Pages

27 June 2012

கடவுளே உனக்கு கருணையே இல்லையா?






இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே யதார்த்த படங்களாக பார்த்து பார்த்து கண்ணு ரெண்டும் அவிஞ்சிபோச்சு.. விளிம்பு நிலை மக்களின் சொல்லப்படாத பக்கங்களை புரட்டி புரட்டி.. விரல்கள் பத்தும் வீங்கிபோச்சு. அழுக்கு முகங்களையும் இருட்டு மனிதர்களையும் ரத்தம் சொட்டும் அரிவாள்களையும் பார்த்து பார்த்து கிட்டத்தட்ட அரைமென்டலாகித்தான் அலைந்துகொண்டிருக்கிறோம். இதுமாதிரி நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸாக மூச்சுவிடவும் உழைச்ச களைப்பு தீரவும் வீங்கின நெஞ்சை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்... நாலு பாட்டு, அஞ்சு பைட்டு, நிறைய காமெடி, கொஞ்சம் ரொமான்ஸ், ஒருகவர்ச்சி டான்ஸ் என நல்ல மசாலா படமொன்று வராதா என ஏங்கிக்கொண்டிருந்தோம்.

உன்னதமான ஆகச்சிறந்த மசாலா படம் வேண்டி பெருமாள் கோயிலுக்கு பொங்க வைத்து கடாவெட்டி பிரார்த்தித்தோம். தவமாய் தவமிருந்தோம். இந்த கடவுள் இருக்கிறாரே.. கடவுள்.. கொஞ்சம் கூட கருணையேயில்லாதவர். முதலில் விக்ரம் வாழ்ந்த ராஜபாட்டையை நமக்கு பரிசளித்தார்.. அய்யோ அம்மா.. என்று கதறினோம்.. நம்முடைய குரல் கடவுளின் காதுகளை எட்டவேயில்லை. பிறகு சிம்பு நடித்த ஒஸ்தியை வழங்கினார்.. கடவுளே எங்கள விட்டுடு.. தெரியாம கேட்டுட்டோம் என தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டோம்..

எங்களுக்கு மசாலாவும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம் ஆளவுடு என கெஞ்சினோம்.. ஆனால் கொஞ்சம் கூட இதயத்தில் ஈவு இரக்கமேயில்லாத கடவுள் இதோ இப்போது சகுனியை கொடுத்திருக்கிறார்.. நாங்க என்ன பாவம் செஞ்சோம்.. கடவுளே... முடியல..

‘’மைநேம் இஸ் ரஜினி.. ஐயாம் கமல்’’ என மிரட்டலாக.. ட்ரைலரிலேயே அடடே போடவைத்த சகுனி சென்ற வாரம் ரிலீஸானது. உதயம் தியேட்டரில் நுழையும்போதே ஒரே கூச்சல்.. ஆராவாரம்.. குத்தாட்டம்தான்.. கும்மாளம்தான்.. அடேங்கப்பா கார்த்திக்கு இவ்வளவு ரசிகர்களா என ஆச்சர்யகுறியை தலைக்குமேல் போட்டு உள்ளே நுழைந்தோம்.. படம் ஆரம்பித்து. பத்தே நிமிடங்கள்தான்.. ஜஸ்ட் டென்மினிட்ஸ்.. கூச்சலும் கும்மாளமும் அடங்கியது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்னும் பாடலுக்கேற்ப நாம் இருப்பது உதயம் தியேட்டரா அல்லது கண்ணம்மாபேட்டை சுடுகாடா என்கிற சந்தேகமே வந்துவிட்டது!

ஓக்கே திஸ் டைரக்டர் நமக்கு வேற ஏதோ வித்தியாசமான படம் காட்டப்போறார் போல.. நாமதான் வேற எதையோ எதிர்பார்த்து வந்துட்டோம்.. லெட் அஸ் கான்சென்ட்ரேட் ஆன் திஸ் மூவி என்று மும்முரமாக படத்தை பார்க்கத்தொடங்கினோம். கடவுள் சிரித்தார்!
தன் வீட்டை இடிக்க போகிறார்கள் என மந்திரியிடம் மனு கொண்டு போய் கொடுக்கிறார் ஹீரோ.. மந்திரி மனுவை வாங்கிக்கொள்கிறார்.. ஹீரோ மகிழ்ச்சியாக மந்திரிவீட்டு வாசலில் இருக்கிற தள்ளுவண்டி பஜ்ஜி கடையில் பஜ்ஜி சாப்பிடுகிறார்.. பஜ்ஜி ஆயிலை கசக்க பேப்பரை எடுத்தால் ஹீரோ கொடுத்த மனு! ஹீரோ அப்படியே ஷாக் ஆகிறார். வாவ் வாட் ஏ சீன்.. நூறாண்டு இந்திய சினிமா இப்படியொரு பிரமாதமான காட்சியை கண்டதுண்டா! இதுமாதிரி பல காட்சிகள் அடங்கிய அற்புதமான திரைப்படம்தான் சகுனி!

