25 March 2015

வாணிபர் காந்தி
வள்ளுவர் கோட்டத்தில் இப்போதெல்லாம் தினமும் ஒரு போராட்டம் நிச்சயமாக நடக்கிறது. யாருக்காக எதற்காக என்பதெல்லாம் முக்கியமில்லை. மக்களுக்கும் அதைப்பற்றி அக்கறை இல்லை. வள்ளுவர் கோட்டத்து சிக்னலுக்கும் அங்கே போராட்டம் பண்ணுகிற மக்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டையும் யாருமே மதிப்பதில்லை. ஆனாலும் இங்கே போராட்டம் பண்ண ஆர்ஏசி ரிசர்வேசன் எல்லாம் உண்டு. முந்தினால்தான் உங்களுக்கு இடம் கிடைக்கும். அவ்வப்போது ஆளுங்கட்சியினரை குளிர்விக்க அம்மாவை குஷிப்படுத்த கோடாம்பாக்கத்தினரின் குளிர்கண்ணாடி போராட்டங்கள் நடத்துவதுண்டு. அப்படிப்பட்ட காலங்களில் மட்டும் கூட்டம் அம்மும்.

தினமும் அவ்வழியாகத்தான் அலுவலகத்திற்கு வருவது வழக்கம். அதனால் அங்கே என்ன போராட்டம் எதற்காக என்று நின்று விசாரித்துவிட்டு செல்வதை வழக்கமாக்கியிருக்கிறேன். சில போராட்டங்கள் ஜாலியான கோரிக்கைகளுக்காக நடத்தபடுவதுண்டு. நேற்று வாணியர் சங்கம் என்கிற அமைப்பு மார்கேண்டேய கட்ஜூவை கண்டித்து ஒருகூட்டம் நடத்திக்கொண்டிருந்தது.

இந்தசங்கம் செட்டியார் சாதி ஆட்களுடைய அமைப்பு என்பதை போஸ்டரிலேயே தெரிந்தது. மார்கண்டேயே கட்ஜூ சிலதினங்களுக்கு முன்பு மகாத்மா காந்தியை பற்றி சில கருத்துகளை தன்னுடைய வலைப்பூவில் வெளியிட்டிருந்தார். அதில் காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று விமர்சித்திருந்தார்! இதைதான் வள்ளுவர் கோட்டத்தில் 99டிகிரி வெயிலில் நின்று கண்டித்துக்கொண்டிருந்தனர். மார்கண்டேயே கட்ஜூவே மன்னிப்புக்கேள், நாட்டைவிட்டு வெளியேறு என்பது போன்ற விசித்திரமான கோரிக்கைகளை முன்வைத்து அந்தப்போராட்டம் நடந்துகொண்டிருந்தது.

அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால் உடனே அங்கிருந்து கிளம்பவேண்டியிருந்தது. ஆனாலும் ஒருவிஷயத்தில் குழப்பமாகவே இருந்தது. அதனால் அங்கேயே பராக்கு பார்த்துக்கொண்டு நின்றேன். எத்தனையோ அமைப்புகள் இருக்கும்போது, காங்கிரஸ் கூட போராட்டம் பண்ணாமல் இருக்கும்போது இவர்களுக்கு ஏன் காந்தி மேல் இவ்வளவு அக்கறை? ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை. அங்கேயிருந்த ஒரு ஆவேச போராட்டக்காரரிடம் விசாரித்தேன். காந்தியும் நம்மாளுங்கதான்ங்க என்றார். எனக்கு புரியவில்லை. என்னது காந்தி செட்டியாரா? என்று சிந்தித்துக்கொண்டே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன்.

சில நிமிட யோசனைக்கு பிறகுதான் புரிந்தது. காந்தி பனியா சாதியை சேர்ந்தவர். பனியா சாதியினர் வாணிபத்திற்கும் வட்டிக்கு பணம் கொடுப்பதற்கும் பேர் போனவர்கள்! அந்த வகையில் இந்த வாணியர் சங்கம் சகவாணிபரான காந்திக்காக களமிறங்கியிருக்கிறார்கள்!

***

நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் சென்ற வாரத்தில் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். ‘’காரியம் செய்வது’’ என்று அந்த புனிதமான விஷயத்தை சொல்லக்கூடாது. வேறெப்படி சொல்வதென்று தெரியவில்லை. ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பிரஜையை இந்துமதத்திற்கு இட்டுக்க்கொண்டு வந்திருக்கிறார். மதமாற்றம் செய்துவிட்டு அந்தப் புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார்.

‘’பிறப்பில் ரஷ்யரான திருவாளர்.ரோமன் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர். இவர் நம்முடைய மாபெரும் இந்துத்வத்திற்கு மாறியிருக்கிறார். இனி அவர் ஸ்ரீ.லோகனாதன் என்றும் அவருடைய மனைவி ஸ்ரீமதி.சந்திரா என்றும் அழைக்கப்படுவார்கள்’’ என்று ஆங்கிலத்தில் ஒரு ஸ்டேடஸையும் போட்டு லைக்ஸ்களை வாங்கி குவித்துக்கொண்டிருக்கிறார்! ஆங்கிலத்தில் போட்டால்தானே அகில உலக ரீச் கிடைக்கும் என்று நினைத்திருக்கலாம். பாரினிலிருந்து நிறைய பேர் இந்துமதத்திற்கு வந்தால் நல்லதுதானே.

