Pages

25 May 2015

இளையராஜா எனும் BRAND

‘’வியாபார நோக்கில் தன்னுடைய பெயரை, புகைப்படத்தை’’ தன்னுடைய அனுமதியில்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் அறிவித்துள்ளார் இளையராஜா. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார். இளையராஜாவின் இந்த அறிவிப்பை அடுத்து இணையத்தில் ஆளாளுக்கு அவரை போட்டு சுட்டு பொசுக்கி சுக்கா வறுவலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இளையராஜாவின் இந்த அறிவிப்பு நேர்மையானது. எந்த ஒரு படைப்பாளிக்கும் உரிய நியாயமான உரிமையையே இளையராஜா கோருகிறார்.

இளையராஜா யாரோ ரயிலில் பிச்சை எடுக்கிற ஒருவர் தன்னுடைய பாடலை பாடக்கூடாது என்று கூறவில்லை. தேனி பக்கம் இருக்கிற சிறிய டீக்கடையில் தன்னுடைய பாடலை ஓடவிடுவதை குற்றஞ்சொல்லவில்லை. பெரிய ஊடக நிறுவனங்களை ‘’என்னை வைத்து சம்பாதிப்பதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டு செய்’’ என்கிறார்! அவ்வளவுதான். தன்னுடைய பெயரை இசையை பயன்படுத்தி கோடிக்கணக்கில் காசு சம்பாதிப்பவர்கள் தன்னிடம் அனுமதி பெற்றுவிட்டு வியாபரம் செய்துகொள்ளட்டும் என்கிறார்.

இன்றைய தேதியில் 'இளையராஜா' என்பது வெறும் பெயரல்ல, அது ஒரு BRAND. தமிழகத்தின் பல கோடி மக்களிடையே நன்கு விற்கவல்ல ஒரு பிராண்ட். அவருடைய பெயரை பயன்படுத்தி விளம்பரதாரர்களை ஈர்க்க முடியும். கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும். அதனாலேயே பெப்ஸி, மைக்ரோ சாஃப்ட், ஆப்பிள் போல… அப்பெயரையும் புகைப்படத்தையும் யாரும் இஷ்டப்படி வியாபார நோக்கங்ளுக்காக பயன்படுத்த கூடாது என்கிறார் ராஜா. தன்னுடைய பெயரால் பரப்பப்படுகிற வியாபாரசந்தையை கட்டுபடுத்த விளைகிறார்! (கடந்த ஆண்டுகளில் அவர் இசையமைத்த படங்கள் தொடர் தோல்விகளைத் தழுவிய போதும் அவர் இசையமைத்த பழைய பாடல்களுக்கான வரவேற்பு கொஞ்சம் கூட குறையவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது)

நடிகர் ரஜினிகாந்த் இதை கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்துவருகிறார். அவருடைய படத்தை, குரலை, அவரைப்போன்ற உருவத்தை, பெயரை வியாபார நோக்கில் பயன்படுத்துவதாக இருந்தால் அவருடைய குடும்பத்தாரிடமிருந்து உரிய அனுமதி பெறவேண்டும். இல்லையென்றால் சட்டப்படி எப்படிப்பட்ட படைப்புக்கும் எப்படிப்பட்ட நிறுவனத்திற்கும் தடைதான்! மே ஹூன் ரஜினிகாந்த் என்கிற படத்திற்கு தடை வாங்கியதும் இவ்வகையில்தான். டண்டனக்கா பாடலுக்காக டிஆர் கோர்ட்டு படி ஏறியதும் இவ்வகையில்தான். அதைதான் இப்போது இளையராஜாவும் செய்திருக்கிறார்.

