Pages

31 December 2011

நண்பர்களின் ஆண்டுமீண்டும் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஆண்டும் எதையும் சாதிக்கவில்லை. அடுத்த ஆண்டாவது எதாவது சாதனைகள் செய்யவேண்டும் என்கிற லட்சியவெறி மட்டும் ஒவ்வொரு ஆண்டு நிறைவிலும் சடங்கு போல எஞ்சியிருக்கிறது.


எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நண்பர்களின் எண்ணிக்கை 2011ல் கணிசமாக அதிகரித்திருக்கிறது. பத்திரிகை பணி தொடர்பாக சந்தித்த நண்பர்கள் போக ஃபேஸ்புக்,டுவிட்டர் என புதிய தளங்களிலிருந்து நிறைய நிறைய நண்பர்கள்.


நிறைய வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் இளைப்பாற நல்ல இடமாக டுவிட்டரும் ஃபேஸ்புக்கும் இருந்தன. அங்கே பலரோடு வேடிக்கையாக சண்டைகள் போட்டாலும் புதிய நட்புகளுக்கான இடமாக அமைந்தது. தொடர்ந்து நம் வலைப்பூவிலும் மாதத்திற்கு ஐந்து கட்டுரைகள் என்கிற அளவில் எழுதியே வந்துள்ளேன். முடிந்தவரை சினிமா தொடர்பான விஷயங்களை தவிர்த்து புதிதாக எழுத முயற்சி செய்துள்ளேன். சீமானை விமர்சித்து எழுதப்பட்ட பதிவுக்காக நிறைய அனானி ஆபாச போன் கால்களை சந்திக்க நேர்ந்தது பெருமையாக இருந்தது. நம் தளத்தில் எழுதிய வாகைசூடவா விமர்சனத்தின் வரிகள் அப்படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் உபயோகிக்கப்பட்டது இன்னும் மகிழ்ச்சி.


சென்னையை சேர்ந்த டுவிட்டர் நண்பர்கள் இணைந்து வாராவாரம் கிரிக்கெட் ஆடியதை மறக்கவே முடியாது. அடுத்த ஆண்டும் கிரிக்கெட் ஆட முயற்சி செய்ய வேண்டும். கிரிக்கெட் என்பதையும் தாண்டி அது சின்ன வயது சிநேகித உணர்வுகளை மீட்டுக்கொடுத்துள்ளது. முன்னெடுத்து சென்ற உருப்படாதது நாராயணனுக்கும் மச்சி கார்க்கிக்கும் நன்றி.


விகடனின் வலைபாயுதே பக்கத்தில் தொடர்ந்து வெளியான என்னுடைய ஏகப்பட்ட டுவிட்டுகளும் ஸ்டேடஸ்களும் பலரையும் கவர்ந்ததாக அறிகிறேன். அதை படித்துவிட்டு தொடர்ந்து பாராட்டும் வாழ்த்தும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

இந்த ஆண்டு நிறைய புத்தகங்கள் வாசிக்க முடிந்தது. கிட்டத்தட்ட 500க்கும் மேல் திரைப்படங்கள் பார்த்திருப்பேன். பைத்தியகாரன் சிவராமன் நிறைய புத்தகங்கள் மற்றும் சிடிக்களை தொடர்ந்து கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. இலக்கியம் குறித்து தொடர்ந்து புட்டிப்பால் ஊட்டிவரும் மச்சிசார் மாமல்லன் மற்றும் ஜ்யோவ்ராமின் இனிய நட்பு இந்த ஆண்டும் தொடர்கிறது. காமிக்ஸ் விஷ்வா மற்றும் பின்தொடரும் நிழலான தோழர் யுவகிருஷ்ணாவின் தயவில் நிறைய காமிக்ஸ்கள் படித்தேன்.


பயணங்கள் அதிகமில்லாத ஆண்டாக இது அமைந்தது. யானைகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைக்காக மேற்குதொடர்ச்சி மலையெங்கும் சுற்றியது தவிர பெரிய பயண அனுபவங்கள் ஏதுமில்லை. அடுத்த ஆண்டாவது நிறைய சஞ்சாரம் செய்ய நினைத்திருக்கிறேன்.


பல ஆண்டு கனவான சொந்தமாக ஒரு கேமரா வாங்கவேண்டும் என்கிற ஆசை நிறைவேறியது. டிஜிட்டல் கேமராதான்.. (எஸ்எல்ஆர் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி.) அதை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட படங்கள் எடுத்து தள்ளினாலும் சில படங்கள் பலரையும் கவர்ந்தது ஊக்கமளித்தது, அதிலும் புகைப்பட கலைஞர் ஜீவ்ஸ் கிருஷ்ணனின் தொடர்ச்சியான புகைப்படக்கலை குறித்த தகவல்களும் அவருடைய போட்டோகிராபி இன் தமிழ் வலைப்பூவும் நிறையவே உதவின. அவருக்கு நன்றி. முதல் முறையாக என்னை மேடையேற்றி அழகுபார்த்தனர் ஈரோடு பதிவர்கள்.


சீமான்,விஜய்,அன்னாஹசாரே,கருணாநிதி,ஜெயலலிதா,மன்மோகன்,சோனியா,விஜயகாந்த் என பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களால்தான் நமக்கு இணையத்தில் பொழப்பு ஓடுகிறது! நன்றி சொல்ல இன்னும் நிறைய பேர் இருந்தாலும் முக்கியமான ஒரு சிலர் அதில் உண்டு.


தீபாவளிக்கு முதல் நாள் ஒரு போன்கால்! ‘’அண்ணா வணக்கம் நான் இருளாயி பேசறேன்’’ என்றது எதிர்முனை. பேரைச்சொன்னதும் உடனே நினைவுக்கு வந்துவிட்டது. பிளஸ்டூ தேர்வில் நர்சிங் பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி இருளாயி. படிக்க வசதியில்லாமல் செங்கல் சூளையில் செங்கல் சுமந்துகொண்டிருந்தவரை பழனிக்கே போய் பார்த்து அவரை பற்றி நான் பணியாற்றும் பத்திரிகையிலும் நம்முடைய இணையதளத்திலும் எழுதியிருந்தோம். அந்தப்பெண்தான் செல்போனில் அழைத்திருந்தாள் ‘’சொல்லும்மா! எப்படி இருக்க, தம்பிங்க நல்லாருக்காங்களா? ஸ்கூல் போறாங்களா?, குடிசைவீட்டை மாத்திட்டீங்களா?’’ என கேள்விகளை அடுக்கினேன்.
‘’அண்ணா இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேங்ண்ணா. கிட்டத்தட்ட ஒருலட்ச ரூபாய் வரைக்கும் உதவிகள் கிடைச்சிருக்குண்ணா.. எனக்கு உதவி செஞ்சவங்க யார்னு கூட தெரியல , அவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுண்ணும் தெரியலண்ணா.. இப்போ நான் மட்டும் படிக்கல அந்த தொகையால செங்கல் சூளைக்கு போய்கிட்டிருந்த என் ரெண்டு தம்பிகளும் கூட படிக்கறாங்கண்ணா’’ என நெகிழ்ச்சியாக சொன்னாள். எனக்கும் கூட இப்போது வரைக்கும் தெரியாது ஆஸ்திரேலியாவிலிருந்தும் கனடாவிலிருந்து ஐரோப்பாவிலிருந்து இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் ஏகப்பட்ட பேர் தங்களால் முடிந்த உதவிகளை அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளனர். அவளுக்கு கல்லூரியில் சீட் தர எத்தனையோ நண்பர்கள் முன்வந்தனர். ஆனால் விடாப்பிடியாக அரசுக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். கோவையிலிருந்து ஒருநண்பர் அவருக்கு மாதந்தோறும் ஒரு சிறுதொகையை அனுப்பிவருகிறார்.


இதுவரை இதைவிடவும் பெரிதாக மகிழ்ந்த நெகிழ்ந்த கண்ணீர் விட்டழுத சம்பவம் எதுவுமே எனக்கு நினைவில்லை. உதவி செய்த அத்தனை நண்பர்களுக்கும் என்னால் ஒரு நன்றியைக்கூட சொல்லமுடியவில்லை என்கிற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அப்பெண்ணுக்கு உதவி செய்தவர்கள் இதை படிக்க நேர்ந்தால் அந்த நல்ல உள்ளங்களுக்கு என் சார்பிலும் இருளாயியின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்.


இந்த ஆண்டில் என்னென்னவோ நல்லதும் கெட்டதும் நடந்திருந்தாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த 2011 மட்டும் இருளாயியாலும் அவருக்கு உதவி செய்த நண்பர்களாலும் நிச்சயமாக நினைவிலேயே இருக்கும்.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

28 December 2011

பவுடர் ஸ்டார்

முன்னெச்சரிக்கை - (இந்தப்பதிவு உங்கள் உடல்நலத்திற்கு கேடுவிளைவிக்கலாம்)
இந்த ஆண்டு எத்தனையோ பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றிருந்தாலும் எந்தப்படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியதாக தெரியவில்லை. இப்படியொரு மகா மோசமான தமிழ்சினிமா சூழலில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்கிற புதுமுகம் நடித்த லத்திகா என்கிற மாகாவியம் 300 நாட்களை கடந்து இன்னமும் சக்கைப்போடு போடுகிறது.. (ஒரே தியேட்டரில்). மொக்கையான கதை, மட்டமான நடிப்பு, கேவலமான இசை, தாங்கமுடியாத தலைவலி படம் எப்படி 300நாட்களை கடந்தும் ஓடுகிறது என்கிற வியப்பு நம் அனைவருக்குமே இருக்கலாம்!


‘’ஆமாய்யா காசு கொடுத்துதான் படத்தை ஓட்டுறேன், ரசிகர்களுக்காக ஓட்டித்தானே ஆக வேண்டியிதாருக்கு’’ என விகடன்,குமுதம்,விஜய்டீவி,சன்டிவி முதலான பிரபல பத்திரிகைகளில் டிவியில் பேட்டியும் கொடுத்திருக்கிறார் படத்தின் நாயகன் பவர்ஸ்டார். தமிழ்சினிமாவின் சூப்பர் நாயகர்களில் யாருமே இதுபோல ஒன்றை செய்ததாக தெரியில்லை.. ரசிகர்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்காத மாமணியாக பவர்ஸ்டார் இருக்கிறார். அதனால்தான் ரசிகர்களின் நலன் கருதி வருடத்திற்கு ஒருபடம் நடிக்கிறாரோ என்னவோ?


அவருடைய லத்திகா திரைப்படங்களின் காட்சித்தொகுப்பு.. கண்டு மகிழுங்கள். பார்த்துவிட்டு வாட் ஏ மேன் என வியந்துபோவீர்கள்!அதுதவிர படம் வெளியாகி ஒரு வருடமாகியும் இன்னமும் திருட்டு டிவிடி வெளிவராத ஒரே திரைப்படம் லத்திகா மட்டும்தான்! திருட்டு டிவிடியை ஒழிக்க நம் தமிழக காவல்துறையும் முட்டிப்போட்டு குட்டிகரணம் அடித்தும் முடியாதிருக்க.. சத்தமேயில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புரட்சியை பண்ணிவிட்டு சின்னகவுண்டர் விஜயகாந்த் போல துண்டை தூக்கி தோளில் போட்டுகிட்டு போய்கொண்டே இருக்கிறார் பவர்ஸ்டார்.


ஜேகே ரித்திஷ் அரசியலில் பிஸியாகிவிட்ட சூழலில் அவருடைய இடத்தை நிரப்ப ஒரு தலைவன் வரமாட்டானா என ஏங்கிக்கொண்டிருந்த தமிழ் சம்முகத்திற்கு கிடைத்த வரம்தான் பவர்ஸ்டார். சினிமாவிலிருந்து அரசியல் என்பதே ரூட்டு அதை மாத்திப்போட்டு அடிச்சாரே ரிவீட்டு. அவர்தான் அரசியலிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் சொக்கத்தக்கம்தான் பவுடர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் ஸ்ரீனிவாசன். சினிமாவில் ஆயிரக்கணக்கான போலிடாக்டர்கள் (விஜய்,விக்ரம் etc) இருந்தாலும் இவரு மெய்யாலுமே படித்து பட்டம் வாங்கிய ஒரிஜினல் டாக்டர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருத்துவர் அணித்தலைவராக மட்டுமே இருந்தவர்.


ரஜினியைப்போலவே வில்லனாக தொடங்கியது பவரின் பயணம். மேகம்,போகம்,மண்டபம் என ஒன்றிரண்டு கில்மா படங்களில் அவ்வப்போது பத்து பெண்களை கற்பழிக்கும் ஒற்றை வில்லனாக முகத்தில் எந்த சுரணையுமேயில்லாமல் வெறித்தனமாக நடித்துக்கொண்டிருந்தார். என்ன ஆச்சோ ஏதாச்சோ நம் பயுபுள்ள பவர்ஸ்டார் தீர்ப்பு சொல்லும் பண்ணையாராக வாழ்ந்த ‘’நீதானா அவன்’’ என்கிற படத்தின் வரலாறு காணாத மாபெரும் வெற்றி அவருக்கு கதாநாயக அந்தஸ்த்தை பெற்றுத்தந்தது.
அந்தப்படத்தின் டிரைலர்..

ஹீரோ அந்தஸ்து கிடைத்தும் புரோடியூசர் கிடைக்கவில்லை என்கிற காரணத்தினால் ரசிகர்கள் ஏமாந்துவிடக்கூடாதே என்கிற ஒரே காரணத்திற்காகவும்.. தமிழ் மக்களுக்காகவும்.. பாரதமண்ணிற்காகவும்.. சொந்தகாசில் லத்திகா என்கிற படத்தை தயாரிக்க முன்வந்தார். அதற்கு பிறகு லத்திகா பெரும் வெற்றியடைந்து தமிழ்நாடு டாராந்துபோனதெல்லாம் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் வரலாறு..


பவர்ஸ்டாரின் இந்த வெற்றி ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களையும் பிலிம் இன்டஸ்ட்ரியையுமே மூச்சுபேச்சில்லாமல் செய்திருக்கிறது. அண்ணாரின் அடுத்த படமான ஆனந்த தொல்லை இதனாலேயே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.


இதுதாண்டா டிரைலர் என்று சொல்லுமளவுக்கு அண்ணலின் இரண்டாவது படத்தினுடைய டிரைலர் வெளியாகியிருக்கிறது. இரண்டரை நிமிட டிரைலரே இந்த அளவுக்கு மிரட்டுதுன்னா இரண்டரை மணிநேர படம் வெளியானா தமிழ்நாடு என்னத்துக்கு ஆவறது என்கிற அச்சமும் நம் மனதில் உதிக்காமல் இல்லை! கூடங்குளத்தையே தாங்குகிற தமிழினம் இதை தாங்காதா? நம் தமிழ்மக்கள் மேல்தான் தலைவனுக்கு என்ன ஒருநம்பிக்கை. அதைதான் இந்த டிரைலரும் நமக்கு காட்டுகிறது.


உங்களுக்காக அந்த அதி அற்புத டிரைலர். டிரைலரையே இரண்டு மணிநேரம் கூட பார்க்கலாம்! அதிலும் குறிப்பாக 1:54 நிமிடத்தில் வருகிற சண்டைக்காட்சியை கண்டு அர்னால்டுக்கே குலைநடுங்கும். வாட் ஏ ஃபைட் ஆஃப் தி டுவென்டி பஸ்ட் செஞ்சுரி பாக்ஸ்.டிரைலர் பார்த்தாச்சா.. அதை பார்க்காவிட்டால் இந்த பதிவின் நோக்கம் நிச்சயமாக நிறைவேறாது. பார்க்காமல் போக நேர்ந்தால் அது நீங்கள் செய்த புண்ணியாபலனாகவும் இருக்கலாம். இந்தப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. விஜயின் நண்பன், தனுஷின் 3, ஆர்யாவின் வேட்டை என பிரபலங்களின் படங்களுக்கு நடுவே சந்துகேப்பில் சிந்துபாட தயாராகி வருகிறது ஆனந்ததொல்லை. படம் வெளியானால் விஜய் அஜித் சிம்பு தனுஷெல்லாம் ஃபீல்ட் அவுட் ஆகப்போவது உறுதியாக இப்போதே தெரிகிறது.


கடைசியாக ஒரு பிட்டு-

பிரபஞ்ச நாயகன் , நடிப்பு புயல் , அண்டம் வியக்கும் அண்ணன் பவர்ஸ்டாரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

20 December 2011

செய்யாத தப்புக்கு தண்டனை!


எழுத வந்து இத்தனை ஆண்டுகளில் இதுதான் முதல் மேடை. முதல் கௌரவம். முதல் சால்வை, முதல் போர்வை. கிட்டத்தட்ட முதல் இரவுக்கு காத்திருக்கும் புதுமாப்பிள்ளையின் அநேக குழப்பங்களோடு ஈரோடு கிளம்பினேன். ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியில் உங்களை கௌரவிக்கப்போறோம் என்று கதிர் சொன்னபோது சும்மா கலாய்க்கிறாங்களோ என்றுதான் நினைத்தேன். நம்மலெவலுக்கு அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது. என்னத்த எழுதி கிழித்துவிட்டோம் என்கிற மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.

மேடையில் என் பெயர் சொல்லி அழைக்கும்வரை என்னால் அதை நம்பவே முடியவில்லை. காரணம் இதுவரை நான் எதையும் உருப்படியாக செய்ததாக நினைவில்லை. பண்ணிடாத குற்றத்துக்கு தண்டனைபெறுவதைப் போல செய்யாத சாதனைக்கு கௌரவிக்கப்படுவதும் பெரும் மன உளைச்சலை அனுபவிக்க நேருகிறது. அப்படியொரு மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.

அதைவிடுங்க.. விருந்தோம்பலில் சும்மாவே காட்டு காட்டென்று காட்டும் ஈரோடு பதிவர்கள் சங்கமம் என்று வந்துவிட்டால் என்ன காட்டுகாட்டுவார்கள் என்பதை கடந்த ஞாயிறு ஈரோடு போயிருந்தால் உணர்ந்திருக்கலாம். ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் ஆண்டுதோறும் நடத்துகிற சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கிளம்பினேன்.
ஏற்காடு எக்ஸ்பிரஸில் ஈரோட்டுக்கு வந்துசேர்ந்துவிட்ட என்னையும் தோழர் யுவகிருஷ்ணாவையும் வரவேற்க ஆறுமணிக்கே காத்திருந்தார் நண்பர் ஜாஃபர். லாட்ஜில் ரூம் போட்டுக்கொடுத்து தேவையான உதவிகளை அரங்குக்கு செல்லும்வரை கூடவே இருந்து செய்து உதவினார். அரங்கில் பிரமாதமான காலை உணவு பரிமாறப்பட்டது. 200க்கும் மேல் பதிவர்களும் சமூகவலைதள நண்பர்களும் கூடியிருந்தனர். வாசலிலேயே தாமோதர் சந்துருவும் ஈரோடுகதிரும் வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். பாலாசி ஓடியாடி துடிப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சங்கோவி,கார்த்திக்ஈரோ,லவ்டேல் மேடி என என்னுடைய வாசகநண்பர்கள் நிறையபேர் என்னிடம் ஆட்டோகிராப் பெற நினைத்துக்கொண்டேயிருந்தனர்.

திருப்பூர் பதிவர்கள் சேர்தளம் என்று ஒரு இலக்கிய அமைப்பை நடத்தி வருகின்றனர். வெள்ளை டிஷர்ட்டில் சேர்தளம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு திருப்பூரிலிருந்து பலரும் வந்திருந்தனர். பார்க்கவே தமாஷாக இருந்தது. வெயிலான்தான் தலைவர் என நினைக்கிறேன். அவரும் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார். சென்னையிலிருந்து மணிஜியும் அகநாழிகையும் பிலாசபி பிராபகரனும் இன்னபிற நண்பர்களும் வந்திருந்தனர். கேஆர்பி செந்திலும் ஜாக்கிசேகரும் உண்மைதமிழனும் கூட வந்திருந்தனர். அவர்களும் என்னோடு கௌரவிக்கப்பட்டனர். மதுரையிலிருந்து சீனா,தருமி என மூத்தபதிவர்கள் வந்திருந்தனர். கிட்டத்தட்ட தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த பதிவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சில குடிகாரர்களையும் அரங்கில் பார்க்க முடிந்தது. குடிப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு என்பதை அழுந்த சொல்லி அவர்களையெல்லாம் திருத்த முயன்றேன்.

