18 March 2015

பிரபஞ்சனைப் படித்தால் ஃபிகர் மடியுமா?
ஒரு கல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள். ‘’வாசிப்பின் அவசியம்’’ பற்றி மீடியா மாணவர்களிடம் உரையாட வேண்டும் என்றார்கள். சுஜாதா, சுபா, ரமணிச்சந்திரன் தொடங்கி ஷோபாசக்தி, சுந்தர ராமசாமி வரை பல நூல்கள் குறித்தும் அவர்களை எல்லாம் ஏன் வாசிக்கவேண்டும் எதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்பது மாதிரி நிறைய அடங்கிய குறிப்புகளை தயாரித்து எடுத்துச்சென்றிருந்தேன்.இன்றைக்கு நாலு பையன்களையாவது தமிழ் இலக்கியத்துக்கு இட்டாந்துரணும் என்பதுதான் என்னுடைய ஒரே எண்ணமாக இருந்தது.

முன்பே துறைத்தலைவரிடம் ‘’ஐயா தமிழ் இலக்கிய நூல்கள் பற்றி பேசலாமா’’ என்று கேட்டிருந்தேன். அந்தப்பக்கமிருந்து ‘’அவங்க எந்த கருமத்தையாவது படிச்சா போதும், நீங்க கூச்சப்படாம பேசுங்க’’ என்றார்கள். இதில் கூச்சப்பட என்ன இருக்கிறது. ஆனால் ‘’எந்த கருமத்தையாவது’’ என்று சொல்லும்போதே நான் சுதாரிப்பாக இருந்திருக்கலாம்.

அரங்கில் நூறு அல்லது நூற்றி பத்து மாணவர்கள் இருந்திருக்கலாம். எல்லோருமே பட்டப்படிப்பு முடித்தவர்கள். சில கேள்விகளுடன் பேச்சைத் துவங்கினேன். ‘’இங்கே எத்தனை பேர் தமிழ் நூல்கள் படிப்பவர்கள்?’’ அரங்கத்திலிருந்த அத்தனை பேரும் காலை உணவாக இரண்டு டப்பா பெவிகால் தின்றுவிட்டு வந்தது போல உட்கார்ந்திருந்தார்கள்! நூற்றியோரு சதவீத நிசப்தம்.

‘’இங்கே எத்தனை பேருக்கு சுஜாதாவை தெரியும்?’’ மீண்டும் அதே அமைதி. ‘’சும்மா சொல்லுங்க யாருக்குமே தெரியாதா, படத்துக்கெல்லாம் வசனம் எழுதிருக்கார்’’ என்றேன். ஒரு முனகல் கூட இல்லை. அடுத்த கேள்விக்கும் இதே நிசப்தமே பதிலாக வந்தால் அங்கேயே மூர்ச்சையாகி மூச்சை விட்டிருப்பேன். ‘’கல்கியின் பொன்னியின் செல்வன் தெரியுமா’’ என்று கேட்க இரண்டுபேர் தயங்கி தயங்கி கைதூக்கினார்கள்! படிச்சிருக்கீங்களா என்றேன் ‘’இல்ல பாத்துருக்கோம், வீட்லருக்கு’’

இவர்களெல்லாம் ஆங்கிலத்தில் படிப்பார்களாயிருக்கும், என்ன இருந்தாலும் மெட்ரிகுலேஷன் தலைமுறை மாணாக்கர்களில்லையா? சேதன்பகத் படிக்கிறவர்கள் எத்தனை பேர் என்று கேட்டேன். ஒரே ஒரு பெண் மட்டும் கைதூக்கினாள். மற்றவர்கள் அவளை திரும்பி பார்த்து ஏதோ முணுமுணுத்துக்கொண்டனர். அமிஷ் திரிபாதியை மட்டும் ஏன் விடுவானேன் என்று அவரை எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டேன். நூறு புன்னகைகள் மட்டுமே பதிலாக வந்தது. ‘’இந்த நாய் நம்மள கேள்வி கீள்வி கேட்டுதொலைச்சிருமோ?’’ என்கிற மரணபீதியை மறைத்துக்கொண்டு இளம் ஆசிரியர்கள் கூட போலிப்புன்னகையோடு என்னை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தனர்.

