30 April 2011

விலைமதிப்பில்லாத புன்னகை
அவசரமாக பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போதுதான், திடீரென செல்போனில் அந்த அழைப்பு வரும். வண்டியை ஒரங்கட்டி நிறுத்தி போனை எடுத்தால்.. இனிமை மாதிரியான குரலில் எச்சூஸ்மீ சார் நாங்க ப்ளாப்ளா பாங்கல்ருந்து பேசறோம், ஒரு அருமையான இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் இருக்கு அதை பத்தி ஃபைவ் மினிட்ஸ் பேசட்டுமா என ஆரம்பிப்பார். நமக்கு வருகிற வெறியில் கைக்கெட்டும் தூரத்தில் டிராபிக்கை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கும் கான்ஸ்டபிளை தூக்கி போட்டு நாலு சாத்து சாத்தவேண்டும் போல இருக்கும். இது கடந்த பத்தாண்டுகளாக பல்கி பெருகி வளர்ந்து கிளைகள் பரப்பி சிறிய நகரங்களில் கூட ஒரு நாளைக்கு இதுமாதிரி பத்து போனாவது வரவில்லையென்றால்தான் ஆச்சர்யம்தான்.

முன்னெல்லாம் வெறும் கிரெடிட் கார்ட் அல்லது பர்சனல் லோன் கார் லோன் இன்சூரன்ஸ் மாதிரியான விஷயங்களுக்கு மட்டுமே போன் போட்டு மார்க்கெட்டிங் செய்தவர்கள், இப்போதெல்லாம் ‘சார் சென்னைக்கு பக்கத்துல செங்கல்பட்டு தாண்டி நாப்பது கிலோமீட்டர்ல சூப்பரான நிலம் இருக்கு, ரேட் ரொம்பக்கம்மி’ என கூவி கூவி விற்கின்றனர். நாங்க ப்ளாப்ளா டிரஸ்ட்லருந்து பேசறோம் குழந்தைகள் படிப்புக்கு உதவுங்க சார் என்று டொனேஷன் கேட்கின்றனர். ஏதாவது ஒரு மேட்ரிமோனியிலிருந்து அழைத்து உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்கிற அழைப்புகளும் உண்டு. இவர்களுக்காகவாவது இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

இந்த பெண்கள் மேல் எனக்கு ஆறேழு ஆண்டுகளுக்கு முன் கடும் கோபம் இருந்தது. மார்க்கெட்டிங்கில் பணியாற்றியவன் என்பதால் ஒரு விற்பனையாளன் தன் வாடிக்கையாளரை போனில் அழைத்து பேசும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும், அதன் படிநிலையென்ன என்பதையே ஒரு நாள் முழுக்க ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு கற்றுகொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த பெண்களுக்கு அந்த அடிப்படை எதுவுமே தெரியாமல் சுடுகாட்டில் இருந்தாலும் போன் போட்டு நம்நிலை அறியாது கடகடவென பேசி டெலிமார்க்கெட் பண்ணுவது நாராசமானது.

ஒரு நாள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பியது போன். எடுத்து பேசினேன். நிஜமாகவே அழகான குரலொன்று பேசியது. சிட்டி பேங்கிலிருந்து பேசுவதாகவும் உங்களுக்கு கிரடிட் கார்டு வேண்டுமா என்றும் கேட்டது. தூக்கம் போச்சே என்கிற கோபமிருந்தாலும் போனை எடுத்ததும் பதட்டமான குரலில் நல்ல வேளை போன் பண்ணீங்க.. இல்லாட்டி செத்தே போயிருப்பேன்.. இப்பதான் கடன் தொல்லை தாங்க முடியாம சாகலாம்னு தூக்குல தொங்க போனேன்.. என்று நான் பேச, அந்த பெண் கிக்கீகிக்கீ யென சிரிக்கத்தொடங்கிவிட்டாள்! அவளுக்கு நான் நக்கலடிப்பது எப்படி புரிந்தது என்பது இன்றும் தெரியாத ஒன்று. அந்த சிரிப்பு வசீகரித்தது. அந்த பெண் போனை வைத்துவிட்டாள். இருந்தாலும் அந்த சிரிப்பு புதுமையாக இருந்தது. மார்க்கெட்டிங்கில் இது போல நக்கலடிக்கும் ஜோக்கடிக்கும் வாடிக்கையாளரிடம் அதிகமாக சிரிக்க மாட்டேன்! அது டீலிங்கை கெடுத்துவிடும் , பேமண்ட்டில் விளையாடும் என்பார் முன்னாள் மேனேஜர்.

