Pages

19 August 2014

தேனிமுருகன்




தேனிமுருகன் தமிழ்சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளாத மிகநல்ல குணசித்திர நடிகர். முகத்தில் அப்பாவித்தனமும் குரலில் லேசாக் க்ரீச்சிடும் தெனாவெட்டுமாக அசலான மதுரை மனிதராக நிறைய திரைப்படங்களில் வடிவேலுவோடு சின்னச்சின்ன நகைச்சுவை வேடங்களில் வலம்வருவார். ஆனால் சீரியஸ் நடிப்பிலும் அசத்தக்கூடியவர்.

பண்ணையாரும் பத்மினியும் ‘குறும்படம்’ பார்த்ததுண்டா? அதில் பண்ணையாராக இவர்தான் நடித்திருப்பார். அக்குறும்படம் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது இவருடைய பாத்திரத்தில் நடித்த ஜெயபிரகாஷ் நன்றாகவே நடித்திருந்தார், ஆனால் குறும்படத்தில் நாயகனாக நடித்த தேனிமுருகனின் முகத்தில் நிரம்பியிருந்த கருணையும் அன்பும் கிராமத்து பெரிசுகளுக்கே உரிய வெள்ளந்தித்தனமும் நிச்சயமாக இல்லைவே இல்லை.

ப.பத்மினி திரைப்படம் சுமாராக போனதற்கு அதுவும் ஒருகாரணம், ஜெபியிடம் இயல்பாகவே இருக்கிற ஒரு கம்பீரம் அவர் என்னதான் வெள்ளந்தியாக நடித்தாலும் முந்தித்தெரிவது பெரிய சறுக்கலாக இருந்தது. தேனி முருகனை ஏனோ பண்ணையார் பத்மினியும் படத்தில் சின்ன பாத்திரத்திலும் கூட உபயோகிக்கவில்லையே என படம் வந்த போதே வருத்தமாக இருந்தது. படக்குழுவினருக்கு என்ன காரணமோ என்ன பிரச்சனையோ. போகட்டும்.

அதற்கு பிறகு தேனி முருகனை எந்த திரைப்படத்திலும் பார்த்த நினைவில்லை. சென்ற வார நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில்தான் அவருடைய குறும்படம் ஒன்றை பார்க்க வாய்த்தது. நல்ல கலைஞன் தனக்கு எப்போது வாய்ப்புக்கிடைத்தாலும் அதில் நிச்சயமாக தனித்து பிரகாசிப்பான் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் தேனிமுருகன்தான். அதை நிரூபிப்பதாக இருந்தது ‘’குலசாமி உத்தரவு’’ என்கிற அவர் நடித்த அந்த 10நிமிட குறும்படம்.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கடந்த வாரங்களில் சிறுகதை ரவுண்ட் நடந்துகொண்டிருந்தது. அப்போதெல்லாம் மாஞ்சு மாஞ்சு நம்ம மக்கள் சுஜாதா கதையே படமாக்கிக்கொண்டிருந்தனர். அப்போது பெரிய வருத்தமிருந்தது… ஆனால் சிறுகதை ரவுண்ட் முடிந்து கிராமத்து ரவுண்டில் இமையத்தின் அருமையான சிறுகதைகளில் ஒன்றோடு வந்திருந்தார் அந்த (பெயர் நினைவில்லை) இயக்குனர் ஆச்சர்யமாக!.

அந்த கதையை முன்பே வாசித்ததுண்டு. திருடுவதற்கு செல்கிற கிராமத்து ஏழை திருடன் , அவனுடைய குலவழக்கப்பட்டி திருடுவதற்கு குலசாமியிடம் உத்தரவு வாங்க காத்திருப்பான் ஏனோ அன்று உத்தரவு (பல்லி கத்துவது) கிடைக்காது. அவனுடைய புலம்பல்களும் அதன்வழியே அவன் சொல்கிற அவனுடைய வாழ்க்கையும் சமூக விமர்சனமுமாக கதை நகரும். இதை ஒரே ஷாட்டில்.. ஒரே ஒரு லொகஷேனில் மிக அருமையாக படமாக்கியிருந்தனர் இக்குறும்பட குழுவினர். (இன்னும் யூடியூபில் ஏற்றவில்லை போல.. ஏற்றியதும் நிச்சயமாக இணைப்பு தருவோம்). (இயக்குனரை தனியாக ஒரு கட்டுரை எழுதி பாராட்டலாம்)

ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிற இப்படத்தில் தேனிமுருகன் மட்டுமே பத்து நிமிடத்திற்கு புலம்பவேண்டும். அதிலும் பல்வேறு விதமான பாவனைகளை ஆல்மோஸ்ட் நவரசங்களையும் வெளிக்காட்டவேண்டும். வசனங்கள் இயல்பாக எங்கும் தடுமாறாமல் அடுத்தடுத்து வந்து விழ வேண்டும். உடல்மொழியில் லேசான அடர் நகைச்சுவை ஊடுபாவாக இருக்க வேண்டும். இத்தனையையும் சாத்தியமாக்கியிருந்தார் தேனி முருகன். குறும்படத்தை பார்த்து முடிக்கும்போது நிச்சயமாக நம்மையும் மீறி இயல்பாக அவருக்காக கைகள் தட்ட ஆரம்பிக்கும்.

சரியான வாய்ப்பு கிடைத்தால் அல்லது கொடுத்தால் இன்னொரு சிம்ஹாவாக இன்னொரு விஜயசேதுபதியாக நிச்சயம் பெரிய நடிகராக வரக்கூடிய சாத்தியமுள்ளவர். எல்லாத்துக்கும் நேரமும் காலமும் கூடிவரனுமில்ல.. அதுவுமில்லாம சினிமாவில் திறமையைவிட அதிர்ஷ்டமும் கொஞ்சம் அதிகமாவே வேணும். நிச்சயமாக தேனிமுருகனுக்கும் அந்த குலசாமி உத்தரவு சீக்கிரமே கிடைக்கணும்.