Pages

24 February 2017

கட்சிகள் ஏன் போராடத் தயங்குகின்றன?
ஓர் எதிர்கட்சித் தலைவர் உண்ணாவிரதம் இருக்கிறார், அது எவ்வளவு முக்கியமான நிகழ்வு. ஆனால் மக்களுக்கு அதைப்பற்றி எந்தவித பரபரப்பும் இல்லை. இன்றும் இன்னுமொரு நாளே என்று கடந்துபோகிறார்கள். இணையத்தில் கூட சலசலப்பே இல்லை. அவருடைய பட்டினிப்போர் யாருக்குமே பதட்டத்தை உண்டாக்கவில்லை. அட வயசான மனுஷன் சோறுதண்ணி இல்லாம கிடக்காரே என்கிற பரிதாப உணர்ச்சியைக்கூட எழுப்பவில்லை.

இப்பல்லாம் இப்படித்தான். கட்சிகளால் நடத்தப்படும் போராட்டங்கள் என்பது யாரோ யாருக்கோ எதற்கோ நடக்கிற ஒன்று... அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று மக்கள் விலகிக்கொள்கிறார்கள். கடைசியாக கட்சிகளோடு இணைந்து பொதுமக்களும் இணைந்து பொது விஷயம் ஒன்றுக்காக போராட்டத்தில் ஈடுபட்டது எப்போது? நினைவிருக்கிறதா?

ஆனால் பாருங்கள்... கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கெல்லாம் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்குகிறார்களோ... அது நியாயமான போராட்டமோ தூண்டப்பட்ட போராட்டமோ... நிச்சயம் கரைவேட்டிகளுக்கு அனுமதியில்லை என்று விரட்டுகிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவு தருகிற அரசியல்வாதிகளைக்கண்டு அஞ்சுகிறார்கள். கரைவேட்டிகளின் போராட்ட வரலாற்று பழைய ரெகார்டுகள் அப்படி...

சில நாட்களுக்கு முன்பு ரயில் மறியல் என்ற பெயரில் திமுகவினர் ஒன்றை நிகழ்த்தினார்கள்... ஜல்லிக்கட்டுக்காக...! ரயிலுக்கு பின்புறம் நின்றுகொண்டு ரயிலை மறித்து நகைச்சுவையெல்லாம் பண்ணினார்கள். அந்த அறப்போராட்டத்தை மக்களெல்லாம் கடுப்போடுதான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ''டேய் அதான் மறிச்சிட்டல்லா... எப்படா கிளம்புவீங்க ...'' எனக் காத்திருந்தனர். திமுக மட்டும் அல்ல வள்ளுவர் கோட்டத்திலும், சேப்பாக்கத்திலும் நடக்கிற பெரும்பாலான 'ஒற்றை மைக்கால் புரட்சி'களையும் உண்ணாவிரத போராட்டங்களையும் மக்கள் அப்படித்தான் கடந்து செல்கிறார்கள்.

பொதுமக்களே இல்லாமல் போராடுவதுதான் கட்சிகளின் சமகால போராட்ட முறையாக மாறி இருக்கிறது. பொதுமக்களுக்கும் பிரதான கட்சிகளின் போராட்டங்கில் ஈடுபாடு மட்டுமல்ல , மரியாதை கூட இல்லாமல் போக ஆரம்பித்திருக்கிறது. காசு கொடுத்து ஆட்களை கூட்டி வந்து போராட்டத்தில் ஈடுபட வைப்பதுதான் பெரிய கட்சிகளின் போக்காக மாறி இருக்கிறது. சிறிய கட்சிகளிலோ அடிவாங்குவதற்காகவே ஒரு கூட்டத்தை வளர்த்து இதற்காகவே காவுகொடுக்கிறார்கள். பெரிய கட்சிகளில் அதன் கொள்கைகளில் ஈடுபாடு உண்டாகி அதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிற தொண்டர்களின் எண்ணிக்கையை... யாராவது அப்படி இருப்பார்களா?

அண்ணாசாலையில் ஸ்பெசன்சர் அருகே எதோ காரணத்துக்காக திமுகவினர் போராட்டத்திற்கு வந்திருந்தனர். என்ன காரணத்திற்காக நிற்கிறார்கள் என்று அங்கிருந்த பொதுமக்கள் யாருக்குமே தெரியவில்லை. கைகோர்த்து நின்றவர்கள் எல்லோருமே காஞ்சிபுரம், வேலூரில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள். டீக்கடையில் கட்சி துண்டோடு நின்ற ஒருவரிடம் என்ன மேட்டர் என விசாரித்தேன். தலைமைல சொல்லிட்டாங்க தல கிளம்பிவந்துட்டோம் என்றார். நல்லவேளையாக இந்த மனித சங்கிலியால் போக்குவரத்து நெரிசல்கள் ஏதும் ஏற்படவில்லை. அந்த போராட்டத்தாலும் எதுவும் நடந்துவிடவில்லை.

ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அது தொடங்கிய சில நிமிடங்களில் போராட்டக்காரர்களை மொத்தமாக காவல்துறை வேனில் பூப்போல அள்ளிக்கொண்டு கிளம்பிவிடும். கல்யாண மண்டபத்தில் பாதிநாள் வைத்துவிட்டு புளியோதரையோ எலுமிச்சை சாதமோ போட்டு அனுப்பிவிடும் என்பது எல்கேஜி குழந்தைகளுக்கும் கூட தெரிய ஆரம்பித்துவிட்டது. அதிலும் சாலை அல்லது ரயில் மறியல்களால் அரசுக்கு எவ்வித பாதிப்புகளும் இருப்பதில்லை... பொதுமக்களுக்குத்தான் சங்கடங்கள்.

சட்டசபையில் அத்தனை உக்கிரமாக சட்டை கிழிய போராடிவிட்டு செயல்தலைவர் ஸ்டாலின் மெரீனாவில் போராட்டத்தில் அமர... அடுத்த நொடியே வாட்ஸ் அப்பில் செய்திகள் பறக்கிறது... ''அடுத்து என்ன... இன்னும் சில நிமிடங்களில் வேன்ல ஏத்தி கூட்டிட்டு போய்டுவீங்க அதானே!'' என்று...

மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கவனிக்கிறார்கள். கடைசியாக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையிடம் தடியடிகளை வாங்கி மண்டைகளை உடைத்துக்கொண்டது எப்போது? நினைவிருக்கிறதா? ஆனால் இதே திமுக... எம்ஜிஆர் ஆட்சிகாலத்திலும் அதற்கு முந்தைய காலங்களிலும் எத்தனையோ முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக நின்று அடிபட்டிருக்கிறது. சிறையில் வாடியிருக்கிறது. களத்தில் இறங்கி போராடியிருக்கிறது. தன்னலமற்று... தியாக உணர்வோடு...

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு போல இல்லை இன்றைய நிலை. அன்றைக்கு இருந்த வாழ்வியல் இன்று முற்றிலுமாக மாறிப்போயிருக்கிறது. அறம் என்பதற்கான அளவுகோல்கள் திருத்தி அமைக்கப்பட்டிருக்கின்றன. காந்தி காலத்து அறப்போர் அல்ல இன்றைய அறப்போர்கள். இன்றைய பெரும்பாலான அறப்போர்கள் கார்பரேட்களால் கச்சிதமாக வடிவமைக்கப்படுகின்றன. அப்படி இருக்க கட்சிகளின் போராட்டங்களும் அதற்கேற்ப மாறி இருக்க வேண்டும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாதிரியான ஊரிலேயே பிரதானமாக இருந்ததே நான்கு சாலைகள்தான். முப்பது ரயில்கள்தான். மக்களுக்கு இருந்த ஊடகங்களும் இன்றுபோல இல்லை. அன்றைக்கு உண்ணாவிரதம் இருந்தால் மக்களெல்லாம் பதறி இருக்கக்கூடும். சக மனிதன் பட்டினியாக கிடப்பதென்பது தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்த காலங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் இன்று ஒருவன் பட்டினியால் செத்துப்போனாலும் யாருக்கும் கவலைப்பட நேரமில்லை. அந்தக்காலத்தில் உண்ணாவிரதம் இருக்கிற அரசியல் தலைவர்கள் என்றாலே தியாகிகள் என நினைத்திருக்கலாம்.

ஆனால் இன்று மக்களுக்கு அரசியல் தெரிகிறதோ இல்லையோ அவர்களுக்கு எல்லாம் அரசியல்வாதிகளின் போராட்டங்களுக்கு பின்னால் இருக்கிற நோக்கங்கள் தெரிகிறது. இந்த போராட்டங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நிலைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.

மக்களுக்கும் போராட நேரமில்லை. டிவி இருக்கிறது. வாட்ஸ் அப்... ஃபேஸ்புக் வந்துவிட்டது. ஃபார்வர்டுகளில் போராட்டம் பண்ணத் தொடங்கிவிட்டார்கள். பணிச்சூழலும் வாழ்வியல் நெருக்கடிகளும் அவர்களை எந்நேரமும் பொழுதுபோக்குகளை நோக்கியும் பொருளாதார தேடலிலும் மூழ்கடித்து வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட அவர்களை கவர்கிற மாதிரியான போராட்டங்களை முன்னெடுப்பது அத்தனை சுலபமல்ல.

இன்று எதிரியாக பாவித்து அடையாள போராட்டங்களை நடத்துகிற கட்சிகள், சென்ற ஆண்டுகளில் இதே ஆட்களோடு கூட்டணி போட்டு கும்மி அடித்ததும், இனி வரும் காலங்களில் பதவிக்காக கூட்டணி வைக்கத் தயங்காது என்பதையும் இந்த திரளான மக்கள் குழு அறிந்தே வைத்திருக்கிறது. அல்லது இது எல்லாமே அவன் தன்னுடைய பதவிக்காக தன்னுடைய சுயலாபத்துக்காக செய்கிறான் என்பதையும் உணர்ந்து வைத்திருக்கிறது.

