22 April 2011

பறவைகள் வசித்த மொட்டைமாடி
பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும் கொஞ்சமாக தானியம் கொடுப்பதும் ஒரு குற்றமா? அதைப்போய் யாராச்சும் தடுத்து நிறுத்துவதும்தான் இந்த உலகத்தில் நடுக்குமா?

இந்த கோடையில் வெயிலில் வாடும் சிறிய பறவைகளுக்கும் அதன் குஞ்சுகளுக்கும் தண்ணீர் வைங்க.. சுற்றுசூழலை காத்திடுங்க என்று முறையே [சில மின்னஞ்சலும் பல குறுஞ்செய்தியும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த செய்திகளில் இருந்த ஒரு நேர்மையும் எளிமையும் என்னை வெகுவாக கவர்ந்தன. இயற்கையிடமிருந்து எல்லாவற்றையுமே சுரண்டிவிட்ட இந்த மனிதகுலமாகப்பட்டது அவ்வியற்கைக்கு எதையுமே திருப்பி கொடுப்பதில்லையே! என்று அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறேனே!

இந்த இயற்கையை சுரண்டி தின்னும் நானும் கூட எதையுமே செய்ததில்லை. அப்படி ‘’ஏதாவது செய்யணும் பாஸ்’’ என தோன்றினாலும் நம்முடைய மாத சம்பள வீட்டு வாடகை கடன்கார எட்டுமணிநேர டியூட்டி பார்க்கிற பொருளாதார சமூக கட்டமைப்பு அதை அனுமதிப்பதில்லை. ஆனால் பறவைக்கு தண்ணீர் வைப்பதென்பது மிகவும் எளிதானதும் , அதிக செலவு வைக்காத ஒன்றாகவும் இருந்தது பிடித்திருந்தது. பத்துகாசு செலவழிக்காமல் வாசலைவிட்டு இறங்காமல் செய்யக்கூடிய பயனுள்ள சமூகசேவை திட்டம்.

அதிலும் தனிமையில் பேசுவதற்கு கூட ஆளின்றி மொட்டைமாடியில்  அதிக நேரம் நின்றபடி வெறுமையில் பொழுது போக்கும் எனக்கு வானில் பறக்கும் பறவைகள் தரையிறங்கி என் மொட்டைமாடியில் நீர் குடித்து இளைபாறி என்னை பார்த்து சிரித்துவிட்டு சென்றால் இனிக்காதா என்ன!

இதனை நிறைவேற்றும் வகையில் எங்கள் வீட்டு மொட்டைமாடியில் ஒரு சிறிய அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரும் இன்னொரு கிண்ணியில் கொஞ்சம் தானியங்களும் வைக்க தொடங்கினேன். முதலிரண்டு நாட்கள் பறவைகளிடமிருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. ஒரு பறவையும் வருவதில்லை. ஆனால் தண்ணியும் தானியமும் மட்டும் மிஸ்ஸிங்! அம்மாவிடம் கேட்டபோது நான்தான்டா தண்ணிய கீழ ஊத்திட்டு தானியத்த வீட்டுக்குள்ள வச்சேன் என்று அதிர்ச்சியூட்டினார். என்னம்மா நீ! பாவம்மா அந்த பறவைங்க என்று பொறுமையாக ஆரம்பித்து கச்சா முச்சா வென சண்டைபோட்டு அம்மாவிடம் அனுமதி வாங்கி பறவைக்கு தண்ணீர் வைக்க தொடங்கினேன். இம்முறை வைத்தது வைத்தபடியே இருந்தது.

எனக்கு கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தாலும்.. ஒரு காக்காவுக்கு கூடவா இந்த தண்ணிய குடிக்கணும்னு தோணலை , ஒருவேளை நான் பாவம் பண்ணிட்டேனோ, நிறைய நான்வெஜ் சாப்பிட்டதால் இருக்கலாம் என்றெல்லாம் நினைத்தேன்.

