Pages

24 March 2017

பால்கனி தாத்தா



நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபாரமான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அவர் நம்முடைய வாழ்வின் அவலங்களை புன்னகையோடு எளிய கதைகளாக எழுதிக்கொண்டிருந்தார். அவை இலக்கியத்தரத்தோடு இருந்தன.

அசோகமித்திரனின் கதைகளின் மொழி மூளையை அஷ்டபங்காசனம் பண்ண வைக்கிற வகையில் என்றைக்குமே இருந்ததில்லை. தண்ணீரும் ஒற்றனும் மானசரோவரும் கரையாத நிழல்களும்... ஒவ்வோரு சிறுகதைகளும் மக்களின் மொழியில்தான் உணர்வுகளை கடத்தின. அந்த உணர்வுகளின் அழுத்தம் என்றென்றைக்குமானவை.

எழுத்தில் இன்னமும் அரிச்சுவடியைக்கூட தாண்டிடாத நானே ஒரு நானூறு லைக்ஸ் வாங்கினால் ஆட்டம் போடத்தோன்றுகிறது. ஆனால் எத்தனையோ மகத்தான கதைகளை எழுதிவிட்டு எப்படி இந்த ஆளால் இப்படி தேமேவென்று பால்கனி தாத்தாவாக இருக்கமுடிகிறது என வியந்திருக்கிறேன்.

அவர் எப்போதும் பால்கனியில் அமர்ந்துகொண்டு இலக்கிய உலகை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து இறுதிக்காலம் வரை எழுதிக்கொண்டிருந்தார். தான் எழுதுவதை சமகால எழுத்தாளர்களை போல சமூகத்திற்கு செய்கிற தொண்டாக, தியாகமாக, எது எதுவாகவோ அவர் நினைத்ததே இல்லை.

``உங்கள் படைப்புகள் மூலமாக என்ன செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்?’’ என்கிற கேள்விக்கு அவருடைய சமீபத்திய விகடன் தடம் பேட்டியில் இப்படி பதில் சொல்லியிருந்தார்.

``பெருசா எதுவும் பண்ணலை. பெருமையா எதுவும் சொல்ல முடியாது. வாழ்க்கையில நல்லா உக்காந்து எழுதி பொழுதுபோக்கியிருக்கேன். நான் எழுதினதை சிலபேர் படிச்சிருக்காங்க. அவ்வளவுதான்.’’

அசோகமித்திரனிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் இதுதான். அவருக்கு எழுத்து என்றைக்கும் மகிழ்ச்சிக்கானதாக மட்டுமே இருந்திருக்கிறது. ஒற்றனின் ஒவ்வொரு வரியிலும் அந்த மகிழ்ச்சியை நான் உணர்ந்திருக்கிறேன். எழுதுவதன் மகிழ்ச்சி... அத்தனை எளிதில் வாய்க்காது. மன திருப்திக்காக மகிழ்ச்சிக்காக எழுதுதல் பெரிய வரம். அதைநோக்கித்தான் எழுதுபவர்கள் முன்னகர வேண்டும். நான் அதைத்தான் செய்ய முயற்சி செய்கிறேன்.

தமிழ்மகனின் நூல்வெளியீட்டில்தான் அவரை கடைசியாக பார்த்தது. அவருடைய பேச்சையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை அவரே குறிப்பிட்டு சிரித்தார். அந்த சுய எள்ளலை அவருடைய சிறுகதைகளை இனி நிறையவே மிஸ் பண்ணுவோம். மற்றபடி இது கல்யாணச்சாவுதான்.

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் அசோகமித்திரனின் முழுமையான சிறுகதை தொகுப்பை (காலச்சுவடு) ஒரு நண்பர் பரிசளித்தார். அதை இந்த ஆண்டு இறுதிக்குள் வாசித்து முடிப்பதுதான் அவருக்கு செய்கிற மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

என்னைப்போன்ற பேரன்களுக்கு ஏராளமாக எழுதி வைத்துவிட்டுத்தான் செத்துப்போயிருக்கிறது இந்த எழுத்து தாத்தா. அதையெல்லாம் வாசித்து பகிர்வதை விடவும் வேறென்ன பெரிய அஞ்சலியை செய்துவிடப்போகிறோம்... இந்த மகத்தான எழுத்தாளனுக்கு!