பிரமாண்டமான ஏற்பாடுகளை கண்டு பிரமிப்பாக இருந்தது. நமக்குத்தெரிந்த பதிவர் சந்திப்பெல்லாம் மெரீனாவின் கடற்கரையில் எளிமையாக அளவளாவி டீக்கடையில் அரசியல் பேசிக்கலைவது மட்டும்தான். அதன் சுகமே தனி! இது வேறு மாதிரி கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒழுங்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட போர்டு மீட்டிங்கை போல இருந்தது. நிறைய பெண் பதிவர்களும் , சிலபதிவர்கள் குடும்பத்துடனும் வந்திருந்தனர். தோழர் ஆரூரான் இனிமையாக பேசி விழாவை துவக்க.. சாதனையாளர்கள் அழைக்கப்பட்டனர். என்னையும்தான்! அப்போதும் கூட எனக்கு உள்ளுக்குள் ஒருவித லஜ்ஜையாகவே உணர்ந்தேன். ஒவ்வொருவரையும் அழைக்கும்போதும் நாதஸ்வரம் வாசித்தது புதுமையாக காமெடியாக இருந்தது.

நான் யாருக்கெல்லாம் ரசிகனோ அத்தனைபேரும் அந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக நான் யாரைப்பார்த்து எழுதவந்தேனோ அந்த நபர் தோழர் லக்கிலுக், என்னை எழுதவைத்த பாலபாரதி, சிறுவயதில் நான் வியந்து பார்த்த கட்அவுட்களை வரைந்தவரும் தேசிய விருது பெற்ற எழுத்தாளருமான ஜீவநாதன், நாளைய இயக்குனரில் பல முறை என்னை கலங்கவைத்த குறும்பட இயக்குனர் ரவிக்குமார், எனது புகைப்படகலை ஆசான் ஜீவ்ஸ் என அத்தனை பேருக்கும் நடுவில் என்னையும் கௌரவித்தது சிலிர்ப்பூட்டியது.

அந்த மேடையில் அமரும் தகுதியற்றவனாக நெளிந்தபடி மேடையில் அமர்ந்திருந்தேன்.
ஒவ்வொருவரை குறித்தும் ஒரு அறிமுகத்தினை வாசித்தனர். என்னைப்பற்றிய அறிமுகத்தையும் வாசித்தனர். அதை கேட்டபோது என் குற்றவுணர்வு அதிகரித்து மவனே மரியாதையா மேடைலருந்து இறங்கி ஓடிடு என பயமுறுத்தியது. கௌரவிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுக்கு உபயோகமான போர்வை பரிசாக அளிக்கப்பட்டது. வீட்டில் காட்டியபோது அம்மா அகமகிழ்ந்து போர்வை நல்லா காஸ்ட்லியா இருக்கும்போலருக்கு, நீ எழுதி எழுதி உருப்படியா வாங்கினது இதுதான் என்று வியந்து பாராட்டினார்.

முதல்மேடை என்பதால் உட்காருவதற்கே ரொம்பவே சங்கோஜமாக உணர்ந்தேன்.
பார்வையாளர்கள் அனைவருமே நம்மையே பார்ப்பது போன்றதொரு பிரமை. படபடப்பாகவும் கிலியாகவும் இருந்தது. இதில் ஒவ்வொருவரும் ஒருநிமிடம் பேசியே ஆகவேண்டும் என்று சொல்ல.. கையில் மைக் பிடித்தது மட்டும்தான் நினைவிருக்கிறது என்ன பேசினேன் என்றே தெரியவில்லை. இருந்தும் செய்யாத சாதனைக்கு விருது என்கிற என்னுடைய குற்றவுணர்ச்சிவேறு வந்துவந்து அச்சுறுத்தியது. ஓடக்காத்திருக்கும் ஓட்டப்பந்தய வீரனைப்போலவே சீட்டு நுனியில் அமர்ந்துகொண்டு விட்டாப்போதும் என்றே அமர்ந்திருந்தேன்.

எந்த விழாவாக இருந்தாலும் நம்முடைய கவனமெல்லாம் சாப்பாடுதான். ஈரோடு பதிவர்கள் சாப்பாட்டு விஷயத்தில் எப்போதுமே கில்லிதான். ஒரு வருடத்திற்கு முன் ஈரோடு சென்றிருந்தபோது கதிரும் நண்பர்களும் பிரமாதமான ஒரு ரோட்டுக்கடையில் அருமையான முட்டை தோசை வாங்கிக்கொடுத்து அசத்தினர். அதனால் மதிய உணவிலும் அதுமாதிரி புதுமைகள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில் முட்டை அப்பம், தலைக்கறி, சிக்கன் ஃபிரை, மட்டம் ஃபிரை, சிக்கன் சூப் என நான்வெஜ்ஜிலும்.. எனக்கு பிடிக்கவே பிடிக்காத தாவரங்களை சமைத்து வெஜ்ஜிலும் அசத்தியிருந்தனர். வயிறார சாப்பிட்டேன்.

மற்றபடி ஈரோடு பதிவர் சங்கமம் மிகச்சிறந்த நெகிழ்ச்சியான மகிழ்ச்சியான அனுபவத்தை தந்தது. விருந்தினர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுத்தந்தது. ஒரு சிறிய விழாவாக இருந்தாலும் அதை எப்படி குறைந்த செலவில் பிரமாண்டமாக நடத்தமுடியும் என்பதை போதித்தது. இன்னும் நிறைய சொல்லலாம். ஈரோடு பதிவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். என்னை வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

அடுத்த முறை கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய விழாக்களில் சங்கமமும் ஒன்றென உணர்ந்தேன். இத்தனைக்கும் நடுவில் உள்ளுணர்வு இன்னமும் உனக்கேன் இதெல்லாம் குடுத்தாங்க சொல்லு என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறது! இனியாச்சும் ஒழுங்கா நல்லதா நாலு கட்டுரை எழுதோணும். இல்லாட்டி என் மனசாட்சியே என்னை கொன்னுபோடும்!


15 December 2011

வெள்ளிச்சங்கு

அன்றையதினம் விடிவதற்கு சற்றுமுன்பாகவே கிஷ்ணனின் உயிர்த்தோழன் அருண் தன்னுடைய ஆன்ட்ராய்ட் மொபைலிலிருந்து குறுஞ்செய்தியொன்றை அனுப்பினான். அதை ஆதியில் செல்போனாக கருதப்பட்ட இரட்டை ஒன்று இரட்டை பூஜ்யம் ரக செல்போனில் கிஷ்ணன் பார்த்தான். அதில் ‘’மச்சான் ஐயாம் பிளஸ்ட் வித் ஏ பாய்’’என்று சொல்லியிருந்தான் அருண்.

கிஷ்ணன் அதை அரைத்தூக்கத்தில் பார்த்துவிட்டு மீண்டும குப்புறப்படுத்து தூங்கிவிட்டான். அந்த குறுஞ்செய்தி பின்னாளில் அவனுடைய வாழ்க்கையையே புரட்டிப்போடப்போகிறதென்பது தெரியாது. விடிந்ததும் தோழனுக்கு எதையாவது பரிசு கொடுக்கணுமே என நினைத்து, வீட்டிலே பரணில் உறங்கிக்கொண்டிருந்த வெள்ளிச்சங்கினை எடுத்து தூசி தட்டி புளிபோட்டு கழுவி பளபளவென்றாக்கி ஜிகினா பேப்பரில் சுற்றி புதிதுபோல மாற்றிப் பரிசளித்தான். அருண் அதைக்கண்டு நண்பனின் நட்பை வியந்து உச்சிமுகர்ந்தான். கிஷ்ணனுக்கு பெருமையாக இருந்தது.

அந்த வெள்ளிச்சங்கு அவனுடைய குடும்பத்தில் பரம்பரையாக உபயோகித்து வந்த ஆதிகாலத்து பால்குடி சங்கு. கிஷ்ணனுக்கு அதில்தான் பால் புகட்டப்பட்டது. என்றைக்கு கிஷ்ணன் டியூப் வைத்த டம்ளரில் பால் குடிக்கத்தொடங்கினானோ அன்றையதினத்திலிருந்து வெள்ளிச்சங்கு பரணுக்குள் முடங்கியது. கிட்டத்தட்ட 25ஆண்டுகளாக அது வைத்த இடத்திலேயேதான் கிடக்கிறது. அதைப்பற்றி வீட்டிலிருக்கும் அம்மாவுக்கோ ஆயாவுக்கோ அப்பாவுக்கோ ஒரு கவலையுமில்லை. பிறகு என்ன மயித்துக்கு அந்த கெரகத்த அங்க வச்சிருக்கணும்.. எனவே அது அருணுடைய குழந்தைக்கு பரிசளிக்கப்பட்டது.

ஓர் இரவில் கிஷ்ணனின் அம்மாவுக்கு ஒரு நல்ல கனவு வந்தது. அந்தக்கனவில் பூச்சூடியம்மன் காட்சியளித்தது. அம்மனோடுனான கனவுரையாடலில் ‘’கிஷ்ணனுக்கு ஒரு கல்யாணங்காச்சி பண்ணிப்பாக்கணுமாத்தா! அதுக்கு நீதான் ஒதவோணும்’’ என்று கிஷ்ணனின் அம்மா வேண்டுகோளை முன்வைக்க.. யோசித்துவிட்டு அம்மன் சொன்னது ‘’என்ர கோயிலுக்கு வாராவாரம் வந்து உன்ர வூட்டுபரணுமேல கெடக்கற வெள்ளிச்சங்குல வெளக்கேத்தி வச்சியன்னா மூன்ற மாசத்துல டான்னு கல்யாணமாகிப்போயிடும்’’ என்றது. இப்படியாக அந்த கனவு நீண்டது. விடிந்தது.

விடிந்ததும் அம்மா அரக்கபரக்க கிஷ்ணனை எழுப்பினாள். ‘’கிஷ்ணா கொஞ்சம் பரண் ஏறி அந்த வெள்ளிச்சங்கை எடுத்துக்குட்ரா’’. தூங்கிக்கொண்டிருந்த கிஷ்ணன் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தான். ‘’என்னகேட்ட.. வெள்ளிச்சங்கா?’’.. அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் வேறுவழியின்றி அதை தேடுவதுபோல பாவலா காட்டினான். ‘’இங்கே இல்லம்மா..’’ என கடிந்துகொண்டான். ‘’தம்பீ பத்துரூவா வேணா வாங்கிக்க.. அதை எப்படியாச்சும் எடுத்துக்குட்றா’’ என்றாள்.

‘’ இப்ப என்னத்துக்கு அத வேலமெனக்கெட்டு தேடிக்கிட்டிருக்க.. அப்படியென்ன கொள்ளகொண்டுபோற அவசரம்’’ என மேலும் கோபங்கூட்டினான் கிஷ்ணன்.

‘’இல்ல தம்பீ..நேத்து நைட்டு கனவுல...’’ என பூச்சூடியம்மனுடனான உரையாடல் குறித்து ஃபிளாஷ்பேக்கில் விளக்கினாள். கிஷ்ணன் கோபமாக தேடிதேடி நடித்தான். தேடலில் எதுவுமே அகப்படவில்லை என்கிற வருத்ததுடன் ‘’வேற வழியில்ல தம்பீ பேசாம மொளகாயரைச்சிர வேண்டியதுதான்’’ என தன் முடிவையும் தெரிவித்தாள். ம்க்கும் என்ன செஞ்சிடும் மொளகா.. என தெனாவெட்டாக மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும் ஒருவித பயம் அவனுடைய இதயத்தில் உருவானது.

‘’அடப்போம்மா அதெல்லாம் சும்மா , அந்த பூசாரிப்பய ஊர ஏமாத்திட்டு திரியறான் நீ வேற.. என்னமோ பீடத்துல மொளகாவ அரைச்சு தேப்பாய்ங்களாம்.. உடனே உடம்பு எரிஞ்சிருமாம்.. ரத்தம் கக்குமாம், மெட்ராஸ் வெயில்ல அவனவன் இதெல்லாம் இல்லாமயே வெந்துபோய் ரத்தம் கக்கிட்டுதான் அலையறான்.. நீ வேற, இன்டெர்நெட்டு த்ரீஜி ஃபோர்ஜினு போய்கிட்டிருக்கோம்..ஒன்னு பண்ணு பேசாம போலீஸ்டேசன் போவோம் கம்ப்ளைன்ட் குடுமப்போம். சட்டப்படி செய்வோம்’’ என கடிந்துகொண்டான். தண்ணீரில் விட்ட ஒருதுளி சொட்டுநீலம் போலவே பயம் மெதுவாக உள்ளுக்குள் கரையத்தொடங்கியது.

‘’என்ரா பெரிய போலீஸு மயிராண்டி.. சாமியவுட உன்ர போலீஸு பெரிய இதுவா.. பூச்சூடியம்மனோட மகிமை உனக்கெங்க தெரியப்போவ்து.. போன வாரம் நம்ம சுப்பு கம்மல் தொலைஞ்சிருச்சினு மொளகா அரைச்சு தேச்சி வச்சு.. ஒரே ஒரு வாரந்தான்.. அவ தெருவுல ஒருத்தன் ரத்தங்கக்கி கைகால் விளங்காம போயி கண்ணு அவுஞ்சு உடம்பு எல்லாம் கொப்புளமா கிடந்து அழுகிப்போய் செத்துப்போனான் தெரியுமில்லே... டாக்டருங்களாலயே ஒன்னும் பண்ணமுடியல’’ என்றாள். அது சொட்டுநீலத்தை மேலும் கரைத்தது.

முடிந்தவரை அம்மாவின் பேச்சுக்கு காதுகொடுக்காமல் அதைப்பற்றி கவலைப்படாமல் சுவரில் மாட்டியிருந்த சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பும்போது ஹாலிலிருந்த பீரோகண்ணாடியில் ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே கிளம்பினான். வ.உ.சி பூங்காவில் பூச்சூடியம்மன் கோயில் பூசாரியின் மகளான உஷா காத்திருப்பாள்!

நமக்குநாமே திட்டம்போல கிஷ்ணன் தனக்கான மொளகாயை தானே அரைக்க அம்மாவினால் அழைக்கப்பட்டான். முதலில் மறுத்தாலும் தற்போது வேலைவெட்டியில்லாமல் இருப்பதாலும் அவ்வப்போது பெட்ரோலுக்கும் தம்முக்கும் அம்மாவிடம் அஞ்சுபத்துக்கு போயி நிற்கவேண்டும் என்கிற காரணத்தாலும் பைக்கை எடுத்துக்கொண்டு அம்மாவை பின்னால் அமர்த்திக்கொண்டு கோயிலை நோக்கி புறப்பட்டான். வயிற்றுக்குள் ஏதோ எரிவதைப்போலவும், இதயம் என்றைக்கும் இல்லாமல் இன்று அதிவேகமாய் துடிப்பதாகவும் உணர்ந்தான். மொம்மது தெருவில் இருந்தது பூச்சூடியம்மன் கோயில்.

தெருவில் இருக்கிற நூறு கடைகளுக்கு நடுவே பெரிய இடத்தை வளைத்துப்போட்டு ஒரு கரையான் கட்டிய புற்றுதான் பூச்சூடியம்மன் கோவில். அந்த புற்றில் ஆதிகாலத்தில் பாம்பு வசித்திருக்கலாம். ஊரின் சந்தை சாலையாக மாறிவிட்ட காலத்திலும் அதில் பாம்பு இருப்பதாக ஊர் நம்பியது. அதனால் புற்றை சுற்றி சுவர் எழுப்பி நடுவில் புற்றை வைத்து அதன் மீது மஞ்சள் குங்குமம் கொட்டி.. அதன் துளைகளில் பால் ஊற்றி.. முட்டையை உடைத்து போட்டு.. பூவைத்து.. பொட்டு வைத்து.. புற்றுக்கு கண்மலர்கள் வைத்து.. வெள்ளியில் மூக்கு வைத்து வாய் வைத்து.. கிட்டத்தட்ட அந்த புற்றை அம்மன் சிலைபோல மாற்றிவைத்திருந்தனர்.

அதை பார்த்தால் யாருக்குமே பக்தி பீறிட்டு வந்துவிடும். புதிதாக வருகிறவர்களுக்கு அந்த பூச்சூடியம்மனே இறங்கி ஆட்கொண்டு அருள்வாக்கு சொல்வதும் உண்டு! எந்த ஊரில் எது தொலைந்தாலும் இங்கே வந்து மொளகாயரைக்கலாம். மாவட்டத்திலேயே பவர்ஃபுல் அம்மன் என்றால் அது பூச்சூடியம்மன்தான்! இங்கே வாசலிலேயே சூனியம் வைக்க வருகிறவர்களுக்கு வசதியாக அம்மிக்கல்லும் குளவியும் வைத்திருப்பார்கள். அதில் மிளகாயை அரைத்து அந்த காரமான சட்னியை கொண்டுபோய் புற்றுக்கு முன்னால் இருக்கிற கல்லில் பூசிவிட்டால் போதும். சோளி முடிந்தது! ரத்தம் கக்க அம்மன் கியாரண்டி என்பார் பூசாரி! பூசாரியின் குடும்பம்தான் பரம்பரையாக அங்கே பூஜை செய்துவந்தது.

‘’அம்மா இதெல்லாம் எதுக்கும்மா.. ஆப்டரால் வெள்ளிச்சங்கு.. ஐநூறு ரூவா பொறுமா.. அதுக்குபோயி மொளகாயரைச்சி சூனியம் வைக்கறேனு கிளம்பிருக்கியா.. திருடினங்களுக்கும் குடும்பங்குட்டி இருக்கும்ல.. நாளைக்கே ஏதாச்சும் ஒன்னாயி செத்துப்போயிட்டான்னா அவன் குடும்பம் அநாதையா நிக்காதா? யோசிச்சு பாரு.. அந்த வெள்ளிச்சங்க கொண்டுபோயி அவனென்ன லச்சுமிமில்ஸையா வெலைக்கு வாங்கப்போறான்.. வுட்டுத்தொலையேன்..’’ என பைக் ஓட்டியபடி அம்மாவோடு பேசிக்கொண்டே வந்தான்.

‘’இவரு பெரிய இவரு.. சொல்லிட்டாரு.. அடப்போடா.. அப்படியே வண்டிகாரன்வீதிகிட்ட நிறுத்து..’’ என கிஷ்ணனின் பேச்சுக்கு துளிகூட மரியாதை கொடுக்காமல் பேசினாள் அம்மா. வண்டிக்காரன் வீதியில்தான் உஷாவின் வீடிருந்தது. துன்பத்திலும் ஒரு இன்பம் என நினைத்துக்கொண்டு வீதிக்குள் வண்டியை நுழைத்தான். வேண்டுமென்றே உஷாவின் வீட்டு வாசலுக்கு அருகில் வண்டியை நிறுத்தி இரண்டொருமுறை ஹாரன் அடித்தான். ‘’நீ போயி அண்ணாச்சிக்கிட்ட நான் சொன்னேனு சொல்லி ஒரு கிலோ காஞ்ச மொளகா வாங்கிக்க.. அப்படியே ஒர்ரூவாக்கு கற்பூரமும், ரெண்ட்ர்ரூவாக்கு வெத்தல பாக்கும்.. ஊதுபத்தி அஞ்சுரூவா பாக்கட்டும் வாங்கிக்க..’’ என்று கட்டளையிட்டாள் அம்மா. தனக்கு சூனியம் வைக்க தானே இதையெல்லாம் வாங்கவேண்டிய பாக்கியம் யாருக்கு கிடைக்கும்.

உஷாவீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டு ‘’ஏன்டி இவளே கொஞ்சம் தண்ணிகொண்டாடி’’ என சப்தமிட்டாள் அம்மா. உஷா வெளியே ஓடிவந்து சுடிதார் ஷாலை சரிசெய்தபடி ‘’வாங்த்த.. எப்படி இருக்கீங்’’ என சொன்னாலும் வாசலில் நின்ற கிஷ்ணனின் பைக்கை பார்த்து அவனெங்கே என நோட்டம்விட்டாள். கிஷ்ணன் எதிர்த்த கடையில் சாமான் வாங்கிக்கொண்டிருந்தான். ‘’எங்கே கிளம்பிட்டீங்க..’’ என அம்மாவிடம் கேட்டபடி அண்ணாச்சிகடையையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘’உங்க அய்யனெங்கே.. கோயில்லயா.. அங்கதான் போறோம்’’ என்றாள் அம்மா. ‘’காத்தால போனவரு இன்னும் வரலீங்த்த.. ‘’ என பேச்சிக்கொண்டிருக்க கிஷ்ணன் வந்தான்.

அவளைப்பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தான். அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். அம்மா அதை கவனித்தாள். ‘சரிடி இவளே நான் கிளம்பறேன்..’’ என இடுப்பில் கையை வைத்துக்கொண்டு பொறுமையாக எழுந்து பைக்கில் அமர.. கண்களாலேயே உஷாவுக்கு ஒரு டாட்டாவை உதிர்த்துவிட்டு கிளம்பினான் கிஷ்ணன்.

