Pages

03 April 2010

பையா
மின்னல் மாதிரி! காத்து மாதிரி! தீ மாதிரி! இன்னும் எல்லா மாதிரியும் செம ஸ்பீடா படபடனு பறபறனு ஒரு படம் பார்த்து எத்தனை நாளாச்சு? அயன் படத்துக்கு பின் கமர்ஷியல் ரசிகர்களுக்கு சரியான தீனி கிடைக்கவில்லை. யதார்த்த படங்கள் பார்த்து நொந்து போன தமிழ்சினிமா ரசிகர்களின் அந்த தீராத தாகத்துக்கு சரியான சுறு சுறு பைவ் தவ்ஸன்ட் பீர் பேரலாக வந்திருக்கிறது பையா.

ஒரு பொண்ண பைக்ல பின்னாடி உக்காத்தி வச்சிகினு அப்படியே ஈசிஆர் ரோட்டுல வுட்டா , போய்கிட்டே இருக்கலாம்னு தோணும். அவளை திருப்பி வீட்டுக்கு கொண்டு போய் விடற வரைக்கும் பைக் ஓட்டிகிட்டே இருக்கலாமானு இருக்கும். அப்படி ஒரு காதல் கதை , அதுல செமத்தியான சேஸிங் , வில்லன்களோடு அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் என்று மசாலாவை அள்ளி கொட்டி காரசாரமான பிரியாணி படையல் பையா.

பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் காதல். தொடர்ந்து மீண்டும் மீண்டும் அவளை பார்த்தும் மயங்கும் ஹீரோ. அவளுக்காக ஒரு பயணம். இருவரையும் விரட்டும் இரண்டு கும்பல். மீண்டு காதல் கைகூடியதா என்பது மொக்கையான பாகவதர் காலத்து கதை. அதை செம்மா போர்ட் கார் முரட்டு ஹீரோ க்யூட் ஹீரோயின் டெரர் வில்லன்கள் என களேபர திரைக்கதையில் அனல் பறக்கிறது படம்.

முன்வரிசை ரசிகர்கள் கார்த்தி காதலித்தாலும் , கலவரமாய் ஐம்பது பேரை அடித்து உதைத்தாலும் துள்ளி குதிக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் பார்க்கும் நமக்கே நரம்பு புடைக்கிறது யாராவது நாலு பேரை தூக்கி போட்டு தூர்வாற வேண்டும் போலிருக்கிறது. காதல் காட்சிகள் கவிதையாய் வடித்திருக்கிறார் லிங்கு. ஒவ்வொரு பாடல் காட்சியிலும் அவருடைய உழைப்பு அபாரமாய் தெரிகிறது. லிங்குசாமிக்குள் ஒரு கவிஞன் நிச்சயம் இருக்ககூடும். அல்லது அவரது கதை விவாதக்குழுவின் நா.முத்துகுமாரும் இருந்திருக்கலாம்.

இரண்டே பேர் ஒரு கார் என்று பயணிக்கும் கதை , துவக்கத்தில் பொறுமையாக கிளம்பினாலும் போக போக அனல் பறக்கிறது. அதுவும் அந்த இடைவேளைக்கு முன் வரும் சண்டைக்காட்சி. விசிலடிச்சான் குஞ்சுகள் ஊதி ஊதி வாய் வீங்கிவிடும். படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் அந்த காமடி நடிகர் நல்ல நடிப்பு. வடிவேலு பண்ணியிருந்தால் இன்னும் கலக்கலாய் வந்திக்கும்.

