Pages

01 October 2008

காந்தியும் பூந்தியும் மற்றும் வாந்தியும்.......


காந்தியும் பூந்தியும் :


பள்ளிப்பருவத்தில் காந்தி ஜெயந்தி என்றால் எங்களுக்கு மிக மகிழச்சியாக இருக்கும் , காந்தி ஜெயந்தி மட்டுமல்ல , சுதந்திர தினம் , குடியரசு தினம் , குழந்தைகள் தினம் கூட இதில் சேர்த்தி . அதற்கு ஒரு பிரத்யேக காரணம் இருந்தது . அத்தினத்தில்தான் பள்ளியில் , எங்கள் ஊரின் பல வீதிகளிலும் கொடியேற்றி ஒரு குழந்தைக்கு ஒரு மிட்டாய் வீதம் கொடுப்பார்கள் , அதுவும் பள்ளியில் ஐந்து காசு புளிப்பு மிட்டாய்தான் அதுவும் பாதி உடைந்திருந்தால் வேறு மாற்றி தர மாட்டார்கள் .


ஆனால் எங்களூர் காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும்தான் இத்தினங்களில் தேசப்பற்று வந்துவிட்டது போல அந்த நாட்களில் மட்டும் கொடியேற்றி நல்ல பாரிஸ் ( ஆசை ) சாக்லேட்டுகள் தருவார்கள் , அங்கேயும் ஒரு ஆளுக்கு ஒன்றுதான் . மிக நீண்ட வரிசையில் நின்று வாங்க வேண்டும் . எனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வீதி வீதியாய் அலைந்து காங்கிரஸ் கொடிகளை தேடுவோம் , சில இடங்களில் லட்டு அல்லது ஜிலேபி கூட தருவதுண்டு . அதிலும் சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து தரப்படும் இனிப்பு பூந்தி என்றால் இன்னும் விசேஷம். அதிலும் நண்பர்கள் அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை நான் மட்டும் எனது பூந்தியை வைத்துக்கொண்டு மற்றவரை பார்க்க வைத்து தின்பதில் எனக்கு அலாதி இன்பம்.


காந்தி புண்ணியத்தில் இனிப்பு . நாங்கள் பத்து பேர் மூன்று மூன்று பேராக பிரிந்து வீதிகளை அலசுவோம் , அதில் எங்காவது உயர்ரக சாகலேட்டோ அல்லது இனிப்பு பூந்தி போன்ற இனிப்புவகைகளோ அல்லது மதிய உணவு ( சமபந்தி விருந்து ) என்று தெரிந்தால் அங்கிருந்தது தெரித்து ஓடி மற்றவர்களுக்கு விசயத்தை மூவரும் சொல்ல வேண்டும் .


இப்படித்தான் ஒரு வருடம் காந்தி ஜெயந்தியன்று ஒரு இடத்தில் சமபந்தி விருந்தென்று ஒருவன் லட்டு வாங்க லைனில் நின்று கொண்டிருந்த எங்களிடம் வந்து கதற , நானும் மற்றவரும் லட்டு லைனை அப்படியே விட்டுவிட்டு ஒரே ஒட்டமாய் நான்கு தெரு தள்ளியிருக்கும் பந்தலை அடைந்தோம். அங்கே பந்தியில் இடம் பிடிக்க அடிதடி , அஹிம்சா மூர்த்தியின் பிறந்தநாளில் வன்முறையா , அடித்து பிடித்தெல்லாம் இடம் பிடிக்க முடியாமல் அஹிம்சைவழியில் அங்கிருந்த விழா அமைப்பு அண்ணன்களிடம் கெஞ்சி கூத்தாடி பத்து பேருக்கும் இடம் பிடித்தோம்.


வரிசையாய் இலை பரிமாறப்பட அதில் தண்ணீரை அழகாய் தெளித்து , நன்றாக வழித்து அதை தள்ளிவிட்டு , சம்மனங்கால் போட்டு அமர்ந்து கொண்டு ஆவென்று வாயை பிழந்த படி பத்துபேரும் சோறு எப்போது போடுவார்கள் என்று காத்திருக்க , சோறும் போடப்பட்டது , பொரியல் , கூட்டு , அவியல் , உப்பு , ஊறுகாய் , கேசரி என பல ஐட்டங்களோடு சோறும் போடப்பட்டது .


