Pages

12 August 2008

சிகரட்,ரசிகட்,சிரகட்,கசிரட், கரSHIT

அவன் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தது தனது 17 வயதில் , தன் நண்பர்களுடன் , ஜாலிக்காக ஆரம்பித்தான் , அது அப்போது அவனுக்கு பெருமையான ஒன்றாக , மற்ற நண்பர்களின் மத்தியில் ஒரு வீரத்தனமான செயலாக , உற்சாகம் அளிக்க கூடியதாக , இன்னும் சொல்லப் போனால் சக வயது பெண்கள் முன்னால் தன் வாலிபத்தின் வளர்ச்சியை காட்டுவதாக எண்ணி ஆரம்பித்த ஓன்றாகத்தான் இருந்திருக்கிறது .

கல்லூரியில் மற்றவரை ராகிங் செய்கையில் தன் வயதுக்கு குறைந்த வளர்ச்சியை மறைக்க சிகரட் உதவியது . அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு 3 முதல் 4 நான்கு சிகரட் மட்டும்தான் . கையிடுக்கிலிருக்கும் சிகரட் உதடிடுக்கில் போவதற்குள் அவன் செய்யும் சேஷ்டைகள் ஆயிரம் , அவனது ஆதர்ஷன கதாநாயகன் கையில் எப்போதும் இருக்கும் சிகரட் ,அவனுக்கும் அந்த நடிகனின் அந்தஸ்த்தை தன் சக நண்பர்களிடம் தருவதாய் எண்ணிருந்திருக்கிறான் .

சிகரட் பிடித்து வீட்டிற்கு சென்று பல முறை அவ்வாசனையால் வீட்டில் மாட்டிக்கொண்டு அடி வாங்கி , அடுத்த முறை வீட்டிற்கு செல்கையில் பாக்கு , பாஸ்பாஸ் , ஹால்ஸ் , சுவிங்கம் , கொய்யா இலை என கண்டதையும் வாயில் போட்டு மறைக்க முயன்று தோற்று போய் வீட்டிலிருந்து வெகு தூரத்தில் சென்று சிகரட் பிடித்து வாசனை மறைந்ததா என நண்பர்களிடம் உறுதி செய்து வீட்டிற்கு எத்தனை முறை சென்றிருக்கிறான் அவன் .

கல்லூரியின் மூன்றாண்டுகளில் அவன் பிடித்த சிகரட்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டும் , கல்லூரி அருகில் இருக்கும் கட்டாய டீக்கடையில் சிகரட் பிடிக்கும் பலருக்கும் இருக்கும் அக்கவுண்ட் அவனுக்கும் இருந்தது . பல முறை கடனை அடைக்காமல் நாயர்கடையில் திட்டு வாங்கி அசிங்கப்பட்டிருக்கிறான் , அப்போதெல்லாம் சே இனிமே தம் அடிக்கக்கூடாதென எண்ணிக்கொள்வான் . கல்லூரி முடிந்ததுமே வாய் பறபறக்கும் சிகரட்டுக்காய் .

கல்லூரி முடிந்து வேலை தேடுகையில் , ஒவ்வோர் முறை தோற்கும் போதும் சிகரட் மட்டும்தான் ஆறுதல் அளித்தது சாத்தானை போல . இதோ வேலை கிடைத்து விட்டது வெளியூரில் , வீட்டை விட்டு வெளியூரில் தனி அறையில் சில நண்பர்களுடன் , அப்போதும் அங்கேயும் நூழைந்துவிட்டான் அந்த சிகரட் சாத்தான் அவனுக்கு துணை என்று சொல்லிக்கொண்டு .
சமயங்களில் அவனுக்கு சளி அல்லது சுவாசக் கோளாறு வரும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு ஞானோதயம் பிறக்கும் , சிகரெட்டை நிறுத்திவிட , நோய் முக்கால்வாசி குணமாகும் போதே கைகள் அடுத்த சிகரட்டை பற்ற வைக்கும் . அவனும் மறந்துவிடுவான் .
வருடாவருடம் புத்தாண்டு பிறக்கும் போதெல்லாம் அவனும் சுடுகாட்டு சபதம் போல சபதம் எடுப்பான் இனி அடிக்கமாட்டேன் சிகரட்டை இனி தொடமாட்டேன் தீப்பெட்டியை என , புத்தாண்டு அன்று மாலையே பல முறை அந்த சாத்தானின் பிடியில் மாட்டிகொண்டு விழி பிதுங்கி வேறு வழியின்றி பைத்தியம் போல சபதத்தை மறந்து கிறுக்குதனாமாய் பிடித்து விட்டான் தங்க வடிகட்டியின் முனையை தன் இதழால் .

