Pages

30 December 2010

அபஸ்வரங்களின் ஆலாபனை




மார்கழி மாதம் வந்துவிட்டாலே சென்னை சபாக்களில் நெய்மணம் கமழத் தொடங்கிவிடும். ஒவ்வொரு சபாவிலும் கச்சேரிகளைவிட ஞானானந்தா மாதிரியான மெஸ்ஸின் உணவுகள் உலகப் புகழ்பெற்றது. பல மாவட்டங்களிலிருந்தும் சபாவிற்கு பாட்டு கேட்க வருகிறார்களோ இல்லையோ , அக்மார்க் நெய்யால் செய்யப்பட்ட சுத்த சைவ பட்சண பதார்த்தங்களை சுவைக்க வந்துவிடுகின்றனர். அதற்கெல்லாம் காரணம் இந்நெய்மணமே. நான் அந்நெய்மண காரியங்கள் குறித்து ஒரு வார்த்தையும் பேசப்போவதில்லை. இது இசை பற்றியது.

முதலில் ஒன்றை சொல்லிவிட வேண்டும். எனக்கு இசை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. சினிமா பாடல்கள் மட்டும்தான் கேட்டிருக்கிறேன். அதிகாலையில் எழுந்து சாமி கும்பிட்டு சன்மியூசிக்கில் மாலா ரேணு மாதிரியான சுமாரான ஃபிகர்களிடம் கேட்டால் பாட்டை மரணப்படுக்கையில் இருக்கும் தாத்தாவுக்கு அந்த இசையை டெடிகேட் செய்து பாட்டும் போட்டுவிடுகின்றனர்.

ஆனால் அவையெல்லாம் இசையில்லை வெறும் குப்பைகள் என்பார் தோழர். என்னய்யா கொடுமை புளியந்தோப்பு பழனியின் கானாப்பாடல்களும் பரவைமுனியம்மாவின் நாட்டுப்புற பாடல்களும் கூடவா குப்பை என்று கோபமாகி திருப்பி கேட்டால்.. காரி துப்புவார். அதற்கு மேல் நான் விவாதித்தால் .. வாயிலே நுழையாத கொழகொழ பெயர்கள் சொல்லி அவருடைய இசை கேட்டுப்பாருங்கள்.. இவருடைய சங்கீதத்தை சுவைத்து பாருங்களென்பார். சங்கீதத்தை எப்படி சுவைக்க வேண்டுமென்பதையும் சில பேராகிராப்கள் தள்ளி அவரே விவரிப்பார் பாருங்கள்.

தோழர் சொல்கிற இசையமைப்பாளர்களின் பெயர்கள் மோசார்ட், பத்தே அலிகான், மன்சூர் அலிகான் மாதிரி ஏதோ அது வேண்டாம் நினைவில் இல்லை.. பிச்சை எடுப்பவனுக்கு எதற்கய்யா பீதோவன் என்று பீனாவுக்கு பீனாப்போட்டு எதுகைமொகைனையோடு கூறுவார் எங்கள் கம்யூனிசகுரு. ஓசியில் கிடைப்பதே மிகச்சிறந்தது என்றெண்ணுகிற நான் உன்னிகிருஷ்ணனின் பஜனை கச்சேரிக்கு போயிருக்க கூடாது. அதுவும் தத்தரீனா கச்சேரிக்கு... அதுவும் காசு செலவு செய்து சென்றது எவ்வளவு பெரிய குற்றம்.

பனிபெய்துகொண்டிருந்த மாலை நான் அலுவலகத்தில் வெட்டியாகத்தானிருந்தேன். தோழர் வந்தார்.

‘’இன்னைக்கு ராஜா அண்ணாமலை மன்றத்துல தமிழ் இசை விழா, அதுல உன்னிகிருஷ்ணன் கச்சேரி ஏழுமணிக்கு தோழர்.. போலாம் வாங்க’’ என்று ஆட்டினை பலிபீடத்திற்கு அழைக்கிற கசாப்புகடைக்காரனை போல என்னை அன்போடு அழைத்தார். தண்ணீர் தெளித்த ஆடுபோல் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி அய்ய்யோ நான் வரலை ஆள விடுங்க என்று சிலுப்பினேன். விடுமா வில்லங்கம்.

‘’பாஸ் நமக்கெதுக்கு பாஸ் இந்த மாதிரி விபரீத விளையாட்டெல்லாம். அங்க பக்கத்துலயே பர்மா பஜார் பக்கம் போனா தமிழ்ல நாலு, இங்கிலிஷ்ல நாலுனு செமத்தியான சீன் பட டிவிடி வாங்கிட்டு வந்து குஜாலா பார்க்கலாம்.. இல்லாட்டி போனா செம்மொழி பூங்கா போய் நாலு ஃபிகர சைட் அடிக்கலாம்.. அதவுட்டுட்டு.. பஜனை கச்சேரிக்குலாம்...’’ என்று சடைந்து கொண்டேன்.

‘’சரியான ஞான சூனியமா இருக்கீங்களே தோழர். நீங்க எப்பதான் வளர்ரது.. இசை பத்தி நிறைய தெரிஞ்சிக்க வோணாமா.நீங்க! உங்களுக்கு இலக்கிய வாதியாகணும்னு ஆசையே இல்லையா’’ என்று தொடர் அணுகுண்டுகளால் என் மீது தாக்குதல் நடத்த...

‘’நான் எதுக்கு பாஸ் இசை பத்தி தெரிஞ்சிக்கணும். நான் எப்பய்யா இலக்கியவாதி ஆகணும்னு சொன்னேன் , பாஸ் ப்ளீஸ் பாஸ்... ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.. ‘’ என்று இரு கைகளையும் முகத்துக்கு முன்னால் கூப்பி கற்பழிக்க வந்த கயவனிடம் மன்றாடும் அபலையை போல் கெஞ்சினேன். என் கண்களில் அவர் நிச்சயம் என்னுடைய இசை பயத்தினை பார்த்திருக்க முடியும்.

