Pages

30 September 2010

ஞானத்தைத் தேடி

தோழரும் நானும் குடிப்பழக்கமோ புகைப்பழக்கமோ இன்னபிற பழக்கங்களோ இல்லாத டி டோட்லர்கள். உத்தமக் குடிமகன்களாய் வாழநினைக்கும் ஈடு இணையில்லா தேசபக்தர்கள். ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்குப் பின் நாங்கள்தான் என்று சொன்னால் அது மிகையல்ல. நான்கூட அசைவமாவது உண்பவன், ஆனால் தோழரோ எதையும் ஏறெடுத்தும் பார்க்காத உத்தமசீலர். முட்டை மட்டும்தான். எதற்குமே ஆசைப்படாமல் கிடைத்ததை உண்டு , உடுத்தி, சூப்பர் இல்லையென்றாலும் சுமாரான ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துகொண்டு, மதிய தயிர்சாதத்தோடு பிசைந்து போன லௌகீக வாழ்க்கையர்கள் நாங்கள்.


எங்களுடைய கைகளில் ஐம்பதும் நூறும் சிக்குவதே அபூர்வம். வாங்குகிற ஐந்துக்கும் பத்துக்கும் 'அந்த' மாதிரி ஒரு ஆசை வந்திருக்க கூடாது. அது எவ்வளவு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது எங்களுக்கு அப்போது தெரியவில்லை. ஆனாலும் ஆசை யாரை விட்டது. ஆசைதான் அழிவுக்குக் காரணம் என்றார் புத்தர்.


அப்படிப்பட்ட எங்களுக்கு ஏன் அப்படி ஒரு ஆசை வந்தது என்றே தெரியவில்லை.. ''பாஸ் நாம தண்ணியடிச்சு பார்த்தா இன்னா?'' தோழருக்கு அதிர்ச்சி பிளஸ் ஆச்சர்யம் பிளஸ் மகிழ்ச்சி. ''பாஸ் நானும் உங்ககிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன் நீங்களே சொல்லிட்டீங்களே''  , இத்தனை வருஷத்துல அதுமாதிரி ஆசை பலமுறை வந்தும் யார்கிட்டயுமே கேட்டதில்ல தெர்யுமா'' என்று மிகமிக சோகமாக கேட்டபோது என் கண்களில் நீர் கோர்த்துவிட்டது. ''பாஸ் டோன்ட் வொரி பாஸ் , நாம அடிக்கறோம் எவ்ளோ செலவானாலும் அடிக்கறோம், காசு நீங்கதான் குடுக்கறீங்க'' என்று அவரை தேற்றினாலும் என் கண்களில் பீய்ச்சி அடிக்கின்ற நீரை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். ஆம் அழுதேன்.


முடிவெடுத்தாச்சு எங்கே செல்வது? யாரைக்கேட்பது? திக்குத்தெரியாத காட்டில் ஒரு கட்டிங்கைத்தேடி  எங்களுடைய பயணம் தொடங்கியது. அதில் ஒரு பிரச்னை இருக்கிறதே? ''பாஸ் வீட்டுக்கு போய் ஸ்மெல் வந்து மாட்டிகிட்டா பொண்டாட்டி போட்டு பொழந்துருவா பாஸ் , ரொம்ப கோபமாகிட்டா அடிப்பா பாஸ், அவ ஒரு பத்ரகாளி'' என்றேன். ''ஆமா பாஸ் , என் பொண்டாட்டியும் கிட்டத்தட்ட..'' என்று சொல்லும் போதே தோழரின் கண்களில் வழிய முற்பட்ட கண்ணீர்துளியை ஸ்டைலாக தட்டிவிட்டார். அது சாலையோரம் நின்று கொண்டிருந்த பசுமாட்டின் மேல் பட்டுத்தெரித்தது. டிங் டிங் டிங்...துளிதுளியாக


''பாஸ் இப்படி பண்ணுவோம் இப்ப மணி இரண்டு, நாலு மணிக்குள்ள ஆளுக்கு  ஒரு பீர் குடிச்சிட்டு , அப்படியே சாப்பிட்டுட்டு , பைலட் தியேட்டர்ல ஆலைஸ் இன் வொன்டர்லேன்ட்னு ஒரு படம் ஓடுது அத பார்ப்போம். படம் முடிய ஏழு, ஏழர ஆகிடும். முடிஞ்சதும் வீட்டுக்கு போயிரலாம். ஸ்மெல் வர வாய்ப்பில்ல'' என்று ஐடியாவை கொடுக்க மெய்சிலிர்த்து என்னை கட்டிபிடித்து பாஸ் உங்கள மாதிரி பிரண்டு கிடைக்க நான் குடுத்துவச்சிருக்கணும் என்றார். சொல்லும்போதே அவர்கண்களில்.. யெஸ் சேம் கண்ணீர்த்துளி.. டிங் டிங்டிங்..


ராயப்பேட்டையில் ஏதாவது ஒரு டாஸ்மாக்கில் குடிப்பதாக முடிவெடுத்து, தேடினோம். தேடினோம். டாஸ்மாக்கே இல்லை. ஒன்று கூட இல்லை. என்ன ஓர் ஆச்சர்யம் சென்னையின் இதயத்தில் ஒரு டாஸ்மாக் இல்லையே. அவ்வை சண்முகம் சாலையில் தேடினோம், லாயிட்ஸ் ரோடில் தேடினோம். ம்ஹூம் அகப்படவில்லை டாஸ்மாக்கு. சில பார்கள் தென்பட்டாலும் பாரில் குடிப்பதற்கும் கும்மாளம் அடிப்பதற்கும் போதிய வருவாய் இல்லையே.

எங்களுடைய டாஸ்மாக் தேடல் தொடர்ந்தது. ஆட்டோ காரர் ஒருவரிடம் விசாரிக்கலாம் என்றார் தோழர். விசாரித்தார்.


''எக்சூஸ்மீ சார், இங்க டாஸ்மாக் பக்கத்துல எங்கருக்கு'' 


கக்கத்தை சொறிந்தபடி வழிசொன்னார் ஆட்டோக்கார். ''சார் இப்படிக்கா நேர போய் லெப்ட்ல திரும்பினா ஒரு மார்க்கெட் இருக்கும் , அப்படியே நேராபோனா நால் ரோட் வரும் , அதை தாண்டி வலது பக்கம் ஒரு கடை இருக்குங்க , நல்ல கடை!''.


நான் ஆர்வ மிகுதியில் ''பாஸ் அங்க குளிர்ந்த பீர் கிடைக்குமா'' என்றேன்.


ஆட்டோக்கார் கொஞ்சமாய் முறைத்தாலும் ''ம்ம்.. கிடைக்கும்'' என்றார்.


மீண்டும் ஆர்வம் கொப்பளிக்க

''பார் வசதி இருக்குமா சார்'' என்றேன்.


''அதெல்லாம் இருக்கும்ங்க'' என்றார் சலிப்போடு. என்ன பிரச்சனையோ


''பார் ஏசிங்களா, ஏசிக்கு தனியா பைசா ஏதாச்சும் குடுக்கணுமா..'' என்றேன்.


''&*%&**%*%**%*&*(* '' என்றார்.


தோழருக்கு கோபமே வந்துவிட்டது. யோவ்.. போதும்யா என்று என் தோளை பிடித்தார். ஆட்டோக்காரர் அந்த " &*%&**%*%**%*&*(* " ஐ கொஞ்சம் கோபமாகத்தான் சொன்னார். பாவம் வீட்டில் பொண்டாட்டி பிரச்சனையோ என்னவோ? புன்னகையோடு அங்கிருந்து திரும்பிப்பார்க்காமல் வண்டியில் விர்ர்ர்ரூம் என நகர்ந்தோம். " பாஸ் ஏன் பாஸ் ஏன்?" என்றார் தோழர். பாஸ் எதுவா இருந்தாலும் டீடெயிலா கேட்டுறணும்ல என்றேன். வண்டியை நிறுத்தியவர் திரும்பி என்னை பார்த்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன.


ஒருவழியாக தேடோ தேடென்று தேடி கடைசியாக திருவல்லிக்கேணி பாரதியார் சாலையில் ஒரு டாஸ்மாக்கை கண்டுபிடித்தோம் அதற்குள்ளாகவே மணி மூன்றாகியிருந்தது. பாஸ் பசிக்குது பாஸ்! இன்னொரு நாள் தண்ணி அடிச்சிக்கலாமே என்றார் தோழர். நோ பாஸ், நாம தண்ணி அடிக்கறதுனு முடிவுபண்ணிட்டோம் இனிமே பின்வாங்கப்படாது, நாமெல்லாம் யாரு..! என்றேன் நான்.


அது ஒரு அழகிய டாஸ்மாக். அழுக்குப்பிடித்திருந்தாலும் பார்க்க அழகாகவே இருந்தது. பச்சை வண்ண போர்டில் வெள்ளை எழுத்துக்களில் அடுக்கடுக்காக டாஸ்மாக் என எழுதப்பட்டிருந்தது. உள்ளே நுழைய எங்கும் சிவப்பாய் பாக்குபோட்டு துப்பியிருந்தனர். எங்கும் துர்நாற்றம் நிறைந்திருந்தது. பாவம் தோழர் நொந்து போய் பேண்டை ஒருமுழம் தூக்கிப்பிடித்தபடி நடந்தார். சளக் புளக்.. என வழியெல்லாம் வாந்தி. பாஸ் நேரா நாமளே வாங்கி குடிக்கணுமா பார்ல போய்தான் குடிக்கணுமா? என்றார். நோ பாஸ் அது நம்ம இஷ்டம். ஆனாலும் நாம பார்லயே குடிக்கலாம், காசு நீங்கதான தரப்போறீங்க என்றேன்.