எங்கள் எல்லாருக்கும் ஒரே குஷி , ஒருவன் கேசரியில் கை வைக்க கைத்தட்டி விடப்பட்டது , அந்த அண்ணன்தான் , தலைவர் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கையால் சாம்பார் ஊற்றிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்றும் கூறிவிட்டார் .


என்ன பண்ண விதி வலியது என விதியை நொந்த படி பத்து பேரும் அமர்ந்திருந்தோம். அரை மணி நேரம் ஆனது தலைவர் வரவில்லை , எங்கள் நண்பர்களில் அருண் மிகவும் சுட்டி , சட்டென கேசரியை அள்ளி வாயில் போட்டு விட்டான் , ஆனால் வாயை அசைக்காமல் மென்ற படி அமர்ந்திருந்தான் . அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை , நானும் கேசரியில் கை வைக்க , தலைவர் வந்துவிட்டார் . இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று யாரோ எந்த படத்திலோ பாடியது காதில் ஒலித்தது .


அவர் உரையாற்றும் வரை எங்களுக்கு உணவில் கைவைக்காதடா என்று கைவைக்க தடா.. தலைவர் உரையாற்ற ஆரம்பித்தார் , துப்பார்க்கு துப்பாய என்று தொடங்கி எச்சில் பறக்க சாரி பொறி பறக்க உரையாற்றினார் . அவரும் நாட்டின் சோற்று பற்றாக்குறை பற்றியும் பசி பட்டினி பற்றியும் வேறொரு கட்சிதலைவரையும் சாடி பேசிக்கொண்டிருந்தார் , சோற்றையும் தலைவரையும் பார்த்தபடி நாங்கள் ஒரு இழவும் புரியாமல் மணி மூன்றை தாண்டி இருந்ததால் தேமேவென்று கண் காதுகள் அடைத்து அமர்ந்திருந்தோம் . தலைவரும் ஒரு மணிநேரம் விடாமல் உரையாற்றிவிட்டு ஒரு வழியாய் சாம்பார் வாளியோடு எங்களுக்கு வந்து சாம்பார் ஊற்ற நாங்களும் சாப்பிட ஆரம்பித்தோம் .


சாம்பாருக்கு அடுத்து காரக்குழம்புதானே முறை ஆனால் அதற்கு குய்யோ முறையோ என்று கூவியும் யாரும் வராததால் சாம்பாருடன் எழுந்தோம் . சாப்பாடு பரிமாறுபவர்களில் பாதிபேர் தலைவரையும் மீதி பேர் எங்கள் ஏரியா வயசு பெண்களையும் கவனித்துக்கொண்டிருக்க காந்தியும் நாங்களும் அநாதைகளானோம் . அந்த கம்பத்தில் சுவற்றோடு சாய்த்து வைத்திருந்த மகாத்மாவின் படத்தில் பூக்கள் வாடியிருந்தது . காந்தியின் மூக்கில் ஒரு தெருநாய் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தது . தொண்டர்கள் தலைவரை கவனித்து கொண்டிருந்தனர் ._____________________________________________________________________________________

காந்தியும் வாந்தியும் :

இளம் பருவத்தில் காந்தி ஜெயந்தி என்றால் எங்களுக்கு மிகவும் கடுப்பாக இருக்கும் , காந்தி ஜெயந்தி மட்டுமல்ல , சுதந்திர தினம் , குடியரசு தினம் , குழந்தைகள் தினம் கூட இதில் சேர்த்தி . அதற்கு ஒரு பிரத்யேக காரணமிருந்தது . அத்தினங்களில் பார்கள் மற்றும் ஓயின் ஷாப்புகள் விடுமுறை . அத்தினத்தில் பிளாக்கில் ஓயின்ஷாப் ஓட்டைகளில் விற்பார்கள் . அதுவும் ரேசன் முறையில் ஒருவருக்கு ஒன்றுதான் . அந்த சரக்கும் விற்பனை விலையிலிருந்து முப்பது ரூபாயாவது அதிகமாக இருக்கும் . அதிலும் ஓட்டையில் தருகையில் சரக்கு மாறி போய்விட்டால் வேறு தரமாட்டார்கள் , பீர்கூட கிடையாது .


