03 January 2017

இணையம் இல்லாமல் ஓர் ஆண்டு!வீட்டை விட்டு ஓடிப்போய் பலநாட்களுக்கு பிறகு வீடு திரும்பிறவனின் அதே மனநிலை. சொல்ல நிறையவே இருந்தாலும் எதையும் கோத்து சொல்லவியலாத மௌனம் சுழன்று அடிக்கும் ஆரம்ப நாட்கள். இதோ ஓர் ஆண்டிற்கு பிறகு வீடு திரும்பி இருக்கிறேன்.

ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் ''சென்ற ஆண்டு எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்'' என்று எழுதுவதை ஒரு சடங்காகவே வைத்திருக்கிறேன். அதற்காகவெல்லாம் இந்த ஆண்டு அப்படி எழுதாமல் கடக்க முடியாது... காரணம், 2016ம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.

கடந்த பத்தாண்டுகளில் சமூகவலைதளங்களில் இருந்து ஒருநாள் கூட முற்றிலுமாக என்னை துண்டித்துக்கொண்டது இல்லை. ஃபேஸ்புக்கிலிருந்து அவ்வப்போது வெளியேறினாலும், ஒட்டுமொத்தமாக துண்டித்துக்கொண்டது இப்போதுதான். இணையத்தில் எதையுமே எழுதாமல், யாரிடமாவது ஒரண்டை இழுக்காமல், தோழிகளிடம் ஆதுரமாக உரையாடாமல் இருந்ததே இல்லை. கடந்த ஓராண்டாக இதையெல்லாம் முற்றிலுமாக துறந்து ஐம்புலன்களை அடக்கிக்கொண்டு ஓர் இணையதுறவியாய் 7.60416666 மண்டலங்கள் தவமிருந்தேன். இது எத்தகைய கடுப்பான கடினமான காலகட்டம் என்பது என்போன்ற சக-சமூகவலைதள அடிமைகளுக்குத்தான் தெரியும்.

இந்த காலகட்டத்தில் பெற்றது நிறையவே; போலவே இழந்ததும். இணையத்தில் இல்லாமல் போனதாலேயே நல்லது பொல்லதுகளுக்கென்று யாருமே அன்போடு அழைக்கவில்லை. எந்த பஞ்சாயத்துகளிலும் கலந்துகொள்ள முடியவில்லை. பிறந்தநாளுக்கு யாரும் வாழ்த்தவில்லை. செத்துப்போன ஒருத்தரைப்பற்றி மூன்றுமாதங்கள் கழித்துதான் சேதி வந்து சேர்ந்தது. என்னது உனக்கு தெரியாதா... டேக் பண்ணினேனே... என்று விநோதமாக சொன்னார் ஒரு நண்பர். ''போன வாரம் நீங்க போட்ட ஸ்டேடஸ் ரொம்ப நல்லாருந்து ப்ரோ...'' என்பது மாதிரியான அதிர்ச்சி தருகிற பாராட்டுகளை ஷேரிங் பெருமாள் மீது போட்டுவிட்டு புன்னகையோடு கடந்தேன்.

விருப்பக்குறிகளை விரட்டாத, கமென்டுகளுக்கு கலங்காத விசித்திரமான காலகட்டத்தில் வாழ நேர்வது சமகாலத்தில் கொடுமையானது. இருந்தும் சாகச விரும்பிகள் ஒருமுறையாவது செய்து பார்க்கவேண்டிய சற்றே கடினமான முயற்சி சமூகவலைதள துறவு.