மாடியிலிருந்தது அந்த அழுக்கு பார். பார்முழுக்க அழுக்கு சேர். சேர்களெல்லாம் துருப்பிடித்து கரையாகி மிக்சர் தூள்களும், நசுங்கிய யூஸ்அன்த்ரோ கப்புமாக பரப்பிக்கிடந்தன. காலியாய் இருந்த ஒரு டேபிளில் போய் அமர, சின்னப்பையன் ஒருவன் கையில் கோல்பிளேக் பாக்கட் கவரோடு, தலையிடுக்கில் பேனாவும் சொருகியபடி அருகில் வந்து, இன்னா சார் வேணும் என்றான். தோழர் என்னை பார்க்க நானும் தோழரை பார்த்தேன். இரண்டு பீர் குடுங்க நல்லா சில்லுனு இருக்கணும், கிங்பிஷர் குடுங்க என்றேன். தோழர் என்னை பெருமிதத்தோடு பார்த்தார். பாவம் அவருக்கு இந்த பீர் பிராண்டு பெயர்களெல்லாம் தெரியாது. மீண்டும் பெருமிதத்தில் கண்ணீர் சிந்த வேண்டும் என அவர் நினைக்கு போதே , அந்தக் கண்ணீரை தரையில் விழாமல் பிடித்துக்கொள்ள என் கைகள் நீண்டன.. நீண்டன.. நீண்டன


பீர் வந்தது. அது கிங்பிஷர் இல்லை. தம்பி கிங் பிஷர் தான கேட்டேன். அது சில்லுனு இல்லணா.. மார்க்கோ போலா தான் சில்லுனு இருக்கு.. என்றான் சிறுவன். மார்க்கோ போலோ பேரே ஒரு மார்க்கமாக இருந்ததாலும் அவரைப்பற்றி பள்ளிக்காலத்திலேயே படித்திருந்ததாலும் ஒப்புக்கொண்டேன். பாஸ் ஒரு ஸ்மால் ரிக்வஸ்ட் சிக்கன் 65 சொல்லிக்கவா என்றேன். சொல்லிக்கங்க பாஸ் என்றார் மிடுக்காக.. தம்பி ஒரு சிக்கன் 65, ஒரு லெக்பீஸ்,அப்புறம் நெத்திலி ப்ரை, அப்புறம் சாருக்கு நல்லா காரமா ஒரு காரக்கடலை பாக்கட் என்றேன். தோழர் அருகில் என்னையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். வாயில் புன்னகை கண்களில் சோகம் அடடா! சிவாஜியை நேரில் பார்த்தது போல் இருந்தது. பாஸுக்கு பீரை ஓப்பன் செய்து கிளாஸில் ஊற்றி குடிக்க தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். நான் பீர்பாட்டிலை வாயில்வைத்து நாட்டியம் ஆடினேன். முடியல. பையன் வந்து ஓப்பன் செய்து கொடுத்தான். ஊற்றிக்கொடுத்தான். லேசான கசப்பு.. கொஞ்சம் தித்திப்பு.. குடித்தேன்.


''சார் என்னதான் இருந்தாலும் அம்மா ஆட்சியில இருந்தாதான் பணப்புயக்கம் எகிரும்..'' என்று பக்கத்துசீட்டு முருக்கு மீசை பேசிக்கொண்டிருந்தான். நான் ஒரு அதிபயங்கர திமுக காரன். என்னால் தாங்க முடியுமா.. மிதபோதையில் நான் அவரிடம் பேசத்தொடங்கினேன். ''எஸ்சூஸ்மீ எதை வச்சு.. இப்படி சொல்றீங்கனு தெரிஞ்சுக்கலாமா?''


''சார் பாருங்க முன்னாலலாம்.. நாங்க ஆளுக்கு ஒரு ஆப் அடிப்போம்.. இப்பலாம் குவாட்டர்க்கே கஷ்டப்படவேண்டியிருக்கு'' என்றார் மீசை.

''ஏன்டா நீ ஆப் அடிக்கறதுக்காக அம்மா ஆட்சிக்கு வரணுமா , குடிகாரப்பயலே'' என்று ஏதோ தைரியத்தில் நான் சவுண்டைக்கூட்ட.. முறுக்கு மீசை ''டேய் என்னடா சொன்னே..'' என்று என் டெர்லின் சட்டையை பிடிக்க.. நம்ம பாஸுக்கு அல்லையை பிடித்திருக்க வேண்டும்..


''சார்.. சார்..  அவரை விட்ருங்க அவருக்கு மூளை சரியில்ல.. நீங்க சொல்றதுதான் கரெக்ட்'' ,என்று பச்சபுள்ளபோல பதறினார்.


 ''டேய் நீயாருடா கோமாளி'' என்று என் சட்டையை விட்டு அவர் சட்டையை பிடித்துக்கொள்ள எனக்கு வந்தது பாருங்க கோபம்.. அருகிலிருந்த பீர் பாட்டிலை எடுத்து முரட்டு மீசையின் மண்டையை உடைக்க எண்ணி பாட்டிலை தூக்கினேன்.. அதில் பாதி பீர் இருந்தது.. அதை வீணாக்க மனமின்றி.. ''எச்சூஸ்மீ .. மரியாதையா அவர் சட்டைலருந்து கைய எடுங்க.. அவர் யாரு தெரியுமா'' என்றேன்.


சொன்ன அடுத்த நொடி தோழரின் கன்னத்தில் நாலு அறை.. பளார் பளார் பளார் பளார்..


''ஏன்டா நீ என்ன பெரிய பருப்பா'' , பாவம் தோழர் கண்கலங்கிவிட்டார். நானும் கலங்கிவிட்டேன். ''சார் மன்னிச்சிருங்க நீங்கயார்னு தெரியாமா மோதிட்டோம்..'' ,


''&$%&%&% மவனே இனிமே உங்கள இந்த ஏரியாபக்கம் பார்த்தேன்'' என்று முரடன் முறுக்க.. நாங்கள் இருவரும் பாதி பீரையும் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து பறந்தோம். பின்னாலேயே பீர் பையன் ஓடிவந்தான் பில்லோடு.


''பாஸ் சாரி பாஸ்'' என்றேன் நான்


''பரவால்ல பாஸ் , இதுக்குலாம் போய் சாரி கேட்டுகிட்டு''


''இல்ல பாஸ், பாதி பீர் வேஸ்டா போச்சே.. ''  , அவர்கண்களில் சேம் கண்ணீர்த்துளி. ஆனால் முறைத்தபடி எதுவுமே பேசாமல் வந்தார். எனக்கு சோகம் மனசை கவ்வியது. ச்சே அடிவாங்க வச்சிட்டமே.. அவருடைய பார்வையை என்னால் சந்திக்க முடியவில்லை.


அருகிலிருந்து பிரியாணிகடையில் தஞ்சம் புக.. பிரியாணியும் குஸ்காவும் சிக்கன் 65ம் ஆர்டர் செய்யப்பட்டது. பிரியாணி வந்தது , குஸ்காவும் வந்தது. அரை பீரடித்திருந்ததால் லேசான போதையில் பிரியாணி மணம் அடிவயிற்றில் ஏதோ செய்ய.. உவ்வ்வ்வ்வ்வ்வா.. அருகிலிருந்த வாஷ் பேஷின் நிரம்பி வழிந்தது. பாவம் தோழர் என்னையே முறைத்துக்கொண்டிருந்தார்.


நான் வாயைக்கழுவிவிட்டு பிரியாணியில் கைவைத்தேன். தோழர் ஒரு வாய்கூட சாப்பிடாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய பார்வை என்னை, பிரியாணியில் கிடக்கும் லெக்பீஸைப்போல கூனிக்குருக வைத்தது.


''பாஸ் வாய நல்லா தொடைங்க.. இந்தாங்க'' என்று தன்னருகில் வைக்கப்பட்டிருந்த சிக்கன் 65ல் ஒரு துண்டை எடுத்து என் தட்டில்வைத்தார்.. என்கண்கள் கலங்கின.. சொட்டு சொட்டாக கண்ணீர் திரண்டது.. அய்யகோ..


எனக்கு ஞானம் வந்து நண்பேன்டா என்று உரக்க சொல்ல வேண்டும் போல் இருந்தது.
22 September 2010

காமன்வெல்த் போட்டிகள் 2010


எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

- கிருஷ்ணர் சொன்னதாக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கவரிலிருந்து..
22.09.2010

20 September 2010

வெள்ளிங்கிரி - 5வெள்ளிங்கிரியின் ஒவ்வொரு மலைக்கும் வித்தியாசமான பெயர்கள் உண்டு. முதல்மலையின் பெயர் வெள்ளிவிநாயகர் மலை. இப்படி ஒரு பெயர் நிச்சயம் அண்மைக்காலத்தில்தான் சூட்டப்பட்டிருக்க வேண்டும். உண்மையான பெயர் வேறாக இருக்கலாம். அதே போல மஞ்ச மலை, பூவூர் மலை, நந்தி மலை, பொள்ளாச்சிமலை, கிரிமலை, வழுக்கைபாறை மலை என்று ஏழுமலைக்கும் பெயர்கள் உண்டு. இதில் எனக்கு பிடித்தது பொள்ளாச்சி மலைதான்.