படத்தின் முதல் பாதி முழுக்க அப்பாவியாகவே திரிகிறார் ஹீரோ.. எலி ஏன் அப்படி திரியுது என்றால் இரண்டாம்பாதியில் முதலமைச்சரை எதிர்த்து சண்டை போடுகிறார். முதலமைச்சரே இவரை பார்த்து அஞ்சுகிறார். எதிர்கட்சி தலைவரை முதல்வராக்குகிறார். அதற்காக அவர் செய்யும் சகுனி வேலைகள்.. தமிழ்சினிமா காணாதது! இறுதியில் ஸ்டேட் கவர்மென்ட்டு முடிந்து சென்ட்ரல் கவர்மென்ட்டும் அவரை அழைப்பதோடு படம் முடிகிறது. செகன்ட் பார்ட் ஹிந்தியில் போல.. நாம தப்பிச்சோம்.. பானிபூரி பாய்ஸ் செத்தானுங்க... மூணாவது பார்ட் ஹாலிவுட்டா இருக்கலாம்.. வெள்ளை மாளிகையை காப்பாற்ற குஷ்பூவை அமெரிக்க அதிபரா ஆக்குவார்னு தோணுது!

சந்தானம் படம் முழுக்க பேசிக்கொண்டேயிருந்தால் படம் ஹிட்டாகிவிடும் என்று யாரோ இயக்குனரிடம் சொல்லித்தொலைத்திருக்க வேண்டும்.. படம் முழுக்க வாய் வீங்க வீங்க சந்தானம் பேசுகிறார். சில இடங்களில் அவர் மட்டும்தான் படத்தையே காப்பாற்றுகிறார். சமீபத்தில் வெளியான பல படங்களிலும் குடிப்பழக்கத்தை ஆதரிப்பது போல வசனங்கள் இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதையெல்லாம் யாரும் எதிர்த்து போராடமாட்டார்களா?

ஹீரோ கார்த்தி சிரிச்ச மூஞ்சியாகவே ஒரே ரியாக்சனுடம் படம் முழுக்க வருகிறார். விஜயை போலவே வளைந்து வளைந்து நடனமாடுகிறார்.. பஞ்ச் டயலாக் பேசுகிறார்! நல்ல வேளை இந்த படம் செம ஃப்ளாப்! இல்லாட்டி போன இன்னும் பத்து படத்திலாவது இதேமாதிரி பஞ்ச் டயலாக் பேசி டான்ஸ் ஆடி நம்மை தாலியறுத்திருப்பார்! விஷால்,பரத் வரிசையில் இந்த தளபதியும் இணைந்து நாட்டுக்கு நன்மை செய்வார் என்பது தெரிகிறது.
படமும் சரியல்லை.. ஹீரோயினும் சரியில்லை.. இயக்குனருக்கு ஆன்ட்டி போபியோவோ என்னவோ ரோஜா,ராதிகா என சீரியல் ஆன்டிகளை வேறு அள்ளிக்கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார். ம்ம்.. என்னத்த சொல்ல.. வில்லனாக பிரகாஷ்ராஜ் இந்தப்படத்திலும் முட்டாளாகவே வாழ்கிறார். கத்துகிறார். சவால் விடுகிறார். டேய்.. என்கிற வார்த்தையை விதவிதமான மாடுலேஷன்களில் சொல்கிறார்.

படத்தில் டெக்னிக்கல் சமாச்சராங்களை கவனிக்கவே முடியாத அளவுக்கு படம் அவ்வளவு சிறப்பாக இருந்ததால் அதைப்பற்றியெல்லாம் எழுதவே தோணலை. படத்தின் இயக்குனர் சிறந்த வசனகர்த்தாவாக இருக்கலாம். படத்தின் பல வசனங்கள் நச்சென்று இருந்தன.

இந்த உலகப்படம் பார்க்கிற அறிவுஜீவிகள்தான் மசாலா படம் பார்க்கிறவனை முட்டாளாக நினைத்து பீட்டர் விடுவதை இச்சமூகம் கண்டிருக்கிறது.. வரவர மசாலா பட இயக்குனர்களே தன்னுடைய ரசிகனை முட்டாளாக நினைக்கத்தொடங்கியிருப்பது மசாலா பட ரசிகர்களை வெறிகொள்ள செய்துள்ளது..

பைனலாக ஒன்றே ஒன்றுதான்.. கடவுளே உனக்கு கருணையே இல்லையா.. மொக்கை மசாலா படங்களிடமிருந்து எங்களை காப்பாற்று யதார்த்த படமொக்கைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்!

22 June 2012

சப்பைக்கட்டு!