‘’தோழர் , தீராத விளையாட்டு பிள்ளை பாட்ட ஒரே ஒருவாட்டி உன்னி கிருஷ்ணன் பாடி நீங்க கேட்கணுமே.. அப்படியே அசோக்கா அல்வாவ பசும்நெய்ல முக்கி வாய்ல போட்டாப்ல அப்படியே நாக்குல கரைஞ்சு தொண்டைல இறங்கும் பாருங்க.. அது மாதிரி அனுபவிச்சாதான் பாஸ் தெரியும்’’ என்று தூண்டிலை மீண்டும் போட..

‘’ஹலோ நான் என்னைக்கு அசோகா அல்வாவ நெய்ல முக்கி தின்னிருக்கேன்.. என்னை விட்ருங்க நான் அவ்ளோ வொர்த் கிடையாது.. எனக்கு இதெல்லாம் புரியாது’’ என்று மேலும் கெஞ்சினேன். தன் முயற்சியில் சற்றும் தளராத தோழர்

‘’தோழர்.. இங்க பாருங்க, நீங்க கழுதை கிடையாது...’’

‘’பாஸ்..என்னா பாஸ் கழுதைனுலாம்..என்னை பார்த்து’’ என்று நான் அழ ஆரம்பிக்க..

‘’பாஸ் ஏன் இப்ப அழறீங்க.. நீங்க கழுதை கிடையாது உங்களுக்கும் கற்பூர வாசனை தெரியும்னு சொல்லவந்தேன்.. நாமெல்லாம் எப்பதான் சங்கீதம் கேக்கறது.அதுவுமில்லாம இது தமிழ்இசைவிழா அதனால நோ தெலுங்கு கீர்த்தனை ஒன்லி தமிழ்பாட்டுதான், அதுவுமில்லாம முக்கியமான மேட்டர் சொல்ல மறந்துட்டேன், இது முழுக்க முழுக்க இலவசம் பாஸ்!’’ என்று சொன்னனார்.

என்னது ஃப்ரீயா பாஸ் இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல.. என்ன பாஸ் உங்களுக்கு பொறுப்பே இல்ல.. கிளம்புங்க என்று கிளம்பினேன்.
ஓவர் டூ ராஜா அண்ணமலை மன்றம் , பாரிமுனை (பர்மாபஜார் மலேசியா மணி திருட்டு டிவிடி கடைக்கு மிக மிக அருகில்).

செல்லும் வழியெல்லாம் தோழரிடம் கெஞ்சினேன்.. தோழர் இப்பவும் ஒன்னுங்கெட்டுப்போகலே ஃப்ரீன்னாலும் பயமாவே இருக்கு.. இப்படியே இறங்கி ஆளுக்கொரு தம்மப்போட்டுட்டு அப்படியே போய்ருவோம்.. உங்களுக்கு ஒரு குவாட்டர் கூட ஸ்பான்சர் பண்றேன் வுட்ருங்கோவ்.. என்றேன்.. அப்போதும் கேட்கவில்லை.

வண்டி உள்ளே நுழைய.. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நெய்வாசனை அறவே இல்லை. அட! ஆரம்பமே அசத்தலா இருக்கேடா... அப்படீனா இசையும் நெய்வாசனை இல்லாமதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். ‘’எச்சூஸ்மீ சார் இன்னைக்கு ஃப்ரீ கிடையாது, டிக்கட் வாங்கினுதான் வரணும்’’ என்றார் அரங்க வாசலில் நின்றுகொண்டிருந்த டீசன்டாக பேசிய லோக்கலான ஆள்.

என்னது டிக்கட்டா.. பாஸ் காசுலாம் குடுத்து இந்த கண்றாவிய பாக்க முடியாது, தயவு பண்ணி வீட்டுக்கே போய்ரலாம் பாஸ்.. ஆனாலும் தோழர் விடவில்லை. அவரே ஸ்பான்சர் செய்தார். ஒரு டிக்கட் 50ரூபாய். ம்ம்.. மூனு பிட்டு சிடி வாங்கிருக்கலாம் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

உள்ளே மேடையின் இருபுறமும் எலக்ட்ரானிக் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. நடுவில் உன்னிகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் விதவிதமான வாத்தியங்கள், ஒன்று கையில் நெட்டுகுத்தலாக வைத்து வாசிக்கும் வீணை மாதிரி.. இன்னொன்று சின்னதாக டமக்குடப்பா போலிருந்தது. இன்னொன்று தவில் போல இருந்தது, தோழர் அதை மிருதங்கம் என்றார். பானை போலிருப்பது கடம் என்று கூடவா எனக்கு தெரியாது. உன்னி கிருஷ்ணன் பக்கத்தில் ஏதோ ஒரு சிடிபிளேயர் போலிருந்தது.. அது எலக்ட்ரானிக் ஸ்ருதி பெட்டியாம். கொய்ங்ங்ங்ங் என்று ஒலி எழுப்பிக்கொண்டேயிருக்குமாம். போலவே வயலின் இருந்தது. ஊதுபத்தி ஏற்றி தேங்காய் உடைத்து சுபமாக தொடங்கியது கச்சேரி.

த...த.....ரீ...னா... என்று தொடங்கினார் உன்னிகிருஷ்ணன்.. அருகிலிருந்து தோழருக்கோ உற்சாகம் தாங்கவில்லை. ஒரே கைத்தட்டல். இதுக்கு ஏன் இவரு கைதட்றாரு என்று நான் யோசிக்க மொத்த அரங்கமும் கைதட்டி வைக்க நானும் கைதட்டித்தொலைத்தேன். தொடர்ந்து ததரீனா..வையே வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி பாடினார்.. தவுக்கும் ரீக்கும் நடுவே சீரிய இடைவெளி விட்டு பாடினால் ஒரு ராகம்.. த்தரீ....னா என்று பாடினால் இன்னொரு ராகம்.. அரங்கத்தை அடைத்திருந்த பெருசுகள் அஹ்கா.. ஆஹா.. என்று பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் மட்டும் மடக்கி வைத்துக்கொண்டு ரசிக்க.. நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ததரீனாவே தொடர்ந்தது. இம்முறை மூன்று நிமிடங்களுக்கு மூச்சு விடாமல் ததரீனார் உன்னி கிருஷ்ணன்.. அரங்கம் அதிர்ந்தது. எனக்கு ஒரு எழவும் புரியவில்லை. எல்லோரும் கைதட்ட நானும் கைத்தட்டி வைத்தேன்.

