Pages

25 September 2008

சில்க்.......சில்க்......சில்க்............சில்க் ஸ்மிதா...!!!

1980களில் தமிழ்திரையுலகின் எல்லா திரைப்படங்களிலும் ஒரு காட்சியிலாவது சில்க் ஸ்மிதா இல்லாமல் இருந்ததில்லை , அவரது ஒரு பாடல் நடனமாவது எல்லா படங்களிலும் இருக்கும் , இன்று 35 வயதை கடந்த பலரது கனவுகன்னியாய் நிச்சயம் சில்க் ஸ்மிதா இருந்திருப்பார் , இன்றைய தலைமுறைக்கு சில்க்கின் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சில்க்கின் அபார நடனத்திறமையும் , கண்களின் வசீகரமும் தமிழ்திரையுலகம் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டு சென்றுள்ளதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது , சில்க்கை பற்றி வீட்டில் பேசத்தயங்கும் இன்றைய குடும்பஸ்தர்கள் பலரது மனிதிலும் இன்றும் சில்க் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.
1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் தேதி தமிழகத்தின் பல மத்திய வயதினருக்கும் அதிர்ச்சியளித்த தினம் , அடுத்த நாள் காலை செய்தித்தாளை பார்த்தவர்கள் பலருக்கும் மீளாத்துயரம் மனதில் குடிகொண்ட நாள் , தமிழ் திரையுலகின் பலரது உடல் தேவைகளுக்கும் பல முறை உதவியாய் இருந்து தன் வாழ்வைத்தொலைத்து , முதுமை குடிகொண்டு யாருமே கவனிக்கப்படா ஒரு சூழ்நிலை உருவாகும் தருவாயில் யாருக்கும் தெரியாமல் தற்கொலை செய்து கொண்டு இறைவனடி சேர்ந்தார் சில்க் . 90களின் தொடக்கத்தில் டிஸ்கோ சாந்தி மற்றும் சில கவர்ச்சி நடிகைகளின் வருகையும் அதனால் ஏற்பட்ட புகழின் வீழ்ச்சியும் சில்க்கை அவரது கடைசி காலங்களில் பெரிதும் பாதித்திருந்தது .
அவரது சாவிற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் , இன்று வரை எனக்கு தெரிந்து அது நிராகரிப்பின் வலியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம் , புகழுடன் வாழ்ந்த பல நடிகைகளும் தங்கள் முதுமையில் சுயமிழந்து புகழிழந்து சுற்றம் இன்றி , ஆதரவு தர யாருமின்றி தன்னை வாழ்த்திய பலராலும் தூற்றப்படும் கொடுமை திரையுலகிற்கே உரித்தானது .
திரையுலகில் இன்றும் ஒரு பெண்ணை போதைப்பொருளாக பார்க்கும் வழக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது , திரையுலம் போன்ற மீடியாக்கள் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் ஒருபெண் இது போன்ற இன்னல்களை அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறாள் , இன்றைய சமூகம் பெண்ணை எந்த அளவில் வைத்திருக்கிறது என்பதற்கு சில்க்கின் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம் .


அவரைக்குறித்து ஆயிரமாயிரம் கதைகளும் , கிசுகிசுக்களும் வந்தாலும் எதையும் மறுக்காமல் எதற்கும் கவலையின்றி , பல இன்னல்களுக்கும் நடுவே வாழ்ந்து மறைந்தவர் சில்க் .


சில்க் குறித்தும் அவரது இறப்பை நினைவு கூறும் இப்பதிவு பலருக்கும் நகைப்பைத்தரலாம் . சில்க் மட்டுமல்லாது எல்லா நடிகைகளையும் விபச்சாரியாக பார்க்க பழக்கிய சமூகம் நிச்சயம் நகைப்பைத்தருவதில் ஆச்சர்யமில்லை .


காலத்தால் மறுக்கப்பட்டு மறக்கப்பட்ட பல நூறு நடிகைகளில் என்றும் நம் உள்ளத்தில் நீங்க இடம் பிடித்த சில்க் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் சில ..........


* சில்க் ஸ்மிதா ,1960ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஆந்திர மாநிலம் பெலுருவில் வருமையின் பிடியிலிருந்த ஒரு ஏழையின் குடும்பத்தில் முதல் பெண்ணாய் பிறந்தார்.


*அவரது இயற்பெயர் விஜயவாடா விஜயலட்சுமி


* அவர் தமிழில் வண்டிச்சக்கரம் கவர்ச்சி நடிகையாய் அறிமுகமானார் .


*200 தமிழ் படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர்.


*அவரது திரைப்படங்களில் மூன்றுமுகம் , மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை ,போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது .


* அவர் நடித்த லயனம் ( மலையாளம் ) திரைப்படம் , இன்றைய ஷகிலா திரைப்படங்களின் முன்னோடி எனக்கூறலாம் , அதுவே அவ்வகையில் வந்த முதல் திரைப்படமும் ஆகும்.


*ஒரு காலகட்டத்தில் பெரிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் படங்களில் கூட சில்க்கின் ஒரு பாடலாவது இணைத்தால்தான் படத்தை வாங்குவோம் என விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்கும் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் .


*ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமின்றி பல நல்ல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தன்னால் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்தவர் , சில்க் ஸ்மிதா.


* சில்க் நடித்த படங்களில் அவருக்கு பிண்ணனி குரல் கொடுத்தவர் ஹேமா மாலினி என்னும் டப்பிங் கலைஞர் , அந்த குரல் சாதாரணமாக மறக்கக்கூடியதா!! என்ன...


*சமீபத்தில் அவரது கடைசி திரைப்படத்தை இயக்கிய திருப்பதிராஜா என்னும் இயக்குனர் சில்க் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் , அவரது புத்தகத்தில் இது குறித்து கூறுவதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார் .


*தனது திரையுல ஆரம்ப காலங்களில் பலராலும் சக திரைப்பட நண்பர்களாலும் பல விதங்களிலும் அவமானங்களை அனுபவித்திருந்தாலும் தான் வளர்ந்து நல்ல நிலையில் இருக்கையில் அதை மறந்து பல உதவிகளை செய்தவர்.


*பல ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சியில் நடந்த ஒரு படப்பிடிப்பில் அவர் கடித்து போட்ட ஆப்பிளை விளையாட்டாக ஒரு உதவி இயக்குனர் ஏலமிட அது 15 வருடங்களுக்கு முன்னாலேயே ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றதாம்.


*கடைசியாக நடித்த திரைப்படம் தங்கத்தாமரை


*அவர் நடித்து கடைசியாக வெளிவந்த சுபாஸ் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றுவார் , அப்பாடலின் கடைசியில் அவர் ஒரு தீ போன்ற ஒரு இடத்திற்குள் நுழைவதாய் காட்சியமைந்தது வருத்தமான உண்மை . அவர் இறக்குமுன் நடித்திருந்த காட்சி அது என்பது மேலும் வருத்தமளிக்கிறது .


அவருக்கு அதிஷா மற்றும் அனைத்து வலையுல நண்பர்கள் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்._____________________________________________________________________________________


சில்க்ஸ்மிதாவின் 12வது நினைவு தினத்தில்( 23ஆம் தியதி ) வெளியிட நினைத்திருந்த பதிவு சில காரணங்களால் இன்று வெளியிடப்பட்டுள்ளது .____________________________________________________________________________________