31 December 2014

99நாட்களுடைய ஓர் ஆண்டு!

இன்னொரு ஆண்டு முடிந்துவிட்டது. அனேகமாக சென்ற ஆண்டு இதே நாளில் இதேநேரத்தில் வரும் ஆண்டில் என்னவெல்லாம் செய்யலாம் என திட்டமிட்டுக்கொண்டிருந்தேன். இம்முறை இதை இரண்டு நாட்களுக்கு முன்பே செய்துவிட்டேன். அந்த அளவுக்கு இந்த ஆண்டு நான் பக்குவப்பட்டுவிட்டேன் போல என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த ஆண்டு எனக்கு யாரும் விருது எருது எதுவும் தரவில்லை என்பதால் அடுத்த ஆண்டு நானே என் பெயரில் நாலு பேருக்கு விருது கொடுக்க நினைத்திருக்கிறேன். இந்த சபதத்திலிருந்துதான் இந்த புத்தாண்டு துவங்குகிறது.

கடந்த ஆண்டுகளில் மிகவும் சுமாரான ஆண்டு 2014தான். நல்லவேளையாக சீக்கிரமே அவசரமாக முடிந்துவிட்டது. பெரிய ட்விஸ்ட்டுகளோ கஷ்டங்களோ குழப்பங்களோ எதுவுமே இல்லாமல் உப்புசப்பில்லாத உடுப்பி ஓட்டல் சாம்பார் போல இருந்தது. ஆனால் ஆரோக்கியமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். நிறைய முயற்சிகள் செய்தேன். ஆண்டின் துவக்கத்தில் நிறைய சபதங்கள் எடுத்திருந்தேன். அதில் பாதியை முடித்திருக்கிறேன் என்பதே என்னளவில் மகத்தான சாதனைதான். அதோடு அடுத்த ஆண்டுக்காகவும் எண்ணற்ற சபதங்களை க்யூவில் போட்டு வைத்திருக்கிறேன்.

சென்ற ஆண்டு எடுத்துக்கொண்ட சபதங்களில் முதன்மையானது மாரத்தான் ஓடுவது. புகைப்பழக்கத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்ட போதே முழு மாராத்தான் ஓட முடிவெடுத்திருந்தேன். ஆனால் அதற்கேற்ற உடல் எனக்கில்லை என்பதால் அரை மாராத்தான் தூரமான 21 கிலேமீட்டர் ஓட ஆறு மாதங்கள் கடும் பயிற்சி எடுத்து டிசம்பர் ஏழு சென்னை மாரத்தான் போட்டியில் இரண்டு மணிநேரம் பதினோரு நிமிடம் பதினோரு விநாடிகளில் ஓடி முடித்தேன். இந்த ஆண்டு செய்த உருப்படியான சாதனைகளில் இதுவும் ஒன்று.அடுத்து இணையத்திலிருந்து விடுவித்துக்கொண்டு 99 நாட்கள் தனிமை விரதமிருந்தது. உண்மையில் இந்த காலகட்டம் எனக்கு மிகமுக்கியமானது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஒருநாள் கூட இணையத்தை பயன்படுத்தாமல் இருந்ததில்லை. (இணையம் என்பதை இங்கே சமூகவலைதளம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.) ஒவ்வொரு நாளும் உலகத்திற்கு ஏதாவது கருத்தினை சொல்லியே ஆகவேண்டிய நிர்பந்தமின்றி மூன்று மாதகாலம் நிம்மதியாக இருந்தேன். என்னை சுற்றி நிகழுகிற எல்லாவற்றையும் ஃபேஸ்புக் ஸ்டேடஸாகவோ ட்விட்டர் ட்விட்டாக மாற்றுகிற அல்லது அதற்கென யோசிக்கிற மனநிலை மாறிவிட்டிருந்தது. அதோடு இணையத்தில் பல பத்தாயிரம் நண்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டு என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்ததும், அவை எல்லாமே மாயை என்பதும் உண்மையான நண்பர்களின் எண்ணிக்கை இன்னமும் நம் ஒருகை விரல்களுக்குள்தான் இருக்கிறது என்பதையும் உணர்த்திய வகையில் இந்த 99 நாட்கள் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மிக முக்கியமானது. இந்த காலகட்டத்தில் என்னை நிஜமாகவே மிஸ் பண்ணி காணமுடியாமல் தேடி தேடி நேரிலும் போனிலும் மின்னஞ்சலிலும் அழைத்து அன்பு காட்டிய நண்பர்களுக்கு நன்றி. ஆரம்ப நாட்களில் கை நடுக்கமிருந்தாலும் போகப்போக பழகிவிட்டது.

