17 February 2014

வாத்துராஜாகுழந்தைகள் இலக்கியத்துக்கு நம்பிக்கை தரும் புது வரவு விஷ்ணுபுரம் சரவணன். அவருடைய குட்டீஸ் நாவலான ‘’வாத்து ராஜா’’ நிச்சயம் குட்டிப் பாப்பாக்களுக்கும் பையன்களுக்கும் பரிந்துரைக்கவும் பரிசளிக்கவும் ஏற்ற அருமையான நூல்.

ஒரு கவிஞராக இலக்கியவாதியாக மட்டுமே எனக்கு பரிச்சயமாகியிருந்தார் விஷ்ணுபுரம் சரவணன். இது அவருடைய சிறுவர் இலக்கிய முயற்சி என்பதாலேயே நூலின் மேல் இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கதையின் தலைப்பு கொஞ்சம் நெருடலாக இருந்தது. ‘அட என்னடா இவரும் கடைசில குழந்தைகள் கதைனு ஏதோ ராஜா ராணி கதையவே எழுதிருப்பாரு போலயே’ என்கிற வருத்தம் கதை தலைப்பை பார்த்ததும் தோன்றியது.

ஆனால் நூலை வாசிக்க ஆரம்பித்த பிறகுதான்… இது அதுமாதிரி கதையில்லை இது புதுமாதிரி கதை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இந்நூலில் இரண்டு கதைகள் சொல்லப்படுகிறது. ஒன்று அமுதா, கீர்த்தனா மற்றும் பேசும் அணிலின் கதை இன்னொன்றுதான் வாத்துராஜாவின் கதை.

அமுதா தன் பாட்டி சொன்ன ஒரு வாத்துராஜாவின் கதையை கீர்த்தனாவிடமும் அணிலிடம் சொல்லிக்கொண்டிருக்க அவளுடைய குரலிலேயே நமக்கும் வாத்துராஜாவின் கதை சொல்லப்படுகிறது. ஒரு சூழ்நிலையில் வாத்துகளின் மேல் கோபங்கொள்ளும் முட்டாள் அரசன் ஊரில் உள்ள வாத்துகளை கொல்ல முடிவெடுக்க மலை கிராமத்து சிறுமியான சுந்தரி எப்படி தன்னுடைய இரண்டு வாத்துகளை காப்பாற்றினாள் என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது இந்நூல்.

பாதிகதையை சொல்லிவிட்டு கீர்த்தனாவின் பாட்டி ஊருக்கு சென்றுவிட கீர்த்தனாவும் அமுதாவும் அணிலும் ஆர்வம் தாங்கமுடியாமல் வாத்துராஜா கதையின் மீதியை தெரிந்துகொள்ள வெவ்வேறு முயற்சிகளை எடுப்பதும் அதன் வழியே வெவ்வேறு விஷயங்களை தெரிந்துகொள்வதும் சுவாரஸ்யமாக இருந்தது.

பாதிகதைக்கு மேல் கீர்த்தனா சொல்கிற கதையை அமுதா அணிலோடு நாமும் அமர்ந்துகேட்க ஆரம்பித்துவிடுகிறோம். மீதி கதை என்ன என்பது தெரியாமல் தவிக்கும் போது நமக்கு தவிப்பு ஒட்டிக்கொள்கிறது.

குழந்தைகள் வாசிப்பதற்கேற்ற எளிமையான மொழியும் சொல் தேர்வும் சின்ன சின்ன வாக்கிய அமைப்பும் இந்நூலின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. நூல் முழுக்க நிறைந்திருக்கிற ஓவியரின் அழகான படங்களும் அழகு (ஓவியர் பெயரே ஓவியர்தான்!). நிச்சயம் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்கலாம்.

நூலின் ஒரே குறையாக நான் கருதுவது பின்னட்டையில் யூமா வாசுகி எழுதியிருக்கிற குறிப்புதான்! அதில் சில வரிகள்

‘’சிறாரின் இருத்தலும் இயல்பும் உரிமையும், பொதுப்பிரக்ஞைத் தளத்திற்கு அப்பாலிருக்கும் இந்த நெடிய வறட்சியில் இவரது செயல்பாடு பசுமையின் மகத்துவமுடையது!’’

இப்படியெல்லாம் ஒரு சிறுவர் நூலில் எழுதி பயமுறுத்தினால் எப்படி? பெற்றோர்களே பயந்துபோய் புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு ஓடிவிடமாட்டார்களா?

***

வாத்துராஜா
விஷ்ணுபுரம் சரவணன்
பாரதிபுத்தகாலயம்
விலை-ரூ.50

4 comments:

கார்த்திகேயன் said...

// ‘’சிறாரின் இருத்தலும் இயல்பும் உரிமையும், பொதுப்பிரக்ஞைத் தளத்திற்கு அப்பாலிருக்கும் இந்த நெடிய வறட்சியில் இவரது செயல்பாடு பசுமையின் மகத்துவமுடையது!’’ //

சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்.இதை பல வருடங்களுக்கு முன்பே ஜெயமோகன் அவருடைய நவீன தமிழிலக்கிய அறிமுகம் நூலில் சொல்லிவிட்டார்.”தமிழில் நல்ல குழுந்தை நூல்கள் இல்லையென்று.

வில்லவன் கோதை said...

http://verhal.blogspot.in/2014/02/blog-post.html
அதிஷாவின் பார்வைக்கு.

Anonymous said...

‘’சிறாரின் இருத்தலும் இயல்பும் உரிமையும், பொதுப்பிரக்ஞைத் தளத்திற்கு அப்பாலிருக்கும் இந்த நெடிய வறட்சியில் இவரது செயல்பாடு பசுமையின் மகத்துவமுடையது!’’
.............ஹா ஹா !!

Anonymous said...

Please give me full address or contact number of 'pathipagam'

nakeeran@yahoo.com