Pages

20 February 2023

வெளியேற்றம்

 டேரன் அரோனோ­ஃப்ஸ்கி இயக்கி இருக்கிற ‘WHALE’ சென்னையில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்க முக்கியமான படம். பிவிஆர் சத்யம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே டவுன்லோடில் பார்த்திருந்தாலும் விஷயம் அறிந்து இன்னொரு முறை நண்பரோடு பார்க்க கிளம்பினோம். புகைப்பட கலைஞர் பிரபுகாளிதாஸும் எங்களோடு இணைந்துகொள்ள மூவருமாக திரையரங்கில் நுழைந்தால் யாருமே இல்லை. நாங்கள் மூவர் மட்டும்தான். இதுமாதிரி படங்களுக்கு அவ்வளவுதான் அதிகபட்ச கூட்டம் வரும்.

 

எங்களுக்கு பிறகு சில பையன்களும் பெண்களும் வந்தார்கள். கல்லூரி மாணவர்கள் போலிருந்தனர். எல்லோருமே வந்ததிலிருந்து படம் தொடங்கு முன் புகைவேண்டாம் விளம்பரம் வரும் வரை கூத்தும் கும்மாளமும்தான். பாப்கார்னை குட்ரா, செல்பி எட்ரா, டேய் தம்மடிச்சா இப்படிதான் வாய் கோணிக்கும், ரீல்ஸ் போடறேன் இரு, டேய் இவன்லாம் இன்னுமா நடிக்கிறான், ப்ரபோஸ் பண்ணப்போறியாடி என என்னென்னவோ காதில் விழுந்துகொண்டேயிருந்தது. கூடவே ஒரு அச்சமும் சேர்ந்துகொண்டது.

 

மாற்றுசினிமாக்களை பார்க்கும்போது காற்றின் உரசல் கூட கேட்காத சைலன்ஸ் தேவைப்படும். இடையூறு இல்லாத ஒளியும் ஒலியும் முக்கியம். அலைபேசி ஒளி கூட கண்ணுக்கு தொந்தரவுதான். திரைப்பட விழாக்களில் கிசுகிசுப்பாக சத்தம் போட்டால் கூட சினிமா ஆர்வலர்கள் கோபமாகி தாறுமாறாக திட்டிவிடுகிறார்கள். படம் ஓடும்போது பாதியில் குறுக்கே வந்து சேர் தேடுவது, நடுவில் எழுந்து போய் பாப்கார்ன் வாங்கிவந்து கொரக் கொரக் என கொரிப்பது, முன்னால் சீட்டில் காலை வைத்து உதைத்துக்கொண்டே இருப்பது என இதெல்லாம்  திரைப்பட அனுபவத்தை நாசம் பண்ணிவிடக்கூடியவை. திரைப்படங்களை நேசிப்பவர்களில் கறார் பேர்வழிகளால் இதையெல்லாம் சகித்துக்கொள்ளவே முடியாது.

 

இந்த கும்பல் பேசுவதையும் கன்றுக்குட்டிகளாக களித்திருப்பதையும் வைத்து பார்க்கும்போது கட்டாயம் பெரிய அளவில் வன்முறை சம்பவம் நடப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருந்தன. அதிலும் என்னோடு வந்திருந்த திரைப்பட ஆர்வலாதி நண்பர்கள் இருவருமே பெரிய வஸ்தாதுகள் என்பதால் என்னதான் ஆகப்போகிறதோ என்று காத்திருந்தேன்.

 

வேல் திரைப்படம் தன்னுடைய தவறுக்காக இழப்புக்காக குற்றவுணர்வில் தன்னை ஒரு சிறியவீட்டில் அடைத்துக்கொண்டு வெளியுலக தொடர்புகள் அற்று தன்னை தானே சிதைத்துக்கொள்கிற ஒரு மனிதனை பற்றியது. பிடிக்காத வாழ்வை தேர்ந்தெடுத்து அதனால் பலரையும் துன்பத்திற்குள்ளாக்கியவனின் கதை இது. ஒரு பெரிய இழப்புக்கு பிறகு குற்றவுணர்ச்சியும் துயரமும் ஒரு திமிங்கலமாக அவனுள்ளே வளர்கிறது. தன்னைதானே சுமக்க முடியாத அளவுக்கு அவன் எடை கூடியவனாக ஆகிவிடுகிறான்.

