Pages

10 January 2023

நீலக்கை

 நீலக்கை

-அதிஷா

எங்கிருந்தோ இடைவிடாமல் டப்… டுப்… க்யீஈஈஈங் டப்… என்ற ஒலி சீரான இடைவெளியில் கேட்டுக் கொண்டேயிருந்தது. இன்னும்கூட இழுத்துப்போர்த்திக்கொண்டு கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள் லட்சுமி. போர்வையின் ஊடாக புகுந்து, அந்த ஒலி விடாமல் கேட்டுக்கொண்டேயிருந்தது. தூக்கம் கலைந்து விழித்து மெதுவாக எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்தாள். தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கு அணைந்திருந்தது. அப்பா அருகில் திரும்பிப் படுத்திருந்தார். 

அப்பாவின் தலையணைக்கு வெளியே பீடிக்கட்டும், தீப்பெட்டியும் விலகி வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன. அருகில் முக்கால்வாசி எரிந்து அணைக்கப்பட்ட பீடிகள் கிடந்தன. வீடு முழுக்கப் புகையாக இருப்பதைப் போலிருந்தது. கண்களை உள்ளங்கையால் கசக்கினாள். அம்மாவைக் காணோம். வேலைக்குப் போயிருப்பாளாயிருக்கும். வெளியே பட்டாசு ஒலி அதிகமாக கேட்டது. 

இன்று பள்ளி விடுமுறை. விடுமுறை நாளில் லட்சுமி சீக்கிரமே எழுந்து விடுவதை வழக்கமாக்கியிருந்தாள். குடிசையிலிருந்து வெளியே வந்தாள். வாசலில் இருந்த சிமெண்டு தொட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்த பயோரியா பல்பொடியில் கொஞ்சம் எடுத்து உள்ளங்கையில் கொட்டிக்கொண்டாள். மேலே, தீச்சுவாலை ஒன்று பாய்ந்து வெடித்துப் பின் மஞ்சளாக குடைபோல ஒளிபரப்பி மறைந்தது. பல்பொடி லேசாக உவர்க்க துப்பினாள். 

பெரிய குளத்தின் நீண்ட கரையெங்கும் நிறைந்திருந்த ஏகப்பட்ட குடிசைகளை, ஒவ்வொன்றாக கடந்து நடக்கத் துவங்கினாள். சாலையின் ஒருபக்கம் குடிசைகள், மறுபக்கம் ஓட்டு வீடுகள். ஓட்டு வீடுகளைத் தாண்டினால் கோட்டைமேடு மிகப்பெரிய ஊராக விரியும். குடிசைகளை பார்த்துக்கொண்டே நடந்தாள் லட்சுமி. 

வேலைக்கு போய்விட்டு வரும்போது ஜிலேபி கொண்டு வருவதாக அம்மா நேற்று சொன்னது நினைவுக்கு வந்தது.. குடிசை வீடுகளில் ஒன்றின் வாசலில் ஒரு குட்டிப்பையன் தன்னந்தனியாக பொட்டுப் பட்டாசுகளை திண்ணையில் வைத்து, சிறிய கல்லால் குத்திக் குத்தி வெடித்துக் கொண்டிருந்தான். கொஞ்சதூரம் போனதும் மசூதி ஒன்றைக் கடந்தாள். 

கோயிலை, தேவாலயத்தை, மசூதியைக் கடக்கும்போதெல்லாம் நெற்றியில் தொடங்கி மார்பகங்களின் இரண்டுபக்கமும் கைகளை கொண்டுசென்று, வாயருகே வலது கை ஆட்காட்டிவிரலை மடக்கி முத்தம் கொடுப்பதைப்போல ’ப்ச்’ என்று சொல்வதை, லட்சுமி படித்த பள்ளிக் குழந்தைகள் வழக்கமாகக்கொண்டிருந்தனர். லட்சுமியும் அதையே செய்து கொண்டாள். 

மசூதியைத் தொட்ட முதல் சந்து நேராக குளத்திற்கே செல்லும். அந்த மிகக்குறுகிய சந்தில் மூன்றாவது குடிசை ரசூலுடையது. செங்குத்தாக இறங்கும் பாதை வழவழப்பாக இருந்தது. வழுக்கி விடாமல் மெதுவாக காலடி எடுத்துவைத்து முன்னோக்கி நடந்து, ரசூலின் வீட்டு வாசலில் நின்று மெலிதாக குரல்கொடுத்தாள். ‘’ரசூல்.. ரசூல்..’’

‘’ஏய் உள்ளே வாடி’’ ரசூலின் உம்மா குரல். மெதுவாக அந்த மரக்கதவை தள்ளி உள்ளே நுழைந்தாள். ரசூலின் வீடு லட்சுமியுடையதையும் விட, அளவில் மிகவும் சிறியது. மூலையில் உம்மா விறகடுப்பை சிறு உலோகக் குழாயால் ஊதிக்கொண்டிருந்தாள். அதிலிருந்து ங்ங்ங்ங்ங் என்ற ஒலியும், நிறைய புகையும் வந்துகொண்டிருந்தது. 

உம்மாவையும், அடுப்பையும் பார்க்க பாம்புக்கு முன்னால் அமர்ந்துகொண்டு மகுடி வாசிக்கிறவனைப்போல இருந்தது. புகையும் கூட பாம்பைப்போல அடுப்பின் மீதிருந்த கரிய சட்டியை சுற்றி, ஒட்டிக்கொண்டு வெளியேறி மேலே படமெடுத்துக் கரைந்தது. 

உம்மாவுக்கு அருகே விரித்திருந்த பாயில் ரசூல் குப்புறப் படுத்திருந்தான். தலையணையெல்லாம் ஈரமாக இருந்தது. அது தலையணை முழுக்கவும் படர்ந்திருந்தது. அவன் வாயிலிருந்து எச்சில் வழிந்து, கன்னத்தில் வெண்ணிறக் கோடாகத் தெரிந்தது. அருகில், இரண்டாம் வகுப்பு தமிழ்நூலும் கிடந்தது. வாப்பாவைத் தேடினாள். ‘’அவன எழுப்புடி.. எப்டி தூங்கறான் பாரு’’ உம்மா சொல்லிக்கொண்டே, பானையில் கரண்டியை விட்டுக்கிண்டினாள். 

