15 April 2015

நெட் நியூட்ராலிட்டி - For dummies
நெட்நியூட்ராலிட்டி விவகாரத்தில் ஃப்ளிப்கார்ட் காரன் அடித்திருக்கிற பல்டிக்கு பேர்தான் அந்தர்பல்டி! ஓர் ‘’உலக நடிப்புடா சாமீ’’ மோமன்ட். ப்ளிப்கார்ட் காரன் சொவர் ஏறி குதிச்சு எகிறியடிச்சு ஒடியதை அடுத்து இன்றைக்கு ஏர்டெல்லின் பங்குகள் ஒன்று புள்ளி ஏழோ எட்டோ சதவீதம் சரிந்துவிட்டது. அப்படி ஓர் ஓட்டம்! மவுஸ் புரட்சியாளர்களின் பவர் இன்னுமே கூட ஏர்டெல்லுக்கு புரியவில்லைதான் போல.. ஏர்டெல் இன்னமும் தன்னுடைய ‘’ஏர்டெல் ஜீரோ’’ திட்டம் அற்புதமானது அருமையானது… வின்-வின் சூழலை வழங்கவல்லது என்று சொல்லிக்கொண்டிருக்கிறான்.

நெட் ந்யூட்ராலிட்டி என்கிற சொற்களை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்புவரை பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாது. ஆனால் எழுத்தாளர் சாரு அடிக்கடி சிலாகிக்கும் சிலேயில் 2010லேயே இதற்காக போராடி அதற்காக சட்டமெல்லாம் கொண்டுவந்துவிட்டார்கள். அமெரிக்கர்கள் கூட இதில் தாமதம்தான் சென்ற ஆண்டுதான் அங்கே போராட்டங்கள் தொடங்கி மிகசமீபத்தில்தான் ஒரளவு சுமூகமான முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவில் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது, இந்த பாரபட்சமற்ற இணையத்திற்கான போர்!

இன்று மொபைலிலும் டேப்களிலும் கணினியிலும் விதவிதமான இணையதளங்களையும் சமூகவலைதளங்களையும் பயன்படுத்தி விருப்பப்படி உலவுகிறோம். இணைய சேவை வழங்கும் (ISP) தொலைதொடர்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட சில இணையதளங்களை பார்க்க மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. எந்த ஒரு இணையதளத்திற்கும் தனியாக அதிக வேகமோ அல்லது குறைந்த வேகமோ வழங்குவதில்லை. சிறப்பு சலுகைகள் கிடையாது. இணையத்தில் எல்லாமே பாகுபாடின்றி ஒரே வேகத்தில் ஒரே கட்டணத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எந்த இணையதளத்தையும் பார்ப்பதையோ உலவுவதையோ கட்டுபடுத்துவதுமில்லை. இதுதான் நெட் நியூட்ராலிட்டி.

நெட் நியூட்ராலிட்டி இல்லாமல் போனால், பகாசுர டெலிகாம் கம்பெனிகள் ஒவ்வொரு இணையதளத்திற்கும் தனித்தனியாக துட்டு வசூலிக்கும். வாட்ஸ் அப் மட்டும் அதிக வேகத்தில் இயங்க கூடுதலாக பத்து ரூபாய், ஜிமெயிலின் வேகத்தை அதிகரிக்க முப்பது ரூபாய் என்பது மாதிரி. யூடியூபில் எச்டி வீடியோ பார்க்க வேண்டுமா அதற்கு தனிக்கட்டணம். ப்ளிப்கார்ட்டில் ஆபர் போட்டால் முதல் ஆளாக முந்திக்கொண்டு புக் பண்ணவேண்டுமா அந்த இணையதளத்திற்கு மட்டும் சலுகைவிலையில் சூப்பர் ஸ்பீடு! வாட்ஸ் அப் காலிங்கிற்கு தனிக்கட்டணம். வைபருக்கு தனிக்கட்டணம்! மாதாமாதம் போஸ்ட் பெய்ட் கனெக்ஷன் வைத்திருப்பவர்களெல்லாம் இஷ்டப்படி சுருட்டலாம்.