‘’தோழர் தமிழிசைனீங்க.. வார்த்தையே இல்லையே.. இதென்னங்க ஒரே ததரீனாவா இருக்கே.. தமிழ் இசை விழானு ஏமாத்தறாங்க பாஸ்’’ என்று அவருடைய காதில் கிசுகிசுத்தேன்.

‘’யோவ் இது ஆலாபனைய்யா.. ராகத்தோட அழகை அப்படியே எடுத்து காட்டுறதுக்காக பாடறது.. இப்போ பாடறது என்ன ராகம்னா.. என்று தன் கையை கொஞ்சமாக மேலே உயர்த்தி கட்டை விரலால் ஒவ்வொரு விரலாக தடவி பிடித்து யோசிக்கத் தொடங்கினார்.

இப்போதும் உன்னி கிருஷ்ணன் விடாமல் ததரீனாவையே வளைத்து வளைத்து பாடிக்கொண்டிருந்தார். எனக்கு ஏனோ நாராசமாக இருந்தது... என்ன கருமம்டா இது ஒன்னுமே புரியல என்று தோழரை பார்த்தால் அவரோ விரலை மடக்கி மடக்கி உன்னியோடு அஹ்கா ஆஹஹா போட்டுக்கொண்டிருந்தார்.

ஒருவழியாக ஆலாபனை முடிய.. அடுத்து ஒரு பாடல் தொடங்கியது.. இப்பயாச்சும் புரியற பாட்டா பாடுவார் என ஆர்வத்துடன் காத்திருந்தால்...

தா...க...ரா...மா...சோ...க.. நீ.. ள.. கா.. ம.. என்று பாடத்தொடங்க.. ‘’பாஸ் தப்பா நினைக்காதீங்க தமிழ் பாட்டுனுல சொன்னீங்க.. தெலுங்கு பாட்டு மாதிரி இருக்கே’’ என்றேன்.. ‘’ஹய்யோ பாஸ் என்னை பாட்டு கேக்க விடுங்க.. இது தமிழ்பாட்டுதான்.. ராகமா பாடும்போது வார்த்தையெல்லாம் பிச்சுக்கும்’’ என்று என்னை முறைத்தபடி மீண்டும் ஆஹா ஆஹஹா என இசையில் மூழ்கினார். எனக்கு பஞ்சு வேண்டும் போல் இருந்தது.

மீண்டும் உன்னியின் தா..கா..சோ..க...மீ.... மு.. கா..மு என ஏதேதோ உடைத்து போட்ட தமிழ்ப்பாடலை கேட்க முயற்சி செய்தேன். ம்ஹும்.. ஒரு வேளை நான் கழுதைதானே என்று எனக்குள்ளாக ஒரு கேள்வி. என்னுள் எழுந்த அச்சந்தேகத்தினை கேள்வி என்ற ஒற்றயடுக்கிலே குறுக்கி விட முடியாது. அது ஒருவேள்வி.

உன்னி அடுத்ததாக மீண்டும் தன் ஆலாபனையை தொடங்க.. தோழரை இசையோடு விட்டுவிட்டு வெளியே தம்மடிக்க இறங்கினேன். ராஜா அண்ணமலை மன்றத்தில் வாசலிலேயே சில குடும்பங்கள் ரோட்டிலே போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்தனர். அந்த குடும்பத்தின் இரண்டு பேர் போதையில் எம்ஜிஆர் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். ‘’அன்பே வா படத்துல அந்த குண்டன் வர்வான் பார்ரு , நூறு கிலோ இர்ப்பான்.. அப்டியே தல்லீவரு அவ்னே இரண்டு கையால் தூக்கினு த்தா அப்டீயே ரெண்டு நிமிஷம் வச்சினு இருப்பார் பாரு.. அந்தகால்த்திலயே டூப்புகீப்பு எதும் கெடியாது.. பின்னிருப்பாரு..’’ என்று பீடியை வழித்தபடி பேசிக்கொண்டிருந்தது சுவாரஸ்யமாக இருக்கவே நானும் சிகரட்டை இழுத்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.

சிகரட் தீர்ந்து போக மீண்டும் அரங்கம் திரும்பினேன். உன்னி இன்னமும் மூச்சு விடாமல் ஆலாபனையே தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். என்னால் உட்காரவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஆயை மிதித்துவிட்டு கழுவாமல் வந்தது போன்ற உணர்வு. இருந்தாலும் இசையின் மறுவடிவான தோழருக்காக அமர்ந்திருந்தேன். ஆலாபனை முடிந்து மீண்டும் பாடல்.. தா....ண்...ட...வாஆஆஆஆஆ என உன்னி கிருஷ்ணன் மீண்டும் உடைக்க...