பக்திப்பாடல்கள், தனியான இசைத் தொகுப்புக்கள் இல்லாமல், திரைப்பாடல்களாக 4500 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் இளையராஜா. ஆனால் அவற்றின் மூலம் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய அளவிற்குப் பொருளாதரப் பலன்கள் கிடைக்கவில்லை, ஒரு படைப்பின் மீது ஒரு படைப்பாளிக்கு உள்ள படைப்புரிமையை மதிக்காமல் பலரும் ஆற்றுத் தண்ணீரை அள்ளிக்கொள்வது போல அவரவர் சக்திக்குட்பட்ட வகையில் இலவசமாக அள்ளிச் சென்று கொண்டிருந்தனர். அதனால்தான் சில மாதங்களுக்கு முன்பு தான் இசையமைத்த பாடல்களை சில நிறுவனங்கள் தன்னுடைய அனுமதி பெறாமல் ஒலிப்பதிவு செய்யவோ, (குறுந்தகடுகளாகவோ, இணையத்திலோ) வெளியிடவோ கூடாது என்று தடை பெற்றது பரபரப்பாக பேசப்பட்டது.

‘’எனக்கு கிடைக்கவேண்டிய ராயல்டி மட்டும் ஒழுங்காக கிடைத்திருந்தால் இந்நேரம் நான் பில்கேட்ஸ் ஆகியிருப்பேன்’’ என்று சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார் இளையராஜா. ‘’அகி ம்யூசிக், கிரி ட்ரேடிங், எகோ ரெகார்டிங், மற்றும் யூனிசிஸ்’’ உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்தது இந்தக்கோபத்தில்தான். இதுவிஷயமாக இளையராஜாவின் வழக்குகளை கவனித்துவரும் வழக்கறிஞர் ஒருவரோடு பேசியபோது அவர் இவ்விவகாரத்தின் வேர்களை சொன்னார்,

‘’நான்கு ஆடியோ நிறுவனங்களும் பழைய ஒப்பந்தங்களை வைத்துக்கொண்டு இளையராஜாவின் எண்ணற்ற பாடல்களை பல்வேறு வழிகளில் பயன்படுத்தி பணம் சம்பாதித்து வந்தன. சட்டப்படி எல்லா ஒப்பந்தங்களும் ஐந்தாண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்படி தயாரிக்கப்பட்டவை, ஆனால் அந்த ஐந்தாண்டுகள் முடிந்தபின்னும் அந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்க படவில்லை. ஆனால் தொடர்ந்து அந்தப்பாடல்களையும் அதற்கான உரிமைகளையும் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்துள்ளன, இசையமைப்பாளருக்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ எவ்வித ராயல்டியும் தராமல் இருந்துள்ளன. இப்படங்களை தயாரித்த பல தயாரிப்பாளர்களும் இப்போது மிகவும் வறுமையான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய ராயல்டி தொகையை பெற்றுத்தரவும், இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைகளை மீட்கவுமே இவ்வழக்கு தொடரப்பட்டது. இனி குறிப்பிட்ட அந்த நான்கு நிறுவனங்களிடமிருந்து உரிமை பெறப்பட்ட பாடல்களின் வழி கிடைக்கும் ராயல்டி தொகை தயாரிப்பாளருக்கு முறையாக பகிர்ந்தளிக்கப்படும்’’ என்றார் .

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே பாடகர் ஜேசுதாஸ் தன்னுடைய பாடல்களுக்கான உரிமைகளை இதுபோல் பெற்றுள்ளார். மேடைகளில் இனி என்னுடைய பாடல்களை பாட என் அனுமதி வாங்க வேண்டும் என்று IPRS (INDIAN PERFORMING RIGHTS SOCIETY) வழி போராடினார். இவ்விவகாரம் அக்காலகட்டத்தில் கேரளாவில் பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

இந்தியத் திரைப்பட பாடகர்கள் சென்ற ஆண்டு ‘’பாடகர்கள் உரிமை கூட்டமைப்பு’’ என்கிற அமைப்பை உருவாக்கினர். வியாபார நோக்கத்திற்காக தங்களுடைய பாடல்கள் தொலைகாட்சி, வானொலிகளில் பயன்படுத்தப்படும்போது தங்களுக்கு அதற்கான ராயல்டியை தரவேண்டும் என்று போராடி உரிமைகளை மீட்டுள்ளனர். தற்போது ஊடகங்களை கண்காணித்து அதற்குரிய ராயல்டியை வசூலித்து உரிய பாடகருக்கு கொடுத்து வருகிறது இந்த அமைப்பு. பாடகர்களுக்கு இது போன்ற அமைப்பு உள்ளதைப் போல, திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு அமைப்புகள் ஏதுமில்லை. அவர்கள் பெரும்பாலும் திரைப்பட்த் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் வழியாகவோ அல்லது தனியாகவோதான் தங்கள் உரிமைகளைக் காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றைய இசையமைப்பாளர்கள் எல்லோருமே இந்த காப்பிரைட் விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கின்றனர். ஒப்பந்தம்போடும்போதே பல விஷயங்களை கவனித்து கையெழுத்துப்போடுகின்றனர். ஆனால் இளையராஜா இந்த விஷயத்தில் ரொம்ப லேட்! 2010ல்தான் அவருக்கு ஞானமே வந்தது. தனக்கான உரிமைகளைக் காத்துக் கொள்வது குறித்து யோசிக்கவே தொடங்கினார்.

