Pages

21 January 2010

இன்பம்,மகிழ்ச்சி,சந்தோசம்,களிப்பு,பூரிப்பு இத்யாதிகள்!(படத்தை சொடுக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்)

திண்டுக்கல் அருகில் இருக்கும் பெயர் மறந்து போன ஒரு சின்ன கிராமத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம். வார்த்தைகளில் எழுத முடியாத நிறைவான நிகழ்வு. அதனால் இந்த படமும் இரண்டு வரிகளும்தான்.


***


அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் நண்பர் மோகன் , என்னுடைய சிறுகதை ஒன்றை  குறும்படமாக்கியுள்ளார். கலைஞர் தொ.காவில் ஒளிபரப்பாக இருக்கும் குறும்படப்போட்டியில் அது திரையிடப்படவுள்ளது. எனக்கு போட்டுக்காண்பித்தார். என் கதையை விட அருமையாக எடுத்திருந்தார். அடுத்த மாதம் சிடி தருவதாக கூறியுள்ளார். கதை - அதிஷா என டைட்டிலில் வந்த போது மெய்ஜில்லிர்ப்பு. அடுத்த சுற்றுக்கும் இன்னொரு கதை கேட்டிருக்கிறார். எழுதிக்கொண்டிருக்கிறேன்.

***


இப்போதெல்லாம் பெயர் மறதி அதிகமாகிவிட்டது. பல நண்பர்களையும் நேரில் சந்தித்தாலும் அவர்களுடைய பெயர் சட்டென நினைவுக்கு வர மறுக்கிறது. காரணம் என்னவாக இருக்கும் என யோசிக்கிறேன். எதைக்குறித்து யோசிக்கிறேன் என்பதும் சமயங்களில் மறந்து போகிறது. சில நாட்களுக்கு முன் என் பெயரே மறந்து போய் கால்மணிநேர கடுமையான சிந்தனைக்கு பின் நினைவுக்கு வந்தது. நமக்கு நன்கு அறிமுகமாக நண்பராக இருந்தாலும் சமயங்களில் நேரில் சந்திக்கும் போது யார் இவரு ஏன் நம்மள பாத்து சிரிக்கிறாரு என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன். இது என்ன மாதிரி வியாதி என்று தெரியவில்லை. மருத்துவர் ருத்ரனிடம் ஒரு அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிவிட உத்தேசமாக இருக்கிறேன். ஆனாலும் ஆகாத நண்பர்களை(?) சந்திக்கும் போது இது போன்ற மறதிகள் மகிழ்ச்சியையே அளிக்கின்றன.

***

அடுத்த மாதம் எனக்கு நடக்கபோகிற ஒரு நிகழ்வு மகிழ்ச்சியானதா  இல்லை வருத்தம் தரக்கூடிய துன்பியல் சம்பவமா  என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நடக்க இருக்கிறது. முறையான அறிவிப்புகளை விரைவில் வெளியிட வேண்டும். எது நடந்தாலும் கோவையிலேயே நடக்கக் கடவது என்ற என்னுடைய பாட்டி சாபம் பலிக்கப்போகிறது. எது நடந்தாலும் நண்பர்கள் அனைவரும் நிச்சயம் வருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

***

கி்ழக்கு மொட்டைமாடியில் எப்படியாவது நாலு பேரை இந்த ஆண்டில் எழுத்தாளாரக்குவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் பெரியவர் ஒருவர் சென்ற வாரம் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தினார். நிறைய அறி்வுரைகள் ஐடியாக்கள் கூறினார். வந்திருந்த பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நானும். நல்ல முயற்சி. அடிக்கடி இது போன்ற பயிற்சிப்பட்டறைகள் நடத்தினால் என்னைப்போன்ற சிறுவர்களுக்கு உபயோகமாக இருக்கும். உடல்நலக்குறைவோடு அத்தனைபேரிடமும் பேசிய அந்த பெரியவரை நினைத்து சந்தோசப்படுவதா வருத்தப்படுவதா பெருமைப்படுவதா தெரியவில்லை.

***

பூனைக்குட்டிக்கவிதை
புரியவில்லை என் வீட்டு பூனைக்கு

அம்மா எத்தனை முறை கொன்றழித்துவிட்டாள்

போன முறை ஏழு

அதற்கு முன் எட்டு

இந்த முறை ஆறு

ஒன்றொன்றாய் கொல்ல சோம்பேறித்தனம்

சின்னகிண்ணத்தில் ஒரு துளி விஷம்

அம்மா அடித்துவிடுவாள் அரைசதம்

பூனையும்

புரியவில்லை என் வீட்டு பூனைக்கு

இன்னமும் இரவுகளில் புணர்ச்சி வெறியில்

பிதற்றிக்கொண்டு திரிகிறது இரவெல்லாம்

புரட்சி செய்யத்தெரியாத புரட்டுப் பூனை

****


19 January 2010

ஆயிரத்தில் இருவர்!


