Pages

28 September 2008

காதலும் கற்று மற(1) - தன்னம்பிக்கைத் தொடர் - நீங்களும் நல்ல பிகர்தான்.......!!!காதல் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை , இன்றைய மத்ய வயதினர் பலரும் சரியான ஒரு பிகர் செட்டாகாமல் வீட்டில் பார்த்து கிடைத்த பிகரை உள்ளங்கை நெல்லிக்கனியாய் நினைத்து அட்ஜஸ்ட் செய்து , பல அவதிகளுக்கு நடுவே பிடித்தது கிடைக்காமல் , கிடைத்ததும் பிடிக்காமல் ஒரு மொக்கையான வாழ்க்கையை வாழ்வதை நாம் பார்க்கலாம் . சரி இன்றைய இளைஞர்களுக்கு அப்படி ஒரு நிலை வேண்டுமா , அதனால் நம்மால் முடிந்த ஒரு சிறு உதவி ... இளைஞர்களே உங்களால் முடியும் , முயன்றால் முடியாதது எதுவம் இல்லை , உங்களது பலத்தை முழுமையாய் திரட்டுங்கள் , அப்போதும் முடியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது சிவராஜ் சித்த வைத்திய சாலை இழந்த சக்தியை அங்கே பெறலாமாம் .

சரி வழவழவென்று கண்டதையும் எழுதினால் பதிவு சுவாரஸ்யமில்லாமல் போகலாம் அதனால் இனி சீரியஸ் ( சிரிக்காதீங்க ) . நம் நாட்டில் சமீபகாலமாக பல அட்டு பையன்களும் டக்கர் பிகர்களை உஷார் செய்வதை பார்க்க முடியும் , அதற்கு சரியான வழிமுறையை பின்பற்றினாலே போதும் , அது பெரிய கம்ப சூத்திரமெல்லாம் இல்லை , சரியான அணுகுமுறையும் , சிலபல யுக்திகளும் தெரிந்தால் போதும் .அது தெரியாமல்தான் நம் நாட்டு இளைஞர்கள் பாவமாய் திரிகின்றனர்.

அதனால் பிகர் கிடைக்காமல் அலையும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு ஒரு வாரகாலம் நமது வலைப்பூவில் ஒரு யுனிவர்சல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளோம் . 7 நாள் கோர்ஸான இந்த கோர்ஸ் முடிகையில் உங்களுக்கு நிச்சயம் உங்க ஊரின் எந்த பிகரையும் மடக்கும் திறமையும் பலமும் கிடைக்கலாம் கிடைக்காமல் போகலாம் , ஏன்னா இது இலவச சேவை .. காசு கொடுத்து கற்று கொள்ள விரும்புபவர்களுக்கு மேலும் பல நுணுக்கங்கள் சொல்லிக் கொடுக்கப்படும் . முதலில் இந்த பாடத்திட்டம் கல்யாணம் ஆகாத கட்டிளம் காளைகளுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்டது பிறகு பல ரங்கமணிகளும் தங்கமணிகளிடமிருந்து விடுதலை பெற விரும்புவதால் அவர்களுக்காக சில மாற்றங்களோடு...

நாம் இந்த பாடங்களுக்குள் நுழையும் முன் , இந்த பாடத்திட்டத்தை கற்க உங்களுக்கு முக்கியமாக தேவை தன்னம்பிக்கை , அதனால் முதலில் நம்மால் முடியும் என்கிற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள் . வானம் மட்டுமல்ல பிகரும் வசப்படும்....


இன்னைக்கு முதல் பாடம் -


நீங்களும் டக்கர் பிகர்தான் !!

ஒரு நல்ல பிகரை நாம் தேர்ந்தெடுக்கும் முன் நாம் நல்ல பிகர்தானா என்பதை ஆராய வேண்டும் . ஆயிரம்தான் காதலுக்கு அழகு முக்கியமில்லை என்று சொன்னாலும் , உங்களை ஒரு பெண் திரும்பி பார்க்க வேண்டுமானால் அதற்கு நம் முகம் குறைந்த பட்சமாவது அழகாக இருக்க வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று யாரோ லூசு சொல்லிவிட்டு போய் விட்டது , அதனால் முதலில் முகம் . ஊருக்குள் எந்த பிகராவது முகத்தில் மேக்கப் இல்லாமல் வெளியே வருகிறதா !! இந்த பசங்கதான் சீன் போடறதா நினைச்சுகிட்டு மூஞ்சி கழுவாம பரட்டை தலையோட பூச்சாண்டி மாதிரி சுத்தறது .
உங்க முகம் அழகா இருக்குதானு எப்படி கண்டுபுடிக்கறது . என் மூஞ்சிய கண்ணாடில பார்த்தா அழகாத்தான் இருக்கு , என்று நீங்க கூறுவீர்களானால் , தயவு செய்து உங்களுக்கு இல்லாத அழகை இருப்பதாய் சொல்லும் அந்த கண்ணாடியை உடைத்து தூள் தூள் ஆக்குங்கள் .