கிஷ்ணனுக்கு வழியெல்லாம் பதட்டமாகவே இருந்தது. மொளகா அரைக்கும் முன்னமே வயிறு எரிவது போலவும் கண்கள் சிவப்பது போலவும் ஒரு உள்ளுணர்வு. லேசாக இடதுகால் கொஞ்சம் வீங்கி அதன் எடை அதிகரிப்பதைப்போலவும் இருந்தது. இதயம் வேறு திக்திக் என அடித்துக்கொண்டும் எரிச்சலாகவும் இருந்தது. விரல்கள் நடுங்கின. வியர்த்துக்கொட்டியது. அதோடு வண்டியோட்ட முடியாமல் ஓரிடத்தில் நிறுத்தினான். ‘’தம்பீ என்னடா ஆச்சு..’’ பதறினாள் அம்மா. ‘’ஒன்னுமில்லே லைட்டா தலைசுத்தல்’’ என சமாளித்தான். ‘’கண்டபசங்களோட சேர்ந்து கண்டதையும் குடிக்கறது.. கேட்டா அதெல்லாம் இல்லனு சொல்லவேண்டியது’’ என சலித்துக்கொண்டாள் அம்மா. அப்படியே ஒரமாக வண்டியை நிறுத்தி இருவருமாக வேப்பமர நிழலில் கொஞ்சநேரம் நின்றனர்.

வேப்பமரம் அருகிலேயே ஒரு கரையான் புற்று.. ஏன் இந்த இடம் இன்னும் கோயிலா ஆகல என்கிற கேள்வி அவனுக்குள் எழுந்தது.

அம்மா எதையாவது பேச வேண்டுமே என பேசினாள். ‘’உனக்கு தெரியுமா.. ஒருக்கா பூச்சூடியம்மன் கோயில்லயே ஒருத்தன் கைய வச்சிட்டான்.. உண்டியல உடச்சிட்டான்.. பூசாரி வுடுவாரா.. ஒருமூட்டை .. நாப்பது கிலோ மொளாகா வாங்கிட்டு வந்து அரைச்சு தேய்ச்ச மூனாம்த்து நாளு அவனா வந்து கால்ல வுழுந்தான்.. சாமீ என்ன காப்பாத்துங்க தெரியாம கைய வச்சிட்டேன்.. எடுத்த காச திருப்பிகுடுத்துட்டான்.. ஏன்னு பார்த்தா.. அவனுக்கு யானைக்கால் வந்து ஒரு காலே வீங்கிப்போயி கிடக்கு..நாம எவ்ளோ மொளகா அரைக்கிறமோ அவ்ளோக்கவ்ளோ திருடனுக்கு ஆபத்து.. வெள்ளிச்சங்குக்கு ஒரு கிலோ போதும்னுதான் விட்டுட்டேன்’’ என்றாள் அம்மா. கிஷ்ணனின் பயத்தை இது இரட்டிப்பாக்கியது. முன்னைவிடவும் வேர்த்துக்கொட்டியது. காலுக்குள் புழு ஊறுவதைப்போலவும் கண்கள் இருண்டு தூரத்தில் மரணம் காத்திருப்பதாகவும் உணர்ந்தான்.

பேசாம கிஷ்ணா உண்மைய சொல்லிடு.. என்றது மனசாட்சி. அதை சொன்னா ஏற்கனவே தொலைந்து போன மூக்குத்தி.. குத்துவிளக்கு கேஸெல்லாம் மீண்டும் தூசித்தட்டப்படும் என்பதால் அதுவும் முடியாது. சங்கை போய் திருப்பிக்கேட்டா அருண் மட்டுமா காறித்துப்புவான்.. ஊரே துப்புமே.. நமக்கு ஒரு ஆபத்துன்னா ஆண்டவன்கிட்ட போகலாம்.. ஆனா ஆபத்தே அந்த ஆண்டவனாலதான்னும் போது யாருகிட்ட போறது! மனதிற்குள் புலம்பிக்கொண்டே அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தான்.

கோயிலை நெருங்க நெருங்க அவனையும் மீறி அவனுக்குள் ஒரு படபடப்பு. உஷாவின் காதல்வேறு கண்முன்னால் வந்துவந்து மறைந்த்து. ‘கண்ணே! உஷா! உன்னை வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்காம செத்திடுவேன் போலருக்கேமா.. நான் செத்துட்டா வேற யாராயாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லபடியா வாழணும்.. ‘’ என மனசுக்குள் மத்தாப்பு கதறினான். தயங்கி தயங்கி மார்க்கெட் ரோடில் வண்டியைவிட்டான். பார்க் செய்தான். தூரத்தில் ஒரே கூட்டம். அம்மாவும் மகனும் பரபரக்க கோயில் இருந்த இடத்தை நோக்கி ஓடினர்.

கூட்டத்தை கலைத்துவிட்டுப்பார்த்தால் கோயிலையே காணோம்! புற்றையும் காணோம். மொளகா பீடத்தையும் காணோம். பதினெட்டாவது மாடியிலிருந்து விழும் ஒருவன் உயிர்பிழைத்தால் என்ன செய்வானோ எப்படி மகிழ்வானோ அப்படி ஒரு மகிழ்ச்சி கிஷ்ணனின் மனது முழுக்க நிறைந்தது. விஜய் ஆன்டனி இசையில் ஒரு குத்துப்பாட்டு போட்டு செம டான்ஸ் ஆடவேண்டும் போல இருந்தது.

அம்மா தன் இதயத்தில் கைவைத்தபடி அப்படியே கிஷ்ணனின் தோளில் சாய்ந்தாள். வத்தாத நதியெல்லாம் அந்த கடலை பார்த்து ஆறுதல் அடையும் அந்த கடலே காணாம போயிடுச்சின்னா.. கோயிலிருந்த இடம் காலியாக இருந்தது, ஓரமாக பூசாரி கண்கள் வீங்க அமர்ந்திருந்தார். அவர் முகமெல்லாம் இருண்டு போய்.. கவிழ்ந்து போன டைடானிக் கப்பலின் கேப்டன் போல கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். வெள்ளிசங்க காணோம்னு கோயிலுக்கு வந்தா இங்கே கோயிலையே காணோமேடா.. என்று அம்மா அலறினாள். அம்மாவை பூசாரிக்கு அருகில் அமரவைத்துவிட்டு கூட்டத்தில் விசாரித்தான்.

‘’பஞ்சாயத்துல புதுசா யாரோ ஆபீசரு.. மொத்தமா தூக்கிட்டான்!''

‘’கிரேன் வச்சி இடிச்சாங்களாம்யா.. ‘’

நான் பாக்காம போயிட்டேன்... தூங்கிட்டேன்பா..

புத்த இடிச்சப்பா உள்ளே பத்தடி நீளத்துல ராஜநாகம் வெளிப்பட்டுச்சாம்.. அதை பார்த்து ஆபீசரே அலறிட்டாராம்..

சன்டிவில படம் புடிச்சாங்களாம்யா.. ஊர்காரய்ங்களே பேட்டி வேற எடுத்தாங்களாம்.. நான் அப்பதான் பஸ் புடிச்சி கொழுந்தியா வீட்டுக்கு போனேன்பா..

ஆபீசருக்கு சாமினா புடிக்காதாம், அதான் மொத்தமா தகர்த்துட்டாராம்

போக்குவரத்துக்கு இடையூறுனு கோர்ட்டுல ஆர்டர் வாங்கிட்டாய்ங்களாம்பா ’’
என்று பலரும் பல கதைகள் சொன்னார்கள். கோயிலோடு சேர்ந்து இடிந்துபோய் அமர்ந்திருந்தார் பூசாரி. அவனுக்கு மனதுக்குள் ஒரே மகிழ்ச்சி. அந்த பலிபீடக்கல்லையும் கொண்டு போய்விட்டார்கள் போல காணோம். விட்டிருந்தா ஆபீசருக்கே மொளகா அரைச்சிருப்பாய்ங்க முட்டாப்பயலுங்க. கைகொட்டி கண்களில் நீர்வழிய சிரிக்க வேண்டும் போல இருந்தது.

அவனுடைய மகிழ்ச்சி குதூகலத்திற்கு மத்தியில் அம்மா எழுந்து நின்று ஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என அலற.. கூட்டம் அம்மாவை சுற்றி வளைத்தது. கிஷ்ணனும் அருகில் போய் நின்றான்.
கண்கள் சிவக்க.. தலையை அவிழ்த்துவிட்டு.. குத்துப்பாட்டுக்கு நடனமாடுகிறவர்கள் நாக்கைமடிப்பதுபோல மடித்துக்கொண்டு ‘’யேய்.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.’’ என்று சப்தமிட சலசலப்புடனிருந்த கூட்டம், மொத்தமாக அமைதியானது.

‘’எவன்டா என் கோயில இடிச்சது.. ம்ம்ம்ம்ம்ம்ம்..ஸ்ஸ்ஸ்ஸ் ‘’ , அம்மன் பாம்போடு தொடர்புடையவர்என்பதால் அம்மாவும் கைகளை பாம்பு போல் வைத்துக்கொண்டு ஸ்ஸ்ஸ் என பாம்பினைப்போல சத்தம் கொடுத்தார்.

பூசாரிக்கு தெம்புவந்துவிட்டது.. முகத்தில் உற்சாகம், மூலையில் கிடந்த அவருடைய பிரசாத தட்டையும் வேப்பில்லையையும் எடுத்துக்கொண்டு அருகில் ஓடி வந்தார்.

‘’தாயீ.. யாரு தாயீ வந்திருக்க..’’

‘’நான்தான்டா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பூச்சூடியாத்தாடா..’’ என்று கைகள் இரண்டையும் மேலே உயர்த்திப்பிடித்து நாக்கை மடக்கிக்கொண்டு, பல்லால் கடித்தபடி அச்சு அசல் சாமியாடுகிறவர்களை போலவே இருந்தாள். கிஷ்ணன் இதற்கு முன் அம்மா சாமியாடி பார்த்ததேயில்லை. இதென்ன புதுப்பழக்கம்! அவனுக்கு இதில் ஏதோ சூது இருப்பதாக புரிந்தது.

‘’ஊருக்கு வெளியே போ! அங்கே ஒரு புத்திருக்கு.. அங்கே எனக்கு கோயில வையி.. எனக்கு அமைதி வேணும்.. அமைதி வேணும்..’’ என்றாள் அம்மா!

வரும்வழியில் வேப்பமரத்தடியில் பார்த்த புத்து. இங்கே அதையே பிட் ஆக போட்டது அவனை சிரிக்க வைத்தது . அம்மா அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். பார்வையே பயமுறுத்தியது. அருந்ததி அனுஷ்காவையும் சந்திரமுகி ஜோதிகாவையும் கலந்து செய்த கலவைபோல பார்வை. ஆனாலும் அம்மாவின் பார்வைதான்.. நிஜமாவே சாமி வந்திருக்குமா?

‘’தாயீ இந்த கோயில என்ன பண்ணுறது..’’

‘’அதை இடிச்சவன நான் பாத்துக்கறேன்டா.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. நீ போயி கோயில கட்டுற வழியப்பாருடா.. ம்ம்ம்ம்ம்ம்’’ என்று தலையையும் உடலையும் ஒரேநேரத்தில் சுற்றி சுற்றி சொல்ல.. பூசாரியும் அம்மாவுக்கு ஏற்றபடி அதே சுருதியில் சுற்றினார். வாயில் ஒரு முழூ எலுமிச்சம்பழத்தையும் போட்டு அம்மா அதை நறநறவென கடித்து தின்ன கிஷ்ணனுக்கு பல் கூசியது! ஒரு கற்பூரத்தையும் வாயில் போட்டு அம்மனை சகல மரியாதைகளுடன் மலையேற்றிவைத்தார் பூசாரி. அம்மாவும் மற்ற சாமியாடிகளை போலவே மயங்கி விழுந்தார்.

அவள் விழித்த போது லேசாக இருட்டியிருந்தது. அம்மன் இறங்கி கிளம்பியபின் அம்மா தலையை வாரிமுடிந்துகொண்டு நார்மலானார். டீக்கடையில் ஸ்ட்ராங் டீ மூன்று சொல்லப்பட்டது.

‘’பூசாரி.. நான் என்ன பாக்கியம் பண்ணினேன் அந்த பூச்சூடியம்மனே என்மேல வந்து எறங்க..’’

‘’அம்மா உங்கூட்ல ஏதோ நல்லது நடக்கபோவுதுனு நினைக்கிறேன்.. கைல என்ன மொளகா’’

‘’அதுவா.. அது பெரிய கதை.. மொதல்ல புதுக்கோயில கட்ற வேலைய பாருங்க.. அது யாரு நெலம்..’’ டீ குடித்தபடி பேசினாள் அம்மா. அது யாருநிலமா? கிஷ்ணன் திடுக்கிட்டு நின்றான்.. பூசாரி ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினார்.. அம்மா லேசாக நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள்.

‘’நம்ம மூலக்கட முருகனோடது.. கறாரான ஆளு.. அதான் என்ன பண்றதுனு யோசிக்கறேன்.. உஷாவுக்கு வேற கல்யாணம் பண்ணோனும்.. ஆடிமாசம் வரப்போவுதே கொஞ்சம் வருமானம் வரும் முடிச்சுட்ரலாம்னு இருந்தேன்.. இப்ப பாருங்க..’’ என்று சலித்துக்கொண்டார் பூசாரி.

‘’நிலத்த பத்தி கவல படாதீங்க பூசாரி.. ஆத்தா பாத்துக்குவா.. ஏன் என் பையன பார்த்தா பையனாட்டம் தெரியலையா.. அஞ்சு காசு குடுக்க வேணாம்… ‘’

பூசாரி அசையாமல் நின்றார். கிஷ்ணனுக்கு குலை நடுங்கியது. அப்படியே அம்மாவின் காலில் விழுந்தார். சூனியம் வைக்க வாங்கிய மொளகாயில் அடுத்த நாள் பூசாரிக்கு கறிக்கொழம்பு விருந்து வைக்கப்பட்டது.

கோயில் நிலம் மூலக்கடை முருகனுக்கு சொந்தமானது. அவன் அதெல்லாம் முடியாது.. ஆத்தாவாவது அம்மனாவது.. யோவ் அது நாலு லட்சம் போகும்யா.. என்று கொடுக்க மறுத்தான். அம்மாவின் மீது மட்டுமே பூச்சூடியம்மன் இப்போதெல்லாம் அடிக்கடி இறங்குவது போலவே அன்றைக்கும் இறங்கினாள்.

முருகனிடம் ‘’டேய் பன்னிப்பயலே ஒழுங்கா நிலத்தை குட்றா இல்ல குலத்தையே நாசம் பண்ணிருவேன்!ஏய்ய்ய்ய்’’ என மிரட்ட.. அவனும் அடிபணிந்தான். புதுக்கோவிலுக்கு புதுப்பீடம் வரவழைக்கப்பட்டது. அதில் அனுதினமும் மொளகாய் அரைக்கப்பட்டது. புது இடம் விசாலமாக இருந்ததால் பக்தர்கள் எண்ணிக்கை பெருகி அது வெரி ஃபேமஸ் டெம்பிளாக மாறியது. கிஷ்ணனின் மொளகாவுக்காக பீடம் காத்திருந்தது.

திருமணம் நிச்சயமாகிவிட்டதால்.. வெள்ளிச்சங்கை மறந்தேபோனாள் அம்மா! இதோ கிஷ்ணனுக்கு கல்யாணமாகி குழந்தையும் பிறக்கப் போகிறது. அம்மா வெள்ளிசங்கு எங்கேயென்று கேட்கலாம்.. அருணிடம் விஷயத்தைச்சொல்லி துப்பினாலும் கொடுத்த பரிசை திருப்பிக் கேட்டுவிட முடிவெடுத்தான்.. இந்த விதிதால் எத்தனை வலியது. அருண் வீட்டிலிருந்த வெள்ளிச்சங்கை யாரோ திருடிவிட்டார்களாம். கிஷ்ணனுக்கு தலை சுற்றியது.

09 December 2011

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே!
சிம்புவை விரல் நடிகர்னு ஊரே நக்கலடிக்கும். அதனால ‘இந்த படத்துலயாச்சும் பத்து வெரலையும் கட்டிவச்சிட்டு நடிங்க பாஸ்’னு டைரக்டர் கொஞ்சி கேட்டிருப்பார் போல. பயபுள்ள வெரலை கட்டிப்போட்டுட்டு கண்ணு காது மூக்கு முழி இடுப்பு உடுப்புனு டோட்டல் பாடி பார்ட்ஸ்லயும் வளைச்சி வளைச்சி வித்தைககாட்டி படம் பாக்கற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்ணிடுச்சி. அதுவாச்சும் பரவால்லங்க படம் முழுக்க திருநெல்வேலி பாஷை பேசுறேனு அடித்தொண்டைல பேசி ஏலே வாலே ஓலேனு இழுத்து இழுத்து பஞ்ச் டயலாக் பேசி ஸ்ஸ்ஸ்ப்பா.. ஒருமனுஷன் எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே இருக்கறது.

இந்த சிம்புபையன் சாதாரண தமிழ்ல பஞ்ச் டயலாக் பேசினாலே இந்தியாவுக்கே பொறுக்காது.. இதுல திருநெல்வேலி பாஷைல பன்ச் அடிச்சா 2011லயே உலகம் அழிஞ்சிராதா! பயபுள்ள போலீஸ் வேஷத்துல வேற நடிச்சி தொலைச்சிருக்கு. போஸ்டர்ல ஏதோ கிராபிக்ஸ் பண்ணி பாக்க மீசையில்லாத தங்கப்பதக்கம் சிவாஜியாட்டம் லிட்டில் சூப்பர் ஸ்டாரை காட்டிட்டாலும் ஸ்க்ரீன்ல பாக்க சொல்ல கோயம்புத்தூரு ஸ்டேன்ஸ் ஸ்கூலு பத்தாம்ப்பூ பையனாட்டம்.. தியேட்டரே சிரிச்சி மகிழுதுய்யா!

பாவம் தரணி! குருவினு ஒரு படமெடுத்து டோட்டல் தமிழ்நாடே குனியவச்சி குளிப்பாட்டினதாலே கொஞ்சநாள் தலைமறைவாகி மறுபடியும் திரும்பி வந்துருக்காப்ல! இந்த வாட்டி ரொம்பவே ரிஸ்க் எடுக்காம ஹிந்தில சல்மான்கான் நடிச்ச தபாங்கையே ரிமேக்கிட்டாப்ல. நல்லதுதேன். ஆனாப்பாருங்க ஹிந்தில காமெடியா நக்கலா எடுத்த படத்த சிம்புவ வச்சு ஏன் இம்பூட்டு சீரியஸா எடுக்கோணும்னு கேக்கேன்! முழு உழைப்பகொட்டி படமெடுத்துருந்தாலும் ஆக்கின சோத்துல பல்லிவிழுந்த மாதிரி சிம்புவச்சுலா படம் எடுத்துருக்காரு!

நேர்மையான போலீஸு + பயங்கரமான கெட்ட வில்லன் + அம்மாவ கொன்னுடறான் வில்லன் + ஹீரோவோட தம்பி துரோகம் பண்றான் + ஹீரோயின லவ்பண்றான் ஹீரோ + கிளைமாக்ஸ்ல தம்பி திருந்தி வில்லன் சாவுறான்! இவ்ளோதான் கதை. நான் பொறக்கறதுக்கு முன்னாடி வெளியான பழிவாங்கற படம், போலீஸ் படம், அம்மா சென்டிமென்ட் படம்னு அந்தப் படங்களோட கதைகளையெல்லாம் மிக்ஸ் பண்ணி எடுத்த ஹிந்தி படத்தோட கதையப்போயி என்ன மைசூருக்கு காசு குடுத்து ரைட்ஸ் வாங்கி ரிமேக் பண்ணோனுங்கறேன்! அதுமில்லாம இன்னைக்கு பம்பைக்காரனே தமிழ்படத்த ரீமேக்கிட்டு திரியும்போது ஹிந்தி படத்த ரிமேக்கறதெல்லாம் சிம்புவாலதாம்லே முடியும்! (விஜய் காட்டிய வழியா இருக்கலாம்) அது புரொடியூசர் படும் பாடு நமக்கேன் பொச்செரிச்சல்றேன்.

அந்த பொண்ணு ஹீரோயினு படம் முழுக்க அங்கிட்டிருந்து இங்கிட்டு நடக்குது.. இங்கிட்டுருந்து அங்கிட்டு நடக்குது.. ஒன்னு ரெண்டு வசனம் பேசுது.. பாட்டுல கூட சிம்புதான் ஆடுதாரு. ஹீரோயின் நடந்துகிட்டே இருக்குது. அஜித்து அண்ணன்கிட்ட நடிப்பு டிரெயினிங் எடுத்துகிட்ட புள்ளையோ என்னவோ.. இடுப்புல தங்கத்துல அர்ணாகொடியோ என்னவோ மாட்டிகிட்டு ஜிங்கு ஜிங்குனு செம நடப்பு குட் இடுப்பு! அதிர்ச்சியூட்டும் வகைல ஜித்தன் ரமேஷ் ஓரளவு சுமாரா நடிச்சிருக்காப்ல..