இவ்வளவு நடந்தபின்னும் கூட கேள்விகேட்பதை விடவில்லை. ‘’சரி இங்கே எத்தனை பேர் டெய்லி பேப்பராச்சும் படிக்கறீங்க’’ என்று கேட்டேன். நான்குபேர் கையை தூக்கினார்கள். என்ன பேப்பர் படிப்பீங்க என்றேன். நால்வருமே ‘’எகனாமிக் டைம்ஸ்’’ என்றனர். அவர்கள் சொல்ல சொல்ல ஆசிரியர் பகுதியிலிருந்த ஒரு டைகட்டின ஆசாமி நிமிர்ந்து உட்கார்ந்தார். அந்த நால்வரும் ‘’எங்க சார்தான் படிக்க சொன்னாரு’’ என்று அவரை கைகாட்டினர். அதற்கு முந்தைய நாள்தான் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியை பிடித்திருந்தார். எத்தனை பேருக்கு அது தெரியும் , அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற என்ன காரணம் என்று கேட்டேன். நடுராத்திரி பனிரெண்டு மணி சுடுகாட்டில் கூட ஏதாவது சத்தம் கேட்கும். ஆனால் அந்த அரங்கில் அதுகூட இல்லை.

இதுக்கு மேல தாங்காது என்று நினைத்து ‘’சரி ஏன் யாருமே பாடபுத்தகங்களுக்கு வெளியே அதிகமாக படிப்பதில்லை, உங்கள் மனதில் தோன்றுகிற பதிலை நேர்மையாக சொல்லுங்கள்’’ என்று கேட்டேன். ஒரு பெண் எழுந்து நின்று ‘’எங்க வீட்ல புக்கு வாங்குனா திட்டுவாங்க சார், அவங்களும் வாங்கித்தரமாட்டாங்க’’ என்று அப்பாவியாக சொன்னார். ‘’டைம் இல்லை சார், காலேஜ் அசைன்மென்ட்ஸ் ப்ராஜெக்ட்ஸ்னு ஒரே பிஸி’’ என்றார் இன்னொரு மாணவர். ‘’சார் எதை படிக்கணும்னு தெரியல, சொல்லித்தரவும் ஆள் இல்ல, வீட்ல நியூஸ்பேப்பர் வாங்கினாக்கூட வேலைவாய்ப்பு செய்தி வர நாள்ல மட்டும்தான் வாங்க அனுமதிப்பாங்க’’ என்றார். இன்னும் என்னென்னவோ காரணங்கள் சொன்னார்கள். யாருக்கும் படிப்பதில் விருப்பமும் இல்லை நேரமும் இல்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது.

நமக்கெல்லாம் எப்போதாவது தோன்றுமில்லையா, இந்த அகண்டு விரிந்த எல்லையற்ற மகத்தான பிரபஞ்சத்தில் நம்முடைய இருத்தல் என்பது என்ன? என்பதைப்போற ஒரு ஞானோதயம். அப்படித்தான் அந்த நொடி எனக்குத்தோன்றியது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ் எழுத்தாளர்களெல்லாம் என்னுதுதான் பெரிசு உன்னுது சிறிசு என சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்களை ரட்சகர்களாகவும் தேவதூதர்களாகவும் நினைத்துக்கொண்டு அலப்பரைகளை கொடுக்கிறார்கள்.

