத்தில் ஜீவா சிற்றரங்கு என்று ஒரு சின்ன கொட்டகையும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே எழுத்தாளர்கள் வாசகர்களோடு உரையாடிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல்நாள் சாரு பேசினார். பிறகு கலாப்ரியா பேசினார். தங்கர்பச்சானை பேச வைக்குமாறு மனுஷ்யபுத்திரனிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.. அவர்தான் இதற்காக ஆட்களை ஏற்பாடுசெய்துகொண்டிருந்தார். ஆனால் தங்கர்பச்சான் பேசவில்லை. அதனால் மொத்தமாக அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்துவிட்டேன். அதனால் அங்கே என்ன நடந்தது என்று தெரியவில்லை.

சாரு பேசும்போது மட்டும் அவருக்கே அவருக்காக சில நிமிடங்கள் அங்கே ஒதுங்கினேன்.. அவர் நன்றாகவே பேசிக்கொண்டிருந்தாலும் கொசுக்கடி தாங்கமுடியாமல் மீண்டும் கடைகள் இருந்த பகுதிக்கே திரும்பிவிட்டேன். இந்த ஜீவா சிற்றரங்கில் குறும்பட திரையிடல் மற்றும் ஒருசில புத்தக வெளியீடுகளும் நடந்தன. கவின்மலர் சிறுகதை தொகுப்பு வெளியீட்டில் அவருடைய சிறுகதை ஒன்றை நாடகம்போல வாசித்துக்காட்டப்பட்டது. அது பார்வையாளர்களிடம் அவ்வளவு தாக்கத்தை உண்டாக்கவில்லை. காரணம் அது சுத்தமாக புரியவில்லை!

****

#ஞாநி இல்லாத அவருடைய ஞானபானு கடையை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் முடிந்தவரை எல்லா நாளும் கடையில் இருப்பார். அவரிடம் யாரும் நிறைய உரையாட முடியும். இம்முறை டிவி பேட்டிகள், உடல்நலம் என பல காரணங்களால் அவரை ஞானபானு கடையில் பார்க்க முடியவில்லை. ஓரிரு நாட்கள் மட்டும் வந்திருந்தார் போல… கவின்மலரின் சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டிற்கு லுங்கி கட்டிக்கொண்டு வந்திருந்தார். அனேகமாக அதுவும் அவருடைய லுங்கி புரட்சி நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கலாம் என்று யூகித்தேன்.

***

#மனுஷ்யபுத்திரன் எல்லா நாளும் உயிர்மை ஸ்டாலின் வாசலில் அமர்ந்து வருகிற போகிற தன்னுடைய கோடிக்கணக்கான வாசகர்களுக்கு சளைக்காமல் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்துக்கொண்டேயிருந்தார். நானும் அப்படியே கூட்டதோடு கூட்டமாக ஏதோ ஒரு பதிப்பகத்தின் கேட்டலாக் ஐ (காலச்சுவடு என்று நினைவு) நீட்டினேன்.. அதிலும் எதையோ கிறுக்கிக்கொடுத்தார். போன ஜென்மத்தில் அவர் டாக்டராக இருந்திருக்கலாம். சொல்லப்போனால் சமகால மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கிற ப்ரஸ்கிரிப்சன்கள் கூட புரியும்.. இவர் போட்டுக்கொடுக்கிற ஆட்டோகிராப்பில் ஒருவரியும் புரியவில்லை. போடாங்கோ** கொம்** என்று திட்டி எழுதிகொடுத்தாலும்கூட யாரும் கேட்க மாட்டார்கள்… அவருடைய கடையின் ஆஸ்தான புகைப்படக்காரர் பிரபுகாளிதாஸ் மனுஷ்யபுத்திரனை வித்யாசமான கோணங்களில் படம்பிடித்துக்கொண்டிருந்தார். எப்படியும் இந்த பு.க வில் மிக அதிக புகைப்படம் எடுத்துக்கொண்டவர் விருது ‘’மனுஷு’க்கு கொடுக்கலாம்! நீங்க சாதிச்சிட்டீங்க பாஸ்!