வில்லன் நடிகர் சோனுசூட் எப்பயும் போல ஏஏஏஏஏஏய் னு கத்தறதையும் டாடா சுமோவுல பாஞ்சு பாஞ்சு துறத்தறதையும் நல்லா திருப்தியா செஞ்சுருகாப்ல. படத்தோட ஒரே சந்தோசம் பேரரசு இஸ்டைல் மசாலா வசனங்கள்! அப்புறம் அந்த கலாசலா கலாசலானு எல்ஆர் ஈஸ்வரியோட பாடி மல்லிகா ஷெராவத்து ஆடற குத்துப்பாட்டு.. அந்த ஒரே ஒருபாட்டுக்காக படம் பாக்கலாம். சந்தானம் போர் அடிக்க ஆரம்பிச்சிருகாப்ல.. அடுத்தவருஷம் ரீல் அந்துரும்னுதேன் தோணுது.

இத்தன கொடுமைக்கு மத்தில கிளைமாக்ஸ்ல சிம்பு சிக்ஸ்பேக்ஸ் பாடியெல்லாம் காட்டுறாரு. கண்ணு ரெண்டையும் தோண்டி காக்காய்க்கு போட்டுரலாம்போல கொலைவெறி வருது..

மத்தபடி பெருசா சொல்ல ஒன்னுமில்லே.. அரைச்ச மாவ அரைப்போமா துவைச்ச துணிய துவைப்போமானு ஒரு படம். எங்களுக்கும் மசாலா படம் புடிக்கும்லே.. ஆனா இது மொன்னை மசாலா. ஒன்னும் அர்ஜன்ட் இல்லலே... டிவில போடுறப்ப பொறுமையா பாத்துக்கலாம்.

07 December 2011

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் டீ சமோசாவும்!
தமிழ் இலக்கிய வரலாற்றில் இப்படியொரு கூட்டத்தை யாருமே கண்டிருக்க முடியாது. ஜெயகாந்தனுக்கு வராத கூட்டம்.. சுஜாதாவுக்கு கூடாத கூட்டம்.. காமராஜர் அரங்கம் நிரம்பி வழிந்தது. வந்தவர்கள் வாய் பிழந்தனர். இலக்கியவாதிகள் வயிறெரிந்தனர். வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் வாய்வலிக்க வாழ்த்தி மகிழ்ந்தனர். குடும்பத்தோடு ஏதோ திருமணவிழாவிற்கு வந்ததுபோல வாசகர்கள் கூடியிருந்தனர். வாசகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். வெளியீடு முடிந்ததும் குடித்துத்தீர்த்தனர். வெளியிடப்பட்ட புத்தகம் அரங்கிலேயே 500க்கும் மேல் விற்றுத்தீர்ந்தன. பதிப்பத்தினரோ ‘’புத்தக கண்காட்சிக்குள் பிரிண்ட் பண்ணின புத்தகங்கள் தீர்ந்துவிடும் என்றே நினைக்கிறோம்.. புக்ஃபேருக்கு புதிதாகத்தான் அச்சிடவேண்டும் போலிருக்கிறது’’ என உற்சாகமூட்டினர். இவையெல்லாம் நடந்தது சாருவின் எக்ஸைல் நாவல் வெளியீட்டில். கனவு போலத்தான் இருக்கிறது.

ஆயிரங்கோடி ரூபாயில் அவதார் ரிலீஸ் பண்ணினவன் கூட இந்த அளவுக்கு விளம்பரம் செய்திருப்பானா தெரியாது.. கடந்த மூன்று மாதங்களாகவே வெறித்தனமாக எக்ஸைல் நாவல் வெளியீடு குறித்து விளம்பரப்படுத்திவந்தார் சாரு. அவரோடு அவருடைய வாசகர் வட்டத்தைச் சேர்ந்த துடிப்பான இளைஞர்களும் இணைய துண்டுபிரசுரம் தொடங்கி போஸ்டர்,பத்திரிகை விளம்பரம் என அசத்தினர். தமிழில் முதன்முறையாக நாவலுக்கு டிரைலரெல்லாம் வெளியிடப்பட்டது. சென்னையில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆண்டுதோறும் உயிர்மை என்னும் குடையின் கீழ் நடைபெறுகிற சாருவின் புத்தகவெளியீட்டு விழா இம்முறை அவருடைய வாசகர்களால் அவருடைய வாசகர்களுக்காகவே நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த செலவும் சாருவின் வாசகர்களுடையது என்றே அவதானிக்கிறேன்.

இதெல்லாம் சிலருக்கு காமெடியாக இருந்தாலும் தமிழ் இலக்கிய வரலாற்றில் எந்த நாவலும் இதுவரை கண்டிராதது. இத்தனை விளம்பரம் எதற்கு? வேறு வழியில்லை செய்துதான் ஆகவேண்டும். தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளரான சுஜாதாவின் புத்தகமே பத்தாயிரம்தான் விற்கிறதென்றால் காரணம் என்ன? அந்த கேள்விக்கான விடையை தன்னுடைய இந்த நாவல் வெளியீட்டின் மூலம் அடிகோடிட்டு காட்டுகிறார் அல்டிமேட் ரைட்டர் என்று அவருடைய வாசகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிற சாரு!

ஆறு மணி நிகழ்ச்சிக்கு ஆறேகாலுக்குத்தான் செல்ல முடிந்தது. கோட் சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு ரிசப்ஷனில் மணமகளோடு கெக்கேபிக்கே என்று அசட்டு சிரிப்பை உதிர்க்கிற மணமகனைப்போல அழகாக காட்சியளித்தார் சாரு! இப்போதெல்லாம் தலைக்கு டை அடிப்பதில்லை போல.. வெள்ளைத்தலையும் குறுந்தாடியுமாக வெளிநாட்டு எழுத்தாளரைப்போல இருந்தார். அவருடைய பிரமாண்டமான புகைப்பட பேனர் வைக்கப்பட்டு மேடையில் மூன்றே மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இந்திரா பார்த்தசாரதி, வாலிப கவிஞர் வாலி, சாரு மூவர்மட்டும்தான் பேசப்போவதாக சாரு அறிவித்தார். அதற்கு முன்னால் இருபது வாசகர்களுக்கு தன்னுடைய புத்தக பிரதியை மேடையில் வழங்கினார்.

முதலில் பேசிய வாலி சாருவின் அத்தனை புத்தகங்களையும் படித்துவிட்டேன்.. அற்புதம் சூப்பர் ஆஹா ஓஹா.. என்றவர் எந்த குறிப்பிட்ட புத்தகம் குறித்தும் பேசவில்லை , விமர்சிக்கப்படுபவன்தான் அறிவாளி என்று இன்னும் பேச, சுவாரஸ்யக்குறைவினால் தூக்கம் கண்களை தழுவியது. அவர் சொன்னதில் எனக்கு நினைவில் இருப்பது இதுதான்.. இந்த எக்ஸைல் நாவல் சாஃப்ட் போர்னாகிராபி கிடையாது ஹார்ட் போர்னாகிராபி என்றார். விழித்துப்பார்க்கும் போது இந்திரா பார்த்தசாரதி இப்படி ஒரு கூட்டத்தை வாழ்க்கைல பார்த்ததில்லை என்றார். நான் டெல்லியில் இருக்கச்சே அவாள்லாம் சேந்துண்டு.. என்று அவர் சின்ன வயசாக இருக்கச்சே ஆதாம் ஏவாளோடு இலக்கியம் வளர்த்த கதையை சொல்லிக்கொண்டிருக்க நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.

சென்ற ஆண்டு தேகம் நாவல் குறித்து பேசிய மிஷ்கின் , இது சரோஜா தேவி என்று குறிப்பிட்டதையே நாசூக்கான மொழியில் இபாவும் வாலியும் குறிப்பிட்டு பேசியதாகவே கருதுகிறேன். ஆனால் சாரு மிஷ்கினை திட்டியது போல இவாளை திட்டமாட்டார் என்றே நினைக்கிறேன்.

மதன் கம்பீரமாக கர்ஜிக்கும் சிங்கத்தினை போல நிகழ்ச்சியின் பாதியில் அரங்கத்திற்குள் நுழைந்தார். அவரை பேச சாரு அழைத்தார். அரை மணிநேரம் பேசினார்.. சாரு ஒரு உலக எழுத்தாளர்.. அவரை நாம கொண்டாடனும்.. அவருதான் மாஸ்.. மத்ததெல்லாம் தூஸ், இது உலகத்தரம் வாய்ந்த நாவல் என்பது கணக்காக நிறைய பாராட்டி பேசினார். நான் சாருவின் ரசிகனாகிட்டேன் என பெருந்தன்மையோடு அறிவித்தார்.

அதற்கு பிறகு இந்த தமிழ் இலக்கிய சமூகத்தில் தான் சந்திக்கிற பெருந்துன்பங்களை பட்டியலிட்டு பேசினார் சாரு. இனிமேல் நான் தமிழில் எழுதப்போவதில்லை என அறிவித்தார். அதாவது தமிழில் எழுதி ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துதான் வெளியிடலாம் என்ற யோசனையில் இருக்கிறேன் என்றார். பிறகு மூலிகை வளம்,சித்தமருத்துவம்,பழம்பெருமை பற்றியெல்லாம் பேசினார். வாசகர்வட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். சாரு பேசிமுடித்த அடுத்த நொடி பலரும் அவரை சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராப் வாங்கினர். பதிப்பகத்தார் பத்ரி நிகழ்ச்சி முழுவதையும் வீடியோவாக பதிவு செய்துகொண்டார். ஒட்டு மொத்தமாக நிகழ்ச்சி படு போர்! சாருவின் நிகழ்ச்சிகளில் நாம் எதிர்பார்க்கிற அந்த ஜோர் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் சாரு ரொம்பவே அடக்கிவாசித்ததால் என்பதாலோ அல்லது கூட்டத்தில் உரையாற்றிவர்களின் பேச்சாலோ இருக்கலாம். ஆனால் இந்தமுறை ஏமாற்றமே!

சாருவின் குசேலரான ஷோபாசக்தியும் நெருங்கிய நண்பர் எஸ்ராவும் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. எழுத்தாளர் மாமல்லன் ஜிகஜிகாவென வெளிர்பச்சை நிற டிஷர்ட்டில் வந்து பயமுறுத்தினார். நிகழ்ச்சி முழுக்க ரொம்பவே அவதியுற்றார். மனுஷ்யபுத்திரன் வருவார் என கிசுகிசுக்கப்பட்டது. அவரும் வரவில்லை. சாருநிவேதிதா உயிர்மையை திட்டுவார் என எதிர்பார்த்து வந்திருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம். உயிர்மையில் பத்தாண்டுகளாக சினிமாவிமர்சனம் எழுதினேன் எனக்கு பத்துகாசு கூட கொடுக்கவில்லை என பழைய பாட்டையேதான் சாரு பாடினார். அதோடு அந்த நேரத்தில் என்னுடைய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு வேலைகளை பார்த்திருந்தால்.. என்றெல்லாம் பேசினார்.

புத்தகம் அரங்கிலேயே விற்கப்பட்டது. அரங்கத்திற்கு வந்திருந்த பலரும் எக்ஸைலும் கையுமாக அலைந்தனர். சாருவுக்கு ஆகாதவர்கள் பலரும் புத்தகம் வாங்கி பைக்குள் வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் திரிந்தனர். நானும் வாங்கலாம் என கடைக்கு போனால் விலை 200,.. 250ரூபாய் மதிப்புள்ள புத்தகம் 200க்கு கொடுக்கப்பட்டது.

ஏற்கனவே பலமுறை எழுதியதுதான் சாருவைப்போலவே அடியேனும் பரம ஏழை. 200ரூபாய்க்கு புத்தகம் வாங்கி படிக்கிற வசதி சமகாலத்தில் அடியேனுக்கு இல்லை. அதனால் புத்தகம் வாங்கியவர்களை ஏக்க பெருமூச்சோடு வேடிக்கை பார்த்தேன். தோழர் ஒருவர் வாங்கிய புத்தகத்தை ஒன்மினிட் ப்ளீஸ் என கேட்டு வாங்கி புரட்டினேன். காசுகொடுத்து வாங்க முடியவில்லையே என்கிற சோகம் மனதை கவ்வியது! கண்களில் நீர் கசிந்தது. துடைத்துப்போட்டுவிட்டு.. அதைவிடுங்க எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்.

ஒருவழியாக நிகழ்ச்சி முடிந்தது. என்னை பொருத்தவரையில் இந்த நிகழ்வை அவருடைய வாசகர்கள் எந்தகுறையும் வைக்காமல் சிறப்பாக நடத்தி காட்டியிருக்கின்றனர். பதிப்பத்தின் பெரிய உதவியோ இலக்கியவாதிகளின் அரவணைப்போ எதுவுமேயில்லாமல் வெறித்தனமாக வேலை பார்த்து இவ்வளவு பிரமாண்டமான விழாவை நடத்திய சாருவின் வாசகர்களுக்கு பாரட்டும் வாழ்த்துகளும். இதுபோல வாசகர்கள் தமிழில் எந்த எழுத்தாளருக்கும் இதுவரை கிடைத்ததில்லை என்பது நிச்சயம். நாகேஸ்வரராவ் பார்க்கில் போய் துண்டுபிரசுரம் கொடுக்கிற அளவு அர்ப்பணிப்பை தமிழ் இலக்கயவாசகர்களிடையே மைக்ரோஸ்கோப்பில் தேடினாலும் அகப்படுமா தெரியவில்லை. இது இலக்கியத்திற்கு நல்லதா என்பதையும் தாண்டி என்னை வெகுவாக கவர்ந்தது.

என்னதான் பிரமாண்டமான இலக்கிய கொண்டாட்டமாக இருந்தாலும் என்னளவில் பெரிய ஏமாற்றம்தான். காரணம் டீ காஃபி சமோசா எதுவுமே கொடுக்கவில்லை. ஸ்பான்சர் கிடைக்கவில்லையோ என்னவோ? சமோசா இல்லாமல் என்னத்த இலக்கியம் வளர்த்து.. அடப்போங்கப்பா!

01 December 2011

மாவுத்து, காவடி மற்றும் ஷங்கர்
யானைகுறித்த ஆராய்ச்சிக்காக முதுமலைக்கு சென்றிருந்தபோதுதான் மாதவன் பழக்கமானார். அவர் ஒரு மாவுத்து. மாவுத்து என்றால் யானைப்பாகன் என்று அர்த்தம். மிக இனிமையான மனிதர். முதுமலையில் யானைகளோடு யானைகளாக வாழ்பவர். யானைகள் குறித்து பல அரிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவரோடு ஒருநாள் முழுக்க சுற்றிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன யானைக்கதைகள் ஏராளம். பாகன்களுக்கும் யானைகளுக்குமான உறவு அலாதியானது. ஒரு நாவலே எழுதலாம்.

மாவுத்து மாதவனுக்கு எல்லாமே ஷங்கர்தான்! தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். கையை தூக்கி கொட்டாவி விட்டபடி வாசலுக்கு வந்தால்.. அப்படியும் இப்படியும் வாலை ஆட்டிக்கொண்டு இலைதளைகளை தின்றபடி காத்திருப்பான் ஷங்கர்! தினமும் கண்விழிப்பது அவன் முகத்தில்தான். ஒருநாள் கூட அவனைவிட்டு பிரியமாட்டார். மாதவனை கண்டதும் உற்சாகமாகி வ்ர்ர்ர்ராங் என தும்பிக்கை உயர்த்தி கத்தி கூச்சலிடுவான் ஷங்கர். புன்னகைத்தபடி அவனருகில் சென்று அவனுடைய காது மடல்களை தடவிக்கொடுத்தால்.. குழைவான்.

அவனை கட்டியிருக்கும் சங்கிலிகளை கழட்டிப்போட்டுவிட்டு.. இருவரும் அங்கிருந்து கிளம்பினால் அடுத்து காட்டுவழிச்சாலை. காட்டிலிருந்து வேப்பங்குச்சியை உடைத்து பல்லு விலக்கியபடி நகர, பெரிய மரத்தில் நல்ல பசுங்கொம்பாய் ஷங்கரும் உடைத்து மென்றபடியே நடைபோடுவான். அருகிலே ஓடும் ஆற்றில் இரண்டுபேருமாக குத்தாட்டம் போட்டு குளித்து எழுந்து.. கால்மணிநேரம் காலார நடந்தால் முதுமலையிலிருக்கிற யானைகள் கேம்ப் வந்துவிடும்! அங்கே ஷங்கருக்கான ‘’டயட் பிரேக் ஃபாஸ்ட்’’ பக்காவாக தயார் செய்து வைத்திருப்பான் ‘’காவடி’’ கணேஷ்!


வேகவைத்த கொள்ளு நான்கு கட்டிகள், ராகி களி இரண்டு கட்டி, அரிசி சோறு மூன்று கட்டி, ஒரு கைப்புடி உப்பு, சர்க்கரை, கொஞ்சம் புரதச்சத்து பவுடர் என எல்லாமே வரிசையில் காத்திருக்கும். ஹாயாக போய் அதன் ‘’பார்க்கிங் ஸ்டான்டில்’’ நின்றுகொண்டால் மேலே சொன்ன அனைத்தையும் மொத்தமாக போட்டு பிசைந்து உருண்டையாக்கி கொண்டுபோய் குட்டிப்பாப்பாவுக்கு ஊட்டுவது போல ஊட்டிவிடுவார் மாதவன்! பொறுமையாக மென்று தின்றபின் அடுத்த உருண்டை.. ம்ம் வேண்டாம் என்று தலையை ஆட்டி அடம்பிடித்தால்.. சாப்பிடு கண்ணா என பிரமாண்ட காதை பிடித்து திருகி.. சாப்பிடவைக்கிறார். சாப்பிட்டு முடித்ததும் ஜாலியாக காட்டுக்குள் கிளம்பினால் மாலைவரை காடு காடு காடுதான்!

காட்டுக்குள் சுற்றும்போதே வேண்டிய அளவு இளைதளைகளை பறித்து ஒன்றாக கட்டி தந்தங்களுக்குள் சொருகி வைத்துக்கொண்டு, ஆற்றுப்பக்கமாக மதியநேர குளியலை முடித்துவிட்டால் ஸ்ட்ரைட்டா முகாம்தான்! முகாமில் கொஞ்சம் ஓய்வு. பிறகு மீண்டும் இருவருமாக வீடு நோக்கி பயணிக்கத்தொடங்கிவிடுவார்கள்.

‘’இதோ இந்த யானைக்கு நான்ன்னா அவ்ளோ இஷ்டம்ங்க.. அப்படியே தும்பிக்கையால கட்டிப்புடிச்சிக்குவான். ஒருமணிநேரம் கூட பிரிஞ்சி இருக்கமாட்டான். கண்ணெதிர்லயே இருக்கணும். குழந்தைமாதிரி.. ஒருவயசு குட்டிலருந்து இவனோடதான் வாழறேன். இவனுக்கு நான்தான் அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,காதலி எல்லாமே!’’ என சிரிக்கிறார் ஒரு மாவுத்து. இவர் மட்டுமல்ல முதுமலையில் இருக்கிற 24யானைகளுக்கும் ஒரு மாவூத்து.. ஒவ்வொருவரும் தன் உயிராக இந்த யானைகளை நேசிக்கின்றனர்.

முதுமலை யானைகள் முகாமில் ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு பாகன்கள். பாகன்களை மாவுத்து என்றே அழைக்கின்றனர். லாரி டிரைவருக்கு ஒரு க்ளீனர் போல ஒவ்வொரு மாவுத்துக்கும் ஒவ்வொரு காவடி! யானையை குளிப்பாட்டுவதில் தொடங்கி அதற்கு சாப்பாடு தயார் செய்வது வரை எல்லாமே காவடிகளின் வேலை. யானையை கட்டுப்படுத்துவது அதற்கு உணவூட்டுவது அதை கவனமாக பார்த்துக்கொள்வது மாவுத்தின் வேலை. குக்கா புக்கா என்று ஏதோ புதுமாதிரியான பாஷையில் யானைகளோடு எப்போதும் பேசிக்கொண்டிருக்கின்றனர் இந்த மாவுத்துகள்.

அதுவும் நாய்க்குட்டி போல இவர்களுடைய பேச்சினை அப்படியே கேட்கின்றன. நில் என்றால் நிற்பதும் உட்காரென்றால் உட்காருவதும்.. குதி என்றால் குதிப்பதில்லை.. யானைகள் குதிக்காது. ஆனால் மனிதர்களின் அன்புக்கு எப்போதுமே கட்டுப்பட்டிருக்கின்றனர்.
‘’இதோ இங்கே ரெண்டு பேர் இருக்கானுங்க பாருங்க ஒருத்தன் பேரு விஜய் இன்னொருத்தன் சுஜய், இரட்டை பயலுக சரியான முரட்டு பசங்க.. நம்ம பேச்சை மட்டும்தான் கேப்பானுங்க’’ என்று அறிமுகப்படுத்துகிறார் இன்னொரு மாவுத்து. இவர்கள் யானைகளுடன் பேசுகிற இந்த மொழி மிகவும் வித்தியசமானதாகவும் ஆனால் தெரிந்த மாதிரியும் இருந்ததால் அதுகுறித்து விசாரித்தோம்.