‘’பாஸ் என்ன பாஸ் தமிழை இப்படி கொல்றாங்களே.. எப்படி பாஸ் சகிச்சிகிட்டு பாக்கறீங்க , நாம தமிழ்ர்கள் இல்லையா நமக்கு தமிழ் உணர்வில்லையா‘’ என்றேன். தோழருக்கு வந்தது பாருங்க கோவம் ‘’அட அறிவுகெட்ட ஞானசூனியமே.. உன்னையெல்லாம் கச்சேரிக்கு கூட்டிட்டு வந்ததே தப்பு.. த்தூ.. கொஞ்சங்கூட ரசனைகெட்ட ஜென்மமா இருக்கீரே.. ச்சே அப்பவே நினைச்சேன் நீங்க ஒரு கழுதைதானு இப்படி வந்து நிரூபிக்கிறீங்களே..உங்களை கூட்டிட்டு வந்ததே தப்பு , ஒரு பாட்டு உருப்படியா கேட்கறீங்களா.. போய் உங்களுக்குலாம் அந்த சாவு மோளம்தான் கரெக்ட்டு , வெளிய எவனாச்சும் தார தப்பட்ட அடிச்சிட்டு இருப்பான் போய் கேளுய்யா’’

உன்னி கிருஷ்ணனே பாட்டை நிருத்திவிட்டார் இவரிட்ட கூச்சலில்.. எனக்கு அவமானமாக போய்விட்டது.. சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான இசை ரசிகர்களும் என்னை எழுந்து நின்று திரும்பி பார்த்து காரித்துப்புவது போல் இருந்தது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் இங்கே வந்திருக்க கூடாது. என்று அங்கிருந்து எழுந்து வெளியே நடக்க மீண்டும் உன்னி விட்ட இடத்திலிருந்து தத்தரீனார். என் தோளை வேகவேகமாக யாரோ உலுக்குவது போலிருந்தது. நான் அதிர்ந்து போக..

ஸ்ஸ்ப்பா உன்னிகிருஷ்ணன் பாட்டை கேட்டு தூங்கிட்டேன் போல.. பக்கத்தில் இன்னும் தோழர் விரலாட்டிக்கொண்டு பாட்டை ரசித்துக்கொண்டிருந்தார். தோளை உலுக்கியது இடது பக்கத்து சீட்டு பெரிசு.. தூங்கிவழிந்து சாய்ந்திருக்கிறேன்.. எதவும் நடக்கலே.. கச்சேரி முடிந்து வரும் வழியில் அருகிலிருந்து குப்பத்தில் தாரைதப்பட்டைகள் முழங்க ஏதோ சாவு போல,. செம அடி... இன்னா குத்து..

24 December 2010

மன்மதன் அம்பு



கடந்த இருபது ஆண்டுகளில் கமல் நடித்த மிகச்சிறந்த குப்பைகளில் ஆகச்சிறந்த குப்பை மன்மதன் அம்பு. பெரிய கப்பலை காட்டுகிறார்கள்.. பிறகு கமலை காட்டுகிறார்கள்.. கப்பல்... கமல்.. இதற்கு நடுநடுவே காமெடி மாதிரி கமலே எழுதிய வசனங்களை பேச சில நடிகர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கமலே எழுதிய தத்துவார்த்தமான வசனங்கள், ஒருவரிகூட புரியாத கமலின் கவிதைபாடல் கமலுக்கு மட்டுமே புரிந்து சிரிப்பு மூட்டக்கூடிய காமெடி வசனகாட்சிகள்.. கமலே கரகர குரலில் பாடி ஆடும் பாடல்கள்... ஆவ்வ் தூக்கம் வரவைக்கும் கமலின் திரைக்கதை.. வேறென்ன வேண்டும் ஒரு ஆகச்சிறந்த மொக்கைப்படத்திற்கு! எல்லாமே ஒருங்கிணைந்து மன்மதன் அம்பாய் நம் கண்களையும் காதுகளையும் பதம்பார்க்கிறது. எங்கேயும் கமல் எதிலும் கமல்.. படம் தொடங்கி சில நிமிடங்களில் நாம் பார்ப்பது கமல்படமா டிஆர் படமா என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது.

இந்துமுண்ணனி, இந்துமத விரோத பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டதால் கமல்-த்ரிஷா டூயட் கவிதை பாட்டை கட் செய்துவிட்டனர். ஆனாலும் நம்மூர் அறிவுஜீவிகளின் வாய்க்கு மசால் பொரிகடலை கிடைத்தது மாதிரி படத்தில் சூப்பர் சர்ச்சைகள் நிறைய உண்டு. அதில் இரண்டுமட்டும்.. எக்ஸ்ளூசிவ்லி ஃபார் சர்ச்சை விரும்பிகள்.

* ஈழத்தமிழர் ஒருவரை முழுமையான காமெடி பீஸாக.. ‘’த்ரிஷாவின் காலடி செருப்பாக கூட இருக்க தயாராக இருக்கிறேன்’’ என்று கூறுவதாக வசனங்கள் வருகிறது..

* தசாவதாரம்,உன்னைபோல் ஒருவன் படங்களை தொடர்ந்து இப்படத்திலும் கமல், லஷ்கர் ஈ தொய்பா குறித்து பேசுகிறார். தலையில் குல்லாப்போட்ட தீவிரவாதியை சுட்டு வீழ்த்துகிறார்.

படத்தின் கதைதான் மிகப்பெரிய லெட்டவுன்!. உயிருக்குயிராய் காதலிக்கும் காதலியை வேவு பார்க்க காதலனே ஒரு கனவானை ஏற்பாடுசெய்ய அந்த கனவானை காதலி காதலித்துவிட காதலியோடு காதலன் சேர்கிறானா கனவான் சேர்கிறாரா என்பதே கதை. ரொம்ப ஈஸியா சொல்லனும்னா.. மின்சாரகனவு படம் மாதிரி! கிளைமாக்ஸும் அதே மாதிரி! அதிலும் படத்தின் முதல் ஒரு மணிநேரம் உங்கள் பொறுமையை சோதித்து பைத்தியம் பிடிக்க செய்துவிடும்.

த்ரிஷாவுக்கு வயசாகிவிட்டது. பல இடங்களில் குட்டி டவுசர் போட்டுக்கொண்டு வருகிறார்.. பார்க்க பையன் போலிருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு ரிடையர்ட் ஆகி தொழிலதிபரை மணந்து செட்டில் ஆகிவிட நேரிடலாம். சங்கீதா அவரைவிட அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார். மாதவன்தான் படத்தின் உண்மையான ஹீரோ.. படம் முழுக்க கமல் கமலாகவே வந்து போவதால்.. அவருக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை.. ஓரிரு இடங்களில் நடிக்கிறார், மற்றபடி பல நேரங்களில் நடப்பதே நடிப்பு.