அவனிடம் நான் பலமுறை கேட்டதுண்டு ஏன் பொது இடத்தில் சிகரட் பிடிக்க தடை இருந்தும் பிடிக்கிறாய் என அவனது பதில் என் வாய் என்ன பொது இடமா என்பதுதான் , அரசாங்கத்தையும் சாடுவான் அரசாங்கம் சிகரட் விறபனையை தடை செய்ய சொல்லுவான் , அவனுக்கு நன்றாக தெரிந்தது , அவனால் அந்த சாத்தானை விட முடியாதென்று . அவன் வாய்பேச்சில் வீரன் பேசும் போது சுற்றுசூழல் மாசு பற்றியெல்லாம் பேசுவான் கையில் நிக்கோட்டின் தொழிற்சாலையை வைத்துகொண்டு .

அவன் ஒரு கிரிக்கெட் வீரன் இப்போதெல்லாம் சரியாக ஒடி ஆடி விளையாட முடிவதில்லை , முதியவனை போல மூச்சு வாங்கும் , எனக்கு தெரிந்த வரை அவனுக்கு ஆண்மைகுறைவு கூட இருக்கலாம் , அடிக்கடி சளித்தொல்லை வேறு , நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது . தோலில் மினுமினுப்பு குறைந்து பார்க்க கொஞ்சம் வயோதிகனைப்போல் அகிவிட்டிருந்தான் , புகையிலை எதிர்ப்பு நாள் என்றால் அவனுக்கு இலுப்பைபூ சர்க்கரை .

திருமணமானது மனைவிக்காக சரியாக மூன்று மாதங்கள் மூன்றே மாதங்கள் நிறுத்தினான் , ஆசை அறுபது நாளும் மோகம் முப்பது நாளும் முடிந்தது , மீண்டும் கிளம்பிவிட்டான் பெட்டிகடைக்கு சாத்தான் வாங்க ,
ஒரு குழந்தை அவனது வாழ்க்கையில் மாற்றத்தை நிகழ்த்தியது , தன் மகளுக்காக குறைத்து கொண்டான் , ஆனாலும் அந்த சாத்தானை விட முடியாமல் இப்போதெல்லாம் அவன் கவலை பட ஆரம்பித்து விட்டான் ,

முன்னெல்லாம் வருடத்திற்கு ஒரு முறைதான் சிகரட்டை விட முயற்சிப்பான், ஆனால் சமீப காலமாய் வாரம் ஒரு முறை முயற்சிக்கிறான் .
விளையாட்டாய் துவங்கிய இந்த சிகரட் விளையாட்டு இதோ இப்போது அவனை முழுங்கி நிற்கிறது , நான் இறைவனிடம் கேட்பதெல்லாம் அவன் சிகரட் பழக்கத்தை விட அவனுக்கு போதிய மனவீரம் தரவேண்டும் என்பதுதான் .
இதோ இந்த கதையை கூட அவன் கையில் ஒரு சிகரட்டை பிடித்த படிதான் எழுதிக்கொண்டிருக்கிறான் ,பல மாதங்களாய் இந்த வாரமாவது சிகரட்டை விட்டுவிட எண்ணி எண்ணி எண்ணி . ..........

__________________________________________________________________
சும்மா ஒரு குட்டி இன்பர்மேசன் .......

நாம அடிக்கிற சிகரட்டில என்னன்ன ஐட்டம் இருக்குனு ... என்சாய்... அப்புறம் இந்த வாரம் வெள்ளி கிழமைலருந்து சிகரட்ட விடலாம்னு இருக்கேன் . வலை நண்பர்களும் என்னோட சேர்ந்து விடறதுனாலும் விடலாம் . முக்கியமா ஒரு சமீபத்தில் கல்யாண அறிவிப்பு செஞ்ச ஒரு பால பதிவர் , அவரும் விட்டாருணா ரொம்ப சந்தோசம்.