சில படங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். சில உங்களை தூங்கச்செய்யும். சிலவற்றை உங்களால் ஜீரணிக்க முடியாது. குப்பைகள் எப்போதும் குப்பைகள்தான். ஆனால் மிகச்சில படங்களே குப்பை என்று ஒதுக்கி விட இயலாமலும் ஆஹா என்று சிலாகிக்க முடியாமலும் , படம் முடிந்த பின்னும் அதுகுறித்த நினைவுகளால் வாட்டும் அல்லது அசைபோடச்செய்யும். ஆயிரத்தில் ஒருவன் கடைசி கேட்டகிரி. நான் கடவுள் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும். பலரை கடுப்படித்தாலும் கடுமையான முயற்சி. தன் அத்தனை பலத்தையும் கொண்டு மோதி இருக்கிறார் செல்வராகவன் என்னும் ஒற்றை மனிதர்.


படத்தின் கதை கொஞ்சம் பொன்னியின் செல்வன் கொஞ்சம் இன்டியானா ஜோன்ஸ் , நிறைய லாரா கிராப்ட் , மம்மி, பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் மற்றும் நம் காதுல பூ என பயணிக்கிறது. அது விஷயமல்ல. மேட்டரே திரைக்கதைதான். முதல் பாதி அட்வெஞ்சர். இரண்டாம் பாதி போர். இரண்டையும் ஒரு இடத்தில் முடிச்சு போட வேண்டிய கட்டாயம். அதற்கு மாய மந்திர தந்திர யட்சினி பட்சினிகளை உபயோகித்துள்ளார். செல்வராகவன் சறுக்கியது அங்கேதான். பேரரசு படங்களில் வருவதைப்போல முதல் பாதி காமெடி இரண்டாம் பாதி ஆக்சன் என்கிற அதே பாணிதான். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம். இரண்டு பாதிகளும் தனித்தனி அத்தியாயங்களாக மிகச்சிறந்த அனுபவங்களைத் தருகிறது. டபுள் ட்ரீட். சேர்த்து பார்க்கும் போதுதான் உச்சி மண்டையில் சுர்ர்ர்ர்.


கார்த்தி பாத்திரப்படைப்பு அற்புதம். படம் முழுக்க அடிவாங்குகிறார். ரொமான்ஸிலும் சீரியஸ் காட்சிகளிலும் நிறைவாய் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் ரசிகராக கைகளில் எம்.ஜி.ஆர் பச்சை குத்திக்கொண்டு ஆரம்ப காட்சிகளில் செய்யும் அலப்பறை அசத்தல் ரகம். ஆன்ட்ரியா இன்னொரு சோனியா அகர்வால் போல் இருக்கிறார். படம் முழுக்க கண்களில் சோகம் அப்பிக்கொண்டு திரிகிறார். அழகம் பெருமாளுக்கு புதுப்பேட்டை தலைவர்,கற்றது தமிழ் வாத்தியார் மாதிரியான பாத்திரங்கள் ஓகே! மிலிட்டரி ஆபீஸர்லாம் கொஞ்சம் டூமச். ரீமாசென் நிறைய காட்டினாலும் நன்றாக நடித்திருக்கிறார். சந்திரமுகி ஜோதிகா லெவலில் இல்லையென்றாலும் பல இடங்களில் உடல்மொழியில் கவர்கிறார்.


பார்த்திபன்!. இந்த பாத்திரத்தில் அவரைத்தவிர வேறு யாரும் சிறப்பாய் பொருந்த மாட்டார்கள். முரட்டுத்தனமான பாத்திரத்தை ஊதித்தள்ளியிருக்கிறார். இசை பல இடங்களில் இரைச்சலாக. உன் மேல ஆசதான்.. தனுஷ் என்றொரு பாடகர் பாடியுள்ளாராம். நல்ல எதிர்காலம் உண்டு. வசீகரிக்கும் குரல். இசையும் துள்ளல். கலை இயக்குனர் கைகளுக்கு முத்தமிடலாம். அட்சர சுத்தமான செட் அமைப்புகள். கிராபிக்ஸும் அங்கனமே!. கடற்கரை காட்சி தவிர. தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். அதிலும் அந்த மெகா உருண்டை சண்டைக்காட்சி மூனு D எபெக்ட்.


படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் என்று வரலாற்று ஆய்வாளர்களும் புத்திஜீவிகளும் கூக்குரல் எழுப்பி வருகின்றனர். எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியவில்லை. தெரியாது. பிரதான பாத்திரங்களுக்கு பைத்தியம் பிடிப்பது, அதற்கான காரணம் சரியாக சொல்லப்படவில்லை. அதற்கு பின் கிழவரிடம் நிர்வாணமாக நிற்பது , அவர் கையை தூக்கி விளக்கு பிடித்து பார்ப்பது,மேலும் சிலபல மந்திரக்காட்சிகள் என காரணம் தெரியாமல் வருகின்றனவற்றை தவிர மற்றவை ஓகேதான். படத்தை மிக நுணுக்கமாக பார்த்து நொட்டை சொல்வதில் விருப்பமில்லை. வேட்டைக்காரனிலும் அசலிலும் இத்யாதிகளிலும் அப்படி பார்த்து சொல்லலாம் , தமிழ் கூறும் சினிமா உலகம் தப்பிப்பிழைக்கும். நல்ல முயற்சிகளில் நொட்டை சொல்வது மேட்டிமைத்தனத்தை முன்னிருத்தலாமே தவிர அஞ்சு பைசாவுக்கு பிரயோசனப்படாது!திரைக்கதை முதல் பாதியில் மின்னல் வேகத்தில் பயணிக்கிறது. இரண்டாம் பாதி மனதை தைக்கிறது. புரண்டவன் கண்ணுக்கு உருண்டதெல்லாம் ஷகிலா என்பதைப்போல , எதைப்பார்த்தாலும் நம் மக்கள் ஈழப்பார்வையை முன்வைக்கத் துவங்கியுள்ளனர். எப்போதும் சிலருக்கு ஈழமக்களின் வேதனை மனதை தைத்திருப்பது புரிகிறது. ஆனால் ஒரு இனம் மற்றொரு இனத்தால் அழிக்கப்படுகிறது, ,,,, ,,,, ,,,.. படத்தின் கரு அதுதான். அண்மையில் வெளியான அவதாரும் அவ்வகையே! ஈழத்தில் மட்டுமல்ல ஆப்பிரிக்க கண்டத்தில் பல நாடுகளிலும் நிகழ்ந்து வரும் கொடுமை. இது இன்று நேற்றல்ல ஆதி காலத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்கிற ஒன்று. மனிதர்களிடம் மட்டுமல்ல மிருகங்களிடமும் அங்கனமே. இந்த படத்திற்கும் ஈழத்திற்கும்,     காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது போல சில காட்சிகள் நெருக்கமாய் தெரிந்திருக்கலாம். மற்றபடி யாதொரு தொடர்பும் இருப்பதாய் யாமறியேன் பராபரமே!. இடைவேளையில் முகம் தெரியாத நண்பர் செக்ண்ட் ஆப் பாருங்க பிரபாகரன் கதைய எடுத்துருக்காங்க என்றார். எனக்கு பிரபாகரனும் தெரியவில்லை ஈழமும் தெரியவில்லை. ஒடுக்கப்படும் இனத்தின் அழுகுரலைத்தவிர.


தாய் ஒருத்தி மார்பை பிதுக்கி ரத்தம் வழிவதை காட்டும் காட்சி கண்களை கரைக்கும் கவிதை. ;நெல்லாடிய நிலமெங்கே பாடலும். இயக்குனரின் உழைப்புக்கும் வித்தியாசமான கதைக்களத்தினை கையாண்ட விதத்திற்குமே பாராட்டலாம். மீண்டும் மீண்டும் மொக்கையான பார்முலாக்களில் சிக்காமல் தொடர்ந்து இது போல அடித்த ஆட வாழ்த்துக்கள். ஸ்பீல்பெர்க்கின் ஜீராசிக் பார்க்,இன்டியானா ஜோன்ஸ் போன்ற படங்கள் ஹாலிவுட்டிற்கு மிகப்புதிதான யுக்திகளுக்கான வரவேற்பை உறுதி செய்தவை. டிரெண்ட் செட்டர் என்றும் கூறலாம். இதுவும் அவ்வகையே! இதற்கு முன் ஹேராம் இது போன்ற முயற்சி. நிச்சயம் ஹேராமைப் போலவே அதிக உழைப்பு இந்த படத்திலும் இருக்கிறது.


