Pages

24 November 2008

இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(1)



முரட்டு இன்பம் -

மகளிர் காவல் நிலையத்தில் என்றாவது ஒரு நாள் முழுக்கவும் ஆடவராகிய நம்மால் கழிக்க இயலுமா என்றால் நிச்சயம் இயலாது . அங்கே சக ஆண்களுக்கு எதிரான பெண் காவலர்களின் வன்முறைகள் மிக அதிக அளவில் நிகழுவதாக சில நண்பர்கள் கூற கேட்டதுண்டு . பெண் காவலர்கள் குறித்து வெகுஜன ஊடகங்களும் நமது சிற்றறிவும் மிக அசாத்திய எண்ணங்களை பதிவு செய்துள்ளன.

நமது கதையின் நாயகன் வினோவும் அது போலத்தான் நினைத்துக்கொண்டிருந்தான் நித்யாவை சந்திக்கும் வரை . நித்யா நமது கதையின் நாயகி பெண் காவலாளி தமிழில் லேடி கான்ஸ்டபிள்.

அன்புள்ள நித்து டார்லிங்

உன்னை இனிமேல் என்னால் அப்படி கூப்பிட இயலுமா தெரியவில்லை ,
என்னை மன்னித்துவிடு எனக்கு வேறு வழி தெரியவில்லை , நான் உன்னை என் உயிரினும் மேலாகத்தான் நேசித்தேன் ஆனால் சூழ்நிலை இன்று நம்மை பிரிக்க முயல்கிறது , சூழ்நிலைக்கைதியாய் நான் அதற்கு அடிபணிந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் . இனி நாம் பேசுவதோ பழகுவதோ முறையாகாது , மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் , ஒரு முறை அல்ல ஆயிரம் முறை கூட சொல்வேன் ஐ யம் சாரி ஐ யம் சாரி , உன்னை விட்டு பிரிந்தாலும் , என் உள்ளத்தில் என்றும் உன் நினைவுகளோடே வாழ்வேன் ,

இப்படிக்கு உன் காதலன்(?)

வினோ......

இந்த காலேஅரைக்கால் கடிதம்தான் வினோ நித்யாவிற்கு கடைசியாக எழுதிய கடிதம் , அக்கடிதத்தை ஆர்.கே.சாலையில் மேம்பாலம் அருகில் காவலுக்கு நின்று கொண்டிருந்த விமலாவிடம்(இன்னுமொறு கான்ஸ்டபிள் ) கொடுத்துவிட்டு , அங்கிருந்து வெகு வேகமாக சென்று விட்டான் வினோ . விமலா அக்கடிதத்தை நித்யாவிடம் தந்த போது அவளோ பூமி அதிர சிரித்தாள் , '' லூசாப்பா அவன் '' என்று கண்ண்டித்தாள் , அடுத்தவர் கடிதம் என்றும் பாராமல் அக்கடிதத்தை படித்து விட்டிருந்த விமலாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை .
வினோவும் நித்யாவும் முதன்முதல் சந்தித்தது மிக நகைச்சுவையான ஒரு சம்பவத்தில் , வினோ பணிபுரியும் தானியங்கி நீர் சுத்திகரிப்பு சாதனம் விற்கும் கம்பெனியின் அலுவலகம் எத்திராஜ் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பச்சை நிற அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காம் மாடியின் வலது புறத்தில் மூன்றாவது அறையில் இருந்தது , மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவான இவன் , அலுவலத்தில் இருக்கும் நேரத்தை விட வீடு வீடாகச்சென்று வாடிக்கையாளர் பிடிக்க அலையும் நேரமே அதிகம் .

ஒரு சுபமுகூர்த்த சுபயோக சுபதினத்தில் , காலை 11 மணிக்கு நல்ல எமகண்டத்தில் , காயிதே மில்லத் கல்லூரியை தாண்டி இடது புறம் திரும்பினால் அண்ணா சிலைக்கு செல்லும் சாலை , அது ஃபிரீ லெப்ட் கிடையாது , அங்கே விழும் சிக்னலுக்கு கட்டாயம் காத்திருந்துதான் செல்ல வேண்டும் , இவனும் சிக்னலுக்கு காத்திருந்தான் , இவனது விலைமதிப்பற்ற பஜாஜ் பாக்ஸர் ( 1998 மாடல் வண்டி) சிகனலில் ஆஃப் ஆகி விட பச்சை விழுந்து மீண்டும் சிகப்பு விளக்கு எரிய ஆரம்பித்திருந்தது , அந்த சாலை திரும்புமிடத்தில் காவலுக்கு நின்று கொண்டிருந்த நித்யா இவனை கவனித்தபடி இருக்க , எதிர்பக்கத்தில் இருந்த போக்குவரத்து காவலாளி நேராக இவனை நோக்கி வந்தார் , '' தம்பி லைசன்ஸ் , ஆர்சி புக்லாம் எடுங்க , '' எடுத்து காட்டினான் , ''இன்சூரன்ஸ்?'' அதையும் நீட்டினான் ,

''ஸைடு மிரர் எங்கே ? ''

''சார் அது வீட்டில இருக்கு ''

''எதுக்கு சிரைக்கரதுக்காகவா வச்சிருக்க ''