இந்த கல்லூரியில் மட்டுமல்ல இதற்கு முன்பு மைலாப்பூருக்கு மத்தியில் இருக்கிற ஒரு பிரபல கலைக்கல்லூரியில் பேசச்சென்றிருந்த போதும் இதே மாதிரி அனுபவத்தை எதிர்கொண்டேன். இன்னும் சில மாணவர்களை சந்திக்கும்போதும், புத்தகம் வாசிப்பதை பற்றி பேசினாலே மாணவர்களுக்கு சப்தநாடியும் அடங்கி ஒடுங்கிவிடுகிறது.

இன்றைக்கு புத்தகம் வாசிக்க வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கு பத்து சதவிகிதம் கூட இல்லை. வாட்ஸ் அப் தொடங்கி ஆங்கிரிபேர்ட், கேன்டிக்ரஷ், ஷாப்பிங் மால், காபிடே, டவுன்லோட் மூவிஸ், கொரியன் சீரியல் சமூகவலைதளங்கள் என அவர்களுக்கான பொழுதுபோக்கின் முகம் மாறிவிட்டது. தொலைகாட்சியின் வருகைக்கு பிறகான தலைமுறைக்கு புத்தகம் என்பது ஒரு சுமைதான். தகவல்களுக்காக படித்த காலம் கூட உண்டு. ஆனால் இன்று ஒற்றை விரல்சொடுக்கில் தகவல்களை கொட்டத்தயாராயிருக்கிறது கூகிள். இதைத்தாண்டி எப்படி இளைஞர்கள் வாசிக்க வருவார்கள். சர்ச் எஞ்சின் தலைமுறைக்கு ஏற்ற படைப்புகளும் தமிழில் இல்லை. தமிழில் கடந்த பத்தாண்டுகளில் எழுதப்பட்ட ரொமான்டிக் நாவல்கள், அறிவியல் புனைவுகள், த்ரில்லர்கள், ஹாரர், மிஸ்டரி நாவல்கள், நகைச்சுவைக்கதைகள் எத்தனை இருக்கும்? விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் நூல்கள் வெளியிடப்படுகிறது!

வாசிப்பென்பது இருட்டறையில் அமர்ந்துகொண்டு இரண்டரை மணிநேரம் பாப்கார்ன் கொறித்த படி எதுவும் செய்யாமல் படம் பார்க்கிற ஈஸி வேலை கிடையாது. வாசிப்பதற்கு நேரம் வேண்டும், கவனம் உழைப்பு பொறுமை எல்லாம் தேவை. ஆனால் அவ்வளவு சக்தி நமக்கு கிடையாது, போதாகுறைக்கு சுவாரஸ்யமான பிரதிகளும் நம்மிடம் இல்லை. இப்படியொரு சந்தர்ப்பத்தில் நம்முடைய இளைஞர்களுக்கு சில கேள்விகள் உண்டு. வாசிப்பதால் ஏதாவது பயனுன்டா? ஆங்கிலத்தில் படித்தால் கூட பெருமைக்காகவாவது அவ்வப்போது பெயர்களை உதிர்க்கலாம். தமிழ் எழுத்தாளர்கள் பெயர்களை சொல்வதால் நமக்கு பாதகமா? சாதகமா? பிரபஞ்சனையும் பிரமிளையும் படித்தால் ஒரு ஃபிகராச்சும் மடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். காரணம் வாசிப்பின் மீது குழந்தைகளாக இருக்கும்போதிருந்தே உருவாக்கத்தவறிய ஆர்வம்.

