Pages

26 August 2008

ரஜினியை தோற்கடித்த ஜே.கே.ரித்திஷ் - நாயகன் திரைப்பட அதிரடி சரவெடி விமர்சனம்

நாயகன் விமர்சனம் :

பல மாதங்களுக்கு முன்பே தயாராகி , தசாவதாரம்,குசேலன்,குருவி போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களின் வருகையால் , பல மாதங்கள் நல்ல திரையரங்குகளுக்காக காத்திருந்து சென்ற வாரம் வெளியாகியிருக்கிறது நாயகன் திரைப்படம் , எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி , ஜே.கே.ரித்திஷின் சேட்டைகளை மட்டுமே கண்டு ரசிப்பதற்காக மட்டுமே அந்த திரைப்படத்திற்கு செல்ல நேரிட்டது . அது தவிர இது ஆங்கிலத்தில் வெளியான CELLULAR திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்று நண்பர்கள் கூறியதால் , படத்தை பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் அதிகமானது .படத்தின் ஆரம்பகாட்சி இதுவரை எந்த பெரிய நடிகருக்கும் வைத்திடாத அளவுக்கு மிக பிரமாண்டமாகவும், அதை தொடர்ந்து ஜேகே ரித்திஷை புகழ்ந்து பல வேறு வேடங்களில் ( 15 வேடங்கள் ) அவரே பாடுவது போலவும் தொடங்குகிறது , முதல் 15 நிமிடங்கள் அந்த தேவையில்லாத பாடலால் எரிச்சலூட்டினாலும் , அதற்கு பிறகு வேகமெடுக்கும் திரைக்கதையும் , அதற்கேற்ற பாத்திரங்களின் நடிப்பும் , எரிச்சலூட்டாத பிண்ணனி இசையும் , நம்மை படத்தின் இறுதிவரை அடுத்து என்ன என்கிற ஆவலுடன் கொண்டு செல்கிறது .

படத்தின் மிக முக்கிய இரு பாத்திரங்களான சக்தி( ரமணா என்னும் புதுமுகம் ) மற்றும் சந்தியா ( '' உயிர் ''சங்கீதா ) மிக அற்புதமாக நடித்துள்ளனர் . படத்தின் வில்லனாக ஆனந்தராஜ் , பல நாட்களுக்கு பிறகு சிறப்பானதொரு வேடத்தில் அசல் ஆங்கில படத்தின் வில்லனை விட ஒரு பங்கு அதிகமாகவே நடித்துள்ளார் .

படத்தில் பாடல்கள் மிகசுமார் ரகமே , திரையரங்கில் பெண்கள் கூட பாடல் காட்சிகளில் வெளியில் செல்வதை காண நேரிட்டது . இசையமைப்பாளர் பாடல்களில் கோட்டை விட்டாலும் பிண்ணனி இசையில் பிளந்து கட்டுகிறார் . படத்தின் பிண்ணனி இசை ஒரு படத்தின் பிரமாண்டத்தை காட்ட எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார் , அவருக்கு பாரட்டுக்கள் .

படத்தில் தனியாக காமெடி டிராக் இல்லாத குறையை ஜே.கே.ரித்திஷ் நிவர்த்தி செய்கிறார் , படம் முழுக்க அவர் வரும் காட்சிகளில் மக்களின் சிரிப்பொலி விண்ணை பிளக்கிறது . முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு வடிவேலுவை மிஞ்சும் அளவுக்கு காமெடியில் கலக்குகிறார் . மலைக்கோட்டை படத்தில் வரும் வடிவேலுவின் சிரிப்பு போலீஸ் வேடத்திற்கே சவால் விடுகிறார் . அவர் பேசும் சீரியஸ் வசனங்களும் கூட நமக்கு வெடிச்சிரிப்பை ஏற்படுத்துகிறது .திரையுலகில் விஜயகாந்திற்கு ஒரு வாரிசு உருவாகிவிட்டது . இவருக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது , இனிவரும் படங்களில் முழு நகைச்சுவையை முயற்ச்சிக்கலாம் .( படத்தில் இவர் எதற்கு நடித்தார் என யாருக்குமே புரியவில்லை , படத்தில் இவர் வரும் காட்சிகளை நீக்கி விட்டு பார்த்தாலும் , படம் முழுமையாக இருக்கும் )

இவர்களைத்தவிர ராதாரவி,ஸ்ரீமன்,பாண்டியராஜன்,கீர்த்தி சாவ்லா என பலரும் தத்தமது வேடங்களை பாத்திரத்திற்கேற்றவாரு செய்துள்ளனர் .