யாருமே வராத கடையிலும் டீ ஆத்தியே தீருவேன் என அடம்பிடித்து வைத்த தண்ணீருக்கும் தானியத்திற்கும் முதல் வாரம் முடிந்தபின்தான் நல்ல ரெஸ்பான்ஸ். அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் சில காக்கைகள் வரத்தொடங்கின. நாட்கள் செல்ல குருவிகள் எங்கிருந்தோ வந்தன. அதற்குமடுத்த சில நாட்களில் கிளிகள்.. பின் மைனா.. புறா.. அடடா.. சின்ன வேடந்தாங்கலாக மாறிப்போயிருந்தது எங்கள் வீட்டு மொட்டைமாடி! ‘ஏய் நம்ம மொட்டைமண்டையன் வீட்டு மொட்டைமாடில பாருங்கடி எவ்ளோ பேர்ட்ஸ்’ என்று அருகாமை வீட்டு இளம் பெண்களும் ஆன்ட்டிகளும் ஆயாக்களும் குழந்தைகளும் ஆர்வத்தோடு பார்க்கத்தொடங்கினர். என்னோடு பேசத்தொடங்கினர். எல்லோர் வீடுகளிலும் தண்ணீர் வைக்கவும் தொடங்கினர்.

சில பறவைகள் எங்காவது சுற்றித்திரிந்து இரவுகளில் மொட்டைமாடிக்கு திரும்பி அங்கேயே வசிக்கவும் தொடங்கின. இரவெல்லாம் மொட்டைமாடியிலேயே அந்தபறவைகளோடு பேசிக்கொண்டிருப்பேன். அவையும் என்னோடு பேசத்தொடங்கின. ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு குணமும் கதையும் இருந்தன. வீட்டில் இருப்பதைவிட மொட்டைமாடியில் இருப்பதையே விரும்பினேன். அவை என் மடியில் அமர்ந்து விளையாடத்தொடங்கின... அம்மாவைக்காட்டிலும் அவை என் மீது அதிக அன்பு வைத்திருப்பதை உணர்ந்தேன்.

இப்படி போய்க்கொண்டிருந்த என்னுடைய சுற்றுசூழல் மேம்பாட்டு புரட்சிக்கு ஒரு தடைக்கல்லாக வில்லனாக என் அம்மாவே மீண்டும் மீண்டும் வருவார் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை. மென்மையான இதயங்கொண்டவர் அம்மா.. அப்பாவே இல்லாமல் போராடி என்னை வளர்த்தவர். 18 ஆண்டுகளாக தனிமையில் வாழ்பவர். குழந்தைகளிடம் அவ்வளவு அன்பாக பழகுபவர். கரப்பான் பூச்சியை கூட கொல்லாமல் வெளியே கொண்டு போய் போட்டுவிடுகிற சாது! அப்படிப்பட்டவரா இதை தடுக்கவேண்டும்.

அறிவுகெட்டவனே மொட்டைமாடில போய் யாராச்சும் தானியங்களை போடுவாங்களா.. அறிவில்ல உனக்கு என்று எங்கள் இருவரிடையேயான அதிபயங்கர சுற்றுசூழல் போர் மூண்டது. அதனால உனக்கென்ன மொட்டைமாடி சும்மாதானே இருக்கு , நான் என்னமோ பண்ணிட்டு போறனே! உன் வேலைய பாரும்மா என்றேன். அதோடு விடாமல் அம்மாவுக்கு பறவைகளுக்கு ஏன் தண்ணீர் வைக்கவேண்டும் என்பதன் காரணங்களை அடுக்கத்தொடங்கினேன்.