தமிழில் சொல்லிக்கொள்ளும் படி குழந்தைகள் நூலோ பத்திரிகைகளோ பல ஆண்டுகளாக கிடையாது (காமிக்ஸ் தவிர்த்து). இப்போதைக்கு சுட்டிவிகடன் மட்டும்தான். அதுவும் விலை அதிகம். குழந்தைகளுக்காக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் எண்ணிக்கையும் நான்கோ ஐந்தோதான். ஆனால் ஆங்கிலத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, பத்து வயதுக்கு, பதினைந்து வயதுகுட்பட்ட பதின்பருவத்தினருக்கு என விதவிதமான நூல்கள் கிடைக்கின்றன. ஆனால் தமிழில் அப்படி வகைமைகள் கிடையாது. எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி நூல்கள்தான். இன்று பதிமூன்று வயது பையனுக்கு வாங்கித்தர எந்த தமிழ்நூலை பரிந்துரைக்க முடியும்? மீண்டும் மீண்டும் அதே தெனாலிராமன், பீர்பால், பஞ்சதந்திர கதைகளையே நாடுகிறோம். வீட்டிலும் கூட செய்தித்தாள் வாசிக்கிற பழக்கம் குறைந்து வருகிறது. இதழ்கள் கூட மருத்துவம், வேலைவாய்ப்பு கல்வி என தேவைக்கேற்ப வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். புத்தகக்கண்காட்சியில் காமிக்ஸ் கன்னாபின்னாவென்று விற்பதாக சொல்லப்பட்டாலும் அதை இப்போதும் வாசித்துக்கொண்டிருப்பதென்னவோ முப்பது வயதிற்குமேற்பட்ட ஆட்களே!

குழந்தைகளுக்காக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இரா.நடராசன் ஒரு கூட்டத்தில் பெற்றோர்கள் எந்த அடிப்படையில் நூல்களை வாங்கித்தருகிறார்கள் என்பதைப்பற்றி சொன்னார். தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பொருளாதார முன்னேற்றித்திற்கு பயன்படுகிற நூல்களையே அவர்கள் வாங்கித்தர எண்ணுகிறார்கள். ‘’உங்கள் குழந்தை விஞ்ஞானியாக வேண்டுமா?’’ ‘’உங்க குழந்தை கோடீஸ்வரனாக வேண்டுமா?’’ என்பது மாதிரி நூல்களையே வாங்கித்தர எண்ணுகிறார்கள். கதையும் கவிதையும் படிப்பது குழந்தைகளை பாழாக்கக்கூடும் என்று அஞ்சுகிறார்கள் என்றார். பெற்றோர்களின் அழுத்தம் ஒருபக்கமென்றால் இன்னொரு பக்கம் பள்ளிகள் பல பள்ளிகளில் பெயருக்குத்தான் நூலகங்கள் இயங்குகின்றன. நூலகத்திற்கு செல்லவும் அங்குள்ள நூல்களை தேடி வாசிக்கவும் குழந்தைகள் பயிற்றுவிக்கப்படுவதில்லை. பாடபுத்தகச்சுமை குழந்தைகளை அச்சிட்ட காகிதங்களின் மீதான வெறுப்பையே உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் மார்ச் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாக கொண்டாடுகிறார்கள். இம்மாதத்தில் மக்கள் மத்தியில் நூல்வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையில் நிறைய நிகழ்ச்சிகளை நாடு முழுக்க நடத்துகிறார்கள். நிஜமாகவே நடத்துகிறார்களா என்பதை அமெரிக்க வாசிகள்தான் உறுதி செய்ய வேண்டும். ஆனால் அதுகுறித்த செய்திகளை வாசிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

பெற்றோர்களிடம் ஒவ்வொரு நாளும் தங்களுடைய குழந்தைகளுக்கு ‘’பதினைந்து நிமிடம்’’ ஏதாவது ஒரு புத்தகத்தினை உரக்க வாசித்து காட்ட வலியுறுத்துகிறார்கள். பொது இடங்களில் நூல்களை பற்றிய கூட்டங்கள் நடக்கின்றன. பள்ளிகளில் தினமும் யாராவது ஒருவர் வகுப்பறையிலேயே ஏதாவது ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை நிகழ்த்துகலையாகவும். அதே கதையை வாசித்தும் காட்டுகிற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. புத்தக கண்காட்சிகள், இலவச நூல்கள், திரைப்பட காட்சிகள், நூல்களை பரிசாக வழங்குவது என நிறைய விஷயங்கள் பண்ணுகிறார்கள். இதன் மூலம் எத்தனை பேர் செய்வார்களோ வாசிக்க ஆரம்பிப்பார்களோ ஆர்வம் வருமோ தெரியாது.