‘’கஞ்சி குடிக்கறியா?’’ என்றாள் உம்மா. வேண்டாம் என்பதைப்போல தலையசைத்தாள் லட்சுமி. ரசூலின் முதுகைத் தட்டி ‘’ரசூல்.. ரசூல்..’’ என்றாள். அவன் திரும்பி, லட்சுமியின் முகத்தைப் பார்த்தான். பின் புன்னகைத்தான். ‘’இச்சுமி..’’ என்றான். எல்லோருக்கும் அவள் லட்சுமி. ரசூலுக்கு எப்போதுமே அவள் இச்சுமிதான். ‘’இன்னைக்கு ஸ்கூலு லீவில்ல..’’ என்றான். ஆமா! என்பதாக தலையை ஆட்டினாள். ‘’இரு வாறேன்’’ என்று தன்னுடைய கையில்லாத பனியனையும், நீலநிற யூனிபார்ம் டவுசரின் பின்புறத்தையும் தட்டிக்கொண்டே ஓடினான். 

‘’ஏண்டி உங்கம்மா இன்னைக்கும் வேலைக்கு போயிருக்காளா..?’’ கரண்டியை பானைக்குள் துளாவியபடி கேட்டாள் உம்மா. 

‘’காலம்பர சீக்கரமே போயிருச்சு போல உம்மா.. ஆளக்காணோம்’’ என்று சொல்லிக்கொண்டே, இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள். 

ஆர். ரசூல் 2ஆம் வகுப்பு, பி பிரிவு, நல்ல ஆயன் பள்ளி என்று எழுதப்பட்டிருந்தது. புரட்டினாள். மயில் பற்றிய பாடம் இருந்தது. அது அவளுக்கு மிகவும் பிடித்த பாடம். மயில் நம் தேசியப்பறவை. பெண்மயிலுக்கு பீலி இல்லை. ஆண்மயிலுக்கு நீண்ட தோகை உண்டு… புத்தகத்திலிருந்த மயில் படத்துக்கு கீழே இச்மி என்று ரசூல் எழுதியிருந்தான். அதற்கு அடுத்த திருப்பூர் குமரன் பாடத்திலும் இச்மி என்று எழுதியிருந்தான். வரட்டும் இச்மி இச்மினு ஏண்டா எழுதின? என்று கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். 

ரசூல் உள்ளே ஓடிவந்தான். முகங்கழுவியிருந்தான். அவன் ஓடும்போது இரண்டு கைகளையும் சைக்கிள் ஓட்டுவது போல வைத்துக்கொண்டுதான் ஓடுவான். அவனைப்பார்த்து லட்சுமியும், அப்படி ஓட கற்றுக்கொண்டிருந்தாள். ரசூலிடம்தான் அவள் நிறைய கற்றுக்கொண்டாள். 

அவன்தான் அவளுக்கு பெரியகுளத்தின் குப்பைமேட்டிலிருந்து தீப்பெட்டி அட்டைகளையும் சிகரட் அட்டைகளையும் வேண்டிய அளவுக்கு எடுக்க கற்றுக்கொடுத்தான். கொட்டு வைக்கும்போது விரல்களை மடக்கி, அதில் முத்தமிட்டு எச்சில் துப்பி, தொடையில் வைத்து அழுந்த தேய்த்து, பின் நடுமண்டையில் குறிபார்த்து கொட்டுவதற்கு, பென்சில் முனையை தரையில் வைத்து தேய்த்து கூராக்க, பாட புஸ்தகங்களுக்கு தினத்தந்தி பேப்பரில் அட்டைபோட, இரண்டு கண்களையும் கொண்டு, மூக்கை உற்றுநோக்கி டோரிக்கண் வரவழைத்து மற்றவர்களை வியப்பில் ஆழ்த்த, கண் இமைகளை மேல்நோக்கி மடித்துக்கொண்டு பூச்சாண்டி காட்ட, சீனிப்புளியங்கா மரத்தில் இனிப்பான சிவப்பு பழங்களை மட்டும் பறிப்பதற்கு, 

டவுன்ஹாலில் இருக்கிற டிவி கடைவரைக்கும் போய் கூட்டத்தோடு நின்று மகாபாரதம் பார்க்க, மசூதியில் வரிசையில் நின்று கறிக்கஞ்சி வாங்கி குடிக்க, ஆபிதா ஹோட்டலில் இரண்டு ரூபாய்க்கு பரோட்டா வாங்கி தின்ன என நிறைய நிறைய கற்றுக்கொடுத்தான். 

‘’அல்லா.. ஒருவா கஞ்சியாச்சும் குடிச்சிட்டு போங்களேன்டா’’ என உம்மா உரக்கச்சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்களிருவரும் வெளியே ஓடினர். குடிசையை விட்டு வெளியே வந்ததும் இருவரும் சாலையை பொறுமையாக கடந்து சாமியார் புதுவீதி வழியாக கோட்டைமேட்டின் பிரதான பாதையில் நுழைந்தனர். ‘’ரசூலு ராமசாமி நாயக்கர் வீதிக்கு மட்டும் வேணான்டா.. அங்க மாமா வீடிருக்கு.. அம்மா அங்க போக கூடாதுனு சொல்லிருக்கு’’ என்று தயங்கி தயங்கி சொன்னாள் லட்சுமி. 

‘’சரி இச்சுமி நாம வண்டிகாரன் வீதிக்கு போலாம்..’’ என்று கோபமாக சொன்னான். ராமசாமி நாயக்கர் வீதியில்தான் நிறைய பேர் முந்தைய நாள் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். இச்சுமியின் இடது கை சுண்டுவிரலை பிடித்துக்கொண்டான். இருவருமாக வண்டிக்காரன் வீதியில் நுழைந்தபோது நன்றாக விடிந்து விட்டிருந்தது. தெருவெங்கும் தேங்காய்த் துருவலைப்போல காகிதங்கள் நிரம்பியிருந்தன. காகித குப்பைகளுக்கு நடுவே சரக் சரக் என காலை நுழைத்துக்கொண்டு இருவரும் நடந்தனர்.

பட்டாசு மருந்து நெடி காற்றில் நிறைந்திருந்தது. ‘’இச்சுமி இந்தாப்பாரு’’ என்று கீழே கிடந்த வெடிக்காத பட்டாசு ஒன்றைக் காட்டி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். லட்சுமியும் இதுபோல சில சிகப்பு நிற ஊசிப்பட்டாசுகளைப் பொறுக்கி தன் சிம்மிஸ் பாக்கெட்டில் ரொப்பிக்கொண்டாள். 

நான்கு வீடுதள்ளி, மிகநீளமான சரவெடியை எடுத்துவந்தனர். அது கூடைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாம்பைப்போல இருந்தது. அதை உருட்டி நீட்டினர். முனையின் திரி கிள்ளி பற்றவைத்தான் சதீஷ். ரசூலின் பள்ளியில் படிக்கறவன். லட்சுமிக்கும் அவனைத் தெரியும். ஏனோ இன்று அவர்களைக் கண்டும் காணாதது போல, பட்டாசு வெடிப்பதில் மும்முரமாக இருந்தான். 