எடிட்டிங் மற்றும் கேமரா பல இடங்களில் அசத்துகின்றன , காட்சிக்கேற்றாற்ப் போல நிறங்களை மிகச்சரியாக உபயோகித்த கேமராமேனுக்கு ஷோட்டு . இயக்குனர் சரவணசக்தியின் இயக்கம் மிக அருமை .

இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் நிச்சயம் அவருக்கு இன்னொரு கில்லியாக அமைந்திருக்கும் .

படத்தின் பாடல்கள் மட்டுமே மைனஸ் , மற்ற அனைத்தும் பிளஸ். படத்தில் தேவையில்லாத கவர்ச்சி மற்றும் வன்முறையில்லை என்பது மிகவும் பாராட்டுக்குரியது . லோ பட்ஜட் படங்களுக்கே உரித்தான கவர்ச்சி காட்சிகள் இல்லாதது மகிழ்ச்சியை தருகிறது . இது போல இன்னும் பல லோ பட்ஜட் படங்கள் வந்தால் முண்ணனி ஹீரோக்களின் டவுசர்கள் கழண்டுவிடும் .

இப்படம் நம் எதிர்பார்ப்பிற்கும் மேல் இரண்டரை மணிநேர சுவாரசியத்தை தருகிறது . படம் முடிந்து வெளியே வருகையில் நிச்சயம் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி அனைவர் மனதிலும் . பி & சி சென்டர் ரசிகர்களுக்காக சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த படம் இதுதான்.

மொத்தத்தில் நாயகன் - பேரை காப்பாற்றிவிட்டான்

இந்த படத்திற்கு எனது மார்க் 41/100 ( விகடன் மார்க்கோடு ஒத்து போனால் மகிழ்ச்சிதான் )

_____________________________________________________________________________________

சரி இதில் ரித்திஷ் எங்கே ரஜினியை தோற்கடித்தார் என நீங்கள் கேட்பது புரிகிறது , பாத்திரதேர்வில் வெற்றியடைந்திருக்கிறார் ரித்திஷ் என்பதே உண்மை , நாயகன் படத்தின் மிக முக்கிய பாத்திரமான சக்தியை தான் எடுத்துக்கொண்டு நடிக்காமல் தனக்கேற்ற ஒரு பாத்திரத்தையும் , தனக்காக கதையை கடித்து குதறாமல் அப்படியே படத்தின் கதையை படமாக்க உதவியமையாலுமே , அவர் ரஜினியை மிஞ்சுகிறார்.

அது தவிர கதை தேர்வு , என்னதான் தான் பணம் கொடுத்து நடித்தாலும் ( 10 கோடியாம் ) ஒரு நல்ல கதையை தேர்வு செய்ததில் ரித்திஷ் முன்னோக்கியே இருக்கிறார் . படத்திற்கு பணம் போட்டாலும் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமிக்காமல் இருந்தமையிலும் ரஜினியை வெல்கிறார் .

இது போல பல காரணங்களால் ரஜினி குசேலனில் செய்த பல தவறுகளை , தனது இரண்டாம் படத்திலேயே புரிந்து கொண்டிருக்கிறார் , இந்த விசயத்தில் ஜே.கே.ஆர் ரஜினியை முந்தி விட்டார் என்பது உண்மை .

___________________________________________________________________________________

ஒரு குட்டி பொதுநல அறிவிப்பு சென்னை நேயர்களுக்கு மட்டும் :
சென்னையில் இந்த வார இறுதியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி GIVE LIFE என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மாராத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது . இந்த மாரத்தான் ஓட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் , அதில் கலந்து கொள்ள ரூ.100 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது , மாணவர்களுக்கு ரூ.50 , இந்த தொகை ஆதரவற்ற அநாதை குழந்தைகளுக்கு செல்வதால் அனைத்து சென்னை மக்களும் இந்த மாரத்தான் ஓட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் . இதில் கலந்து கொள்ள நாம் நேரிலும் ஆன்லைனிலும் பதிவு செய்யலாம் .

அது பற்றிய விபரங்கள் மற்றும் கலந்து கொள்ள பதிவு செய்ய இங்கே செல்லவும்


நம்மாள் முடிந்த உதவிகளையும் அந்த நிறுவனத்தின் 13600 குழந்தைகளுக்கு வழங்கலாம் என அந்த நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் கூறப்பட்டுள்ளது .

நான் இந்த ஓட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளேன் , நீங்களும் ஓட இருந்தால் சனிக்கிழமை என்னிடம் தெரிவிக்கவும் .

சேர்ந்து ஓடலாம் வாங்க ஒரு நல்ல காரியத்துக்கு


____________________________________________________________________________________