பொள்ளாச்சிமலை! வெள்ளிங்கிரி பயணத்தில் நாம் கடக்கும் ஐந்தாவது மலை. இருப்பதிலேயே யாரும் ஏறிவிடக்கூடிய ஈஸி மலை. வெறும் மண்பாதையில் வீரநடை போட்டபடி செம ஜாலியான பயணம் போகலாம். அதிக சிரமம் இருக்காது. மலைப்பாதையின் இரண்டு பக்கமும் ஆங்காங்கே சின்னதும் பெரிசுமாக சில பாறைகளும், நிறைய மூலிகை செடிகளும் மண்டிக்கிடக்கும். செடிகள் புதர்போல இருப்பதால் அதிகாலை வேளையில் பயணம் போகிறவர்கள் ஹாயாக ஆய் போக ஏற்ற இடம். ஆனால் இருட்டில் ஒதுங்கும் போது பார்த்து ஒதுங்கணும்.. உங்களுக்கு முன்னால் வேறுயாராவது நான்கு திசையிலும் போயிருக்கலாம்.. பிறகு ஆண்டி சுனையில்தான் கால் கழுவ வேண்டியதாகிவிடும்.


இதே மலையில் பல பாறைகள் இருந்தாலும், மெகா சைஸ் பாறாங்கல் ஒன்று உருட்டி வைத்த உருளைக்கிழங்கு போல் காட்சியளிக்கும். இதை பீமன் களி உருண்டை என்பார்கள். இதன் உச்சியில் ஏறி நின்று பார்த்தால் பொள்ளாச்சி நகரம் முழுதும் தெரியுமாம்! நானும் பல முறை ஏறிப் பார்த்திக்கிறேன். மலை உச்சியிலிருந்து பார்த்தால் எல்லாமே ஒன்னுதான்.. கோயம்புத்தூரென்ன பொள்ளாச்சியென்ன.. ஆனாலும் உடன் வரும் பெரிசுகள் அதோ.... அங்க மஞ்சளா ஒன்னு தெரிதுபாரு அதான் பொள்ளாச்சி.. இதோ இங்க சிகப்பா தெரியுது பாரு அதான் ஆனை மலை மாசானி அம்மனங்கோயில், அதோ அதான் பாரதியார் யுனிவர்சிட்டு என்று உதார் விடுவதுண்டு. அப்படி பொள்ளாச்சி தெரிவதாலேயே அந்த மலைக்கு பொள்ளாச்சி மலை என்று பெயர் வைத்துள்ளனர்.


இந்த மலையின் பாறைகள் உன்னதமானவை. இரவு வேளைகளில் படுத்து உறங்க மிக அற்புதமாக இருக்கும். ஆனால் இருட்டில் பாறை எது , புதர் எது, என கண்டறிந்து அதில் மிகச்சரியாக ஏறுவதும் உட்காருவதும் மிகமிக கடினம். எங்காவது தப்பி எடக்கு மடக்காக விழுந்தால் பாறைகளுக்கு கீழே இருக்கும் படுபயங்கரமான இருட்டு குகைகளுக்குள் விழுந்து விட நேரலாம். இந்த குகைகளுக்குள் பகலில் செல்வதே ஆபத்தானது. அதனால் போதிய நண்பர்கள் பாதுகாப்போடு , கையில் பெட்ரமாக்ஸ் லைட் வைத்திருப்பவர்கள் போகலாம். அவ்வளவு தில் இல்லாதவர்கள் எங்கும் நிற்காமல் அடுத்த மலையைப் பார்த்து நகருவது நல்லது.


பாறைகளின் மேல் ஏறி படுத்துக்கொண்டு வானத்தை பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா! மிக பிரமாண்டமான வானம்.. நமக்கு மிக அருகில் மிக மிக அருகில்.. தலைக்கு மேல் முழுக்க முழுக்க நட்சத்திரங்கள் , சில தடவைகள் நண்பர்களோடு பேசியபடி வானத்தைப் பார்த்தபடியே இரவு முழுவதையும் பொள்ளாச்சி மலையிலேயே கழித்திருக்கிறோம். கீழே வாங்கிய அன்னதான பார்சலை பிரித்து நட்சத்திர சோறு தின்பதிலும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது.

அதுசரி அதென்ன பீமன் களியுருண்டை? இருக்கே அதுக்கும் ஒரு கதை இருக்கே! அதாவது மகாபாரத புராணத்திலே நாட்டை இழந்து ஆரண்யத்திலே அலைந்து கொண்டிருந்த பாண்டவர்களாகப்பட்டவர்களும் பாஞ்சாலியும், வெள்ளிங்கிரிக்கு அருகிலே இருக்கிற தாராபுரத்திலே சிலகாலம் வாழ்ந்தனராம், அவ்வேளையிலே வெள்ளிங்கிரி மலைக்கும் பயணம் போனதாய் கூறுகின்றனர் சான்றோர்கள். இந்த பொள்ளாச்சி மலையில் பீமன் களியுருண்டை மட்டுமல்ல, பீமன் ராசிக்கல், அர்ஜுன தவக்குகை என இன்னும் பல உள்ளது.


அட மகாபாரத புராணம் மட்டுமில்ல, ராமாயணமும் வெள்ளிங்கிரியில் உண்டு. லட்சுமணனை காக்க சஞ்சீவி மலையை கையில் சுமந்தபடி இலங்கையை நோக்கி சென்றார் அனுமன். அவர் கையிலிருந்து தவறிவிழுந்த சிறிய கல்தான் இவ்வளவு பெரிய வெள்ளிங்கிரி மலை என்றும் சொல்கின்றனர். இங்கே பேச்சிக்காடு என்கிற பகுதி ஒன்றும் உள்ளது. இதை சீதைவனமென்றும் கூறுகின்றனர். அது தவிர அனுமன் நதி, ராமர்நதி என்று சில சுனைகளுக்கு பெயர்கள் உண்டு.


பொள்ளாச்சி மலையில் முன்னெல்லாம் ஒரே ஒரு கடைதான் இருக்கும். அங்கே கமர்கட்டு,தேன்மிட்டாய்,கொடல்,சிகரட்டு,பீடி,மாங்காய் துண்டு,சின்ன மாங்காய் என நிறைய விற்கப்படும். சின்ன மாங்காய்ங்கள் விலை ஒன்னு அம்பது காசு! பெரிய மாங்காய் (கோமாங்கா) ஒரு பீஸ் ஒரு ரூவா. எல்லாமே வித் உப்பு மிளகாய் தூளோடுதான் தரப்படும். (வாயில் எச்சில் ஊருதா!). அந்தக்கடையில் கிடைக்கும் மாங்காய் மலையிலேயே பறிக்கப்பட்டதென்று சொல்லுவார் கடைக்காரர்.. அதில் பாதி உண்மை மீதி பொய்! அதாவது சின்ன மாங்காய் காட்டிலேயே பறிக்கப்பட்டதாக இருக்கும். பெரிய கோமாங்காய்கள் மூட்டை மூட்டையாய் முதுகில் சுமந்தபடி மலையில் ஏற்றுகிறவர்களை பார்த்திருக்கிறேன். நாங்க அரை மலை ஏறுவதற்குள்ளாக மலையேறி மூட்டையை டெலிவரி செய்துவிட்டு இறங்கும் அசகாய சூரர்கள்.


அவர்களுடைய கைகளில் எப்போதும் முறுக்கேறி முரட்டுத்தனமாகவே இருக்கும். கால்களில் நரம்புகள் புடைத்து இருப்பதை அங்கும்.. ஜிம்களில் ஒட்டப்பட்டிருக்கும் போட்டோக்களிலுமே பார்த்திருக்கிறேன்.


இப்போதெல்லாம் அங்கே நிறைய கடைகள் பெருகிவிட்டன. பெப்சி கோக் முதற்கொண்டு லேஸ்,பிரிங்கோ கிரிங்கோ என எல்லாமே கிடைக்கிறது. விரைவில் மலை உச்சியிலேயே பீஸா பர்கர் கூட கிடைக்க நேரிடலாம்! கேஎப்சி அங்கேயும் ஒரு பிராஞ்ச் திறக்கலாம். டாஸ்மாக் பார் அமைக்கப்பட்டு குளிர்ந்த பீர் கூட கிடைக்கலாம். ஆனாலும் அந்த மாங்கா பீஸ்,தேன்மிட்டாய்,கமர்கட்டுக்கு ஈடாகாது.


படம் உதவி -http://skkme.blogspot.com/

13 September 2010

கெட்ட வார்த்தைஎனக்குக்கூட இப்படித்தான் சொல்லணுமா? எரிச்சலில் மொட்டை மாடியில் இருந்து தலைகுப்புறக் குதித்துவிட வேண்டும்போல இருந்தது. கையில் இருந்த சிகரெட்டை வேகமாகத் தரையில் அடிக்க, அது தீப்பொறிகளைச் சிதறலாகப் பரப்பி அணையாமல் புகைந்தது. அவன் எப்போதும் சொல்லும் அந்த கெட்ட வார்த்தையை அப்போதும் சொன்னான். அது, பட்டாசுச் சத்தங்களோடு கலைந்து, அலை அலையாக வீரியம் இழந்து, காற்றில் கரைந்து மறைந்தது.