திரைக்கதையை எளிமையாக்கியிருந்தால் அனைவருக்குமே பிடித்திருக்கும். படம் ஓடுமா என்பது கேள்விக்குறிதான். நிச்சயம் வரவேற்கத்தக்க முயற்சி. எனக்கு பிடித்திருக்கிறது. இன்னொரு முறை பார்க்க வேண்டும், ரீமா சென்னிற்காகவும் செல்வராகவனுக்காகவும்!12 January 2010

சந்தை,மந்தை,மேதைமை!‘’ங்கோத்தா என் புக்க பத்தியாடா தப்பா சொன்ன.. ங்கொய்யால உன் சங்க அருத்துருவேன், நான் எப்பேர்ப்பட்ட புடுங்கி எழுத்தாளன் தெரியுமா! என் புக்க பத்தியே கிண்டல் பண்றீயா! பாரதியாருக்கு அப்புறம் நான்தான்டா தமிழ்ல பெரிய எழுத்தாளன்’’ என்று யாரோ ஒரு பிரபல எழுத்தாளர்(கள்) யாரோ, என்னைப்போல் ஒரு அப்பாவி வாசகனை மிரட்டிக்கொண்டிருந்தார்.தனர்.

புத்தகசந்தையின் துவக்கமே இப்படித்தான் பயங்கர டெரராக ஆரம்பித்தது. இந்த முறை எண்ணிலடங்காத அளவுக்கு பல புதிய எழுத்தாளர்கள் உருவாகியிருந்தனர். பலரையும் நேரில் சந்தித்து பேச முடிந்தது. இதில் பலர் மற்றும் சிலர் கவிதைனா அடுத்த கண்ணதாசன், புனைவுனா அடுத்த புதுமைபித்தன் என்கிற இறுமாப்புடன் அலைந்து கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. போலவே... பேச்சிலும்.

நண்பர் ஒருவர் சிறுகதை தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் , அதை இன்னொரு நண்பருக்கு பரிந்துரைத்திருந்தேன். அவர் ஒரு முதன்மையான வாசகர், படித்துவிட்டு ஒன்னு ரெண்டுதான்பா தேறும் மத்ததெல்லாம் ரொம்ப அமெச்சூர் தனமா இருக்கு, இன்னைக்கு எழுத்தாளன் ஆகணும்னு ஆசைப்படறவங்க அதுக்காக காத்திருக்கறதே இல்ல, எழுத ஆரம்பிச்சதும் , காசிருந்தா போதும். உடனே சொந்த செலவுல இப்படி புக்க போட்டு அடுத்தவங்களுக்கு சூனியம் வைக்க ஆரம்பிச்சிடராங்க , சிறுகதை தொகுப்பு போடறதுனா கொறைஞ்சது நாற்பது ‘நல்ல’ கதையாவது வச்சுகிட்டு போடணும், சும்மா இருக்கறதையெல்லாம் அள்ளிப்போட்டுறக் கூடாது’’ என எனக்கு அட்வைஸ் செய்யத் தொடங்கிவிட்டார். காசிருப்பவன் கம்மர்கட்டு சாப்பிடுகிறான் என்னைப்போல காசில்லாதவன் வெறும் வாயைத்தானே மெல்ல முடியும். போகும் போது ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிவிட்டுப் போனார் , எந்த படைப்பா இருந்தாலும் அதுக்குனு ஒரு அடிப்படை உழைப்பு இருக்கணும்ல அதுதான் உன்னைமாதிரி ஆளுங்ககிட்ட மிஸ்ஸிங்னாரு! உரைத்தது. நல்ல வேளையாக அடுத்த ஐந்து வருடங்களுக்காவது எனக்கு சிறுகதை தொகுப்பு , பெருங்கதை தொகுப்பெல்லாம் போடுகிற ஆர்வமில்லை , போலவே அதற்கான அனுபவமும் , வாசிப்பும், திறமையும், உழைப்பும் இல்லை என்றே நம்புகிறேன்.