உலகத்தில் எந்த கண்ணாடியும் அவனவன் முகத்தை அவனுக்கு மட்டுமே அழகாய் காட்டவல்லது . அதனால் இனியும் கண்ணாடியை நம்பாதீர்கள் , நாமாகவே நம்மை அழகாக்க முயற்சிப்போம் முயற்சி திருவினையாக்கும் .

அந்த பாழாய் போன கண்ணாடியை உடைத்து விட்டு முதலில் நம்மை ஒரு நல்ல பிகராக மாற்ற வேண்டும் . அதற்கு நாம் நல்ல பிகர்தான் என்கிற தன்னம்பிக்கையும் கர்வமும் கொள்ள வேண்டும் . ( பெண்களுக்கு ஆண்களின் கர்வம் மிகவும் பிடிக்கும் !! அதை பற்றி பின்னால் விரிவாய் படிக்கலாம் )

பிகராக வேண்டும் என்று கூறியதும் லூசுத்தனமாக பேர் அண்டு லவ்லிய வாங்கி பக்கெட்டில் வைத்து மோண்டு மோண்டு குளிக்க கூடாது .

நம்ம பாழாய் போன சமூகத்தில் பெண்களுக்கு மட்டும்தான் அழகு குறிப்புகள் இருக்கிறது , அதனால் ஆண்களுக்கும் சில அழகு குறிப்புகள் .
* முகத்தை நல்ல மழுங்க சேவிங் செய்த பையனைத்தான் பெண்களுக்கு பிடிக்கும் என யார் உங்களுக்கு சொன்னது . நல்ல டிரிம்மிங் சேவரை வாங்கி அதில் தினமும் உங்கள் முகத்தில் கொஞ்சமாய் வளரும் தாடியை அழகாக டிரிம் செய்து கொள்ளவும் . ( அதான்ப்பா லேட்டஸ்ட் பேஷன் )

* முகத்தில் கண்ட கிரீமையும் தடவாதீர்கள் , முகத்திற்கு பாசிபயறை நன்கு அரைத்து அதை முகத்தில் பேசியல் போல அப்பிக்கொண்டு ஒரு அரை மணிநேரம் கழித்து கழுவ முகம் பளபளவென்று பளிங்குகல் போல மின்னும் , (மிருதுவாகவும் இருக்கும் , பெண்களுக்கு மிருதுவான முகமே பிடிக்கும் அதற்கான காரணம் 5ஆம் பாடத்தில் இருக்கிறது )

*நல்ல பேஸ்ட் வாங்கி காலை மாலை இருவேளைகளும் நன்கு பல்துலக்கவும் , சிகரெட் பிடிப்பவர்கள் , இரவு தூங்கும் முன் பல் விளக்கிவிட்டு , வாசலின் தயாரிப்பான லிப் கேரை உதட்டில் தடவி விட்டு படுத்துறங்க அவர்களது உதடு கருப்பாவது குறையும் .

* பெண்களுக்கு சிவப்பான ஆண்கள்தான் பிடிக்கும் என்கிற ஒரு தவறான கருத்து உள்ளது , பல அழகான பெண்களும் நல்ல கருப்பான ஆண்களையே விரும்புகின்றனர் . அதனால் அதைப்பற்றி கவலைப்பட்டு கிறுக்குத்தனமாக வெள்ளையாக்கும் கிரீம்களை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டாம்.

*தினமும் கட்டாயம் சேவிங் செய்ய வேண்டி இருந்தால் நல்ல ஆப்டர் சேவை உபயோகிக்கவும் . முகம் வழுவழு என்று பளிங்கு கல் போல இருந்தாலும் பெண்கள் விரும்புவர்.