‘’இதுங்களா, உருது,மலையாளம்,தமிழ்னு குறிப்பிட்டு இதானு சொல்லமுடியாத அளவுக்கு நிறைய பாஷைகள் கலந்த பாஷைங்க. பரம்பரையா இதை கத்துக்குறோம். காவடிங்களுக்கு கத்துக்குடுக்கறோம்’’ என்கின்றனர். ஒரு குக்கா புக்கா கட்டளைகள்தான் என்றாலும் யானை தன்னுடைய பாகன் சொன்னால் மட்டும்தான் கேட்டு நடக்கின்றன. மற்றவர்களுக்கு பெப்பேதான்!

ஒரு காலத்தில் பெரிய மரங்களை தூக்கிச்செல்லவும் சுமைகளை ஏற்றிச்செல்லவும் இந்த யானைகள் பயன்படுத்தப்பட்டாலும் அண்மைக்காலங்களில் இவை குமுகியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதென்ன குமுகி! போலீஸ் யானைனு சொல்லலாம்.

‘’ஊருக்குள் எங்கேயாவது காட்டுயானைகள் நுழைந்தாலோ, வயலுக்குள் புகுந்துகொண்டு வெளியேறாமல் இருந்தாலோ, தன் கூட்டத்தை விட்டு சாலைகளுக்கும் முக்கிய பகுதிகளுக்கும் வந்துவிடுகிற யானைகளை விரட்ட மனிதர்களால் முடியவே முடியாது. அதிலும் சில குறும்புக்கார காட்டு யானைகள் உண்டு. என்ன செய்தாலும் நகராது. அந்த நேரத்தில்தான் நம்ம ஸ்பெஷல் கும்கி யானை டீம் அங்கே களமிறங்கி மொத்தமா விரட்டுவாங்க.. இவங்க போயிட்டா வேலை முடிஞ்சா மாதிரிதான்!’’ என்று சிரிக்கிறார் வன அலுவலர்.

முதுமலை சரணாலயத்தில் இருக்கிற இந்த போலீஸ் யானைகளுக்கு டியூட்டி காடுகளுக்குள்தான். வேட்டைத்தடுப்பு காவலர்களோடு காட்டுக்குள் ரோந்து சுற்றும். எல்லைதாண்டும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும். டியூட்டி நேரம் போக மற்ற நேரங்களில் ஓய்வு மட்டும்தான். இந்த குமுகி யானைகளை கண்டால் காட்டுயானைகள் தெறித்து ஓடுமாம்!

‘’இங்கே இருக்கிற ஒவ்வொரு யானையும் எங்களுக்கு நண்பர்களைப்போல அதனால் அவர்களுடைய நலனில் மிகுந்த அக்கறையுண்டு எங்களுக்கு! ஒவ்வொரு யானையும் காலையில் என்ன சாப்பிடவேண்டும். எவ்வளவு சாப்பிட வேண்டும் என்கிற டயட் பிளானை இங்கேயே இருக்கிற மருத்துவர் அளித்துவிடுவார், அந்த அளவு உணவுதான் தரப்படும், நோய்வாய்ப்பட்டால் உடனடியாக மருந்துகளும் சிகிச்சையும் அளிக்கப்படும். மற்றபடி எங்க டிபார்ட்மென்ட்டில் எங்களோடு பணியாற்றுகிற சகபணியாளராக நண்பராகவே இவர்களும் இருக்கின்றனர்! இவங்கள யானைனு சொல்லவே மாட்டோம்.. பேர் சொல்லிதான் அழைப்போம், உலகில் யானைகளை விடவும் மனிதர்களுக்கு நெருக்கமான அன்பை பகிர்ந்துகொள்கிற விலங்கு எதுவுமே கிடையாது!’’ என அடித்துச்சொல்கிறார் வனஅலுவலர்!

அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டுகின்றனர் விஜயும் சுஜயும்!
செம்மொழியான்!இங்கே புதிதாக இணைந்தவர் மிஸ்டர்.செம்மொழியான் என்கிற வேது! வயது ஒன்று. காட்டில் எப்படியோ தாயை பிரிந்த இந்த குட்டி யானை முதுமலை முகாமில் பத்திரமாக வளர்க்கப்படுகிறது. செம்மொழி மாநாடு நேரத்தில் கிடைத்ததால் செம்மொழியான் என பெயர் வைத்துவிட்டனராம்! இவருக்கு மூன்று வேலையும் லேக்டஜன் 2 கொடுக்கின்றனர். ஆறுமாதம் வரை ட்யூப் மூலமாக லேக்டஜன் ஒன்று கொடுக்கப்பட்டதாம். ஒன்றரை வயதுக்குமேல்தான் சாதாரண உணவுகள் கொடுக்கப்படுமாம். நாம் கையை நீட்ட பாசத்தோடு நம் கைகளை பற்றிக்கொள்ள பிரிந்து வர மனமேயில்லாமல் கிளம்பினேன். என்னதான் தமிழ்ப்பெயர் சூட்டினாலும் ஷார்ட்நேம் முக்கியமென்பதால் வேது என அழைக்கின்றனர்.

இவருக்கு துணையாக இன்னொரு குட்டியும் இருக்கிறாள் அவள் பெயர் வேதா. அவளுக்கு வயது ஆறுமாதம்தான். இன்னும் ரொம்ப குட்டியாக இருக்கிறாள். கிருமித்தொற்று உண்டாகும் என யாரும் அவளை பார்க்க அனுமதிப்பதில்லை. நான் மட்டும் சிறப்பு அனுமதியில் பார்த்தேன். தூங்கிக்கொண்டிருந்தாள். படமெடுக்க மனமில்லாமல் கிளம்பினேன்.

28 November 2011

எஸ்ராவின் கதாகாலட்ஷேபம்!
முதலில் அந்த அறிவிப்பே காமெடியாகத்தான் இருந்தது. என்னது எஸ்ரா ஏழுநாள் பேருரை ஆற்றப்போகிறாரா? ஹிஹி செம்ம காமெடியா இருக்குமே! என்று நண்பர்களோடு பேசிக்கொண்டேன். அதிலும் உலக இலக்கியங்கள் குறித்து பேசுகிறார் என்றதும் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. உலக இலக்கியங்களின் மீதான அச்சமும் எஸ்ரா குறித்து நான் அறிந்திருந்த தகவல்களும் அப்படியொரு எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கலாம். எஸ்ராவின் புத்தகங்கள் எதையுமே பல காரணங்களால் என்னால் படிக்க முடியாமல் போயிருக்கிறது.

அந்த அறிவிப்பு எனக்கு சிறுவயதில் கேட்ட கதாகாலட்சேபங்களை நினைவூட்டியது. எங்கள் வீட்டருகே இருந்த கோவிலில் எப்போதுமே யாராவது பேசிக்கொண்டேயிருப்பதை பார்த்திருக்கிறேன். பெரியபுராண கதைகளை பல நாட்கள் பெரியவர் ஒருவர் மைக் வைத்து சொல்லிக்கொடுப்பார். முடிவில் சுண்டலும் பொங்கலும் கிடைக்கும் என்கிற காரணத்திற்காக பள்ளி முடிந்து அங்கே செல்வதை வழக்கமாக்கியிருந்தேன்.

ஆனால் சிலநாட்களில் அந்தப்பெரியவர் கதை சொல்லுகிற பாணியும் லாகவமும் சுவாரஸ்யமான கதைகளும் சுண்டல் பொங்கலை விடவும் சுவையாயிருந்தன. கதைகளுக்காகவே தினமும் பள்ளிமுடிந்ததும் விளையாடாமல் முகத்தை கழுவி திருநீர் போட்டுக்கொண்டு முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன். இன்னமும் அந்தப்பெயர் தெரியாத பெரியவர் சொன்ன கதைகள் அனைத்தும் நினைவிலேயே இருக்கிறது. எஸ்ராவின் பேச்சும் அப்படித்தான் இருந்தன. பல ஆண்டுகளுக்கு பிறகு திருநீரு பூசாமல் கையைக்கட்டிக்கொண்டு முதல்வரிசையில் அமர்ந்து ஆவென ஆச்சர்யத்தோடு கதை கேட்டு மகிழ்ந்தேன்.

எஸ்ராவின் பேச்சினை உலக இலக்கியங்கள் ஃபார் டம்மீஸ் என்று வைத்துக்கொள்ளலாம். ஏழுநாட்கள் பேச்சு என்றபோதும் என்னால் முதல்நாள் போகமுடியவில்லை. போகிற ஆர்வமும் இல்லை. ஃபேஸ்புக்கில் சிலர் எஸ்ராவின் பேச்சு பிரமாதம் என புகழ்ந்து தள்ளுவதைக்கேட்டு அப்படி என்னதான்யா இந்தாளு பேசறாரு பார்த்துபுடுவோம் என இரண்டாம் நாள் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டருக்கு சென்றேன். சாரு மாதிரியான புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கூட பேச்சைக்கேட்க வந்திருந்தனர்.

அரங்குநிறைந்து முப்பதுக்கும் மேல் வாசகர்கள் நின்றுகொண்டே பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தனர். நாற்காலிகள் கிடைக்காத காரணத்தால் அரங்கின் ஓரத்தில் தரையில் அமர்ந்து கேட்கத்தொடங்கினேன். அன்றைக்கு பேச்சு தாஸ்தோவ்ஸ்கி பற்றியது. அந்தப்பெயரை இதற்குமுன் பகடி எழுத மட்டுமே பயன்படுத்தியதாக நினைவு. அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்களை மட்டுமே தெரிந்துவைத்திருந்தேன். தாஸ்தோவ்ஸ்கியின் குற்றமும் தண்டணையும் புத்தகம் குறித்து பேசத்தொடங்கினார் எஸ்ரா.

ரொம்ப மொக்கை போட்டா எழுந்து ஓடிடுவோம் என்கிற எண்ணத்துடன் ஓட்டப்பந்தய வீரனைப்போல தயாராயிருந்தேன். ஆனால் எஸ்ராவின் பேச்சு.. தகவல்கள்.. பகிர்ந்துகொண்ட விதம். அப்படியே இரண்டு கால்களையும் கட்டிப்போட்டு அமரவைத்தது. கிட்டத்தட்ட ஒன்னாம்ப்பு படிக்கும் பையனைப்போல சம்மணமிட்டு கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்து நான்மட்டுமல்ல ஒட்டுமொத்த அரங்குமே கேட்டுக்கொண்டிருந்தது.

தான் படித்த ஒரு புத்தகத்தினை தெரிந்துகொண்ட சில தகவல்களை நண்பனைப்போல பகிர்ந்துகொண்டார். ஒரு மந்திரவாதியினைப்போல தாஸ்தோவ்ஸ்கியின் வாழ்க்கையையும் அந்நாவல் ஏன் எழுதப்பட்டது,எப்போது எழுதப்பட்டது,எப்படி எழுதப்பட்டது , எது அவரை அந்நாவல் எழுத தூண்டியது. அந்நாவல் அதன் ஆசிரியருக்கு எப்படிப்பட்டது என தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்தில் தாஸ்தோவ்கியின் மீது ஒரு ஈர்ப்பையும் அவருடைய எழுத்துகளின் மீது ஒரு மரியாதையையும் உண்டாக்கினார் என்றுதான் சொல்லவேண்டும்.

எதைப்பற்றி பேசினாலும் அதோடு தொடர்புடைய திரைப்படங்கள்,நாடகங்கள்,கவிதைகள்,புத்தகங்கள்,வரலாற்று சம்பவங்கள் என எதையுமே விட்டுவைக்காமல் பகிர்ந்துகொண்டார். உதாரணமாக மேக்பெத் குறித்து பேசும்போது அக்கதையில் வருகிற மூன்று சூனியக்காரிகளுக்கு வரலாற்றை தெரிவித்தார். ஷேக்ஸ்பியரின் காலத்தில் சூனியக்காரிகள் வேட்டையாடிக்கொல்லப்பட்டதையும் கூறினார். இப்படி ஒவ்வொரு கதையில் வருகிற கதாபாத்திரங்களின் வேர்களையும் தேடியது அந்த உரை.

தனக்கு தெரிந்த அனைத்தையுமே பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வத்தை உணரமுடிந்தது. உலக இலக்கியங்களை மனிதர்களின் சமகாலவாழ்வியலோடு தொடர்பு படுத்தி பேசியது சிறப்பாக இருந்தது. அவர் பேசியதில் சில தகவல் பிழைகளிருப்பதாக நண்பர்கள் சுட்டிக்காட்டினர். இருந்துவிட்டுபோகட்டுமே. உலக இலக்கியங்கள் என்பதே பாகற்காயாக இருந்த எனக்கு அதையெல்லாம் படித்துவிடவேண்டும் , தேடிதேடி தாஸ்தோவ்ஸ்கியையும் டால்ஸ்டாயையும் பாஷோவையும் ஹோமரையும் ஷேக்ஸ்பியரையும் படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தினையும் இரண்டு மணிநேரத்தில் உண்டாக்கியிருக்கிறாரே!

ஹோமரின் இலியட் பற்றி பேசியபோது அதை இந்தியாவின் புராணங்களோடு ஒப்பிட்டு கிட்டத்தட்ட இந்திய இலக்கியமாகவே மாற்றிக்காட்டினார். இலக்கியம் எதுவாக இருந்தாலும் எந்த நாட்டினுடையதாக இருந்தாலும் அவை அனைத்துமே மனிதர்களுக்கானவை என்பதே எஸ்ராவின் ஏழுநாள் உரையின் ஒரே கருத்தாக இருந்தது. நம் வாழ்வில் கதைகளின் முக்கியத்துவம் குறித்துப்பேசினார்.

ஏழு நாள் உரை அவர்மீது ஒருவித அன்பினை நட்பினை பிணைப்பை உண்டாக்கியது. எவ்வளவு இனிமையான மனிதர் இவர். புன்னகையோடு அனைத்தையும் நேசிக்கிறார். எல்லாவற்றின் மீதும் அன்பு காட்டுகிறார். ஒரு குழந்தையைப்போல ஆர்வத்துடன் விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். நிறையவே தெரிந்துகொள்கிறார். இன்னமும் அவருக்குள் ஒரு குழந்தைத்தன்மை மிச்சமிருப்பதையும் உணர முடிந்தது. மூன்றாம் நாள் ஹைக்கூ குறித்து பேசும் போது அது நிகழ்ந்தது. திருடன் விட்டுச்சென்ற ஜன்னல் நிலவு என்கிற ஹைக்கூ குறித்து பேசினார். அற்புதமான பேச்சு அது. ‘’மாஸ்டர் என்னை உங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என கத்திவிட வேண்டும் போல இருந்தது.

வாழ்க்கையை இயற்கையை மனிதர்களை குணங்களை கிட்டத்தட்ட அனைத்தையுமே அவர் நேசிக்கிறவராக இருப்பதை ஏழுநாள் உரைகளும் எனக்கு உணர்த்தியது. எதையுமே விலகிநின்று ரசிக்கிற தன்மையை உணர முடிந்தது. ஆனால் ஒருநாள் கூட ‘என்னுடைய அந்த புத்தகத்தில் அப்படி எழுதியிருக்கிறேன்.. இந்தக்கதையில் இப்படி எழுதியிருக்கிறேன்.. அதை வாங்கிப்படியுங்கள் அதுதான் இலக்கியம்.. ‘’ என்றெல்லாம் பெருமை பீத்தல்களில் அவர் இறங்கவேயில்லை. ஏழுநாட்களும் அரங்கு நிறைய அதுவே காரணமாக இருக்கலாம்.

உலக இலக்கியங்களை கரைத்துக்குடித்த பெரிசுகளுக்கு இந்த உரை சலிப்பூட்டக்கூடியதாகவும் மொக்கையாகவும் இருந்திருக்கலாம். என்னைப்போன்ற ஒன்னாம்ப்பு மாணவர்களுக்கு இதைவிடவும் சிறந்த இலக்கிய அறிமுகத்தினை இதற்குமுன் யாருமே கொடுத்ததில்லை. ஏற்பாடு செய்த உயிர்மைக்கு நன்றிகள்.

இந்த ஏழு நாள் உரையும் டிவிடி வடிவில் வெளியாகவுள்ளதாக தன்னுடைய இணையதளத்தில் எழுதியிருக்கிறார். அப்படி வெளியாகும்போது அனைவரும் நிச்சயமாக வாங்கி பார்க்கவேண்டும். மற்றபடி ஏழு நாட்களுக்கு பிறகு இன்றைக்கு மாலை எஸ்ராவின் உரையில்லை. என்பது ஒருவித ஏமாற்றத்தினை கொடுக்கிறது. டிசம்பர் 6 சாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா வரைக்கும் காத்திருக்கவேண்டும். எஸ்ரா அன்றைக்கு பேசுகிறார்.

24 November 2011

கொலைவெறி இலக்கியம்

ஓர் ஊரில் உயிரோடு இருந்தவர்களில் முக்கால்வாசிபேர் இலக்கியவாதிகளாக இருந்தனர். அதே ஊரில் இரண்டு சாதாரண மனித இளைஞர்களும் வசித்துவந்தனர். அந்த இரண்டு பேரும்தான் அத்தனை இலக்கியவாதிகளுக்கும் மிச்சமிருந்த மிச்ச சொச்ச இரண்டே இரண்டு வாசகர்கள்.

அந்த இருவரும் பரம ஏழைகள். மூன்று வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாதவர்கள். எவ்வளவு உழைத்தாலும் பசி பஞ்சம் பட்டினி. இந்த அயராத உழைப்புக்கு மத்தியிலே, பிரியாணி தின்றுவிட்டு பல்லிடுக்கில் சிக்கிய கறித்துண்டை நோண்டியபடி டோல்ஸ்டாய் பற்றியும் லத்தீன் அமெரிக்க இசைபற்றியும் கொரியமொழியில் வெளிவரும் உலகசினிமா குறித்தும் பின்னவீனத்துவமாக முதுகு சொறிந்தபடி விதந்தோதுகிற இலக்கியவாசிப்புக்கு எங்கே நேரம். செக்குமாட்டுக்கு எதுக்கு சிங்காரம். அடிமாட்டுக்கு எதுக்கு அலங்காரம். சரியான ஞானசூனியங்கள். ஆனாலும் இந்த இருவருடைய இலக்கிய வெறியும் ஆர்வமும் அலாதியானது.

ஓசி டீயும் சமோசாவும் கிடைக்கிறதென்கின்ற ஒரே காரணத்திற்காக ஊரில் எந்த இலக்கிய,கவிதைவாசிப்பு,புத்தகவிமர்சன,வெளியீட்டு,முற்போக்கு பிற்போக்கு கூட்டங்களிலும் மேலும் இன்னபிற சமோசாடீ கூட்டங்களிலும் கலந்துகொள்வதை பார்க்கலாம்.

புரிகிறதோ புரியவில்லையோ கூட்டமிருக்கிறதோ இல்லையோ பேருரைகள் முடியும்வரை முழுமையாக காத்திருந்து கடைசியில் கொடுக்கப்படுகிற சூடான டீயை உறிஞ்சி குடித்துவிட்டு சமோசாவை தின்றுவிட்டு வயிறார நடையை கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதனாலேயே அந்த இருவரும் அதிதீவிர இலக்கியபிரதிகளாக இலக்கிய வானின் சுடரொளிகளாக , இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் எஞ்சி இருக்கிற கடைசி இரண்டு வாசகர்களாக இலக்கியவாதிகள் மத்தியில் புகழ்பெற்றிருந்தனர்.

‘அடேங்கப்பா அந்த இரண்டுபேருக்கும் என்ன ஒரு இலக்கிய ஆர்வம்ன்றீங்க ஒரு கூட்டம் மிஸ்பண்ணமாட்டாங்க.. அதுவும் நான் கலந்துக்கற கூட்டம்னா முத ஆளா வந்து விசில்தான் கைத்தட்டல்தான். ஏன்னா பாருங்க என் மேல அவங்களுக்கு அவ்ளோ அபிமானம். நான் கிணத்துல குதிங்கனு எழுதி முடிக்கறதுக்குள்ள கிணத்துல விழுந்து செத்து மிதப்பாய்ங்கன்னா பாத்துக்கோங்களேன்’’ என்று எல்லா பிரபல எழுத்தாளர்களும் அந்த இருவரையும் தங்களுடைய வாசக அடிமைகளாக ஊருக்குள் சொல்லித்திரிந்தனர்.

சிலர் அந்த இருவரையும் போனில் அழைத்தும் நேரில் சந்தித்தும் டீ வாங்கிக்கொடுத்து உரையாற்றுவதை எங்கும் காணலாம். அரிதாக சிலர் சாப்பாடு வாங்கிக்கொடுத்து அவர்களிடம் உரையாற்றுவார்கள். இலக்கியவாதிகளுக்கு எப்போதெல்லாம் ஆர்வவெறிதீர உரையாற்ற வேண்டும் என ஆசையாக இருக்கிறதோ கையில் பத்து இருபது ரூபாயோடுவந்தால் இருவரும் ஐட்டம் போல தயாராகிவிடுவார்கள். இந்த இலக்கியவாதிகளும் அரைமணிநேரமோ ஒருமணிநேரமோ கதறகதற இலக்கியம் பேசிவிட்டுப்போகலாம். டீ ரொம்பவே முக்கியம்.