இது ஏதாவது பெரிய என்ஜிஓக்களின் இன்னுமொரு லீலையாக கூட இருக்கலாம். ஆனால் இதுமாதிரியான முயற்சிகள்தான் அடுத்த தலைமுறையினரை வாசிப்பின் பக்கம் தூண்டக்கூடியவையாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் செய்ய இங்கே குழந்தைகளுக்கு, பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, பொதுஜனங்களுக்கு என யாருக்குமே நேரமில்லை!

12 comments:

ராம்ஜி_யாஹூ said...

ஒவ்வொரு முறையும் பிறவியெடுத்து முழுமையாய் வாழ்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கையை, இந்தப் புத்தகங்களில் வீசும் அச்சு மையின் மெல்லிய வாசனைகளூடாய் நாமும் வாழ்ந்து விட முடிவது எத்தனை அற்புதமானது! கீழே விழாமலே அடிபட்ட வலியும்.. இழக்கும் முன்பே இழப்பின் வேதனையும் காயங்கள் ஏதுமின்றி குருதியுமிழ் புண்களும் வாசிப்பில் மட்டும்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது. அன்பாய், அருவருப்பாய், சாந்தமாய், குரூரமாய்.. விதவிதமாய் இருக்கும் விநோத முகங்கள். எல்லோருக்கும் எல்லா முகங்களையும் சந்திக்க வாய்ப்பதில்லையென்றாலும் பெரும்பாலும் புத்தகங்கள் அவற்றை இனங்காட்டி விடுகின்றன இல்லையா? - PAALAITH THINAI

ஆனால் , நரசிம்மராவ்& மன்மோகன் காலத்திற்குக் பிறகு எனக்கு என் வாழ்க்கை என் மதில் சுவர்கள், என் சுற்றம் போதும்,
அடுத்தவர் வாழ்க்கை அடுத்த வீட்டு சுக துக்கங்கள் மீது எனக்கு ஆர்வம் இல்லை, ஆர்வம் வேண்டாம் என்னும் தலைமுறை. எனவேதான் பிற முகம், பிற வாழ்க்கை குறித்த ஆர்வம் இருப்பது இல்லை , எனவே வாசிப்பும் தேவை அல்ல இக்காலங்களில்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாசிப்பு உலக அளவில் குன்றி விட்டது. கைத்தொலைபேசியில் வீண் பொழுது போக்குதலே தலையான பொழுது போக்கு என்பதாகிவிட்டது.
நாம் யாரைக் குறைகூறமுடியும்.
தண்ணீர் காட்டலாம்.. குடிப்பது!!

Kurukku Muttan said...

Hi Atisha,

Atleast intha 50 vayadilum, inayathin blogs, mattrum Jeyamohan avargalal vaniga ezuthugal ean varnikkapadum Sujatha, Kalki, Balakumaran pondravargalil ezuthugalai meel vasipagavenum padithu kondirukkiren. Analum ennal yen pillaigalidam vasikkum pazakkathai kondu vara mudivadillai. 9th Std., padikkum yen magal innum tamilzhai tadangal illamal padikka mudivadillai. Ithanaikkum 1st std mudal tamil than second language. Sonnal namba siramamaga irukkum. Ippothu velli torum Siruvar Malar vangi koduthu avaling tamil vasippai satru adikka padutha mudinthirukiradu. Neenda dooram poga vendum.

Kurukku Muttan said...

Ennudaiya mundaiya comment english formatil anupiyadarkku mannikkavum. Innum enakku tamil ezuthurukkalai taravirakkam seidu ubayogapadutha teriyavillai.

naresh said...

