Pages

09 June 2014

வாழைப்பழ காமெடியின் நுட்பம்

முதலில் ஒரு சின்ன க்விஸ். சமீபத்தில் தான் எழுதிக்கொண்டிருக்கிற ஒரு தொடரில் கீழ்காணும் விஷயத்தை எழுதிய பிரபல எழுத்தாளர் யார்?

''கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி நினைவிருக்கிறதில்லையா? அது வெறும் நகைச்சுவை காட்சி மட்டுமில்லை. ஒரு ரூபாய்க்கு இரண்டு வாழைப்பழம் விற்கப்பட்ட காலத்தை அது நினைவுபடுத்துகிறது. வாழைப்பழம் வாங்கவேண்டுமென்றால் பெட்டிகடைக்கு போகவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இதோடு அன்றாடம் வாழைப்பழம் சாப்பிடுகிற பழக்கம் உள்ளவர்களுக்கு பழம் சாப்பிடாவிட்டால் நிறைவுவராது. அதற்காக உணர்ச்சிவசப்பட்டு சண்டையிடுவார்கள் என்பதையும் அடையாளம் காட்டுகிறது''

***

நேற்று ஞாநியின் கேணிக்கூட்டத்திற்கு ரோகிணி வந்திருந்தார். (ஞாநிகேணிரோகிணி! என்ன ஒரு ரைமிங்.) தன்னுடைய ஆரம்பகால குழந்தை நட்சத்திர வாழ்க்கை தொடங்கி ரகுவரனுடனான அவருடைய சிநேகம் வரைக்குமாக அவருடைய பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. தற்போது அப்பாவின் மீசை என்கிற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்தது.

பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் இன்று சமகால தமிழிலக்கிய வாசிப்பினால் தான் முழுமையாக தமிழராக உணர்வதாகவும் சொன்னார். நாம் எந்த மொழியில் சிந்திக்கிறோமோ அதுதானே நம் தாய்மொழியாக இருக்க முடியும் என்னால் தமிழில்தான் சிந்திக்கமுடிகிறது கோபம் வந்தாலும் அழுகைவந்தாலும் தமிழிலில்தான் எதிர்வினையாற்ற முடிகிறது எனவே எனக்கு தமிழ்தான் தாய்மொழி என்றார். சரிதானே!

பேசும்போது சுஜாதா தொடர்பாக ஒரு விஷயத்தை சொன்னார். 2005-06 நேரத்தில் உயிர்மையின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாராம் ரோகிணி. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் ரோகிணி ஒரு பாடலை எழுதி அது சூப்பர்ஹிட்டாகியிருந்த நேரம். நூல் வெளியீட்டுவிழாவில் கவிதை நூலை வெளியிட்ட ரோகிணியிடம் ''ஏம்மா உனக்கு தமிழ் வாசிக்க வருமா'' என்று நக்கலாக கேட்டாராம் சுஜாதா. அவருடைய அந்த கேள்வி ரொம்ப வருத்தமுற வைத்ததாக குறிப்பிட்டார் ரோகிணி!

ரகுவரன் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் எப்படி தன்னுடைய ஒவ்வொரு பாத்திரங்களுக்காகவும் மெனக்கெடுவார் என்று விளக்கினார்.

துள்ளிதிரிந்த காலம் படத்தில் வருகிற அந்த ட்ரைன்ட்ரைவர் பாத்திரத்திற்காக பத்து நாட்கள் சென்னையின் கோடையிலும் ஸ்வட்டர் மாட்டிக்கொண்டு சுற்றினாராம் ! இளம் வயதிலேயே சர்க்கரை நோயாலும் அல்சராலும் பாதிக்கப்பட்டிருந்த ரகுவரன், ஒரு காட்சியை படமாக்கி முடிக்கும் வரை சாப்பிடவே மாட்டாராம்! நடுவில் உணவு இடைவேளை வந்தாலும் சாப்பிட்டாமல் காத்திருப்பாராம்.

ஏன்ங்க இப்படி என்று விசாரித்தால் ''சாப்பிட்டா மந்தமாகிடும் அப்புறம் தொடர்ச்சியா முந்தைய நடிப்பையே தொடர முடியாது'' என்று சொல்லிவிட்டு டீயும் சிகரட்டுமாக உட்கார்ந்துவிடுவாராம் இந்த தமிழின் ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர்.

****

அல்லயன்ஸ் பிரான்சேவில் போனவாரம் ஓசியில் நூல்கள் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு போகலாம் என்று நினைத்திருந்தேன். நண்பர்களுக்கும் சொல்லியிருந்தேன். சனிக்கிழமை காலை பத்து மணி முதல் அள்ளிக்கலாம் என்று தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்திருந்தார்கள் அல்லயன்ஸ் பிரான்சேயார்.

யாரும் வருவதற்கு முன் மொத்தமாக அள்ளிவிடலாம் என்கிற திட்டத்தோடு நம்முடைய நண்பர் ஒருவர் காலை ஒன்பதுமணிக்கே போய் கேட் பக்கமாக காத்திருந்து முண்டியடித்து உள்ளே நுழைந்து நூல்களை தேடி பார்த்திருக்கிறார். எல்லாம் பிரெஞ்சு நூல்கள். செம காண்டாகி போனவர் கடைசியில் துக்கப்பட்டு கஷ்டப்பட்டு தேடித்தேடி ''A GLANCE AT FRANCE" என்கிற ஒற்றை ஆங்கில நூலை கண்டுபிடித்து எடுத்து வந்தாராம்! நல்ல வேளை நான் போகவில்லை.

***

ஜே.ஃபிரான்ஸிஸ் கிருபாவின் இந்தக்கவிதை ரொம்பவும் பிடித்தது.

பெண்ணைக் கண்டு
பேரிரைச்சலிடுகிறாயே மனமே...
பெண்யார்?
பெற்றுக்கொண்டால் மகள்.
பெறாத வரையில்
பிரகாசமான இருள்.
வேறொன்றுமில்லை.

***

புதிதாக கொரிய திரைப்படங்கள் பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ இணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் வருகிற க்யூட்டான பொண்ணு படங்களின் பெயர்களை மட்டுமே உதிர்க்காமல் கொஞ்சம் ஜாலியாக படத்தின் கதையை பற்றியும் அதன் வகைமையைப்பற்றியும் அழகாக சிரிக்க சிரிக்க எடுத்துக்கூறுகிறார். கொரிய பெண்ணாக இருந்தாலும் புரியும்படி தெளிவாக ஆங்கிலத்தில் பேசுகிறார். உங்கள் கொரிய படங்களுக்கான ஆர்வத்தை இங்கிருந்து தொடங்கலாம்...
***

மேலே கொடுத்திருந்த பத்தியை எழுதியவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஜூவி உணவுயுத்தம் தொடரிலிருந்து.