#அசோகமித்திரன்

23 March 2017

யார் இந்திய விரோதி?



இன்று நாளிதழ்களில் ஒருவிளம்பரம் வந்திருக்கிறது. பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அந்த விளம்பரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரை இந்திய வரலாற்றில் எந்த கார்பரேட் நிறுவனமும் தன்னுடைய நிறுவனத்தை விமர்சிப்பவர்களை ''இந்திய விரோதிகள்'' என வசைபாடியதில்லை. ஆனால் பதஞ்சலியின் விளம்பரம் ''ANTI INDIAN'' என்று தங்களுடைய விமர்சகர்களை குறிப்பிடுகிறது.

பாபா ராம்தேவின் இந்த பதஞ்சலி நிறுவனம் அன்னிய நாட்டு கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேசத்தை காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதை இந்திய விரோத சக்திகள் தடுக்க நினைப்பதாகவும் அந்த விளம்பரம் குறிப்பிடுகிறது. அதாவது சுதேசி பொருட்கள் விற்பதையும், தரமான பொருட்களை குறைந்த விலைக்கு தருவதையும் தடுக்கவே பாபா ராம்தேவ் மீது குற்றங்களை சுமத்துகிறார்களாம்.

ஒரு உள்ளூர் நிறுவனம் தரமான பொருட்களை விற்பதிலோ, அதை உள்நாட்டிலேயே தயாரிப்பதிலேயோ யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. யாருமே அதை வாங்கிப்பயன்படுத்தலாம். ஆனால் ஒரு சாமியார் மீதும் அவருடைய செயல்பாடுகள் மீதும், அரசியல் நடவடிக்கைகள் மீதும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போதும்... அந்த விமர்சகர்களை இந்தியாவுக்கே எதிரிகளாக சித்தரிக்க முயல்வதுதான் இந்த யோகா வியாபாரிகளின் நோக்கங்களை சந்தேகிக்க வைக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால் வன ஆக்கிரமிப்பு சாமியார் ஒருவரைப்பற்றி தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்தபோதும் கூட இப்படித்தான் விமர்சிக்கிறவர்கள் தன்னை விமர்சிக்கிறவர்கள் எல்லோருமே ''இந்து மத எதிரிகள்'' என்கிற முத்திரை குத்த முற்பட்டனர்.

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை FMCG சந்தையில் பெரிதாக வளர்ச்சிகளை எட்டிடாத பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்... பாஜக ஆட்சிக்கு வந்த பின்தான் மளமளவென வளர்ச்சி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் வளர்ச்சி 200 மடங்கு அதிகரித்திருக்கிறது. பாபா ராம்தேவ் துறவி என்பதால், பினாமியாக ஆச்சார்யா பால்கிருஷ்ணா என்பவரை வைத்து இந்த கார்பரேட் சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகிறார். 2.5பில்லியன் டாலர் அளவுக்கு பதஞ்சலிக்கு சொத்து இருக்கிறது. இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் ராம்தேவ் இருக்கிறார்! எல்லாம் யோகா சொல்லிக்கொடுத்து கற்றுக்கொடுத்த பணம்தானாம்!

சமீபத்தில் இந்த ஏழ்மையான நிறுவனத்திற்கு வருமானவரித்துறை வரிவிலக்கு அளித்து அறிவித்துள்ளது. அதாவது பதஞ்சலி ஒரு தொண்டு நிறுவனமாம்! மோடி அரசின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. இப்படி பதஞ்சலிக்கு சலுகைகளை வாரித்தருவது மோடி அரசுக்கு புதிதல்ல... இதற்கு முன்பும் இப்படி பல முறை இதே மாதிரியான வேலைகள் நடந்திருக்கிறது. ராணுவத்தையே பாபா ராம்தேவுக்காக மடக்கிய சம்பவமெல்லாம் உண்டு. பதஞ்சலி தன்னுடைய நிறுவனத்தின் மூலதனமாக தேசபக்தியை மாற்ற முனைகிறது. பதஞ்சலி ஊறுகாய் வாங்கினால் நீங்களும் தேசபக்தராகலாம் என்கிறது. அதற்குத்தேவையான ஊக்கத்தை வழங்க இந்திய அரசே பின்னுக்கு நிற்கிறது.