எனக்கு வயது 25. நான் 3ம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே சுட்டி விகடன் படிக்கிறேன். தற்போது வரும் இதழ்களை பார்த்தாலே கோபம் வருகிறது. இன்றைய சுட்டி விகடன் குழந்தைகள் இதழே கிடையாது. ஒரு கதை கூட இல்லை. 90% செயல் வழிக் கற்றல் பாடங்கள் தான். நான் வாங்குவதை நிறுத்திவிட்டேன் . இவர்கள் குழந்தைகள் என்றாலே பாடம், பள்ளிக்கூடம் என்றுதான் நினைக்கிறார்கள்.

கோகுலம் எல்லாம் இப்போது கிடைப்பதே இல்லை . மீறிக் கிடைத்தாலும் அதிலும் ஒன்றும் சொல்லிகொள்வது போல் இல்லை.

அதிலும் சிறுவர் மலர், தங்க மலர் எல்லாம் 15 பக்கங்கள்தான் . அதில் பொது அறிவு, அறிவை வளர்க்க தகவல்கள் மட்டுமே 10 பக்கங்கள் .
நல்ல அழகான, வண்ணமயமான ஓவியங்களை இந்த புத்தகங்களில் நான் சமீபத்தில் பார்க்கவே இல்லை .

குழந்தைகளுக்கான புத்தகங்கள் தமிழில் இல்லவே இல்லை .சங்க காலத்திலிருந்தே??!! இந்த நிலைமைதான். தெனாலிராமன், பீர்பால் , மரியாதைராமன், பஞ்சதந்திர கதைகள், விக்ரமாதித்யன் கதைகள் அவ்வளவுதான். இவையும் இல்லையென்றால் தமிழ்நாட்டில் இயந்திரங்கள் தான் வாழ்த்துக் கொண்டிருக்கும்.

நவரத்தின மலை என்று ஒரு புத்தகம் அதிர்ஷ்டவசமாக படிக்க கிடைத்தது வடிவமைப்பும், ஓவியங்களும், கதைகளும் இன்னும் மனதில் அப்படியே நிற்கின்றன , இத்தனைக்கும் அந்த புத்தகத்தை நான் பார்த்தே 12 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது அந்த கதைகளை நினைத்து பார்த்தால் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஷ்யர்களுக்கு நாம் மிகவும் கடமைபட்டிருகிறோம் .
இந்த புத்தகத்தை இப்போது யாராவது மறுபதிப்பு செய்தால் என்ன? சிறு வயதில் படித்தவர்கள் வாங்கினாலே 5000 பிரதிகள் விற்கும்

பாலைவனத்தில் ஒரு சோலைவனமாய், ராமகிருஷ்ண மிசன் சிறுவர்களுக்காக "கதை மலர்" என்ற படக் கதை தொகுப்பை வெளியிடுகிறார்கள், அற்புதமாக இருக்கிறது , நம்மை எங்கோ வேறு உலகிற்கு கூட்டி செல்கிறது . இப்போதைக்கு இது மட்டும் தான் ஆறுதல். ராமகிருஷ்ண விஜயத்தில் அற்புதமான வெளிநாட்டு மேதைகளின் வாழ்வில் நடந்த கதைகள் எல்லாம் அப்போது வரும். தென்காசி சுவாமிநாதனை படிப்பது போல் இருக்கும் .