சந்தையில் செக்கு மாடு போல சுற்றி சுற்றி வந்ததில் இந்த முறை அதிக சேல்ஸ் எப்போதும் போல சமையல் , சுயமுன்னேற்றம் , ஜோதிட புத்தகங்கள்தான். அப்துல்கலாம் நன்றாக விற்கிறார் என்றார் நக்கீரர். கிழக்கில் ராஜிவும் மாவோயிஸ்டுகளும் நன்றாக விற்றதாம். தலையணை சைஸ் ஜெமோ புத்தகங்கள் கூட நன்றாக விற்றதாக தமிழினியில் அமர்ந்திருந்த நண்பர் கூறினார். அவர் ஒரு ஜெமோவின் அதி தீவிர ரசிகர் அப்படித்தான் கூறுவார் , எனக்கு நம்பிக்கையில்லை. சாரு சுழற்றி அடித்திருக்கிறார். அவரிடம் ஆளாளுக்கு ஆட்டோகிராப் வாங்குவதைப் பார்த்து கடுப்பாகி நானும் உயிர்மையிலிருந்து ஒரு புத்தகத்தை வாங்கி கையெழுத்துக்கேட்டேன். புத்தகத்தை வாங்கிப்பார்த்துவிட்டு சிரித்தார். அது உயிர்மையின் போன வருட ஜனவரி இதழ். (அந்தக்கடையில் குறைந்த விலைக்கு கிடைக்கிற ஒரே புத்தகம் அதுதான் , என்னைப்போல் ஏழை வாசகன் என்ன செய்வான்) ஆனாலும் பெருந்தன்மையோடு அதிலேயும் கிறுக்கிக்கொடுத்தார்.

க.ந.சு , ல.சா.ரா , நாகராஜன், சுரா, மௌனி, தர்மு சிவராமு, பிரமிள், பிச்சமூர்த்தி என்று பழைய பிரபலங்களின் புத்தகங்களின் விற்பனை படு மட்டம் என்றார் நண்பர். பல பிரபல புனைவு எழுத்தாளர்களின் நூல்கள் எதுவும் அதிகம் விற்றதாக தெரியவில்லை. பல இலக்கிய கடைகளிலும் கடைக்காரர் கூட்டம் முண்டியடித்தாலும் அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு கடலை சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். புத்தக சந்தையில் எங்கே தேடினாலும் ஈக்கள் இல்லை.
இந்த ஆண்டு புனைவுகளை விட கட்டுரைகளே அதிகம் விற்று தீர்ந்திருப்பதாக பாரதி புத்தகாலயத்திலிருந்து செய்திகள் கிடைத்தது. நண்பர் நர்சிம்மின் அய்யனார் கம்மா 600 பிரதிகள் விற்றதாக நண்பர் நர்சிம் சொன்னார். இணையத்தின் பலம்! நட்பே நலம். அகநாழிகையின் மற்ற புத்தகங்கள் எப்படி விற்றன, மாதவராஜின் பதிவர்கள் படைப்புகள் எப்படி விற்றது , தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்வேன்.

என்னைப்போன்ற அதீத மேதைமை கொண்ட சிறுவர்கள் படிப்பது அம்புலிமாமா. அவர்களுடைய கடையில் , தமிழ் தவிர மற்ற பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் கிடைத்தது.

அப்பா எனக்கு ஒரு குர்ஆனும் பகவத் கீதையும் திருவருட்பாவும் வாங்கிக் கொடுத்தார். மூன்றையும் படித்து பாராயணம் செய்து தினமும் ஒப்பிக்க சொல்லி இருக்கிறார். அப்போதாவது நான் திருந்துவேன் என்கிற நம்பிக்கை. ;-)

சுஜாதாவின் தலைமை செயலகம் மலிவு விலையில் , ரோட்டில் பழைய புத்தக கடையில் கிடைத்தது. விலை ரூ.16. பாரதி புத்தகாலயத்தில் நிறைய குட்டி புத்தகங்கள் ரூ.5 , ரூ.10 என்கிற விலைகளில் கிடைத்தது. நிறைய வாங்கி வைத்துக்கொண்டேன். லிச்சி ஜூஸ் குடித்தேன். கிருஷ்ணா சுவீட்ஸில் பால் கொழுக்கொட்டையும் அம்மணி கொழுக்கட்டையும் தின்றேன். (உபயம் – நண்பர்)
நடுவில் ஒரு பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது. மதியம் சோறு கூட தின்னாமல் பேய்த்தனமாக சுற்றிக்கொண்டிருந்தேன். வந்தவர்கள் யார் என்ன பேசினார்கள் தெரியாது. பசி கண்ணை மறைத்து விட்டது. அப்போது கவிஞர் கென் கொடுத்த நான்கு முறுக்கு + ஒரு பாக்கெட் வறுத்த கடலைக்கும் என் நன்றி. அமிர்தமாக இருந்தது. பதிவர் சந்திப்பு நிறைவாய் முடிந்தது. நண்பர்கள் பலரையும் பார்த்தேன். பார்த்தேன்.