ஒரு அரசே பின்னால் இருக்கிற ஆணவத்தில்தான் இந்த சாமியார்களால் மிக தைரியமாக தன் விமர்சகர்களை இந்திய விரோதிகளாக்க முடிகிறது. வனத்தை சூறையாடிக்கொண்டே பிரதமரை அழைத்து விழா நடத்தமுடிகிறது. ஏன் பாபா ராம்தேவ், ஜக்கி மாதிரியான சாமியார்களை பாஜக போற்றி வளர்க்கிறது? அவர்களுடைய குற்றங்களை புறந்தள்ளி பொருளாதார அளவில் வளப்படுத்துகிறது? என் கேள்விகளுக்கான விடைகள் மிக அவசியமானவை.

பாஜக விரும்புகிற இந்து ராஜ்ஜியத்திற்கு சில கொள்கைகள் உண்டு. அதை நேரடியாக திணிப்பதை விடவும் இந்த சாமியார்களின் வழி யோகா, ஆயுர்வேதம், மண்ணின் மருத்துவம், ஆர்கானிக், சுதேசி, கோமிய மருத்துவம் என்கிற எண்ணங்களின் விளைவாக மக்களுடைய மனதில் எளிதில் பரவச்செய்ய முடியும். காரணம் மேலே சொன்ன விஷயங்களின் தொடர்ச்சிதான்... தேசபக்தி, பெண்ணடிமைத்தனம், பாலியல் கட்டுப்பாடுகள், கலாச்சரம் காப்பது, வேற்றுமத வெறுப்பு, ஒரினசேர்க்கையாளர்களை அழித்தல், புராணப்பெருமைகள், மாட்டிறைச்சி எதிர்ப்பு, மீட்பர் மோடி, சாதியப்பெருமை, மதவாதமே அல்டிமேட்... போன்ற விஷக்கருத்துகள் எல்லாம்.

பாஜக விரும்புகிற இந்த பரப்புரைகளை மக்களிடையே எளிதில் கொண்டு சேர்க்க இந்த சாமியார்களை விடவும் நல்ல சாட்டிலைட்டுகள் கிடைக்காது. அதனால்தான் இந்த சாமியார்களை தங்களுடைய துணை அமைச்சர்களைப் போல போற்றி வளர்க்கின்றன மோடியின் அரசு.

பதஞ்சலி சாமியாருக்கு இப்படி பொருளாதார உதவிகள் என்றால்... யோகி ஆதித்யநாத் மாதிரியான கூலிப்படை தலைவன்களை இன்னொரு பக்கம் பதவியில் அமரவைத்து அழகு பார்க்கிறது மோடி அரசு. ஒரு ஜாடையில் என்னைப்போலவே இருக்கிறார் என்பதைத்தாண்டி யோகி ஆதித்ய நாத்தை எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே நன்றாகத்தெரியும். அவருக்குதான் என்னைத்தெரியாது. உபியின் இந்த புது முதல்வரை பற்றிய விஷயங்கள் சிலவற்றை அறிந்து சில ஆண்டுகளுக்கு முன்பே வியந்து இருக்கிறேன். அந்த அளவுக்கு பல்வேறு விதமான சாதனைகளை இளம் வயதிலேயே செய்த அபாரமான ஆள் இந்த கொலைகார யோகியார்.

விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கிறவர்கள், பெண்களை மயக்கி வேட்டையாடும் காமுகர்கள், அரசியல் ப்ரோக்கர்கள், கூலிப்படை வைத்து கொலை செய்கிறவர்கள் என மதங்களின் பெயரால் மக்களை முட்டாளாக்கும் சாமியார்களில் பல வெரைட்டிகள் உண்டு. அதில் இந்த யோகி ஆதித்யநாத் எனப்படுகிறவர் மதக்கலவர ஸ்பெஷலிஸ்ட். மிகக்குறைந்த வயதிலேயே 50க்கும் அதிகமான மதக்கலவரங்களை வெற்றிகரமாக நடத்திக்காட்டி இஸ்லாமிய மக்களை கொன்றுகுவித்து இன்று முதலமைச்சராக உயர்ந்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய சாதனை! அதிலும் இவர் சாதாரண குற்றங்களை கூட இஸ்லாமியர்களுக்ககு எதிரான மதக்கலவமாக மாற்றி இஸ்லாமியர் வாழும் பகுதிகளுக்குள் புகுந்து சூறையாடி எரிக்கிற அசகாயசூரர்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது கிரிமினல் பின்னணி உள்ள நட்சத்திர வேட்பாளார்கள் குறித்து புதியதலைமுறை வார இதழுக்காக ஒரு கட்டுரை செய்தோம். கிரிமினல் பின்னணி உள்ள எம்பிக்கள் குறித்து விபரங்கள் சேகரித்துக்கொண்டிருந்த போதுதான் யோகி ஆதித்யநாத்தை அறிந்துகொண்டேன்.

அவரைப்பற்றிய விபரங்களை தேடி வாசிக்க வாசிக்க புல்லரிப்பாக இருந்தது. ரத்தக்கறை படிந்த அவருடைய வாழ்வின் பக்கங்கள் படிப்பவர்களுக்கு மதவெறியையும் அடக்குமுறையையும் அள்ளிவழங்கக்கூடிய அட்சயபாத்திரமாக இருந்தது. மிக இளம் வயதிலேயே தன் சகாக்களோடு இந்து மதத்தை காப்பதற்காக இஸ்லாமிய சுடுகாட்டில் புகுந்து கலவரம் பண்ணிய வீராதிவீரர் இவர். அந்த வழக்குதான் இந்த கலவர சாமியாயாருக்கு பேர்வாங்கித்தந்த மிகமுக்கியமான வழக்கு. அப்போதே அவர் எம்பிதான்! இதுவரை இவர் மீது 12க்கும் அதிகமான எஃப் ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு, அவை சிபிசிஐடி போலீஸாரால் இப்போதும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த யோகியார்தான் இப்போது உபியின் முதல் அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவியேற்க இருக்கிறார். அவருக்குதான் மோடியார் முடிசூட்டவிருக்கிறார். கோரக்பூரின் தெருக்களில் இஸ்லாமியர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஒரு மதவெறியர்தான் இப்போது அதே மாநிலத்தின் முதலமைச்சர். ஒருபக்கம் சாமியார்கள் நம் எண்ணங்களை நோக்கங்களை வடிவமைத்து திட்டமிட.... இன்னொருபக்கம் கூலிப்படையினர் நம்மை ஆளத்தொடங்கி இருக்கிறார்கள்.

திகிலாக இருக்கிறது இல்லையா... மோடி கனவு காணும் புதிய இந்தியா இப்படித்தான் இருக்கப்போகிறது. நம்முடைய அடிப்படையான சுதந்திரம் பறிக்கப்பட்டு, அடிப்படைவாதத்தின் கொடுங்கரங்கள் நம்மை கட்டுப்படுத்தும். அதற்கான திட்டமிடல்தான் இவை எல்லாம்...

இந்த மக்கள் விரோதிகளை அவர்களுடைய செயல்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பதஞ்சலியின் பாஜகவின் பக்தர்களின் பார்வையில் 'நீங்களும் இந்திய விரோதியே!'

09 March 2017

ஆணுக்குப் பெண் நிகரா?



முன்பு வேலை பார்த்த அலுவலகம் ஒன்றில் மகளிர் தினத்தன்று பெண்கள் எல்லோரையும் ஒரே நிறத்தில் உடையணிந்து வர சொல்லி இருந்தார்கள். அப்படி ஒரு நாளில் அங்கே வேலைபார்த்த ஒரு ஆண் நண்பனும் (விபரம் தெரியாமல்) அதே நிறத்தில் உடையணிந்து வந்துவிட்டான். அதை அலுவலக ஆண்நண்பர்கள் கேலி பேச ஆரம்பித்தனர். அவனுமே கூட அந்த நிறத்தில் உடையணிந்து வந்ததை அவமானமாகக் கருதினான்.