வசனங்கள் அனைத்தும் லைவ் ரெக்கார்டிங். கமல் இந்த லைவ் ரெக்கார்டிங் தண்டத்தை விட்டுத்தொலைப்பது நல்லது. பாதி வசனங்கள் புரிவதில்லை. வசனங்கள் புரியாமல் போனதற்கு இன்னொரு காரணம் 50%க்கும் மேற்பட்ட வசனங்கள் ஆங்கிலத்தில்.. ஆங்கிலப்பட பாணியில் வாட் இஸ் திஸ்.. ஏ ஃபார் ஆப்பிள் என ஏதேதோ பேச நமக்கென்ன எப்போதும் போல ஙே! கே.எஸ்.ரவிக்குமார், கே.எஸ்.ரவிக்குமார் என்று டிக்கெட் கிழிக்குமிடத்தில் பேசிக்கொண்டனர். அவருக்கும் இந்தபடத்திற்கும் என்ன சம்பந்தம்!

இந்த படத்தினை மேடையில் நான்கே நான்கு திரைச்சீலைகளை வைத்துக்கொண்டு ஏழு கதாபாத்திரங்களோடு மேடை நாடகமாகவே போட்டுவிடலாம். இதற்கு ஏன் குரூஸ் கப்பல்,ரோம்,வெனிஸ்...?

அண்மையில் பார்த்த விருதகிரி கொடுத்த கொண்டாட்ட மனநிலையை குலைத்துவிட்டது இந்த மன்மதன் அம்பு.

14 December 2010

லத்தீன் அமெரிக்க சமோசா!




சில மாதங்களாக காமராஜர் அரங்கத்தில் என் புத்தக வெளியீடு.. என் புத்தக வெளியீடு.. என போகுமிடமெல்லாம் அறைகூவல் விடுத்து.. எதை எழுதினாலும் அதில் இரண்டு வரி அறிவிப்பை சேர்த்துவிட்டு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தார் எழுத்தாளர் சாரு என்கிற சாருநிவேதிதா! விருதகிரியை வெளியிட விஜயகாந்த் எப்படியெல்லாம் உழைத்தாரோ அதற்கு இணையான உழைப்பை கொட்டித்தான் இவ்விழாவையும் ஒருங்கிணைத்திருக்கிறார் சாரு.

சாருவின் புத்தகவெளியீடு வெற்றிபெற நானும் தோழரும் மொட்டையடித்து ஒரு மண்டல விரதமிருந்து நாக்கில் அலகு குத்தி, பால்காவடி எடுத்து காமராஜர் அரங்கம் நோக்கி பாதயாத்திரை செல்ல முடிவெடுத்திருந்தோம். அந்த பால்காவடி பாலினை வாசலில் வைத்திருந்த கட்அவுட்டிற்கு அபிஷேகம் செய்யவும் திட்டமிட்டிருந்தோம். அவருடைய புத்தகத்தினை யானை மீது வைத்து பேண்டு வாத்தியங்கள் முழங்க எடுத்து வந்து வெளியிடவும் நினைத்திருந்தோம்.

போதிய ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தால் அதையெல்லாம் சாதிக்க இயலவில்லை. அதனால் எப்போதும் போல அந்திப்பொழுதில் அலுவலகத்தை மட்டமடித்துவிட்டு எப்போதும் போல பைக்கிலேயே ஆராவாரமின்றி அரங்கத்தை நோக்கி செல்ல வேண்டியதாயிருந்தது. அரங்க வாயிலிலேயே சாருவின் நான்கடி கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. அந்த கட்டவுட்டின் அருகிலேயே எங்கோ கல்லடிபட்ட சொறிநாய் ஒன்றும் படுத்திருந்தது. பாவம்! யார் அடிச்சாரோ ஆரடிச்சாரோ என பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தோம். வாசலிலேயே அவந்திகா அம்மாவும் இன்னொரு யுவதியும் எங்களை வரவேற்றனர். அரங்கத்திற்கு வலதுபுறமிறந்த முட்டுசந்தில் டீயும் சிற்றுண்டியும் வழங்குவதாக தெரிவித்தனர்.

லத்தீன் அமெரிக்காவின் சந்துபொந்துகளை கரைத்து குடித்தவரான சாருவின் நிகழ்ச்சி என்பதால் லத்தீன் அமெரிக்க சிற்றுண்டிகளும் சிலே அல்லது கூபா வொயினும் கிடைக்குமென ஆவலோடு போய்ப்பார்த்தால்.. சூடான சமோசாவும் வட்ட கப்பில் டீயும் வழங்கப்பட்டது. ச்சே.. அடுத்த ஆண்டாவது சமோசா கொடுத்தாலும் அதற்கு லவோசா , லே பிராசா என லத்தீன் அமெரிக்க பெயர் சூட்டி வழங்குங்கள் சாரு. என்னைப்போல் லத்தீன் அமெரிக்க பீட்சாபட்சினிகளின் ஏமாற்றத்தினை தடுக்கவியலும்.

சாருவின் ரசிகர் வட்டம் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போல இன்னும் சமோசா டீயோடு முடித்துக்கொள்ளும் பூட்டகேசுகள் அல்ல.. காப்பூசீனோவோடு வொயினைக்கலந்து பீட்சாவை ஒரு கடி கடித்துண்ணும் சூப்பர்மாடர்ன் இளைஞர்கள் என்பதை சாரு உணரவேண்டும். மற்றபடி யார் அந்த சமோசாவிற்கு ஸ்பான்சர் செய்திருந்தாலும் அவருக்கு நன்றி. சூடான சமோசாவும் அதிசூடான தேநீரும் குளிர்ந்த ஏசி அரங்கத்தில் நல்ல சுவை.