அவன் கையில் இருந்த ஊதுபத்தியை அவனுடைய அப்பாவும் சேர்த்துப் பிடித்திருந்தார். இருவரும் புத்தம்புது ஆடைகளை அணிந்திருந்தனர். ‘’சாமீ நிறைய பட்டாசு புஸ்ஸா போகணும்.. சாமிசாமி’’ என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டாள் லட்சுமி. மீண்டும் சிலுவை குறியிட்டு ஆட்காட்டி விரலை மடக்கி முத்தமிட்டாள். 

அப்பாவும், மகனுமாக மெதுவாக திரியில் தீயை ஒட்டவைக்க.. ஒட்டிக்கொண்ட நெருப்புத்துளி பற்றி அப்படியேபட்டுப்பரவி வெடிக்கத்தொடங்கியது. வீட்டுக்கு எதிரில் நின்ற லட்சுமி காதை அழுத்திப்பொத்திக்கொண்டு, இடுப்பை வளைத்து திரும்பி நின்றாள். ரசூல் வீரமாக அப்படியே அசட்டையாக, நெஞ்சை நிமிர்த்தி, அதை பார்த்துக்கொண்டு நின்றான். 

வெடித்து முடித்ததும். ரசூல் ஓடிச்சென்று சரவெடியில் வெடிக்காத பட்டாசுகள் ஒன்றிரண்டைப் பொறுக்க ஆரம்பித்தான். லட்சுமி தயங்கி தயங்கி நின்றாள். சதீஷின் அப்பா கோபமாக ரசூலை பார்த்தார். பிறகு லட்சுமியையும் பார்த்தார். அவர் மாமாவின் நண்பர். 

‘’நீ சித்ரா மகதான.. என்னடி இது துளுக்கப்பயலோட திரியற..’’ என்று ஏதோ கத்துவது சன்னமாக கேட்டது. சுற்றி வெடிச்சத்தம் பரவியிருந்தது. ‘’டேய் போடா.. இந்தப் பக்கமெல்லாம் வரக்கூடாது.. போ..’’ என்று சதீஷின் அப்பா ரசூலை விரட்டினார். 

‘’டேய் பட்டாசெல்லாம் உள்ளே பத்திரமா வைய்யி’’ சத்தம்போட்டார் அப்பா. சதிஷ் ஓடிப் போய் வாசலில் வைத்திருந்த பட்டாசு பாக்கெட்டுகளை ஒரு வயர் கூடையில் போட்டு உள்ளே எடுத்துச்சென்றான். 

ரசூல் அதையெல்லாம் கண்டுகொள்ளாதவனாய் ‘’வா இச்சுமி போலாம்’’ என்றபோது லட்சுமிக்கு மனசுக்குள் விவரிக்கமுடியாத மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருந்தது. சினிமாவில் நாயகியை மீட்டு அழைத்துச்செல்லும் நாயகனைப்போல ரசூல் தோன்றினான். சுண்டுவிரலை பிடித்து இழுத்துக்கொண்டு வண்டிக்காரன் வீதி முழுக்க பட்டாசுகளை பொறுக்கினார்கள். 

பெருமாள் கோவில் வீதியின் எல்லையில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு பின்னால் லாரிகள் நிற்குமிடத்தில் கதவு பூட்டப்பட்ட, ஒரு கடை வாசலில் வந்து அமர்ந்தபோது சூரியன் உச்சிக்கு வந்திருந்தான். 

இரண்டு பாக்கெட்டுகளிலும் இருந்த பட்டாசுகளை மொத்தமாக கொட்டினான். சிகப்பும் மஞ்சளுமாக விதவிதமான பட்டாசுகள். சில பட்டாசுகளில் திரி சிறியதாக இருந்தது. சில பட்டாசுகளில் திரியே இல்லை. சில பட்டாசுகள் வெடிக்க முடியாமல் திணறி செத்துப்போயிருந்தன. ஒவ்வொன்றையும் பிரித்தான். சின்ன திரி உள்ள பட்டாசுகளை தீப்பெட்டியின் உதவியோடு வெடிக்கச்செய்தான். சில வெடிகள் பற்றிக்கொள்ளும் முன்பே வெடித்தாலும் ரசூல் தைரியமாக அருகிலேயே நின்றான். 

இந்த ரசூல் எதுக்குதான் பயப்படுவானோ என நினைத்தாள். சில பட்டாசுகளைக் கையிலேயே பற்றவைத்து தூக்கி வீசி வெடித்தான். ஓவ்வொரு முறையும் பட்டாசினை பற்றவைத்ததும் காதைப்பொத்திக்கொண்டு கண்களை இறுக மூடி உடலைக் குறுக்கி, அது வெடிப்பதற்கு காத்திருந்தாள் லட்சுமி. ரசூல் வேண்டுமென்றே பற்றவைக்காமல் அவள் அப்படி செய்வதை காரணமின்றி ரசித்தான். 

கிடைத்த பட்டாசுகளில் வெடிக்க முடிந்தது போக, மீதியை பிரித்து ஒரு செய்தித்தாளை குப்பையிலிருந்து பொறுக்கி அதில் கொட்டி சேகரித்தான். லட்சுமியும் தன் பங்கிற்கு பட்டாசுகளிலிருந்த மருந்தினைக் கொட்டினாள். ரசூலின் கைகள் முழுக்க பட்டாசு மருந்து நிறைய அப்பியிருந்தது. அது சூரிய ஒளியில் பட்டு, கண்ணனின் கரிய நீலநிற கைகளைப் போல் மின்னியது. 

‘’ரசூலு உன் கை சூப்பரா மின்னுது’’ என்று மின்னுங்கண்களோடு சொன்னாள் லட்சுமி. பட்டாசுகளை பிரித்தபடி ‘’ஆமா’’ என்றான் ரசூல். ‘’கிஸ்ணர் கை மாதிரி இருக்கு..’’ என்றாள். ‘’கிஸ்ணர் கை இப்படிதான ப்ளூகலர்ல மின்னும், அன்னைக்கு மகாபாரதத்துல பார்த்தம்ல’’  

அவள் சொல்ல சொல்ல ரசூல் ஆமோதிப்பதைப்போல தலையசைத்தான். கைமுழுக்க அந்த பட்டாசு துகள்களை அப்பிக்கொண்டான். லட்சுமியும் தன்பங்குக்கு தன் சின்னக்கைகளால் பட்டாசு மருந்தை அள்ளி கொஞ்சம் அவனுடைய கைகளில் தேய்த்துவிட்டாள். இப்போது கையில் ஒரு சின்ன இடைவெளி கூட இல்லாமல் அவன் கைகள் மின்னின. 

