14 May 2015

குலக்கல்வி திட்டம் 2015
2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய அளவிலான கணக்கீட்டின்படி இந்தியாவில் மட்டுமே நாற்பது லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. (ஐந்து முதல் பதினான்கு வயதுவரை). இதில் ஒருலட்சத்து இருபதாயிரம் பேர் மிகவும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்! தமிழ்நாட்டில் 70ஆயிரம்!

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் நம்மால் இன்னமும் இந்த எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் குழந்தைத்தொழிலாளர் முறைக்கு முழுமையான தடை இருக்கிறது. இப்பயே இந்த லட்சணத்தில் இயங்கும் நம்முடைய அரசு எந்திரம், இப்போது அந்த தடையிலும் சில விஷயங்களை தளர்த்தி அதிர்ச்சி தந்திருக்கிறது.

விஷயம் இதுதான். கடந்த மே 13ஆம் தேதி ஏற்கனவே இருக்கிற குழந்தை தொழிலாளர் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும்.

* பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குடும்பப் பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுதுபோக்கு சார்ந்த தொழில்கள், விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் ஈடுபடுத்திக்கொள்ள குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தம் வகை செய்கிறது.

* குடும்பத்தின் குலத்தொழில்களில் (விவசாயம், மண்பாண்டம் செய்தல், மீன்பிடித்தல் முதலான) தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துவதை பெற்றோர்கள் சட்டபூர்வ உரிமையாகக் கொள்ளலாம், அதாவது பள்ளி நேரத்துக்கு பிறகும் விடுமுறை நாட்களிலும் பணியாற்றலாம்!

இவைதவிர்த்து தற்போதுள்ள சட்டத்தில் இருக்கிற தண்டனை மற்றும் அபராத அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன (அது வரவேற்கத்தக்க அம்சம்தான்!). இந்த சட்டதிருத்தம் பற்றித்தான் வட இந்திய ஊடகங்கள் இப்போது அதிக அளவில் பேசிக்கொண்டிருக்கின்றன. ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்திருக்கிறது மோடியின் அரசு.

ஏற்கனவே இருக்கிற குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் படி எந்த குழந்தையையும் 14 வயதிற்குள் எப்படிப்பட்ட பணியிலும் அமர்த்தக்கூடாது என்கிற அறிவிப்பு உள்ளது. 2009ல் கல்வி உரிமை சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி 6 முதல் 14 வயது வரையுள்ள எல்லா குழந்தைகளும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பப்படவேண்டும். இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு இடைநிற்றலால் கல்வியை இழந்த எண்ணற்ற குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள இந்த திருத்தங்களால் ஏற்கனவே இருக்கிற குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டமும், கல்வி உரிமை சட்டமும் நீர்த்துப்போகும் அபாயம் உருவாகியுள்ளது. ஆபத்தில்லாத பணிகளில் இக்குழந்தைகளை பணியலமர்த்தலாம் என்கிற சட்டதிருத்தத்தால் அதிக ஆபத்தில்லாதவை என்று கருதப்படும் குழந்தைத்தொழிலாளர்கள் அதிகமும் ஈடுபடுத்தப்படும் தீப்பெட்டி, பட்டாசு தயாரிப்புத் தொழில், சேலத்தில் கொலுசுப் பட்டறை, பீடி சுற்றும் தொழில்களில் இக்குழந்தைகள் ஈடுபடுத்தப்பட நேருவதும் அடிப்படை கல்வி உரிமையும் பறிக்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இனி யாரும் குழந்தைகளை பணிக்கமர்த்தி இச்சட்டத்தின் உதவியோடு எனிதில் தப்பிக்கவும் இந்த திருத்தம் உதவும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களுடைய குழந்தைகள்தான் அதிகமும் தொழிலாளர்களாக தங்களுடைய குலத்தொழில்களை செய்கிறவர்களாக இருக்கிறார்கள் என்கிறது யுனிசெஃப். இப்போது வந்திருக்கிற இச்சட்டத்திருத்தம் யாருக்கு பாதகமாக இருக்கும் என்பதை சொல்லவும் தேவையில்லை.