''ஆமா சார் , அம்மாதான் சொன்னாங்க அதுல சேவிங் பண்ணா முகத்தில நல்லா சிரைக்கலாம்னு ''

''என்னப்பா கிண்டலா ''

''ஸைடுல மிரர் இல்ல, வண்டி சாவிகுடுங்க , எதுவா இருந்தாலும் ஐயா கிட்ட பேசிக்கோங்க ''

''சார் , இதுலாம் ஒரு தப்பா சார் , அதான் எல்லா டாகுமெண்ட்ஸ்ம் இருக்கல , ஹெல்மெட் கூட போட்டிருக்கேன் அதுவும் ஐஎஸ்ஐ ''

''ஐயா இங்க ஒருத்தன் ரொம்ப ரூல்ஸ் பேசறான் , நீங்களே பாத்து கவனிங்க ,''
வினோவின் வண்டியை நித்யாவின் அருகில் நிறுத்திவிட்டு , அங்கிருந்து அண்ணாசாலையின் மிகப்பெரிய சிக்னலை நடந்தே கடந்தான் . நித்யா அவனை பாவமாய் பார்த்தாள் . நித்யா நல்ல அழகு , தேவதை போல் அவனுக்கு தோன்றினாள் .

''என்னப்பா ஃபைன் ஆயிரம் ரூபா இங்க கட்டறியா , இல்ல கோர்ட்லயா '' ஐயா கேட்டார் ,

''சார் , என்ன சார் நான் தப்பு பண்ணேன் , ஸைடு மிரர் இல்ல அது ஒரு தப்பா ''

''தம்பீ ஓவர் ஸ்பீட் , டிராபிக் வயலேசன் , அப்புறம் ஸைடு மிரர் இல்ல , உங்க லைசன்ஸ் போட்டோல இருக்கறது உங்கள மாதிரி வேற இல்ல ''

''சார் என் வண்டி எவ்ளோ வேகமா போனாலும் 50 கி.மீ தாண்டாது , நான் ஒழுங்கா சிக்னலுக்கு நின்னது டிராபிக் வயலேசனா ''

''சரிங்க தம்பி , இவ்ளோ ரூல்ஸ் பேசறீங்கல்ல , நாளைக்கு வந்து கோர்ட்ல வண்டிய வாங்கிக்கங்க ''

'' சார் அவர விட்டுருங்க சார் , எனக்கு வேண்டப்பட்டவரு , ஊர்க்காரரு , ரொம்ப நல்லவரு , ப்ளீஸ் '' நித்யா சம்பந்தமே இல்லாமல் சாலையின் மறுபுறத்தில் இருந்து ஓடி வந்து உதவினாள் .

''ரொம்ப தேங்க்ஸ்ங்க , நீங்க மட்டும் உதவலனா , ஏன் வண்டியும் நானும் கண்டமாகிருப்போம் ''
''பரவால்லைங்க , உங்கள பாத்தாலே பாவமா இருக்கு , அப்பாவியா இருக்கீங்க , பப்பி மாதிரி! , உங்ககிட்ட போயி , அந்தாளுக்கு யாருகிட்ட எப்படி நடந்துக்கணும்னே தெரியாது ,ஏக்ச்சுவலி நாங்கதான் உங்ககிட்ட ஸாரி கேக்கணும் '' என்றபடி அவனது கண்களையே பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தாள் , உதட்டில் சிறிய புன்னகை , வினோவை அது என்னமோ செய்திருக்க வேண்டும் .

வினோவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை , தன்னிடம்தான் பேசுகிறாளா , அதுவும் ஒரு பெண் போலீஸ் இத்தனை சாந்தமாக , கனிவோடும் அளவில்லா அன்போடும் , என சுற்றும்முற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டான் . இவன் வண்டியை எடுத்துவிட்டு அங்கிருந்து திரும்பும் போது அவளை பார்த்தான் , அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் , அவன் மறையும் வரை .
அன்புள்ள வினோ குட்டிக்கு ,

நித்யா எழுதிக்கொள்வது , ஒரு மாதமாக உன்னை காணாமல் கலங்கி போயிருக்கிறேன் ,நீ உனது அலுவலகத்திற்கு கூட வருவதில்லை என கேள்விப்பட்டேன் , உனது மொபைல் எப்போதும் ஆஃப்லேயே இருக்கிறது , என்னை பார்க்காமல் உன்னால் இருக்க முடிகிறது போல , என்னால் முடியலடா... ராஸ்கல் , ப்ளீஸ் எங்கிருந்தாலும் உடனே வாடா , உன்னை பார்க்கணும் , பேசணும் ,உன்னை இறுக்க கட்டியணைத்து உன் உதடுகள் சிவக்க அழுத்தமாய் ஒரு முத்தமிடனும் , ஏன்டா என்னை இப்படி கொல்ற , எங்கடா இருக்க.... குட்டிமா ப்ளீஸ்டா.. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா மன்னிச்சுடுறா...ப்ளீஸ்...

இப்படிக்கு..

அன்பு முத்தங்களுடன் ,

நித்யா.....

நித்யா வினோவிற்கு தருவதற்காக கடைசியாய் எழுதிய கடிதம் , இன்று வரை அக்கடிதம் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது .............
**********
முடிவில்லா இன்பம் தொடரும்.....