சென்ற மாதம் சென்னையில் கம்யூனிஸ்ட் தோழர்களால் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை மட்டுமல்ல இந்த நடவடிக்கையால் இந்தியாவே சூறையாடபட்டிருக்கிறது. மக்களெல்லாம் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக எளிமையான கம்யூனிஸ்ட் இயக்கம் போராட்டம் அறிவிக்கிறது. எத்தனை பேர் கூடியிருக்க வேண்டும். அங்கேயும் தோழர்களே தனியாகப்போய் போராடி தனியாகவே மிதிவாங்கினார்கள். பெண்கள் மீதெல்லாம் காவல்துறை முறைதவறி நடந்துகொண்டது... யாருக்கும் கவலையில்லை. காரணம் அது அவர்களுடைய போராட்டமில்லை என நினைக்கிறார்கள். ஏன்? அதற்கான விடைகளை கட்சிகள் கண்டறிய வேண்டும். எங்கே பொதுமக்களிடமிருந்து விலகி இருக்கிறோம் என்பதை கூர்நோக்க வேண்டும்.

கட்சிகள் இன்னமும் அந்தகாலத்து முறையில் நாள்முழுக்க உண்ணாவிரதம் இருப்பது, ரயிலை மறிப்பது என்று பழைய மாடல் போராட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் விமான மறியலாகவாவது செய்யலாம்! ரயிலாக இருந்தால் ஏழைகள்தான் சிக்கலுக்கு உள்ளாகிறார்கள், இதுவே விமானம் என்றால் பணக்காரர்கள்தான் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்... சிஎன்என், டைம்ஸ்நவ் கூட கவர் பண்ணுவார்கள். ஜாலிக்காக சொன்னாலும், கட்சிகள் புதுமையான போராட்ட முறைகளை சிந்திக்க வேண்டும்.

சமூகவலைதளங்கள் வந்துவிட்டன. இங்கே பெருவாரியான மக்களிடையே அடிப்படையான பிரச்சனைகளுக்கு எதிரான மனநிலையை எளிதில் உருவாக்க முடியும். ஆனால் பாருங்கள்கட்சிகள் இன்றும்கூட சமூகவலைதளங்களில் ஒரு கருத்தை வைரலாக்க காசு கொடுக்கிற நிலைதானே இருக்கிறது...? இதற்காக ஏஜென்ஸிகளை நியமித்து வைத்திருக்கிறார்கள். தொண்டர்களின் வழி கொள்கைகளை பரப்பிக்கொண்டிருந்தவர்கள்... இன்று கொள்கைகளை பரப்ப கார்பரேட்டுகளை நாடுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய காமெடி. கோடிகளை கொட்டி மீம்ஸ் போடுவது எவ்வளவு பெரிய சீரழிவு.
போராட்ட முறைகளை முற்றிலுமாக மாற்றுவது ஒருபுறம் என்றால், போராட்டங்களில் அடிப்படையான நேர்மை இருக்கிறது என்பதை மக்கள் மனதில் உருவாக்க முனைவது கட்சிகளின் கடமை. காரணம் நீங்கள் என்னதான் மறைத்தாலும் உங்களுடைய உள்நோக்கக்கொண்டை நிச்சயம் வெளியே தெரிந்துவிடும் என்பதுதான் நவீனதொழில்நுட்பங்களின் காலத்தில் மிகப்பெரிய சிக்கல்.

இதை எதிர்கட்சியான திமுகதான் முதலில் உணரவேண்டும். சட்டசபையில் இறங்கி அடித்ததை நிறையவே பேர் விமர்சித்தாலும் அந்த கெத்து நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை மறந்துவிடக்கூடாது. காரணம் அதில் சுயநலத்தோடு கொஞ்சம் பொதுநலனும் இருக்கிறது என்பதால்தான். #Standwithstalin என்கிற ஒரு ஹேஷ்டேக் சட்டசபையில் சபாநாயகரின் அத்துமீறல்கள் நடந்த நாளில் ட்ரெண்ட் ஆகிறது. அதை ட்ரெண்டாக்கியது மக்கள்தான். எத்தனையோ முறை காசுகொடுத்து முயன்றும் முடியாததை மக்கள் நடத்தியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை எங்கிருந்து உருவாகிறது...?

போராட்டங்களால்தான் இங்கே எல்லாகட்சிகளும் வளர்ந்திருக்கின்றன. ஆனால் இன்று போராட்டங்களில் இருந்து அவை விலக்கிவைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன. அது சரி திமுக மட்டும்தான் குற்றவாளியா... அதிமுக என்ன கிழித்துவிட்டது?

இந்தப்போராட்டக்களங்களில்... அதிமுகவுக்கு பிரச்சனையே இல்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஏன் என்றால் போராட்டகுணம் என்பது தன்னுடைய மரபணுவில் துளியும் இல்லாதவர்களால்தான் அந்தக்கட்சியில் உறுப்பினராகவே இருக்கமுடியும்.போராட்டங்களில் ஈடுபடாமல் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காமல் சும்மா இருந்தே ஆட்சியைப்பிடித்தவர்களும் அவர்கள்தான். அதுவும் சரிதான் போலியான அன்பைவிட உண்மையான வெறுப்பு எவ்வளவோ மேல்தானே...