16 June 2014

எத்த தண்டி!


அவ்வளவு பெரிய கிழங்கை நான் பார்த்ததேயில்லை. எத்தா தண்டி? ஒருவேளை கிராமத்தில் பிறந்துவளர்ந்தவர்களுக்கு பரிச்சயமாக இருக்கலாம். நல்ல தென்னமர சைஸில் இருந்தது அந்தக் கிழங்கு.

அந்த கிழங்குத்தூணின் ஒரு சிறு பீஸை (அதுவே யானையின் கால்மாதிரி இருந்தது) மட்டும் வெட்டி வைத்து ‘’இயற்கை பூமி சக்கரவள்ளிக்கிழங்கு, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையக்கூடியது எல்லாரும் சாப்பிடலாம்’’ என்கிற பெயர்பலகையோடு ரிச்சி ஸ்ட்ரீட் பக்கம் வண்டியில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார் ஒரு ஆள். இப்படி ஒரு விஷயத்தை பார்த்துவிட்டு சும்மா இருக்கவும் முடியுமா? (கொஞ்சம் தலையை வளைத்து... பார்க்க படம்)

என்னங்க இது ருசியாருக்குமா என்று விசாரிக்க.. அட இந்தா புடிங்க என ஒரு சிறுதுண்டு சாம்பிள் கொடுக்க.. அதை பெருந்தயக்கத்தோடு வாயிலிட்டு கடித்துப் பார்க்க.. அது வெள்ளரிப்பழம்போல ஒருமாதிரி ஈரப்பதமாக பச்சை வாசனையோடு சுவையாக இருக்க.. குடுங்க சார் எனக்கு ஒரு துண்டு என ஆர்டரிட்டேன். ஒசூர் தினமலரில் இந்த கிழங்குபற்றி நியூஸெல்லாம் போட்டிருந்தார்கள். மருத்துவர் கு.சிவராமனுக்கு ஒருவார்த்தை போன் அடித்து விசாரித்துவிடவும் யோசித்தேன். ஆனால் சாம்பிள் சுவை அது நிச்சயமாக சர்க்கரை வள்ளிகிழங்கு இல்லை என்பதை மட்டும் சொன்னது. ஏதோ காட்டுகிழங்கு போல என நினைத்துக்கொண்டேன்.

கிழங்குதூணிலிருந்து ஒரு சிறுதுண்டை சிப்ஸுக்கு கட் பண்ணுவதுபோல ஸ்லைஸ் பண்ணி அதில் எலுமிச்சம்பழமும் சுகரும் கலந்து நெய்ரோஸ்ட் போல முக்கோண வடிவில் மடித்துக்கொடுத்தார் ஆள். அப்படியே வாயில் வைத்துக்கடித்தால் நன்றாகவே இருப்பதுபோலத்தான் இருந்தது. என்னோடு வந்திருந்த நண்பர் ஒரு துண்டை முயற்சி செய்தார். இன்னொரு நண்பர் சாம்பிள் சாப்பிட்டே பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார்.

தர்பூசணி காயில் எலுமிச்சஞ்சாறறைத் தேய்த்து அதன் மீது சக்கரை தூவினாற் போல இருந்த அந்த சாதனத்தை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி ஆகும், ஆண்மைக்குறைவு நீங்கும், பைல்ஸுக்கு நல்லது என்று தொடங்கி பல்வேறு மருத்துவகுணங்களை பட்டியலிட்டார் கடைகார். எய்ட்ஸும் கேன்சரும் தவிர்த்து கிட்டத்தட்ட எல்லா நோய்க்கும் அது மருந்தாகும் என்பதாக அவர் சொன்னதாக புரிந்துகொண்டேன். இருபது ரூபா பொருளைவிற்கத்தான் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள்.

நான் அதை ரசித்து ரசித்து சாப்பிட்டுக்கொண்டே ‘’ஏன்ங்க இதுக்கு எப்படி தமிழ்நாட்ல வரவேற்பு, இது எந்த ஊர்ல விளையுது?’’ என்றெல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தேன். இது ஓசூர் பக்கமிருக்கிற காடுகளில் 12ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கிற அபூர்வமான கிழங்கு என்றும் ரொம்பவும் விலை அதிகம் ‘’இந்த ஒரு துண்டு ஆயிரத்து ஐநூறு ரூவா..’’ என்றார். பொதுவாக கப்சா விடுகிறவர்களிடம் நம்புவதைப்போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தால் மேலும் மேலும் கப்சாவிட்டு நன்றாக காமெடி பண்ணுவார்கள்.. இந்த வண்டிக்காரரும்.. பேப்பர்ல பேட்டி எடுத்துருக்காங்க ப்ரதர், நாளைக்கு காலைல நியூஸ் வரும்பாருங்க என்றுவேறு சொன்னார். அந்த ஏழை தள்ளுவண்டிக்காரனின் முகத்தில் இறைவன் தெரிந்தான்!

வண்டிக்காரர் மகிழ்ச்சியோடு துட்டை வாங்கிக்கொண்டு கிளம்ப நாங்கள் அருகிலிருக்கிற நண்பரின் அலுவலகத்திற்கு கிளம்பினோம். சாம்பிள் சாப்பிட்ட நண்பர் லேசாக தலைவலிப்பதாக சொன்னார். ஃபுல்லாக சாப்பிட்ட நண்பருக்கு கிறுகிறுப்பாக இருப்பதாக சொன்னார். எனக்கு அப்படி எந்த அறிகுறியும் இல்லை. அவர்களிருவரும் ஏன்ங்க கண்ட கருமத்தை வாங்கிக்குடுத்து இப்ப பாருங்க ஒருமாதிரி கேரா இருக்கு என்று என்னை பிடித்துக்கொண்டனர். ஃபுல் சாப்பிட்ட நண்பர் ‘’இது ஏதோ போதை மருந்து தயாரிக்கிற கிழங்குபோலருக்குங்க.. தலைய சுத்துது.. ‘’ என்று உட்கார்ந்தே விட்டார். சாம்பிள் தின்றவர் தண்ணீரை வாங்கி முகங்கழுவிக்கொண்டார். ஆனால் எனக்கு எதுவுமே ஆகவில்லை. என்னங்கடா இது என்று சிந்திக்க ஆரம்பித்திருந்தேன்.

