27 February 2014

சீனிப்புளியங்கா (எ) கொடுக்காப்புளி
சில நாட்களுக்கு முன் ரிலையன்ஸ் ஃப்ரஷ்ஷிலோ பழமுதிர் நிலையத்திலோ காய்கறிகள் வாங்குபோதுதான் பாக்கெட்டுகளில் ‘’கொடுக்காபுளி’ விற்பதை கவனித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. கொடுக்காபுளியை ஒருநாள் காசுகொடுத்து (ஒரு பாக்கெட் 30ரூபாயாம்!) இப்படிப்பட்ட பெரிய சூப்பர்மார்க்கெட்டில் பாக்கெட்டில் அடைத்து விற்பார்கள் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.

வாழ்நாளில் ஒரு முறைகூட அதை காசுகொடுத்து வாங்கித்தின்றதேயில்லை. ஆனால் அன்றைக்கு அதை கண்டதும் ஒரு பாக்கெட் காசுகொடுத்து வாங்கிக்கொண்டேன். கொடுக்காபுளியை மீண்டும் பார்த்ததில் ஒரு பள்ளிக்கால தோழனை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சி. இந்த கடையில் விற்கிற கொடுக்காபுளி கொஞ்சம் சைஸில் பெரிதாகவும் அதிக இனிப்பவையாகவும் இருக்கின்றன. வீட்டுக்கு வந்ததும் முதல்வேளையாக காய்கறிகளை வைத்துவிட்டு அதைதான் முதலில் பிரித்து சாப்பிட ஆரம்பித்தேன்..

கொடுக்காபுளியங்காவுக்கு கோணப்புளியங்கா, சீனிப்புளியங்கா, கொருக்கா புளி என ஊருக்கு ஒரு பெயர் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் இன்னும் நிறையபெயர்களால் கொடுக்காபுளி அழைக்கப்படுகிறது. அண்ணா உங்கர்ல அப்படியா சொல்வாங்க எங்கூர்ல சீன்புளிங்காம்போம் என்கிற ஆச்சர்யத்தை அடிக்கடி சந்திப்பதுண்டு. இந்தியில் இதற்கு பெயர் ஜங்கிள் ஜிலேபியாம்! (பேர் சூப்பரால்ல)

கிராமத்தில் வளர்ந்தவர்களோ நகரமோ இன்றைக்கு இருபது ப்ளஸ் வயதான யாருமே தங்களுடைய பள்ளிப்பருவத்தில் ஒருமுறையாவது கொடுக்காப்புளியை ருசிக்காமல் கடந்திருக்க முடியாது. என்னுடைய பள்ளிக்காலங்கள் முழுக்க இலவசமாக கிடைத்த ஒரே திண்பண்டம் இதுதான். ஊருக்குள் எங்குபார்த்தாலும் கொடுக்காப்புளி மரங்கள் நிறைந்திருக்கும். ஒரு நாளும் அதை காசுகொடுத்து வாங்கித்தின்றதில்லை.

கோவையின் இதயப்பகுதியில் வாழ்ந்தபோதும் அந்த ஏரியாவிலும் சுற்றிச்சுற்றி எங்கும் கொடுக்காப்புளி மரங்கள் நிறைந்திருக்கும். கோடை விடுமுறை காலம் நெருங்க நெருங்க அந்த மரங்கள் குழந்தைகளுக்காகவே காய்க்கத்தொடங்கும். கையில் கொரட்டு கழியோடு மரம் மரமாக அணில்களோடு அணில்களாக திரிவதை பார்த்திருக்கிறேன். பெரும்பாலான நல்ல சிவந்த கொடுக்கா புளிகளை அணில்கள் அல்லது பறவைகள் தின்றுவிடும். ஓரளவு பழுத்த பழங்கள் மட்டும்தான் நமக்கு கிடைக்கும். மிகவும் ஒடிசலாக வளரக்கூடிய இவ்வகை மரங்களின் மீதேறியும் பறிப்பது கடினம். இம்மரங்களில் பூச்சிகளும் எறும்புகளும் அதிகமாக வாழுமென்பதால் அதன் மேல் ஏறுவது எப்போதும் ஆபத்துதான். எறும்புகளால் கூட சீனிப்புளியங்காவுக்கு ஆபத்து உண்டு.

கொடுக்கா புளியை காய்களாக இருக்கும்போதே பார்த்து வைத்து அது பழுக்கும் வரை காத்திருந்து பறித்து தின்றால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் அவகாசம் இருக்காது. ஏரியாவில் கொடுக்காபுளி பறிக்கவே நிறைய புளியங்கா கேங்ஸ் இருக்கும். அதில் ஒன்று நமக்கு முன்பே போய் காயாக இருந்தாலும் பறித்துவிடும். அதனால் கண்களில் சிக்கியதை பிஞ்சோ காயா பழமோ அப்போதே பறித்து அப்போதே தின்றுவிடுவது நல்லது என்பது எங்கள் கேங்ஸின் எழுதப்படாத விதி.

சிகப்பும் பச்சையுமாக சிலது அதிகமாக பழுத்தும் சிலது பச்சைபசேலென காயாகவும் இருக்கும். இதை பறிக்கவே ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு நீண்ட கழியும் அதன் உச்சியில் ஒரு கொடுக்குமாக வைத்திருப்பார்கள். அதனால்தான் கொடுக்கா புளி என்று பெயர்வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு பயனும் தராத தானாக வளரக்கூடிய இவ்வகை மரங்களை யாரும் வெட்டுவதில்லை.

