02 January 2015

குடிங்க சார் குடலுக்கு நல்லது
புத்தாண்டு என்பதால் குடிக்கிறார்களா? அல்லது குடிப்பதற்காகவே புத்தாண்டு கொண்டாடப்படுகிறதா? என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. வேறெந்த பண்டிகைகளின் போதும் இந்த அளவுக்கு குடியும் வெடியும் இருக்குமா என்பது சந்தேகமே! ஆண்டுதோறும் குடிப்பவர்களும் குடித்துவிட்டு வண்டியோட்டுபவர்களும் அதிகரித்துவருகிறார்கள். குடிப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட அனேக பண்டிகைகளில் ஒன்றாக ஆங்கிலப்புத்தாண்டு மாறிவருகிறது. குடிப்பது ஃபேஷனாக இருந்தகாலம் போய் அது ஒவ்வொரு ஆண்டும் அல்லது ஒவ்வொரு பண்டிக்கைக்கும் கட்டாயம் செய்தேயாகவேண்டிய சடங்காக மாறிவிட்டது. ஒவ்வொரு பண்டிகைக்கும் முந்தைய பண்டிகையில் குடித்த அளவினை முறியடித்து வெற்றிவாகை சூடுகிறார்கள் குடிகாரர்கள். குடித்துவிட்டு மட்டையாகிற மாவீரர்களை விடவும் ஆபத்தானவர்கள் அரைபோதையில் வண்டியோட்டி யார்மீதாவது ஏற்றி விபத்துகளை உருவாக்குகிறவர்கள்.

புத்தாண்டையோட்டி சென்னை குடிகாரர்கள் சில சாதனைகளை செய்திருக்கிறார்கள்.

1.புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் இரவு 300 பேர் விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்து நேற்று அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கால்வாசிதான் குடித்துவிட்டு வண்டியோட்டிவர்கள். மீதிபேர் குடிகாரர்கள் மோதியதால் பாதிக்கப்பட்டவர்கள்.

2.மெரீனா பீச்சில் மட்டுமே புத்தாண்டு அன்று 4.5 டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதில் முக்கால்வாசிக்கும் மேல் பீர் முதலான மது பாட்டில்களும் சைட்டிஷ் குப்பைகளும்!

3.ஐந்து பேர் செத்துப்போயிருக்கிறார்கள். அதில் 70வயது பாட்டி ஓருவர் மீது யாரோ குடிபோதையில் வண்டி ஏற்றி கொன்றிருக்கிறார்கள். குடிபோதையில் ஒருவர் மாடியிலிருந்து தலைகுப்புற விழுந்து மாண்டிருக்கிறார்.

4.மாங்காட்டில் 18வயது குடிகார இளைஞனை இன்னும் சில அப்பகுதி குடிகார இளைஞர்கள் அடித்து கொன்றிருக்கிறார்கள்!

5.டாஸ்மாக் விற்பனை சாதனை அறிக்கை இதுவரை வெளியாகவில்லை ஆனதும் அதுவும் இந்த பட்டியலில் நிச்சயம் சேர்க்கப்படும்.

இதில் இந்த கொலை விஷயம் மட்டும் மிகவும் அதிர்ச்சிகரமானது. மாங்காடு பகுதியில் ஏதோ கிரவுண்டில் நன்றாக குடித்துவிட்டு கிரவுண்டை விட்டு வெளியே வரும்போது வேறு சில குடிகார இளைஞர்கள் உள்ளே நுழைய குடிகாரர்களுக்குள் ஏதோ சண்டை ஏற்பட கைகலப்பு கொலையில் முடிய, புத்தாண்டுக்கு சரக்கடித்த நண்பர்கள் இரண்டுபேர் போதை தெளியும்போது லாக்அப்பில் இருந்தனர். யாரோ பெற்றோர் தன்னுடைய 18வயது ஒற்றை மகனை இழந்து பரிதவிக்கிறார்கள். அந்தப்பையனுக்கு வயது பதினெட்டு என்பதுதான் அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருந்தது. கொலை செய்தவர்களுடைய வயதும் கிட்டத்தட்ட அதே அளவுதான். இன்று மிக இளம் வயதிலேயே பிள்ளைகள் குடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதாவது எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கும்போதிருந்தே. குடிப்பது மட்டுமல்ல குடித்தபின் நாம் நினைத்துப்பார்க்க முடியாத வன்முறையை வெளிப்படுத்துகிறார்கள்.

