Pages

27 February 2014

வட இந்தியக்கூலிகளும் தமிழ்நாட்டு எஜமானர்களும்டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிர்பயாவின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் இன்று வரைக்கும் யாருக்குமே தெரியாது. இந்த நிமிடம் வரைக்குமே அதை மிகமிக ரகசியமாகவே எல்லா இடங்களிலும் கையாள்கின்றன இந்திய ஊடகங்கள்.

ஆனால் சிறுசேரி சம்பவத்திலோ. கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையும் அவருடைய விபரங்களையும் அந்தப் பெண்ணின் பெற்றோரின் படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன நம்முடைய ஊடகங்கள். இது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. இதற்கான காரணமும் தேவையும் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இன்றும்கூட தினத்தந்தியில் பாலோ அப் செய்தியிலும் அப்பெண்ணின் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

இதுமாதிரியான வழக்குகளில் கொஞ்சமாவது எச்சரிக்கை உணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் செய்திகளை வெளியிடலாம் இல்லையா? அப்பெண்ணின் அடையாளத்துடன் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவதால் சம்பந்தப்பட்ட பெற்றோரும் உறவினர்களும் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்பதையெல்லாம் என்றைக்குத்தான் நம்ம ஆட்கள் புரிந்துகொள்வார்களோ தெரியவில்லை.

அந்த பெண் ஏன் இரவு நேரத்தில் தனியாக சென்றாள்? இந்தப்பெண்களையெல்லாம் வேலைக்கே அனுப்பக்கூடாது? பத்திரமாக வீட்டுக்குள்ளயே வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப்பெண்ணின் நடத்தையை பற்றி விசாரிக்க வேண்டும்? என நம்முடைய நாட்டாமைகள் என்ன ஏது என்றே தெரியாமல் இதுதான் சாக்குனு கையில் சொம்போடு உடனடியாக கிளம்பியதை பார்த்தபோது யாருக்குமே கொலைவெறி வந்திருக்கும்.

இச்சம்பவத்தை ஒட்டி இனிமேல் நைட் ஷிப்ட்டுக்கு பெண்களை அனுப்பக்கூடாது, பெண்கள் பாதுகாப்பு அவர்களுக்கு நல்லது அவர்களுக்காகத்தான் இதெல்லாம் செய்கிறோம் என்பதின் பெயரில்தான் இத்தனை ஆண்டுகளும் மதங்களின் பெயரால் ஒழுக்கத்தின் பெயரால் பாதுகாப்பினை முன்னிறுத்தியும் பெண்கள் மேல் சகல அடக்குமுறைகளும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

அந்த ஆணாதிக்க வக்கிர மனநிலையின் மிச்ச சொச்சங்களே ஒவ்வொருமுறையும் பெண்கள் எங்காவது வன்முறைக்கு ஆளாகும்போதும் பொம்பளைனா அடக்கம் வேணும், ஆடாக்கூடாது போன்ற சினிமா ஹீரோ பஞ்ச் டயலாக்கு முத்துகள் உதிர்வதற்கு காரணமாக இருக்கிறது.

ஆண்களை இம்மியளவும் சரிபண்ண அவர்களுடைய வக்கிரத்தை ஒழிக்க வக்கில்லாத வெட்கங்கெட்ட சமூகத்தில் இதெல்லாம் தவிர்க்க முடியாததுதான்.

இந்த வழக்கில் அவசரமாக கைது செய்யப்பட்டிருக்கிற நான்குபேருடன் இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்பது மட்டும் தெரிகிறது. இனி அவரவர் வேலையை பார்க்க போய்விடுவார்கள். ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வாரத்திற்கு பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு பற்றி எல்லோரும் பேசி ஓய்ந்து ஓய்ந்து சோடாகுடித்து ஏப்பம்விட்டு... உரை முடித்துக்கொள்வார்கள்.

இச்சம்பவத்தை ஒட்டிப்பேசுகிற பலரும் ''வடநாட்டுக்காரய்ங்களாலதான் பாஸ் நம்ம ஊர் கெட்டுப்பேச்சு.. கொலை கொள்ளை பெருகி போச்சு.... அவிங்கள விரட்டிட்டா ஊர் சுத்தமாகிடும்'' என்றெல்லாம் பேசுவதை கேட்க முடிகிறது.

