Pages

24 November 2008

தற்பெருமைகளும்....தற்கொலைகளும்.....


நம் வாழ்வின் என்றாவது ஒரு நாளிலோ அல்லது ஒரு நிகழ்விலோ நாம் தற்கொலை செய்துகொள்வதைப்பற்றி ஒரு விநாடியேனும் சிந்தித்திருப்போம் . இன்று இக்கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் யாரும் அதைக்குறித்து சிந்தித்திருக்கக்கூடும் . அம்முயற்சியை உடனேயோ , யோசித்தோ அல்லது சாவினை குறித்த பயத்தினாலோ கைவிட்டவராய் இருக்க கூடும் .

தகவல்தொழில்நுட்பத்துறையில் இன்று அதிகம் தற்கொலைகள் நிகழ்வதாக பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன . இது தவிர இந்தியாவின் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலைக்கு முயல்வதாகவும் தெரிவிக்கின்றனர் .

தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணம் என்ன? அப்படிப்பட்ட சூழலில் என்ன செய்யலாம்? தற்கொலைகள் தவறா ? தற்கொலை செய்யுமளவுக்கு ஒரு மனிதனின் மனநிலை ஏன் எப்படி மாறுகிறது என இப்படி பல கேள்விகள் நம்மில் பலரது மனதிலும் எழலாம் . ஆனால் அவையனைத்திற்கும் ஒரே வார்த்தையில் சொல்லப்படும் பதில் தோல்வி. தோல்வியிலிருந்து விடுதலை என்றுச்சொல்லலாம்.

தற்கொலைகள் பெரும்பாலும் தோல்விகளாலும் அது தரும் மன அழுத்தம் மற்றும் அதனால் ஏற்படும் சமூகத்தின் பழிச்சொற்களை ஏற்க திராணியின்றியும் ஏற்படுகிறது . தோல்விக்குப்பின் நமது சமூகத்தை எதிர்கொள்ள அஞ்சி பலரும் அம்முடிவை எடுப்பது வாடிக்கையான ஒன்று .

ஆரம்பநிலைப் பள்ளிப்பருவங்களில் பெரும்பாலும் தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்கள் தங்களது பால்யத்தில் வீட்டைவிட்டு ஓடுவது மாதிரியான சிறுசிறு முயற்சிகளில் ஈடுபடுவர். ஆனால் தற்கொலை அளவிற்கு யாரும் முயல்வதில்லை . அதற்குரிய மனவளர்ச்சியோ அறிவோ அக்குழந்தைகளுக்கு இருப்பதில்லை . இப்படி சிறுவயதில் ஏற்படுகிற இம்மனச்சிதைவு அல்லது அதிகமான மன அழுத்தம் அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களை சமூகத்தின் சிக்கலான பிரச்சனைகளை எதிர்கொள்ள வலிமையில்லாதவர்களாகவும் மூர்க்கமானவர்களாகவும் மாற்றியமைக்கிறது . இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு சிறுகுழந்தைகளிடையே ஆரம்பநிலையிலேயே போட்டி மனப்பான்மையையும் , தோல்வி பயத்தையும் தவிர்க்கும் வண்ணம் ஆரம்பக்கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரலாம் . நாமும் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுவதையும் நிறுத்த வேண்டும் . ஒப்பிடுதலே குழந்தைகளின் மனதில் முதன்முதலாய் பதியும் தாழ்வுமனப்பான்மையின் விதை . நீங்கள் ஒப்பிட்டு பழக்கப்படுத்த ஆரம்பிக்க அது பிற்காலத்தில் தன்னைத்தானே மற்றவருடன் ஒப்பிட்டு தன்னை தாழ்த்திக்கொள்ளும் மனநிலையை வளர்க்கவும் ஏதுவாக அமையலாம் .