****

#மனுஷ்யபுத்திரன் மற்றும் பாஸ்கர்சக்தி இருவருக்கும் ஒரேமாதிரியான இரண்டு சம்பவங்கள் நடந்தன. பாஸ்கர்சக்தியும் நானும் ஒருகடையில் ஏதோ புத்தகம் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் இரண்டு பையன்கள் அவரை கடந்துபோய்க்கொண்டிருந்தனர். அதில் ஒருவன்… பாஸ்கர்சக்தியை காட்டி ‘’டே அவன்டா.. அவன் டிவில வருவான்டா.. அவனேதான்டா..’’ என்றபடி சென்றனர். குட்டிப்பையன்கள்தான். இன்னொரு சந்தர்ப்பத்தில் மனுஷ்யபுத்திரனை கடந்து இரண்டுபேர் கடந்து போய் திரும்பி வந்து.. மீண்டும் முகத்தை பார்த்துவிட்டு ‘’டே இவன்டா… இவனேதான்டா.. டிவில வருவானே.. பேசிட்டே இருப்பானே’’ என்றபடி சொல்லிவிட்டு நகர்ந்துசென்றனர். யாராவது இவர்களை அடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.. தமிழனுக்கு தைரியம் பத்தாதுப்பா!

****

#சென்ற ஆண்டைக்காட்டிலும் இம்முறை எழுத்தாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதை உணர முடிந்தது. எங்கு பார்த்தாலும் புதுப்புது எழுத்தாளர்கள் நிறைந்திருந்தனர். என்னைப்போல அப்பாவி வாசகர்களைதான் தேடி கண்டுபிடிக்க வேண்டியதாயிருந்தது. அடுத்த ஆண்டு என்ன ஆகப்போகிறதோ என்கிற பீதியும் இவர்கள் ஒவ்வொருவரிடமும் உரையாடும்போதும் உண்டானது!


****

#வா.மணிகண்டன், அராத்து, விநாயகமுருகன் போன்றோரின் புத்தகங்களெல்லாம் எக்கச்சக்கமாக விற்றுத்தீர்ந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. உயிர்மையில் அதிகம் விற்பது சுஜாதாவுக்கு பிறகு எஸ்ராவுடைய நூல்கள்தானாம்.. அதை சிலபல விற்பனை விபரங்களோடு நிரூபித்தார் உயிர்மை மேனேஜர் செல்வி! இந்த ஆண்டு வெளியான நிமித்தம்தான் பெஸ்ட் செல்லராம்.. உயிர்மைக்கு வெளியே கதறகதற விற்றுக்கொண்டிருந்தது ஜெயமோகனின் வெள்ளையானை.. எது அதிகம் விற்றிருக்கும் நிமித்தமா வெள்ளையானையா என்பது நிச்சயம் ஆர்வத்தை உண்டாக்கும் கேள்விதான்! என்றாலும் கொற்கை இவையிரண்டையும் விட அதிகம் விற்றிருக்கலாம். சாகித்ய அகாடமி விருதுபெற்ற.. ஆச்சே!

****

#காலச்சுவடு பதிப்பக கடையில் நண்பர் கிருஷ்ணபிரபு எப்போதும் இருந்தார். வருகிற வாசகர்களுக்கு பொறுமையாக முக்கியமான புத்தகங்களை பற்றி எடுத்துச்சொல்லி அதை ஏன் வாசிக்க வேண்டும் என்று விளக்கிக்கொண்டிருந்தார். இதுபோல ஒவ்வொரு கடையிலும் ஒரு ஆள் இருந்தால் இலக்கிய நூல்களை கிளாசிக்குகளை பாமரர்கள் மத்தியிலும் எடுத்துச்செல்லலாம். ஆனால் நாட்டில் ஒரே ஒரு கிருஷ்ணபிரபுதான் இருக்கிறார் என்பதுதான் கொடுமை! அவருடைய பரிந்துரையில் நான் வாங்கியது மீசான் கற்கள் என்கிற நாவல். அதை இனிமேல்தான் வாசிக்கணும்.

****

#முத்துகாமிக்ஸ் கடைக்கு சென்றவர்கள் அந்த நெட்டையான மொட்டைதலை நண்பரை சந்தித்திருக்கலாம். அவர்தான் விஸ்வாநாதன் என்கிற கிங்விஸ்வா. பு.க வின் ஒவ்வொரு நாளும் கடைக்கு வருகிற ஒவ்வொருவரிடமும் காமிக்ஸ் புத்தகங்களின் சிறப்புகளை எடுத்துக்கூறிக்கொண்டிருந்தார். காமிக்ஸ்கள் வாங்கும் எண்ணிமில்லாதவர்களும் கூட அவருடைய பேச்சைக்கேட்டு நின்று இரண்டு காமிக்ஸ்நூல்களை வாங்கிச்சென்றனர். ஒருவேளை புக்கு வாங்கவில்லையென்றால் இன்னும் நிறைய பேசுவாரோ என்கிற பயம்கூட அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்!