ஆனால் இத்தினங்களில் மட்டும்தான் எங்களூர் போலீஸ்காரர்களுக்கு தேசப்பற்று வந்ததைப்போல எங்கெல்லாம் இப்படி ஓட்டையில் சரக்கு விற்கப்படுகிறதோ அங்கெல்லாம் வந்து சரக்கு விற்பவனை விட்டுவிட்டு வாங்குபவனை அடிப்பார்கள் (சத்தியசோதனை) . வேலைக்கு போக ஆரம்பித்து விட்டதால் இத்தினங்களில் மட்டும்தான் நண்பர்களோடு சரக்கடிக்க முடியும் . நாங்கள் ஐவர் ஐந்து பேரும் பல திசைகளிலும் தெரு தெருவாய் அலைவோம் எங்காவது பிளாக்கில் சரக்கு விற்கிறார்களா என்று பார்க்க . எங்காவது ஒரு கடை மாட்டிக்கொண்டால் யார் பார்க்கிறார்களோ அவர்களே காசு போட்டு ஐவருக்கும் சரக்கு வாங்க வேண்டும் .


இப்படித்தான் ஒரு வருடம் ஒரு காந்தி ஜெயந்தி நாளில் சரக்கு வாங்க வீதி வீதியாய் அலைந்து கொண்டிருந்தோம் . ஒரு வழியாய் ஒருவன் கடையை கண்டுபிடித்து விட்டான் ஆனால் அவனிடம் காசில்லை அதனால் எங்களை கண்டுபிடித்து விசயத்தை கூறினான் . ஐவரும் கிளம்பினோம் கடையை நோக்கி . அந்த கடையில் ஒரத்தில் பாருக்கு செல்லும் வழியின் சிறிய கதவின் மிகச்சிறிய ஒட்டையில் ஆள் யாரென்று பார்க்க முடியாத அந்த துளையில் பல குடிமகர்களும் முண்டியடித்துக்கொண்டு கையில் காசுடன் எனக்கு எனக்கு என்று துடித்தபடி இருந்தனர் . ஒரே தள்ளுமுள்ளு . அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினத்தில் வன்முறையா அதனால் அஹிம்சா வழியில் அங்கிருந்த குடிமகன்களுடன் முண்டியடிக்க முடியாமல் கூட்டம் களையும் வரை காத்திருந்தோம் .


எங்கள் முறை , நான் பீர் இருக்கா என்று அப்பாவியாய் கேட்க , அவனோ தூத்தெரி பன்னாட ஒடிடு என்று இன்னும் பல இங்கே எழுத முடியாத மற்றும் கேட்க இயலாத கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தான் , சரினா ஒரு புல்லு குடுங்க , எவ்ளோங்கணா என்று கேட்க அவனோ நானூறு ரூபாய் கேட்க . கையிலோ 350 ரூபாய் , அவனிடம் கெஞ்சி கூத்தாடி 350க்கே முடித்தோம் . 350 ரூபாயிலும் காந்தி சிரித்தார் . ஐந்தாம் தேதி சம்பளம் வாங்கும் எங்களால் என்ன செய்ய முடியும் , அந்த பாழாப்போன காந்திக்கு ரெண்டாம் தேதிதான் பொறந்தநாள் வரணுமா என்று நொந்தபடி அங்கிருந்து நகர்ந்தோம் .