லட்சுமி சிரிக்க.. ‘’நல்லாருக்கா இச்சுமி.. நல்லாருக்கா இச்சுமி’’ என்று கையை தூக்கிக்காட்டி ஆர்ப்பரித்தான் ரசூல். கீழே கிடந்த ஒரு நீண்ட ராக்கெட் குச்சியை எடுத்து புல்லாங்குழல் இசைப்பதைப்போல வைத்துக்கொண்டு நான்தான் கிஷ்ணர் என்று சிரித்துக்கொண்டான். ‘’அப்ப நான்தான் கிஷ்ணர் பொண்டாட்டி’’ என்று சிரித்துக்கொண்டாள். 

‘’பசிக்குது ரசூல்’’ என்று வயிற்றை தொட்டுக்காட்டினாள். ‘’ராமசாமி நாயக்கர் வீதில போயி இன்னும் கொஞ்சம் பட்டாசு எடுப்போம் இச்சுமி.. அங்கே நிறைய வெடிப்பாங்க..’ என்று கெஞ்சினான். பயமாக இருந்தாலும் ரசூலுக்காக சரியென்று ஒப்புக்கொண்டு பெருமாள் கோவில்வீதி தாண்டி, பழையமார்க்கெட் வழியே ராமசாமி நாயக்கர் வீதியை அடைந்தாள். 

மதியமாகிவிட்டபோதும் இன்னமும் பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருந்தனர். பையன்கள் பட்டாசுவெடித்துக்கொண்டும், இனிப்புகளை தின்றபடியும், புத்தாடைகளோடு நின்றனர். 

‘’ரசூல் இன்னைக்கு எல்லார் வீட்லயும் நிறைய பட்டாசு வெடிக்காமப் போகணும்னு நீ வேண்டிக்க’’ என்றாள் லட்சுமி. ‘’நாங்க முஸ்லீம்ல எங்களுக்கு தீவாளி கிடையாது இச்சுமி, அதனால வேண்டினாலும் வேஸ்டுதான்’’ என்று வருத்தமாகச் சொன்னான் ரசூல். 

‘’ஆமாண்டா ச்சே’’ என்று லட்சுமியும் அவனோடு சோகமானாள். ‘’சரி விடுடா நான் மட்டும் வேண்டிக்கறேன்’’ என்று அவனைத் தேற்றினாள். 

இங்கும் தினத்தந்தி பேப்பரைக் கிழித்துப் போட்ட மாதிரி தெருவே நிறைந்திருந்தது. பட்டாசு நெடி மணந்தது. ஒரு பையன் பெரிய சைஸ் பட்டாசு ஒன்றை பற்றவைக்க, இருவரும் காத்திருந்தனர். ‘’புஸ்ஸா போணும் புஸ்ஸா போணும்..’’ மனதிற்குள் மந்திரம் போல ஜெபிக்க ஆரம்பித்தாள் லட்சுமி. ஆனால், டமால் என வெடித்தது. இது மற்ற பட்டாசுகளை விட அதிக சப்தத்தோடு வெடித்தது. 

‘’இது என்ன பட்டாசு?’’ ஆர்வத்தோடு கேட்டாள். 

‘’இது லச்சுமி வெடி.. சும்மா நங்குனு வெடிக்கும் தெரியுமா இச்சுமி’’ என்று பேசிக்கொண்டே காத்திருந்தனர். அந்தப் பையன் ஒரு புஸ்வாணத்தை எடுத்து வந்து, நடுத்தெருவில் வைத்தான். ‘’டே! பகல்ல வைக்காத ஒண்ணுமே தெரியாது’’ என்று அவனுடைய அக்கா கத்தினாள். அந்தப் பையன் கேட்பதாக இல்லை. 

குவிந்துகிடந்த காகிதக்குப்பைகளுக்கு நடுவே இடம் ஒதுக்கி, அதை மத்தியில் வைத்தான். ஒரு மத்தாப்பு டப்பாவிலிருந்து குச்சியை எடுத்து பற்றவைத்தான். ரசூலும், லட்சுமியும் அதை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர். 

மத்தாப்பிலிருந்து வெளியான அடர்த்தியான பச்சையும், சிகப்புமான நெருப்பு புஸ்வாணத்திலும் பற்றிக்கொள்ள… பையன் திரும்பி வாசலுக்கே ஓடினான். ஆனால், அது லேசாக கொஞ்சமாக தீயை அரை அடிக்கும் குறைவாக கக்கிவிட்டு அடங்கியது. பையன் அருகில் வந்து மெதுமெதுவாக நெருங்கி ஒரு கல்லை தூக்கி அதை அடித்தான். அது அப்படியே இருந்தது. அருகில் வந்து கால்களால் தட்டிவிட்டான். அது ஓரமாக போய் விழுந்தது. ரசூல் அந்த புஸ்வானத்தை நோக்கிச்சென்றான். 

லட்சுமியின் மாமா எங்கோ கிளம்பி சைக்கிளுடன் வெளியே வந்தார். லட்சுமியைப் பார்த்ததும் முறைத்தார். பின்னால் புத்தாடை அணிந்து அமர்ந்திருந்த, அவருடைய குட்டிப்பையனும் காரணமேயில்லாமல் முறைத்தான். ‘’உங்கம்மா எங்க..? இங்கே என்ன பண்ற..?’’ சைக்கிளில் அமர்ந்தபடி ஒரு காலை ஊன்றிக்கொண்டு மிரட்ட ஆரம்பித்தார். லட்சுமி மழுங்க மழுங்க விழித்தபடி நின்றாள். ‘’உங்கம்மாக்காரி எங்க..? எத்தன மொற சொல்லிருக்கேன் தனியாத்திரியாதன்னு’ மேலும் திட்டினார். புஸ்வாணத்தை எடுக்கும் முனைப்போடு சென்றுகொண்டிருந்த ரசூல் மெதுவாக மாமாவை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும், புஸ்வாணத்தை எடுக்க குனிந்தான். லட்சுமி எதுவுமே பேசாமல் தலைகுனிந்து நின்றாள். மாமா முறைத்தபடி நின்றார். 

ரசூல் புஸ்வானத்தை கையில் எடுத்தான். அவனுடைய கைகளில் ஏறியதும் ராமனின் கால்பட்ட அகலிகைக்கு உயிர்வந்தது போல அந்த புஸ்வானம் சன்னமாக மூச்சுவிட்டது. அது தன் கூர்மையான வாயிலிருந்து கரகரவென்னும் ஓசையுடன் அவன் பனியனை நோக்கி தீப்பொறிகளை துப்பத்தொடங்கியது. 