இணைய எழுத்தாளர் சமூகம் அங்கே குவிந்திருந்தது. யாரையும் குறிப்பிட்டு பெயர் சொல்ல முடியாத அளவிற்கு அத்தனை பேர் வந்திருந்தனர். அத்தனை பேர் வந்திருந்தனர் என்றால் அத்தனை பேர் வந்திருந்தனர். அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்து ரசித்துவிட்டே நகர்ந்தனர். அரங்கத்தில் சாருவிற்கு மிகப்பெரிய பேனரெல்லாம் வைத்திருந்தனர். மிகமிகப் பெரிய பிரமாண்ட பேனர் அது.

நிகழ்ச்சிக்கு குஷ்பூ வருகிறார், அவரை தரிசிக்கவேண்டும் என்பதற்காகவே திண்டுக்கல்லிலிருந்து உடன்பிறப்பு ஒருவர் மஞ்சள்பையை ஆட்டிக்கொண்டு வந்திருந்தார். அவருக்கு சாரு என்றால் யாரென்றே தெரியாது. என்ன கொடுமையான சமகால தமிழ்ச்சூழலில் வாழ்கிறோம் பாருங்கள். குஷ்பூவை தெரிகிறது சாருவை தெரியவில்லை. 90களின் இளைஞர்களான இன்றைய பெரிசுகள் சிலதும் ஜோள்ளோடு குஷ்பூவை காண கூடியிருந்தனர். இந்த விழாவிற்கு குஷ்பூ எதற்கு என அரைபக்க கட்டுரை வாசித்தார். ஏதேதோ சொல்லி சமாளித்தாலும் குஷ்பூ கவர்ச்சிக்காக சேர்க்கப்பட்ட பிற்சேர்க்கை என்பது இலக்கிய உலக பிதாமகன்கள் தொடங்கி நந்தா,சேது வரை அனைவருக்கும் தெரியும். சாருவுக்கும் ம.புவுக்கும் மட்டும் தெரியவில்லை. சாரு செய்த புண்ணியமோ என்னவோ குஷ்பூ சிலபல காரணங்களால் கடைசிவரைக்கும் வரவேயில்லை. பல குஷ்பூ ரசிகர்களும் 10.30வரைக்கும் காத்திருந்துவிட்டு வாடியமுகத்துடன் வீடுதிரும்பினர் என்கிற சோகத்தை சொல்லும்போதே என்கண்களிலும் கண்ணீர் கசிகிறதே!

ஆயிரத்திற்கும் மேல் வாசகர்கள் அமர வசதியிருந்தாலும் அதில் 75 சதவீத இருக்கைகள் நிரம்பியிருந்ததை காண முடிந்தது. சாருவின் ஜீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்த அழகான இளம்வாசகிகள் பலரும் ‘’யெஸ்,நோ,வாட்,ஓகே,ஓ மை காட்’’ என ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தனர். எனக்கு அந்த அளவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் தமிழ்தெரிந்த பெண்களை தேடினேன்.. தமிழச்சி தங்கபாண்டியனும் கனிமொழியும் அமர்ந்திருந்தனர், நான் உட்கார்ந்த இடத்திலிருந்தே கை ஆட்டி டாட்டா காட்டினேன்.. அவர்களும் புன்னகைத்தனர். பாலகுமாரன் முன்வரிசையில் உட்கார்ந்திருக்கிறார் என்றனர் எட்டி எட்டி பார்த்தேன் அவருடைய வெள்ளை மண்டைதான் தெரிந்தது அதற்கும் ஒரு முறை ஆட்டிவைத்தேன்.

மிஷ்கின் இரவிலும் கண்ணாடி அணிந்தே மேடையில் காட்சியளித்தார். அவரை பார்க்க பார்வை குறைபாடுள்ளவர் போலவே தோன்றினாலும் அவருடைய நந்தலாலா தமிழ்சினிமாவின் மைல்கல் என்பது கிட்டானோவுக்கே தெரியும். நல்லிகுப்புசாமி செட்டியார் பட்டுமாதிரி தகதகவென மின்னினார். மதன் வாயில் வெத்தலையோ சீவலோ எதையோ அதக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். எஸ்ராமகிருஷ்ணன் மேடையேற நல்குணமும் பெருந்தன்மையுங்கொண்ட சாருவின் ரசிகர்கள் அவருக்கும் விசிலடித்து ஹோவென கத்தி வரவேற்பு நல்கினர். இதுமாதிரி ஒரு வரவேற்பை அவர் வாழ்நாளில் பார்த்திருக்கவியலாது. அவருக்கே ஒருமாதிரி ஆகியிருக்க வேண்டும். முகத்தில் ஒன்றரை டின் டால்டா வழிந்தது. சாரு மட்டும் ஒருபக்கம் தமிழச்சி இன்னொரு பக்கம் கனிமொழி என செட்டில் ஆகிவிட ரவிக்குமார் எம்எல்ஏ தான் பாவம், ஒருபக்கம் நல்லிகுப்புசாமி செட்டி இன்னொரு பக்கம் நடராஜன் என பாவமாய் அமர்ந்திருந்தார்.

தன்னுடைய புத்தகங்களை தனக்கு மிகநெருக்கமான நண்பர்களை கொண்டே வெளியிட்டு நண்பர்களை கௌரவித்தார் சாரு. அதில் நம்முடைய கவிஞர் நர்சிம் சாருவின் சரசம் சல்லாபம் சாமியார் புத்தகத்தை வெளியிட்டபோது பதிவர்கள் வெறியோடு விசிலடித்து அவரை கௌரவித்தனர். மற்றபடி கனிமொழி சாருவுடனான நட்புகுறித்தும் தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை என்றும் பேசினார். ஸ்பெக்ட்ரம் ராடியா என்று கத்திவிட தோன்றினாலும் அதிமுரட்டு சாரு ரசிகர்களிடம் உதைவாங்குமளவுக்கு எனக்கு தெம்பில்லை என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

தமிழச்சி தங்கபாண்டியன் காலாவதியான சார்த்தரின் தத்துவங்கள் குறித்து பேசினார். எஸ்ரா அவருடைய கட்டுரைகளை போல புரிந்தும் புரியாமலும் நிறைய பேசினார். மதன் சிரிப்பூட்டும் வகையில் ஏதேதோ பேசினார். மிஷ்கின் நந்தலாலா திரைப்படம் உருவாக அவருடைய உழைப்பு குறித்து சுயசிலாகித்து பேசினார். ரவிக்குமார் பேசும்போது நான் தம்மடிக்க வெளியே சென்றுவிட்டேன்.

