Pages

11 February 2014

பண்ணையாரும் பத்மினியும்பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குனர் அருண்குமார் மிகவும் திறமையானவர். அவருடைய குறும்படங்களின் ரசிகன் நான். அவர் இயக்கிய பல குறும்படங்களை திரும்ப திரும்ப பார்த்து ரசித்திருக்கிறேன். பத்து நிமிட படத்தில் அத்தனை உழைப்பும் நேர்மையும் அர்ப்பணிப்பும் கிரியேட்டிவிட்டியும் ஆழமான உணர்வுகளும் அன்பும் நிறைந்திருக்கும்.

சில குறும்படங்களை பார்த்து கதறி கதறி அழுதிருக்கிறேன். அவருடைய குறும்படம் ஒன்று ஆசை என்று நினைக்கிறேன். அந்த பலூன் பையனின் கதையை எப்போதுமே மறக்கமுடியாது. நாடோடிமன்னன் குறும்படம் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். இவ்வளவு திறமையான இயக்குனர் ஏன் தன்னுடைய குறும்படத்தின் கதையையே அல்லது அவற்றின் தொகுப்பையே திரைப்படமாக்க முடிவெடுத்தார் என்றுதான் புரியவில்லை. தவறான சப்ஜெக்ட்டை தேர்வு செய்தது மட்டும்தான் அருண்குமார் செய்த மிகப்பெரியதவறு என்று படம் பார்த்தபோது தோன்றியது. வருத்தம்தான். ஏன் என்றால் படமாக்கலிலும் ஒரு நல்ல திரைப்படம் தரவேண்டும் என்கிற முனைப்பிலும் நூறுசதவீதம் உழைத்திருக்கிறார் அருண். ஆனால் அது சிறப்பாக வராமல் போனதற்கு காரணமாக நான் கருதுவது தவறான சப்ஜெக்ட்தான்.

படம் முழுக்க நிறையவே சுவாரஸ்யமான காட்சிகள் மற்றும் தருணங்கள் இருந்தாலும். ஒரு சுவாரஸ்யமான காட்சிக்காக பதினைந்து இருபது நிமிடங்கள் கொடூரமான மொக்கைகளை சகித்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. சில காட்சிகளை வலிந்து இழுத்திருப்பது தெரிகிறது. குறும்பட இயக்குனர்களின் பாணியே எதையும் சுறுங்கச்சொல்லி அசரடிப்பதுதான். பீட்சா,சூதுகவ்வும் இரண்டுபடங்களிலுமே காட்சிகளும் சரி உணர்வுகளும் சரி எல்லாமே நறுக்கென்று இருக்கும்.ஆனால் இந்தபடத்தின் மிகப்பெரிய குறையே இதன் மகாமெகா நீளம்தான். இரண்டரை மணிநேர படம் இரண்டுமூன்று நாள் ஓடுவதைப்போன்ற உணர்வைத்தருகிறது!

படம் முழுக்க ஒரு தாத்தா பாட்டி லவ் போர்ஷனை திரும்ப திரும்ப ஒரேமாதிரி காட்டிக்காட்டி சலிப்படைய வைக்கிறார்கள். (இதில் நடுவால நடுவால எஸ்ஏ ராஜ்குமார் பாணியில் லாலாலா தீம் ம்யூசிக் வேற கொடுமை!). படத்தில் காட்டப்படுகிற தாத்தா-பாட்டி, பண்ணையார்-பத்மினி, முருகேசன்-காதலி என எல்லா காதல்களுமே ரிப்பிட்டேசனின் உச்சம் எனலாம். அவையும் ஆழமின்றி காட்சிப்படுத்தப்பட்டு பண்ணையாரையும் பிடிக்காமல் பத்மினியையும் பிடிக்காமல் படம் முழுக்க நெளிந்தபடி படம் பார்ப்பவரை சோதிக்கின்றன.

இதே படம் முன்பு குறும்படமாக வந்தபோது பார்த்து அசந்திருக்கிறேன். பலரிடமும் பகிர்ந்திருக்கிறேன். குறும்படம் எடுக்க நினைக்கிறவர்களுக்கு ஒரு நல்ல உற்சாகமான குறும்படம் எடுப்பதற்கு ரெபரென்சாக இக்குறும்படத்தை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

எல்லாவிதங்களிலும் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்ட பிரமாதமான படம் அது. படத்தில் சொன்ன விஷயங்களை விட சொல்லப்படாத விஷயங்களால்தான் அந்தக்குறும்படம் வெற்றிபெற்றது என்று நினைக்கிறேன். குறிப்பாக ஏன் பண்ணையாருக்கு பத்மினி மேல் காதல் வந்தது என்பதை இரண்டு வரி வசனத்தில் மூன்று மாண்டேஜ்காட்சிகளில் சொல்லியிருப்பார் இயக்குனர் அருண்குமார். ஆனால் இந்தப்படத்தில் அதுகூட இல்லை. ஏன் பண்ணையாருக்கு பத்மினியை பிடிக்கிறது? தெரியாது. அதுவும் அவர் காசு கொடுத்து வாங்கி வண்டிகூட இல்லை. அடுத்தவன் சொத்து! அதுக்கு ஆசப்படலாமா? என்கிற கேள்வி உடனே நமக்கு எழுகிறது.