*தினமும் தலைக்கு ஷாம்பு உபயோகிக்காதீர்கள் , பெண்களை விட ஆண்களின் முடிக்கு ஆயுசு குறைவு அதனால் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டும் குறைந்த அடர்த்தியுள்ள ஷாம்புகளை உபயோகிக்கவும் , அதே போல பரட்டை தலையாய் இருப்பதை எந்த பெண்ணும் விரும்புவதில்லை , நல்ல அழகாக நீளமான சீரான தலைமுடியையே பெண்கள் அதிகம் விரும்புவதால் , தலையை நன்கு கவனியுங்கள் .

* இது தவிர குளிர்காலங்களில் நல்ல மாய்சரைசர்ஸர்களையும் , வெயில் காலங்களில் நல்ல சன்ஸ்கிரீன் லோசன்களையும் உபயோகிக்கலாம் . அது உங்கள் முகம் தட்பவெப்ப சூழலால் சுருங்குவதை தடுக்கும் .

*முடிந்தவரை முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொள்ள பழகவும் ( சிரித்த மாதிரி என்றால் ஈ என்று இளித்து கொண்டல்ல ) உங்கள் முகத்தில் எப்போதும் ஒரு அழகான புன்னகை தவழட்டும் .

*ஆண்களுக்கு மூக்கு மற்றும் காதுகளில் தேவையில்லாமல் நிறைய முடி வளரும் , வாரத்திற்கு ஒரு முறை அதனை வெட்டி சுத்தமாக வைத்திருக்க முயலவும் .

*இரவு சரியான நேரத்திற்கு உறங்கவும் , தினமும் குறைந்தது 8 மணிநேரமாவது உறங்கவும் ( கண் விழித்து வலையில் எழுதுவதை தவிர்க்கவும் )

*தினமும் 10-15 டம்ளர் தண்ணீர் அருந்தவும் . இதனால் முகம் பளீரென இருக்கும் .

*இது தவிர இளநரை இருந்தால் வாரம் இருமுறை VLCCயின் ஹென்னா வாங்கி உபயோகிக்கவும் . தலை கருப்பாகும்.

*இளம் வழுக்கை இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள் , அதுதான் அழகு.

*பெண்களை விட ஆண்களின் முகத்தில் எண்ணை அதிகம் வழியும் ( அசடும் கூட சேர்த்து ) அதனால் DEEP CLEANSING செய்வது மிக முக்கியம் , அதற்கென பல பேஸ்வாஸ்கள் சந்தையில் கிடைக்கிறது .

*இது தவிர வாரம் ஒரு முறை உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள மென்ஸ் பியூட்டி பார்லரில் போய் பேசியல் , பேஸ் மசாஜ் போன்றவற்றை முயற்சியுங்கள்.

இன்னாடா இவன் காதலிக்கறது எப்படினு சொல்லித்தருவான்னு பாத்தா இது எதோ முக அழகப்பத்தி பேசுது என்று நீங்கள் நினைத்தால் நாளையிலிருந்து நம் வகுப்பறைக்கு வரவேண்டாம் . காதலில் பொறுமைதான் அவசியம் .

இத்தனை விடயங்களையும் தவறாமல் பின்பற்றி உங்கள் முகத்தை அழகாக்க முயற்சியுங்கள் , இவ்வளவு பண்ணியும் உங்கள் முகம் அழகாகவில்லையா? இல்லை இத்தனையும் செய்ய காசில்லையா?........ அட விடுங்க பாஸு நம்ம பாடத்திட்டத்தில அதுக்கும் வழியிருக்கு அத நாளைக்கு பாக்கலாம் , நீங்களும் பிகர்தான் பாஸு........

இதில் என்ன சந்தேகம் இருந்தாலும் பின்னூட்டம் மூலமாகவோ dhoniv@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும் , உங்கள் சந்தேகம் தீர்க்கப்படும்.


காதலை மேலும் கற்கலாம்..............


_____________________________________________________________________________________

இந்த பதிவு ஆண்களுக்காக மட்டுமில்லை , இங்கே தரப்படும் விடயங்கள் தங்கமணிகள் மற்றும் தங்கமணி ஆகப்போகும் பலருக்கும் உபயோகமாக இருக்கலாம் .

____________________________________________________________________

அவ்ளோதான்பா....


;-)


____________________________________________________________________