உலகில் யாராக இருந்தாலும் எந்த தப்பு செய்வதாக இருந்தாலும் அதற்கு முன்பாகவே நல்ல வலுவான சப்பைக்கட்டு ஒன்றை தயார் செய்துவிடுவது நல்லது. ‘சப்பைக்கட்டு’ எந்த கடையிலும் கிடைக்காது அதை நாமேதான் நம்முடையவீட்டு வாணலியில் கிண்டி கிளறி தயாரித்து சமூகத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

தப்புகளுக்கு பிளான் பண்ணுவதை விடவும் அதிக முனைப்புடன் சப்பைக்கட்டுகளை உருவாக்குவதிலும் அவற்றினை கட்டமைப்பதிலும் திட்டமிட்டால் சமூகத்தின் கொடிய விமர்சனங்களிலிருந்து எளிதில் தப்பித்துவிடலாம்? ஒருவேளை உங்களுக்கு தண்டனை ஏதும் கிடைத்தாலும் தண்டனை காலம் முடியும்போது நீங்களும் தியாகியாகலாம். நாட்டை ஆளலாம். கொடியேற்றலாம். மிட்டாய் கொடுக்கலாம்.

கோடி கோடியாய் ஊழல் செய்யலாம், காட்டிக்கொட்டுக்கலாம், யாருக்கும் யாரையும்... ம்ம்ம்..ம்ம்ம்.. ஏன் கொலை கூட செய்யலாம். அடுத்தவனை வஞ்சகமாக அழிக்கலாம். இன்னொருவன் பண்ணின தப்பை மறைக்கிற வேலைகளையும் காசுக்காக செய்யலாம். (கற்பழிப்புகளுக்கு கூட உலக அளவில் பல புகழ்பெற்ற சப்பைக்கட்டுகள் சொல்லப்படுவதுண்டு).

இங்கே கவனிக்கப்படவேண்டியதும் கடைபிடிக்க வேண்டியதும், நாம் எப்பேர்ட்ட தப்புகளை செய்கிறோமோ அதற்கேற்ற வலுவான அறிவார்ந்த அறிவியல்பூர்வமான சப்பைக்கட்டினை நம்முடைய ஆதரவாளர் குழுவினை ஆலோசித்து உருவாக்க வேண்டும். எந்த அளவுக்கு சப்பைக்கட்டு பலமாக இருக்கிறதோ அதே அளவுக்கு நாமும் நம்முடைய தப்புகளை விரிவாக்கலாம்.

நல்ல அறிவார்ந்த உயர்ந்த சிந்தனை கொண்ட சப்பைக்கட்டுகள் நம்முடைய சமூக போராளி முற்போக்கு பிற்போக்கு இலக்கிய பின்நவீனத்துவ நடுநவீனத்துவ அரசியல் சமூக புரட்சிகர அந்தஸ்துக்கு பெரிய சேதம் உண்டாகாமல் நம்மை காக்கும் அபார வல்லமை கொண்டது.

உங்களுடைய சப்பைக்கட்டு முக்கியமாக அறிவுப்பூர்வமானதாவும் உலக இசங்கள். சிந்தனைகள், அறிஞர்களின் மேற்கோள்கள், விக்கிபீடியா ஆதாரங்கள், பெரியார் தொடங்கி சீமான் வரைக்கும் சமகால மனிதர்களின் வாழ்க்கை உதாரணங்கள் அடங்கியதாகவும் நான்குபேர் படித்தால் இரண்டரை பேர் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் அவசியம்.

உங்களில் யாருடா உத்தமன்? நீ என்ன ஒழுக்க சீலனா? ஏய் சமூகமே நான் பசியோடிருந்த போது எனக்கு பன்னு வாங்கி தந்தாயா? காசுக்காக சோரம் போகாதவர் இங்கே யார்? என்பது மாதிரியான புரட்சிகர கேள்விகளை எழுப்பவும் தயங்கக்கூடாது. இதுமாதிரியான கேள்விகள்தான் எப்போதும் குற்றவாளிகளைப் போலவே உணர்ந்து திரியும் நடுத்தரவர்க்க கூட்டத்தின் வாயை எளிதில் அடைக்க உதவும்.

ஏதோ தெரியாம பண்ணிட்டேன் விட்டுடுங்க! நான் எதுவுமே பண்ணலை! ப்ளீஸ் க்ளீஸ் என்கிற மன்னிப்புக்கோரும் தொனியில் உங்கள் சப்பைக்கட்டு அமையுமேயானால் சமூகம் தன் கொடும் பற்களால் உங்களை மிட்நைட் டாக்ஸ் போல குதறிவிடும். பீ கேர் ஃபுல். ‘ஆமாய்யா பண்ணினேன்.. அதுக்கு இன்னான்ற! எனக்கு முன்னால் இருந்தவன் பண்ணலையா.. நீ ஒருத்தனுக்கு ஆதரவா பேசறியே அவன் இதை பண்ணலையா? என்று ஆரம்பித்தால் எதிர்ப்பவர்கள் பின்னாங்கால் பொடனியில் அடிக்க தெறித்து ஓடிவிடுவார்கள்! நாமும் ஈஸியாக ஜெயித்துவிடலாம்.