தொடர்ந்து இது போல வருகிற கால்களுக்கு விதவிதமாக பதில் சொல்லத்தொடங்கினேன். ‘’என்னது சிட்டிபேங்க்லருந்தா கூப்பிடறீங்க.. நான்தான்ம்மா சிட்டிபேங்க் ரிஜனல் மேனேஜர்’’ என்பேன். ‘’ஆமா வினோத்தான் பேசறேன்.. ஆனா நான் செத்துப்போயி நாலு வருஷமாச்சு.. இப்போ ஆவியா சுத்திகிட்டு இருக்கேன், என்ன வேணும் சொல்லுங்க’’ என்பேன். அப்போது தனிமையில் சிறிய அறையில் வசித்த என்னுடைய மொக்கை ஜோக்குகளுக்கும் சிரித்து மகிழ ஆளிருக்கே என நினைப்பேன். சில பெண்கள் நண்பர்களை போல பழகவும் தொடங்கினர். அவர்களோடு நிறைய உரையாடுவேன். அவர்களுடைய அலுவலகத்திற்கே சென்று சந்திப்பேன். அந்த சமயத்தில்தான் இந்த பெண்கள் படும்பாடு புரியத்தொடங்கியது.

நமக்கு வருகிற இந்த மார்க்கெட்டிங் அழைப்புகள் ஏதோ மிகப்பெரிய கால்சென்டரிலிருந்தோ மெத்தப்படித்த பெண்களிடமிருந்தோ வருபவையல்ல. பத்துக்குபத்து அறை, இரண்டு லேன்ட்லைன் போன், இரண்டு பெண்கள், மூன்று மார்க்கெடிங் பையன்கள் இவ்வளவுதான் இந்த மார்க்கெடிங் அலுவலகங்களின் அளவு. அதிலும் இந்த பெண்களெல்லாம் பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் அல்லது பட்டப்படிப்பு படித்து சரியான வேலைகிடைக்காதவர்கள் வரை இருக்க கூடும். சம்பளமாக பெரிய தொகை கிடையாது அதிமாக கொடுத்தால் ஐந்தாயிரம்தான்! ஐந்தாயிரமே மிகமிக அதிகம். அதற்கு மேல் வாடிக்கையாளரை பிடிப்பதை பொறுத்து வேறுபடும்.

இவர்களெல்லாருக்குமே தினமும் நூறிலிருந்து நூற்றம்பது அழைப்புகளுக்கு மேல் டார்கெட் இருக்கும். அதற்காக எண்களை பெற பெரிய போராட்டமே நடத்துவதை பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் ரேண்டமாக வெவ்வேறு எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசுவதையும் பார்த்திருக்கிறேன். எல்லா வாடிக்கையாளருமே ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிப்பவர்கள் ஒரு பக்கமென்றால் இன்னொரு புறமோ ஆபாசமாக பேசுகிறவர்களும் உண்டு. இன்னும் சிலர் ஒரு நாள் வரீயா இன்சூரன்ஸ் போடறேன் என்றெல்லாம் கேட்பார்களாம்! அதை சொல்லும்போதே கதறி அழுகிற நண்பர்கள் எனக்கிருந்தனர். இதில் வாடிக்கையாளர் பெண்களாக இருந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருக்குமாம். தகாத வார்த்தைகளை நாசூக்காக பேசியே கொல்வபவர்கள் உண்டு.