சாரு நிறைவாக பேசும்போது நிறைய பேசினார். ஏழு புத்தகங்களையும் வாங்க ஆவலோடு சென்று அந்த கடையை பார்த்தேன். இப்படியாக இரவு பத்து முப்பதுக்கு மேல் இந்த விழா இனிதே முடிவடைந்தது. அதற்கு மேல் நான் வீட்டிற்கு சென்று சேரும் போது மணி 12க்கு மேல் ஆகிவிட்டதால் மனைவியிடம் செம்ம அடிவாங்கியதோடு இரவு உணவும் கட்!

இதுதான் நடந்தது.

13 December 2010

எங்கள காப்பத்த யாருமே இல்லையா... – விருதகிரி விமர்சனம்!



‘’எங்கள காப்பாத்த யாருமே இல்லையா’’ என ஒட்டு மொத்த தமிழகமும் கூக்குரலிட அங்கே மக்களை காக்க நீதியை காக்க நியாயத்தை காக்க தர்மத்தை காக்க புயலென தோன்றினார் தேமுதிக தலைவரும் டாக்டரும் கேப்டருமான புரட்சி கலைஞர் விஜயகாந்த். கலைஞரை எதிர்த்து அரசியல் செய்யும் ஒப்பற்ற எழில் சூரன் நம் விஜயகாந்த். அவரால் மட்டும்தான் இனி இந்தியா வல்லரசாக முடியும். அவரால் மட்டும்தான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும். அமெரிக்காவால் கூட அடக்கமுடியாத தீவிரவாதிகளை ஒற்றை ஆளாய் சிங்கம் போல் பின்னாங்காலால் உதைத்து தாக்கி அழித்துவிடும் ஆற்றல் பெற்றவர் நம்முடைய கேப்டர் விஜயகாந்த். தண்ணீர் பிரச்சனையா , மின்சாரம் இல்லையா, லஞ்சமா, ஊழலா, அநியாய வட்டி வாங்குகிறார்களா, பஞ்சாத்து பிரச்சனையா எதையும் எதிர்கொண்டு போரிட்டு நமக்கான சமநீதியை பெற்றுதர தெற்கே மதுரையில் பிறந்த செம்மல் நம் விஜயகாந்தால் மட்டும்தான் இயலும்.

இதுவரை தமிழகத்திற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் விஜயகாந்த் மேற்கொண்ட போராட்டங்களும் புரட்சிகளும் எண்ணிலடங்கா.. அதற்காக அவர் இழந்தவை சொல்லி மாளாது. தன் உயிரையும் துச்சமென நினைத்து மக்களுக்காக போராடும் ஓரே பச்சைத்தமிழன் விஜயகாந்த் மட்டும்தான். இன்னொருவர் எல்.கே.சுதீஷ். இன்னொருவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் விஜயகாந்தின் புரட்சி வரலாற்றை.. ஏழைகளின் கலங்கரை விளக்கம்.. பாதிக்கப்பட்டோரின் விடிவெள்ளி.. மக்களின் எழுச்சி.. தமிழகத்தின் புதுப்புரட்சி அவர்தான் டாக்டர்.. கேப்டர்.. என்றெல்லாம் மக்களால் அன்போடு அழைக்கப்படும் நம் தமிழின போராளி விஜயகாந்த்.

மேலே இருக்கும் வாசகங்கள் எல்லாமே உண்மை என நம்புகிற ஆளாக இருந்தால் உங்களுக்கான படம்தான் விருதகிரி. தயவு செய்து இந்த படத்தை பார்த்துவிட்டு தேமுதிகவில் உறுப்பினராக சேர்ந்து விடவும். தேமுதிக பிரச்சார டாகுமென்ட்ரியையே வாய்பிழந்து பார்க்கிறவர்களின் வாழ்வில் மிகமுக்கியமான காவியம் விருதகிரி.

மேலே உள்ளவற்றை படித்து புன்னகைத்திருந்தாலோ அல்லது சிரித்திருந்தாலோ உங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு சிரிப்பான படத்தை பார்த்திருக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு மகா காமெடியான திராபை இந்த விருதகிரி. இதற்கு முன் நரசிம்மா என்கிற மகா காவியத்திற்கு இப்படிப்பட்ட ஒரு காமெடி வரலாறுண்டு. அதையும் விஞ்சுகிறது இவ்விருதகிரி. காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்து வயிறுவலிக்க செய்கிறார் படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான விஜயகாந்த். (இப்படிப்பட்ட வித்யாசமான முயற்சிகளை டி.ராஜேந்தர் (எஸ்.டி.ஆரின் அப்பா) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வது வழக்கம்)

பாட்டி வடை சுட்ட கதையிலிருந்தே விஜயகாந்த் நடித்த பல கதைகளும் தோன்றின. விருதகிரியின் கதையும் அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும். பாட்டியாக விஜயகாந்த்.. வடையாக ஒரு இளம்நடிகை... காக்காவாக அல்பேனிய பாஷை பேசும் ஆஸ்திரேலிய தீவிரவாதிகள். விஜயகாந்த் பொத்தி பொத்தி வளர்க்கும் நாயகியை கொத்திக்கொண்டு போகின்றனர் தீவிரவாதிகள். தீவிரவாதிகளை பந்தாடுவதென்றால் நம் நாயகருக்குத்தான் ஆந்திராமீல்ஸ் மாதிரியாச்சே! விடுவாரா.. விரட்டி விரட்டி பின்னங்காலால் உதைத்து உதைத்து , சுவர் மேல் ஏறி உதைத்து கடைசியில் இந்தியா,ஆஸ்திரேலியா,பர்மா,இலங்கை,சிங்கப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை தீவிரவாதிகளிடமிருந்து மிகக்கடுமையான போராட்டத்திற்கு பிறகு காப்பாற்றுகிறார். தியேட்டரில் படம் பார்க்கும் நம்மை காப்பாற்றத்தான் ஆள் இல்லை. இதே கதையை அண்மையில் ஜக்குபாய் என்கிற பெயரில் இன்னொரு அரசியல் தலைவரும் பிரபல நடிகை ராதிகாவின் கணவரும் சமக கட்சியின் நிறுவனருமான சரத்குமார் ஜக்குபாய் என்கிற படத்தில் உபயோகித்திருந்தார்.