தேர்தல் நேரத்தில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, அப்போலோ நாட்களில், தரமணி டீசரில் என கருத்து சொல்லியே தீரவேண்டியக் கட்டாய தினங்களில் உறக்கத்தில் கனவில் ஸ்டேடஸ்கள் போடுவேன். ஸ்டேடஸ் வெறி ஏறி... கைகள் பரபரக்கும். உடுக்கை அடிக்கிறவன் கைபோல மனது கிடந்து தவிக்கும். அலறி அடித்துக்கொண்டு விழிப்படைந்து ஞானத்தின் போத்தலை அடித்து திறந்து எல்லா ஸ்டேஸ்களையும் வேரிலேயே எரித்து கரைத்து குடித்துவிட்டு எனக்கு நானே எனக்கு 2.5k லைக் போட்டுக்கொண்டு விரைப்பாக கடந்துபோவேன்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் காசா பணமா அடிச்சி விட்ரா என சில பல லட்சியங்களை பட்டியில் போட்டு வைத்திருந்தேன். அதில் முதன்மையானது நூறு நூல்களையாவது வாசித்து முடிப்பது. அதை கடந்த ஆகஸ்டிலேயே முடித்துவிட்டேன். சமூகவலைதளங்களில் இல்லையென்றால் ஆதிமனிதனாக மாறி இதுமாதிரியான வேலைகளில் மூழ்கிவிடநேருகிறது. அதனால் மேலும் மேலும் நூல்களை தேடிபிடித்து வெறித்தனமாக சிங்கம்3 போல வேட்டையாடியதில் ஆண்டின் இறுதியில் அந்த எண்ணிக்கை எகிறிவிட்டது. இதில் பல நூல்களும் சமகால இளம் எழுத்தாளர்கள் எழுதியது. அந்த நூல்களுக்கெல்லாம் அறிமுகம் எழுதினால் அடுத்த ஆண்டு இதேமாதிரியான ஒரு திரும்பிப்பாரை இரண்டு கைகளும் இல்லாமல் கால்களால்தான் தட்டச்சு செய்ய நேரும்...

அமேசான் கிண்டில் உதவியோடு அதிக நூல்களை அதிவேகமாக வாசிக்க முடிந்ததது. குறிப்பாக சில ஆங்கில நூல்களை பல ஆண்டுகளுக்கு பிறகு படிக்க முடிந்தது. சமூகவலைதளங்களில் இல்லாமல் இருப்பதால் ஒரு நூலை கீழே வைக்காமல் ஐம்பது பக்கங்களுக்கு மேல் கவனித்து வாசிக்க முடிவதாக உணர்ந்தேன்.

இந்த ஆண்டில் செய்த இரண்டாவது உருப்படியான விஷயம் 'நூறு நாள் நூறு ஓட்டம்'...! மாரத்தான் பயிற்சிக்காக தினமும் ஓடினாலும் வாரத்திற்கு ஐந்து நாட்கள்தான் தொடர்ச்சியாக ஓட முடியும். மீதி இரண்டு நாட்களாவது ஓய்வும் மாற்றுப்பயிற்சிகளும் அவசியம். அப்போதுதான் உடலில் காயங்கள் உண்டாகாமல் சோர்வோ மனசலிப்போ இல்லாமல் பயிற்சியை தொடர முடியும். இதற்கு நிறையவே பலாபலன்கள் இருக்கிறது. அது வேற டிபார்ட்மென்ட் பெரிய சப்ஜெக்ட். சிம்பிளாக 'நூறு நாள் நூறு ஓட்டம்' என்பது தொடர்ச்சியாக தினமும் நூறு நாட்களுக்கு ஓடுகிற டெய்லி மாரத்தான். அதாவது நூறு நாட்கள் தினமும் மாரத்தான் ஓடுவது. தினமும் குறைந்தது 5 கிமீகளாவது ஓடியே தீரவேண்டும் என்பது சவால்.

எந்த ஊரில் இருந்தாலும், என்ன வேலை செய்தாலும் அங்கே ஓடவேண்டும். காதலியோடு டேட்டிங் போயிருந்தாலும், காய்ச்சலாக இருந்தாலும்... எந்த சாக்குபோக்கு சொல்லியும் தவிர்க்க முடியாது. நடுவர்களோ பார்வையாளர்களோ கிடையாது. நமக்கு நாமேதான் மார்க் போட்டு நம்மை நாமே பாராட்டி பரிசு பதக்கம் எல்லாம் கொடுத்துக்கொள்ள வேண்டியதுதான். நாம்தான் அம்பயர் என்பதால் ஏமாற்றவும் வசதி உண்டு. இது என் வாழ்நாள் பக்கெட் லிஸ்டில் இருந்த ஒரு கடினமான சவால்களில் ஒன்று. அதை இந்த ஆண்டு வெற்றிகரமாக முடித்தேன். என்னுடைய இந்த அபார சாதனையை பாராட்டி எனக்கு நானே ஒரு காஸ்ட்லியான ஜிபிஎஸ் வாட்ச் (GARMIN 910xt) ஒன்றை பரிசளித்துக்கொண்டேன்.