அதிர்ந்துபோய் புஸ்வாணத்தை தூக்கியெறிந்தான் ரசூல். சில நொடிகள்தான்.., அவனுடைய இரண்டு கைகளை தீ பற்றிக்கொண்டிருந்தது. ‘’ஐய்யோ இச்சுமி.. ‘’ என்று அவன் கத்தியதுதான் கேட்டது. மாமா பதறினார். சைக்கிளிலிருந்து கீழே இறங்கினார். சைக்கிளின் முன்தண்டில் இணைக்கப்பட்ட குட்டி சீட்டிலிருந்து பையனை இறக்கினார். அதற்குள் கை முழுக்க தீப்பற்றிக்கொண்டு, தகதகவென வெவ்வேறு விதமாக ஒளிகளை பாய்ச்சியவாறு எரிந்துகொண்டிருந்தது. லட்சுமிக்கு அது இரண்டு நீண்ட தடியான கம்பித்திரிகள் எரிவதைப்போல் இருந்தது. 

மாமா அவசரமாக குனிந்து மண்ணை அள்ளினார் அவனுடைய கைகளில் போட. ஆனால் அதற்குள்ளாக ரசூலே சுதாரித்துக்கொண்டு அருகிலிருந்த சாக்கடையில் தன் கைகளை முக்கினான். அருகிலிருந்த வீடுகளில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தவர்கள் கூடிவிட்டனர். 

அவனைச் சிலர் சாக்கடையிலிருந்து தூக்கினர். லட்சுமி அவன் அருகே வந்து கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கைகள் முழுக்க சாக்கடை அப்பி, ஈரமாகி கருத்திருந்தது. ஒவ்வொருவரும் ஏதேதோ முணுமுணுத்தனர். ‘’டேய் ஏர்ரா..’’ என்று அதட்டினார் மாமா. மாமா அவனைச் சைக்கிளில் அமரவைத்துக்கொண்டார். 

‘’லச்சுமி இவனை வீட்ல விட்ரு’’ என்று அதட்டிச் சொல்லி விட்டு எங்கோ விரைந்தார். மாமாவின் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த ரசூல் அழுதபடி, தெருமுனை கடக்கும்வரை லட்சுமியையே பார்த்துக்கொண்டிருந்தான். 

அடுத்தநாள் காலையில் ரசூல் எங்கோ போய்விட்டிருந்தான். வாப்பாவிடம் கேட்டாள். அவனை பாலக்காட்டுக்கு அனுப்பிவிட்டதாக சொன்னார். அங்கே அவனுடைய மாமா வீட்டில் தங்கி வைத்தியம் பண்ணப்போவதாக சொன்னார். மூலையில் கிடந்த இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகம், இன்னமும் அங்கேயேதான் கிடந்தது. 

********* 

‘’வேற்றுமையிலும் ஒற்றுமை’’, ‘’வேற்றுமையிலும் ஒற்றுமை’’, ‘’வேற்றுமையிலும் ஒற்றுமை’’ என்று பத்தாம் வகுப்பு குடிமையியல் பாடத்தை மனப்பாடம் செய்துகொண்டிருந்த போதுதான், காக்கியுடை போலீசார் லட்சுமியின் குடிசைக்குள் தொப் தொப்பென்று நுழைந்தனர். தங்களுடைய நீண்ட லத்தியால் உள்ளே கிடந்த பொருட்களை தட்டிப்பார்த்தனர். அவசரமாக எழுந்து, தன் தாவணியை அனிச்சையாக சரிசெய்துகொண்டு நின்றாள் லட்சுமி. ‘’பாப்பா வெளியே போம்மா’’ என்று காக்கி உடையணிந்த வயதான கான்ஸ்டபிள் சத்தமிட்டார். 

பதறிப்போய் அவசரமாக வெளியே வந்து நின்றாள் லட்சுமி. வெளியே ஒரு பதட்டமான சூழல் இருப்பதை உணர முடிந்தது. ஆயிரக்கணக்கான போலீஸார் அந்த குடிசைகளை முற்றுகையிட்டிருந்தனர். அவளைப்போலவே பலரும் வீட்டை போலீஸிடம் கொடுத்துவிட்டு வாசலில் நின்றனர். 

ஊரில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து சில தினங்களே ஆகியிருந்தது. பள்ளிகளுக்கு பத்துநாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஊர் முழுக்க ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். எங்கும் நூற்றுக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். சில வீடுகளிலிருந்து ஜெலட்டின் குச்சிகள், ஆர்டிஎக்ஸ் எல்லாம் கைப்பற்றப்பட்டதாக செய்தித்தாள்களில் லட்சுமி படித்திருந்தாள். 

பொதுத்தேர்வு நெருங்கிக்கொண்டிருந்ததால், இந்த விடுமுறைநாட்கள் படிப்பதற்கேற்றதாக இருந்தன. பகலெல்லாம் படித்துக்கொண்டேயிருந்தாள். கான்ஸ்டபிள்கள் மொத்தமாக வெளியே வந்தனர். ஒரு போலீஸ்காரர் உள்ளே ஒன்றுமில்லை என்று கையை ஆட்டி, சைகையில் கூற, அடுத்த வீடுகளுக்குள் புகுந்து மீண்டும் தேடுதலைத்தொடங்கியது காவல்துறை. 

லட்சுமி வீட்டுக்குள் நுழைந்தாள். பெட்டியிலிருந்த அவளுடைய உடைகள் வெளியே எறியப்பட்டிருந்தன. அவை வீடுமுழுக்க பூசணிக்கொடிகளைப்போல படர்ந்திருந்தன. கொடியில் கிடந்த துவைத்த உடைகளையும் இழுத்து தரையில் எறிந்திருந்தனர். வீட்டிலிருந்த சாமிப்படங்கள் மட்டும்தான் காவல்துறையின் தொந்தரவுக்கு ஆளாகாமல் சிரித்த முகத்துடன் காட்சியளித்தது. கிருஷ்ணர் தன் புல்லாங்குழலுடன் பசுவுக்கு முன்னால் ஒய்யாரமாக நின்றார். அவசரமாக ஓடிப்போய் அரிசிவைத்திருந்த குண்டாவில் கையை விட்டுத்தேடிப்பார்த்தாள் லட்சுமி.

அதிலிருந்த முப்பது ரூபாயை காணவில்லை. எப்படிப்போய் யாரிடம் கேட்பது? கஷ்டப்பட்டு சேர்த்து வைத்தது. சனிக்கிழமை ரேவதியோடு காதலுக்கு மரியாதை பார்க்கலாம் என்று வைத்திருந்த பணம். இனி அம்மாவிடம் காசுகேட்டால் உதைப்பாள். 

அப்பா இறந்த பிறகு, அம்மாதான் ஒற்றை ஆளாக குடும்பத்தைத் தாங்கினாள். தம்பியையும் லட்சுமியையும் படிக்க வைக்கவேண்டும் என்று உழைத்தாள். படிக்கணும் அவ்ளோதான்.. நல்ல மார்க் எடுக்கணும்.. இல்லாட்டி செறுப்பு பிஞ்சிடும் இதுதான் அம்மாவின் நிரந்தரமான வசனங்களாகிவிட்டன. தினமும் ஒருமுறையாவது இதைச் சொல்லவில்லையென்றால், அம்மாவால் தூங்கவும் முடியாது. 

