Pages

21 January 2014

சீனாவில் தமிழ்
இன்று (ஜனவரி 21 - 2014) காலை சன்டிவி சூர்யவணக்கம் நிகழ்ச்சியின் ''விருந்தினர் பேட்டி'' பார்த்தவர்கள் பாக்கியவான்கள். எப்போதாவதுதான் காலைநேரத்து நிகழ்ச்சிகளில் இதுமாதிரி அமையும். பொதுவாக நான் சூர்யவணக்கத்தில் ''யோஹ்ஹா'' மட்டும்தான் பார்ப்பது வழக்கம். அதுவும் ''அபிதா பானர்ஜி''க்காக மட்டும்தான் பார்ப்பது. ஆனால் இன்று எதேச்சையாக விருந்தினர் பக்கம் பார்க்க நேர்ந்துவிட்டது. இந்நிகழ்ச்சியில் சீனப்பெண்ணான ''கலைமகளு''டன் ஒரு பேட்டி இடம்பெற்றது.

கொஞ்சமும் பதட்டமின்றி பொறுமையாக யோசித்து யோசித்து அந்த சீனப்பெண் பேசிய ஆங்கிலக்கலப்பில்லாத அழகான தமிழ் அவ்வளவு இனிமையாக இருந்தது. கிட்டத்தட்ட நம்வீட்டு குட்டிப்பாப்பாக்களின் தத்தக்கா பித்தக்கா மழலை மாதிரி... நிகழ்ச்சி முழுக்க மாஆத புன்னகையோடு பேசினார் கலைமகள்.

(சீனக்காரர்கள், குறிப்பாக சீனப் பெண்கள் முகத்தை சாதாரணமாக வைத்திருந்தாலும்.. புன்னகைப்பது போலவேதான் எப்போதும் தோன்றும்.. அவர்களுடைய முக அமைப்பே அப்படிதானா.. எல்லோருக்கும் அப்படிதான் தோன்றுமா?)

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இரண்டுபேர்தான் பாவம் செந்தமிழில் பேச ரொம்பவே சிரமப்பட்டார்கள். பாவமாக இருந்தது. அதை அவர்களே ''அய்யோ சாமீ முடியல'' என்று கடைசியில் ஒப்புக்கொண்டனர். ஆனால் சீனப்பெண்ணான கலைமகள் ஆங்கிலகலப்பின்றி பொறுமையாக தமிழில்மட்டுமே நிகழ்ச்சி முழுக்கப் பேசினார். வருங்காலத்தில் நல்ல தமிழை இப்படி யாராவது வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் ஃபாரினர்ஸ் பேசிக்கேட்டால்தான் உண்டு என்று ஆகிவிடும் போல்தான் இருக்கிறது. இது நிச்சயம் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்.

சீனப்பெண்ணான கலைமகளின் இயற்பெயர் சாவோ ஜியாங். தமிழ்மேல் பற்றுக்கொண்ட இவர் தனது பெயரை கலைமகள் என மாற்றிக்கொண்டாராம். சீனசெய்தி ஊடக பல்கலைகழகத்தில் ஆர்வத்தோடு இணைந்து தமிழ் கற்றுக்கொண்டு , சீனவானொலியின் தமிழ்ப்பிரிவில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்!

''சீனாவில் இன்ப உலா'' என்கிற நூலையும் இவர் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார். சீனாவை சேர்ந்த ஒருவர் தமிழில் எழுதி வெளியிட்ட முதல் நூலாக இது இருக்கிறது. இந்நூலில் சீனாவின் பல சிறப்புகளை குறிப்பிட்டு எழுதியிருக்கிறாராம். நான் வாசித்ததில்லை. சென்ற ஆண்டே வெளியான இந்நூலை வாசித்தவர்கள் பெய்ஜீங் நகரம் குறித்த பல அரியதகவல்கள் கொண்ட நூல் என்று சொல்லக்கேட்டிருக்கேன். இனிமேல்தான் வாங்கி படிக்கவேண்டும்.

ஆங்கிலகலப்பின்றி நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்பதை சீனவானொலி ஒரு கொள்கையாக வைத்திருப்பதாக பேசும்போது குறிப்பிட்டார் கலைமகள். நம்மூரில் அப்படி செய்வது மக்கள் தொலைகாட்சி மட்டும்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அது எல்லா நேரங்களிலும் சாத்தியமா குறிப்பாக செய்தி சார்ந்த நிகழ்ச்சிகளில் சாத்தியமாவென்பது தெரியவில்லை. ஆனால் நம்மூர் மொழியை சைனாக்கார பெண்ணொருவரின் குரலில் கேட்கவும் குஷியாகத்தான் இருக்கிறது!

நிகழ்ச்சியை பார்க்க தவறியவர்கள் இங்கே பார்க்கலாம், அதிலும் அந்தப்பெண் ''சொர்க்கமே என்றாலும் நம்மூரை போலவருமா..'' பாடலை பாடுவதை தவறவிடவேண்டாம்! செம ரகளையான நிகழ்ச்சி.


http://www.youtube.com/watch?v=DoZp0AZ94ME


***

இந்நிகழ்ச்சியை பார்க்கும்போது தோன்றியது இதுதான், ஒருவேளை நம்மூர் ஆட்கள் பிரான்சிலோ ஜெர்மனியிலோ போய் அந்த ஊர் மொழியை பேசும்போது அந்நாட்டு மக்கள் கூட பாருப்பா வெளிநாட்டுக்காரன்(அல்லது ரி)தான் நம்ம மொழியை சரியா பேசுறாங்க நாமதான் தப்பா பேசுறோம் என்று நம்மைப்போலவே ரொம்ப்ப்ப ஃப்பீல் பண்ணுவாய்ங்களோ?