நாம சிட்டில இருக்கோம்.. இங்கே நிறைய பில்டிங்ஸ் ஆகிருச்சு. மரங்களை வெட்டிட்டோம். குருவிங்க கூட அழிஞ்சிருச்சுனு பேப்பர்ல போட்டிருக்கான் நகரத்தில் இருந்த நல்ல தண்ணீர் ஆதாரங்களை அழிச்சிட்டோம். கோடைவெயிலில் நமக்கே நாவறண்டு கண்ணை கட்டி டீஹைட்ரேட் ஆகிடுது.. அதுங்க பாவம் வெயிலில் பறந்துட்டே இருக்கே அதுக்கு எப்படி இருக்கும். அதனால இதுமாதிரி சின்னதா உதவி பண்ணினா அதுங்க மனசார நம்ம வாழ்த்தும்ல , பாவம்மா குட்டி பறவைங்க.. பாருங்க எவ்ளோ அழகா இருக்கு அதுங்க என அம்மாவுக்கு பறவைகளை காட்டினேன். அம்மா பறவைகளை பார்ப்பதோடு சுற்றிலும் என்னையும் பறவைகளையும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் பார்த்தார். முகம் சிடுசிடுவென ஆகி..

‘’அதுலாம் சரியா வராதுடா, யோசிச்சி பாரு நாம இருக்கறதே குருவிக்கூடு மாதிரி ஒரு சின்ன வீட்டுல.. இங்கே துணி துவைச்சு காயப்போடறது தொடங்கி, வத்தல் வடாம், கோதுமை, அரிசினு எது காயப்போடறதா இருந்தாலும் நமக்கு இருக்கறதே ஒரே ஒரு மொட்டைமாடிதான். அங்கே நீ இப்ப தண்ணி வச்சி தானியம் போட்டு அதுங்களை பழக்கிடுவ.. அதுங்களும் நல்லா தின்னு தின்னு பழகிடும். ஆனா வெயில்காலம் முடிஞ்சதும் நிறுத்திடுவ.. அந்த நேரத்துல நான் கோதுமைய காயப்போட்டா என்னாவும்.. இப்பயே பகல்ல துணிய காயப்போட்ட துணியெல்லாம் ஆய்ப்போய்டுதுங்க.. இரண்டு வாட்டி துவைக்க வேண்டியிருக்கு , நீ பெரிய புரட்சிக்காரன் உன் பாட்டுக்கு காலைல புரட்சி பண்ணிட்டு மயிரா போச்சினு ஆபீஸ் போய்டுவே இங்கே வீட்டுல இருக்கறவ எனக்குதானே தெரியும்.. அதோட பிரச்சனை’’ என்றாள்.

‘’இல்லமா நான் எப்பயுமே அதுக்கு தண்ணி வைக்கிறேன்’’ என்றேன். அம்மா விடாப்பிடியாக இருந்தாள். அம்மா சொன்னதில் நியாயமான காரணங்கள் இருந்தன. என்னுடைய புரட்சிவெறி இவ்வளவு எளிதில் நீர்த்துப்போய் புஸ்வானமாகும் என நினைத்தே பார்க்கவில்லை.

அதிலிருந்து தண்ணீர் வைப்பதும் தானியம் வைப்பதும் நிறுத்தப்பட்டது. பறவைகள் சில நாட்கள் தண்ணீர் தேடி மொட்டைமாடிக்கு வருவதும். பின் வாடிப்போய் திரும்பிச்செல்வதும் தொடர்ந்தது. மனசு கஷ்டப்பட்டாலும் என்ன செய்ய அம்மா சொல்லிட்டாங்களே! அதையும் மீறி தண்ணி வச்சா ம்ஹும் நான் வெளியே கிளம்பினதும் அதை கீழே ஊத்திடுவாங்க.

கொஞ்ச நாட்களில் பறவைகள் வருவது முழுவதுமாக நின்றுபோனது. அவை வந்தாலும் அம்மா நிச்சயம் விரட்டியடித்திருக்கலாம். மொட்டைமாடி காலியாய் கிடக்கிறது. எனக்காக அம்மா மொட்டைமாடியை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்து வைத்திருக்கிறாள். எப்போதும்போல இப்போது அம்மா மொட்டைமாடியில் துணிகளை கோதுமைகளை தானியங்களை மகிழ்ச்சியோடு காயப்போட ஆரம்பித்திருக்கிறாள். காக்கைகளைகூட தடி வைத்து விரட்டிக் கொண்டிருக்கிறாள்! நானும் விரட்டுகிறேன். என்ன இருந்தாலும் பறவைகளை விட அம்மாதானே முக்கியம்.