லட்சுமிக்கு இருந்த ஒரே ஆறுதல் ரேவதிதான். ரசூலின் குடிசைக்கு அடுத்த குடிசை ரேவதியுனுடையது. ரசூல் பாலக்காட்டுக்குச் சென்றபின், ரேவதிதான் நிரந்தரமாக லட்சுமியோடு சுற்ற ஆரம்பித்தாள். ரசூல் வீட்டை கடக்கும்போதெல்லாம், ஒருமுறை எட்டிப்பார்ப்பாள், அவனைக்குறித்து விசாரிப்பாள். எட்டாண்டுகளில் ஓரிரு முறை ரசூல் வீட்டிற்கு வரும்போது பார்த்திருக்கிறாள். ஆனால், முன்புபோல ரசூல் சரியாக பேசவில்லை. ‘’எந்தா இச்சுமி.. நல்லா வளந்துட்ட’’ என்று மலையாளம் கலந்து பேசுவான். இரண்டுமுறை பார்த்தபோதும், அதையேதான் சொன்னான். பாலக்காட்டிலேயே தங்கி தன்னுடைய மாமாவின் போத்து இறைச்சிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னான். 

கைநிறைய சம்பளம் தறார் மாமா.. அவர்ட கடைல நான்தான் எல்லாம் என்று பெருமையாகச் சொன்னான். அவ்வளவுதான் உரையாடல். அவனுக்கு எல்லாமே மறந்துவிட்டிருந்ததாக அவள் நினைத்து கலங்குவாள்.

போலீசார் தேடிக்கொண்டிருந்த குடிசைகளை பார்த்தபடியே விறுவிறுவென நடந்து நேராக ரேவதியின் வீட்டுக்குச் சென்றாள். ரசூலின் குடிசையை தாண்டிச்செல்லும்போது அவனுடைய வீட்டு வாசலில் நிறையவே காலணிகள் கிடப்பதை கவனிக்கத் தவறவில்லை. விருந்தாளிங்க வந்திருப்பாங்க போல.. என நினைத்தாள். ரசூலுக்கு பெண் பார்க்கிறார்களோ? என சந்தேகித்தாள். ரேவதியின் வீட்டுக்கதவை தள்ளினாள். திறந்துகொண்டது. 

உள்ளே குடிசைக்கு நடுவில், ரேவதி தூங்கிக்கொண்டிருந்தாள். ‘’ஏ சோம்பேறி எழுந்திருடி. இவளே‘’ என்று எழுப்பினாள். தாவணி விலகி மார்புகள் தெரியப்படுத்திருந்த ரேவதி அதிர்ந்து போய், வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். உடைகளைச் சரிசெய்துகொண்டு, கண்களைக் கசக்கியபடி ‘’என்னடி இந்த நேரத்துல..’’ என்றாள். போலீஸாரின் திடீர் வரவு குறித்து சொன்னாள் லட்சுமி. முப்பது ரூபாயை பற்றித்தான் சோகமாகச் சொன்னாள். ரேவதி ஓடிப்போய், அவசரமாக தன்னுடைய பையிலிருந்த ஜியாமன்ட்ரி பாக்ஸில் இருந்த இரண்டு பத்துரூபாயை எடுத்து, அவசரமாக பச்சைநிற ஜாக்கெட்டிற்குள் வைத்துக்கொண்டாள். 

‘’ஏன்டி காசெல்லாமா எடுக்கறானுங்க’’ என்று புருவம் உயர்த்தி கேட்டாள் ரேவதி. 

‘’ஆமாண்டி.. பாம் இருக்கானு செக் பண்றானுங்களாம்.. விட்டா இதான் சாக்குனு பிள்ளைக பாவடைய கூட தூக்கிப்பாப்பானுங்க போல’’ 

‘’நேத்து ஷைலு வீட்டுக்கு பின்னால இருந்தான்ல அந்த பையன் என்னமோ பேரு.. மன்சூரு.. அவனைக்கூட புடிச்சிட்டு போய்ட்டாங்களாம்.. ரொம்ப அழகாருப்பான்’’ ரேவதி வருந்தினாள். மன்சூரை ரேவதிக்கு ரொம்பவும் பிடிக்கும்.  

‘’ரசூல் வீட்ல என்ன விசேஷமா.. கூட்டமாருக்கும்போலருக்கே’’ என்றாள். ‘’தெரிலடி.. காலைலருந்து நிறையபேர் வந்துட்டு போயிட்டிருந்தாங்க.. ரசூல் வந்திருப்பான் போல’’ என்று ஆர்வமேயில்லாமல் சொன்னாள். 

ரசூல் வந்திருக்கிறானா! உடனே போய் அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. பூப்படைந்த பின் தான் அழகாகிவிட்டதாக அம்மா சொன்னது காரணமேயில்லாமல் நினைவுக்கு வந்ததும். குடிசைக்கு நடுவில் அமர்ந்திருந்தவள் அவசரமாக எழுந்து சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில், முகம் பார்த்தாள். 

சிகப்பும், மஞ்சளுமாக ஃப்ரேம் போட்ட அந்தக்கண்ணாடியில், அவள் முன்னெப்போதும் இருந்ததைவிட அழகாயிருந்தாள். தன் உடைகளைச் சரிசெய்துகொண்டாள். பூவைத்திருக்கலாமோ? என்று தோன்றியது. ‘’ரேவதி ரசூல் வீட்டுக்குபோயி உம்மாவ பார்த்துட்டு வந்துரேன்’’ என்று விருட்டென வாசலுக்கு வந்தாள். ரேவதி அவள் சொல்வதை காதில் வாங்காமல் கடுகு டப்பாவில் வைத்திருந்த, நான்கு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து ஜாக்கெட்டிற்கு திணித்துக்கொண்டிருந்தாள். 

அவளை கவனிக்காமல் வாசலுக்கு வந்தாள் லட்சுமி. வாசலில் போலீஸ்காரர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவருடைய கையிலிருந்த வாக்கிடாக்கியில் கரகரப்பான குரல் குட்மார்னிங் சார் என்று எதையோ சொல்லிக்கொண்டிருந்தது. அந்த கரகர குரலிலிருந்து ரசூல் என்கிற பெயரை மட்டும் அவள் வடிகட்டிக்கொண்டாள். ரசூலுக்கு என்ன? என்று உடனடியாக மனது தவித்தது. 