விடிந்தால் தீபாவளி. மாதக் கடைசியில் வரும் கேவலமான, யாருமே விரும்பாத தீபாவளி. த்தூ... சொந்த ஊருக்குப் போக முடியாமல் செய்துவிட்ட தீபாவளி. ஊரே தீப் பரப்பி வெடிச் சத்தத்தால் நிரம்பி இருந்தது. பக்கத்து வீடு களில் மகிழ்ச்சி பொங்கப் பட்டாசு வெடிப்பவர்களைக் காரணமே இல்லாமல் கோபத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான். அவர்களுடைய மகிழ்ச்சி இவனு டைய கோபத்தை இன்னும் அதிகமாக்கியது. கோபப்பட லட்சம் காரணங்கள் இருந்தன. வெறுப்பின் உச்சத்தில் இருந்தவனுக்கு இந்த எஸ்.எம்.எஸ். எந்த விதத் திலும் உதவவில்லை. அவனுடைய கோபத்தை அது இன்னும் இரண்டு கரண்டி அதிகமாக்கியது. எனக்குக்கூட எஸ்.எம்.எஸ் அனுப்பித்தான் சொல்லணுமா?


தன்னை ரோட்டோரப் பிச்சைக்காரனாக, உலகில் இருந்து விடுபட்ட மன நோயாளியாக உணர்ந்தான். மொட்டை மாடியின் சுவரில் தலை சாய்த்து, காலைக் குறுக்கலிட்டு அமர்ந்தான். அவன் தாய் மாமாவும் 'நீ அதான்டா நாயே!' என உணர்த்துவதுபோல இழவுச் செய்தியைக் குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தார். ஊர்க்கார நண்பர்களின் இன்னுமொரு வாழ்த்துச் செய்தி என அதையும் அவன் புறக்கணித்து இருக்கலாம். பார்க்காமல் இருந்து இருக்கலாம். போனை அணைத்துப்போட்டு இருக்கலாம். தூங்கி இருக்கலாம். 'அம்மா இறந்துவிட்டார். உடனே புறப்பட்டு வரவும்.' அவ்வளவுதான் செய்தி. தாய் மாமா அனுப்பிய எஸ்.எம்.எஸ்.

திருப்பி அழைக்க நினைத்தான். பேலன்ஸ் 20 காசுதான் இருந்தது. செல்போன் நிறுவனம் கடனாகத் தரும் 10 ரூபாய் டாப்-அப்பையும் ஏற்கெனவே முடித்து இருந்தான். திடீர் சந்தேகம். யாருடைய அம்மா? அவருடைய அம்மாவா (அவனுக்குப் பாட்டி), அல்லது அவனுடைய அம்மாவா?

ஒரு ரூபாய் போன் பூத் வைத்திருக்கும் சேட்டனுக்கும் தீபாவளியா என்ன? 7 மணிக்கே கடையைப் பூட்டியிருந்தான். அவனுக்கு எல்லாம் என்ன மயித்துக்கு தீபாவளி? எரிச்சல் கூட ஆ...ஆ...ஆ... கெட்ட வார்த்தையில் மொட்டை மாடி அதிரக் கத்தினான். தன்னுடைய அம்மாவாகத்தான் இருக்கும் என முடிவு செய்து கொண்டான்.


மெயின் ரோட்டுக்குப் போனால் போன் பண்ணலாம். அண்ணாச்சி கடை திறந்துவைத்திருப்பார். நடுவில் வயிறு பசித்தது. அம்மா எப்படி இறந்தாங்க... என்னாயிருக்கும்? வாழ்க்கை பூரா அந்தாளோட வாழ்ந்து அழுகிப்போய் நொந்தவங்களுக்கு, இப்பவாவது விடுதலை என நினைத்துக்கொண்டான். அப்பாவை மனதுக்குள்ளேயே அவனுக்கே அவனுக்கான சில கெட்ட வார்த்தை களால் திட்டினான். சோறு போடாமக் கொன்னுருப்பானோ? அடிச்சிருப்பானோ? போன முறை போனப்ப, ஷுகர் அதிகம்னாங்களே. நெஞ்சு வலியா இருக்குமோ? மூட்டு வலின்னாங்களே... நீலகிரித் தைலம் கேட்டாங்களே... தற்கொலையா இருக்குமோ? இரண்டு நாள் முன்னகூட நல்லாதானே பேசினாங்க.


அம்மாவின் மரணம், அப்பாவின் கொடுமை, விடிஞ்சா தீபாவளி. அழுது புலம்ப ஆயிரத்து சொச்சக் காரணங்கள் இருந்தன. இதை எல்லாம் தாண்டி, இப்போதைய தலையாய பிரச்னை பேங்க்கில் இருக்கும் 232 ரூபாயும் 50 காசுகளும்தான்.


சம்பளத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. அறைத்தோழர் கள் அனைவரும் ஊருக்குச் சென்றுவிட்டனர். இவன் மட் டும்தான் போகவில்லை. அவர் களுக்கும் தீபாவளி. ஹவுஸ் ஓன டமும் காசு கேட்க முடியாது. வாடகை கேட்பார். சாவு என்று சொன்னாலும், 'பொய் சொல்லா தடா, காசுக்காக அம்மாவப் போய் செத்துட்டாங்கன்னு சொல்றியே' என்று திட்ட நேரிடலாம். தெரிந்தவர்கள் யாரும் இல்லை.


கோவைக்கு டிரெயின் என்றால் 127 ரூபாய். கூட்டம் நிரம்பி வழியும். பஸ் என்றால் 198. ஆனால், தீபாவளி என்பதால் பஸ் கிடைப்பது அரிது. உடனே கிளம்ப வேண்டும். கையில் இருந்த செல்போனில் நேரம் பார்த்தான். 8.30. சேரன் 10.30-க்கு, 9-க்கு புளு மவுன்டன். இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்குள் ரயில் நிலையம் அடைய வேண்டும்.


வயிறு அதிகமாகப் பசித்தது. மதியம் தின்ற எலுமிச்சை சோறு 6 மணிக்கே ஜீரணம் ஆகியிருக்க வேண்டும். இவன் பசியைப்பற்றி நினைக்க, வயிறு கர்ர்ர்ர் விர்ர்ர்ர் என இழுத்துப் பிடித்துக் குறட்டைவிட்டது. குடலில் உருவாகும் வெற்றிடத்தால் காற்றடைப்பு உருவாகி இருக்கலாம். லேசாக ர்ர்ர் என ஏப்பம் வந்தது. ச்சே! அம்மா செத்துட்டாங்க, பசியப்பத்தி நினைக்கவே கூடாது என நினைத்துக்கொண்டான்.


ஆனாலும், வயிற்றில் இருந்து தொடர்ச்சியாக வெளியானஅந்த அபஸ்வர நாதம் ர்ர்ர் சுர்ர்ர் என்று பசியை நினைவூட்டிக்கொண்டே இருந்தது. அம்மாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. அழுகை வரவில்லை. அழ முயன் றும் அழுகை வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. அழாமல் இருப்பது தவறாக இருக்கலாம்.


துணி எல்லாம் ஒன்றும் வேண்டாம், பைகூட எடுக்க வேண்டாம். ஜட்டி, டூத் பிரஷ் வேண்டும். அதை மட்டும் எடுத்து பேன்ட் பாக்கெட்டில்வைத்துக்கொண்டான். தன்னுடைய ஸ்ப்ளெண்டரில் ஏறி உட்கார்ந்து, பெட்ரோல் டேங்கைத் திறந்து ஆட்டி ஆட்டிப் பார்த்தான். ங்ங்ங் என மணியோசை மாதிரி பெட்ரோல் குலுங்கும் ஓசை கேட்டது. ரொம்பக் குறைவாகத்தான் இருந்தது. சென்ட்ரல் வரைக்கும் தாக்குப்பிடிக்கணும் ஆண்டவா!

வழியெல்லாம் வண்ண வண்ண வாண வேடிக்கைகளாலும் டாம்டூம் பட்டாசுகளாலும் நிரம்பி இருந்தது. அக்கவுன்ட்டில் சாப்பிடும் ஆன்ட்டி கடை பூட்டியிருந்தது. இரண்டு இட்லி பார்சல் செய்துகொள்ள நினைத்திருந்தான்.


சாலைகளில் பெண்கள் அழகாக பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்தனர். சிலர் பயந்தபடி, சிலர் தைரியமாக, இன்னும் சிலர் போலியான தைரியத்தோடு... இதையெல்லாம் ரசிக்கக் கூடாது, அம்மா இறந்து விட்டார்.


வண்டியின் வேகம் கூட்டினான். மணிக்கட்டு கடிகாரம் 9.00 காட்டியது.