23 comments:

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நானும் அப்படிப்பட்ட குறுஞ்செய்திகளைப் படித்திருக்கின்றேன்.வழக்கம் போல பார்வேர்ட் செய்துவிட்டு அமைதியாகவே இருந்திருக்கின்றேன்.யோசிக்கலாம்...ஆனாலும் யதார்த்தம் வேறு..மிக யதார்த்தமான பதிவு..ஆனாலும் இது மாதிரி புரட்சி ன்னு சொன்னா அடி தான் விழும்.அதுவே யாராவது ஜோதிடனை வைத்து இப்படி செய்தால் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.அல்லது ஏதேனும் ஒரு கஷ்டத்திற்கு இது பரிகாரம் என்றால் கண்டிப்பாக செய்பவர்கள் அம்மா வாகத்தான் இருக்கும்.எங்க வீட்டில் சனிக்கிழமை காக்காவிற்கு சோறு வைக்கின்றோமே அது போல

Balaji said...

பிரமாதம்

Balaji said...

பிரமாதம்

Unknown said...

வருடங்களா உங்க பதிவுகள் படித்தாலும், இதுவே முதல் பின்னூட்டம்னு நினைக்கிறேன். ஆஆஹா, பெண்களையும் பின்னூட்டம் எழுத வைத்து விட்டீர்களே ;-)))

[எனிவே], //என்ன இருந்தாலும் பறவைகளை விட அம்மாதானே முக்கியம்.// இதுக்காகத் தான் வந்தேன். நான் ஒரு அம்மாக் கோண்டு என்பதால். அம்மா தான் முக்கியம். அதுவும் 18 வருடம் உங்களுக்காக வாழும் அம்மா தான் முக்கியம். இந்தப் பதிவு எழுதியதற்காக, அம்மாவை அலாக்காகத் தூக்கி இரண்டு முறை சுற்றி, கீழே விடவும். அம்மாவை அனாவசியமாக தாஜா செய்து கொள்ளவும். போனால் வராது.

துணி / தானியம் காயப் போடும் இடத்தில் வலை போட்டு தடுக்க முடியுமா? பறவைகளுக்கு வலை அல்லாத இடம் கொடுக்கலாமே? பறவைகளுக்கு நாம் தேவை/முக்கியம்... அதனால் கேட்கிறேன்.

Unknown said...

Ooooh, sorry - no need to publish this one, For email follow-up.

இராஜராஜேஸ்வரி said...

யாருமே வராத கடையிலும் டீ ஆத்தியே தீருவேன் என அடம்பிடித்து வைத்த தண்ணீருக்கும் தானியத்திற்கும் முதல் வாரம் முடிந்தபின்தான் நல்ல ரெஸ்பான்ஸ். //
மிக யதார்த்தமான பதிவு..

Nathan said...

மிகவும் மென்மையான ஒரு விஷயம்... எனது 4+ வயது பெண் பிள்ளைக்கு இதை சொல்லி கொடுக்க அவளும் அதை சிற மேற்கொண்டு செய்ய ... எனக்கும் என் மனைவிக்கும் இதே பிரச்னை..... வெகு விரைவில் இந்த வழக்கம் மூட்டை கட்ட பட்டது.... எத்தனை இழக்கிறோம் நாம் நமக்காக.... மனசு கனக்கிறது.... பாரதி எப்படித்தான் சமாளிச்சானோ

sriram said...

வினோத்..
நான் தில்லியில் வசித்த போது தினமும் பால்கனியில் புறாக்களுக்கு (சில காகங்களும் வரும்) தினமும் தண்ணியும் தானியமும் வைப்பது வழக்கம்.