சப்பைக்கட்டினை தயார் செய்வதோடு உங்கள் வேலை முடிந்துவிடுவதில்லை. அதனை சந்தைப்படுத்துதலிலும் உங்களுக்கான ஆதரவாளர் வட்டத்தினை உருவாக்குவதிலும்தான் சவாலே இருக்கிறது. அரசியல்வாதியாக இருந்தால் இந்த சப்பைக்கட்டினை முட்டாள் தொண்டர்களிடம் ஒப்படைத்துவிட்டால் போதும் உங்கள் தப்பை சரியென்று வாதிட்டு உங்களை உத்தமராக்கிவிடுவார்கள். இலக்கியவாதிகளுக்கு வாசகர்கள் உண்டு! வட்டம் உண்டு. வாசகர்களே சேர்ந்து தப்பு செய்தாரா குஜிலியார் என்பதுமாதிரி புத்தகங்கள் வெளியிட்டு உங்களை காப்பாற்றிவிடுவார்கள். தொண்டரடிபொடிகள் இருக்கும் அனைவருக்கும் சப்பைக்கட்டினை சந்தைப்படுத்துதல் எளிதான காரியம்தான். உங்கள் சார்பு மீடியாவின் மூலமாகவும் சப்பைக்கட்டினை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

தனிமனிதராக இருப்பவர்கள் நிலைதான் சிரமம். நீங்களாகவே ஒவ்வொருவருக்கும் நேரடியாக விளக்கித்தான் ஆகவேண்டும். அதற்கு சமூக வலைதளங்கள் பேருதவி செய்கின்றன. தப்பு செய்கிறவர்களை ரசிக்கிற மனிதர்களும் இவ்வுலகத்தில் இருப்பதால் விரைவில் உங்களுக்கும் ஆதரவாளர்கள் பெருகுவார்கள்.. மனதை தளரவிடவேண்டாம். உங்களுடைய சப்பைக்கட்டினைவிடவும் வலுவான சப்பைக்கட்டுகளை அவர்களே முன்மொழிய நேரிடலாம். டோன்ட் வொர்ரி! ஒரே விஷயம்தான் உங்களால் எந்த அளவுக்கு சப்பைக்கட்டினை சந்தைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கே தப்புகளை செய்யுங்கள்.

ஒருவழியாக உங்கள் சப்பைக்கட்டு உலகெங்கும் பரவி நீங்கள் செய்த தப்பைவிட உங்கள் சப்பைக்கட்டின் அரசியல் குறித்து ஆங்காங்கே யார் யாரோ விவாதம் செய்துகொண்டிருப்பார்கள். இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி அடுத்த தப்புக்கான சப்பைக்கட்டினை நீங்களே உருவாக்க முயற்சி செய்யலாம். அது உங்களுடைய எதிர்காலத்தினை பிரகாசமாக்க உதவக்கூடும். மக்களும் உங்கள் தப்பினை சில வாரங்களில் மறந்துவிட்டு மீண்டும் இயல்புவாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!

நீங்க செய்யப்போகிற தப்புக்கு நல்ல சுவையான சுவாரஸ்யமான சப்பைக்கட்டு கிடைக்கவில்லையே என மனம் தளர வேண்டாம். உலகின் எல்லா தப்புகளுக்கும் பத்தில் நான்குபேர் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு சப்பைக்கட்டு இருந்தே தீரும்.. முயற்சி திருவினையாக்கும்.

13 June 2012

இந்தமான்.. எங்கள் சொந்த மான்..







‘’இதுங்களால நாங்க பட்ட கஷ்டமெல்லாம் போதும்ங்க... இந்த மானுங்களை புடிச்சிட்டு போயி எங்கயாச்சும் விட்டுட ஏற்பாடு பண்ணுங்க சார்.. எங்களுக்கு இந்த மானுங்க வேண்டாம், இந்த ஊர்ல மனுஷங்களாலயே விவசாயம் பண்ணி பொழைக்க முடியல, இதுல மானுங்களை நாங்க எங்கருந்து காப்பாத்தறது..’’ நாம் சந்தித்த ஒவ்வொரு விவசாயியும் இப்படித்தான் கோபத்தோடு பேசுகின்றனர்! கோதபாளையம் முழுக்கவே மான்கள் என பேச்செடுத்தாலே வெறுப்போடும் எரிச்சலோடும்தான் பதில் வருகிறது.

அவிநாசியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கோதபாளையம். மிகச்சிறிய கிராமம்தான். ஊருக்குள் நுழைந்துவிட்டால் எங்கு பார்த்தாலும் நீண்ட கொம்புகள் கொண்ட மான்களும் மயில்களும் கூட்டம் கூட்டமாக தான்தோன்றியாக சுற்றிக்கொண்டிருக்கிறன. நிறைய தென்னந்தோப்புகளும் சின்ன சின்ன விவாசயநிலங்களும் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்ட தோட்டங்களையும் ஆங்காங்கே நிழல்தரும் மரங்களையும் பார்க்க முடிகிறது. துள்ளி ஓடும் மான்களையும் தோகைவிரித்து நிற்கும் மயிலையும் யாருக்குத்தான் பிடிக்காது. ஆடுமாடுகள் போல சர்வசாதாரணமாக பொட்டல்வெளியில் மேயும் மான்கள் கூட்டத்தினை எங்கும் பார்க்க முடிகிறது.

இவைபோக இந்தப்பகுதியில் நாற்பதுவிதமான அரிய பறவையினங்கள் வாழ்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. விடுமுறைதினங்களில் குழந்தைகுட்டிகளோடு பிக்னிக் சென்றுவர மிகச்சிறந்த இடம்தான்!
ஆனால் இது நிச்சயமாக வனாந்திர பகுதி கிடையாது. சுற்றுலா சென்றுவர ஏற்ற வசதிகள் கிடையாது. விவசாயிகள் வசிக்கும் சாதாரண கிராமம்தான். அந்த ஊரின் பரப்பளவே 150ஏக்கர்கள்தான் இருக்கும். இந்த மிகச்சிறிய இடத்தில்தான் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மான்கள் கூட்டம் சுற்றிக்கொண்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

எங்கிருந்து வந்தன இந்த மான்கள்? யார் கொண்டுவந்து விட்டது? ஊர்காரர்களுக்கு இந்த மான்கள் மேல் ஏனிந்த கொலைவெறி? சுற்றுலா வாய்ப்புகள் அதிகமிருக்கிற இப்படிப்பட்ட ஒரு அற்புதமான இடத்தில் ஏன் இன்னமும் மான்களுக்கான சரணாலயம் எதுவும் அமைக்கப்படவில்லை..? என இன்னும் எண்ணற்ற கேள்விகளோடு இந்த மான்களுக்கு ஆதரவாக போராடிவரும் கோதபாளையத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளை சந்தித்து பேசினோம்.

‘’காரமடை பக்கத்துல பொன்னூத்துனு ஒரு இடம் இருக்குதுங்க.. அங்கிருந்து ஒரு ஓடை ஒன்னு எங்க ஊரு வழியாக பாயுதுங்க! அந்த ஓடையில் மழை பெஞ்சுதுன்னா மட்டும்தான் தண்ணி போகும்.. இல்லாட்டி முள்ளுச்செடிங்கதான் வளர்ந்து மண்டிக்கிடக்கும்! அந்த ஓடை வழியாதான் இரண்டு மூணு மான்கள் இந்த ஊருக்கு முதன் முதலா பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால வந்துது. அப்ப நானும் என்னுடைய உறவினரான குருசாமியும் அவைகளுக்கு அடைக்கலம் கொடுத்தோம்.. அப்பருந்து அதுங்க இந்த ஊர்லதான் வளருது, தண்ணீரும் கொஞ்சம் தாவரங்களும் கிடைச்சாலே இந்த மான்களுக்கு போதும்.. நல்லா இனவிருத்தி செஞ்சு வளர்ந்துடும். மூணு மானுங்க இன்னைக்கு முன்னூறு மானுங்களா ஆகிருக்கு’’ என ஒரு குட்டிஃபிளாஷ் பேக்கை சொல்லத்தொடங்கினார் விவசாயி பாலு.

பட்டப்படிப்பு முடித்தபின்னும் விவாசயம்தான் செய்வேன் என அடம்பிடித்து வெற்றிகரமாக விவசாயம் பார்க்கும் இளைஞர் பாலு. அவரும் அவருடைய உறவினர் குருசாமியும்தான் இந்த மான்களின் பாதுகாப்புக்காக அரசிடமும் மக்களிடமும் தினமும் போராடுகின்றனர். இவர்களுடைய தோட்டத்திலும் எப்போதும் மான்கள் மேய்ந்துகொண்டேயிருக்கின்றன. பயிர்களை சேதப்படுத்துகின்றன. வேலிகளை உடைத்துவிடுகின்றன. ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை. தங்களுடைய நிலத்திலேயே மான்களுக்காக ஒரு சின்ன தண்ணீர் குட்டையை ரெடிபண்ணி நீர்விடுகின்றனர். இதனாலேயே ஒட்டுமொத்த கிராமமும் இந்த இருவர் மீதும் கொலைவெறியில் இருக்கிறது. இவர்களால்தான் மான்கள் பெருகின என்று நம்புகின்றனர்.