விழாநாட்களில் நம்முடைய சிறப்பு சலுகைகளை ரத்து செய்துவிட்டு குறுஞ்செய்தி அனுப்ப காசு பிடுங்குகிற அதே பாணி. டிடிஎச்சில் குறிப்பிட்ட சானல்களுக்கு மட்டும் தனிக்கட்டணம் வசூலிக்கிற அதே டெக்னிக். இதை இணையம் வரைக்கும் நீட்டிக்கத்தான் திட்டமிடுகின்றன.
அப்படி ஒன்று நடந்துவிட்டால் அதற்கு பிறகு இணையம் எப்போதும் இலவசமாகவும் பாரபட்சமின்றியும் இருக்காது! நாம் பயன்படுத்துகிற முறையும் அதற்காக செலவழிக்கிற தொகையும் முற்றிலும் வேறமாதிரி ஆகிவிடும். அதனால்தான் இந்தியா முழுக்க இணையவாசிகள் நெட்நியூட்ராலிட்டியை பாதுகாக்க கோரி விதவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏர்டெல் நிறுவனம் சென்ற வாரத்தில் கொண்டு வந்த ஏர்டெல் ஜீரோ என்கிற புதிய ப்ளானை வெளியிட்டரது. கொதித்தெழுந்தது இணைய சமூகம். இந்த ஏர்டெல் ஜீரோ திட்டத்தில், மிகச்சில தனியார் நிறுவனங்களின் ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது அதற்குரிய கட்டணத்தை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏர்டெல் வசூலித்துக்கொள்ளும்! இதனால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும்! டேட்டா மிச்சமாகும்.

இத்திட்டத்தில் முதலில் இணைந்தது ப்ளிப்கார்ட் காரன். ப்ளிப்கார்ட் இணையதளத்தை அல்லது குறுஞ்செயலியை (APP) நீங்கள் உங்களுடைய மொபைலில் பயன்படுத்தும்போது அதற்காக பணம் தர வேண்டாம். அந்த சமயத்தில் நீங்கள் பயன்படுத்தும் டேட்டா எல்லாமே ப்ரீதான்! இலவசம் என்றதும் ஒரே குஷியாகி இதுக்கு ஏன் எதிர்ப்பு என்று நினைக்கலாம்.

சில மாதங்களுக்கு முன்பு வோடஃபோன் மற்றும் ரிலையன்ஸ் கூட தங்களுடைய இணைப்பு உள்ளவர்கள் ஃபேஸ்புக் தளத்தை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிந்திருந்தன. இப்போதும் அது செயல்பாட்டில் இருக்கிறதா தெரியவில்லை. உலகில் இலவசமாக ஒன்றை எந்த இழிச்சவாய நிறுவனமும் வாடிக்கையாளருக்கு தூக்கிக்கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட அறிவுப்புகளுக்கு பின்னால் சூழ்ச்சியும் சூதும் நிச்சயமிருக்கும். இதில் என்ன சூது? இப்படி இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லுகிற இணையதளங்களை முற்றிலும் இலவசமாக பயன்படுத்தமுடியாது. அதில் உள்ள எழுத்துவடிவ விஷயங்களுக்கும் மட்டும்தான் இலவசம். படங்கள் பகிர, வீடியோ பார்க்கவெல்லாம் தனியாக காசு கொடுக்க வேண்டும் என்று ஸ்டார் போடுவார்கள்! வோடபோனின் இலவச ஃபேஸ்புக் அப்படியொரு ஆபர்தான்.

அதாவது இட்லி ஃப்ரீ ஆனால் சட்னிக்கு தனியாக சாம்பாருக்கு தனியாக பொடிக்குதனியாக காசு கொடுக்க வேண்டியிருக்கும். ஏர்டெல் ஜீரோ அப்படிப்பட்ட ஒரு நடைமுறைக்கான முதல் படி. முதலில் இலவசத்தை கொடுத்து பிறகு நாம் அதிகம் பயன்படுத்தும் தளங்களுக்கு தனிக்கட்டணம் விதிப்பது. அதனால்தான் ஆளாளுக்கு கொதிக்கிறார்கள்.