 

மனிதனின் அடிப்படை தேவையான உணவை தண்டனையாக மாற்றிக்கொண்டு தாறுமாறாக உண்ணத்தொடங்குகிறான். புராணங்களில் சபிக்கப்பட்டவர்கள் போல அவன் தின்று தீர்க்கிறான். அதை ஒரு நீண்ட சுயவதைப்பாதையாக மரணத்திற்கான வழியாக தேர்வுசெய்துகொள்கிறான். அத்தகைய மனிதனின் கடைசி ஏழு நாட்களை பற்றியும் அவனோடு தொடர்புள்ள மனிதர்களை பற்றியும் பேசுகிறது இத்திரைப்படம்.

 

மிகுந்த சோகத்தையும் மனச்சோர்வையும் படம் நமக்கு கடத்திக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப படத்தின் Aspect Ratio 4:30 அளவிலும், மிக அதிக க்ளோஸ் அப்களும், குறைவான ஒளிகொண்ட அறையும் என படம் பார்க்கும் நமக்கும் அந்த நாயகனின் துயரமும் மன அழுத்தமும் தொற்றிக்கொள்கிறது. படத்தில் சில நிமிடங்கள் வருகிற வீட்டு வாசல் கூட ஆசுவாசமாக இருக்கிறது. கொஞ்சம் கூட அவசரமில்லாத மிகமிகப்பொறுமையாக கதை சொல்கிற பாணி திரைப்படம் இது. மேடை நாடகமொன்றின் தழுவல் என்பது இன்னும் சிறப்பு! படம் நிச்சயம் நடிப்பு மேக்அப் இரண்டிலும் ஆஸ்கர் வெல்ல வாய்ப்புள்ளது.

 

இப்படிப்பட்ட படத்திற்கு ஏன் எனக்கு பின்னால் அமர்ந்திருந்த அந்த எட்டு பேரும் வந்திருந்தார்கள் என்பதுதான் எனக்கு புரியாத புதிராக இருந்தது. ஆரம்பத்தில் உலக சினிமா பார்க்கிற இன்ஸ்டா இளைஞர்கள் என்றுதான் நினைத்தேன். ஏனெனில் இன்ஸ்டாவில் இப்போதெல்லாம் உலகசினிமா ஆர்வல இளைஞர்கள் அதிகமாகிவிட்டார்கள். படக்காட்சிகளை துண்டுதுண்டாக நறுக்கி அதில் இசைசேர்த்து அதிகம் பகிர்கிறார்கள். அது அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.

 

ஆனால் இவர்கள் அவர்கள் இல்லை. படம் தொடங்கிய பிறகு அவர்களுக்குள் பேசிக்கொண்டதில் வேறு எதையோ எதிர்பார்த்து இந்தப்படத்திற்கு வந்துவிட்டது தெரிந்தது. ‘’என்னடா திமிங்கலமே வரல’’ என்று ஒரு பெண்குரல் கேட்டது அதை உறுதிப்படுத்தியது! ‘’டேய் இரண்டாயிரம் ரூவா போச்சா, டேய் குண்டா’’ என்றான் ஒருவன். ஒருத்தி காலை ஆட்டிக்கொண்டே இருந்தாள். அது என் சீட்டின் பின்பக்கம் அதிர்வை உண்டாக்கிக்கொண்டே இருந்தது. இன்னொருவன் காலியான தியேட்டரின் முன் சீட்களில் ஒன்றில் அமர்ந்து ரீல்ஸ் பார்க்கத்தொடங்கினான். அவ்வப்போது ஆவ் ஆவ் என்று வினோதமாக ஒலி எழுப்பினான். இன்னொருவன் டேய் போலாம்டா என்று பினாத்திக்கொண்டிருந்தான். யாருக்கோ பிறந்தநாள் என்பது புரிந்தது.

 

அவர்கள் மிகுந்த தொந்தரவுக்குள்ளாகிவிட்டனர். படம் அவர்களுக்கு புரியவில்லை. திரையில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கதையும் நகரவில்லை. படத்தை பார்க்கவும் முடியாமல் புலம்பத்தொடங்கினார்கள். இன்டர்வெல் வரைக்கும் தாக்குபிடித்து அமர்ந்திருந்தனர்.

 

இன்டர்வெல்லில் அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயங்களை வைத்து நானாக புரிந்துகொண்டது, கல்லூரி மாணவர்கள் யாரோ ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட திரையரங்குக்கு வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் மொத்தமாக இருபது அல்லது இருபத்தைந்து பேர். பாதிபேர் அதே நாளில் வெளியான பிரபல நடிகரின் தமிழ் படத்திற்கு போய்விட்டார்கள். இந்த க்ரூப் தங்களை பெரிய இதுவாக கருதிக்கொண்டு ஐ வாட்ச் ஒன்லி வோர்ல்ட் சினிமாப்பா என இங்கே வந்து சிக்கி இருக்கிறார்கள்.