‘’அதுக்கென்னங்க தெரியும் இது தனியார் தோட்டம், இங்க பயிர்களை மேயக்கூடாதுனு, பசிச்சா கிடைச்சத சாப்பிடுதுங்க.. அதுங்களுக்கு யாரு இருக்கா.. அநாதையா நிக்கற இந்த மான்களுக்கு அட்லீஸ்ட் நாங்க ரெண்டுபேருமாச்சும் ஆதரவா இருக்கோம்னுதான் அதை அப்படியே விட்டுட்டோம். என்னோட தோட்டத்துல முப்பது ஏக்கரை வெறும் பொட்டல்காடாவே விட்டுட்டேன் இந்த மானுங்களுக்காக.. அங்கதான் எப்பயும் இதுங்க மேஞ்சுகிட்டு திரியும்.. சில சமயம் சாலைகள்ல வண்டில அடிபட்டு, இல்லாட்டி உடல்நிலை சரியில்லாம இருக்கும்போது நாங்க ரெண்டுபேரும்தான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுபோயி வைத்தியமும் பாக்க வேண்டியிருக்கும்’’ என்கிறார் குருசாமி.

வெறும் மூன்றே மூன்று மான்கள் பதினைந்தாண்டுகளில் பல்கி பெருகி ட்ரிபிள் செஞ்சுரி அடித்துவிட்டன. முதலில் கிராமவாசிகளுக்கு மான்களை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அவற்றின் எண்ணிக்கை பெருக பெருக , மான்களிடையே ஏற்பட்ட உணவு மற்றும் நீர் பற்றாக்குறை அவற்றினை பொட்டல்காடுகளில் இருந்து வயல்களுக்குள் இழுத்துச்சென்றன. தோட்டங்களுக்குள் புகுந்தால் சர்வ நாசம்தான்! மழை வந்தால்தான் விவசாயம் என்னும் நிலையில் இருக்கிற விவசாயிகள் பெருந்தன்மையோடு மான்களை விட்டுவிடுகிற மனநிலையில் எல்லாம் இல்லை! இங்குதான் சிக்கலே தொடங்குகிறது!

‘’விவசாயிகளை சொல்லியும் தப்பில்லைங்க, வருஷம் பூரா கஷ்டப்பட்டு பயிர் பண்ணினா, இந்த மானுங்க கூட்டமா போயி ஒரே நாள்ல மொத்தமாக நாசம் பண்ணிட்டா யாராக இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும், ஆனால் அதற்காக மான்களை கொல்லச்சொல்வதும், அவற்றை அப்புறப்படுத்த முயல்வதும் சாத்தியமில்லாத ஒன்று என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஆனால் சிலர் கள்ளத்தனமாக வேட்டையாடுபவர்களை ஊக்குவிக்கறாங்க.. அவங்களுக்கு அடைக்கலம் கொடுக்கறாங்க.. ஆனாலும் நாங்கதான் வனத்துறைகிட்ட பேசி வேட்டைகளை தடுத்து நிறுத்திருக்கோம். பத்துக்கும் மேற்பட்ட மான்களை வேட்டைக்காரர்களிடமிருந்து மீட்டுருக்கோம். இப்போதான் வனத்துறை இங்கே இரண்டு வேட்டை தடுப்பு ஆட்களை நியமிச்சிருக்காங்க’’ என்கிறார் பாலு.

வேட்டையாடுபவர்களிடமிருந்து இந்த இருவரும் கஷ்டப்பட்டு மான்களை காப்பாற்றினாலும், சில நேரங்களில் தண்ணீருக்காக, உணவுக்காக பிரதான சாலைகளுக்கே மான்கள் வந்துவிடுவதால் இந்த மான்கள் விபத்துகளில் உயிரிழக்கவும் நேருகிறது. அதோடு வயல்களில் வைக்கப்பட்டிருக்கிற கண்ணிகளிலும் சிக்கி பல மான்கள் உயிரிழந்துள்ளன. ஒருபக்கம் இப்படி மாண்டுபோகும் மான்கள் இன்னொரு பக்கம் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சோகத்தில் நிற்கும் விவசாயிகள்! இதற்கு தீர்வுதான் என்ன?
இந்த ஊருக்கு அருகில் பரந்துவிரிந்துகிடக்கும் புதுப்பாளையம் ஏரியில் பாதியை மான்கள் சரணாலயமாக்கலாம் என்கிறார் பாலு. அதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர் பாலுவும் குருசாமியும். அரசு தரப்பிலிருந்து இதுவரை ஒரு அசைவு கூட இல்லை! ஏரியை சரணலாயமாக்க கூடாது என சிலர் உள்ளூரில் குரல் கொடுக்க ஆரம்பித்தும் விட்டனர்.