சரக்கு வாங்கியாச்சு இனி என்ன அடிக்க வேண்டியதுதான் எங்கே போய் அடிக்க , பாரிலேயே அடித்து பழகியாகிவிட்டது . எல்லார் கையிலும் இருந்த சில்லைரைகளை பொறுக்க மொத்தமாய் மூன்று ரூபாய்தான் இருந்தது . எங்களில் ஒருவன் ஒரு உபாயம் கூறினான் , மூன்று ரூபாய்க்கு ரெண்டு கிளாஸ் மற்றும் ஒரு கட்டுபீடியும் வாங்குவதென்று . எல்லோரும் சரி என்று மண்டையை ஆட்டிவிட்டு , அடுத்து எங்கு போய் அடிப்பது . அதற்கும் அந்த நாயே உபாயம் கூறியது , தெருக்குழாய் பக்கம் யாருமில்லை அங்கே போய் குழாயில் தண்ணீர் பிடித்து அடித்து விடாலாமென்றும் .


எங்களுக்கும் அப்போதிருந்த ஆவலில் அந்த காரியத்திற்கு உடன்பட்டு சரியென்றோம் . மதியம் மூன்று மணிக்கு அந்த தெருவில் யாருமில்லை ,(விடுமுறை நாளில் மக்கள் ஏன் மதியம் உறங்குகிறார்கள் , தெருக்கள் வெறிச்சோடிப்போகிறது ) ரெண்டு கிளாஸ்களில் வாங்கி வந்த அந்த கருமத்தை ஊற்றி அதில் குழாயில் முனையில் பிடித்து வேகமாக கிளாஸில் பீய்ச்சி அடித்து கலந்தான் அருண் , அது போன்ற விடயங்களில் அவன் கில்லாடி , ரெண்டு பேர் மட்டும் பீடியை வழித்துக்கொண்டு ஒரே மொடாக்கில் அடித்தனர் . நானும் மீதி மூவரும் பற பற வென அவர்களது வாயை பார்த்தபடி இருந்தோம் .


மீண்டும் தண்ணீர் மீண்டும் ரெண்டு டம்ளர் , ஆனால் எனக்கில்லை , மீதி இருவருக்கும் . அடுத்த முறை இம்முறை எனக்கும் ஒரு கிளாஸ் கிடைத்து விடும் என்கின நம்பிக்கை கண்களில் மிளிர , இரண்டு கிளாஸில் எதில் அருந்துவது என எண்ணியபடி நின்று கொண்டிருந்தேன் .

என் கையில் சரக்கை கொடுக்கப்போகும் சமயம் , தலைவர் வந்து விட்டார் என்று எங்கள் அருகில் இருந்த விளக்கு கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஓலிப்பெருக்கியில் சப்தம் . அருகிலிருந்த பெரிய வீட்டில் இருந்து வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி இளைஞர்கள் சிலர் ( கட்டாயம் காங்கிரஸ்தான் ) ஓடினர் . நாங்கள் நின்று கொண்டிருந்த வீதியின் முனையில் கைக்கூப்பியபடி அதே தலைவர் அதே தொண்டர்கள் . அருண் சரக்கு மற்றும் கிளாஸை மறைத்துக்கொண்டான் . கூட்டம் முடிந்ததும் அடித்து கொள்ளலாம் என்பது பிளான்.

கூட்டத்தில் தலைவர் துப்பி துப்பி ஏதேதோ பேசினார் , நான் மறைத்து வைத்த அந்த கிளாஸையே பார்த்துக்கொண்டிருந்தேன் . ஒரு வழியாய் பேசி முடித்தார் . கூட்டம் கலைந்தது . நிம்மதியாய் அருண் அதை எடுடா என்று சொல்ல வாய் திறக்க என் முதுகை தட்டியபடி அருணின் அப்பா . இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை................. அதே சேம் சக்தி சவுண்டு சர்வீஸ்.. அதே பாட்டு ஆனா இந்த முறை இன்னும் சத்தமா...


அடுத்த நாள் பார்த்த போது அந்த கிளாஸும் மீதி சரக்கும் தொலைந்து விட்டது . அன்றிரவு அந்த கொடிக்கம்பத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த காந்தி படத்தில் எந்த நாயோ சரக்கடித்து வாந்தி எடுத்து வைத்திருந்தது . அது இரண்டு நாள் அப்படியேதான் இருந்தது . வாந்தியும் காந்தியும் .
_____________________________________________________________________________________

அவ்ளோதான்பா.. ;-)

_____________________________________________________________________________________