வெளியே போனில் அழைத்து பேசும்போதுதான் இந்த நிலையென்றால் டார்கெட் பிரஷர் அதிகமாகும்போது அறைக்குள் அழைத்து திட்டி தீர்க்கிற டீம் லீடர்களின் அத்துமீறலும் அரங்கேறுமாம். சிலர் சரிம்மா இன்சூரன்ஸ் போட்டுக்கறேன்.. லோன் வாங்கிக்கறேன் என்று கூறுவதோடு எல்லாமே ஓக்கே ஆகி லோனுக்கான விண்ணப்பங்களில் கையெழுத்து போடப்போகும்போது இந்த பெண்களை நேரில் வரச்சொல்லி தவறாக நடந்துகொள்ள முயல்வதும் உண்டு.

இவர்களுக்கு மார்க்கெட்டிங் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. அதற்குபதிலாக போன்ல கூப்பிட்டு பேசும்போது நல்லா இனிக்க இனிக்க பேசுங்க.. உங்களுக்கு கல்யாணமாகிடுச்சானு கேளுங்க , உங்க வாய்ஸ் நல்லாருக்குனு சொல்லுங்க என்பது மாதிரியான மோசமான பாடங்களே உண்டு! இந்த பெண்களில் தொன்னூறு சதவீதம் பேர் வறுமையான சூழலில் பிறந்து வளர்ந்து ஓரளவு சொல்லிக்கொள்ளும்படியான இதுமாதிரியான வேலைக்கு வருகிறவர்கள். எதையும் சகித்துக்கொள்ளுபவர்களாகவும் , இதையெல்லாம் எதிர்கொண்டு வாழ பழகிக்கொண்டவர்களாகவும் இருப்பதை பார்த்திருக்கிறேன். அது அதிர்ச்சியாக இருந்தாலும்.. ஆச்சர்யம்தான்.

இப்படியெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிற இப்பெண்கள் எப்போதாவது சிலர் மொக்கை ஜோக்குகளை பகிர்ந்துகொண்டாலும் ஒரு நன்றியோடு கனிவாக போனை கட் செய்துவிடுவதாலும் புன்னகைப்பதில் ஆச்சர்யம் இல்லை. புன்னகை விலைமதிப்பற்றதல்லவா? இதோ இப்போதும் எனக்கு தினமும் பத்து முதல் பதினைந்துக்கும் மேல் இதுமாதிரியான அழைப்புகள் வருகின்றன. அசௌகர்யமான நேரங்களில் வரும்போது ஒரு நன்றிம்மா இப்போதைக்கு வேணாம்மா என கட் செய்துவிடுவேன். அல்லது ஏதாவது ஒரு மொக்கை ஜோக்கை உதிர்த்து அப்பெண்ணின் சிரிய சிரிப்பொலியோடு போனை கட்செய்வதுமுண்டு. அவர்களும் நம்மைப்போல மனிதர்கள்தானே!

19 comments:

Unknown said...

:)

நத்திங் டூ செ

Nathan said...

அருமையான பதிவு... என்னை போல் சிந்தித்து எழுதி இருப்பதால் ஒரு ஆச்சரியம்... இவர்களுக்காக பரிதாபப்படுவதை தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடிந்தது இல்லை... உரிமைகள், அரசியல் ஆகியவற்றை பேசுவதற்கு பதில் மனிதம் பழகுவது நல்லது என்று உணர்கிறேன்... நன்றி

ராஜகோபால் said...

உண்மைதான் அவர்களின் பனி மிகவும் கடினம் பணத்திற்காக தினமும் பலரிடம் திட்டு வாங்கு கிறார்கள்

Nathan said...

அருமையான பதிவு... என்னை போல் சிந்தித்து எழுதி இருப்பதால் ஒரு ஆச்சரியம்... இவர்களுக்காக பரிதாபப்படுவதை தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடிந்தது இல்லை... உரிமைகள், அரசியல் ஆகியவற்றை பேசுவதற்கு பதில் மனிதம் பழகுவது நல்லது என்று உணர்கிறேன்... நன்றி

King Viswa said...