இப்படியாக பல நாட்கள் ஊருக்குள்ள நாங்களும் இலக்கியவாதிகள்தான் என ஏமாற்றிக்கொண்டு ஓசி டீயும் சமோசாவும் அவ்வப்போது பிரமாண்ட பொருட்செலவில் சரவணபவன் சாப்பாடும் சாப்பிட்டுக்கொண்டிருந்த இருவருக்கும் நல்ல பாடம் கற்பிக்க நினைத்தது விதி.

அன்றைக்கும் அந்த இலக்கிய கூட்டத்தில் எப்போதும் போலவே மேடையில் பத்து பேரும் பார்வையாளர்கள் நான்குபேரும் அமர்ந்து பின்னவீனத்துவத்தை பிச்சு பிச்சு போட்டுக்கொண்டிருந்தனர். சொந்தகாசில் புத்தகம் போட்ட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த கோமான்களும் சீமாட்டிகளும் வீட்டிலேயே நன்றாக சாப்பிட்டுவிட்டு பேசி தீர்த்தனர்.
பெரிய பார்ட்டி என்பதால் வழக்கத்திற்கு மாறாக சமோசாவுடன் சுவீட்டும் மிக்சரும் கூட சேர்த்துகொடுப்பார்கள் என்கிற ஆர்வத்தோடு எப்போதும் போல வயிற்றை வெற்றிடமாக்கிப் போயிருந்த இருவருக்கும் பச்சை தண்ணீர் கூட கொடுக்காமல் ஏமாற்றினர். பசிமயக்கத்தில் கண்களில் தூக்கம் சொக்கியது இருவருக்கும்.

கைத்தட்டிக்கொண்டிருந்த வேளையில்தான் அந்த இருவருக்கும் அருகில் வந்து அமர்ந்தது விதி. அவர்கள் இருவரையும் பார்த்து முதலில் புன்னகைத்தது. அவர்களும் மறுபுன்னகையை மெலிதாக அளித்தனர். விதி தன் பத்து சொச்சம் கவிதைகளை ஒன்று திரட்டி ஒரே ஒரு புத்தகத்தை தன் சொந்தகாசில் அச்சேற்றி அதை அதுவே கூடையில் வைத்து கூவி கூவி ஊரெங்கும் ஓசியில் கொடுத்து புகழடையும் வெறியிலிருந்தது! ஏற்கனவே இருவருக்கும் தலா ஒரு கவிதை தொகுப்பை இலவசமாக அளித்திருந்தது. கட்டாயம் படிச்சிட்டு சொல்லுங்க கருத்து சொல்லியே ஆகணும்.. உங்க கருத்து ரொம்ப முக்கியம் பாஸு என்று கண்டிப்பாக சொல்லியிருந்தது.

கவிதையென்றாலே கரப்பான்பூச்சி போல இருவருக்கும். வாசித்தால் வாந்தி வரும். அதனால் எப்போதும் செய்வதைப்போலவே அந்த அருமையான கவிதைத் தொகுப்பையும் எடைக்குப்போட்டு டீ வாங்கி குடித்திருந்தனர். ஆனால் இப்போது விதி அருகில் வந்து அமர்ந்து அந்த கவிதைத்தொகுப்பை பற்றிகேட்குதே என அஞ்சிநடுங்கினர். நிலைகுலைந்து போயினர்.

விதியும் ‘இந்த பசங்க நம்ம கவிதைய படிச்சி பயங்கரமா புகழப்போறாங்க போல’ என்கிற எதிர்பார்ப்போடு கூட்டம் முடியும்வரை ஆர்வத்துடன் காத்திருந்தது. கூட்டம் முடிந்தது.

‘’என்ன மாரி கவிதைங்க பாஸு. சூப்பர் பாஸ்.. அடேங்கப்பா.. அந்த கடைசி கவிதை சான்ஸே இல்லை.. நீங்கதான் அடுத்த மனுஷ்யபுத்திரன்’’ என கோரஸாக புகழ்ந்தனர். புகழ்ந்து தீர்த்துவிட்டால் விதி வீட்டுக்கு போய்விடும் என நினைத்தனர்.

‘’பாஸ் நாம ஏன் ஒரு டீ ஷாப்ட்டுகினே பேசக்கூடாது’’ என்றது விதி. ஏற்கனவே காஞ்சிபோயிருந்த காலிவயிற்றுக்கு உறவினர்களாக இருந்த இருவரும் ஓசிடீக்கு ஆசைப்பட்டு பலியாட்டைப்போல தலையாட்டினர். ‘’பொதுவா நான் டீ ஷாப்பிடறதுனா தாஜ் ஓட்டலுக்குதான் போவேன்.. இங்கே பக்கத்துல தாஜ் ஓட்டலுக்குதா’’ என்றது விதி.
விதியோடு இருவரும் அருகிலிருந்து இரண்டரை நட்சத்திர ஓட்டலுக்குள் புகுந்தனர். ‘’பாஸ் அதுல அந்த மூணாவது கவிதை எப்படி..? வார்த்தைகளுக்காக கிரியா அகராதியை பிச்சி பிராண்டி எழுதினது’’ என புஜபலபராக்கிரமங்களை சொல்லத்தொடங்கியது விதி.

‘’பாஸ் டீ ஆர்டர் பண்ணீங்கன்னா சாப்ட்டுகினே பேசலாம்.. இன்னான்றீங்க’’ என்றனர் இருவரும்.

‘’இன்னாபாஸ் நம்ம கவிதைய படிச்சி நல்லாருக்குனு வேற சொல்ட்டீங்க இன்னைக்கு உங்களுக்கு வெறும் டீயா.. டிரீட்டு..’’ என அதிர்ச்சியளித்தது விதி.

‘’சூடா இரண்டு மசால் தோசை, கேரட் அல்வா, உளுந்த வடை, சக்கரை பொங்கல்.. மூணுபிளேட்..’’ என்றதும் மகிழ்ச்சியில் பூரித்து போயினர்.. இருந்தாலும் ஆசுவாசமாகி பண்டங்கள் வந்ததும் பகிர்ந்துகொண்டனர்.

ஆரஞ்சுநிற கேரட் அல்வாவினைப் பார்க்கும்போதே எச்சில் ஊறியது. இருவரில் ஒருவன் ஆர்வத்துடன் அல்வாவில் கைவைக்க.. டக்கென்று ஆரம்பித்தது விதி

‘’பாஸ் அந்த மூனாவது கவிதைய எப்படி அதைப் பத்தி சொல்லுங்க.. கஷ்டப்பட்டு எழுதினது. ஓன் ஹோல் நைட் கண்ணுமுழிச்சி நிலாவ பாத்துகினே இருந்தேன். அதைபத்தி பேசாம.. அல்வா எங்க போயிடப்போகுது’’ என கையைபிடித்து தடுத்தது. அப்போதே உஷாராகி ஓடியிருக்கவேண்டும். விதி வலியது. இருவரும் அல்வாவைப் பார்த்துக்கொண்டு காத்திருந்தனர்.

‘’அதுவந்து அதுவந்து.. அதுவா சூப்பர் கவிதை பாஸ்.. அப்படியே வான்கா ஓவியத்தை பாக்கறாப்லயே படிக்க சொல்ல இருந்துது.. அய்யயோ அதை படிச்சி நாலுநாள் தூக்கம் வரலியே! நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே..’’ எனபேசிக்கொண்டே அல்வாவினை எடுக்க முனைந்தான். மறுபடியும் கையை பிடித்து தடுத்து.. ‘’என்ன பாஸ் சாப்டுகிட்டே பேசினா பேசறது எப்படி புரியும்.. முதல்ல சொல்லிடுங்க.. அப்புறம் சாப்பிடுங்க, எனக்கு ஆர்வம் தாங்கல’’ என்றது விதி.

‘’அதுபாஸ்.. இதுமாதிரி கவிதைய வாழ்க்கைல படிச்சதே இல்ல.. இன்னைக்கு இந்தியாலயே ஏன் ஒலகத்திலயே நீங்கதான் பெஸ்ட் கவிஞர், உங்களுக்குதான்... ஏன் தோழர் அது இன்னா விருது.. நோபால் பரிசு.. அத்த குடுக்கணும். அந்த மூனாவது கவிதைதான் பெஸ்ட்டு கவிதை.. நான் அல்வாவ கொஞ்சம் சாப்பிட்டுக்கட்டுமா’’ என பரிதாபமாக கேட்டான்.

‘’அட அல்வாவ விடுங்க.. அப்ப நாலாவது கவிதை மோசம்ன்றீங்களா!’’ என விதி தன் திருவிளையாடலை தொடங்கியது.

‘’அப்படி இல்ல பாஸ்.. மூணாவது கவிதை மாஸ்டர் பீஸ்னா நாலாவது கவிதை... ம்ம்ம்.. லிட்டில் மாஸ்டர் பீஸ்’’ என மீண்டும் அல்வாவில் கைவைக்க முயன்றான். விதியோடு ஒருவன் போராடுவதை பார்த்து மற்றொருவன் அல்வாவை தொடவேயில்லை. அதற்கு பதிலாக தோசையை பிய்த்து தின்ன கரம் நீட்டினான்.

‘’பாஸ் அவர் லிட்டில் மாஸ்டர் பீஸு காமெடி பீஸ்னு ஏதோ சொல்றாரு இப்ப போயி தோசை பிச்சிகிட்டிருக்கீங்க.. நீங்க சொல்லுங்க எது பெஸ்ட்டு’’ என விதி இருவர் கழுத்திலும் சுறுக்கை மாட்டியது. இனிமேல் கயிறு வயிறு இரண்டுமே விதியின் கைகளில்தான்.

இருவரும் முகத்தை ஙே என வைத்துக்கொண்டு ஒருவர் முகத்தை மற்றவர் மாறிமாறி பார்த்துக்கொண்டனர். மாட்னோம்டா என்பதே அதன் சாரம். பசியில் வயிறுவேறு எரிந்தது. கண்முன்னால அற்புதமான விருந்து இருக்கு.. மயிராண்டி திங்கவுடமாட்டேன்றானே என எரிச்சலோடு பல்லைக்காட்டிக்கொண்டு....

‘’அது வந்து பாஸ்.. நீங்க எழுதின எல்லா கவிதையுமே மாஸ்டர் பீஸ்தான்.. நீங்க ஒரு மகாகவி.. இனிமே எழுதப்போற கவிதையும் கிளாசிக்காதான் இருக்கும். அப்படியே அந்த அல்வாவ சாப்ட்டுகிட்டே பேசினா நல்லாருக்கும்.. இல்லாட்டி ஆறிடும்.. டேஸ்ட்டுருக்காது’’ என கோரஸாக சொல்லிவிட்டு பார்வையை அல்வாவின் பக்கம் திருப்பினர்.

‘’பாஸ் அப்படிலாம் சும்மா சொல்லாதீங்க எனக்கு தெரியாதா என்கவிதைய பத்தி.. அந்த தொகுப்புல மூணுதான் உருப்படியான கவிதை.. சும்மா அல்வாவுக்கு ஆசைப்பட்டு பாராட்டுனுமேனு பாராட்டாதீங்க.. குறைகள சொல்லுங்க அதுதான் என்னை உயர்த்தும்’’ என விதி கொத்துகுண்டு தாக்குதலை தொடங்கியது. விடமாட்டான் போலருக்கே...என நினைத்த இருவரும் அழும் குரலில் பேசத்தொடங்கினர்.

‘’அது வந்து.. அந்த ஆறாவது கவிதை இருக்கே.. அது சுமார்தான்.. வெறும் வார்த்தை விளையாட்டு. மத்தபடி உயிரே இல்ல’’ என ஒருவனும். , ‘’ஆமா பாஸ் பதினோறாவது கவிதை ரொம்ப சுமார்.. ரொம்ப சின்னது’’ என சொல்லிவைத்துவிட்டு.. அல்வாவுக்கு காத்திருந்தனர்.

‘’பாஸ் என் தொகுப்புல பத்து கவிதைதானே! பதினொன்னா..’’ என முதல்முறையாக விதி விழித்தது.

‘’அடடா பின் அட்டைல நீங்க எழுதிருந்ததையும் கவிதைனு நினைச்சி படிச்சிட்டேன் போல.. சாரி பாஸ்’’ என்றான். இதயம் வேறு படபடவென அடித்துக்கொண்டது இருவருக்கும்.

‘’ஹாஹாஹா’’ என ஓட்டல் அதிர சிரித்தது விதி. ‘’ ஐலைக் யூவர் சென்ஸ் ஆப் க்யூமர்’’ என்றது. நல்லவேளை அடிவிழவில்லை என ஆசுவாசமாகினர். விதிக்கு இரண்டு கைகளும் நல்ல கர்லா கட்டைபோல உருண்டுதிரண்டு இருக்கும் என்பது இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று. மீண்டும் அல்வா வேட்டையை தொடர்ந்தனர்.

‘’கவிதை நல்லா இல்லாட்டி நல்லா இல்லைனு சொன்னீங்க பாருங்க உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.. அல்வாவை சாப்பிடுங்க’’ என்றது விதி. இந்த இலக்கிய விதிக்குகூட மனசாட்சியுண்டு இந்த கல்லுக்குள்ளும் ஒரு ஈரம் உண்டு என நினைத்துக்கொண்டு இருவரும் அல்வாவை சாப்பிடத்தொடங்கினர். ஆனாலும் விதி விடவில்லை.

‘’நீங்க வண்ணநிலவனோட கடல்புரத்தில் படிச்சிருக்கீங்களா....அதுல ஒரு வரி வரும்பாருங்க..அதுக்கு இணையான ஒரு உள்ளுணர்வெழுச்சிய நம்ம கவிதைல ஒன்னு’’ என மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி உரையை தொடங்கியது விதி.
‘’தோழர் அல்வா ரொம்ப சூடா இருக்குல்ல.. உஃப்ப்ப்’ என ஊதிக்கொண்டே இன்னொருவனிடம் ஸ்பூனை தூக்கி காட்டினான். ‘’ஆமா தோழர் ரொம்ப சூடு.. உஃப்ப்’’ என்றான் மற்றொருவன்.

‘’ஹலோ வண்ணதாசன்..’’ என இருவரையும் இடைமறித்து சத்தமாக பேசியும்.. அந்த இருவரும்

‘’பாஸ்.. அல்வா செம டேஸ்ட்டு.. இன்னொரு பிளேட் வாங்கிக்குடுங்களேன்’’ என விதியைப்பார்த்து கூறினர்.

‘’அதுக்கென்னபாஸ் வாங்கிதரேன்.. வண்ணதாசனை விடுங்க.. ஆல்ப்ரட் காம்யூவோட அந்நியன்னு ஒரு நாவல்.. படிச்சிருப்பீங்களே.. அதே மாதிரி நானும்..’’ என விடாப்பிடியாக விதி விளையாடியது.

எதற்கும் மசியாமல் இருவரும் அல்வாவினை ருசித்து ருசித்து தின்று தீர்த்து அடுத்து பொங்கலில் விரலை விட்டு நோட்டிக்கொண்டிருக்க.. எரிச்சலானது விதி. கொஞ்சம் நேரம் அவர்களாக ஏதாவது பேசட்டும் என காத்திருந்தது. ஆனால் இருவரும் விதியை கொஞ்சமும் சட்டை செய்யாமல் வந்த வேலையில் மும்முரமாகியிருந்தனர். சாப்பிடத்தொடங்கிவிட்டால் இடியே விழுந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தொழில் ரகசியம். பொறுத்து பொறுத்து பார்த்து தாங்க முடியாமல்..

‘’டேய் நிறுத்துங்கடா.. ஞான சூனியங்களா.. உயர் இலக்கிய ரசனை பத்தி பேசிட்டிருக்கேன்.. பத்துகாசு பொறாத அல்வாவ தின்னுகிட்டிருக்கீங்களே.. உங்களுக்கெல்லாம் இலக்கியம்னா என்ன தெரியுமா.. ’’ என சத்தம் போட்டது. ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் தோழர் சாம்பார் சூப்பரா இருக்கு.. பொங்கல்ல குழிபண்ணி ஊத்தி பிசைஞ்சி தின்னு பாருங்க அட்டகாசம் என பேசிக்கொண்டிருந்தனர். விதி தன்னையே நொந்தபடி..

‘’சாரி பாஸ்! நான் கோவத்துல பேசிட்டேன்.. நான் புதுசா ஒரு கவிதை எழுதிருக்கேன்.. கேக்கறீங்களா?’’ என்றது.

‘’இன்னொரு பிளேட் அல்வா வாங்கிக்குடுங்க கேக்கறோம்’’ என சொல்லிவிட்டு மீண்டும் வாய்க்கு வேலை கொடுக்கத்தொடங்கினர். இதற்கு மேலும் விதியால் எப்படி பொறுத்திருக்க முடியும். இரண்டு பேரின் சட்டை காலரை பிடித்து அப்படியே நிற்கவைத்து ‘’டேய் என்னை பார்த்தா எப்படிடா இருக்கு உங்களுக்கு.. மரியாதையா ஓடிப்போயிருங்க..’’ என்று உலுக்கியது.

ஒருவன் தன் உளுந்தவடையை கீழே வைத்துவிட இருவரும்.. சோகமாக அந்த ஹோட்டலை விட்டு கிளம்ப தயாராயினர். முதன்முதலாக விதிக்கே விளையாட்டு காட்டிவிட்டு சென்ற இருவரையும் நினைத்து விதி தன்னைத்தானே நொந்துகொண்டது.
‘தோழர் நல்ல வேளை பில்லு கட்ட வச்சிருவானோனு நினைச்சேன்.. தப்பிச்சோம்.. நம்மகிட்டயேவா!’’ என்றான் ஒருவன்.

‘’தோழர் ஒருநிமிஷம் இருங்க! இதோ வந்திடறேன் என மீண்டும் அந்த டேபிளுக்கே திரும்பிப்போனான் மற்றொருவன்.

விதியின் அருகில் போய் நின்றான். தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த விதி அவனை நிமிர்ந்து பார்த்து ‘’என்ன’’ என கத்தியது.

‘’இல்ல.. பாஸ் நாங்க ஏதாச்சும் தப்பா பேசிருந்தா மன்னிச்சிடுங்க’’ என்றான்

‘’இருக்கட்டும்.. இனிமே என் கண்லயே படாதீங்க’’ என்றது

‘’அதுக்கில்ல.. என்னோட கேரட் அல்வால பாதிய மிச்சம் வச்சிட்டு போயிட்டேன்.. அதை மட்டும் எடுத்துக்கட்டுமா’’ என்றான்.

அதற்கு பிறகு விதி கவிதை எழுதுவதை விட்டுவிட்டு எங்கோ கண்காணாத தேசத்துக்கு போய்விட்டது. அந்த இருவரும் தங்களுடைய இலக்கிய சேவையை தொடர்ந்தனர்.


(இந்த கதையில் வருகிற பாத்திரங்கள் யாவும் பிரமாண்டமான சரவணா ஸ்டோர்ஸில் வாங்கியவை)

18 November 2011

டின்டின்நண்பர்களில் சிலர் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் குறித்து பேச ஆரம்பித்தால் மெய்மறந்து பரவசநிலையில் மணிக்கணக்கில் பேசுவதை கேட்டிருக்கிறேன். பல ஆயிரங்கள் செலவழித்து பழைய கிழிந்த குப்பையான காமிக்ஸ்களை வாங்குவதையும், கடைகடையாக சொல்லிவைத்து பழைய புத்தகங்கள் சேகரித்து வைப்பதையும் பார்க்க செமகாமெடியாக இருக்கும். இந்த காமிக்ஸ்களுக்காக அடிதடி வெட்டு குத்து கைகலப்புகள் கூட நடக்கும் என்றே நினைக்கிறேன். (காமிக்ஸ் ரசிகர்கள் கன்பார்ம் செய்து உதவலாம்) அப்படி என்னதான்யா இருக்கு இந்த தமிழ்காமிக்ஸ்ல என முஷ்டியை மடக்கிக்கொண்டு ஒருகை பார்த்துவிட முடிவெடுத்து சமகாலத்தில் பழைய காமிக் புத்தகங்களை நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

அதைப்படிக்கும்போதுதான் ச்சே! இரும்புக்கை மாயாவி படிக்காம விட்டுட்டோமே! லக்கிலூக் பற்றி தெரியாமல் போயிடுச்சே... அடேங்கப்பா மதியில்லா மந்திரி என்ன காமெடியா இருக்கு.. கௌபாய் கதைகள் பின்னுதே! ஸ்பைடரின் சாகஸங்கள் தூள்கிளப்புதே... இதையெல்லாம் சின்ன வயசுல படிக்க குடுத்துவைக்கலயே என்கிற ஏக்கம் எழும்.