நண்பருடைய மகன் பத்தாம் வகுப்புதான் படிக்கிறான். அவன் தன் நண்பர்களோடு புத்தாண்டை கொண்டாட மொட்டை மாடியை திறந்துவிடக்கோரியிருக்கிறான். அதற்கு சம்மதித்து அனுமதித்திருக்கிறார் நண்பர். காலையில் விடிந்ததும் மொட்டைமாடியை சுத்தம் செய்யும்போது பத்துக்கும் அதிகமான பீர் பாட்டில்கள் கிடைத்திருக்கிறது. பையனை அழைத்து என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா என்று கண்டித்திருக்கிறார். அந்தப்பையனோ ‘’அப்பா பாரின்லலாம் என்னை விட சின்ன பசங்கள்லாம் தண்ணி அடிக்கறாங்கப்பா.. ஒரு நாள்தானப்பா.. விடுப்பா நீகூடதான் நேத்து பார்ட்டில சரக்கை போட்டுட்டு வந்துருந்த, அம்மா எதுனா கேட்டுச்சா’’ என்றிருக்கிறான். அதற்கு நண்பரிடம் சொல்ல எதுவுமே இருக்கவில்லையாம்.

இன்று பையன்கள் குடிப்பதற்கும் குடித்தபின் வெளிப்படுத்தும் வன்முறைக்கும் பல்வேறு உளவியல் காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமானது பள்ளிகள் அவர்கள் மீது திணிக்கிற தாங்கமுடியாத படிப்பு சுமை. மார்க்கெடுக்க வேண்டும் என இன்னொரு பக்கம் பெற்றோர்கள் தருகிற அழுத்தம். குடி என்பது குழந்தைகளுக்கும் ரீச்சபிளாக மாறிப்போயிருப்பது. கேளிக்கையான விஷயங்களை பள்ளிகள் குறைத்துக்கொண்டது என நிறைய காரணங்கள் உண்டு. குடி என்பது வெளிநாடுகளில் இருப்பது போல கேளிக்கையான விஷயமாக நம்மூரில் இல்லை. போலவே அங்குள்ளது போல இங்கு நல்ல மதுவும் கிடைப்பதில்லை.

கடந்த பதினைந்தாண்டுகளில் குடிப்பது என்பது மிகவும் சகஜமான விஷயமாக மாறிவிட்டிருக்கிறது. எல்லோருமே குடிக்கிறார்கள் ‘’நான் குடிக்காமலிருந்தால் எனக்கு அவமரியாதை உண்டாகும்’’ என்கிற எண்ணம் பையன்களின் மனதில் எப்படியோ ஆழமாக பதிந்துவிட்டிருக்கிறது. குடிப்பதற்கான முதன்மையான காரணம் தங்களுடைய ஆண்மையை ஹீரோயிசத்தை நண்பர்கள் மத்தியில் வெளிக்காட்டிக்கொள்ளுகிற முனைப்புதான். அதிலும் அதிகமாக குடிக்கிறவன்தான் பிஸ்தா என்கிற மனநிலையும் உண்டு.

இன்று எல்லா பையன்களும் குறைந்தபட்சம் 150சிசிக்கும் அதிகமான சக்தியுள்ள பைக்குகளையே பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். இந்த பைக்குகளையும் வாங்கிக்கொடுத்து கூடவே குடிக்க காசும் கொடுப்பது பெற்றோர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த பைக்குகளை ஓட்டும்போது சைட் ஸ்டான்ட்டை போட்டுக்கொண்டு வேண்டுமென்றே தரையில் உராய வண்டியோட்டி பொறிபறக்க வைப்பது, பின்னால் அமர்ந்திருப்பவர் எழுந்து நின்று ஆடுவது, வீலிங் சாகசங்கள், ரேஸ் விடுவது என பைக் ஓட்டுவதை தற்கொலை முயற்சிகளுக்கு ஒப்பாக செய்யவும் இந்த பையன்கள் தயங்குவதில்லை, இவர்கள் யாரும் ஹெல்மெட் அணிவதுமில்லை!

புத்தாண்டு தினத்தன்று எண்ணற்ற காவலர்கள் இரவெல்லாம் கண்விழித்து குடித்து விட்டு வண்டியோட்டுபவர்களை பிடித்து வைத்து போதை தெளிந்த பின் விட்டிருக்கிறார்கள். சாலைகளில் அதிவேகத்தில் பறக்கும் குடிகார வண்டிகளின் வேகத்தை குறைக்க சக்திவாய்ந்த விளக்குகளை பாய்ச்சியும் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் எத்தனை பேரை கட்டுப்படுத்த முடியும்.