திரும்பத் திரும்ப எல்லோரிடமும் ''ச்சே தெரியாம போட்டுட்டு வந்துட்டேன் பாஸ்... மதியமா வீட்டுக்கு போய் மாத்திட்டு வந்திடலாமானு இருக்கு...'' என்று சொல்லிக்கொண்டே இருந்தான். இதில் என்ன அவமானம் வந்துவிட்டது என்று எல்லோருமே கேட்டாலும் அவன் விடாமல் சொல்லிகொண்டே இருந்தவன், ஒரு கட்டத்தில் கடுப்பாகி வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.

அந்த நண்பனைப்போலவேதான் என்னைப்போன்ற பல ஆண்களும் பெண்களோடு தன்னை எவ்விதத்திலும் ஒப்புமைப்படுத்தி சொல்வதை எப்போதும் எந்த சந்தர்ப்பத்திலும் விரும்புவதேயில்லை. அது அவமானப்படுத்துகிற ஒரு செயலாக எப்படியோ பொதுபுத்தியில் பதிந்துவிட்டது.

இருபாலர் பள்ளிகளில் கூட பெண்களோடு ஒப்பிட்டுப் பேசுவதை பையன்கள் யாருமே விரும்புவதில்லை. பத்தாம்வகுப்புத்தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டான் என்பதற்காக வருத்தமே படாத பள்ளி நண்பன் அவன். ''பக்கத்துவீட்டு பெண்ணை பார்த்தாச்சும் திருந்துடா அவ பாரு அவ்ளோ மார்க் எடுத்திருக்கா'' என்று தகப்பன் திட்டியதற்காக தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனான். அவனை பிணமாக கிடத்தி வைத்திருந்த அந்த நேரத்தில் ''என்ன இருந்தாலும் அவன் மானஸ்தன்டா'' என எங்கள் நண்பர்கள் எல்லாம் வியந்து பேசி இருக்கிறோம்.

வீட்டில் பெண்களை காட்டி ''இவளை நான் ஆம்பளை மாதிரி வளர்த்திருக்கேன்'' என்று சொல்வதை பெருமையாக நினைக்கிற பெற்றோர்களில் யாருமே மகனைக்காட்டி ''இவனை நாங்க பொண்ணு மாதிரி வளர்த்திருக்கோம்'' எனச்சொல்வதில்லை. நம்முடைய குழந்தை வளர்ப்பே அந்த லெவலில்தான் இருக்கிறது. தன் மகள் அப்பாவின் அண்ணன்களின் கணவனின் சட்டைகளை அணிந்துகொள்வதை எப்போதும் தாழ்வாக நினைக்காத நாம்தான், அதே பையன்கள் அக்காவின், அம்மாவின் உடைகளை அணிவதை ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்.

இங்கே எங்கும் எப்போதும் ஆண்களை பெண்களோடு ஒப்பிட்டுவிடகூடாது. பெண்கள் செய்கிற செயல்களை ஆண்கள் செய்துவிடக்கூடாது. அது வீட்டுவேலைகளாக இருந்தாலும் சரி... கதை கவிதை எழுதுவதாக இருந்தாலும் சரி.

அறிவியக்கமாகவே இருந்தாலும் இங்கே ஒரு ஆண் எழுத்தாளரின் படைப்புகளை இன்னொரு பெண் எழுத்தாளரின் படைப்புகளோடு ஒப்பிட்டு பேசி எங்குமே பார்க்க முடியாது. சினிமாவிலும் கூட அதே நிலைதான். நயன்தாராவின் நடிப்பை கமலஹாசனோடு தனுஷோடு ஒப்பிடமாட்டோம். த்ரிஷாவோடும் அனுஷ்காவோடும்தான் போட்டி! ஹாலிவுட் வரைக்கும்கூட இதே பாணிதான். எப்போதுமே துறை ஒன்றாகவே இருந்தாலும் ஆணுடைய திறமை வேறு... பெண்ணுடைய திறமை வேறுதான். காரணம் பெண்கள் வலிமையற்றவர்கள், அறிவற்றவர்கள், அரசியல் தெரியாதவர்கள், அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் ஆணை அண்டி பிழைப்பவர்கள் என்பது நமக்குத் திரும்ப திரும்ப போதிக்கப்படுகிறது.

