02 June 2014

கூரை வேயும் கவிஞன்
ஸ்காட்லாந்திலிருந்து வந்திருந்தார் இளம் கவிஞர் பில்லி என்கிற ‘’வில்லியம் பில்லி லெஃபோர்ட்’’. அவருடைய கவிதை வாசிப்பு நிகழ்வு கேகேநகர் டிஸ்கவரி புக்பேலஸில் நடைபெற்றது. இந்நிகழ்வை கவிஞர் சல்மா ஏற்பாடு செய்திருந்தார். நிறைய சர்வதேச விருதுகள் வென்ற இந்த பில்லியை பார்த்தால் கவிஞரைப்போலவே இல்லை. ஹாலிவுட் படங்களில் வருகிற ஜேப்படி திருடனைப்போல இருக்கிறார். அதற்கேற்க புஜமுனை மடிக்கப்பட்ட அரைக்கை சட்டை, சின்ன மிலிட்டரி கார்கோ டவுசர், கழுத்தில் மோதிரம் மாட்டப்பட்ட ஒரு கறுப்பு கயிறு என ரொம்ப லட்சணமாக ஆறடியில் இருந்தார். அவர் ஊரிலிருந்து வரும்போது தன்னுடைய காதலியையும் அழைத்துவந்திருந்தார். ரொம்ப ஒல்லிக்குச்சி பெண்ணான காதலியின் பெயர் அபிகேர்ளாம்!

வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லா வெள்ளையர்களும் முகத்தில் ஒரு அழகான புன்னகையையும் எடுத்து வருகின்றனர். நிகழ்வு முழுக்க ஒல்லிகுச்சி அபிகேர்ள் புன்னகைத்துக்கொண்டே இருந்தார். அதைவிட தன்னுடைய பாய்ஃபிரண்ட் கவிதை வாசிப்பதை அப்படியே மெய்மறந்து ரசித்துக்கொண்டிருந்தார். ஸ்காட்டிஷ் கலந்த ஆங்கில உச்சரிப்பில் பில்லி படித்த கவிதைகளில் பாதி சொற்களைத்தான் புரிந்துகொள்ளும் படி இருந்தது. நல்ல வேளையாக வாசிக்கப்பட்ட நான்கு கவிதைகளில் மூன்றை கவிஞர் பத்மஜா மொழிபெயர்த்திருந்தார். அதுவும் நிகழ்வில் வாசிக்கப்பட்டது. பில்லியின் கவிதைகளில் தோல்வியின் வலி நிறைந்திருந்ததை உணர முடிந்தது.

பில்லியிடம் கொஞ்ச நேரம் உரையாட முடிந்தது. உரையாடலின் முடிவில் ஸ்காட்லாந்திலும் எழுத்தாளர்கள் நிலைமை அவ்வளவு சிலாக்கியமாக இல்லை என்பது தெரியவந்தது. இந்த கவிஞர் பல வேலைகள் பார்த்தவராம். கடைசியாக அவர் பார்த்த வேலை ‘’கூரை வேய்வது’’. (ROOFINGகிற்கு நம்மூரில் அதுதானே). இன் ஸ்காட்லான்ட் ரைட்டர்ஸ் ஆர் ஸ்ட்ரகுளிங் என்றார். யெஸ் யெஸ் இன் இந்தியா நோ டிபரென்ஸ் என்று சொன்னேன். ஓ என்று புன்னகைத்தார்.

கவிஞர் சல்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஜெர்மனியில் தான் கவிதை வாசிக்க சென்று ஒரு நிகழ்வைப்பற்றி சொன்னார். பெர்லினிலிருந்து என்று நினைக்கிறேன் கிட்டத்தட்ட முன்றரை மணிநேரம் காரில் அழைத்துச்சென்று ஒரு இடத்தில் கவிதை வாசிக்க சொன்னார்களாம். மொத்தமாக மூன்றுபேர்தான் பார்வையாளர்களாக வந்திருந்தனராம்! நம்மூர் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதுவதை வைத்து நாமாகவே ஊர் உலகத்தில் இலக்கியவாதிகளை கொண்டாடுகிறார்கள் என நினைத்துக்கொள்கிறோம் போல! அதிலும் கவிஞர்கள் நிலைமை உலகெங்கிலும் ஒரே ரகமாக இருப்பது ஆச்சர்யம்தான். பில்லியின் கவிதை வாசிப்பு நிகழ்வுக்கு என்னோடு சேர்த்து பத்து பேர் வந்திருந்தனர். ஊருக்கு போய் இந்தியாவில் கவிதைகளையும் கவிஞர்களையும் கொண்டாடுகிறார்கள் என பில்லி பீத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

பில்லி கவிஞராக முடிவெடுத்ததும் பல்வேறு கவிதை பட்டறைகளில் பங்கேற்று நிறைய கவிதைகளை வாசித்து முடித்துதான் கவிஞராக ஆனாராம்! ஸ்காட்லாந்தில் அப்படிதான் எழுத்தாளர்கள் உருவாவது வழக்கம் போலிருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதினாலும் தன்னுடைய தாய்மொழியான ஸ்காட்டிஷிலும் கவிதைகள் எழுதுகிறார் பில்லி!

பில்லியின் கவிதைகளில் எனக்கு ‘’தயாராக இருத்தல்’’ என்கிற கவிதை மிகவும் பிடித்திருந்தது. அருமையாக மொழிபெயர்த்த கவிஞர் பத்மஜாவுக்கு நன்றி.