யாரையும் குடிக்க வேண்டாம். ஒட்டுமொத்த மதுவையும் ஒழித்துவிட்டால் நாடு தூய்மையாகிவிடும், பார்ட்டி பண்ணாதீங்கோ என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நிச்சயமாக இளைஞர்கள் புத்தாண்டு தினத்தன்று உற்சாகமாக கொண்டாடுவது உசிதமானதே. ஆனால் அதை பாதுகாப்பாக செய்யவேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. காரணம் மது அருந்துதலை முறைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இங்கே மது அருந்துதலை ஆரோக்கியமான கலாச்சாரமாக மாற்ற வேண்டிய அவசியமிருக்கிறது. வீட்டிற்குள்ளேயோ அல்லது பாரிலேயோ குடித்துவிட்டு யாருக்கும் தொந்தரவில்லாமல் பாதுகாப்பாக வீடு போய் சேர்கிற எண்ணற்ற நண்பர்களை நானறிவேன். இந்த குடிகார வண்டியோட்டி எமதர்மன்களோடு ஒப்பிடும்போது அவர்களெல்லாம் மகாத்மாக்களாக உயர்ந்து நிற்கிறார்கள்.

குடித்துவிட்டு பைக்கும் காரும் ஓட்டுவது நமக்கு மட்டுமல்ல மற்றோருக்கும் ஆபத்து என்பதை உணர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அப்படிப்பட்ட விஷயங்களை செய்ய முடிந்தால் மது அருந்துவதை நிச்சயமாக இருகரம் கூப்பி வரவேற்கலாம். அதுவரைக்கும் குடிகாரர்களின் ஹேப்பி நியூ இயர் யாருக்கும் மகிழ்ச்சி தராது.

11 comments:

Muthu said...

இம்மாதிரி சிறந்த, இளைஞருக்கு அறிவூட்டக்கூடிய கட்டுரைகள் அவசியம் வரவேற்கப்படவேண்டியவை.

ஆனால், இந்தக் கட்டுரையோடு, மதுக் குப்பிகள் வரிசையாக் அடைத்திருப்பதைக் காட்டும் படம் அவசியமா? மறைமுகமாக (subliminal) மது அருந்த (தவறு) ”குடிக்க”த் தூண்டுவதுபோல் இருக்கிறது.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நல்ல விழிப்புணர்வுச் செய்தி.. பகிர்வுக்கு நன்றி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அநாநி said...

சியர்சு !!!!

Ravi said...

Excellent article.
But it is pathetic on our society's state to note that we are now ready to appreciate the people who drink "peacefully!! Having had hundreds of friends who drink I can say that there is no such thing as good drinkers. There will always be some affected party due to their drinking. It could be their wives or the future character of their kids.
If we really want to support such people the question I have is, will those people accept if their wives also drink "peacefully"?

மகிழ்நிறை said...

புத்தாண்டு அன்றே செய்திகளில் இந்த விபத்துகள் பற்றிய செய்தி வந்தது எவ்வளவு மன வேதனையாக இருந்தது... சரினா கட்டுரை!!

Anonymous said...

really very nice article & nice msg too - siddharth

Anonymous said...

"காவலர்கள் இரவெல்லாம் கண்விழித்து குடித்து விட்டு வண்டியோட்டுபவர்களை பிடித்து வைத்து போதை தெளிந்த பின் விட்டிருக்கிறார்கள். " ஏன்? கைது செய்யவில்லை. அது இனி வரும் புது வருடங்களுக்கும் பாடமாக இருந்திருக்கும்.

HAJA SHERIFF said...

REALLY
SUPER....
KEEP IT UP

HAJA SHERIFF said...

KEEP IT UP

surendran said...

sokka sonnnapa ;D;:D

Raashid Ahamed said...

மிகுந்த சமுதாய அக்கறையோடு எழுதியிருக்கிறீர்கள். ஆனால் குடிப்பழக்கமில்லாத நடுத்தர வர்க்கத்தினர் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் தெரியுமா ? டிசம்பர் 31மாலையிலிருந்து ஜனவரி மாலை வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. எப்படி கரடியா கத்தினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. குடிப்பது ஒரு கௌரவமாக பார்க்கபடுகிறது. அது கேவலமாக பார்க்கப்பட வேண்டும். குடிப்பழக்கம் உள்ளவனிடம் உள்ள மனித்தத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மாறி மிருகத்தனம் உட்புகுந்துவிடும். அது பெற்ற பெண்ணை கூட தவறாக பார்க்க தோன்றும். சுத்தமாக மதுவை ஒழிக்க வேண்டும் ! இது ஆகும் காரியமா ?