கனரா வங்கியின் ஏ.டி.எம்மில் வண்டியை நிறுத்தி இருக்கும் 200 ரூபாயைத் தட்டினான். டிரான்சாக்ஸன் டிக்லைன்டு என்றது. கோபத்தில் கையில் இருந்த வண்டி சாவியால் ஏ.டி.எம் ஸ்க்ரீனில் நான்கு கீறல் போட்டுவிட்டு வெளியேறினான். அது எக்ஸ் மார்க் போல் இல்லாமல் ஒய்போல் இருந்தது. கொஞ்சம் தள்ளி இன்னொரு எஸ்.பி.ஐ இருந்தது. அங்கேயும் டிக்லைன்டு.அவனுடையது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. அருகில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம் எதுவும் இல்லை. நுங்கம்பாக்கம் போக வேண்டும். வேறு வழி இல்லை... போனான். பணம் எடுத்தான், வெளியில் வந்து வண்டியை ஸ்டார்ட்டி கொஞ்ச தூரம் போனதும் வண்டி முக்கி முக்கி முனகி க்...க்...க்...இர்ர்ர்... பின் அணைந்து பெட்ரோல் இல்லை என்றது.


நடுரோட்டில் நின்றபடி... வேறு ஒரு கெட்ட வார்த்தையோடு அந்தக் கெட்ட வார்த்தையை உரக்கக் கத்தினான். அம்மாவு டைய மரணத்தைவிடவும் அது அவனை மிகவும் வருத்தியது. வண்டியைத் தள்ளிக்கொண்டே மீண்டும் மீண்டும் ச்சே... ச்சே! என்று அதே கெட்ட வார்த்தையை விடாமல் மந்திரம்போல உச்சரித்தபடி சில மீட்டர்கள் தூரத்தில் இருந்த பெட்ரோல் பங்குக்குச் சென்றான். கையில் இருந்த 200 ரூபாயில் 30 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதே திட்டம். பாழாய்ப் போன பங்கில் 30 ரூபாய்க்குக் கிடையாதாம். 50 ரூபாய்க்கு மட்டும்தானாம். பெட்ரோல் நிரப்பிக்கொண்டான். மணிக்கட்டில் மணி 9.30. வயிறு இன்னும் அதிகமாகப் பசித்தது. மீண்டும் அதே வார்த்தையை மந்திரம்போல சொல்லிக்கொண்டான். முணுமுணுத்தபடியே ஆக்ஸிலரேட்டரைத் திருகினான். பசித்தது.


சென்ட்ரலில் வண்டியைக் கட்டண பார்க்கிங்கில் போட்டுவிட்டு, டோக்கனை வாங்கி கசங்காமல் பர்ஸில் பத்திரப்படுத்திக்கொண்டான். டிக்கெட் கவுன்ட்டரில் கூட்ட நெரிசல். அம்மாவின் நினைவு வேறு இடைஇடையில் வந்து எரிச்சலூட்டியது. நான்கு நாட்கள் கழித்து செத்துப்போயிருக்கக் கூடாதா? க்யூவில் நின்றான். அரை மணி நேரம் நின்றான். மணி 10. கவுன்ட்டரில் கோவைக்கு டிக்கெட் எடுத்தான். தம் அடிக்க வேண்டும்போல் இருந்தது. பாக்கெட்டைத் தடவினான், 23 ரூபாய் இருந்தது. கோவையில் இறங்கி ஊருக்குப் போக பஸ்ஸுக்கு 10 ரூபாய் போதும். டிக்கெட்டோடு வெளியே ஓடிப் போய் ஒரு ஃபில்டரை வாங்கிப் பற்றவைத்தான். அம்மா நினைவு வந்தது. புகையோடு அந்த கெட்டவார்த்தையையும் உரக்கச் சொன்னான். அவனுக்கு முன்னால் புகைத்தவர் திரும்பிப் பார்த்தார். இவன் அசடாகச் சிரித்துவைத்தான். 'ச்சே... அம்மா செத்துட்டாங்க. எப்புடிடா சிரிக்கற? அதுவும் போலியா?' அவனையே அவன் அதே கெட்டவார்த்தையால் திட்டிக்கொண்டான்.


மாமாவுக்கு ஒரு ரூபாய் போனில் பேசினான்... "மாமா?"


"நெஞ்சு வலி அதிகமாச்சுன்னு ஜி.ஹெச்சுக்குக் கொண்டுபோனோம். போற வழிலயே உயிரு போயிருச்சுன்னாங்க."


"சரி மாமா கிளம்பிட்டேன். வந்துர்றேன். ஸ்டேஷன்லதான் இருக்கேன், செத்தது எந்த அம்மா?"


"அறிவு கெட்டவனே! உங்கம்மாதான்டா!"


மிக நீண்ட மௌனத்துக்குப் பிறகு, "ம்" என்றான்.


"சரி குமாரு... வரும்போது ரெண்டாயிரம் ரூவா ரெடி பண்ணிட்டு வா. இங்க நிறையப் பேருக்கு ரூவா குடுக்கணும்.. "


"ம்ம்..." என்றபடி போனை பேய்த்தனமாக ரிஸீவரால் அடித்தான். மாமாவை அதே கெட்ட வார்த்தையில் திட்டினான். பசித்தது.

பையில் 20 ரூபாய் இருந்தது. பிளாட்ஃபாரத்தில் நல்ல கூட்டம். இன்னும் டிரெயின் வரவில்லை. நாலைந்து பேரோடு மல்லுக்கட்டினால்தான் இடம் பிடிக்க முடியும். தீபாவளிக்கு ஊருக்குச் செல்பவர்கள் கூட்டம். நிறைய சரவணா, போத்தீஸ், அது இதுவென துணிக் கடை பைகள் கண்களை உறுத்தின.


'அம்மாவுக்கு ஒரு சேலை எடுத்துக் குடுக்க வக்கில்ல... நீயெல்லாம் எதுக்குடா உயிரோட இருக்க, சாவுடா!' அப்பா முழு போதையில் போன வருடம் இதே நாளில் சொன்னது. 'வெக்கமா இல்ல, உன் தங்கச்சி வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கிறா. எப்படிடா தினமும் வெக்கமே இல்லாமத் திங்கற... இந்தப் பொழப்புக்குச் செத்துரலாம்டா' என்று அம்மாவே சொல்வார் என்று நினைக்கவில்லை. அம்மாவுக்கும் கடுமையான வேதனையும் அக்கறையும் அவனைப்பற்றி இருக்கத்தான் செய்தது.


அதற்குப் பின் மூட்டைப் பூச்சி மருந்தைக் குடித்ததும், தாய் மாமா தனசேகர் அவனைக் காப்பாற்றி சென்னையில் வேலை வாங்கிக் கொடுத்ததும், அம்மா இறந்ததும் எனப் பலதும் நினைவுக்கு கோர்வையாக வர... டிரெயின் வந்தது.


கூட்ட நெரிசலில் முண்டியடித்து இடம் பிடிக்கப் பாய்ந்தவனுக்கு மீண்டும் அம்மாவின் நினைவு. 'ச்சே... அம்மா சாவுக்குப் போறதுக்குக்கூட சண்டை போட்டு இடம் பிடிச்சு சொகுசாத்தான் போகணுமோ?' அம்மாவின் மரணம் குறித்து நினைக்கும்போது எல்லாம் அந்த கெட்ட வார்த்தையும் சேர்ந்தே.

வயிறு வேறு பசித்தது. இடம் கிடைக்கவில்லை. கழிவறைக்கு அருகில் உட்கார்ந்துகொண்டான். ஒவ்வொரு முறையும் யாராவது கழிவறைக்குப் போகும்போதும் வரும்போதும் மூக்கைப் பிடித்துக்கொண்டான். ஒரு மாதிரி அழுகிப்போன அன்னாசிப் பழ வாசனை வந்தது. அவனுக்கு மிக அருகில் ஜோலார்ப்பேட்டையில் ஏறிய கழைக்கூத்தாடிக் குடும்பம் ஒன்று அழுக்குப் பிடிக்க உட்கார்ந்திருந்தது. இவனுக்கு மிக அருகில்... மிக மிக அருகில். அனைவரும் அழுதிருந்தனர். யாரோ இறந்துவிட்டதாகப் பேசுவது காதில் விழுந்துகொண்டே இருந்தது. அருகில் ஒரு கிழவன் இவனைப் பார்த்துச் சிரித்தான். அவன் இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவான்போல இருந்தான். அவனையும் கோபமே இல்லாமல் அந்த கெட்ட வார்த்தையால் திட்டினான். உடலைக் குறுக்கி அமர்ந்தபடி உறங்கிப்போனான்.


விடிந்தது. மணி 6. அவசரமாக இறங்கியவன், ஏதோ நினைவில் பையைத் தொட்டுப்பார்த்தான். 20 ரூபாய் கசங்கி இருந்தது. ஓடினான். 7 மணி பஸ்ஸைப் பிடித்தால்தான் ஊர் போய்ச் சேர முடியும். பசித்தது. டீ குடிக்கலாமா? சிகரெட்? ஒரு ஃபில்டரை வாங்கிப் பற்றவைத்தான். 17 ரூபாய்தான் இருந்தது. அஞ்சு ரூவாகூட இல்லாம ஊருக்குப் போறது ரொம்ப மோசம். வயிற்றை லேசாகக் கலக்கியது. எரிச்சலாக இருந்தது. அருகில் இருந்த கட்டணக் கழிப்பிடத்துக்குப் போய்விட்டு பஸ்ஸைப் பிடித்தான். அதற்கு இரண்டு ரூபாய்.