****

#விகடன் கடையில் எப்போதும் போல இந்த ஆண்டும் கூட்டம் கும்மியது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு சூப்பர் ஹிட்டோடு களமிறங்கும் விகடனுக்கு இந்த முறை ஆறாம்திணைதான் சூப்பர் ஹிட்டுபோல! சென்ற ஆண்டு வட்டியும் முதலும் பண்ணின ரெகார்டுகளை அது முறியடித்திருக்கும் என்றே தோன்றுகிறது. (இந்த முறை கோபிநாத் வேறு சூப்பர் ஹிட் பட்டியலில் சேர்ந்துள்ளார்)

****

#பாரதிபுத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ட்ரன் கடையில் குழந்தைகள் கூட்டம் அதிகமில்லை. அது குழந்தைகளுக்கான புத்தகம் விற்கிற கடைபோல இல்லை என்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அங்கே விழியனின் நூல்கள் நிறையவே விற்றுத்தீர்ந்ததை பார்க்க முடிந்தது. குறிப்பாக விகடன் விருது தந்து கௌரவித்த மாகடிகாரம்! அவர் எழுதி வெளியாகியிருக்கும் உச்சிமுகர் என்ற குழந்தைவளர்ப்பு தொடர்பான நூல் இந்த கண்காட்சியில் மிக முக்கியமான நூல்.

****

#கிழக்குப்பதிப்பகம் பத்ரி சேஷாத்ரியும் நானும் சில நண்பர்களுமாக ‘’தமிழில் சமகால பல்ப் ஃபிக்சன்’’ குறித்து உரையாடிக்கொண்டிருந்தோம். 6174, கர்ணனின் கவசம் என நீண்ட அந்த உரையாடலில் பத்ரி பகிர்ந்துகொண்ட விஷயங்களையெல்லாம் தனிக்கட்டுரையாக எழுதலாம்.

அந்த சமயத்தில் அவ்வழியாக அவசரமாக சென்றுகொண்டிருந்த ஒரு நபர் நின்று, பத்ரியை பார்த்து… ‘’சார் சல்மான் உங்க கடைலதானே இருக்கார்..’’ என்றார். பத்ரி ஒருநிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்தார். ‘’சல்மான்சார்.. உங்க கடைலதானே இருக்கார்..’’ என்றார் மீண்டும்.. இப்போது பத்ரிக்கு புரிந்துவிட்டது ‘’அவர் ஏன்ங்க எங்க கடைக்கு வரப்போறார்.. காலச்சுவடுல வேணா இருந்தாலும் இருப்பார் பாருங்க..’’ என்று அனுப்பிவைத்தார். எனக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை.. பிறகு பத்ரியே ‘’சல்மான் என்பது சல்மான்ருஷ்டி!’’ என்று விளக்கினார். அந்த நபரைத்தேடினேன் வேகவேகமாக போய்க்கொண்டிருந்தார்… புத்தகக் கண்காட்சியில் தேடித்தேடிப் புரட்டுகிற நூல்களை விட சந்திக்கிற மனிதர்கள்தான் மிகவும் சுவாரஸ்யமானவர்கள்!

*****

#லிச்சிஜூஸ் கடைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ‘’இதயக்கனி’’ மாத இதழ் கடையில் ஏகப்பட்ட அரிய எம்ஜிஆர் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை விற்பனைக்கு என்று நினைத்து விசாரித்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஏசுநாதர் போல் வேடமிட்ட எம்ஜிஆர் படம் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

இதயக்கனியின் பழைய இதழ்கள் விற்பனைக்கு கிடைத்தன. நான் அவற்றில் எதையும் வாங்கவில்லை. அதே கடையின் வாசலில் ஒரு கருத்துக்கணிப்பு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு ஒரு கேள்வித்தாளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.

‘’எம்ஜிஆரின் புகழ் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும்?’’ என்கிற கேள்விக்கு ஆப்சன் ஏ – பத்தாண்டுகளுக்கு பி – நூறாண்டுகளுக்கு… சி – பல்லாண்டு பல்லாண்டு… என்கிற ஆப்சன்கள் தரப்பட்டிருந்தன.