நீயாநானாவில் இரண்டு முறை தோன்றி நாட்டுமக்களை உய்விக்க நல்ல கருத்துகளை சொன்னேன். என்னதான் மாஞ்சி மாஞ்சி மணிக்கணக்கில் எழுதினாலும் காட்சி ஊடகத்தின் தாக்கத்தை உணர்ந்தது அந்த சமயத்தில்தான். எங்கு சென்றாலும் நீ.நா ரசிகர்கள் சிலர் அடையாளம் கண்டுபிடித்து உரையாடினர். சொந்தக்காரர்கள் எல்லாம் திடீரென மரியாதை கொடுத்து கௌரவித்தனர். இதெல்லாம் மகிழ்ச்சியோடு அதிர்ச்சி தருவதாக இருந்தது. நமக்கும் ஓரளவுக்கு மைக்கில் பேசவருகிறது என்கிற நம்பிக்கையை தந்தது உயிர்மை மேடைதான். இந்த ஆண்டு பிரபுகாளிதாஸ் நூல்வெளியீட்டில் பேசிய பேச்சு அதற்கான முழுமையான கான்பிடன்ஸை தருவதாக இருந்தது.

உள்ளே போய் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்ட ஓர் அலுவலகம். அங்கே உதவி பொறுப்பாசிரியாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஆனந்தவிகடன் இதழை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறேன்... நேற்றுதான் சிறுவர் மலர் பொறுப்பாசிரியருக்கு மஞ்சள் அட்டையில் ப்ரில் இங்க் பேனாவில் வாசகர் கடிதம் எழுதியதுபோல இருக்கிறது. இப்போது நானே அப்படி ஒரு பொறுப்பில் உட்கார்ந்து இருக்கிறேன். 2009ல் புதியதலைமுறை வார இதழில் அப்பாவி நிருபராக பணிக்கு சேர்ந்து ஆசிரியர் மாலனோடு ஆறு வருடங்கள் பணியாற்றி முடித்து, அங்கிருந்து 2015ன் இறுதியில் விடைபெற்றேன். அடுத்த ஸ்டாப் இங்கே விகடனில் இப்போது ஆசிரியர் கண்ணனோடு... முற்றிலும் வேறு களம்... வேறொரு தளம். சற்றே பெரிய பொறுப்பு. ஸ்பைடர்மேனின் ஒன்றுவிட்ட மாமா பென் பார்க்கர் சொன்னபடி ''கிரேட் பவர்ஸ் கம்ஸ் வித் கிரேட் ரெஸ்பான்சிபிலிட்டி''. ஆகவே ஆண்டு முழுக்க ஏராளமான வேலைகள்... வாழ்நாளில் அதிகமாக மிக மிக அதிகமாக வேலை பார்த்து இந்த ஆண்டு சாதனை படைத்தேன்.

இந்த ஆண்ட ஆனந்தவிகடனுக்காக ஏராளமான கட்டுரைகளை எழுதினேன். குறிப்பாக சமூகவலைதளங்களுக்கு நாம் எந்த அளவுக்கு அடிமைகளாக இருக்கிறோம் என்பதை குறித்த ஆய்வுக்கட்டுரை கவர்ஸ்டோரியாக வெளியானது. ஆனால் என் மனதிற்கு நிறைவை அளித்த கட்டுரை என்றால் அது திருவள்ளூர் பாலவாக்கத்தில் சந்தித்த பூபாலன்-சரண்யா இருளர் தம்பதியின் பேட்டியும் ரோகித் வெமூலா குறித்த கட்டுரையும்தான். இருளர் இனத்தில் கொத்தடிமைகளாக பிறந்த பூபாலனும் சரண்யாவும் வறுமையில் தவிக்கிற ரைஸ் மில் கூலிகள். ஆனால் இந்த வறுமையிலும் குடிசையில் வாழ்ந்தாலும் 60 இருளர் இன குழந்தைகளுக்கு கல்வி தீபம் ஏற்றி படிக்கவைக்கிறார்கள். அவர்களைப்பற்றிய விகடன் கட்டுரை வெளியான பின் சர்வதேச அளவில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. குழந்தைகள் கல்விகற்க வசதியாக கட்டிடம் ஒன்று தன்னார்வலர்களால் கட்டித்தரப்பட்டது. ஊடகங்களில் பணிபுரிகிற ஒருவனுக்கு அரிதாக கிடைக்கிற மன நிறைவு அது.