கார்த்தி பேண்ட் போட்ட பருத்திவீரனை போல் வருகிறார். சூர்யாவை நினைவூட்டினாலும் செம பாடி. இன்னா சோல்டர். செம மேன்லி. அவர் ஐம்பது பேரை அடித்தாலும் நம்பும்படிதான் இருக்கிறது. (இது போன்ற படங்களை பார்க்கும் முன் லாஜிக் சட்டைகளை வாசலில் அடமானம் வைத்து தம் அடித்துவிடுவது என்னுடைய வழக்கம்). அவர் காதல் பீலிங்கில் விழும்போதெல்லாம் நமக்கும் அது தொற்றிக்கொள்கிறது. நல்லா பண்ணிருக்கார். தமன்னா – குளிர்ச்சி – ஐஸ்கட்டி - ஐலவ் யூ.

படத்தின் கேமரா மற்றும் பிண்ணனி இசை பற்றி சொல்லவில்லையென்றால் சாமி கண்ணை குத்திவிடக்கூடும். படத்தின் மிகப்பெரிய பலம் என்றெல்லாம் சொல்லமுடியாது. படமே கேமராவும் பிண்ணனி இசையும்தான். மதியின் கேமரா யுவனின் இசை .. அய்யோ உள்ளம் கொள்ளை போகுதே! நா முத்துகுமாரின் வரிகளில் பாடல்கள் ஒவ்வொன்றும் வைரங்கள். அதை படமாக்கிய விதம் அதை விட அருமை.

படம் பார்க்கும் போது லேசாக தெலுங்குப்படம் பார்ப்பது போன்ற உணர்வு உண்டாவதை தடுக்க முடியவில்லை. அதிலும் வில்லன்கள் தெலுங்கு ஹிந்தியெல்லாம் பேசும்போது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் படத்தின் வேகத்தில் எல்லாம் கடந்து போய்விடுகிறது. படம் காட்டுத்தனமாய் பயணிக்கிறது. இப்போதான இவன் ஹீரோயின பஸ்ல பார்த்தான் என்று நினைக்கும் போதே படம் பாதி முடிந்துவிடுகிறது.

நடுநடுவே சண்டைக்கோழியில் கொஞ்சம் , கில்லியில் கொஞ்சம் , ரன்னில் கொஞ்சமாய் சிலபல தெலுங்குப்படங்களில் கொஞ்சமாய் அள்ளித்தெளித்திருப்பது நெருடல். அதிலும் குடையை பிடித்துக்கொண்டு வில்லன்களிடமிருந்து தப்புவது அக்மார்க் தமிழ்ப்படம் மச்சம் காமெடி.. முடியல! படத்தில் காமெடி பஞ்சத்தை போக்கும் காட்சி.

மற்றபடி லிங்குசாமியின் உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. அதிலும் வசனங்கள் செம ஷார்ப். ரன்னுக்கு பின் மீண்டும் லிங்குவை ரசிக்க முழுமையாய் ரசிக்க முடிகிறது.

படம் முடிந்து வெளியில் வந்தால் மனசு பரபரவென பறக்கிறது. துறுதுறுவென துடிக்கிறது. பைக்கை 90களில் விரட்டச்சொல்கிறது. டிராபிக் போலிஸுக்கு சல்யூட் அடிக்கச் சொல்கிறது. லிங்குசாமியின் வெற்றி அதில்தான் இருப்பதாய் எண்ணுகிறேன். இலக்கியதரமான படங்களை விரும்புவர்களுக்கும் லாஜிக் பார்ப்பவர்களுக்கும் படம் நிச்சயமாக பிடிக்காது. கடும் மொக்கையாக இருக்ககூடும். அவர்கள் இரண்டு மண்டலத்துக்கு இது மாதிரி படங்களை தவிர்த்துவிட்டு அ.தெரு மாதிரியான படங்களை பத்துமுறை பார்த்து பயனடையலாம்.

கமர்ஷியல் படங்களை விரும்பிப்பார்க்கும் ரசிகர்களுக்கும் குடும்பத்தோடு கண்டுக்களிக்கவும் சரியான சம்மர் ட்ரீட் பையா!

படம் பார்த்து முடித்த பின் எல்லாமே புதுசா இருக்கு , அப்படியே ரெக்க கட்டி பறக்கற மாதிரி இருக்கு!