நான் ஆப்சன் சியை டிக் செய்து என்னுடைய பெயர் முகவரி எழுதி போட்டுவிட்டு வந்தேன்!

எம்ஜிஆர் கடைக்கு பக்கத்து கடை நித்தியானந்தா கடை. அங்கே சந்தனக்கலர் புடவையோடு ஒரு உயரமான பெண் நிற்க.. அவசரமாக எட்டிப்பார்த்தேன். அது அவர் இல்லை. வேறு யாரோ!

****

இந்த முறை சாமியார்களின் கடைகள் (ராமகிருஷ்ண மடம், ஈஷா, இசுகான், நித்தி etcetc ) கணிசமாக இருந்தாலும் அங்கெல்லாம் கூட்டம் அதிகமில்லை என்பதே பெரிய ஆறுதல்தான். மக்களுக்கு ஞானம் வந்துவிட்டதோ என்னமோ?

****

புத்தகக் கண்காட்சியில் வாங்க நினைத்த பல நூல்கள் அச்சிலிருந்தே வரவில்லை என்று சொன்னபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. சில நூல்கள் கடைசிநாள்களில்தான் கடை கண்டன! இதெல்லாம் ப்ளான் பண்ணி பண்ண வேண்டாமா பாஸ்.. அப்படி மிஸ்பண்ணினி நூல்களில் முக்கியமானது அருண் நரசிம்மன் எழுதி வம்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஏலியன்கள் பற்றிய நூல் மேலும் சில அறிவியல் நூல்களும்…

***

இந்த முறை வாங்க நினைத்து வாங்கமுடியாமல் (துட்டு இல்லை!) போன நூல்… உமா பதிப்பகம் வெளியிட்டுள்ள கம்பராமாயணம் – வைமுகோ உரையுடன். மூவாயிரம் ரூபாய்! என்னுடைய பு.க பட்ஜெட்டே வெறும் ஆயிரம்ரூபாய்தான் என்பதால்… அடுத்த முறை வாங்கிக்கலாம் என்று விட்டுவிட்டேன். பதிப்பகத்தார் இந்த ஈஸி இன்ஸ்டால்மென்ட் ஸ்கீமெல்லாம் அனவ்ன்ஸ் பண்ணலாம்!

***

#இன்னும் நிறைய இருக்கிறது. இதுவே ஆல்ரெடி இரண்டாயிரம் வார்த்தைகள் தாண்டி ஆறு பக்கங்கள் ஆகிவிட்டது.

முடிந்தால் இந்த கட்டுரைக்கு பார்ட் 2 எழுதலாம். எழுதாமலும் போகலாம்.


32 comments:

SUDHANDHIRAPARAVAI said...

இப்படிபட்ட விமர்சனத்தை சாதாரண மனிதன் எழுதினால், யார் நீ, உனக்கு என்ன தெரியும் என்பார்கள். நீங்கள் எழுதியிருப்பதால், வெளிப்படையாக ஒன்றும் சொல்ல மாட்டார்கள். வாசகர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகிவிட்டார்கள்

யாஸிர் அசனப்பா. said...

புத்தக கண்காட்சிக்கே போய்விட்ட வந்த உணர்வு.

manjoorraja said...

இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன். ஏமாற்றிவிடாதீர்கள்.

கார்த்திகேயன் said...
This comment has been removed by the author.
phantom363 said...

Part 2 please..and also the discussion with Badri. Thank you for an entertaining and excellent report. I came but stayed briefly only at Discovery Bookstall. Manush was there too, grabbing 2 chocolates, put one in his mouth, and another in his pocket :). His photographer taking due notice :).. rajamani

RAVI said...

Like.

rajesh said...

நாஞ்சில் நாடனின் கம்பனின் அம்புறாத்தூணிலிருந்து புத்தகமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை

கரந்தை ஜெயக்குமார் said...

எனக்கும் புத்தகக் கண்காட்சிக்கு போய்விட்டு வந்த உணர்வுதான்

Sid said...

/மீண்டும் முகத்தை பார்த்துவிட்டு ‘’டே இவன்டா… இவனேதான்டா.. டிவில வருவானே.. பேசிட்டே இருப்பானே’’ என்றபடி சொல்லிவிட்டு நகர்ந்துசென்றனர். /

Lol... No chance

Unknown said...