சாப்பிட்டுவிட்டு & குடித்து விட்டு புறாக்கள் செய்த அட்டகாசம் சொல்லி மாளாது, முழு பால்கனியையும் அசுத்தம் செய்து வைக்கும். நானும் வீட்டில் வேலை செய்த பெண்மணியும் அலுக்காது நாளும் சுத்தம் செய்தாலும், உணவும் நீரும் வைக்கத் தவறியதேயில்லை. காலை 7.30 மணிக்கு எங்க வீட்டு பால்கனி முழுக்க புறாக்களின் ஆக்கிரமிப்பா இருக்கும். பாக்கவே ரம்யமா இருக்கும்.

ஒரு சிலமாதங்கள் தங்கிச் செல்ல வந்த அம்மா முதலிம் முகம் சுளித்தாலும் பின்னர் ஏற்றுக் கொண்டு அவரும் சுத்தம் செய்தார்..

அது ஒரு கனாக் காலம்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Radha N said...

உங்க அம்மா சொல்வது நியாயமாகப் பட்டாலும், நிகழ்வு மனதை வாட்டுகிறது. சரியாகச் சொலவெதென்றால் சரியாக ஆறு வருடங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டு முற்றத்தில் நானும் எனது அம்மா மற்றும் எங்கள் வீட்டில் எல்லோரும் நொய்யினை (அரிசி நொய்) தூவுவோம். அப்பொழுதெல்லாம் சிட்டுக்குருவிகள் வந்து சாப்பிட்டு செல்லும். அடிப்பம்ப்பில் தண்ணீர் அடித்தபின்பு சிந்தி கிடக்கும் தண்ணீரை சிட்டுக்குருவிகள் அருந்தி விட்டு, சந்தோசமான தருணங்களில் எல்லாம் அவை குளித்து விளையாடும் அழகே தனி தாங்க. கூடவே அணிலும் வந்து சாப்பிட்டு செல்லும். சில​​வேளைகளி​ல் நாங்கள் சாப்பிட்டு மீதமான பழங்கள் போடும் போது அணில் சாப்பிடுவதை பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். தன் இரண்டு கைகளால் வாகாகப் பிடித்து அதை உண்ணும் போது பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும். ஆனா இப்பொழு​தெல்லாம் காகங்கள் மட்டுமே வந்து செல்கின்றன. அணிலையும் அதிகம் பார்க்கக​ முடிவதில்லை. சிட்டுக்குருவிகள் கண்ணில் படுவதே கிடையாது.

மீண்டும் அம்மாவை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

Radha N said...

உங்க அம்மா சொல்வது நியாயமாகப் பட்டாலும், நிகழ்வு மனதை வாட்டுகிறது. சரியாகச் சொலவெதென்றால் சரியாக ஆறு வருடங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டு முற்றத்தில் நானும் எனது அம்மா மற்றும் எங்கள் வீட்டில் எல்லோரும் நொய்யினை (அரிசி நொய்) தூவுவோம். அப்பொழுதெல்லாம் சிட்டுக்குருவிகள் வந்து சாப்பிட்டு செல்லும். அடிப்பம்ப்பில் தண்ணீர் அடித்தபின்பு சிந்தி கிடக்கும் தண்ணீரை சிட்டுக்குருவிகள் அருந்தி விட்டு, சந்தோசமான தருணங்களில் எல்லாம் அவை குளித்து விளையாடும் அழகே தனி தாங்க. கூடவே அணிலும் வந்து சாப்பிட்டு செல்லும். சில​​வேளைகளி​ல் நாங்கள் சாப்பிட்டு மீதமான பழங்கள் போடும் போது அணில் சாப்பிடுவதை பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். தன் இரண்டு கைகளால் வாகாகப் பிடித்து அதை உண்ணும் போது பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும். ஆனா இப்பொழு​தெல்லாம் காகங்கள் மட்டுமே வந்து செல்கின்றன. அணிலையும் அதிகம் பார்க்கக​ முடிவதில்லை. சிட்டுக்குருவிகள் கண்ணில் படுவதே கிடையாது.