‘’வனத்துறையும் பொதுப்பணித்துறையும் இணைந்து செயல்பட வேண்டிய பிரச்சனை, ஆனா அவங்க ரெண்டுபேருமே வெவ்வேற திசைல நிக்கறாங்க.. வனத்துறையோ வேணுமின்னா உங்க நிலத்தை கொடுங்க சரணாலயம் ஆக்குறோம் என எங்கள் அடிமடியிலேயே கைவைக்க பார்க்கின்றனர். மான்களை இத்தனை காலமும் காப்பாற்றியதற்கு இதுதான் அரசாங்கம் தரும் பரிசா..’’ என கோபமாக பேசுகிறார் குருசாமி.
திருப்பூரின் முன்னாள் கலெக்டர் இந்த இடத்தில் மான்கள் சரணாலயம் அமைக்க திட்டங்கள் தீட்டினாலும், ஆட்சிமாற்றத்தில் கலெக்டரும் மாற்றப்பட அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. உள்ளூர் விவசாயிகளோ இந்த மான்களுக்கு மயக்க ஊசி போட்டு காடுகளுக்குள் கொண்டு போய் விட வற்புறுத்துகின்றனர்.

வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது ‘’இந்த மான்களை நிச்சயமாக இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் செய்வதெல்லாம் சாத்தியமேயில்லாத ஒன்று. ஒவ்வொரு மானையும் தேடி கண்டுபுடித்து ஊசி போட்டு மயக்க நிலைக்கு கொண்டு போவதெல்லாம் நடக்காத காரியம். சின்ன அதிர்ச்சி கூட மிகவும் வீக்கான இதயம் கொண்ட மான்களை கொன்றுவிடும். சரணாலயம் அமைக்க திட்டமிட்டாலும் ஏரி வேறு துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். உடனடியாக அரசு இந்த விஷயம் குறித்து ஆராய்ந்து ஒரு தீர்வை எட்டவில்லையென்றால் இந்த மான்களின் எண்ணிக்கை இன்னும் பெருகி விவசாயிகளுக்கு தொல்லை அதிகரிக்கவே செய்யும்,’’ என்றார்.

இப்பகுதியை மான்கள் சரணாலயமாக அறிவித்து, மான்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்புக்காக சுற்றிலும் கம்பி அமைக்கவும் திட்டமிடப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, வனத்துறையினர் மற்றும் சுற்றுலாத்துறையினர் இணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இது ஒன்றுதான் விவசாயிகளையும் காப்பாற்றும், மான்களையும் வாழவைக்கும் , அதோடு சுற்றுலா தளங்கள் ஏதுமில்லாத திருப்பூர் மாவட்டத்திற்கு ஒரு நல்ல சுற்றுலாதளமும் கிடைக்க வழிசெய்யும்.



நன்றி - புதியதலைமுறை



05 June 2012

பச்சை பிசாசு






நம்ம ஊர் குளங்களில், ஏரிகளில், ஆறுகளில் தண்ணீர் இருக்குதோ இல்லையோ பச்சை பசேலென்று இந்த ஆகாயத்தாமரை மட்டும் எங்கும் நிறைஞ்சிருக்கு! அதை அழிக்கவும் முடியாமல் கட்டுப்படுத்தவும் முடியாமல் நம் அரசு எந்திரங்கள் படும் பாடு சொல்லி மாளாது.
தென்னமெரிக்காவின் அமேசான் காடுகள்தான் இந்த வாட்டர் ஹ்யான்சித் (WATER HYANCITH) என்னும் ஆகாயத்தாமரையின் பூர்வீகம். எப்படியோ அது கண்டங்கள் கடந்து இன்று உலகெங்கும் பலருக்கும் தீராத்தலைவலியை உண்டாக்கும் அளவுக்கு பல்கி பெருகி காடாக வளர்ந்து கசகசவென நிற்கிறது! இந்த ஆகாயத்தாமரை பார்க்க பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தாலும் அதனால் உண்டாகும் தீமைகள் அதிகம்.

ஆகாயத்தாமரையின் இலைகள் நல்ல தடிமனாக இருப்பதை பார்த்திருக்கலாம். அவை அதிக நீரை உறிஞ்சி வாழும் தன்மை கொண்டவை. இந்த தடிமனான இலைகளின் ஊடாக நடக்கிற நீராவிப்போக்கு ஏரி குளங்களின் தண்ணீர் அளவை வெகுவிரைவில் மானாவாரியாக குறைத்துவிடுகின்றன. இதன் தண்டிலிருந்து புதிய கிளைகள் உருவாவதால் ஒரே வாரத்தில் இரட்டிப்பாகும் தன்மை கொண்டது. மிக வேகமாக வளரக்கூடியது.

இத்தாவரங்கள் இறந்து மட்கிப்போவதால் நீர் அசுத்தமடைவதாக கூறப்படுகிறது. வெள்ளம் மாதிரியான நேரங்களில் நீரைத் தடுத்து ஊருக்குள் தண்ணீர் புகந்து நாசம் விளைவிக்கவும் வழியமைத்துக்கொடுக்கின்றன. ஆகாயத்தாமரை ஆக்கிரமித்த ஏரிகளில் மீன்பிடிக்கவோ படகுவிடவோ வாய்ப்பேயில்லை. இவை தவிர இன்னும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளன.