 

இன்டர்வெல்லில் இரண்டு பேர் மட்டும் யப்பா நீங்களே பாருங்க எங்களால முடியாது என பக்கத்து அரங்கில் ஓடுகிற பிரபல நடிகரின் தமிழ் படத்திற்கு சென்றுவிட்டார்கள். மால்களில் இப்படி படம் பார்ப்பது சாத்தியம். பிடிபடாமல் இருந்தால் பாதி பாதியாக இரண்டு படங்களை பார்த்துவிடலாம்.

 

மீதி ஆறுபேரும் விடாப்பிடியாக கடைசிவரை அந்த திமிங்கலம் வருமோ என்று காத்திருந்தார்கள். படம் முந்தைய பாதியைவிட இன்னும் மோசமாக மாறத்தொடங்கியது. படம் இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க அழுத்தம் அதிகரிக்கவே தொடங்கி இருந்தது. கூடவே ஆறுபேருக்கும் அதுவே நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருவன் என்னுடைய சேரின் மீது சாய்ந்து கொண்டு தூங்கத்தொடங்கிவிட்டான். இவர்கள் கிசுகிசுப்பாக பேசிக்கொண்டே இருந்தாலும் அது ஏனோ நண்பர்களை தொந்தரவு செய்யவில்லை!

 

இந்த பையன்களை பார்க்க பரிதாபமாக இருந்தது. நானும்கூட பத்தாண்டுகளுக்கு முன்பு இத்தகைய திரைப்படங்களில் சென்று மாட்டிகொண்டு கதறி இருக்கிறேன். திரைப்பட விழாக்களுக்கு சென்று உலக சினிமா அறிமுகமாகி இலக்கியங்கள் படிக்கத்தொடங்கிய பிறகுதான் இத்திரைப்படங்களை ரசிக்க கற்றுக்கொண்டேன்.

 

ஏன் நாம் நமக்கு பிடிக்காத ஒன்றிலிருந்து வெளியேற எப்போதுமே மிகவும் போராடுகிறோம். பிடிக்காத ஒன்றில் தேங்கி இருத்தல் என்பது நாட்பட நேரம் செல்ல செல்ல தீராக்காயங்களை உண்டாக்கி நமக்குள் ஒரு திமிங்கலமாக வளரத்தொடங்கிவிடுகிறது. அது நம்மை பாடாய் படுத்தவும் செய்கிறது. அது வேட்டையாடி ஓயும் வரை காத்திருக்கிறோம். இயற்கையாகவே நாம் ஏனோ ஒன்றிலிருந்து வெளியேற பழக்கப்பட்டவர்கள் இல்லை என்று நினைக்கிறேன். பிடித்துதான் தேர்ந்தெடுத்தெடுக்கிறோம். பணம் வீணாகும் என்று வெளியேறுவதில்லை, பிறர் மனம் புண்படும் என வெளியேறுவதில்லை. பிடிக்காத ஒன்றில் இருந்து வெளியேறுவது ஒரு நல்ல செயல். அது நம்முடைய நேரத்தை மன உளைச்சலை அவசியமற்ற கடுப்புகளை குறைக்க உதவும்.

 

சினிமா மட்டுமல்ல புத்தகங்கள், உணவு, விளையாட்டு என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் நாமோ வாங்கிவிட்டோமே என்று வேறு வழியின்றி தின்று வயிறு கெட்டுப்போய் கிடப்போம். உறவுகளுக்கும் கூட இது பொருந்தும். வெளியேறுதல் ஒரு கலை. வெளியேறுதலை கற்க வேண்டும்.

 

படம் முடிவதாகத்தெரியவில்லை. பையன்களும் கதறல்களை நிறுத்தவில்லை. படம் ஓட ஓட பக்கத்து அரங்கிற்கு சென்ற அந்த இரண்டுபேர் ஓடிவந்தார்கள். டேய் என்னடா திரும்பி வந்துட்டீங்க என்றாள் ஒருத்தி. ‘’அய்ய்யோ நீ வேற அதுக்கு இதுவே தேவலாம்… அவன் சுறாவுக்கே சுறாவா இருக்கான். அய்யோ கொடூரம்’’ என்றுவிட்டு திமிங்கலத்தோடு மீண்டும் சண்டையிட தொடங்கினார்கள்.

 

அந்த இருவரும் திரும்பி வந்தபிறகு கூட்டம் அமைதியாகிவிட்டது. படம் முடியும்வரை சத்தமே இல்லை.