இது என்ன லாஜிக்கோ வெங்காயமோ... ஆனால் இதற்கு பின்னால் இருப்பது கடைந்தெடுத்த இனத்துவேஷம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மகாராஷ்ட்ராவில் ராஜ்தாக்ரே மாதிரியானவர்கள் முன்வைக்கிற அதே பாணி இது என்பதை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் புரிந்துகொள்ளலாம். ஓரிருவர் செய்கிற குற்றங்களுக்காக ஒட்டுமொத்தமாக அனைவரையும் வெளியேற்றச்சொல்கிற அல்லது அவர்களை மிகக்கேவலமாக நடத்த முற்படுகிற ஃபாஸிஸம் இது.

வடக்கிலிருந்து வந்து மிக குறைந்த கூலிக்கு தன்னுடைய ரத்தத்தை சிந்தி அவர்களெல்லாம் வேலை பார்க்காவிட்டால் சொகுசாக இன்றைக்கும் நம்மால் சென்னையின் எந்த மேம்பாலத்திலும் பயணிக்க முடியாது. ஐடி துறையின் மிகப்பிரமாண்டமான பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையின் உருவாக்கத்தை பற்றியெலாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. எத்தனையோ பேர் தங்களுடைய உயிரை கொடுத்து உருவாக்கிய பகுதி அது.

மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள புதிய சட்டசபை கட்டிடமும் அதன் உருவாக்கத்திற்காக இரவு பகலா உழைத்த அந்தத் தொழிலாளர்களின் உழைப்பையும் மறந்துவிடமுடியாது. இன்றும் சென்னை முழுக்க மெட்ரோ ரயில் வேலைக்கென எத்தனை பேர் இறந்துபோயிருக்கிறார்கள்.

இன்றைய சென்னையின் கட்டுமானத்தொழில் முழுக்கவே இந்த தொழிலாளர்களை நம்பித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்னமோ இந்த வடமாநில தொழிலாளர்கள் ஊரிலிருந்து கிளம்பிவருவதே கொள்ளையடிக்கவும் கொலைசெய்யவும்தான் என்கிற ரீதியில் பேசுவதை கேட்கே அருவருப்பாக இருக்கிறது.

சொல்லப்போனால் மிகக்குறைவான கூலிக்கு கொஞ்சமும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றிய அடிமைகளைப்போல் நடத்தப்படுகிற இந்த வட மாநில கூலித்தொழிலாளிகளை குற்றஞ்சாட்டுவதும் அவர்களை தண்டிப்பதும் அதிகார மையத்திற்கு எப்போதுமே எளிமையாக இருக்கிறது. முன்பெல்லாம் இதுபோன்ற குற்றங்களென்றால் முதலில் சேரிப்பகுதியிலிருக்கிற ஏழைகளில் நான்குபேரை கைது செய்து மக்கள் வாயை அடைப்பார்கள். இப்போது அது வட இந்தியர்களாக பரிணமித்திருக்கிறது. EASY PREY என்பது மாதிரி இதைக்கருதலாம். திருட்டுக்குற்றங்களென்றால் சேரிப்பகுதி மக்களை பிடி, குண்டு வைத்தால் இஸ்லாமியனைப்பிடி என்பதன் தொடர்ச்சியாக இதை பார்க்கலாம்.

முன்பு வேளச்சேரி கொள்ளை சம்பவத்தின் போதும் இதே பாணியில் ஏடிஎம்மில் சிகப்பு சட்டை போட்ட வட இந்தியனை கண்டுபிடித்தோம் என காவல்துறை இதே மாதிரியான ஒரு கதையை (எப்பயும் இதே கதைதான்!) சொன்னதை இங்கே நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு பிறகு மீண்டும் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக ஆகிவிடுமாம்!

இவர்கள் மீது துவேஷம் காட்டுகிற நம்மூர் ஆட்கள், இந்த வட இந்தியர்களைப்போலவே நம்முடைய தமிழ் சகோதரர்கள் சிங்கப்பூர்,மலேசியா,அரபுநாடுகள் என பல இடங்களிலும் குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார்கள் என்பதை ஏன் நினைவில் கொள்ள மறுக்கிறார்கள் என்பதும் புரியாத புதிர்தான். அடிமைகள் சிக்கினால் தானாகவே எஜமான மனோபாவம் வந்துவிடும் போல... STRANGE!