பேரு ரோமன் ஊரு ஆஸ்திரேலியா, பிறந்தது ரஷ்யா என்று திருவாளர் ரோமரே பெரிய குடாக்காக இருப்பார் போலிருக்கிறது. போகட்டும். அன்னாருக்கு லோகநாதன் என்கிற நல்ல பெயரை தேர்ந்தெடுத்து சூட்டியிருக்கிறார்கள். ரோமர் என்கிற பெயரையே ஒரு எழுத்து மாற்றி ராமர் என்று ஆக்கியிருக்கலாம்! சம்பந்தப்பட்டவர்களை குளிர்வித்து குளிப்பாட்டியிருக்கலாம். இவ்விஷயத்தில் இன்னொரு சந்தேகம் கூட உண்டு. அவருக்கு என்ன சாதியில் அலாட் பண்ணியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அடியேன் ஃபேஸ்புக்கில் இல்லை இருந்திருந்தால் கமென்டில் கேட்டிருப்பேன். என் சார்பாக யாராவது அவரிடம் கேட்டும் சொல்லலாம். அடிக்கடி இதுபோன்ற மதமாற்ற நிகழ்வுகளின் போது வருகிற பல நாள் சந்தேகம்.

***

இணையத்தில் கருத்து சொன்னால் கம்பி எண்ண வைக்கிற கொடூரமான ‘’66ஏ சட்ட பிரிவை’’ ரத்து செய்துவிட்டார்கள். இனிமே ஜாலிதானா, இஷ்டப்படி கும்மி அடிக்கலாம்ல? என்று அட்வகேட் நண்பரிடம் குஷியாக சொன்னேன். வஞ்சகமாக சிரித்துவிட்டு ‘’இது போனா என்ன ஓய், இதுமாதிரி இன்னும் பத்து பிரிவு இருக்கு! உனக்கு கம்பி கன்பார்ம், ரொம்ப ஆடாதீரும்’’ என்றார்.

ஐந்நூறு, ஐந்நூத்தி அஞ்சு, ஐந்நூத்தி ஆறு, ஐநூத்தி ஏழு, எட்டு ஒன்பது… பத்து என அவர் வரிசையாக ஐபிசி சட்டப்பிரிவுகளை அடுக்க ஆரம்பித்தார். நிறுத்தும் ஒய் எதுக்கு இப்போ வரிசையா அடுக்குறீங்க என்றேன். ‘’இந்த பிரிவுகளின் படி கூட ஸ்டேடஸ் போட்டதுக்கும் லைக் போட்டதுக்கும் மீம்ஸ் போட்டதுக்குமாக பிணையில்லாமல் பிடித்து ஜெயிலில் போட்டுவிட முடியும்! அதனால் ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க இணைய மொன்னைகளே’’ என்றார்.

வேற என்னதான் சார் செய்யறது எங்களுக்கெல்லாம் விமோச்சனமேயில்லையா? என்று வருத்தமாக கேட்டேன். ‘’அடிங்க ஆனா ரத்தமும் வரக்கூடாது, சத்தமும் வரக்கூடாது’’ என்றுவிட்டுப்போனார். எனக்குதான் ஒன்றும் புரியவில்லை. ஆனால் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மட்டும் புரிந்தது.

6 comments:

'பரிவை' சே.குமார் said...

மூன்றும் மூன்றுவிதமாய்...
நல்ல பகிர்வு.

சிந்திப்பவன் said...

//அவருக்கு என்ன சாதியில் அலாட் பண்ணியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.//

எஸ்வி ஷேகர் பார்ப்பனர் என்பதால் பார்ப்பன ஜாதியில் சேர்த்திருப்பார் என்று நம்புவோம். பார்ப்பனரில் சேர்த்திருந்தால் அய்யரா அய்யங்காரா என்பது அடுத்த குழப்பம். அய்யங்கார் என்றால் வடகலையா தென்கலையா என்பது அடுத்ததுக்கு அடுத்த பஞ்சாயத்து. நம்ம மதமே ரொம்ப கன்பீசன் சார்.

Raashid Ahamed said...

அடிக்கணும் சத்தமும் வரக்கூடாது ரத்தமும் வரக்கூடாது ! ஆனா காயம் பலமா படணும் ! இதுக்கு ஒரே வழி உங்க பழைய பார்முலாவை பாலோ பண்ணனும் ! அதாங்க "மடலேற்றிடுவேன் மைன்ட் இட்"

Perinba Nathan said...

Your satirical post on S.V.Sekhar
is totally ludicrous and partial.
You never opened mouth against proselytizing activity done by xian missionaries which is very well known
and happening for last few centuries.
And the same S.V.Sekhar has involved in lots of good activities like blood donation award etc which you never appreciated ... romar, ramar comment is equally ridiculous ...

No doubt you are pseudo secular

Anonymous said...

//No doubt you are pseudo secular//

வாங்கோண்ணா அட வாங்கோண்ணா

Anonymous said...

அட என்னான்னு சொல்வேனுங்கோ
வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