என்னுடைய நண்பரொருவர் இந்த மாதிரி யார் போன் செய்தாலும் சரியாக ஏழு வருடங்கள் கழித்து செய்யுங்கள், அப்போதுதான் எனக்கு ஏழரை சனி முடியும் என்று சொல்லுவார். எனக்கு அப்படி கிண்டல் செய்ய தோன்றுவது இல்லை. அதமாலேயே இப்போதைக்கு அவசியம் இல்லை, போன் செய்தமைக்கு நன்றி என்று கூறி வைத்துவிடுவேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு நண்பருக்கு பெர்சனல் லோன் வாங்க போன் செய்த போது மிகவும் நிதானத்துடன் பதில் அளித்த அந்த ஒரு பெயர் தெரியாத பெண்ணிற்க்காக அந்த அலுவலகதின் மேலதிகாரிக்கு ஒரு பெர்சனல் மின் அஞ்சல் அனுப்பினேன். ஒரு மாதம் கழித்து அந்த பெண் எப்படியோ என்னுடைய நம்பரை வாங்கி நன்றி தெரிவித்தார், அவள் டீம் லீடராக உயர்வு பெற்று விட்டதற்கு.

கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சித்திரக்கதை - சென்னை சூப்பர் கோமிக்ஸ் - பாண்டி : பாய் ஆப் தி மேட்ச்

Sukumar said...

பதிவுன்னா இப்படிதான்யா இருக்க வேணும்.. அருமையான கன்டன்ட் இதமான நடை!

Raashid Ahamed said...

இவர்களுக்காக பரிதாபம் தான் படுகிறேன். நீங்கள் சொல்வது போல் சில பெண்கள் கேட்கவே காது கூசும் வார்த்தைகளை கேட்க நேருவது உண்மை. அப்படி கேட்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதும் உண்மை. சிலர் பதிலே சொல்லாமல் உடனே முகத்தில் அடித்தது போல் கட் பண்ணவும் செய்வார்கள். இதைவிட பெண்கள் பேசாமல் ஒரு துணிக்கடையில் சேல்ஸ் கேள் வேலையில் நிம்மதியாக காலத்தை ஓட்டலாம்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு அதிஷா.
வாழ்த்துக்கள்.

Gops said...

Athisha

Last 3 blog of yours are very touching...plz continue with these kind touching and thought provoking ones...not like bit matters plz

Unknown said...

இதுவரை இப்படி ஒரு விஷயம் கேள்வி பட்டதும் இல்லை பெரும்பாலும் கேலி கிண்டல் செய்து போன் கட்செய்வதையே வடிக்கையாக கொண்டுள்ளோம். நேற்று ஒரு பெண் போன் செய்து ரியல் எஸ்டேட் செய்கிறோம் வீடு மனைகள் வாங்கி கொள்ளுங்கள் என போன் செய்தார் நான் கிண்டலாக எனது 10ஏக்கர் நிலம் இருக்கிறது நீங்கள் வேண்டுமென்றால்வாங்கி கொள்ளுங்கள் என கிண்டலாக கூறினேன் உங்கள் இந்த பதிவை படித்தவுடன் வெட்கப்படுகிறேன்.
உங்களின் புதிய தலைமுறையில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளையும் படிக்கும் வாசகன்

விநாயக முருகன் said...

சமீபத்தில் எழு‌திய தேன்மொழி எ‌ன்ற கவிதையை இங்கு பகிர விரும்புகின்றேன்

http://nvmonline.blogspot.com/2011/01/blog-post_31.html

Unknown said...

நல்ல பதிவு. சூப்பரா இருக்கு. அப்படியே மெஸேஜ் அனுப்பி டார்ச்சர் பண்ணும் மார்கெட்டிங் பத்தியும் எழுதுங்க

Ajitha said...

A true insight into the marketing calls we get and we fidn them annoying. Happened to visit these store room kind of marketing offices where the lady staff dont even have separate toilets. I agree a smile and kind words will help but a strong labour law should be there and followed.
Ajitha

Ajitha said...

A true insight into the marketing calls we get and we fidn them annoying. Happened to visit these store room kind of marketing offices where the lady staff dont even have separate toilets. I agree a smile and kind words will help but a strong labour law should be there and followed.

வணங்காமுடி...! said...