ஏர்டெல் நிறுவனத்தின் சென்ற ஆண்டின் (2014) ஒட்டுமொத்த வருவாயில் 5.5% எஸ்எம்எஸ் சேவை வழியாக கிடைத்தது. ஆனால் இந்த அளவு அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் 8% குறைவு! 12.4 சதவீதமாக இருந்த வருவாய் ஒரே வருடத்தில் குறைந்து 5சதவீதமானதற்கு காரணம் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கின் வரவு. விழாக்காலங்களில் குறுஞ்செய்தி அனுப்ப கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளையடித்துக்கொண்டிருந்த டெலிகாம் கம்பெனிகளுக்கு இது சூப்பர் ஆப்பாக அமைந்தது.

இதற்கு பிறகு அதிகரிக்கும் VOIP தொழில்நுட்பம், ஏர்டெல், டாடா முதலான நிறுவனங்களை ரொம்பவும் எரிச்சலூட்டின. சும்மா இருப்பார்களா? தொலைதொடர்பு துறையை கட்டுப்படுத்தும் ட்ராயிடம் ஸ்கைப், லைன் முதலான சேவைகளின் வழி தொலை பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும், அவர்களுடைய அழைப்புகளை கண்காணிக்க வேண்டும், எங்களுக்கு இருக்கிற விதிமுறைகளை அவர்களும் பின்பற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்தன.

‘’கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தொலைதொடர்பு நிறுவனங்கள் எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் வருவாயில் 42சதவீதத்தையும், செல்போன் அழைப்புகள் மூலம் கிடைத்த வருவாயில் 19சதவீதத்தையும் இழந்துள்ளன, இதை இப்படியே விட்டால் இந்த OTT தளங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் 24ஆயிரம் கோடிகளை நம்முடைய தொலைதொடர்பு நிறுவனங்கள் இழக்க வேண்டியிருக்கும்’’ என்று கோபமாக பேசியிருக்கிறார் ராஜன் மேத்யூஸ். இவர் யார் தெரியுமா? செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷனின் (COAI) இயக்குனர். (OTT தளங்கள் என்பவை over the top players , ஸ்கைப் , வாட்ஸ் அப், வைபர் மாதிரியானவை)

இப்படிப்பட்ட நிலையில் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்ட ஜீவிவதத்தில் இருக்கும் இந்த டெலிகாம் கம்பெனிகள் என்ன செய்யும். அதனால்தான் கோடீஸ்வர வாடிக்களையாளர்களின் பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை லவட்ட பார்க்கின்றன. இப்போது வாட்ஸ்அப் காலிங்கும் வந்துவிட்ட நிலையில் டெலிகாம் கம்பெனிகள் எப்படியாவது நெட்நியூட்ராலிட்டியை காலி பண்ணிவிட துடிக்கின்றன.

இதை தடுக்க என்ன செய்யவேண்டும்?

இவ்விவகாரம் டெலிகாம் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் ட்ராய் (TRAI) வரைக்குமே போய்விட்டது. ட்ராய் இப்போது இவ்விஷயத்தில் மக்களின் கருத்துகளை அறிந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறது. இதற்காக இருபது கேள்விகள் அடங்கிய ஒரு ரிப்போர்ட்டை தந்திருக்கிறது. அதை படித்து பார்த்து உங்கள் கருத்துகளை ட்ராயிக்கு தெரிவித்து நெட்நியூட்ராலிட்டியை கட்டிக்காக்கலாம். இதற்கு கடைசி நாள் ஏப்ரல் 24. அதற்குள்ளாக கொடுத்தால்தான் ஏதாவது செய்ய முடியும்.

இணையவாசிகள் சோம்பேறிகள் என்பது தெரிந்த சகசோம்பேறி ஒருவர் ட்ராயிக்கு லெட்டர் போடவே தனியாக ஒரு இணைய தளத்தை நடத்துகிறார். 20 கேள்விகளை நூறுபக்கத்துக்கு கொடுத்தால் யாரால் படிக்க முடியும் எப்படி பதில் போட முடியும். அதனால் http://www.savetheinternet.in என்கிற இந்த தளத்திற்கு சென்று ஒரு பட்டனை தட்டினால் ட்ராய்க்கு என்ன பதில் அனுப்பவேண்டுமோ அதை மொத்தமாக டைப் செய்து வைத்திருக்கிறார்கள். அதை படித்து பார்த்தோ பார்க்காமலோ காப்பி பேஸ்ட் பண்ணி ட்ராயின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டியதுதான். 