99 நாட்களும் எண்ணற்ற திரைப்படங்கள் பார்க்க முடிந்தது. எல்லாமே டாரன்ட் புண்ணியத்தில். ஒவ்வொரு நாளும் குறைந்ததது மூன்று படங்கள் என்கிற அளவில் மூன்று மாதமும் ஏகப்பட்ட திரைப்படங்கள். திரைப்படங்களை மட்டும் பார்க்காமல் அதன் திரைக்கதைகளை இணையத்தில் தேடி தேடி வாசித்திருக்கிறேன். இது திரைப்படங்களை மேலும் துல்லியமாக புரிந்துகொள்ளவும் அதன் திரைபடமாக்கலின் சூட்சமங்களை கற்றுக்கொடுப்பதாகவும் அமைந்தது. சிட்ஃபீல்ட் திரைக்கதை நூலையும் அதன் தமிழ் வெர்ஷனான கருந்தேள் ராஜேஷின் திரைக்கதை எழுதுவது இப்படியையும் பலதடவைகள் வாசித்தேன். இதெல்லாம் இந்த 99 நாட்களில்தான் சாத்தியமானது. இந்த 99 நாட்களில் இழந்தது நண்பர்களின் சில முக்கியமான சோக நிகழ்வுகளில் விஷயம் தாமதமாக வந்துசேர அவர்களோடு அந்தத் தருணத்தில் உடனிருக்க முடியாமல் போனதுதான். நிச்சயமாக எதையுமே இழக்கவில்லை.

இந்த ஆண்டில் பார்த்த திரைப்படங்களின் அளவுக்கு, எண்ணற்ற நூல்களையும் வாசித்து முடித்தேன் என்று சொல்ல ஆசையாக இருந்தாலும், சென்ற ஆண்டின் இறுதியில் ப்ளான் பண்ணியதுபோல நூறு நூல்களை வாசிக்கமுடியவில்லை. நாற்பது ப்ளஸ் தான் சாத்தியமானது. கொரியன் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கென நாவல் எழுதவேண்டும் என்கிற ஆர்வங்களும் இன்னமும் மிச்சமிருக்கின்றன. அடுத்த ஆண்டு நிறைய நூல் அறிமுகங்கள் செய்ய வேண்டும்.

நிறையவே பயணிக்க விரும்புகிற எனக்கு இந்த ஆண்டு போதிய அளவுக்கு பயணங்கள் வாய்க்கவேயில்லை. நண்பர் அலெக்ஸ் பால்மேனனை பேட்டியெடுக்க நான்குநாள் சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு சென்றதும் அங்கிருந்து ஊர்திரும்பும்வழியில் நாக்பூரில் ஒரு நாளும் தம்பி அறிவழகனோடு சுற்றியது மட்டும்தான் பயணங்களில் தேறியவை. இந்த ஆண்டு இந்தியா முழுக்க பயணிக்கும் ஒரு திட்டமிருக்கிறது.

என்னுடைய வலைப்பூவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைவான கட்டுரைகளையே எழுதினேன். மீண்டும் பழையபடி ஜனவரியிலிருந்து நிறைய நிறைய எழுதவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரே ஒரு நல்ல சுவாரஸ்யமான கட்டுரையாவது எழுத வேண்டும் என நினைத்திருக்கிறேன் நேரம் வாய்க்கட்டும்.