இளம்பருவத்தில் தேர்வுகளில் தோல்வி , காதல் தோல்வி , தன் புற அழகின் மீதான பார்வை , சக தோழர்களுடனான ஒப்பீடு , தாழ்வு மனப்பான்மை இன்னும் நிறைய மனது மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் தற்கொலைக்கு தூண்டுதலாய் அமைகின்றன. இவ்வயதில் கட்டுக்கடங்காமல் அலைபாயும் மனதை சரியான வழிகாட்டுதலால் மட்டுமே சரியாக அமைக்க இயலும் . இவ்விளம் பருவத்தில் பெரும்பாலும் மனமும் உடலும் காமம்,வன்முறை என திசைமாறிச்செல்ல எத்தனிக்கும்.

நம் சமூகத்தில் அப்படி ஒரு சூழலில் சாதாரண ஒரு இளைஞனை அவனது சமூகமும் அவனது குடும்பமும் அடக்கி வைக்க பழக்கப்படுத்துகிறதே அன்றி அதனை சரியான வழியில் வெளிப்படுத்த ஒரு வடிகால் அமைத்து தரத்தேவையில்லை , அது போன்ற சமயங்களில் அது குறித்த சரியான அறிதலை நம் சமூகமும் நம் கல்விமுறையுமே வழங்க இயலும் . தேர்வுகளில் தோல்வியுறும் போது இனி நம் குடும்பத்தையும் சமூகத்தையும் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்கிற அச்சம் தற்கொலைக்கு ஒரு காரணமாக இருக்கிறது , அதற்கு ஆணிவேர் ஒவ்வொரு குழந்தையின் ஆரம்பகால வாழ்க்கையில் இருக்கும் . வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்ட பெற்றோர்கள் தன் மகனோ மகளோ எதிலும் வெற்றி மட்டுமே பெற வேண்டும் என்றும் , அக்குழந்தைகளுக்கு தோல்வி குறித்த பயத்தையும் தோல்விகள் வாழ்வின் முடிவு என்பது போன்ற பாவனையையும் அளிக்கவே நமது குடும்பங்களும் சமூகமும் கல்வி அமைப்பும் கற்றுத்தருகிறது .
முதல் ரேங்க் வாங்கும் மாணவனையும் , ஓட்டப்பந்தயத்திலும் பிற விளையாட்டிலும் வெற்றி பெரும் மாணவனையுமே முன்னிலைப்படுத்தி பிறரை ஒதுக்கி வைக்கும் முறையால் , ஒதுக்கப்பட்ட அக்குழந்தை வளரும் போது எல்லா சூழலிலும் அத்தாழ்வும்மனப்பான்மையோடு சமூகத்தை எதிர்கொள்ளும் . தோல்விகள் உச்சத்தை அடையும் போதெல்லாம் அக்குழந்தை வளர்ந்த பின்னும் அதை எதர்த்து போரிட வலிமையின்றி தற்கொலை வரை அதன் தாழ்வுமனப்பான்மையும் தனிமையாக்கப்பட்ட அதன் அறிவும் இட்டுச்செல்லுகிறது . காதல் தோல்விகள், காதலில் தோற்றாலே சாவு ஒன்றுதான் முடிவு என்பது போன்ற ஒரு மாயையை நம் சமூகம் அதன் ஊடகங்கள் வழியே ஏற்படுத்தியிருக்கிறது . காதலில் தோற்றால் வாழ்வில் தோற்றது போல ஒரு பிம்பம் எப்படி உருவானது என்று தெரியவில்லை . காலப்போக்கில் இக்குணம் நம் சந்ததியினரிடையே இருந்து மறையலாம்.