‘’ஒருவேளை சிட்ரிக் ஆசிடும், குளுகோஸும் சேர்ந்து ஏதாவது வேதிவினை மாற்றங்கள் பண்ணி சாதா கிழங்கை ஆபத்தான போதைப்பொருளா மாத்திருக்குமோ’’ என்றேன். ஆனால் அவர்கள் இப்போது அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. சில நிமிட தலைசுற்றல்களுக்கு பிறகு அவர்கள் நார்மலாகினர். ஆனால் இந்த கேப்பில் சென்னை நகரத்தின் ஏதோ சந்துகளுக்குள் புகுந்து எஸ்கேப்பாகியிருந்தார்! ஆள் சிக்கவே இல்லை.

ஆனால் எனக்கு அப்போதுதான் லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது. எங்காவது உட்கார்ந்தால் தேவலாம் போலிருந்தது. நம்முடைய நியூரான்கள் ட்யூப்லைட்டுகள் போல! ஆனால் ஹெவியான தலைசுற்றல். வாந்திவருவதைப்போலவும் மயக்கமும்.. குழப்பியடிக்க.. அரைமணிநேரம் கதறவிட்டு பிறகுதான் ஓய்ந்தது. ஒருவழியாக எல்லாம் ஓய..

அடுத்தநாட்களில் அவருடைய புகைப்படமும் அபூர்வ கிழங்குகுறித்த சிறுகுறிப்பும் பிரபல நாளிதழில் வெளியாகியிருந்தது. சாம்பிள் தின்றவருக்கு காய்ச்சல் வந்துவிட்டிருந்தது. எனக்கு குடல் பிதுங்கும் அளவுக்கு கலக்கி… இன்னொரு நண்பர் அதற்குபிறகு ஆளையேகாணவில்லை.

11 comments:

PRINCENRSAMA said...

(கொஞ்சம் தலையை வளைத்து... பார்க்க படம்)யோவ்.. சும்மாவே இங்க அவனவனுக்கு கழுத்து வலி! இதில வளைச்சு வேற பார்க்கணுமா? அதை நிமித்தி போட்டாதான் என்னவாம்?

Anonymous said...

தென்னமரத்துண்டு போல அல்ல, இது தென்ன மரமேதான். தென்னையின் குருத்து இது. எங்கள் ஊர் பக்கம் எல்லாம் கிடைக்கும். இதை தின்றால் தலை சுற்றும் என்பதுதான் புதிதாக உள்ளது.

Makesh said...

I had it at least 4, 5 times on different occasions from 2005 to 2014. No such effects. Already makkal ithai ellam thirumbi pakkave mattanga neenga kilappum puraliyil evanum vaanga mattan.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அதுக்குத்தான் எங்க பாட்டி அடிக்கடி சொல்லும்.. “யார் எதக் குடுத்தாலும் வாய்ல போடாதே, கருமமே..” என்று.

நல்ல அனுபவம். :))))

Raashid Ahamed said...

போற போக்கை பாத்தா இதை சாப்பிடா நூறு வயசு வாழலாம், எயிட்ஸ் எல்லாம் குணமாகும்னு கூட சொல்லி எதையாவது விற்பானுங்க. கேப்பையில நெய் வடியுதுன்னா கேப்பாருக்கு மதி எங்க போச்சி ? இதைப்பாத்தா ஏதோ உடலுக்கு ஒவ்வாத(சாப்பிட தகுதியில்லாத) ஒரு கிழங்கு வகை மாதிரி தெரியுது, அல்லது கிழங்கோடு கொடுத்த பிற்சேர்க்கை தான் ஏதோ வயித்துல வேதி வினை புரிஞ்சிருக்கு

Aruna said...

அதிஷா,

நீங்கள் சொல்வது புதிராக உள்ளது. ஏனென்றால், இந்த கிழங்கை ரெகுலராக பல்லாவரம் சந்தையில் விற்கிறார்கள். மக்களும் வாங்கி சாப்பிட்டு நார்மலாகத்தான் இருக்கிறார்கள்(நான் உட்பட)!

ஒருவேளை நீங்கள் சாப்பிட்ட இடத்தில் சர்க்கரயில் ஏதேனும் கலப்படம் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். நம் ஊரில் சிறு வியாபாரிகள் பொதுவாக ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதில்லை. உங்கள் கெட்ட நேரம் இப்படி ஆகிவிட்டதென்றே நினைக்கிறேன்.

Umesh Srinivasan said...

படம் மப்புல எடுத்ததோ?

hello India said...

பாஸ் இங்க ெபெங்கலூர்ல ிenga areale adikkadi vippanga pakka aasaiya irukkum aana adhukkulle ivlo problem irukka aananulum romba pavanga neenga thanks for your info

Rathnavel Natarajan said...

அருமை அதிஷா.

Anonymous said...

just a thought.
Might be the side effect of something else you ate before eating this ? Don't simply blame the guy..

rajesh said...

ithu boomi sarkarai kizhangu thaan