25 April 2011

என் பெயர் லிங்கம்பெயர் – பத்திரிகைகளில் படித்திருப்பீர்களே? டிவியில் பார்த்திருப்பீர்களே! நிஜம்,குற்றம்..உண்மை உறங்காது என ஏதேதோ நிகழ்ச்சிகளில்.. லிங்கம் லிங்கம் லிங்கம்னு அலறினாங்களே! லிங்கம்தான் என் பெயர். எங்கம்மாவுடைய அப்பா பெயர்! அம்மா ஆசை ஆசையாக வைத்த பெயர்.

முகவரி – இப்போதைக்கு புழல் சிறையில் அறை எண் 209. தண்டனை நிறைவேற்றப்பட்டால் சுடுகாடுதான் எந்த சுடுகாடென்பது இன்னும் முடிவாகவில்லை.

வயது – வருகிற மே மாதம் வந்தால் வெற்றிகரமாக 30ஐ கடந்துவிடுவேன்.

பாலினம் – ஆண்

திருமணமாகிவிட்டதா? – ஆம் , ஒரே ஒரு முறை. அவளால்தான் இன்று இந்த சிறைச்சாலையில்..

பிறந்த தேதி – மே மாதம் முதல் நாள். நான் பிறந்த அதே நாளில்தான் அப்பாவும் இறந்தார்.

இறந்த தேதி – ஜனாதிபதியிடம் அப்பீல் செய்திருக்கிறாள் மனைவி. அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறேன். அவர் மறுத்துவிட்டால் இந்த ஆண்டு மே இரண்டாம்தேதி இறந்துவிடுவேன்.

படிப்பு – எம்எஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ், ஆரக்கிள் புரோகிராமிங், சிஆர்எம்,மைக்ரோசாஃப்ட் சர்ட்டிபிகேஷன் என எல்லாமே அம்மாவின் உழைப்பில்தான். பாவம் அம்மா கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்தாள்.

தொழில் – மென்பொருள் நிபுணர், அதாவது சாஃப்ட்வேர் இன்ஜினியர். அதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும்தான். இப்போதைக்கு சிறைச்சாலையில் தோட்ட வேலை,மரவேலை,சோப்பு தயாரித்தல்.

அனுபவம் – சில ஆண்டுகள் நிறைய நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறேன். நைட் ஷிஃப்டில் மாட்டைப்போல வேலை பார்த்தாலும் கொஞ்சம் கூட மதிக்காத எத்தனையோ டீம் லீடர்களையும், மேனேஜர்களையும் சிஇஓக்களையும் கழுத்தை அறுத்து, நெஞ்சில் மிதித்தே கொல்ல நினைத்ததுண்டு. ஆனால் ஒரே ஒரு கொலைதான் செய்திருக்கிறேன்.

செய்த குற்றம் – அதை குற்றம்னு சொல்ல முடியாது. அன்னைக்கும் எனக்கு எப்பயும் போல நைட் ஷிப்ட்தான். புராஜக்ட்டை முடிக்க முடியாமல் இரவெல்லாம் ஒரு டீ கூட குடிக்காமல் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பினேன். அந்த டீம் லீடர் என்னை அப்படி திட்டியிருக்க வேண்டாம். எரிச்சலின் உச்சத்தில் இருந்தேன். மனைவியை காணோம். அம்மா மட்டும்தான். இட்லி சமைத்திருந்தாள். வாயில் வைத்தால் உப்பே இல்லை.. என்ன கருமத்தை சமைக்கிற.. என்று எரிச்சலோடு அவள் மீது டேபிளில் எனக்கு பக்கத்தில் இருந்த எதையோ தூக்கி எறிந்தேன். அது கத்தி. தூக்க கலக்கத்தில் கவனிக்கவில்லை. இதயத்தில் பாய்ந்தது. மிகச்சரியாக இதயத்தில் குத்தியிருந்தது. ஓடிப்போய் அம்மா அம்மா என கத்தியை எடுக்க முயன்றேன். அது வரவில்லை. கத்தியை ஆட்டி ஆட்டி வெளியே எடுப்பதற்குள் அவள் இறந்துபோயிருந்தாள். அதை அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த என் மனைவி பார்த்துவிட கொலை கொலை என கத்தி ஊரைக்கூட்ட நான் இப்போது இங்கே!

தண்டனை - தூக்காம்.

பொழுதுபோக்கு – இப்போதைக்கு பக்கத்து செல்லில் இருக்கும் மணியோடு அம்மா பற்றி பேசுவது, (அவனுக்கு அது பிடிக்காதென்பதும் எனக்கு தெரியும், இருந்தாலும் நான் பேசுவேன் அவன் கேட்பான்) சுவற்றில் அம்மாவின் பெயரை கரிக்கட்டையால் ராமஜெயம்போல கிறுக்குவது. ஜெயில் சுவற்றில் அம்மாவை போல படம் வரைவது. அம்மாவை மட்டுமே நினைத்துக்கொண்டு என் சிறை அறைக்கு வெளியே இருக்கும் மரத்தை பார்த்துக் கொண்டிருப்பது. மேலே சொன்னதெல்லாம் பொழுதுபோக்கா தண்டனையா என யோசித்துக்கொண்டிருப்பது. சீக்கிரமே மே இரண்டாம் தேதி வந்துவிட்டால் நல்லது என சதா நினைத்துக்கொண்டிருப்பது.

(நன்றி - தினகரன் வசந்தம் - 24-4-2011)

13 comments:

Manion said...

சினம் அடக்க வேண்டும்!

பெம்மு குட்டி said...

I Like this Ahisha................ Not a "Pittu Padangal.....Athisha"

இராஜராஜேஸ்வரி said...

தாயைக் கொன்று அநாதையானவுன்.
வாழ்வைத்தொலைத்தவன்.

வேதாளம் said...

படிக்கையிலேயே மனம் கனக்கிறது, வலி நிறைந்த வார்த்தைகள். ஒரு நல்ல பதிவு.. நன்றி

ஷர்புதீன் said...

ada!

ஆகாயமனிதன்.. said...

மென்பொருள் (கம்யூட்டர்) கடினபொருள் (கத்தி)
- lot of engineers are like psycos ?

ஆகாயமனிதன்.. said...

twitterla sonna antha katturai kathai ithuthaane ATHISA ?

ஈரோடு கதிர் said...

really nice!

Bala said...

மிக உருக்கமான செய்தி!
அவர் சிறையிலிருந்து மீண்டு வெளியே வந்தாலும் அம்மாவின் நினைவுகளே அவரை கொன்று தின்று விடும்! இப்படி ஒரு கஷ்டம் அந்த மனிதனுக்கு வந்தது துரதிஷ்டம்!

raashidsite said...

எந்த மனிதனுக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது. கோபத்தை அம்மா மேல் காண்பிப்பவனைப்போல் ஒரு மூடன் யாருமில்லை. பூவை எறிந்து அர்ச்சிக்க வேண்டிய அம்மாவை கையில் கிடைப்பதை எறிந்து தாக்குபவன் அரக்கன். கடவுளே இது கதையாக மட்டும் இருக்க வேண்டும், எங்காவது நடந்ததாக நடக்கப்போவதாக இருக்க கூடாது.

செ.சரவணக்குமார் said...

good one boss..

samkrish said...

sorry for his present condition. Who is to be blamed? only god knows.

samkrish
from chennai

கும்க்கி said...

இது விபத்தாகத்தான் படுகிறது...

பாவம் அந்த மனிதன்...தெரியாமல் செய்திருந்தால்.