இதனாலேயே இயல்பாக வரக்கூடிய ஒட்டுதல் நமக்கு அந்தக்காரின் மேல் வருவதில்லை. ஆனால் குறும்படத்தில் இந்தக்காரை காசுகொடுத்து வாங்கியிருப்பார் பண்ணையார்! அதுதான் வித்தியாசம்.
அடுத்து படத்தில் வில்லியாக சித்தரிக்கப்படும் அந்த மகள் பாத்திரம். இப்போதெல்லாம் மெகாசீரியல்களிலும் கூட இப்படிப்பட்ட வில்லிகளை பார்க்க முடிவதில்லை. அவரை ஒரு பேராசைக்காரியாக பழையகாலத்து எம்.என்.ராஜம் டைப்பில் உருவாக்கியிருந்தது ரொம்பவே சோதிப்பதாக இருந்தது. அது யதார்த்தமான கதையில் எந்த விதத்திலும் ஒட்டவேயில்லை.

படத்தில் அந்தக்காருக்கு எதிரியாக சித்தரிக்கப்படுகிற இன்னொரு மேட்டர் மினிபஸ். உண்மையில் பஸ்வசதியற்ற அந்த ஊருக்கு மினிபஸ் வருவது நல்ல விஷயம். அது எப்படி வில்லனாக பார்வையாளனின் மனதில் பதியும் என்று புரியவில்லை. சொல்லப்போனால் அந்தக்காரை விட மினிபஸ் அதிகமும் பயன்தரக்கூடியது. அதுதான் ஊருக்கும் முக்கியமானதும் கூட! அப்படியிருக்க அதை எப்படி எதிரியாக பாவிக்க முடியும்.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘’DUEL’’ திரைப்படத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அந்தப்படத்தில் வருகிற அந்த லாரியை பார்த்தாலே பார்வையாளனுக்கு பயம் வரும். காரணம் அதன் அமைப்பு, நிறம் மற்றும் அதன் நோக்கம். ஆனால் இந்தப்படத்தில் மினிபஸ்ஸின் நோக்கம் என்ன? அல்லது அந்த டிரைவரின் நோக்கம் என்ன? சொல்லப்போனால் படத்தில் டிரைவர் ஒழுங்காகவே வண்டி ஓட்டிச்செல்ல அவரிடம் வம்பிழுப்பது விஜயசேதுபதிதான். அவரும் அவருடைய காரும்தான் இங்கே பார்வையாளனுக்கு வில்லனாகின்றனர்! (குறும்படத்தில் காருக்கு வில்லனாக வருவது ஒரு நவீன புதுரக கார்).

இதனாலேயே படத்தில் வருகிற பத்மினி மீது படம் பார்ப்பவருக்கு ஒரு நெருக்கமான உணர்வு ஏற்படுவதில்லை. அந்தக்காரும் அவ்வளவு அழகாகவும் இல்லை! அக்காரை இன்னும் கூட அழகாக காட்டியிருக்கலாம். அதோடு அந்தகாரோடு பார்வையாளனுக்கு நெருக்கம் ஏற்படுத்தும்படி சில நல்ல சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருக்கலாம். படம் முழுக்க அது ஒரு ப்ராபர்டியாக மட்டும்தான் உணரப்படுகிறது. அதோடு படத்தில் வருகிற எல்லா பாத்திரங்களும் அந்த காரைப்பற்றியோ அல்லது காருடனோ பேசிக்கொண்டேயிருப்பது உண்மையில் கார்மீது கோபத்தையே வரவழைக்கிறது.

படத்தில் விஜய்சேதுபதி காதலிக்கிற காட்சிகளில் அவ்வளவு வறட்சி. இந்த சாவுவீட்டில் காதலியை பார்க்கிற சென்டிமென்ட் எந்த படத்திலிருந்து தொடங்கியதென்று தெரியவில்லை. தொடர்ச்சியாக இது நான்காவது படமென்று நினைவு. வி.சேவுக்கு ரொமான்ஸ் சுத்தமாக வரவில்லை! அந்த நாயகி மட்டும் அழகாக இருக்கிறார். விஜய்சேதுபதி அனேகமாக இதே கெட்டப்பில் இதே மேனரிசத்தில் இதே உடல்மொழியில் நடிக்கிற நான்காவது படம் என்று நினைக்கிறேன். அவரை பகத்ஃபாசிலோடு ஒப்பிட்டு பலரும் பேசிக்கொண்டிருக்க அவரோ டிபிகல் தமிழ்சினிமா நாயகனைப்போல மாறிக்கொண்டிருக்கிறார். இப்படியே போனால் இந்த ஆண்டின் இறுதியில் சலித்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

படத்தின் ஆறுதலான விஷயங்கள். அவ்வப்போது அசரடிக்கிற ஜஸ்டினின் இசை. 'எங்க ஊரு வண்டி'' பாடலும் அதை படமாக்கிய விதமும் ஃபென்டாஸ்டிக். கேமரா கோணங்கள். படம் முழுக்க தெரிகிற அந்த 80ஸ் படங்களின் மஞ்சள் டின்ட். அவ்வப்போது புன்னகைக்க வைக்கிற நகைச்சுவை. குறிப்பாக பீடை என்கிற பாத்திரத்தில் வருகிற அந்த நடிகர். அவருடைய டைமிங் காமெடிகள் எல்லாமே ரசனையாக இருந்தன. உண்மையில் பரோட்டா சூரியைவிட இவர் அசத்துகிறார். முன்பு குட்டிப்புலி படத்திலும் கூட இவரை கவனித்திருக்கிறேன். (குறும்படத்தில் டிரைவராக இவர்தான் நடித்திருப்பார்.. பாவம் இதில் க்ளீனர்!)

மற்றபடி அருண்குமார் நிச்சயம் தன்னுடைய அடுத்த படத்தில் இந்த குறைகளை சரிசெய்துவிடுவார் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ப்ரோ!