தயாராக இருத்தல்

மூன்று டி ஷர்ட்டுகளும்
பின் தலையை மறைக்கும் சட்டையையும்
அணிந்து கொள்ளுங்கள்
அடுக்கு மிகவும் முக்கியம்.
உங்கள் எண்ணெய் வழியும்
சருமத்தை மறந்து விடாதீர்
எப்பொழுதும் எங்கோ
மழை பெய்து கொண்டிருக்கும்.
கழுத்தை சுற்றித் துணி அணிந்துகொள்ளுங்கள் .
குளிர் காற்று கழுத்திலிருந்து
தான் கீழே இறங்கும்.
கையுறை அணிந்து கொள்ளவும்
ஈரமாய் உள்ளவை உபயோகமற்றவை.
இருந்தாலும்,
தப்பான ஆணியை நீங்கள் அடித்தால்
அவை உதவும்
இந்த கணத்தில்
உங்கள் சிந்தனையை செலுத்துங்கள்
நீர் சொட்டுவதையும்
சிலந்தி ஓடுவதையும் கவனியுங்கள் .
ஏணியின் மேல் நின்று
வேலை செய்யும் போது
சிறிது பயமிருக்கட்டும்
எப்படிக் கீழே விழவேண்டும்
என்று பார்த்துக் கொள்ளுங்கள் .
வேலியும் சிமிட்டுபாளங்களும்
மன்னிக்கவே மன்னிக்காதவை.
மலர் படுக்கையும்
ஃபிஷா புதர்களும் கொஞ்சம் பரவாயில்லை .
அலறுவதை பயிற்சிஎடுங்கள் .
கீச்சிடாதீர்கள்
சிங்கம்போல் கர்ஜனை செய்யுங்கள் .
வலி குறைந்து அக்கம் பக்கம் பார்க்கும் போது
நான் சொல்வது உங்களுக்குப் புரியும்
நிலவை ஏற்றுக் கொள்ளுங்கள்
அது பூமியில் ஒரு பகுதியாய் இருந்திருக்கிறது.
அதன் தனிமை
உங்களை அழகாய் உணரச்செய்யும்.
தக்க முறையில் மேலேழுங்கள்
ஏனெனில்
பணம் சம்பாதிக்க
உங்கள் முதுகு உங்களுக்குத் தேவைப்படும்!

***

மேலுள்ள கவிதையை நாம் எப்படி வாசிப்போம், முகத்தில் நிறைய சோகம் பூசிக்கொண்டு, உடைந்துபோகிற மாதிரி குரலில் ஒரே டோனில்தானே சொல்வோம். அது ஏன் தமிழ்நாட்டில் எல்லா கவிஞர்களும் தன் கவிதைக்கு ஒரே மாதிரி ராகம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பில்லி தன்னுடைய கவிதைகளை உற்சாகமாக ஒரு கதைசொல்லியைப்போல தாள லயத்தோடு, குரலில் ஏற்ற இறக்கங்களோடு முகத்தில் ஆயிரக்கணக்கான பாவங்களோடு குறிப்பாக கவிதை அதன் தன்மையோடு உணர்ச்சிகரமாக வாசிக்கிறார். தமிழில் இதுமாதிரி கவிதைகள் வாசிக்கிற பழக்கமே இல்லை என்று தோன்றுகிறது. சாம்பிளுக்கு இந்த வீடியோவை பாருங்கள் பில்லி எப்படி கவிதை வாசிக்கிறார் என்பது புரியும். இளம் கவிஞர்கள் யாராவது இதை முயற்சி செய்யலாம். குழந்தைகளுக்கு கதைகள் சொல்வதில் பயிற்சிபெற்ற கவிஞர் விஷ்ணுபுரம் சரவணன் கூட முயற்சி செய்யலாம்.

6 comments:

விஜய் மகேந்திரன் said...

அதிஷா நல்ல கட்டுரை.....வெளிநாட்டிலும் இதே நிலைமை தானா ?இக்கரைக்கு அக்கரை பச்சை !!!!

Anonymous said...

A good post. Thanks.

Unknown said...

Good share

Unknown said...

Respected Adhisha ji,
i am one of the regular visitor's your blog. I wish to publish my Blogs here. this is for who are suffering & loss in the share market. If they wish 'll ready to help them related this field .i am giving free services.if you wish you 'll publish my blogs here this is my blog ID : http://tradersguides.blogspot.in/
Thanks in advance
Regds P.Bharath

Anonymous said...

//ரொம்ப ஒல்லிக்குச்சி பெண்ணான காதலியின் பெயர் அபிகேர்ளாம்!
//

Abigail ?

aekaanthan said...

’கூரை வேயும் கவிஞன்’ நல்ல வாசிப்பு அனுபவம் தரும் கட்டுரை. நன்றி அதிஷா.

வெளிநாட்டில் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் தலையில் தூக்கிவைத்துக் கூத்தாடுகிறார்கள் என்று புருடா விடும் நம்மவர்கள் நகைச்சுவையை அவ்வப்போது அதிகரிப்பவர்கள்!வெளிநாடுகளிலும் பிரபலமான எழுத்தாளர்களின் நிகழ்ச்சிகளுக்கும்கூட, விளம்பரம் செய்தும் அனேகம்பேர் கண்டு கொள்வதில்லை
அவர்களது இன்னர்சர்க்கிள் ஆசாமிகள் வந்து கூட்டம் காண்பிக்க முயல்கின்றனர். இலக்கிய ஆர்வம் கொண்டு வருபவர் மிகச்சிலரே.
-ஏகாந்தன்
http://aekaanthan.wordpress.com