சென்னைக்கு வந்தபின் இந்த கொடுக்காபுளி மரங்களை எப்போதாவதுதான் பார்க்க நேரிடும். அவையும் அதிகம் காய்க்காத மலட்டு மரங்களாகவே இருக்கும். காய்க்கிற ஒன்றிரண்டும் கூட சப்பையான அதிக சதைபற்றில்லாத காய்களை தரக்கூடியவையாகவும் முழுக்க துவர்க்கிற சுவையுடனும் பிஞ்சிலேயே அழுகிவிடக்கூடியவையாகவும் இருக்கின்றன. இப்போதெல்லாம் இம்மரங்கள் சுத்தமாக காய்க்காமல் மருதாணி செடிபோல்தான் எங்கும் தென்படுகின்றன.

கோவையில் என்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டு வாசலில் மூன்று பெரிய பெரிய கொடுக்காபுளி மரங்கள் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கிற எல்லாமே நானும் அவனும்தான் பங்கிட்டுக்கொள்வோம். எங்களை கேட்காமல் அதில் கிடைக்கிற பழங்களை தின்கிற உரிமை ஏரியா அணில்களுக்கு மட்டும்தான் உண்டு. அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாக இருந்த மரங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டுவிட்டன.

அது எதுக்கு கழுத இடத்த அடச்சிகிட்டுனு வெட்டிட்டேன் மச்சான்.. வண்டி நிறுத்த இடஞ்சலா என்றான் நண்பன். இன்று கோவையை சுற்றியுள்ள எங்குமே பத்துக்கு பத்து நிலம் கூட யாரும் காலியாக விட்டுவைக்க தயாராயில்லை. எங்கெல்லாம் இந்தமரங்கள் செழித்திருந்தனவோ அங்கெல்லாம் இன்று கட்டிடங்கள் முளைத்திருப்பதை பார்க்க முடிந்தது.

சென்னையைப்பற்றி சொல்லவே வேண்டாம். அப்படியே எதாவது மரத்தில் காய்த்தாலும் அதை பறித்து எப்படி விற்கலாம் என்றுதான் மனசு அலைபாயும். பின்ன எங்கிருந்து அணில்களும் பள்ளிக்குழந்தைகளும் கொடுக்காபுளி அடிக்க…

7 comments:

Raashid Ahamed said...

குடிக்கிற தண்ணியையே ரேஷன் முறையில் வாங்கவேண்டிய நிலை வரப்போகுது. இதில் கொடுக்காப்புள்ளியை பாத்து கவலைப்படுறீங்க. எலந்தைப்பழம் எவ்வளவு சிரிப்பா சிரிச்சிது. 5 பைசாவுக்கு 10 பழம் ஒரு ஆத்தா கொடுக்கும். அதில் ஒரு பழம் சரியில்லைன்னு வாக்குவாதம் பண்ணி ஒரு பழம் கூட வாங்கிக்குவோம். அதெல்லாம் ஒரு காலம்! இப்படி நடக்குனு கற்பனை கூட பண்ணியிருக்க மாட்டோம். நம்ம பேரப்புள்ளை காலத்துல “கொடுக்காப்புள்ளின்னு ஒரு மரம் இருந்திச்சின்னு” பாடத்துல தான் படிக்க போகுதுங்க.

Venba said...

Well you just brought back my memories also..Am from pollachi and in my school days I tasted and roamed like anything to get seenipuliyankka for seasons.. Miss those :((

JEEVA KARTHIKEYAN said...

இந்தமரங்கள் செழித்திருந்தனவோ அங்கெல்லாம் இன்று முளைத்திருப்பதை பார்க்க முடிந்தது.//
something is missing... i thing.

saidaijagan said...

enga oorla idhu peru - gorikalika !!!

Kalikabaali said...

ஆதிஷா,
நீங்க போடிருகிற படம் முந்திரிகா!!! சரி போகட்டும்,
கொரிகளிக்கா முந்திரிகாவுக்கும் அப்படிப்பட்ட வரலாறு உண்டு. கோடை காலம் தொடங்கினதும் தள்ளு வண்டியில்
நாலணா, எட்டணாவுக்கு வாங்கி தின்போம். அதில் மேல் உள்ள வெள்ளை பருப்பு (படம்) அவ்ளோ இனிப்பாக இருக்கும். சாதாரணமா இளஞ்சிவப்பு
முந்திரிகா இனிப்பு அதிகம் இருக்கும். இந்த தலைமுறைக்கு அதெல்லாம் தெரியுமா,.....?

Kalikabaali said...

ஆதிஷா,
நீங்க போடிருகிற படம் முந்திரிகா!!! சரி போகட்டும்,
கொரிகளிக்கா முந்திரிகாவுக்கும் அப்படிப்பட்ட வரலாறு உண்டு. கோடை காலம் தொடங்கினதும் தள்ளு வண்டியில்
நாலணா, எட்டணாவுக்கு வாங்கி தின்போம். அதில் மேல் உள்ள வெள்ளை பருப்பு (படம்) அவ்ளோ இனிப்பாக இருக்கும். சாதாரணமா இளஞ்சிவப்பு
முந்திரிகா இனிப்பு அதிகம் இருக்கும். இந்த தலைமுறைக்கு அதெல்லாம் தெரியுமா,.....?

Unknown said...

Nice article athisha.