தமிழில் அநேக காமிக்ஸ் புத்தகங்கள் வந்திருந்தாலும் எனக்கு ஆங்கில காமிக்ஸ்கள்தான் பள்ளிக்காலங்களில் பரிச்சயமாயிருந்தது. காரணம் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது வேலை பார்த்த புத்தக கடையில் ஆங்கில காமிக் புத்தகங்கள் மட்டும்தானிருந்தன. காசு கொடுத்து காமிக்ஸ் மட்டுமல்ல எதையுமே வாங்கிப்படிக்கிற பரம்பரையல்ல எங்களுடையது. வேலை செய்த கடையில் காணக்கிடைத்த டின்டின்னும் மார்வலும் டார்க் ஹார்ஸும் டிசி காமிக்ஸும்தான் ஒரே கதி!

தமிழ்மீடியம் என்பதால் என்னுடைய அபாரமான ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு அதையெல்லாம் என்னதான் முக்கிமுக்கிப்படித்தாலும் கொஞ்சமே கொஞ்சம்தான் புரிந்துகொள்ள இயலும். ஸ்பைடர் மேன்,பேட்மேன்,சூப்பர்மேன்,பேன்டம்,மாண்ட்ரேக் மாதிரியான காமிக்ஸ்கள் படித்தாலும் டின்டின் மீது எப்போதுமே அளவில்லாத அன்பிருந்தது. காரணம் ஆங்கிலமே தெரியவில்லையென்றாலும் படங்களைக்கொண்டே நம்மால் ஒரு கதையை உருவாக்கிக்கொள்ள முடியும். அந்தக்கதை எப்போதுமே ஆக்சன் காட்சிகள் நிறைந்த சோகம் நிறைந்த காமெடி படங்களாகவே இருக்கும்.

வெறும் படங்களைப்பார்த்தே சிரித்து மகிழலாம். அதிலும் அந்தப்படங்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்! மிகமிக நேர்த்தியாக ஆக்சன் காட்சிகளை சித்தரித்து வரையப்பட்ட படங்கள் அவை.

டின்டின் என் கனவு நாயகன். ஒரு குட்டிநாயை வைத்துக்கொண்டு எப்பேர்ப்பட்ட உட்டாலக்கடி பலசாலி வில்லன்களையும் மதிநுட்பத்தால் பந்தாடுவார்! அவரோடு கப்பல்கேப்டன் குடிகார ஹடாக்கும் சேர்ந்துகொண்டால் காமெடி,அதிரடி,சரவெடிதான்! நடுவில் போலீஸ் டிடெக்டிவ்களாக வருகிற தாம்சன் அன்ட் தாம்சனின் ஜாலியான குறும்புகளும் நினைவிலிருந்து என்றுமே அகலாதவை. சுஜாதாவின் ஜீனோகூட ஸ்நோயி என்னும் டின்டின்ன்னின் குட்டிநாயின் பாதிப்பில் உருவானதாக இருக்கலாம்! படுசுட்டி! அதிலும் போகிறபோக்கில் வரலாற்றினையும் அரசியலையும் வெகுவாக கிண்டலடித்திருப்பார் டின்டின் கதாபாத்திரத்தினை உருவாக்கிய ஹெர்ஜ்.

டின்டின் காமிக்ஸ் கார்ட்டூன் நெட்வொர்க்கில் பத்தாண்டுகளுக்கு முன்பு டிவிசீரியலாக வெளியானபோதும் அண்மையில் அதன் திருட்டுடிவிடி மொத்த தொகுப்பு பர்மா பஜாரில் வெறும் பதினைந்து ரூபாய்க்குக் கிடைத்தபோதும் விடாமல் பார்த்திருப்பேன். டிவிசீரியல் தரம் ரொம்ப சுமார்தான்.. காமிக்ஸில் கிடைத்த விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் ரொம்ப குறைவு! இருந்தும் சிடி தேய பல நூறுமுறை பார்த்திருப்பேன். டின்டின் கதைகளை அடிபட்டையாக கொண்டு சில படங்கள் அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் வெளியாகியிருந்தாலும் திருட்டுடிவிடி இன்னும் ரிலீசாகவில்லை.

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும அது திரைப்படமாக வருகிறதென்பதும் அதை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்குகிறார்.. அதுவும் பர்ஃபார்மென்ஸ் காப்ச்சர் 3டி தொழில்நுட்பம் என்பதும் எப்படிப்பட்ட ஆவலை என்னுள் ஏற்படுத்தியிருக்கும் என்பதை வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. பைலட் தியேட்டரில் பல மாதங்களாக இப்படத்தின் தமிழ் டப்பிங் டிரைலர் வரும்போதெல்லாம் நவம்பருக்காக காத்திருந்தேன்.

அன்பார்சுனேட்லி ஏனோ படம் தமிழில் வெளியாகவில்லை. சென்னையிலும் மிகச்சில உயர்ரக பீட்டர்குடிகளுக்கான மெகாமால் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியிருந்தது. அங்கெல்லாம் டிக்கட் விலை நூறுரூபாய்க்கும் மேல் (பைலட் தியேட்டரில் முப்பதேரூபாய்தான்). நமக்கு கட்டுப்படியாகாதே! படம் வெளியாகி ஒருவாரமாக ஏக்கத்தோடு ச்சே இந்த வறுமைதான் எத்தனை கொடியது என சோகத்தில் இருந்த எனக்கு தோழர்தான் ஆபத்பாண்டவனாக ஏமாந்த ரட்சகனாக பெரிய அமவ்ன்ட்டை ஸ்பான்சர் செய்தார். சத்யம் தியேட்டரில் டிக்கட் விலை நூற்றி இருபது,பார்க்கிங் பத்து, 3டி கண்ணாடிக்கு 20 என இரண்டுபேருக்கும் சேர்த்து மொத்தமாக 300 ரூபாய் மொய் வைக்க வேண்டியிருந்தது! இதில் சத்யம் தியேட்டரில் குடிக்க தண்ணீர் கூட இருபது ரூபாய் கொடுத்துதான் வாங்கித்தொலைய வேண்டிய துர்பாக்ய நிலை. இதையெல்லாம் தட்டிக்கேட்க ஒரு வேலாயுதம் வரமாட்டானா?

எதிர்பாப்பை மட்டுமே பார்சல் பண்ணிக்கொண்டு போன என்னை எள்ளளவும் ஏமாற்றவில்லை ஸ்பீல்பெர்க். நான் காமிக்ஸில் படம் பார்த்து உருவகித்து கொண்ட அச்சு அசல் அதே பாத்திரங்கள் உயிருடன்.. 3டியில்! பார்க்கவே சிலிர்ப்பாக உணர்ந்தேன். ஏற்கனவே படித்த டிவியில் பார்த்த அதே சீக்ரட் ஆஃப்தி யுனிகார்ன் கதைதான் என்றாலும் கொஞ்சமும் பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாத அருமையான திரைக்கதை, பிரமிப்பூட்டும் கிராபிக்ஸ்! காமிக்ஸுக்கு கொஞ்சமும் குறையாத அதே நகைச்சுவை. அதிலும் கேப்டன் ஹடாக் வருகிற காட்சிகள் அத்தனையும் பட்டையை கிளப்புகிறது. வெறும் குழந்தைகளுக்கான படமாக மட்டுமேயில்லாமல் அனைவருக்குமான படத்தை கொடுத்திருக்கிறார் ஸ்பீல்பெர்க். இதற்கு மேல் படத்தைப்பற்றி என்ன சொல்ல தியேட்டரில் பார்க்கும் வசதியிருக்கிற சீமான்களும் சீமாட்டிகளும் உடனடியாக தியேட்டரிலும் என்னைப்போன்ற பரம ஏழைகள் பத்து நாட்கள் பொறுத்திருந்து திருட்டுடிவிடியிலும் கட்டாயம் பார்க்கலாம்!

10 November 2011

கழிவறை காதை!

படுக்கையில் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது வாசலில் பெண் குரல்..’’மேடம்! மேடம்’’

ச்சே இந்த சேல்ஸ் பொம்பளைங்களுக்கு நேரங்காலமே கிடையாதா விடிஞ்சும் விடியாம வந்துட்டாங்களே.. என்று மனதிற்குள் நினைத்தபடி..

‘’அம்மா, வாசல்ல யாருன்னு பாரு!’’ என்று சத்தம் போட்டுவிட்டு மீண்டும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டேன். சில நிமிடங்களில் அம்மா திரும்பிவந்து மீண்டும் சமையலறைக்குள் படையெடுக்க...

‘’யாரும்மா.. என்னவாம்’’

‘’ஒன்னுமில்லே! யாருனே தெரியல.. பக்கத்துல சர்ச்சுக்கு வந்தாளாம்.. கொஞ்சம் உங்க டாய்லெட்ட யூஸ்பண்ணிக்கட்டுமானு கேக்கறா!’’

‘’நீ என்ன சொன்னே’’

‘’யாரோ எவளோ? அதெல்லாம் முடியாது அதோ அந்தப்பக்கம் மூணாவது வீடு இருக்கு பாரு அதுதான் கிரிஷ்டீன் வீடு அங்கே போய் கேளுனு விரட்டி விட்டுட்டேன்’’ என்று பெருமிதமான தொனியில் சொன்னதும் எனக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்துவிட்டது.

‘’என்னம்மா மனசாட்சியே இல்லாம இருக்க , மனுஷங்கதானே நாம.. பாவம் சுகர் பேஷன்டோ என்னவோ.. அடுத்தவங்க வீடு தேடி வந்து கேக்கறாங்களே.. உனக்கு கூட சுகர் இருக்குல்ல.. டாய்லெட்தானே ஒருவாட்டி யூஸ்பண்ணிகிட்டா என்னவாம், சொத்தா அழிஞ்சிடும்’’ என கடிந்துகொண்டேன்.

‘’அட நீவேற வீட்டை நோட்டம் விட்டுட்டு போயி நாளைக்கே நாம இல்லாதப்ப வந்து கொள்ளையடிச்சிட்டி போனாலோ , தனியா இருக்கும்போது கண்ணுல மொளகாப்பொடி தூவிட்டு செயின களவாண்டு போயிட்டா என்னடா பண்ணுவா.. போடா வேலை மயிற பாத்துட்டு வந்துட்டான் மனிதாபிமானத்துக்கு அத்தாரிட்டி’’ என்று எதிர் சவுண்டு விட.. அடங்கிப்போனேன். அம்மாவின் குரலுக்கு அடங்காதவனும் செந்தமிழனா?

இந்த பொதுக்கழிப்பிட பிரச்சனைகளை நம்மில் பலரும் அடிக்கடி சந்திக்கநேருகிற ஒன்றுதான். நான் மார்க்கெட்டிங் பணியில் இருந்தபோது ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு போனால் ஒன்பதரைக்கு வெளியேறிவிட வேண்டும் என்பது மேனேஜரின் உத்தரவு. வெளியேதான் வேலை. கஸ்டமரை பார்க்க போனால் அங்கேயே கழிப்பிடமிருக்கும். ஆனால் பயணத்தின் போது.. சாலையோரம்தான் ஒரே கதி! வேறு வழியேயில்லை.

மலங்கழிக்க வேண்டுமென்றால் கட்டணமுறை கழிப்பிடங்களை எங்காவது முக்கிய பேருந்து நிலையத்தை தேடிக்கண்டுபிடித்து கழிப்பறையை கண்டறிந்து காசு கொடுத்து க்யூ தாண்டி போய் சேர்வதற்குள் நரகவேதனைதான். சிலநேரங்களில் வேறுமாதிரி ஆயிவிடும்.

ஆண்கள் பரவாயில்லை. பெண்களின் நிலைதான் பரிதாபம். சோப்பு,ஃபீனாயில்,டிக்சனரி விற்கும் சேல்ஸ் பெண்களை அறிவேன். அவர்களுக்கு சாதாரண நாட்களிலேயே இது ஒரு பெரிய தொல்லையாக இருந்தாலும் , மாதவிடாய் காலங்களில் சொல்லவும் வேண்டாம். அதற்காக எந்த ஏரியாவிற்கு சென்றாலும் அங்கே இருக்கிற ஹோட்டலிலோ,கடைகளிலோ இருக்கிற ஆண்களிடம் சிரித்துப்பேசி அங்கேயிருக்கிற கழிவறையை உபயோகிப்பதை பார்த்திருக்கிறேன். சிலர் வீடுகள் தோறும் மேடம் கொஞ்சம் யூஸ்பண்ணிக்கட்டுமா என கெஞ்சிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

நமக்கெல்லாம் வீடு இருக்கிறது, இருக்கிற வீட்டுக்குள்ளேயே பளபளப்பான கழிவறை இருக்கிறது. ஆனால் நம்நிலையே இப்படியென்றால் சென்னையில் வசிக்கிற பதினோறாயிரத்தி சொச்சம் சாலையோரம் வசிக்கிற குடும்பங்களின் நிலையை நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை. பொதுக்கழிப்பிடங்களில்தான் அக்குழந்தைகளுக்கு எல்லாவித பாலியல் அத்துமீறல்களும் அரங்கேறுகின்றன.

சாலையில் எங்கும் செல்லும் போதும் சாலையோரம் யாராவது சிறுநீர் கழித்தாலோ, மலங்கழித்திருந்தாலோ , மலத்தைக்கண்டாலோ உடனே மூக்கை பொத்திக்கொண்டு ச்சே இவங்களாலதான் சுகாதாரம் கெடுது என வக்கனையாக பேச மட்டும் தெரிந்துவைத்திருக்கிறோம். அதற்கான காரணங்களை பற்றி ஒருநாளும் சிந்திப்பதில்லை. இடிபடும் கோயில்களுக்கு வரிந்துகட்டிக்கொண்டு குரல் கொடுக்கும் நாம் கழிவறைகளுக்காகவும் கொஞ்சமாவது குரல் கொடுக்கலாம்.

வீதிக்கு வீதி எது இருக்கிறதோ இல்லையோ பிள்ளையார் கோயில் ஒன்றை கட்டிவைத்திருக்கிறோம். போட்றா தோப்புகரணத்தை என பார்க்குமிடமெல்லாம் நிறுத்தி குனிந்து குனிந்து போடுகிறோம்! ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பூசாரி வேறு. அதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இருக்கிற இந்த குட்டிக்குட்டி கோயில்களையும் சிறிய பிறமத வழிபாட்டுத்தலங்களையும் கழிவறைகளாக மாற்றி பூசாரிகளை காவலுக்கு நிறுத்திவைத்தாலே கூட வீதிக்கு ஒரு டாய்லெட்டோடு சுத்தபத்தமாக ஆச்சாரமாக வாழ இயலும் என்பது மட்டும் நிச்சயம்.

மதவெறியர்களுக்கு இதைபடிக்கும்போது குபீர் என கோபம் வரலாம்.. வந்துவிட்டுப்போகட்டும். என்றாவது ஒருநாள் அர்ஜன்டாக டூ பாத்ரூம் வரும்போது கழிவறையில்லாமல் அடக்கிக்கொண்டு அலைந்தவர்களுக்கே அந்த வலியும் வேதனையும் புரியும். வழிபாட்டுத்தலங்களைவிடவும் ஏன் கழிப்பறைகள் அவசியம் என்பதை அப்போதுதான் உணரமுடியும். சிறுநீர் முட்டிக்கொண்டு இருக்கையிலும் மலத்தினை அடக்கிக்கொண்டு அலைகையிலும் சொர்க்கமென்றால் அமைதி என்றால் என்னவென்பதை உணரவைக்கும் ஆற்றல் கழிவறைகளுக்கு மட்டுமேயுண்டு, எந்த தெய்வத்தாலும், எந்த வழிபாட்டுத்தலத்தினாலும் அந்த மகிழ்ச்சியை கொடுத்துவிடயலாது. திருப்பதி வெங்கடாஜலபதியின் சொத்தில் பாதி இருந்தால் கூட அரசே நமக்கு லட்சக்கணக்கில் இலவச கழிப்பறைகளை கட்டித்தரமுடியும! என்ன செய்ய காட் இஸ் க்ரேட்!

அரசுதான் கழிப்பறைகளை கட்டித்தர முன்வரவேண்டும்.. அரசே செய்யாட்டி நாங்க என்னபண்றதாம் என கேள்விகளை அடுக்க வேண்டாம். கோயில்களை நாமே கட்டிக்கொள்ளவில்லையா? ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தால் கிடைக்கிற புண்ணியத்தைவிடவும் அவசரமாக உச்சா வருது சார் பாத்ரூம் யூஸ்பண்ணிக்கவா என கேட்கிறவனுக்கு டாய்லெட்டை அளித்தும் புண்ணியம் பெறலாம். அல்லது உங்கள் பகுதியில் பொதுக்கழிப்பிடமில்லையா மக்களை ஒன்றுதிரட்டி ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டுங்களேன்! கோயில் கட்றதுக்கு மட்டும்தான் டொனேஷன் கலேக்ட் பண்ணுவீங்களா? கக்கூஸ் கட்டவும் அதையே செய்வதில் தவறென்ன வந்துவிடப்போகிறது.

சமூகத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்ய நினைத்தால் உங்கள் பகுதியில் மரம் நடறேன் செடி நடறேன் குப்பை எடுக்கிறேன் என எல்லோரும் செய்யும் அதையே செய்யாமல் கழிவறைக்கு ஏற்பாடு செய்யலாம்!

சரி அதைவிடுங்க! நமக்கேன் பொல்லாப்பு.

வீட்டில் கதவு தட்டிய அந்த பெண்மணியை குறித்த ஏதோ ஒரு குற்றவுணர்வு உருத்திக்கொண்டேயிருந்தது. அந்தப்பெண் வயதானவராக இருக்கலாம். உடல் ஊனமுற்றவராக இருக்கலாம். சிறுநீரக கோளாறு உள்ளவராகவோ, மாதவிடாய் காலத்து பிரச்சனையிலோ இருந்திருக்கலாம். அவசரமாக ஓடிப்போய் வாசலுக்கு வெளியே எட்டிப்பார்த்தேன்.. அந்தவயதான பெண்மணி மூன்றாவது வீட்டிலிருந்து பொறுமையாக மலர்ந்த முகத்தோடு வெளியே சென்றார். அது அவராகத்தான் இருக்க வேண்டும். அந்த வீட்டினர் உதவியிருக்க கூடும். மனது ஆறுதலடைந்தது. அம்மாவை சொல்லியும் குற்றமில்லை. அம்மாவின் பயம் நியாயமானதுதான். உடனடியாக கவுன்சிலரோடு பேசி பொதுக்கழிப்பிடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.

02 November 2011

பத்து-பத்து
மூக்கு ஈரமாய் இருக்கிறது. காதிற்குள் ‘ங்..ங்ங்ங்ங்ங்’ என விடாமல் ஓர் ஒலி. காதோரம் யாரோ நடந்து வருகிற சப்தம். குப்புற விழுந்து கிடந்தவன் தூரத்தில் வருகிற கறுத்த பெருத்த காலடிகளை மெதுவாக கண்களை திறந்து பார்த்தான். மங்கலாக அது தன்னை கடந்து செல்வது போல் தெரிந்தது. மூச்சு விடமுடியவில்லை. முதுகில் உதைத்ததால் விண்விண் விண்விண் என இதயம் துடிப்பதைப் போல விட்டுவிட்டு வலித்துக்கொண்டுருந்தது. விலகிச்செல்லும் கால்களை நிமிர்ந்து பார்க்கலாமா? அல்லது கண்களை இறுக்க மூடிக்கொள்ளலாமா?. வேண்டாம்! கண்திறந்தால் மீண்டும் அடிபட வேண்டியிருக்கும் , முட்டியில் வலித்தது. அதே அலைவரிசைதான். விண்விண் விண்விண்.. கண்களை இறுக்க மூடிக்கொண்டான். இடது கண்ணில் கண்ணீர் கசிந்துகொண்டே இருந்தது. முன்னர் கசிந்தவை காய்ந்து ஈரமாகி வடவடவெனவிருந்தது. தூரத்தில் இவனை அழைக்கும் சத்தம். டேய் லூசு...!


லேசாக கண்ணைத்திறந்து கையை தரையில் ஊன்றி எழுந்து நின்றான். மூக்கை புறங்கையால் துடைத்தான். சளி போல இல்லை. கெட்டியாக காய்ந்திருந்தது. கன்னத்திலும் வழிந்திருந்தது. ரத்தம்!. கீழே விழுந்துகிடந்த போது முகத்தில் எட்டி உதைத்ததில் சிறுமூக்கு உடைந்திருந்தது. வலி இல்லை. ரத்தம் வெளியேறிக்கொண்டேயிருந்தது. விடாமல். சொட்டு சொட்டாக...


‘’டேய்...லூசு.. என்னடா பண்ற எவ்ளோ நேரமா கூப்படறேன்’’ படுக்கையறையிலிருந்து ராஜன் சாரின் தடித்த குரல்.