இன்னொரு பக்கம் ஏற்கனவே ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதையே கட்டுபடுத்தும் கண்காணிக்கும் அமைப்போ விதிகளோ இல்லாத நிலையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் குழந்தைகளை பயன்படுத்தலாம் என்கிற அனுமதி என்னமாதிரியான பின்விளைவுகளை உருவாக்கும்?

போகட்டும். தன்னுடைய குலத்தொழிலை குழந்தைகளை செய்ய அனுமதிக்கிற கற்றுக்கொள்ள வைக்கிற இதே மாதிரியான ஒரு விஷயம் அறுபதாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது.

1953ல் அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி ஒரு திட்டத்தை அறிவித்தார். அதற்கு பெயர் குலக்கல்வி திட்டம். அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றொரின் குலத்தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்காக முன்வைக்கப்பட்ட காரணம் அப்போதைய கல்விச்சூழலில் சென்னையின் மாகாணத்தின் கல்வியறிவு 21சதவீதம்தான் என்பதும், அதனால் அப்போதிருந்த பள்ளிகள் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைவருக்கும் கல்வி வழங்க இந்த புதிய திட்டம் அமல்படுத்தபடுகிறது என்றும் சொல்லப்பட்டது. இத்திட்டம் வெளிநான நாளில் இருந்தே மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்தது! அதற்கு காரணம் இது நேரடியாக வர்ணாசிரம கொள்கையை முன்னெடுப்பதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டம் கிராமங்களிலும் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் பட்டியல் சாதியில் பிறந்த குழந்தைகளுக்கும்தான் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இத்திட்டம் திராவிடர் இயக்கத்தினால் கடுமையாக எதிர்க்கப்பட்டு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

பாஜக முன்வைத்திருக்கிற இந்த சட்டதிருத்த மசோதாவுக்கும் ராஜாஜி கொண்டுவரத்துடித்த குலக்கல்வி திட்டத்திற்கும் ஆறு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது! ஒரே ஒரு வித்தியாசம்தான் ராஜாஜியை எதிர்க்க அன்றைக்கு வலுவான ஒரு பெரியார் இருந்தார். இன்று அப்படி யாருமேயில்லை. குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக பணியாற்றிய கைலேஷ் சத்யாத்ரிக்கு நோபல்பரிசு கொடுத்து ஓராண்டுகூட ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு விஷயத்தை நோக்கி நகர்ந்திருக்கிறோம்!

6 comments:

Anonymous said...

வர்ணாசிரமத்தை இப்படி படிப்படியாக கொண்டு வந்தால்தான் யாரும் சட்டென்று எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். இது முதல் படிதான். போக போக பாருங்கள். மோடி சர்க்கார் வைக்கப் போகும் ஆப்புக்களை.

குரங்குபெடல் said...

அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு . . . .பாராட்டுகள்

Anonymous said...

இதில் நிறைய தகவல் பிழைகள் உள்ளன.

Anonymous said...

//இதில் நிறைய தகவல் பிழைகள் உள்ளன. //

சத்தியமா உன் பிள்ளைகளை நீ குலத்தொழில் செய்ய விடமாட்டாய். அதனால்தான் பிழைகள் தென்படுகின்றன.
பிழைகளைத் திருத்தலாமே?

Anonymous said...

ராஜாஜி மேலுள்ள வெறுப்பினால் இப்படி எழுதியுள்ளீர்கள்.தமிழ்நாட்டில் அவர் பதவி விலகிய பின்னர் அனைத்து குழந்தை தொழிலாளர்களும் பள்ளிகளுக்கு சென்றுவிடுமளவிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டனவா இல்லை அப்போதே குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடாதென்று சட்டம் வந்ததா. இல்லை பெரியார்தான் குழந்தை தொழிலாளர்களுகாக போராடி குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வியும்,வசதிகளும் கிடைக்கச் செய்தாரா.

Anonymous said...

This is to praise Periyar EV Ramasamy Naiakkar. It does not have new information or any alternatives. (We don't support the BJP or Congress). So he wants to highlight only the conclusion, that PERIYAR EV RAMASAMY NAIAKKAR IS GREAT! This is not a intellectual discussion!