சகோதரர் சிவராமன் ஜெயமோகன் புத்தகங்கள் சில வாங்கிக் கொடுத்தார். படிக்க முயற்சித்து வருகிறேன். படித்து முடித்து உயிரோடிருந்தால் அதைப்பற்றி எழுதுகிறேன். (ஜெமோவுக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் அவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றே ஒன்றை கொடுத்து படிக்க வைத்து கொடுமைப் படுத்தலாம்). உயிர்மையில் மனோஜூடன் நண்பர் வளர்மதியை சந்தித்தேன். என் மேல் கடுமையான கோபத்திலிருக்கிறார் போலிருக்கிறது. பேசவில்லை. எனக்கு அவர்மேல் எந்த கோபமோ அல்லது வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ இல்லை. என் நண்பர்களுக்கிருக்கலாம். அதியமானை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் இயலவில்லை. வா மணிகண்டனோடு நிறைய உரையாட முடிந்தது. நல்ல அனுபவம்.

மற்றபடி பட்டியலிட்டு பீத்திக்கொள்ளும்படிக்கு ஏதும் புத்தகங்கள் வாங்கவில்லை என்பதே உண்மை. வாங்கியிருந்தாலும் பட்டியலிடவேண்டும் என்கிற முனைப்பும் இல்லை.

06 January 2010

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஜாக்கி ஜட்டியும்!

சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு பஸ் கிடைக்காமல் கோயம்பேடில் அல்லாடிக் கொண்டிருந்தேன். என்னை நெருங்கிய இளைஞர் ஒருவர் இன்னா சார் ரூமா! என்றார். இல்லைங்க என்று இளித்து வைத்தேன். மேற்படி மேட்டர் ஏதாவதுங்களா என்று மண்டையை சொரிந்தார். எனக்குத்தான் இது போன்ற காரியங்களில் புத்தி கந்தகமாய் எரியுமே , டக் என விசயத்தை உள்வாங்கிக்கொண்டு மேலும் தொடர்ந்தேன். மேற்படினா எங்கே? எவ்ளோ?. அவனுக்கு என் மேல் லேசாக நம்பிக்கை வந்திருக்க வேண்டும். இப்போது என்னைப்பார்த்து புன்னகைத்தான். ஆட்கள் பற்றிச்சொன்னான். வெரைட்டி. விலை சொன்னான். இடம் சொன்னான். இதையெல்லாம் சொல்லும் போதே திண்டுக்கல் பேருந்து இரண்டாம் பிளாட்பாரத்தில் யூ டர்ன் அடித்துக்கொண்டிருந்தது. சார் அடுத்த வாட்டி சென்னை வரும்போது உங்க கிட்ட பேசறேன் என அந்த இளைஞனின் எண்ணை வாங்கி குறித்துக்கொண்டேன். பின்னால் எப்போதாவது யாருக்காவது கேட்டால் கொடுக்கலாம் என்கிற சமூக சேவை மனப்பான்மைதான் கூடவே பிறந்ததாச்சே! ஆனால் நிலையத்தில் அத்தனை பேர் இருக்க என்னை மட்டும் குறிவைத்து எப்படி கேட்டான்?
பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். குளிர்சாதனப் பேருந்து அது. உள்ளே ஏறிப்பார்த்தால் ஏற்கனவே வண்டி ஃபுல். நானும் லேசாக குவாட்டர். அதனால் மங்கிய ஒளியில் கண்களை துடைத்துக்கொண்டேன்.. பார்த்தேன். கடைசி இருக்கையில் ஒரு இடம் மட்டும் இருந்தது. தபதபவென விரைந்து சென்று முதலில் என்னுடைய பெரிய அழுக்குப் பிடித்த தோல் பையை அதன் மேல் வைத்துவிட்டு கொஞ்சம் மூச்சும் லேசாக சுற்றி அமர்ந்திருந்த யுவதிகளையும் நோட்டம் விட்டுக்கொண்டேன். அனைவரும் அழகாக இருந்தனர். ஆனால் துணையுடன் இருக்கமாக அமர்ந்திருந்தனர். கொடைக்கானல் , தேனிலவு இத்யாதிகளாக இருக்கக்கூடும். மீண்டும் ஒரு பெருமூச்சு இப்போது கொஞ்சம் சூடாக வெளியானது.
டிரைவருக்கு அருகிலிருந்து என்னைப்பார்த்துக் கொண்டிருந்த கண்டக்டர் விறுவிறுவென ஓடிவந்து சார் இது ஏசி பஸ் என்றார். ஏன்ங்க உங்களுக்கு அதுல ஏதாவது டவுட் இருக்கா என்றேன். இல்லைங்க இதுல டிக்கட் 375 ரூவா என்றார். அதுக்கென்னங்க கூட வேணா உங்களுக்கும் அஞ்சு ரூவா சேர்த்து தரேன், ஏன் இதை எங்கிட்ட மட்டும் ஸ்பெசலா ஓடி வந்து சொல்றீங்க என்றேன். கண்டக்டர் ஏதும் பேசாமல் முறைத்தபடி அங்கிருந்து விலகினார். எனக்கு புரியவில்லை.
ஒருவழியாக இடம் பிடித்து அமர்ந்தேன். வெரிகுட் ஏசி பஸ். போர்த்திக்கொள்ள போர்வை கொடுத்தார்கள். ஆனால் கொடுக்கும் போதே காலைல மடிச்சு குடுத்துருங்க என்று சைடில் பிட்டு வேறு. அதுவும் என்னிடம் மட்டும் ஸ்பெசல் உபதேசம். ங்கொய்யால என்று திட்டவேண்டும் போல் இருந்தது என்ன செய்ய!, ஆவென கொட்டாவி விட்டு கண்ணை மூடி திறந்தால் திண்டுக்கல். வண்டி செம ஸ்பீட் போலருக்கு நமக்கு போதைல சரியா தெரியலையோனு நினைச்சிக்கிட்டேன். விடியற்காலையில் நரிமுகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லுவார்கள். நான் முழித்தது ஐ.பெரியசாமி முகத்தில்தான். திண்டுக்கல்லில் இறங்கினால் எந்தப்பக்கம் திரும்பினாலும் வாழும் வள்ளலாரே , திருவள்ளுவரே, பண்பில் பெரியாரே , டான்ஸ் மாஸ்டரே, பரோட்டோ மாஸ்டரே , உருட்டுக்கட்டை உலகநாதரே என்று அடிக்கு நான்கு பிளக்ஸ் பேனர்கள். எல்லாவற்றிலும் கலைஞர் மற்றும் ஐபி.சாமி கூட்டணி பப்பரப்பா என சிரித்துக்கொண்டு இருந்தனர். எல்லா பேனரிலும் அழகிரி ஸ்டாலின் மிஸ்ஸிங். ஒரு வேளை இவரும் கலைஞருக்கு மகனா இருப்பாரோ என்று கடுமையான டவுட். அதுக்குத்தான் இருக்காரே திமுக உடன்பிறப்பு! 
கூப்பிடு அந்தாளை என அழைத்தேன்.
நம் திமுக தோழருக்கு போன் போட்டு ஐ.பெரியசாமி கலைஞருக்கு என்ன முறை வேணும் என்றேன். யோவ் அந்தாளு கட்சிக்காரரு அவ்ளோதான் வேற ஏதும் ரத்த சொந்தமெல்லாம் கிடையாது, ஆனா திண்டுக்கல் ஏரியா மொத்தமும் அவரு கன்ட்ரோல்தான், திமுகவோட உட்கட்சி அமைப்புகள பார்த்தீங்கன்னா என்று துவங்கினார். பயந்து போய் போனை கட் பண்ணிவிட்டேன். நான் சந்தேகம் கேட்கும் போது நன்றாக தூங்கிக் கொண்டிருந்திருப்பார் போல பாவம் , காலை நான்கு மணிக்கு யார்தான் தூங்க மாட்டார்கள். தட்டி எழுப்பி கேட்டாலும் தலைவன் புகழை சரியாக பரப்புகிற தோழரல்லவா!
பஸ் நிலையத்திற்கு அருகில் ஆட்டோக்கள் நின்று கொண்டிருந்தது. ஒரு கிங்ஸை பற்றவைத்துக்கொண்டு , ஒரு ஆட்டோ அருகில் சென்றேன் , பத்திரிக்கை படித்துக்கொண்டிருந்தார் ( நேரம் காலை 5 ) இங்க கோமத் லாட்ஜ் என்றேன். அது இங்கருந்து இரண்டு கிலோமீட்டர் இருக்கும் இந்த ரோட்ல ஸ்ட்ரைட்டா நடந்து போய் வலது பக்கம் திரும்புனீங்கன்னா வெள்ளை பெயின்ட் அடிச்சிருக்கும் , பக்கத்துல கோல்டன் பார்னு போட்டிருக்கும் பாருங்க என்று மீண்டும் பேப்பருக்குள் குதித்தார். சார் நான் ஆட்டோல போகறதுக்கு கேட்டேன் என்றேன். அசடு வழிய சிரித்தபடி வழி கேக்கறீங்களோனு நினைச்சேன் சார் என்று மண்டையை சொரிந்து கொண்டு முப்பத்தைந்து என்றார் , இருப்பத்தைந்து பேசி முடித்து ஏறினேன். மீண்டும் எனக்கு புரியவில்லை ஏன் அந்தாளு எனக்கு வழி சொன்னான் என்பது.