ஹாய் அதிஷா, இதுவரை நான் படித்த உங்கள் அனைத்து பதிவுகளிலும் இது ஆகச் சிறந்த ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. என்னவோ தெரியவில்லை... படித்து முடித்தவுடன், திடீரென்று உங்களை ஒரு நெருக்கமான நண்பனாக உணர்கிறேன். என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு இணையான அலைவரிசையில் உங்கள் பதிவு இருப்பதால் இருக்குமோ? ஏதோ ஒன்று...

முன்பு ஒருமுறை, உங்களது பதிவொன்றில் பின்னூட்டம் இட்டபோது, இனிமேல் நீங்கள் எழுதுவதை நிறுத்திக் கொள்வது நல்லது என்று குறிப்பிட்டிருந்தேன். அப்படி பின்னூட்டம் இட்டதற்காக, மனம் வருந்துகிறேன்.

வாழ்த்துகள்.

சுந்தர்
ருவாண்டா

வணங்காமுடி...! said...

ஹாய் அதிஷா, இதுவரை நான் படித்த உங்கள் அனைத்து பதிவுகளிலும் இது ஆகச் சிறந்த ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. என்னவோ தெரியவில்லை... படித்து முடித்தவுடன், திடீரென்று உங்களை ஒரு நெருக்கமான நண்பனாக உணர்கிறேன். என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு இணையான அலைவரிசையில் உங்கள் பதிவு இருப்பதால் இருக்குமோ? ஏதோ ஒன்று...

முன்பு ஒருமுறை, உங்களது பதிவொன்றில் பின்னூட்டம் இட்டபோது, இனிமேல் நீங்கள் எழுதுவதை நிறுத்திக் கொள்வது நல்லது என்று குறிப்பிட்டிருந்தேன். அப்படி பின்னூட்டம் இட்டதற்காக, மனம் வருந்துகிறேன்.

வாழ்த்துகள்.

சுந்தர்
ருவாண்டா

தோழி said...

அதீஷா வெறும் அருமையான பதிவு என்று மட்டும் சொல்லி ஒதுங்க முடியவில்லை. ஏனெனில் இதே தொழில் பல வருடங்கள் எனக்கு வாழ்க்கை கொடுத்து கொண்டு இருப்பதால். என்ன இன்று தமிழ்-இல் பேசி எதையும் விற்பதில்லை மாறாக ஆங்கிலத்தில் பேசி விற்கிறேன். எனினும் தொழில் என்னவோ இதேதான். MBA படித்து முடித்தவுடன் ஏதோ மேனேஜர் வேலை காத்திருப்பதாய் கற்பனை செய்து கொள்ள வில்லையாதலால் கொஞ்சம் ஜீரணிக்க முடிந்தது. உச்சி வெயிலில் தோளில் ஒரு பையை மாட்டி கொண்டு எதுவுமே தெரியாத ஊரில் ஒவ்வொரு கதவாக தட்டி, ஒவ்வோர் நம்பர்க்கும் தொல்லை பேசி appointment வாங்கி அவர்கள் சொன்ன இடத்திற்கு சொன்ன நேரத்திற்கு முன்னால் பசியுடன் போய் நின்றிருந்த போதுகளிலான வேதனை இன்றும் மனதில் ஒன்று. அதே நேரத்தில் அந்த அனுபவம் இன்று கற்றுத் தந்த பாடங்களும் அதிகம். Your blog made me to revisit my early marketing days. thanks Atheesha. எழுத தொடங்கினால் ரணமாக வார்த்தைகள் ஏராளமாய் வரும். வேண்டாம். :(

Paleo God said...

அதிஷா,

லோன் ரெக்கவரி செக்ஷன்ல வேலை செய்யும் பெண்கள் எப்படி பேசுவார்கள் என்பதையும் எழுதி இருந்திருக்கலாம். :)

Unknown said...

ஹாஹஹஹா.... செம காமெடி..மற்றும் சிந்திக்க வைக்கும் பதிவு.
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது போங்க...! அருமையான எளிமையான எழுது நடை. எனக்கும் தினமும் இப்படி சிரிக்க வைக்கிற நண்பர் கிடைத்தால் எவ்ளோ நல்ல இருக்கும்...

அருமையான பதிவு..