இதுவரை மூன்று லட்சம் பேருக்கு மேல் ட்ராய்க்கு மின்னஞ்சல் போட்டிருக்கிறார்கள். நீங்களும் போடுங்கள். 

விபரம் பத்தாதவர்கள் மேலும் தெரிந்துகொள்ள http://www.netneutrality.in/

8 comments:

www.rasanai.blogspot.com said...

Dear Athisha

pl educate your readers that "they should not do copy paste the answers of savetheinternet" if they copy and paste it will be summarily rejected by TRAI as SPAM and their replies will be counted as invalid only. so ask your readers to write the replies in their own words after understanding the already sent replies. i had yesterday informed this in karundhel's too.
save the internet. be united.
anbudan
sundar g chennai

www.rasanai.blogspot.com said...

Dear Athisha

pl educate your readers that "they should not do copy paste the answers of savetheinternet" if they copy and paste it will be summarily rejected by TRAI as SPAM and their replies will be counted as invalid only. so ask your readers to write the replies in their own words after understanding the already sent replies. i had yesterday informed this in karundhel's too.
save the internet. be united.
anbudan
sundar g chennai

Unknown said...

Very useful article Athisha. Definitely we need network neutrality. என் பணம் என் உரிமை...

Saravanan said...

Zuckerberg said net neutrality is important to "make sure network operators don't discriminate and limit access to services people want to use, especially in countries where most people are online".

While the telecom major continues to defend itself saying the platform does not violate the concept, Flipkart has walked out of negotiations with the eCommerce firm stating that it after looking in deeper, it realised that net neutrality "can get compromised in the future".

nerkuppai thumbi said...

நீங்கள் சொல்வது ஒரு கோணத்தில் சரியாக இருக்கலாம். இன்னொரு கோணம் உள்ளது: செலவழித்து உண்டாக்கிய கட்டுமானத்தை செலவில்லாமல் பயன் படுத்திக்கொண்டு ப்லிப்கர்ட் போன்ற கம்பெனிகள் வணிகம் செய்து லாபம் பார்த்தால் டெலிகாம் கம்பெனிகள் சும்மா இருக்குமா? டோல் செலுத்தாமல் தனியார் போட்ட சாலையில் பயணம் செய்வது போல.
2-G சேவையை அனைவருக்கும் குறைந்த கட்டணம் வசூலித்து அவை குப்பனுக்கும், சுப்பனுக்கும் பேச மற்றும் எஸ்.எம்.எஸ் க்கு மட்டும் என்று விதித்து விட்டு, 3-G மற்றும் 4-G சேவைகளில் இது போன்ற கட்டணம் வசூலித்தால் தவறு என்று தோன்றவில்லை.

Anonymous said...

The revenue lost in calls and sms are made up in data plans. I used to pay around 155 Rs for 1 GB data previous year. This year its 199 Rs. 44 increase within a year that is 28% increase. Is that not a revenue for the company ?

Telecom companies are lying. So what the companies like Airtel say are false statements. They are thinking we are fools.

Siva said...

Sir, everything is money, money, money. That's all. They need our money. They love to suck our money. Private organizations develops government and they destroy us.

Raashid Ahamed said...

ஜனங்களோட பலவீனத்தை உபயோகப்படுத்தி காசு பண்ண ஒரு கூட்டம் ரூம் போட்டும் யோசிக்க்கும் போல. இது போல எல்லாத்துக்கும் காசை புடுங்குவேன் என கொக்கரிக்கும் நிறுவங்கள் இந்தியாவில் தான் சாத்தியம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சொன்னாலே கம்பெனியை அரசாங்கம் மூடும் அல்லது மக்கள் ஓட வைத்துவிடுவார்கள். கையாலாகாத அரசும், காசுக்கு அடிமையான ஆட்கள் உள்ள டிராய் உள்ளவரை மக்கள் பணத்தை எப்படியும் சுரண்டலாம், கொள்ளையடிக்கலாம். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பைட்டுக்கும் (byte) காசு புடுங்கலாம். பாவம் SMS யாரும் உபயோகப்படுதாமல் உள்ளதா எல்லா தொலை தொடர்பு கம்பெனிகளும் ரொம்ப ஏழையாகி போயிடிச்சி.