ரசூலின் வீட்டு வாசலில் இன்னும் கூட நிறைய போலீஸ்காரர்கள் நின்றுகொண்டிருந்தனர். ‘’யார் நீ’’ என்று லட்சுமியையும் அவர்கள் விசாரித்தனர். ‘’நான் உம்மா.. ரேவதி..’’ தடுமாறினாள் லட்சுமி. ‘’யார் வேணும் உனக்கு.. இங்கே என்ன பண்ற.. பேர் என்ன’’ அடுக்கடுக்காக கேள்விகளை குவிக்க.. லட்சுமி மேலும் நிலைகுலைந்தாள். உள்ளே உம்மாவின் பெருங்குரல் கேட்டது. ‘’அய்யோ என் புள்ளைய விட்ருங்கோ..’’ என்கிற கதறல் அவளுக்கு மெலிதாகக் கேட்டது. 

நாலைந்து போலீஸ்காரர்கள் கொத்தாக வெளியே வர நடுவில் ரசூல். அவனுடைய சட்டை காலரைப் பிடித்திருந்தனர். 

அவனுக்கு லேசாக மீசை முளைத்திருந்தது. இன்னும் கொஞ்சம் உயரமாகியிருந்தான். இதழ்கள் சிவப்பாகியிருந்தன. தோள்கள் இரண்டும் அகன்று, கம்பீரமாக நிமிர்ந்திருந்தன. புருவங்கள் அடர்த்தியாயிருந்தன. சின்னதாக பங்க் வைத்திருந்தான். குங்குமக்கலர் சட்டை அணிந்திருந்தான். கொஞ்சம் உடம்புபோட்டிருக்கிறான் என்று தோன்றியது. ‘’போடா.. ராஸ்கல்.. இங்கே வந்து ஒளிஞ்சிகிட்டா எதுவும் தெரியாதா’’ அவனை பிடித்து சாலையில் தள்ளினர். லட்சுமியின் கண்களில் கலங்கியிருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். 

விழும்போது அவனுடைய கண்கள் லட்சுமியை கவனிப்பதைப் போல் இருந்தது. அவனுடைய கன்னங்கள் கைத்தடங்களால் ரத்தச்சிவப்பாய் இருந்தன. உதட்டோரம் சிவந்து கறுத்திருந்தது. இடதுகண் இமைகள் லேசாக வீங்கியிருந்தன.

மடித்துவிடப்பட்ட சட்டைக்கு வெளியே முழுக்க தழும்புகள் அடர்ந்த கைகள் நீண்டிருந்தன. அவை அட்லஸில் பார்த்த தக்காணபீடபூமியைப்போல இருந்தன. அந்த சுருக்கங்கள் கையெங்கும் பரவி அவன் உடல்முழுதும் கூட பரவியிருக்குமோ என்று எண்ண வைக்கும்படி படர்ந்திருந்தன.

‘’சார்… இது பட்டாசு காயம்.. சார்.. நம்புங்கசார்.. அந்த பாய் வீட்டுக்கு எறச்சிதான் கொண்டுபோய் கொடுத்திருக்கேன். வேற எதுவும் தெரியாது சார்… பாய் பாய்.. நீங்களாச்சும் சொல்லுங்க பாய்..’’ கையைக்கூப்பி கண்களில் நீர்வழிய கெஞ்சினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முஸ்லீம் பெரியவர், தன் வலதுகையின் இரண்டுவிரல்களால் கண்களை நசுக்கிகொண்டு நின்றார். லட்சுமி தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள். இன்னமும், கைகளை கூப்பி ரசூல் மன்றாடிக்கொண்டிருந்தான். மண்ணில் கிடந்தவனை நாலைந்து போலீஸ்காரர்கள் அள்ளிக்கொண்டுபோய் வெள்ளைநிற வாகனமொன்றில் கொட்டினர். அல்லாஹ் அல்லாஹ் என்று அவன் அழும் ஓசை அந்த இடத்தை நிரப்பிக்கொண்டிருந்தது. 

உம்மா வாசலில் கிடந்தாள். அவளுடைய தலைமுக்காடு விலக விலக அதை சரிசெய்துகொண்டே.. உரக்க கத்தி அழுதுகொண்டிருந்தாள். உள்ளே வாப்பா அமைதியாக அமர்ந்திருந்தார். அவருடைய தலையில் ரத்தம் வழிந்து அப்பிக்கொண்டிருந்தது. வெள்ளை வாகனம் கிளம்பிச்சென்றது. அதில், மேலும் பல இளைஞர்கள் இருந்தனர். அவர்களுடைய குடும்பத்தினர் வண்டிக்கு பின்னால் வெறிபிடித்தது போல ஓடினர். சிலர் உள்ளிருந்து உம்மா.. உம்மா என்று கத்துவது கேட்டது. 

லட்சுமி உம்மாவைத் தூக்கினாள். ‘’பட்டாசு காயம் பட்டாசு காயம்னு எவ்வளவோ சொல்லியும்.. அவனுங்க கேக்கலையே’’ என்று அம்மா லட்சுமியை கட்டிக்கொண்டு அழுதாள். ரேவதி ஒரு எவர்சில்வர் சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து உம்மாவுக்கு கொடுத்தாள். உம்மா அதை குடிக்க மறுத்தாள். உம்மா சாலையையே பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைத்து குடிசைக்குள் அமரவைத்தனர். வாப்பா ஓரமாக குத்துகாலிட்டு அமர்ந்திருந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. ரத்தம் வழிந்து முகத்தில் படர்ந்திருந்தது. அதில் மண் ஒட்டிக்கொண்டிருந்தது. 

வெள்ளத்தினால் உருக்குலைந்த வீட்டைப்போல, குடிசை முழுவதுமே கலைத்துப் போடப்பட்டிருந்தது. ரசூலுக்காக சமைத்த பிரியாணியும் இறைச்சியும் தரையில் சிதறிக்கிடந்தன. தரையில் சில இடங்களில் ரத்தத்துளிகள் பரவியிருந்தன. அது ரசூலினுடையதாக இருக்கலாம். லட்சுமியின் கண்களை நீர் நிறைத்திருந்தது. 

*********** 

இச்சுமி என்கிற குரலைக்கேட்டதும் அதிர்ந்துபோய் குரல் வந்த திசைநோக்கித்தேடினாள். ஆயிரக்கணக்கான குரல்களின் இரைச்சல்களுக்கு நடுவே ஒலித்த தனிக்குரல். பத்தாண்டுகளுக்கு பிறகு கேட்கிற குரல். கிராஸ்கட் ரோடில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்திருந்தனர். அந்த பட்டாசுக் கடையில் எப்படியும் ஐநூறுபேராவது கையில் நீண்ட பட்டியலை வைத்துக்கொண்டு, எனக்கு இரண்டு பாக்கெட் ஊசிவெடி, மூணுபாக்கெட் பெரிய கம்பித்திரி என கத்தி, கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் அந்த குரல் கேட்டது.. இச்சுமி… இங்கே.. இங்கே….. 