எந்த ஆணும் தன்னை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டுக்கொள்ளவோ அவரோடு போட்டிபோடவோ விரும்புவதில்லை. அப்படி நடக்கிற பட்சத்தில் அதிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளவே விரும்புகிறான். அல்லது அந்த பெண் தன்னை மீறி வளரும் போது அவளுடைய திறமைக்கு வெளியே அவளுக்கு எதுவெல்லாம் சாதகமாக இருந்தது என்கிற தேடலில் முழ்கிப்போகிறான். சொல்லப்போனால் பெண்களே கூட தன்னை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டுக்கொள்வதை விரும்புவதில்லை. அவர்கள் எப்போதும் ஆண்களோடுதான் போட்டிபோட விரும்புகிறார்கள். ஆண்களைத்தான் உண்மையான போட்டியாளர்களாக கருதுகிறார்கள்.

இங்கே எல்லா ஆண்களுக்கும் பெண்களோடு வாழவேண்டும். அதுவும் மனைவியோடு ரகசியமாக மல்ட்டிபிள் தோழிகளும் என்றால் சுகானுபவம்தான். ஆனால் எந்த ஆணும் பெண்களைப்போல வாழவிரும்புவதில்லை. அவன் பெண்ணியவாதிகளை கூட ஏற்றுக்கொள்வான். அவர்களை நன்றாக ஊக்கப்படுத்துவான். ஆனால் எல்லாமே தன்னை விலக்கிக்கொண்டுதான். அது எல்லாமே நிபந்தனைகளுகுட்பட்டது. தன் குடும்பத்தினருக்கும் காதலிக்கும் அப்பாற்ப்பட்டது.

அதனால்தான் அவனால் ஒரே நேரத்தில் ஆல்பர்பஸ் அங்கிளாக மாறி ''நைஸ் தோழி'' கமென்டுகளையும் போட முடிகிறது. இன்னொரு பக்கம் மகளிர் தின வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்ள முடிகிறது. இதற்கு நடுவே ஸ்கான்டல் வீடியோ ஏதாவது வந்திருக்கிறதா என தேடலுடன், இன்பாக்ஸில் ''இன்னைக்கு என்ன ட்ரெஸ் போட்டிருக்கீங்க'' மாதிரியான சாட்டிங் தொல்லைகளையும் தொடரமுடிகிறது.

பெண் என்பவள் ஆடு,மாடுபோல வேறொரு ஜீவராசி அல்ல... அவளும் என்னைப்போலவே ஒரு சக உயிர் என்று பார்க்கிற ஒருவனால் மட்டும்தான் அந்த ஜீவனோடு தன்னை ஒப்பிட்டுக்கொள்வது சாத்தியமாகும். ஆனால் அதை சாத்தியமாக்குவது ஆணுக்கு மாத்திரமே சாத்தியமல்ல. காரணம் ஆணின் ஒவ்வொரு அணுவிலும் ஆணாதிக்க மனோபாவம் பல்லாயிரம் ஆண்டுகளாக சேமிக்கப்பட்டிருக்கிறது. அதை மீறுவதென்பதோ அதற்கெதிராக செயல்படுவதென்பதோ அத்தனை சுலபமல்ல. வெவ்வேறு அரசியல் அழுத்தங்களால்தான் அவன் அதிலிருந்து மீளவும் பெண்ணை சரிசமமாக நடத்துகிற மனோபாவத்திற்கு நகரவும் முயல்கிறான். அதோடு இந்த நகர்தலும் கூட பெண்ணின் துணையின்றி சாத்தியமும் அல்ல. அப்படிப்பட்ட பெண்களால்தான் நானும் என்னை ஆணாதிக்கத்தின் அழுத்தங்களில் இருந்து விடுவித்துக்கொள்ள முயற்சி செய்கிறேன்.