மீண்டும் அம்மாவை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

King Viswa said...

தல,
என்னைப்போலவே ரொம்பவும் இளகிய மனது உங்களுடையது.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு அதிஷா.
சிவகாசியில் எங்களது உறவினர் வீட்டில் தினந்தோறும் தண்ணீரும் தானியங்களும் வைக்கிறார்கள். காக்கை, மைனா, குருவிகள், அணில்கள் தொடர்ந்து வருகின்றன. மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் அதிஷா.

vinthaimanithan said...

எப்பவும்போல கலக்கி இருக்கிறீரய்யா!

Raashid Ahamed said...

”மொட்டை மண்டையன் வீட்டு மொட்டை மாடி “ இப்படி வெளிப்படையா சொல்ற உங்க நேர்மை எனக்கு ரொம்ம பிடிச்சிருக்கு. பறவைகளுக்கு உணவளிக்கும் உங்க மனித நேயம்- சாரி பறவை நேயம் எனக்கு ரொம்ம பிடிச்சிருக்கு. ஒரு தத்துவம் சொல்லட்டுமா ? ஒரு நல்ல காரியம் செய்யணும்னு நினைச்சாலே கடவுள் அதை நல்லது செஞ்ச கணக்கில் எழுதிடுறார். ஆனா கெட்ட காரியம் செஞ்சி முடிக்கிறவரைக்கும் வெயிட் பண்ணுவார் என்னா கடைசிலயாவது செய்யாம மனசு திருந்திருவானான்னு. அதனால நீங்க செய்ய நினைச்ச நல்ல காரியத்துக்கு கடவுள் நல்லதை குடுக்கட்டும்

சி.பி.செந்தில்குமார் said...

நாளை வெளிவரப்போகும் தினகரன் வசந்தம் இதழில் பயோடேட்டா என்ற உங்கள் கதை வெளிவர இருக்கிறது வாழ்த்துக்கள் சார்..

ஷர்புதீன் said...

உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!

:)

மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

Itsdifferent said...

வருத்தமான விஷயம்.
இன்னும் எங்கள் வீட்டு வாசலில், நிறைய குருவிகள்.
குப்பை மற்று ஆய் எல்லாம் உண்டு, ஆனாலும் நாங்கள் சுத்தம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
அந்த சின்னஞ்சுறு குருவிகளை மணிகணக்கில் நின்று பார்த்து கொண்டிருப்பதில் ஒரு சுகம்.
ps: We live in the US, so space or elders not an issue.Just stating.

Giri Ramasubramanian said...

படிச்சிட்டு அழிச்ச எஸ்.எம்.எஸ். செய்திகள் நினைவுக்கு வருகின்றன.

//நானும் விரட்டுகிறேன். என்ன இருந்தாலும் பறவைகளை விட அம்மாதானே முக்கியம்.//

நீங்க ஏதும் இங்கே அரசியல் பேசலையே? எனக்கு என்னவோ இது அரசியல் பதிவாட்டம் தோணுது!

Unknown said...

யதார்த்தமான,ஃபீல் குட் பதிவு...

இது போன்ற யோசிப்புகள் வருவதற்கு மத்தியிலா பிட்டுப் படங்கள் பற்றிய ஆராய்ச்சி எல்லாம் நடக்கிறது ?!

:))

Tamil Movies said...

நல்ல பதிவு நன்றி :)

Unknown said...

அருமையான பதிவு..
யதார்த்தமான நடை... அம்மாவை சமாதானப்படுத்தி உங்கள் சேவையை தொடர முயற்சி செய்யுங்களேன்.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com///

வலைச்சரத்தில் தங்களைக் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்து பார்த்து தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும். நன்றி.

கவி அழகன் said...

படித்தேன் ரசித்தேன்