சமீபத்தில் பெங்களூரிலிருந்து ஒரு பாட்டிம்மா அழைத்திருந்தார். ''நீங்கதான் அதிஷாவா.. ரொம்ப நன்றிப்பா'' என்று நடுங்கிக்கொண்டே சொன்னார். ''என்னம்மா என்ன விஷயம் எதுக்கு'' என்று விசாரித்தேன். விகடனில் வெளியான என்னுடைய ''உசேன் போல்ட்டையே ஓடவிடுவோம்டா'' என்கிற காமெடி கட்டுரையை படித்துவிட்டு அழைத்திருக்கிறார். ''பல வருஷத்துக்கு பிறகு மனசுவிட்டு சிரிச்சேன்பா... இத்தனை வருஷமா வராத சிரிப்பை உன்னோட கட்டுரை வரவழைச்சிருச்சுப்பா.. அதான் உன்கிட்ட பேசணும்னு தோணுச்சு ஆபீஸ்ல நம்பர் வாங்கிட்டு கூப்டேன்'' என்றார்.

நகைச்சுவையாக எழுதுவது குறித்து எனக்கு ஒரு தாழ்வான மனநிலை எப்போதுமே உண்டு. நம் சமூகம் கோமாளிகளை அவ்வண்ணமே அங்கீகரித்து வைத்திருக்கிறது. இங்கே அழவைக்கும், கோபம் கொள்ளவைக்கும் துடிக்கவைக்கும் புரட்சிகர எழுத்துகளுக்கு கிடைக்கிற மரியாதையில் ஒரு சதவீதம் கூட நகைச்சுவை எழுத்துக்கு கிடைக்காது. சொல்லப்போனால் போர்னோ படத்தில் நடிக்ககிற ஆணைப்போலவேதான் நகைச்சுவை எழுத்தும் இங்கே டீல் செய்யப்படுகிறது. பாட்டிம்மாவின் சொற்கள் இதையெல்லாம் தாண்டி மகிழ்ச்சி கொள்ள வைத்தது. இத்தனைக்கும் அது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்லைதான்!

இப்படி இந்த ஆண்டை சிறப்பாக்க எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், வருத்தம் கொள்ள செய்த விஷயங்களும் இருக்கவே செய்தன. 2016ல் நிறைய மாரத்தான்களில் கலந்துகொள்ள திட்டம் வைத்திருந்தேன். சில மாரத்தான்களில் பதக்கம் வெல்கிற திட்டமும் இருந்தது. அதற்காக வெறித்தனமான பயிற்சிகளை செய்துகொண்டிருந்தேன். ஓவர் பயிற்சியால் எடை தாறுமாறாக குறைந்து... உடம்பு ரொம்பவே ஒல்லியாகி பார்க்கவே கென்யா, ஜிம்பாப்வே வீரர்களைப்போலவே உருமாற ஆரம்பித்திருந்தேன். அலுவல் வேலைகளால் நான்கு மாரத்தான்கள் மிஸ் ஆக, கலந்துகொண்டது ஒரே ஒரு மிட்நைட் மாரத்தான் மட்டும்தான். பழக்கமில்லாத அர்த்த ராத்திரியில் ஓடி காலை புண்ணாக்கிக்கொண்டது மட்டும்தான் மிச்சம். அந்த காயத்திலிருந்து மீள மூன்று மாதங்கள் ஓய்வெடுத்து மீண்டு வரவேண்டியதாக இருந்தது.