அவனது வீட்டு வாசலில் ஷாமியானா போட்டு, நிறைய சேர்கள் இருந்தன. அப்பா வாசலில் அமர்ந்தபடி பீடி பிடித்துக்கொண்டு இருந்தார். வயிறு பசித்தது. 'ச்சே, அம்மாவோட பொணத்தப் போட்டுட்டு எப்படித்தான் இந்தாளு ஜாலியாத் தம் அடிக்கிறானோ!' அதே கெட்டவார்த்தையால் மனசுக்குள் திட்டிக்கொண்டான்.

ஏனோ அழுகையே வரவில்லை. எதிரில் வரும் ஏதேதோ முகங்கள் வியர்வை நாற்றத் தோடு பல் விளக்காத வாயோடு, "குமாரு..." என அவனைக் கட்டிக்கொண்டு அழுதனர். அவன் அழவில்லை. அம்மாவைச்சுற்றி சித்தி, அத்தை, பெரியம்மா என நிறையப் பேர். அத்தைப் பொண்ணு நந்தினியும் இருந்தாள். ஏனோ தாவணி போட்டிருந்தாள். அவள் திருமணம் மாதிரியான விசேஷங்களுக்கு மட்டுமே தாவணி அணிவாள். தாவணி லேசாக விலகி இருந்தது. பூசினாற் போல உடம்பு. வெளுப்பாக உடல் தெரிந்தது. 'அம்மா பொணம் கெடக்குது, ச்சே... என்ன மனுசன்டா நீ?' கெட்ட வார்த்தையில் தன்னைத்தானே திட்டிக்கொண்டான். ஆனாலும், கண்கள் அவளையே சுற்றிச் சுற்றிச் சுழன்றன. அவள் மீதான பார் வையை அவனால் கட்டுப் படுத் தவே முடியவில்லை. அம்மா உறங்குவதைப்போலவே இருந்தது. விழித்து அவனிடம் மீண்டும் பேசிவிடுவாள்போலத்தான் இருந்தது.


இப்போதைக்கு அந்த இடத்தைவிட்டு நகரக்கூட முடியாது. ஒரு சிகரெட்கூட அடிக்க முடியாது. இதில் இந்தப் பசி வேறு. கையிலும் காசு இல்லை.

எல்லோரும் குமாரு... குமாரு... என்று அழுதபடியே இருந்தனர். அம்மாவைப் பார்த்தபடியே சுவரின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டான். கால்களை மடக்கி முகத்தை முட்டிகளுக்குள் புதைத் தான். அழுகையே வரவில்லை. பசித்தது. "அதான் பையன் வந்தாச்சுல்ல... சடங்கெல்லாம் பண்ணலாம்..." என்றார்கள்.

வெளியில் சங்கு சத்தமும் சேவன்டியும் கேட்டது. சாவு விழுந்துவிட்டதால் பட்டாசு வெடிக்க முடியாமல் சோகமாய், குடியிருப்புக் குழந்தைகளின் முகங்கள் தெரிந்தன. பாவம்... அவனுக்கு அம்மா போன மாதிரி அவங்களுக்கு தீபாவளி போச்சு. இனி, அடுத்த வருஷ தீபாவளிதான். அவனுடைய தங்கையும் குழந்தை குடும்பத்துடன் இரவே வந்து இருந்தாள். நிறைய உறவினர்கள்... யார் யாரோ...


அம்மாவுக்கு விசித்திரமான பழக்கம் இருந்தது, ஏதாவது திருமணத்துக்கு அவனை அழைத் துக்கொண்டு போய் அங்கே இருக்கும் உறவினர்களிடம் அவனைக் காட்டி சம்பந்தம் பேசுவாள். அவனுக்கு எரிச்சலாக இருக்கும். அந்த உறவினர்கள் எல்லாம் வந்திருந்தனர். 'குமாரு பாருப்பா...' என்று அழுதனர். அவனுக்குப் பசித்தது. இப்போது கடும் பசி.


அனைவருக்கும் காபி கொடுத்தனர். அவனுக்கு மட்டும் ஏனோ தரவில்லை. காபி வேணுமா என்றுகூடக் கேட்கவில்லை. அவன் சோகத்தில் இருப்பான் என்று அவர்களாகவே நினைத்திருக்கலாம். அவனுக்கு மேலும் பசித்தது.


அம்மாவின் பிணம், பேரூர் ஆற்றங்கரையோரம் புதைக்கப்பட்டது. வீட்டுக்கு வந்தான். உடல் எல்லாம் பூக்களின் வாசனை. கையில் ரோஜா வாசனை.

வாசலில் அப்பா முழு போதை யில் உள்ளாடை தெரிய லுங்கி விலகிப் படுத்து இருந்தார். தங்கை, தன் ஒரு வயதுக் குழந்தைக்கு எதையோ ஊட்டிக்கொண்டு இருந்தாள். அழுவதைப் போலப் பார்த்தான். குட்டிப் பாப்பா சிரித்தது. திரும்பச் சிரிக்காததால் அது முகத்தை உம் மென்று வைத்துக்கொண்டது.

வீட்டின் உள்ளே யாரும் இல்லை. உறவினர்கள் எல்லாம் வாசலிலும் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அவனுக்குக் காதுஅடைத்தது. கடுமையாகப் பசித் தது. பாக்கெட்டில் ஐந்து ரூபாய் தான் இருந்தது. இரண்டு ரூபா யைக் காணவில்லை. விறுவிறு வென வெளியே வந்து கடையில் ஒரு ஃபில்டரை வாங்கிப் பற்றவைத்துக்கொண்டான். அவனுக்கு அழுகையே வரவில்லை. புகை வந்தது.


தொண்டைக்குள் ஏதோ செய்தது. யாராவது 'குமாரு, ஏதாவது சாப்பிடறீயா?' என்று கேட்க மாட்டார்களா!


அம்மா இருந்திருந்தால் கேட்பாள். அவள்தான் இத்தனை வருடங்களாக அந்த வீட்டில் அவனைச் சாப்பிட்டாயா என்று கேட்கிற ஒரே ஆள். போனில் அழைத்தாலும் முதலில் கேட்பது, 'சாப்பிட்டியா குமாரு?' என்பதாகத்தான் இருக்கும்.


அவள் இறந்துவிட்டாள். வயிறு பசித்தது. அழுகை வர அந்த கெட்ட வார்த்தையை உரக்க சொல்லி அழத் தொடங்கினான் குமாரு!


*****


ஒவியங்கள்:அனந்தபத்மநாபன்

நன்றி-ஆனந்த விகடன்

10 September 2010

கொம்பு வைத்த பாட்டியும் ஒரு புனைவும்சிறுவர்மலர் காலத்திலிருந்தே ஒரு நல்ல பழக்கம் எனக்கிருந்தது. வாரந்தோறும் வாசகர் கடிதம் எழுதிப்போடுவது. அதற்காக நாலணா கார்டு வாங்கி , முதலில் பென்சிலால் எழுதிப்பார்ப்பது. பின் ரப்பர் வைத்து அழித்து திருத்தி கடைசியாக ஹீரோ பேனா கடன் வாங்கி அழுங்காம குலுங்காம அத்திப்பூ வாடாம எழுதி அனுப்புவேன்.


அப்போதெல்லாம் நல்ல கையெழுத்து கொண்ட வாசகர் கடிதத்திற்கு 100ரூ பரிசு + கடிதமும் அப்படியே கார்டோடு பிரசுரமாகும். எப்படியும் நூறிலுருந்து நூற்றைம்பதாவது அனுப்பியிருப்பேன். ஒன்று கூட பிரசுரமானதில்லை.


கொஞ்சம் வளர்ந்தபின், அதாவது ஒன்பதாம் வகுப்பு காலத்தில் வாசகர் கடிதத்தில் இருந்து முன்னேறி ஒன்லி கதைகள் மட்டுமே அனுப்பத்தொடங்கினேன்.. எல்லா கதைகளுமே இப்படித்தான் தொடங்கும் 'செல்வபுரம் என்று ஒரு ஊர் இருந்த்து, அதை செல்வேந்திரன் என்கிற மன்னன் ஆண்டு வந்தான் , அவனுக்கு நான்கு மகன்கள்' , ''மாயவரம் என்று ஒரு ஊர் இருந்தது அங்கே மாதவராஜ் என்று விவசாயி இருந்தார், அவர் ஒரு சோம்பேறி''. கிட்டத்தட்ட அது ஒரு இருபது அல்லது இருபத்தி மூன்று கதைகள் இருக்கும். அதில் ஒன்று பிரசுரமானது.


பிரசுரமான நாள் இப்போதும் நினைவிலிருக்கிறது. தினமும் பத்திரிகை வாங்கிப்படிக்கும் அளவுக்கு எங்களுடைய வீட்டில் யாருக்கும் வசதி கிடையாது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் எனக்கும் கிடையாது. பக்கத்து வீட்டு போட்டோகிராபர் வீட்டில் வாங்கும் தினமலர்தான். அதையும் அவர் இரண்டு நாள் தள்ளிதான் எனக்குக் கொடுப்பார். என்ன நினைத்தாரோ வெள்ளியன்றே கொடுத்தார். புரட்டினேன்.. மங்கி பங்கி பிங்கி என ஏதேதோவைத் தாண்டி என்னுடைய செல்வபுரமும் அரசனும் செல்வேந்திரனும் கதையும் இருந்தது. ஆனால் கதையை வேறுமாதிரி எழுதியிருந்தனர். ''அண்ணா இந்த புக்குல என் கதை வந்திருக்குங்கண்ணா'' என்று போட்டோகார அண்ணனிடம் அப்போதே காட்டினேன். அவரோ சிரித்துவிட்டு 'சும்மா வுடாத! பேரையே காணோம்' என்றார். ஆனாலும் சிரித்தபடி தட்டிக்கொடுத்தார்.