2010ம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்கள் சிலரோடு சென்னைக் காவலதுறை ஆணையரைச் சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அதில் எகோ ரெகார்டிங் கம்பெனி என்ற நிறுவனத்திடமிருந்து தனது திரைப்படப் பாடல்களுக்கான ராயல்டித் தொகை வரவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். தனது பாடல்களுக்கும், அந்தப் பாடல்கள் இடம் பெற்றுள்ள படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் அந்த நிறுவனம் ராயல்டித் தொகை தர ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த்தாகவும், அந்த ஒப்பந்தம் 1990ல் முடிந்து விட்ட போதிலும் அந்த நிறுவனம் அந்தத் தொகைகளைத் தரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார், அந்த நிறுவனம் தன்னுடைய அனுமதி இன்றி வட இந்திய நிறுவனம் ஒன்றுக்கு பாடல்களுக்கான உரிமைகளை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

எகோ ரிகார்டிங் நிறுவனம் வட இந்திய நிறுவனத்திடம் ராஜாவின் பாடல்களுக்கான உரிமையை 25 கோடி ரூபாய்க்கு விற்கப் பேச்சு வார்த்தை நட்த்திக் கொண்டிருக்கிறது என்று வெளியான செய்தியின் அடிப்படையில் ராஜா இந்தப் புகாரைத் தெரிவித்திருந்தார். அந்த நிறுவனம் தனக்குத் தெரியாமல் ஏற்கனவே தன்னுடைய தெலுங்கப்பட பாடல்களுக்கான உரிமைகளையும் அயல்நாட்டிற்கான உரிமையையும் விற்றுவிட்ட்தாகவும், செல்போன் நிறுவன்ங்களுக்கு அழைப்பொலியாக விற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதே சமயத்தில் ராம்கோபால்வர்மா இயக்கிய பாலிவுட் திரைப்படமான ‘’டிபார்ட்மென்ட்’’ல் அவரது ‘’ஆசைநூறுவகை’’ என்கிற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்த்தை எதிர்த்து. உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து அப்பாடலுக்கு தடைவாங்கினார் இளையராஜா.

பாலிவுட்டில் மட்டுமல்ல கோலிவுட்டிலும் ‘சுப்ரமணியபுரம்’ தொடங்கி வைத்த ட்ரெண்டில் பல படங்களிலும் அவருடைய பின்னணி இசையும் பாடல்களும் எவ்வித அனுமதியுமின்றி பயன்படுத்தப்பட்டன. கடந்த ஜனவரி வரைக்குமே இப்படி இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி உபயோகிப்பது தொடர்ந்து.கொண்டிருந்தது. அதற்கு பிறகே தன்னுடைய பாடல்கள் வெவ்வேறு புதிய ஊடகங்களில் குறிப்பாக மொபைல் போன் சார்ந்த விஷயங்களிலும் எஃப் எம்களிலும் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்காணித்து கட்டுப்படுத்தவும் தொடங்கினார். 2012ல் வெளியான மிஸ் லவ்லி திரைப்படத்தில் அவர் இசையமைத்த பாயும்புலி படத்தின் டைட்டில் இசையும் அதே படத்தில் இன்னொரு பாடலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இம்முறை முறையாக அனுமதிபெற்று பயன்படுத்தினர்.