ஒன்பதரை வயது பாஸ்கர் கடைசியாக இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து திரும்பிய ஒரு நல்ல நாளில் அவனது அப்பா இங்கே அழைத்துவந்து விட்டுச்சென்றார். ஆந்திராவிற்கு பக்கத்தில் ஒரு ஏதோ தமிழ் கிராமம் அவனுடையது. சென்னை.. பீச்சு, ரஜினி,விஜய்,மூன்று வேளை சோறு, இங்கிலீஸ்படிப்பு,கூலிங்கிளாஸு என ஏதோ ஏதோ எதிர்பார்த்துதான் வந்துசேர்ந்தான். எடுபிடி வேலைக்கு என்றுதான் சேர்த்துவிட்டிருந்தார். ஆனால் கழிவறையை சுத்தம் செய்வதில் துவங்கி சகலமும் இவன் மட்டுமே செய்ய வேண்டியதாயிருந்தது.

ராஜன் சாருக்கு லேசான கிறுக்கு இருக்கலாம் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வான். அடிதாங்க முடியாமல் தூங்கும் போது தலையில் கல்லைப்போட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று யோசிப்பான். பெரிய கல்லை தூக்க முடியாது. சின்னக்கல்லைப் போட்டால் ராஜன் சார் சாக மாட்டான். ஓருவேளை கல்லை போட்டும் சாகாமல் உயிர் பிழைத்து அவன் கையில் சிக்கினால் சாவுதான் என்பதை அறிந்தேயிருந்தான்.

முந்தைய நாள் ராஜன் சாரின் அலுவலகத்தில் சிறிய பார்ட்டி. போதையில் டேபிள் டிராயரில் வைத்துவிட்டுச் சென்ற சிகரட்டுகளில் மூன்றை காணவில்லை. இவன்தான் அதை புகைத்திருக்க அல்லது எடுத்திருக்க வேண்டும் என பாஸ்கரை அழைத்து திட்டினான். இவன் நான் எடுக்கலைங் சார், நான் பார்க்கவே இல்லைங்சார், தெரிலைங்சார், தேடிபாக்கறேன்ங்சார் என நிறைய சொல்லியும் இனிமே எடுப்பியா எடுப்பியா இந்த வயசுலயே தம்மு கேக்குதோ உதவாக்கரை ஒன்னும் லாய்க்கில்ல என உதைத்தான். பாஸ்கர் மயங்கி விழுந்து மூச்சு பேச்சில்லாமல் ஆகும் வரை அது தொடர்ந்தது.
இப்போது மீண்டும் அழைக்கிறான். போனால் அடிபட நேரிடலாம். போகவில்லையென்றாலும் உதைவிழும். ஹாலில் கிடந்தவன் அவசர அவசரமாக ரத்தம் வழியும் மூக்கை புறங்கையால் தேய்த்தபடி படுக்கையறைக்குள் நுழைந்தான். அடிவயிற்றில் கர்ர்ர் என்றது. இதயம் அளவுக்கதிகமாக அடித்துக்கொண்டது. ஓங்கி ஓங்கி வயிற்றில் நெஞ்சில் எங்கெங்கோ உதைத்தது வேறு விண் விண் என வலித்தது.


படுக்கைக்கு அருகில் ராஜன் சார் சேரில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான். தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தான். கொஞ்சம் தள்ளி நின்று தலையை தரையை நோக்கி குனிந்தபடி ஒருகையை அக்குளுக்குள் கட்டி நின்றான்.

‘’மூஞ்சில என்ன ரத்தம்!’’.

‘’சாங்! நீங்க மூங்சீல மிதிச்சீங்கங்கல , சின்னமூக்கு உங்ஞ்சிபோச்சிபோலசார் அதாங்’’ மூக்கிலேயே புரியாதபடிக்குப் பேசினான். இன்னும் துளிதுளியாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

அருகில் இருந்த ஏதோ ஒரு துணியை எடுத்து அவனை நோக்கி வீசினான். அழுக்குத்துணி. ஈரமாய் இருந்தது. கொஞ்சமாய் நாற்றமடித்தது. ‘’இத்தால மூஞ்ச துடச்சுட்டு , பாத்ரூம் போய் கழுவிட்டு வா...என்ன? வேல இருக்கு..’’ அதட்டினான். பாஸ்கருக்கு எரிச்சலாக இருந்தது , வயிறும் மூக்கும் மனமும் எல்லாமே.

கழிவறைக்கு சென்று சோப்புப்போட்டு முகத்தை கழுவினான். ஆனாலும் காய்ந்திருந்த ரத்தம் போகவில்லை. நன்றாக கரகரவென அழுத்தி தேய்த்து, சுரண்டி அதை அழித்துவிட முயற்சித்தான் ஒரளவு போயிருந்தது. அதற்குள் உள்ளேயிருந்து இன்னுமாடா என்னும் குரல் கேட்டது. நீண்ட அமைதியிலிருந்த நிசப்தமான சூழலை கிழித்துக்கொண்டு வந்த திடீர் குரலால் உதறல் எடுத்தது. உடல் சிலிர்த்து கை முழுக்க பொறிப்பொறியாய் இருந்தது. அதை தடவிப்பார்த்தான். குறுகுறுப்பாய் இருந்தது. சிரித்துக்கொண்டான்.

படுக்கையறைக்குள் நுழைந்தான். புகை மண்டலமாக இருந்தது. கையில் சிகரட்டோடு ராஜன் பெட்டுக்கு அருகில் அமர்ந்திருந்தான். ராஜனுடைய காதலியை காணவில்லை. பாத்ரூமில் இருந்திருக்க வேண்டும். படுக்கைக்கு அருகில் இருந்த டேபிளில் பாதி அருந்திய ஜூஸ் இருந்தது. இட்லியும் இருந்தது. இரவு சாப்பிடததால் வலியில் பசி தெரியாமல் இருந்திருந்தான். இப்போது அதை பார்த்ததும் வயிறு பசிப்பது போல் இருந்தது. ர்ர்ர்ர் என வயிற்றுக்குள் இழுத்துப்பிடித்தது குசுபோல ஒருசப்தம் வந்து அடங்கியது.

‘’டேய் என்னடா அங்க நின்னுட்டு பராக்கு பாத்துக்கிட்டு! அந்த சட்டைய எடு’’.

ஹேங்கரில் இருந்த சட்டையை எடுத்து வந்து அவனுக்கு முன்னே நீட்டினான். அதிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டி , ‘’நம்ம குமார் கடைக்கு போய் ஒரு பாக்கட் கோஹினூர்னு கேளு தருவான் வாங்கிட்டு வா , மிச்சக்காசு இருபது ரூவா தருவான் சரியா பாத்து வாங்கிட்டு வா!’’.. ம் என்பதுபோல தலையை ஆட்டினான். பணத்தை வாங்கி தன் டவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

‘’டேய் நில்லு என்ன வாங்கிட்டு வருவ’’

‘’கோங்கினார் ஒரு பாங்க்கட்’’ , மூக்கிலேயே இவன் சொல்ல ஹோஹோஹோ என ராஜன்சார் சிரித்தான். இவனுக்கு முகத்திலேயே குத்த வேண்டும் போல் இருந்தது. ‘’கரெக்டா வாங்கிட்டுவா!’’

போகும் வழியெல்லாம் கோகினார்.. கோகினார்.. கோகினார்.. கோசிமார்.. கோஜியார்.. என சொல்லிக்கொண்டே சென்றான். இன்னொரு பாக்கெட்டிலிருந்த அழுக்குத்துணியால் மூக்கைத்துடைத்துக்கொண்டான். குமாரின் மெடிக்கல் ஷாப் வந்தது.

‘’அண்ணேங் ங்கொரு பாங்க்கட் ஙோஜியார்.. குடுங்க.. சாங் வாங்கிகினு வரசொன்னாரு’’ , முக்கு அடைப்பு விலக லேசாக வாயிலும் பேச ஆரம்பித்திருந்தான்.

‘’அதென்னடா ஙோஜியாரு.. ஏன்டா காலைல வந்து ரப்ச்சர குடுக்கற.. போடா நல்லா கேட்டுட்டு வா..’’

‘’அண்ணே திரும்பி போனா , சார் அடிப்பாருண்ணே!..’’.

‘’என்னடா மூக்காண்ட கர.. இங்க வா’’ அருகில் வந்தவன் மூக்கை அழுத்தி தேய்த்து தூக்கிப் பார்த்தான். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
பையனை உள்ளே அழைத்து சென்று அவசர அவசரமாக மருந்து போட்டு விட்டான். முட்டியில் சிராய்த்திருந்தது. டெட்டாலால் அதை சுத்தம் செய்து பஞ்சு வைத்து தேய்த்துவிட்டான்.

‘’சம்பளமே சரியவரமாட்டேனுது.. என்னால என்ன பண்ணமுடியும்.. எங்கிட்டாவது ஓடிப்போய்யிர்ரா! இவங்கிட்ட கிடந்து ஏன்டா அடிவாங்கி சாவற’’ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்.

‘’அண்ணே எங்கனே போவன். எனக்கு யாரையுமே தெரியாதுண்ணே, ஓடிப்போனா எங்கப்பா கண்டுபுடிச்சி அடிச்சு கொன்னுருவாரு, மாசமாசம் வந்து காசு வாங்கிட்டு போகுதுல்ல.. கண்டுபுடிச்சிரும்ண்ணே’’ பேசபேச சிறுவனுக்கு அழவேண்டும் போல இருந்தது.கண்ணீர் வராவிட்டாலும் கண்களை துடைத்துக்கொண்டான்..

‘’சொன்னா கேளுடா.. இங்க இருந்த அடிச்சே கொன்னுருவானுங்க’’ பேசியபடியே ஒரு சாக்லேட்டை அவனிடம் நீட்டினான்.

‘’அண்ணே அதெல்லாம் இருக்கட்டும், கோஜியூர் ஒரு பாக்கட் குடுங்கண்ணே.. லேட்டா போனா சார் அடிப்பாரு, அக்காவேற வந்திருக்கு’’

‘’ஓஹ் கோஹினூரா!..’’ புரிந்துகொண்டவனாக ஒரு பாக்கட்டை எடுத்து நீட்டினான்..

சிறுவன் ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு மீதி காசிற்காக காத்திருந்தான். ‘’ என்னடா கிளம்பு’’
, ’’இல்லண்ணே மீதி இருபது ரூவா தருவீங்க அத வாங்கிட்டு வரச்சொன்னாரு சாரு’’ ,
’’உங்க சார்கிட்ட சொல்லு சின்ன பாக்கட் இல்ல பெரிய பாக்கட்தான் இருக்காம்னு , பெரிசு அம்பது ரூவாயாம்னு சொல்லு’’

‘’அண்ணேத்தேடிப் பாருங்கண்ணே சின்னபாக்கட்டே குடுங்க.. இல்லாட்டி நான் மறந்து போய் வாங்கிட்டு வந்துட்டேனு அதுக்கும் அடிப்பாரு’’

‘’டேய் இல்லடா, இரு’’ என ஒரு பேப்பரில் ‘சிறிய பாக்கட் இல்லை, பையனிடம் பெரிய பாக்கட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக்கொள்ளவும்’ என்றெழுதி குமார் என கையொப்பமிட்டு கொடுத்தனுப்பினான். சிறிது தூரம் சென்றவனை.

வீட்டை அடைந்ததும் நேராக படுக்கையறை வாசலுக்கு சென்று தன் அரைடிரவுசர் பாக்கட்டில் கையை விட்டு கோஹினூர் பாக்கட்டை தேடினான். காணவில்லை. படுக்கை அறையின் உள்ளேயிருந்து சிரிப்புகளோடு வினோதமான ஒலிகளும் வந்து கொண்டிருந்தது. ஐய்யயோ பாக்கெட்ட காணோம் , சார்கிட்ட என்ன சொல்றது , தொலைஞ்சு போச்சுனு சொன்னா கரண்டிய சூடு பண்ணி கால்ல போட்டுருவாரே! என மனதிற்குள் பதறியபடி வந்த வழியில் மீண்டும் ஓடத்துவங்கினான். வேர்த்து வேர்த்து கொட்டியது. காலை வெயில் மெதுவாக உச்சிக்கு வந்து கொண்டிருந்தது. இதயத்துடிப்பு படபடபடபடபடவென எக்ஸ்பிரஸ் ரயில் போல அடித்துக்கொண்டிருந்தது. எங்கும் காணவில்லை. கடை வரைக்கும் வந்துவிட்டிருந்தான். கடையில் குமார் இல்லை , கடை முதலாளி அமர்ந்திருந்தான். என்ன செய்வதென்றே தெரியாமல் மீண்டும் கடையிலிருந்து வீடு வரைக்கும் வழியெல்லாம் தேடியபடியே வந்தான். கறுப்பு பாக்கட்டு , பொம்பளைங்க படம்.. கறுப்பு பாக்கட்... பொம்பளங... என நினைத்தபடியே வந்தான். இல்லை. காணவில்லை. எங்குமில்லை. கீழேயே பார்த்துக்கொண்டு வந்தவன் கண்ணில் அந்த பாதிகிழிந்த காகிதம் தென்பட்டது. அது மின்கம்பத்திற்கு கீழே கிடந்தது.

‘’குழந்தைகளே துன்புறுத்தப்படுகிறீர்களா? உதவி தேவையா? அழையுங்கள் பத்து பத்து!’’ என்று எழுதப்பட்ட காகிதமொன்று கிடந்தது. அதை ஒருமாதிரி எழுத்துக்கூட்டி படித்துவிட்டான். எடுத்து பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொண்டான். அந்த விளம்பரங்களை டீக்கடை ரேடியோவில் நிறைய முறை கேட்டிருக்கிறான். பல முறை அந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும் என நினைப்பான். ஏனோ விட்டுவிடுவான்.

ஙோஜியார் இல்லாமல் போனால் இன்றைக்கு காலில் சூடு நிச்சயம். அதற்கு பதில் அந்த எண்ணுக்கு அழைத்தால் என்ன? போன்? வீட்டில் இருக்கிறதே! ராஜன் சார் பார்த்துவிட்டால்.. அடிதான் எப்போதும் வாங்குகிறோமே.. என ஏதேதோ நினைத்த படி வீட்டிற்கு அருகில் வந்துவிட்டான். படுக்கையறையில் இருந்து இன்னமும் அந்த ஒலிகள் வந்துகொண்டிருந்தன. இவனுக்கு அந்த சப்தம் பழக்கமானதுதான்.. இது போல சத்தம் ஓய்ந்து ஐந்து நிமிடத்தில் ராஜன்சார் வெளியே வருவான் அப்போது அவனுக்கு சிகரட்டும் தீப்பெட்டியும் தரவேண்டும். யோசித்தான்.

அதற்குள் அந்த நம்பருக்கு போன் போட்டு சொல்லிவிட்டால் என்ன?. போலீஸ் வரும் ராஜன் சாரை கைது செய்யும்.. என்னை காப்பாற்றும். ஜாலிதான். சென்னைக்கு போலீஸ் விஜயகாந்த் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தான். கற்பனையிலும் விஜயகாந்த்தான் வந்திருந்தார்.

அலுவலக அறைக்குள் நுழைந்தான். அங்குதான் போன் இருந்தது.

சிறுவன் நேராக டெலிபோன் அருகில் வந்தான். இதுவரை அவன் போனை உபயோகித்ததே இல்லை. துடைப்பதோடு சரி. ராஜன் சார் அதில் பேசுவதைப் பார்த்திருக்கிறான். அருகில் சென்றவன் என்ன பேச வேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டான் ,

‘’சார் என்னை இங்கே அடிஅடினு அடிக்கிறாங்க, உடனே வாங்க சார், இல்லாட்டி என்ன அடிச்சே கொன்னுருவாங்க.. ‘’ அழ முயற்சித்து பேசிப்பார்த்தான். சரியாக வரவில்லை. மீண்டும் ஆரம்பித்தான்..

‘’சார் என் பேரு கோபி.. ஊரு அம்சாபேட்டை, இங்க அப்பா என்னை வேலைக்கு சேர்த்து விட்டாங்க , இங்க என்னை அடிக்கறாங்க.. தயவு பண்ணி வந்து காப்பாத்துங்க, ம்ம்ம்ம்..’’ அழுது பார்த்துக்கொண்டான். சரியாக வருகிறது. புலி பதுங்குவது போல பதுங்கி போனுக்கு அருகில் போய் நின்றான். அவன் பலமுறை போனை பார்த்திருக்கிறான் அதில் பத்தாம் எண் எப்போதுமே இருந்ததாக நினைவில்லை.

நம்பர்களை எண்ணத்துவங்கினான் ஒன்னு,ரெண்டு...எட்டு... ஒன்பது..ஜீரோ.. ஆமா பத்து இல்லை!. பதறிப்போனான். பத்துபத்து நம்பருக்குள்ள போன்போட சொல்லி எழுதிருந்துச்சு இங்க பத்தாம் நம்பரையே காணமே!

பக்கத்து அறையில் ராஜன் சாரின் சப்தம் மெதுவாக குறைவதைப்போல் இருந்தது. இவனுக்கு உடலெல்லாம் நடுங்கியது. நேற்று வாங்கின உதையே இன்னும் வலி தீரவில்லை. இரவில் புரண்டு படுத்து உறங்க முடியாது. சப்தம் வேறு குறைகிறது. பத்துபத்து.. என்ன செய்வது.

‘’பத்து . ஒன்னு ஜீரோ ஒன்னா போட்டா பத்து! ‘’ . ச்சே இதை எப்படி யோசிக்காம விட்டோம். என தன்ன்னை தானே கொட்டிக்கொண்டான். டக்கென ரிசீவரை எடுத்தான். 1...0...1...0 பட்டனைகளை வேகவேகமாக அழுத்தினான்.

ஒரு பெண்ணின் இனிமையான குரல்.. எதற்காகவும் காத்திருக்காமல்

‘’சார்..இல்ல இல்ல அம்மா.. இல்ல இல்ல அக்கா.. அக்கா.. என் பேரு கோபி..’’

‘’வணக்கம் குழந்தைகள் நலத்திற்கான பறவைகள் அமைப்பு உங்களை வரவேற்கிறது.. ஃப்ரீடம் பேர்ட்ஸ் வெல்கம்ஸ் யூ..’’

‘’அக்கா! அதெல்லாம் தெரியாதுக்கா! எங்க ஊரு.. இல்ல.. என்ன ரொம்ப அடிக்கிறாங்க, கொஞ்சம் வந்து காப்பாத்துங்க்கா, இல்லாட்டி என்ன அடிச்சே கொன்னுருவாங்க, இந்த ராஜன் சார் ரொம்ப மோசம்..யாரையாச்சும் உடனே அனுப்புங்கக்கா’’

‘’தமிழில் தொடர எண் ஒன்றை அழுத்தவும், ஃபார் இங்கிலீஷ் ப்ரஷ் டூ.. ஹிந்தி மே..’’

‘’அக்கா ப்ளீஸ்க்கா.. எனக்கு அதுலாம் தெரியாதுக்கா.. இங்க இங்க.. எனக்கு கால்ல சூடு போடப்போறாங்கக்கா காப்பாத்துங்க , நேத்துகூட ராஜன் சார் என்னை போட்டு மிதிமிதினு மிதிச்சிட்டாரு.. நைட்லருந்து ஒன்னுமே சாப்பட்லை.. எனக்கு கால்லாம் வலிக்குதுக்கா.. எங்க அப்பாட்ட சொன்னா அவரும் அடிக்கறாருக்கா..’’ என போனை கெட்டியாக காதோடு அணைத்துக்கொண்டு தேம்பிதேம்பி அழுதபடியே பேசினான்.

‘’ தமிழில் தொடர எண் ஒன்றை... ..’’ விடாமல் சொன்னதையே திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது எந்திரக்குரல்.. ‘’அக்கா அக்கா.. உடனே வாங்கக்கா.. ப்ளீஸ்க்கா’’ என போனை அணைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தவன் அருகில் கால்தட சப்தம் கேட்டு தானாகவே அவன் கையிலிருந்து ஃபோன் கைநழுவி விழுந்தது.

‘’அக்கா’’

ராஜன்சாரின் காதலி அவனுக்கு பின்னால் கையைக்கட்டி நின்றபடி.. அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

அவனிடமிருந்து ரிசீவரை பிடிங்கி தன் காதில் வைத்து கேட்டாள் எதிர்முனையில்.. அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அவளையே கண்களில் நீரை தேக்கிவைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் பாஸ்கர். இருவரும் மௌனமாய் நின்று கொண்டிருக்க ராஜன் தன் லுங்கியை இறுக்கிக் கட்டியபடியே உள்ளே நுழைந்தான்.

வாசலில் காலிங் பெல் சப்தம் கேட்டது. டிங் டாங்... கோபி தன்னை காப்பற்ற யாரோ வந்துவிட்டனர் என்று ராஜன் சாரைப்பார்த்துப் புன்னகைத்தான்.

_____

*- கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனமும் எண்ணும் நிகழ்வுகளும் கற்பனையே!

(சென்ற ஆண்டு பிப்ரவரியில் எழுதியது)