அது கடைக்குள்ளிருந்து வந்தது. உள்ளே, முன் தலை வழுக்கையாக ஒல்லியாக ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அந்தக்குரல் அவனுடையதேதான். அவன் ரசூலேதான். 

வெளியே வா என்பதைப்போல கையை உயர்த்தி வலதுஇடதாக ஆட்டி ஆட்டி கைகாட்டினான். அவனும் வெளியே வர கிராஸ்கட் ரோடிலிருந்து இறங்கி அருகிலிருந்த சின்ன சந்துக்குள் திரும்பினர். மூலையிலிருந்த ஜூஸ்கடையில் நின்றனர். 

மெலிந்திருந்தான். கன்னங்கள் ஒட்டிப்போய், கண்கள் உள்ளே போய் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. நெற்றியின் துவக்கத்தில் கருத்த மச்சம் போன்ற வட்டமான அடையாளமிருந்தது. வாப்பாவுக்கு இதே போன்ற மச்சம் உண்டு. அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்தான். கருத்திருந்தான். மெலிந்திருந்தான். அழுக்கு சட்டையும், பழைய ஜூன்ஸும் அணிந்திருந்தான். அவனுடைய முகத்தின் லட்சுமியை கண்ட உற்சாகமும் பூரிப்பும் நிறைந்திருந்தன. 

‘’இச்சுமி.. எப்படி இருக்க.. பையன் யாரு.. உம்பையனா.. உன்னை மாதிரியே இருக்கானே.. நீ சின்னதா இருக்கும்போதே இதேமாரிதான இருப்ப.. மூக்கொளிக்கிட்டு..சிம்மிஸ் போட்டுகிட்டு.. வீட்டுகார் என்ன பண்றாரு.. நீ எப்படி இருக்க.. அம்மா எப்படி இருக்கு, இப்போ எங்கே இருக்க வீடு மாத்திட்டப்போல.. ’’ கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான். 

லட்சுமி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பேச எத்தனித்தும் வாயிலிருந்து வார்த்தைகளை பிடித்து இழுக்க வேண்டியிருந்தது. விரல் பிடித்து நின்றுகொண்டிருந்த குட்டிப்பையன் ரசூலை முறைத்துக்கொண்டு நின்றான். ‘’டேய் உன் பேரென்ன.. எத்தனாவது படிக்கற’’ என்று கன்னத்தை கிள்ளினான். பையன் இன்னும் அதிகமாக முறைத்தான். லட்சுமி எதுவுமே பேசாமல் அவனை பார்த்தபடி நின்றாள். அவளுக்கு அவனிடம் பேச வேண்டும் போல்தான் இருந்தது. பேச எத்தனித்தாலும் ஏனோ உடல் ஒத்துழைக்கவில்லை. அவனுடைய கண்களையே பார்த்துக்கொண்டு நின்றாள். 

‘’இச்சுமி ஒம்போது வருமாகிடுச்சு... இப்பதான் எம்மேல தப்பில்லைனு கண்டுபிடிச்சாங்களாம்.. நான் நல்லவன்னு சொல்லி வெளிய போடானு விட்டுட்டாங்க.. என்னென்னமோ நடந்துபோச்சு.. எல்லாமே மாறிடுச்சு.. வெளிய வந்தா எல்லாமே மாறிப்போயிருக்கு.. ஜெயிலுக்கு போகும்போது வெறுங்கையோடு சுத்தினவங்க இப்பல்லாம் வெத்தலப்பெட்டி மாதிரி செல்போனை தூக்கிட்டு அலையறாங்க.. கோயம்புத்தூரே மாறிப்போச்சு இச்சுமி.. நீகூட மாறிட்ட.. பெரிய பொம்பளை மாதிரில்ல ஆகிட்ட.. சின்ன வயசுல உம்மாவ பாத்த மாதிரி இருக்க.. சேலைலாம் கட்டிகிட்டு’’ பேசிக்கொண்டேயிருந்தான். லட்சுமி கண்சிமிட்டவும் மறந்து போயிருந்தாள். அவனுடைய கருவிழி விரிந்தும் அடங்கியும் அதிர்ந்தும் அலைபாய்ந்தும்… பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

‘’பொழப்புதான் ஒன்னும் செட்டாவ மாட்டேனுது.. எங்கியாச்சும் வேலைனு போய் நிக்க முடில.. அப்படியே எதுனா வேலைல சேந்தாலும் போலீஸ்காரங்க தொல்ல.. டிசம்பர் ஆறாந்தேதி வருதா ஒருவாரம் முன்னாடியே புடிச்சிட்டு போய் உக்காத்தி வச்சிடறானுங்க.. அத்வானி வராப்லயா.. அவர் பேர் என்னவோ அவர் வராப்லயா.. புடிச்சி வை உள்ளாறனு.. வீட்டுக்கே வந்துடாறங்க போலீஸ்காரங்க… எங்கயோ வடநாட்ல குண்டுவெடிச்சிதுன்னா போதும்.. அவங்களுக்கு மொத்தல்ல நம்ம நினைப்பு வந்துடும்… உள்ளயும் வெளியவுமா போகுது பொழப்பு.. என்னத்தச்சொல்ல, கிடைச்ச வேலைய செஞ்சிட்டு.. ’’ துக்கித்தான். 

‘’உனக்கு எப்போ கல்யாணமாச்சு.. என்ன இச்சுமி.. பேசவே மாட்டேன்ங்குற.. சரி உன் போன் நம்பர் குடு.. அப்புறமா கூப்ட்றேன்..கடைக்கு வா.. நம்ம யூசூஃப் மச்சான் தெரியும்ல.. ரேவதி வீட்டுக்கு அடுத்த வீடு.. அவன் கடைதான்.. என்ன பட்டாசு வேணுமோ எடுத்துக்கோ..’’ படபடத்தான். அவனுடைய இமைகள், தலைதிருகி எறியப்பட்ட பறவையின் சிறகசைப்பை போல இருந்தது. 

தன் கழுத்தில் கயிறுகட்டி மாட்டி வைத்திருந்த ரப்பர் பேன்ட் சுற்றப்பட்ட பழைய செல்போனை பிதுக்கி வெளியே எடுத்து.. ‘’இதுல எப்படி நம்பர் போட்டுவைக்கிறதுனே தெரில இச்சுமி.. நீயே போட்டு வுட்ரு..’’ என்று கையை நீட்டினான். அந்த கைகளில் எங்கும் அங்கும் இங்குமாக கொஞ்சம் பட்டாசு துகள்கள் ஒட்டியிருந்தன.. அவற்றில் சூரிய ஒளிபட்டு லேசாக ஒளிர்ந்தன. ரசூலின் கைகள் மகனின் தலையை வருடிக்கொண்டிருந்தன..