அதற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட ‘’கப்பல்’’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த ஊரு விட்டு ஊரு வந்து என்ற பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறி அப்பாடலை நீக்கக்கோரி நீதிமன்றத்திற்கு சென்றார் இளையராஜா. ஆனால் அங்கே தயாரிப்பாளர் தரப்பு ‘’நாங்கள் சம்பந்தப்பட்ட பாடலை வெளியிட்ட கேசட் நிறுவனத்திடம் (அகிமியூசிக்) அனுமதி வாங்கிவிட்டோம்’’ என்று கூற அப்பாடல் எத்தடையுமின்றி திரைப்படத்தில் இடம்பெற்றது.

இதனால் மிகுந்த மனவருத்தங்களுக்கு ஆளான இளையராஜா இவ்விஷயங்களை கண்காணிக்கத்தொடங்கினார். நான்கு ஆடியோ நிறுவனங்கள் அவருடைய பாடல்களுக்கான உரிமைகளை வைத்துக்கொண்டு வெவ்வேறு ஊடகங்களுக்கும் வெவ்வேறு விதமாக அனுமதி கொடுத்து வந்ததை கண்டறிந்தார். கடந்த 2014 செப்டம்பரில் நான்கு நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் தொடர்ந்து அத்துமீறல்கள் நிகழ்ந்தவண்ணமே இருந்தன.

அதற்கு பிறகு ஒரு நீண்ட போராட்ட்த்திற்குப் பிறகே நீதிமன்றத்தின் வழி தன்னுடைய உரிமைகளை பெற்றுள்ளார் இளையராஜா. இனி இளையராஜாவின் இசையை அவருடைய அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்தமுடியும். தன்னுடைய பாடல்களின் வழி கிடைக்கும் ராயல்டியில் தயாரிப்பாளர்,பாடலாசிரியர் மற்றும் பாடகருக்கும் உரிய பங்கினை கொடுக்கவிருப்பதாகவும் இளையராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இப்படி தனக்கான உரிமைகளை ஒரு படைப்பாளி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பெறுவதில் எவ்வித தவறுமில்லை. அவருக்கு வயதாகிவிட்டது, இனிமேல் அவருக்கு எதற்கு பணம் என்கிற விமர்சனம் அவர்மீது வைக்கப்படுகிறது. அவருக்கு வயதாகிவிட்டது என்பதால் அவருக்கு பணத்தின் தேவை இல்லை என்பதால் அவருடைய படைப்புகளை யார் வேண்டுமானாலும் இஷ்டப்படி எடுத்து எங்குவேண்டுமானாலும் போட்டு காசு சம்பாதித்துக்கொள்ளலாமா? வரைமுறை வேண்டாமா?

அனேகமாக அடுத்து இணையத்தில் எல்லை மீறும் காப்பிரைட் உரிமைகளுக்காக இளையராஜா போராடுவார் என்று எதிர்பார்க்கலாம். அது அவருக்கு மிகப்பெரிய சவாலாகவும் இருக்கலாம். அவர்மீதுள்ள அன்பின் காரணத்தை முன்னிட்டே அதன் பொருட்டே இங்கு அவருடைய படைப்புகள் இலவசமாக படையல் வைக்கப்படுகின்றன. டாரன்ட் காடுகளில் இளையரஜா இதுவரை இசையமைத்த 2700 பாடல்கள் மொத்த தொகுப்பு இலவசமாக தரவிறக்க கிடைக்கிறது. அப்படிப்பட்ட சூழலை அவரும் அவருடைய நீதி ஆலோசகர்களும் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொருத்திந்துருந்தான் பார்க்கவேண்டும்.

இளையராஜாவின் அரசியலில் நமக்கு ஒப்புதல் இல்லாமலிருக்கலாம் (அவருக்கு ஏது அரசியல் என்று கேட்கக்கூடாது). அவருடைய பாடல்கள் நமக்கு பிடிக்காமலிருக்கலாம். அவற்றை விமர்சிக்கலாம். ஒரு படைப்பாளியாக இந்தத்தள்ளாத வயதிலும் தன் படைப்புகளுக்கான நியாயமான உரிமைகளுக்காக போராடும் போது அவர் பக்கமாகத்தான் நாம் நிற்கவேண்டும்.