மத்யம வயதில் 30 வயதுக்கு மேல் தற்கொலை செய்து கொள்ளும் பலரும் கடன் தொல்லை , திருமண வாழ்வில் தோல்வி , ஏமாற்றம் , கள்ள உறவுகள் என சில காரணங்களால் மட்டுமே அம்முடிவை எடுக்க துணிகின்றனர் . சரியான திட்டமிடல் மற்றும் வாழ்க்கையின் மிகச்சிறிய பிரச்சனைகளையும் சந்திக்க துணிவின்றி முடிவில் தற்கொலைகளுக்கு முயல்கின்றனர் . நம் வாழ்க்கையின் எஜமானர்கள் நாம்தான் , நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் நாம்தான் எதிர்கொள்ள வேண்டும் , அதில் மேடுபள்ளங்களை சந்திக்க பழகிக்கொள்ள வேண்டும் . தற்கொலை போன்ற ஒரு பாதகச்செயலுக்கு துணியும் மனம் , கடன்தொல்லைகளை சமாளிக்க இயலாமல் போவது ஆச்சர்யமே!
பெண்களில் பெரும்பாலும் பாலியல் துன்புறுத்தல் , தன்மீதான வன்முறையிலிருந்து விடுதலை , குடும்பவாழ்வில் திருப்தியின்மை , அழகு குறித்த கவலை , தான் குண்டாக இருக்கிறோம் என்று வருந்தியும் தான் கருப்பாக இருக்கிறோம் என்றெண்ணியும் தற்கொலை செய்துகொள்ளும் எத்தனையோ பெண்களை நாம் அன்றாடம் காணலாம் . பெண்களுக்கு பொதுவாகவே தாழ்வு மனப்பான்மை மிக அதிகம் . அது நம் ஆணாதிக்க சமூகம் அவர்களது உயிரணுக்களில் விதைத்த வித்துக்களின் பலன் . பெண்கள் இது போன்ற தருணங்களில் அப்பிரச்சனைகளில் இருந்து விலகியோ அல்லது சரியான தீர்வுகளை ஆராய்ந்தோ அல்லது சமூக நல ஆர்வலர்களின் உதவியையோ நாடலாம் .

தலையில் முடியில்லை , சிகப்பாக முகமில்லை , படிப்பு ஏறவில்லை , என மிகச்சிறிய பிரச்சனைகளுக்கே தற்கொலை என்றால் உலகில் யாருமே உயிர் வாழ இயலாது , கண்ணின்றியும் காலின்றியும் வாழ்வினை எதிர்த்து போராடும் எத்தனையோ பேரை நாம் அன்றாடம் காண்பதில்லையா . அவர்கள் தன் உடலின் ஒரு பாகமின்றி வாழ்நாள் முழுக்க வாழ்வதில்லையா .

இதற்கும் மேல் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லை மீரும் போது நிச்சயம் நீங்களோ அல்லது தற்கொலைக்கு முயல்பவரோ ஒரு நல்ல மனநலமருத்துவரை அணுகி இது குறித்து ஆலோசிக்கலாம் . இதுபோன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு ஒரு பக்கப்பதிவில் தீர்வுகளை கூறிவிட இயலாது . ஆனால் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வொருக்கு உதவ ஸ்நேகா இந்தியா என்கிற தொண்டு நிறுவனம் உதவி வருகிறது .

இது குறித்து மேலும் விபரங்களுக்கு.. http://www.snehaindia.org/

ஸ்நேகா இந்தியா என்கிற தொண்டு நிறுவனம் இது போன்ற காலங்களில் செய்ய வேண்டியவை என்ன , நம்மைத்தவிர நமது நண்பரோ அல்லது உறவினரோ இது போன்ற காரியங்களுக்கு ஆயத்தமானால் அதை எப்படி எதர்கொள்வது மற்றும் நேரில் மற்றும் தொலைப்பேசியிலும் கவுன்சிலிங் போன்ற சேவைகளை இலவசமாக செய்து வருகிறது . நிச்சயமாக மதமாற்ற நிறுவனம் அல்ல !. தற்கொலைகள் செய்யாதிருப்பதோடு நில்லாமல், அதற்கு முயல்வோரையாவது தடுக்கலாமே..

வாழும் வரை போராடு - வழியுண்டு என்றே பாடு.......
*****************