எப்படியும் அந்த கதையை பள்ளி ஆசிரியர் தொடங்கி பக்கத்துவீடு எதிர்த்த வீடு என எங்கள் சின்ன ஊரின் நானூறு வீடுகளில் 399ல் காட்டியிருப்பேன். 400வது வீடு என்னுது. அங்கே யாருக்கும் படிக்க வராது. அம்மாவிடம் காட்டினேன். கதையை தடவிப்பார்த்துவிட்டு நல்லா வருவடா என்று கூறிவிட்டு பெருமிதத்தோடு பக்கத்துவீட்டு காரர்களிடமெல்லாம் இதைப்பற்றி பேசியது இப்போதும் நினைவிருக்கிறது. (இப்போது அம்மாவே எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டார் என்பது பின்கதை சுறுக்கம்)


அதற்குபின் வீரியமாய் நிறைய கதைகளை எழுதிக்குவித்து அனுப்பிக்கொண்டேயிருப்பேன்.. நான் வீரியமாய் எழுதினாலும் கதையின் நிலைதான் பரிதாபம். ஒன்றும் வெளியாகவில்லை. அதற்குள் பத்தாம்வகுப்பு பரீட்சை மார்க் அது இது லொட்டு லொசுக்கு இத்யாதிகளால்... சிறுவர் மலரும் பூந்தளிரும் அம்புலிமாமாவும் ராணிமுத்து காமிஸ்களும் குதிரை வீரன்களும் என்னை விட்டு பிரிந்து போனது தனிக்கதை.


சிறுவர் மலரோடு நின்று போன என்னுடைய வாசிப்பனுபவம். வாரமலரின் நடுப்பக்க சினிமா துணுக்குகளோடு மீண்டும் தொடங்கியது. இம்முறை வாசகர் கடிதம் , மாறி இ.உ.பக்கம் பகுதிக்கு பார்ப்பதையெல்லாம் எழுதி அனுப்பத்தொடங்கினேன்.இது இப்படித்தொடங்கும் ''நான் சாலையில் சென்று கொண்டிருந்தேன், எதிரில் பலரும் சுவற்றில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர்'' என்பதாகவோ , ''எனக்குத்தெரிந்த உறவினர் வீட்டில் ஒரு நிகழ்ச்சி. அங்கே அனைவரும்.. ப்ளா ப்ளா' வாக இருக்கும். அனுப்பி அனுப்பி ம்ஹூம் ஆணியை பிடுங்க முடியவில்லை. அதற்குபின் குமுதத்திற்கு ஒரு பக்க கதை எழுதி அனுப்பி.. அது திரும்பி வந்து...


அதற்கு பிறகு பிளாக் எழுதி , ஏதேதோ எழுதி , இதோ சிறுவர் மலர் மகிழ்ச்சியை, அதே கொண்டாட்டத்தை என் பிரியத்திற்குரிய விகடனில் என்னுடைய முதல் சிறுகதை வெளியானபோதும் அடைந்தேன்.


ஆனந்த விகடனின் கொம்பு வைத்த தாத்தாவை பல காலம் பாட்டி என்றே நினைத்திருக்கிறேன். அதன் முக சாயலும் , சைடாக போர்த்தியிருக்கும் சால்வையும் எனக்கு , இந்திராகாந்தியையே நினைவூட்டும். இ.காந்திக்கு ஏன் கொம்பு வைத்திருக்கிறார்கள் என்று ஒருமுறை மாமாவிடம் கேட்டிருக்கிறேன். சிரித்தபடி அது தாத்தாடா கண்ணா! என்பார். சும்மா பீலா வுடாதீங்க இது பாட்டிதான் என்று முழுமையாக நம்பியிருக்கிறேன். கொஞ்சம் விபரம் தெரிந்து கொண்ட பின்தான் அது பாட்டி அல்ல தாத்தா என்று நம்ப ஆரம்பித்திருக்கிறேன்.


கெட்ட வார்த்தை என்கிற நான் எழுதிய சிறுகதை ஒன்று சென்ற வார விகடனில் பிரசுரமாகி இருந்தது. தமிழகம் முழுக்க வியாழன்றே புத்தகம் கடைகளில் கிடைத்தாலும், சென்னையில் வெள்ளிதான்! அதே வெள்ளி! அதே சோகம்!


வியாழன்று அதிகாலையிலேயே போனில் அழைத்தார் நண்பர். உன் கதை விகடனில்! கையும் ஓடலை காலும் ஓடலை.. என்ன பண்றதுண்ணே தெரியாம , பல் விளக்கி, குளித்து , உடைமாற்றி எப்போதும் போல பைக் ஸ்டார்ட் செய்து ஆபீஸ் வந்தேன். எப்போதும் போல வேலை பார்த்தேன்.

எழுத்தாளர் ச.ந.கண்ணன் புதன்கிழமை இரவே கோவையில் வாங்கி இருக்கிறார். ஆபீஸ் வாங்க தரேன் என்றார். மதிய உணவு இடைவேளையில் அலுவலகம் சென்று புத்தகத்தை கைகளில் வாங்கி தடவி, முகர்ந்து.... அடடா! நம் படைப்பை அச்சில் பார்ப்பதிலும் ஒரு சுகமிருக்கத்தான் செய்கிறது! அதுவும் என் ஆதர்ஷன ஆனந்தவிகடனில்...


கதையை படித்துவிட்டு பல நண்பர்கள் போனிலும் , குறுஞ்செய்தியிலும் அழைத்து ஊக்கமூட்டினர். மின்னஞ்சலில் பல கடிதங்கள் வந்திருந்தன. ஊக்கமூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நிறைய நண்பர்கள் கதையை தாறுமாறாக விளாசி பல நெகட்டிவ் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர் அவர்களுக்கு ஸ்பெசல் நன்றி. கதை குறித்து திட்டி வந்த விமர்சனங்கள் நான் இன்னும் நிறைய வாசிக்க வேண்டும், நிறைய எழுதிப்பார்க்க வேண்டும் என்பதை உணர்த்தியது.


இதோ இப்போதுதான் அஆஇஈயை கற்றுக்கொண்டுவிட்டதாக உணர்கிறேன்.. போக வேண்டிய தூரம் பல லட்சம் மெகா மீட்டர்கள் இருக்கிறது.07 September 2010

பீட்டர் பிரானா!
சினிமாவுக்கு போறதுன்னு முடிவெடுத்துட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்... அப்படி முடிவெடுத்துதான் பீரானா த்ரீ டி படத்துக்கு போறதுன்னு முடிவாச்சு. பீரானா த்ரீ டி படத்த பிவிஆர்லயோ எக்ஸ்பிரஸ் அவன்யூலயோ சத்யம்லயோ த்ரீ டி ல பாக்க ஆசதான். என்ன செய்ய கையில இருக்கற எழுவது ரூவாய்க்கு , அங்கெல்லாம் போனா ஒரு டீ கூட குடிக்க முடியாது! இந்த லட்சணத்துல மூனுடீயப் பத்தி சிந்திக்கமுடியுமா!


அதனால எப்பவும் பாக்கற பைலட்ல, தமிழ் டப்பிங்ல, முப்பது ரூவாவ குடுத்தோமா, ஸ்கிரீன்லருந்து மூணு சீட் தள்ளி , குந்த வச்சு உக்காந்து படம் பார்த்தமானு இருக்கறதுதான் என்னைமாதிரி பாவப்பட்ட சென்னைவாசிங்களுக்கு நல்லது! மாலுங்க எல்லாமே மாலு உள்ளங்களுக்கு மட்டுந்தான

ஏழு மணி ஷோவுக்கு ஆபீஸ்லருந்து அஞ்சு மணிக்கே போக என் தாத்தா என்ன கருணாநிதியா! இல்ல என் மச்சான் என்ன அழகிரியா! ஏழு மணிக்கு ஷோன்னாலும் ஆறு முப்பதுக்குதான ஆபீஸ்லருந்து கிளம்ப முடியும். கிளம்பினேன்.


ஓட்ட வண்டிய மிதிச்சி ஸ்டார்ட் பண்ணி டிநகர்லருந்து பைலட் தியேட்டர் போய் சேர அதிக பட்ச நேரம் பதினைஞ்சு நிமிஷம். ஈவ்னிங் டிராபிக்னா கூட பத்து நிமிஷம். என்ன ஆனாலும் தியேட்டருக்கு அஞ்சு நிமிஷம் முன்னால போய் சேர்ந்துரலாம். டிக்கட்ட வாங்கிட்டு, ஒரு தம்மப்போட்டுட்டு , வண்டிய ஸ்டான்ட்ல போட்டுட்டு போய் உக்கார்ந்த படம் போடறதுக்கு கரெக்டா இருக்கும்! இது பிளான்.