இந்த மொக்கை கதை ஹாலிவுட்டிலேயே கழுவி ஊற்றப்பட்டதென்பது நம்மூர் அரசியல் வாதிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. டேக்கன் படம் ஹாலிவுட்டிலேயே சுமாராக ஓடியபடம். அதை ஆளாளுக்கு காப்பியடித்து படமெடுக்கத் தொடங்கினால் நாடு தாங்குமா.. அதுவும் பிரபல அரசியல் தலைவர்கள்!

மற்ற பிரபல அரசியல்வாதிகளான கார்த்திக்,விவேக்,கருணாஸ்,குண்டுமணி,வாகை சந்திரசேகர்,உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இதே கதையின் இன்னொருமுறை ஹீரோவாக நடித்து நம்மை ஹிம்சிக்காமலிருக்க வேண்டும். இதற்காகவாவது அம்மா ஆட்சிக்கு வந்து இவர்களது கொட்டத்தை அடக்க வேண்டும்.

படம் முழுக்க யாருமே சாதாரண வசனங்கள் பேசுவதில்லை. வில்லன் தொடங்கி அடிபொடிகள் வரை அனைவருமே பஞ்ச் பேசுகிறார்கள். எல்லாமே ஆளுங்கட்சி எதிர்ப்பு பஞ்சுகள். நம் காது பஞ்சராகும் வரை பஞ்ச் தொடர்கிறது. சில ஒரு காட்சியில் திருட்டு டிவிடியில் படம் பார்க்கும் போலீஸான மன்சூர் அலிகான் சொல்கிறார் ‘’அதெப்படிய்யா வாரிசுகள் படம் மட்டும் டிவிடி வரமாட்டேங்குது.. மத்தபடம்லாம் டிவிடி பக்காவா வந்துடுது’’ , இன்னொரு காட்சியில் விஜயகாந்த் சந்தையில் நடந்து வர ஒருவர் ‘’அய்யா உங்கள பார்த்தா ரொம்ப நல்லவரா இருக்கீங்க.. எங்க ஏரியால பைப் போட்டாங்க தண்ணியே வரலைங்கய்யா.. ‘’ அருகில் இருப்பவர் ‘’அய்யா கிட்ட சொல்லீட்டீங்கல்ல.. நிச்சயம் நல்லது நடக்கும்.. அவர் அரசாங்கத்துல வேலை செய்யும்போதே மக்களுக்கு இவ்ளோ நல்லது பண்றாரு.. அரசாங்கமே அவருகிட்ட வந்துடுச்சின்னா தமிழ்நாடுஎப்படி ஆய்டும்’’. இப்படி படம் முழுக்க ஆளாளுக்கு நீங்க இப்பவே இவ்ளோ பண்றீங்க ஆட்சிக்கு வந்தா என்னலாம் பண்ணுவீங்க என வாசித்துக்கொண்டேயிருப்பது படத்தின் சிறப்பு.

படம் முழுக்க ஆங்கிலேயர்களும் ஆஸ்திரேலியர்களும் அல்பேனியர்களும் பேசும்போது பிண்ணனியில் தமிழ் டப்பிங் கொடுத்திருப்பது நல்ல யுக்தி. அதிலும் விஜயகாந்த் சிலகாட்சிகளில் பேசும் ஆங்கில வசனங்கள் தியேட்டரில் சிரிப்பலைகளை கிளப்புகின்றன. குறிப்பாக நாயகியை கடத்திவிடும் வில்லன் விஜயகாந்திடம் போனில் பேச.. விஜயகாந்தோ..’’யார்ரா நீ. தீவிரவாதியா.. உன் டிமான்ட் என்ன , இந்திய ராணுவ ரகசியங்கள் வேணுமா.. குண்டு வைக்கணுமா.. யார்ரா நீ..நேர்ல வந்தேன் அவ்ளோதான்’’ என்றெல்லாம் பேசும் காட்சி தமிழ்திரையுலகம் காணாதது.

படத்தில் தேவையேயில்லாமல் நான்கு பாடல்கள் வந்துபோகின்றன. இசை சுந்தர் சி பாபுவாம். அய்யகோ இவர்தான் மிஷ்கினின் அஞ்சாதேவிற்கும் இசையென்று சொன்னால் அடிக்க வந்துவிடுவார்கள்.. கர்ணகொடூரமான இசை. படத்தின் காமெடியில் இசையும் கடந்து போகிறது.

மற்றபடி ஊழலுக்கு எதிராக வீதிக்கு வீதி மேடைபோட்டு தலையில் குல்லா போட்டு கொட்டுமழையிலும் கேப்டர் ரீவியில் முழங்கும் விஜயகாந்த் , ஹாலிவுட் படத்தின் கதையை மட்டுமல்லாமால் வசனம் உட்பட காப்பியடித்து படமெடுத்திருப்பது , வருங்காலத்தில் கலைஞர் கருணாநிதிபோல புரட்சிதலைவி ஜெயலலிதா போல மிகப்பெரிய அரசியல்வாதியாக வரப்போவதற்கான பிரகாசமான எதிர்காலத்தின் அறிகுறியாகத் தெரிகிறது.
இதற்குமேலும் தொடர்ந்து இந்தக்கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருந்தால் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது தேமுதிக! உடனே உறுப்பினராகிவிடுங்கள்!
விருதகிரி – உட்டாலக்கடி கிரிகிரி தேமுதிக வடைகறி!