அருமை....

Unknown said...

அருமை...

Unknown said...

அருமை..

Bala said...

பார்ட் 2 கண்டிப்பா போடுங்க. ப்ளீஸ்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//முடிந்தால் இந்த கட்டுரைக்கு பார்ட் 2 எழுதலாம். எழுதாமலும் போகலாம். //

"முடிந்தால்" என்ன முடிந்தால்?
பாகம் 1 தான் முடிந்(தே விட்ட)தே?
பாகம் 2 -ஐயும் எழுதி(டைப்பி)டுங்கள்...


Unknown said...

அருமையான பகிர்வு தோழரே, ஒரு முரண்நகை இயல்பாகவே உங்கள் பதிவில் வெளிப்படுகிறது.
நன்றி, பாம்பாட்டிச்சித்தன்

Pulavar Tharumi said...

சுவாரசியமான பதிவு!

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள் அதிஷா.

Anonymous said...

What happened to true tamilan website?

ஜானகிராமன் said...

நன்றி அநிஷா. மிக சிறப்பாக தொகுத்துள்ளீர்கள்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

மலேசியாவில் இருக்கின்ற நான், சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்களின் எழுத்து மூலமாக உலா வந்தேன்.
ரசித்தேன். சோர்வில்லாத நகைச்சுவை கலந்த எழுத்து. வாழ்த்துகள்

சு.மு.அகமது said...

சிறப்பான அவதானிப்பு.வாழ்த்துக்கள்.

சு.மு.அகமது said...

சிறந்த அவதானிப்பு.வாழ்த்துக்கள்.

சு.மு.அகமது said...

சிறந்த அவதானிப்பு.வாழ்த்துக்கள்.

Raashid Ahamed said...

ஒவ்வொரு முறையும் புத்தக கண்காட்சிக்கு செல்லவேண்டும் என்ற என் ஆசை இதுவரை நிறைவேறவில்லை. அங்கு வந்தால் எழுத்தாளர்களையும் பார்க்கலாம் என்ற ஆவல் தான். கண்டிப்பாக வருவேன் ஆனால் அப்போது புத்தகம் இருக்குமா அல்லது இது தான் புத்தகம் என்று சொல்லி ஒரு மெமரி கார்டை கொடுத்துவிடுவார்களா ? காகிதத்தில் அச்சடிக்கும் புத்தகம் இன்னும் எத்தனை வருடம் இருக்கும் ?

Umesh Srinivasan said...

ஒவ்வொரு ஆண்டும் சென்று கண்டு மகிழ்ந்த பு.க யை இம்முறை உங்கள் தயவால் கண்டுகளித்தமை மகிழ்ச்சி. அவன்-இவன் காமெடி அதிஷா டச்.

Anonymous said...

nanri Atheesa !

kailash said...

//மீண்டும் முகத்தை பார்த்துவிட்டு ‘’டே இவன்டா… இவனேதான்டா.. டிவில வருவானே.. பேசிட்டே இருப்பானே’’ என்றபடி சொல்லிவிட்டு நகர்ந்துசென்றனர். /

Is this true or is it your dialogue :-) , even many good books which i planned to buy was 300 , 400 , 500 and more , couldnt buy . If they publish books around 200 many people will buy.

இராஜிசங்கர் said...

// போன நூல்… உமா பதிப்பகம் வெளியிட்டுள்ள கம்பராமாயணம் – வைமுகோ உரையுடன். மூவாயிரம் ரூபாய்! // - இந்தப் புத்தகம் tamilvu.org என்ற் இணையப் பல்கலைக்கழகப் பக்கத்தில் கிடைக்கிறது. வை.மு.கோ உரை அல்ல இது. இருந்தாலும் நான் பார்த்த வரை, இந்த விளக்க உரை நன்றாகத்தான் இருக்கிறது. விளக்க உரைக் குழுவில் சிற்பி பாலசுப்ரமணி, அ.ச.ஞா, அரங்கசாமி ஆகியோரெல்லாம் இருக்கிறார்கள்.

pvr said...

கம்பராமாணம் அற்புதமான விளக்கங்களுடன் இணையத்தில் இருக்கே!

http://tamilvu.org/library/libindex.htm

chandragopal said...

Super athisha

Unknown said...

SUPERAPPU

Unknown said...

SUPERAPPU