22 May 2015

மக்கள் முதல்வருக்கு நன்றி
இன்று காலை தூங்கிக்கொண்டிருந்த போது டிவியில் ஏதோ சேனலில் வாசித்துக்கொண்டிருந்த செய்திகள் காதில் விழுந்தன. அச்செய்திகள் கேட்க கேட்க ஆச்சர்யமூட்டின. நான் கேட்பது நிஜத்திலா கனவிலா என்பது விளங்காமல் விழித்துப்பார்த்தேன் நிஜமாகவே டிவி ஓடிக்கொண்டிருந்தது. ஒரு பெண்மணி மும்முரமாக செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். அந்த சேனலில் வாசிக்கப்பட்ட செய்தி இதுதான். (என் காதில் கேட்டவைகளின் தொகுப்பு)

‪#‎நேற்று‬ வெளியான பத்தாம்வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் சாதனைக்கு காரணம் கடந்த நான்காண்டுகளாக மக்கள் முதல்வர் புரட்சிதலைவி அவர்கள் மேற்கொண்ட கல்விகொள்கைகளே என்று கூறி மக்கள் முதல்வர் புரட்சிதலைவி அவர்களை மனதார வாழ்த்தினர். தேர்வில் வெற்றிபெற்ற பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய பிள்ளைகள் தேர்ச்சி பெற காரணமாக இருந்த மக்கள் முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

‪#‎வெப்பசலனம்‬ காரணமாக அடுத்த நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் பரவலாக மழைபெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. கோடையிலும் குளுமை தரும் இம்மாமழைக்கு காரணமான மக்கள் முதல்வரின் முயற்சிகளை பொதுமக்கள் வாயார வாழ்த்தி பல்வேறு கோயில்களில் அர்ச்சனை அங்கபிரதட்சணம் முதலான வேண்டுதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வருணபகவான் தற்போது அனுப்பியிருக்கும் செய்தியில் மக்கள் முதல்வரின் தர்மம்தான் இம்மழைக்கு காரணம் என்று புகழ்ந்துள்ளார்.

‪#‎விலைவாசி‬ உயர்வு, பல்வேறு கட்டுமான பணிகளில் தேக்கம் முதலான அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை மடிப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்டனர். மறியலின்போது அக்கட்சியினர் போராட்டம் நடத்த இடம் தந்த மக்கள் முதல்வருக்கு தங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

‪#‎தங்கம்‬ விலை கிராமுக்கு நாற்பத்தைந்து ரூபாய் குறைந்துள்ளது. கடந்த நான்காண்டு ஆட்சியில் தன்னுடைய சீரிய கொள்கைகளால் மக்கள் முதல்வர் புரட்சி தலைவி அவர்கள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால்தான் இது சாத்தியமானது என்று பொருளாதார ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கம் விலை குறைந்ததை அடுத்து மக்கள் முதல்வரை பாராட்டி வீதிகள் தோறும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.

#நேற்று சென்னை சேப்பாக்கம் அருகே நடந்த ஒரு மோதலில் அம்மாவின் உண்மை விசுவாசிகள் சிலர் பத்திரிகையாளர் ஒருவரை தாக்கி அவருடைய மண்டையிலிருந்த மசாலாவை சுரண்டி எடுத்தனர். மக்கள் முதல்வருடைய உண்மை விசுவாசிகளின் இந்நடவடிக்கையை உண்மையான பத்திரிகையாளர்கள் பாராட்டியுள்ளனர், பத்திரிகையாளர் சங்க தலைவரான திரு கும்பகோணம் கோவாலு இவ்விஷயத்தில் மக்கள் முதல்வரின் ஆணைக்காக காத்திருக்கிறோம் அவர் ஆணைவந்ததும் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்து நீதியை நிலைநாட்டியுள்ளார்.

விளம்பர இடைவேளைக்கு பிறகு செய்திகள் தொடரும்…
சென்னை அமிர்தால படிக்கும்போதே பத்தாயிரம் வரைக்கும் சம்பளம், போன வருடம் நான் அங்க இருந்தேன் இப்போ நான் இங்க இருக்கேன் அதுக்கு காரணம் மக்கள் முதல்வர் அம்மா அவர்கள்தான் அவர்களுக்கு நன்றி!
செய்திகள் தொடர்கின்றன.