எழுத ஆரம்பித்து எட்டு ஆண்டுகளாகிவிட்ட போதும் இன்னமும் ஒரு புத்தகம் போடவில்லையே என்கிற மனக்குறை எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனாலும் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் அன்பால் ஒரு நூலை வெளியிட வேண்டியதாகிவிட்டது. இதுவரை நான் எழுதிய சிறுகதைகளில் சிலவும் இந்த ஆண்டு எழுதிய சிறுகதைகளில் சிலவற்றையும் சேர்த்து ஒரு தொகுப்பு கொண்டுவந்திருக்கிறார் மனுஷ். ‘’ஃபேஸ்புக் பொண்ணு’’ என்கிற அந்தத்தொகுப்பு வருகிற ஜனவரி மூன்றாம்தேதி வெளியாகிறது. நூறுரூபாய் விலையுள்ள அந்நூலை அனைவரும் வாங்கி படித்து பயன்பெறவும்.இந்நூல் எனக்கு எதன் துவக்கமாகவும் எதன் முடிவாகவும் இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் இப்போதைக்கு ஐயம் நெர்வஸ்! 300 நூலாவது விற்க வேண்டும். எனக்கு அவ்வளவு பெரிய சந்தை இருக்கிறதா தெரியவில்லை. அந்த எண்ணிக்கையை எட்ட முடியாவிட்டால் அடுத்த புக்கு போடும் ஆசையை இன்னும் சில ஆண்டுகளுக்கு தள்ளிவைத்துவிட வேண்டியதுதான் என முடிவெடுத்திருக்கிறேன். எழுதுவதில் மிகமுக்கியமான சபதங்கள் மூன்று இருக்கின்றன. 1.குழந்தைகளுக்கு நிறைய எழுதவேண்டும்.. 2.குழந்தைகளுக்கு எதாவது எழுத வேண்டும்… 3.குழந்தைகளுக்கு கொஞ்சமாவது எழுதவேண்டும்.

இந்த ஆண்டு யாரிடமும் சண்டை எதுவும் போடவில்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் படி பேசவோ எழுதவோ இல்லை என்பதும் கூட சாதனைதான். அதற்கு முக்கிய காரணம் இந்த ஆண்டு சினிமா விமர்சனங்களை குறைத்துக்கொண்டதுதான் என்று தோன்றுகிறது. இந்த ஆண்டு கற்றுக்கொண்டது ‘’நமக்கான போட்டியாளர் வெளியில் இல்லை, அவர் நமக்குள் இருக்கிறார் நாம் முறியடிக்கவேண்டியது நம்முடைய சாதனைகளைத்தான்’’.

என்னளவில் எண்ணற்ற கனவுகளும் லட்சியங்களுமாக 2015 பிறக்கிறது. அடுத்த ஆண்டுக்கான சபதங்களும் சவால்களும் கண்முன்னால் காத்திருக்கின்றன. நிறைய சாதனைகளோடு அடுத்த ஆண்டு சந்திப்போம். ஹேப்பி நியூ இயர். சீ யூ சூன்.

10 comments:

naazir shan said...

:)

Anonymous said...

ALL THE BEST FOR YOUR 2015 PLANS

BY
VIMAL

Maktub said...

All the best for your Full Marathon Run !

ஷர்புதீன் said...

so u need friend to buy a book,
ha ha ha ha,

ippathaan neenga namma route ku vanthirukkeenga

megneash k thirumurugan said...

எண்ணங்கள் எண்ணியவாறே நிறைவேற வாழ்த்துகள் அண்ணா !!!

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தம 1

ரூபன் said...

வணக்கம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

HAJA SHERIFF said...

success success success

சந்திர கிருஷ்ணா said...

குழந்தைகளுக்காக நிச்சயமாக நிறைய எழுதுவீங்க தல. அதற்கு முன்னோட்டமாக உங்கள் பேஸ்புக் பொண்ணு 300 பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர வாழ்த்துக்கள்...

Raashid Ahamed said...

புது வருஷத்துல சாதனைகள் பண்ண வாழ்த்துக்கள் ! அது என்ன 99 நாள் ! ஒரு நாள் கூடினா என்னா ? ஆனா முன்னறிவிப்பு இல்லாம இப்படி தவத்தில் ஈடுபடுவது தவறு.