ஆண்டு முழுக்க மாராத்தான் பயிற்சியில் ஏராளமான காயங்களோடு மல்லுக்கட்டினேன். காரணம் இந்த வயதில் தொழில்முறை ப்ரோபஷனல் அத்லெட்டுகளின் வேகத்தோடு போட்டி போட நான் மேற்கொண்ட கடினமான பயிற்சிகள் எல்லாமே சொதப்பின. ஐயர்ன்மேன் சால்ஞ்சிற்காக நீச்சல் கற்க நினைத்து, கால்களில் உண்டான காயங்களால் அதுவும் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போய்விட்டது. இந்த முறை விட்டதை அடுத்த ஆண்டு செய்வோம்.

நிறையவே பயணம் பண்ண நினைத்து எந்தப்பயணத்தையும் உருப்படியாக செய்யமுடியாமல் போனது. கோவா, சிரபுஞ்சி, இலங்கை, மலேசியா என போட்டுவைத்த பயணத்திட்டங்கள் அனைத்தையும் போட்டுத்தள்ள வேண்டியதாக இருந்தது. கிட்டத்தட்ட கூண்டுகிளி கணக்காக அலுவலகத்தின் உள்ளேயே அடைந்து இருந்தேன். ஒவ்வொரு மாதமும் ஒரு பயணத்திட்டத்தை போட்டு பயணநாளுக்கு முன்பாக அதை மனத்தாங்கலோடு ரத்து செய்தேன். பயணம் பண்ணுவதற்கு தேவை காசோ பணமோ நேரமோ அல்ல மனசுதான்... என் மனதுக்கு இந்த ஆண்டு என்ன ஆனது என்று தெரியவில்லை. புதிய வேலை குறித்த அச்சமும் அது சார்ந்த அளவுக்கதிகமான சிந்தனை காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் சிறுகதை என்று நானாக நினைத்துக்கொண்டு பத்து சிறுகதைகளையாவது எழுதுவது உண்டு. ஆனால் இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக எழுதியதெல்லாம் ஒரே ஒரு சிறுகதை மட்டும்தான். அது விகடனில் வெளியானது. அதை படித்தவர்கள் பாராட்டினார்கள். படிக்காதவர்களும் பாராட்டினார்கள். படித்தவர்களை பார்த்தவர்களும் பாராட்டினார்கள்.

நீண்ட ஓய்வுக்குப்பின் இதோ மீண்டும் சமூகவலைதளங்களுக்கு திரும்பிவிட்டேன். அடுத்த ஆண்டு ஏராளமான பொறுப்புகளோடும் கனவுகளோடும் சவால்களோடும் பிறக்கிறது. இலக்குகளை நோக்கி ஓடுவதில் எப்போதும் ப்ரியம் இருந்தது இல்லை. இலக்குகளின் வழிப் பயணங்களே வாழ்வை சுவாரஸ்யப்படுத்துகின்றன. அந்தப் பயணங்களே எனக்கான பாடங்களையும் வழங்குகின்றன.

29 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் தோழா

Ken said...

இனிய வாழ்த்துகள் மச்சி, நீ இணையத்தில இல்லாட்டியும் என் நம்பர் இருக்குதானே அதுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்திருக்கலாம்ல.

குரங்குபெடல் said...

" அதை படித்தவர்கள் பாராட்டினார்கள். படிக்காதவர்களும் பாராட்டினார்கள். "


ஹா ஹா . . .


புத்தாண்டு வாழ்த்துகள்

Unknown said...

Welcome Back Athisha :)

யாஸிர் அசனப்பா. said...

welcome back bro

Badri Seshadri said...

If staying away gives you so much, are you not losing all of them by coming back?

விஜி said...

நான் அடிக்கடி நினைச்சுக்குவேன். ஒரு வருசமெல்லாம் கண்டிப்பா முடியாதுன்னு. நியு இயர் அன்னைக்கு உங்க பேஸ்புக்பேஜ்ல பார்த்தேன். எனிவே வாழ்த்துகள். வெல்கம் பேக்

Unknown said...

@Badri - சமூகவலைதள ஊடகங்களில் இல்லாமல் போவதால் இழப்புகளும் அதிகம். இன்று சமூகவலைதள செயல்பாடு என்பது அரசியல் தலைவர்கள் தொடங்கி அரிசிமண்டி ஓனர் வரைக்கும் அனைவருக்குமே தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அப்படி இருக்க இதிலிருந்து விலகி இருப்பது என்பது என்னளவில் ஒரு சின்ன சாகச முயற்சிதான்.