அடுத்த காட்சி கோமத் லாட்ஜில். சார் ரூம்! அரைத்தூக்கத்திலிருந்த லாட்ஜ் காரரை எழுப்பினேன். கஷ்டப்பட்டு முழித்துப் பார்த்தார். சார் ரூம் மீண்டும் கத்தினேன். சார் சாதா ரூம் 200 ரூவா, டிவி இருக்காது , சுடு தண்ணி வராது, பரவால்லயா புக் பண்ணிக்கவா? ஏன்ங்க டீலக்ஸ் ரூமெல்லாம் கிடையாதா என்றேன். இருக்குங்க அதுனா ஒரு நாளைக்கு 500 ரூவா ஆகும். பரவால்ல அதையே குடுங்க என்றேன். எதையுமே எழுதாமல் 600 ரூவா அட்வான்ஸ் குடுங்க என்றார். ஏன்ங்க அட்ரஸ் போன் நம்பர்லாம் வேண்டாமா? ம்ம் இருங்க என்று ஒரு லெட்ஜரை நீட்டினார். ஒரு வழியாக ரூம் கிடைத்து விட்டதே என்று மகிழ்ச்சியாக இருந்தது. விதி விடாது விரட்டியது. இப்போது ரூம் பாய் வடிவில். ரூம் பாய்க்கு என்னை விட இருபது வயது கூட இருக்க வேண்டும். கையில் ரிமோட்டுடன் நடந்து வந்தார், நானோ என்னுடைய பொட்டி படுக்கைகளையும் சுமந்து கொண்டு விருக் விருக் என்று நடக்க , அவர் ஏதோ கஸ்டமர் போல முன்னால் நடந்தபடி இருந்தார். ரூமை காட்டிவிட்டு ஏதாவது வேணும்னா ரிஷப்சனுக்கு கூப்பிடுங்க என்று வாசலில் சொல்லியபடி நகர ஆரம்பித்தார். சார் சார் எனக்கு டீ.. என்று நான் பேச ஆரம்பிப்பதற்குள் அந்த ஆள் இரண்டு மாடிகள் கடந்து ரிசப்ஷனை அடைந்து விட்டார். ரிமோட்டை போட்டால் டிவி ஓட வில்லை. ஹீட்டரைப் போட்டால் தண்ணீர் ஐஸ் போல வருகிறது. ரிசப்ஷனில் கூப்பிட்டுச் சொன்னேன். நிலையில் மாற்றமில்லை. ஏன் இந்த லாட்ஜ் காரன் நம்மள மதிக்கவே மாட்டேங்கிறானுங்க என்று நினைத்துக்கொண்டேன்..
திண்டுக்கல்லின் புகழ்வாய்ந்த தலப்பாக்கட்டியில் பிரியாணி சாப்பிடச் சென்றேன். அங்கேயும் இதே கதை. ஒரு சிக்கன் பிரியாணி குடுங்க. சாரி சார் மட்டன்தான் இருக்கு அதுவும் விலை 90 ரூவா. எனக்கு பயங்கர கடுப்பாகி விட்டது. யோவ் நான் விலையா கேட்டேன் என எரிந்து வைத்தேன். சேதாரம் அதிகமாக இருந்த பிரியாணி கிடைத்தது.. இப்போதும் புரியவில்லை ஏன் அந்தாளு விலைய சொன்னான்? மீண்டும் குவஸ்டீன் மார்க் எண்.235.
இப்படியாக சென்ற இடமெல்லாம் ‘சிறப்பானவரவேற்புகள் கிடைத்த்தால் என்னுடைய கிழிந்த லுங்கியையும் அழுக்கு சட்டையையும் கழட்டி காக்காவிற்கு போட்டுவிட்டு ,ஜாக்கி ஜட்டி வெளியே தெரியும் டாமி ஹில்ஃபிகர் ஜூன்ஸையும் பீட்டர் இங்கிலாந்து சட்டையையும் மாட்டிக்கொண்டு திண்டுக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி விழாவை சிறப்பித்தேன்!