மரணத்தின் வாயிலிலே-1
''சார் , நல்லாத்தான் சார் இருந்தான் , என்னாச்சுனு தெரில திடீருனு மார்ல கைய வச்சுகிட்டு மயங்கி விழுந்தவன் , எழவே இல்ல சார் , அவன மாதிரி ஒரு நண்பன் இனிமே எனக்கு கிடைக்க மாட்டான் சார் '' எனக் கண்களில் நீர் கசிய கூறிய படி அந்த இளவு வீட்டின் வாசலில் இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அவனது மேனஜர் சிவக்குமாரிடம் விளக்கிக் கொண்டிருந்தான் குமார் , அவன் இறந்து போன கிஷோர் உடன் பணிபுரிபவன் . இருவரும் ஒரே நிறுவனத்தில் மூன்று வருடங்களாக விற்பனை அதிகாரிகளாக வேலை பார்த்து வந்தனர் . எப்போதுமே இருவருக்கும் பலமான போட்டி நிலவும் , இருவரும் நேரில் சந்தித்தால் பேசிக்கொள்வதே அபூர்வம் .
'' நல்ல வேலைக்காரன் சார்!!! எவ்ளோ டார்கெட் குடுத்தாலும் சட்டுனு முடிச்சிட்டு வந்து அடுத்து என்னனு கேக்கறவன் சார் , வீ ரியலி மிஸ் ஹிம் சார் , ஐயம் வெரி சாரி சார் '' , சிவக்குமார் வருத்தத்துடன் கிஷோரின் அழுது கொண்டிருந்த தந்தை முத்துராமனிடம் ஆறுதலாக பேசினார் . தினமும் காலை,மாலை இரு வேளையும் கிஷோரைத் திட்டாவிட்டால் அன்றைய பொழுது சிவக்குமாருக்கு முழுமை பெறாது .
'' தவமாதவமிருந்து பெத்த புள்ளங்க , எங்களுக்கு கல்யாணமாயி ஆறு வருஷம் கழிச்சுப் பொறந்தவன் , எந்த கெட்ட பழக்கமும் இல்லங்க , இப்படி ஒருத்தன புள்ளயா பெத்ததுக்கு போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணிருக்கணும்ங்க !!!!! '' என சினிமா பாணியில் தன் பக்கத்து வீட்டு நண்பரிடம் உருகினார் தந்தை முத்துராமன் . அவர் ஒரு சினிமா கதாசிரியர் . மகனுக்கென்று தன் வாழ் நாளில் ஒன்றும் செய்யாதவர் , கிஷோர் வளர்ந்தது அவன் தாயின் உழைப்பில்தான் .
கிஷோரின் காலடியில் அவனது தாய் அமர்ந்து கொண்டு அந்த அறையே அதிர அழுது கொண்டிருந்தாள் , அவளிடம் பலரும் பேச முயன்றும் அவள் யாரிடமும் பேச மறுத்தாள் .
பிணத்திற்கு செய்ய வேண்டிய எல்லா சாங்கியங்களும் கிஷோருக்கும் செய்யப்பட்டது , அந்த சாவிற்கு வந்த கூட்டத்தில் அவனது காதலி சீலாவும் இருந்தாள் , ஆனால் தன் வருங்காலத்தை எண்ணியவளாய் மறைவாய் , தன் அடையாளத்தை காட்டாமல் , கூட்டத்தோடு கூட்டமாய் கண்களில் கண்ணீருடன் .
கிஷோரின் உடல் அவ்வூரின் வீதிகளின் வழியே எடுத்துச் செல்லப்பட்டது . வழியெங்கும் பலர் அவனது உடலைப்பார்த்து பாவமென்றும் , சிறு வயதென்றும் கூறியபடி நகர்ந்தனர் .
சுடுகாடு , விறகுகள் அடுக்கப்பட்ட அந்த மேடையில் கிஷோர் படுக்க வைக்கப்பட்டான் , அவன் மேலும் விறகுகள் அடுக்கப்பட்டன , அவனது தந்தைக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது , சில சம்பிரதாயங்களுக்கு பிறகு அவர் தோளில் பானை வைக்க பட்டு அதில் ஒரு துளையுமிடப்படுகிறது . நீர் கொஞ்சம் கொஞ்சமாக தரையில் விழ முத்துராமன் தன் மூன்றாவது சுற்றையும் முடித்தார் . ஒரு கற்பூரத்தை எடுத்து கிஷோரின் தலைமாட்டில் வைத்து பற்ற வைக்க , அந்த தீயின் ஜீவாலையிலிருந்து தன் கையிலிருந்த விறகை பற்ற வைத்து அதனை அந்த விறகு மேடையின் மேல் பற்ற வைக்க , அது கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாக பரவத்தொடங்கும் போதுதான் அங்கிருந்த அனைவரையும் உறைய வைக்கும் அது நடந்தது .
எரிந்து கொண்டிருந்த கட்டைகளுக்கு நடுவே இருந்து அலறிய படி கிஷோர் எழுந்து ஓடினான் ...........................
தொடரும்
___________________________________________________________________