யெஸ் நீங்க நினைக்கறது அப்சலுட்டிலி கரெக்ட் ,. விதி வலியது! அதைவிடவும் வலியது சென்னை டிராபிக். எதிர்பார்க்க முடியாததை எதிர்பாருங்கள்னு பொடனில அடிச்சு சொல்லும்! சில சமயம் சி எம் கிராஸ் ஆவாரு, சில சமயம் அண்ணா சாலை மேம்பாலத்துல எந்த கார்க்காரனாவது எவன் மேலயாவது முட்டிகிட்டா டிநகர்ல டிராபிக் எகிறும். காரணமேயில்லாம அண்ணாசிலையிலருந்து மேம்பாலம் வரைக்கும் க்யூவுல நிப்பானுங்க.. டிநகர்ல புறப்படும் போதே கால் தடுக்குச்சு! ஆனாலும் தில்லா வண்டிய கிளப்பிக்கிட்டு சீறிப்பாஞ்சு அண்ணா மேம்பாலம் வரைக்கும் வளஞ்ச வளஞ்சு வந்து பார்த்தா நீ....ளமா டிராபிக்கு.


பீரானா..


சென்னையின் பிருமாண்ட டிராபிக் கடலில் மூழ்கி முத்தெடுத்தவனுக்கு இதெல்லாம் தூசியாச்சே! எப்படியாச்சும் அண்ணாசாலைய தாண்டி பீட்டர்ஸ் ரோடுக்கு போய்ட்டா அப்புறம் டிராபிக் இருக்காது. ச்சும்மா சீறிப்பாய்ஞ்சு சுறா மாதிரி (நாட் விஜய் மாதிரி , ஒரிஜினல் சுறா மாதிரி) எப்படியோ முக்கி முனகி திக்கி திணறி பாதி கிணறு தாண்டிட்டேன். அண்ணாசாலையதான் சொல்றேன். சத்யம் தியேட்டர் பின்னால ஒரு ரோடு போகும் பாருங்க , அதுக்கு பேருதான் பீட்டர்ஸ் ரோடு! அந்த ரோட்டுல ஈ காக்கா மட்டும்தான் இருக்கும்.. அது வழியாப்போய் எக்ஸ்பிரஸ் அவன்யூவ கடந்து ரைட் எடுத்தா ராயப்பேட்டை மணிகூண்டு.. அங்கருந்து ஸ்டிரைட்டா உட்டா பைலட் தியேட்டர். இதுதான் ரூட்டு!


சத்யம் தியேட்டர்ல படம் பாக்கற கார்க்காரனுங்க தொல்லைய கடந்துதான் எப்பவும் அந்த ரூட்டுல போய்த்தொலைய வேண்டியதாயிருக்கும். ஆனாப்பாருங்க அன்னைக்கு அவ்வளவா சத்யம் தியேட்டரான்ட கூட்டமே இல்ல. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.. டைம் பார்த்தேன் ஆறு நாப்பத்தஞ்சு! இன்னும் பதினைஞ்சு நிமிஷமிருக்கு.. எப்பவும் இல்லாம இன்னைக்கு ரொம்ப ஸ்பீடாவே வந்துட்டேன் போலன்னு , என்னோட வீரதீர சாகசங்கள நினைச்சு அப்படியே புளங்காகிதமடைஞ்சுட்டேன். எனக்கே லைட்டா சிலிர்ப்பாதான் இருந்துச்சு..


சிலிர்ப்போட சிலிர்ப்பா ஒரு சிரிப்போட சத்யம் தியேட்டர் புறக்காலி வழியத் தாண்டி பீட்டர்ஸ் ரோட்ல வண்டிய உட்டா.. ம்ம் .. என்னத்த சொல்ல ஒரு பயங்கர அதிர்ச்சி.. என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்குதானா இந்த ரோட்டுல டிராபிக் ஆகணும்.  ஆகிருச்சே! என்ன செய்ய..

எனக்கு முன்னால நாலு ஆட்டோ , ரெண்டு மினி லாரி, பின்னாடி ஒரு பஸ் , லெப்ட்ல மூணு பைக்கு, ரைட்டுல ஒரு ஆட்டோ , திரும்பிக்கூட போக முடியாத அளவுக்கு லாக் பண்ணி வச்சிருந்தானுங்க. கால் மணிநேரமாச்சு.. ம்ஹூம் முன்னால ஒரு இஞ்ச்கூட நகரல.. பக்கத்து ரோட்டு ஆட்டோகாரர் வண்டிய நிறுத்திட்டு வெளிய இறங்கி பீடிய பத்தவச்சுகிட்டு நின்னாரு. ண்ணா என்ன பிரச்சனைங்கணா என்றேன். புதுசா கட்டின எக்ஸ்பிரஸ் அவன்யூல அடுத்த ஷோ ஆரம்பிக்க போகுதுல அதான் கார்லாம் உள்ளே போகுதுப்பா.. அதான் டிராபிக்ன்னாரு..


பைலட் தியேட்டர்ல படம் பாக்கறவன்லாம் மனுஷன் கிடையாதாண்ணா என்றேன் அப்பிராணியாக.. அவரும் சோக முகத்தோடு ராஜா நீயும் பைலட்டுக்குதான் போறீயா என்றார்.. அவரும் அங்கேதான் போகிறார் போல.. பைலட்தியேட்டர்தான் ஆட்டோக்காரர்களின் சொர்க்கமாச்சே! பாவம் அவர்கிட்டயே ஒரு பீடிய வாங்கிப் பத்த வச்சுகிட்டு எட்டிப்பாத்தேன்.. எக்ஸ்பிரஸ் அவன்யூ வாசல்ல நாலஞ்சு கார் எடக்கு மடக்காக நின்னுகிட்டு ரோட்ட மறிச்சுகிட்டு மல்லுக்கட்டிக்கிட்டிருந்தாய்ங்க... இன்னைக்கு படம் பார்த்த மாதிரிதாம்டே மாப்ளேனு நினைச்சுகிட்டே புகைய குப்பு குப்புனு இழுத்து இழுத்து வுட்டேன்..


ஒரு வழியா டிராபிக் கிளியராகி ராயப்பேட்டை மணிகுண்டுகிட்ட வண்டிய திருப்ப.. மணிகுண்டுல டயம் 7.10! இதுக்கு மேல படத்தப்போய் பார்த்து அஞ்சாராச்சுனு பேசாம மணிகுண்ட சுத்திட்டு அப்படியே வீட்டப்பார்த்து போய்ட்டேன்.


விடிஞ்சுது! ஞாயித்துக்கிழமையாச்சே! இன்னைக்காச்சும் அந்த பீரானாவ பார்த்துரணும்னு கைல இருநூறு ரூவாவ எடுத்துகிட்டு தில்லா பிவிஆர் சினிமாஸ் போனேன். மூணு டில பக்கணும் 200ரூவாயாச்சும் வேணும்லா! 200 ரூவா எனக்கு ஒருநாள் கூலி! பரவால்லடா இன்னைக்கு பகட்டா ஒரு படத்த பார்த்துரணும்னு முடிவுபண்ணி கிளம்பினேன். உள்ளே போனா அடேங்கப்பா சொர்க்கம். வெளிய மழை.. லேசா மூச்சா முட்டிச்சு.. செக்யூரிட்டிகிட்ட பாத்ரூம் எங்கனு கேட்டு பாத்ரூம் பக்கமா போனேன். மறுபடியும் ஒரு சொர்க்கம்.


ஆனா பாருங்க அந்த மூச்சாபோற டாய்லெட்டுல தண்ணி வரல.. ஆனா சுத்தமா வாடையும் இல்ல.. தண்ணி திறந்து உடலாம்னா டாப்பையும் காணோம். வெளிய வந்து செக்யூரிட்டிகிட்ட கேட்டேன்.. ண்ணா உள்ள தண்ணியே வரலைங்கண்ணா என்னங்கண்ணா மேட்டர்ன்னேன். இந்த நுண்ணுயிரி கிருமி வச்சு அதுவா சுத்தம் பண்ணிக்குமாம்பா , தண்ணிய சேமிக்கணும்ல என்றார். ஓஓஓ என்று வாயை திறந்தவன் அப்படியே எல்லா மிட்டாய் கடையையும் பார்த்துகிட்டே , தானாவே ஏறி இறங்குற படிக்கட்டுல ஏறி இறங்கி.. தியேட்டர் கிட்ட வந்தேன். தண்ணித்தாகம்! தொண்டை அடைச்சுச்சு..

சுத்திமுத்தி பெரிய அண்டாவுல டம்ளர சங்கிலில வச்சு கட்டிவுட்டுருக்காய்ங்களானு தேடி தேடி தேடி தேடி.. ம்ஹூம் கிடைக்கல.. நம்ம தோஸ்த் செக்யூரிட்டிண்ணா இருக்காருல்ல.. ண்ணா தண்ணி.. என்றேன். தம்பி அந்த கடைல தண்ணி பாட்டில் கிடைக்கும் வாங்கி குடிச்சிக்கோங்கன்னாரு. கடையில தண்ணிபாட்டில் கேட்டேன் அரை லிட்டர் 12 ரூவாயாம்!


சுத்தியும் பார்த்தேன். நிறைய பீட்டர் பீரானாங்க 3டில  நூறு ரூவா காஃபிய குடுச்சிக்கிட்டிருந்துச்சு.. கார்ல வந்த பீரானா! காஃபி ஷாப் பீரானா! பீட்டர்ஸ் ரோட் பீரானா! என்னை முழுங்க வந்த பீரானா!


அன்புடன்
அதிஷா.