பெற்றோர்கள் பிள்ளைகளை புத்தகங்கள் படிக்க தடை போட ஒரு நியாயமான காரணமும் இருக்கத்தான் செய்கிறது. பள்ளிப் பருவத்தில் நாம் படிப்பதெல்லாம் பசுமரத்தாணி போல் பதிந்து விடும். சிறு வயதில் சிறுவர் இதழ், அரசியல் இதழ் போன்ற வித்தியாசமெல்லாம் தெரியாது . எனவே,கொகுலதையும்,குமுதத்தையும் ஒரே மாதிரிதான் பார்த்தேன். அப்போது குமுதத்தில் +1 என்று ஒரு கேடுகெட்ட, கேவலமான நீல, மஞ்சள், பத்திரிகைகளில் வருவது போன்ற ஒரு தொடர் வந்தது. அப்போது நான் ஆறாம் வகுப்பு. அந்த தொடரை என்ன ஏதேன்றே தெரியாமல் முழுவதும் படித்தேன். நீங்களே சொல்லுங்கள் ஒரு குழந்தையின் கையில் கிடைக்க வேண்டிய கதையா இது???????.

? said...

அமெரிக்காவில் ஒவ்வொரு முறை குழந்தை மருத்துவரிடம் போகும் போகும் போதும் வயதுக்கு ஏற்ற ஒரு புத்தகம் ஓசியில் தருவார் மருத்துவர். முதல் முதலாக புத்தகம் பெற்ற போது குழந்தைக்கு வயது 3 மாதம்... அது போக இங்கு எல்லா லைப்ரேரிகளிலும் விளையாடும் ஏரியா உண்டு. பிளாக்குகள் பொம்மைகள், படப்புத்தகங்கள் வைத்திருப்பார்கள். படிக்க ஆரம்பிக்கும் முன்னரே லைப்ரரி வந்து போகும் வழக்கத்தை ஏற்படுத்தத்தான்.

Unknown said...

நான் வாசிப்புக்குள் வந்தது ஒருவிதமான படிமுறை வளர்ச்சியாக இருந்தது.
அம்மாவின் படுக்கை நேர கதைகள், அம்புலிமாமா என்று அதிஷா வரையும்
வந்தாயிற்று. ரஷ்ய மொழிபெயர்ப்பு கதைகள் கொஞ்சமாக வசீகரிக்க தொடங்கி
பின் இலக்கிய வாசிப்பு வழக்கமாயிற்று. சிக்கல் என்னவென்றால் சிறுவர்க்கான சுவையான‌
நூல்களின் தட்டுப்பாடு. வீட்டில் விரும்ப மாட்டார்கள் என்று தெரிந்து சாண்டில்யனை
ஒளித்து வாசித்திருக்கிறேன். அந்த வயதில் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த "ஆப்பிள்" யுகத்தில் இன்னமும் "ஒரு ஊரில் ஒரு ராஜா" என்றே சிறுவர் கதைகள்
தொடங்கினால் எப்படி ஆர்வம் வரும். தேவை புத்தம் புதிதான தலைமுறை சிறுவர்
நூல்கள். பற்ற வைத்தால் எரியும் என்பது என் தாழ்மையான கருத்து. "பேஸ் புக் பொண்ணு"
எழுதியவரே தந்தால் நல்லது.

Ravi said...

Yes, you are correct about US. They encourage reading a lot in schools and libraries. Even in book shops we can see people staying all day and they are allowed to read any book as long as they want.

Singaravelan said...

Super boss

Raashid Ahamed said...

நீங்களே சொல்லீட்டீங்க சொடுக்கினால் மழைமாதிரி கொட்ட நெட்டு தயாரா இருக்கு இதுல எங்க புத்தகத்தை எடுத்து கிட்டு பொரட்டிகிட்டு.? விடலை பசங்க ஒளிச்சி வச்சி படிச்ச கில்மா புக்கெல்லாம் எவ்வளவு கொட்டி கிடக்குது தெரியுமா ? எல்லாம் போட்டோவோட ! இந்த லட்சணத்துல எங்கே ? வருங்காலத்தில் புத்தகமெல்லாம் ஒரு விரல் நக அளவுள்ள மெமரி கார்டில் வழங்கப்படும்.

Anonymous said...

True....very very true.....

Anonymous said...

Hi...this situstion has come along time back.....