இங்கிருந்து விலகி இருந்த நாட்களில் பெற்றவை நிச்சயமாக உண்டு.ஆனால் அதே சமயம் இழப்புகளும் அதிகம். இந்த நாட்கள் எனக்கு சமூகவலைதளங்களை இன்னும் சரியாக புரிந்துகொள்ளவும், இதை இன்னும் சிறப்பாக கையாளுகிற கன்ட்ரோலையும் கொடுத்திருக்கிறது என நினைக்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

இணையத் துறவறம் முடிந்துவிட்டதல்லவா
வாருங்கள் வரவேற்கிறோம்

maithriim said...

Welcome back. Missed you :-} இணையம் இப்பொழுது அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.

amas32

Venkat said...

All the best 👍

ராம்குமார் - அமுதன் said...

அந்த போவியா போவியா போஸ்ட்டுக்குப் பிறகு ஒரு 200 முறையாவது உங்கள் பக்கத்திற்கு வந்திருப்பேன். இன்றும் வந்தேன். :)

உங்களுடைய 100 நாள் சேலஞ்சை ஒரு 30 நாட்களாக மாற்றி இந்த ஆண்டு முயற்சி செய்யலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம்.

சென்ற வருடம் சென்னை மாராத்தானில் 42கிமீ ஓடினீர்களா?

King Viswa said...

வெல்கம் பேக்!!!!

- யெஸ்.பாலபாரதி said...

வெல்கம் பேக்..

அக்பர்தீன் said...

Welcome back, Bro!

சுந்தரராஜன் said...

மீண்டு(ம்) வந்ததை வரவேற்கிறேன். வாழ்த்துகள்!

Jankin said...

Very happy to read your article after long time.....

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Divya Balachandran said...

இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா என்பது போல அதிஷாவின் பதிவை படித்தவுடன் மனதில் ஒரு உற்சாகம்.

2016 உங்களுக்கு எப்படி இருந்ததை வார்த்தைகளில் காட்சிபடுத்திவிட்டீர்கள்.. காயங்கள் சீக்ரம் ஆறட்டும், இந்த ஆண்டு அனைத்து திட்டங்களும், மாரதானுகளும், பயணங்களும் நடைபெற வாழ்த்துக்கள்.

Welcome Back and Wish you happy new year ahead!!

Unknown said...

அஜித் பட ஓப்பனிங் மாதிரி இருக்கு...
Welcome back :-)

Unknown said...

thanks..now iam read this post.
continuos your writting..
iam reading your some artical in ANANTA VIKADAN.very super

'பரிவை' சே.குமார் said...

வாருங்கள்...
இனி நிறைய எழுதுங்கள்..

Anonymous said...

Welcome back Athisa. Your blog is in my bookmark and got disappointed every day by seeing no new post since your last 2015 year post. Keep writing more.

Unknown said...

நீங்கள் திரும்ப எழுத வந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி .நான் உங்களது blog தொடர்ந்து படிப்பவன் .விகடனில் உங்களுடைய கட்டுரைகளை வாசித்துள்ளேன் .வாழ்துக்கள்

Anonymous said...

really happy to read your article my dear Athisa, i m opening your blog daily basis..welcome back...

anbu said...

happy to see your come back...i m your biggest fan..

BANU NIYAZ said...

WELCOME BACK MY FRIEND EVERYDAY I USED TO CHECK YOUR BLOG AND I HAVE RECOMMENDED TO SEVERAL FRIENDS TOO.

Anonymous said...

இலக்குகளை நோக்கி ஓடுவதில் எப்போதும் ப்ரியம் இருந்தது இல்லை. இலக்குகளின் வழிப் பயணங்களே வாழ்வை சுவாரஸ்யப்படுத்துகின்றன - I surely second these words. I always believe in the path rather than the destination

Muraleedharan U said...

சொல்லப்போனால் போர்னோ படத்தில் நடிக்ககிற ஆணைப்போலவேதான் நகைச்சுவை எழுத்தும்

Thodarattum ...vaasakan