‪#‎நடந்துவரும்‬ ஐபிஎல் போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மக்கள் முதல்வர் புரட்சிதலைவி அவர்களை சிறைக்கு அனுப்பிய பாதகர்களின் அணியான பெங்களூரு அணியை தோற்கடிக்க அம்மாவின் ஆசிகளை வேண்டி அவர்களுடைய போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்திருந்த இந்திய அணி *(பீப்ப்ப்ப்)* மகேந்திர சிங் தோனி மக்கள் முதல்வரின் ஆசிகளை பெற்றுக்கொண்டு அவருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

‪#‎இன்று‬ மக்கள் முதல்வர் அவர்கள் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணவிக்கிறார் என்பதற்காக சென்னையின் சாலைகளெங்கும் விதவிதமான பேனர்கள் அலங்கரிக்கின்றன. சுவர்களெங்கும் மக்கள் முதல்வரை வாழ்த்தும் போஸ்டர்கள் நிறைந்துள்ளன. இது சென்னையின் அழகுக்கு அழகு சேர்ப்பதாக பொதுமக்கள் நம்மிடம் தெரிவித்து போஸ்டர் ஒட்டி அம்மாவின் உண்மை விசுவாசிகளுக்கு நன்றி என்று தெரிவித்துக்கொண்டனர்.

‪#‎இவ்விழா‬ ஏற்பாடுகளை பார்வையிட்ட மக்களின் முதல்வர்
புரட்சிதலைவி இச்சாதனைகளுக்கு காரணமான மக்களின் முதல்வர் புரட்சிதலைவிக்கு நன்றி தெரிவித்து தன்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்!
நன்றி வணக்கம்!

‪#‎முடியல‬-முழிச்சிகிட்டேன், எந்த சேனல்னு கவனிக்கலை.

9 comments:

அரவிந்த் said...

\\இந்திய அணி *(பீப்ப்ப்ப்)* மகேந்திர சிங் தோனி\\ Ultimate thala!! Superb..

Anonymous said...

சரியான மொக்கை. சிரிப்பே வரவில்லை.

Anonymous said...

சரியான மொக்கை. சிரிப்பே வரவில்லை.

Chellappa Yagyaswamy said...

நல்ல சந்தர்ப்பத்தில் வந்துள்ள பதிவு! நீங்கள் அம்மாவின் ஆதரவாளராகவே இருந்தாலும் தவறில்லையே! அம்மாவை இடப்பெயர்ச்சி செய்யவல்ல அரசியல் தலைவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் பிறக்கவில்லையோ என்றே ஐயம் கொள்ளவேண்டி இருக்கிறது. - இராய செல்லப்பா சென்னை

Ranjani Narayanan said...

தூங்கிக் கொண்டிருப்பவர்களையும் சானலில் செய்திகள் பார்த்து எழுதச் செய்யும் மக்களின் முதல்வர் வாழ்க, வாழ்க.
திரு அதிஷா இந்தப் பதிவு எழுதி சாதனை புரியக் காரணமாக இருந்த மக்களின் முதல்வருக்கு நன்றி!

Siva said...

Hurray! Nice imagination. That channel may be jaya TV.....

கலியபெருமாள் புதுச்சேரி said...

எனக்குத் தெரியும் ஆனா சொல்லமாட்டன்..

Raashid Ahamed said...

வாட்ஸப்பில் எனக்கு ஒரு படம் வந்தது தலைப்பு இன்றுமுதல் யோகா வகுப்புகள் தொடங்கிவிட்டன. கீழே படத்தை பாத்தா அம்மா கால்ல சாஸ்டாங்கமா விழுவுறது அம்மாவை கண்டதும் பம்முறது அம்மாவுக்கு முன்னால் குனியிறது இது மாதிரி போட்டோக்கள் ! ரூம் போட்டு தான் யோசிக்கிறாங்க. ஆனா நீங்க யோசிக்காமலே காலையில் டீவில நல்ல நகைச்சுவை கிடைத்தது. எங்க அம்மாவை ஆட்ட முடியாது அசைக்க முடியாது.

பாலமுரளி கிருஷ்ணா said...

போகிற போக்கில் தமிழ்நாடு என்பது மக்கள் முதல்வரின் நாடு என்று மாற்றப்பெற்றாலும் ஆச்சர்யமில்லை! நல்ல பதிவு.

There was an error in this gadget