இவற்றை அடியோடு அழிக்க களைக்கொல்லிகளை பயன்படுத்த இயலும். ஆனால் நீர் உபயோகிக்க இயலாத விஷமாக மாறிவிடும் ஆபத்து உண்டு. பெரிய ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மொத்தமாக வேரோடு பிடுங்கி அழித்தாலும் ஒரே மாதத்தில் தன் ஆக்கிரமிப்பு வேலையை மீண்டும் தொடங்கிவிடும் இந்த பச்சை பிசாசுகள்! இதன் ஒற்றை விதை முப்பது ஆண்டுகள் சாகாவரம் பெற்றவை! ஒருவிதை போதும் பலநூறு ஏக்கர் நீர்நிலையை காலி பண்ண.. சரி இந்த அழிக்கமுடியாத நரகாசுரனை என்னதான் செய்வதாம்! ‘’அழிக்கமுடியாத அழிவு சக்திகளை ஆக்கசக்தியாக மாற்றமுடிந்தால் எப்படி இருக்கும்’’ என்று சிரித்துக்கொண்டே நம்மோடு பேசினார் தாராபுரம் முகமது கபீர்!
தாராபுரம் பகுதியில் விவசாய ஆலோசகராக இருப்பவர் அகமது கபீர். ஆகாயத்தாமரையை சில நல்ல காரியங்களுக்கும் உபயோகிக்க முடியும் , அதன்மூலம் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். அவை விவசாயிகளுக்கு நன்மை செய்யக்கூடியவை. ஆகாயத்தாமரையை பயன்படுத்தி பணம்கூட சம்பதிக்க முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்.

‘’இந்த ஆகாயத்தாமரை நீரை அதிகமாக உறிஞ்சுவதாக சொல்லப்பட்டாலும் அவை நீரை மட்டுமே உறிஞ்சுவதில்லை அதோடு நீரில் கலந்திருக்கிற ஆர்சனிக் மாதிரியான நஞ்சுப்பொருட்களையும் ஈயம் மாதிரியான சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையும் சேர்த்துதான் தன்னகத்தே எடுத்துக்கொள்கின்றன. இதன் காரணமாக யாருமே உபயோகிக்காத கால்வாய்களில் ஏரிகளில் இருக்கிற மிகமோசமாக தண்ணீர் மேலும் மாசடைவது தடுக்கப்படுகிறது. அதோடு வெயில்காலங்களில் குருவிகள்,கிளிகள்,கொக்குகள் முதலான பறவைகளுக்கு தண்ணீர் தரும் மிகமுக்கியமான வாட்டர் சோர்ஸாகவும் ஆகாயத்தாமரை இலைகள் திகழ்கின்றன, குருவிகள் தன் அலகால் இந்த இலைகளை ஒரு குத்து குத்தினால் போதும் தண்ணீர்கொட்டும்! அதோடு ஆகாயத்தாமரைக்கு கீழே நல்ல வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலையிருப்பதால் மீன்கள் வளரவும் ஏற்றதாக இருக்கும்.

கேரள மாநிலம் முழுக்க எங்கு பார்த்தாலும் எல்லா நீர்நிலைகளிலும் ஆகாயத்தாமரைகளை காண முடியும். ஆனால் அவற்றால் யாருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. அந்த மக்களுக்கும் அதுகுறித்த கவலைகள் கிடையாது. காரணம் அங்குள்ள நீர்நிலைகளில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும்.

தமிழ்நாடு மாதிரியான இடங்களில் மழைகாலங்களில் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் அது குறைந்துவிடும் என அஞ்சுகிறோம். நம்முடைய அச்சம் சரியானதுதான். தண்ணீர் குறையும் என்பது நிஜம்தான். அதே சமயம் இந்த ஆகாயத்தாமரைகள் அசுத்தமான நீர் நிலைகளில்தான் அதிகம் வளர்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சுத்தமான நீரில் இவை வளரவே வளராது. மக்கள் பயன்படுத்தும் ஏரிகளிலும் வளரும் ஆகாயத்தாமரைகளை கட்டாயம் அப்புறப்படுத்துவது அவசியம்.

ஆனால் யாருமே பயன்படுத்தாதா உதாரணத்துக்கு கூவம் மாதிரி இடங்களின் நீரை யாருமே பயன்படுத்தப்போவதில்லை அங்கே வளரும் ஆகாயத்தாமரைகளை அப்படியே விட்டுவிடலாம். சுற்றுசூழலுக்கும் பறவைகளுக்கும் நல்லதுதான். மழைக்காலங்களில் மட்டும் அவற்றை அகற்றிவிட்டால் வெள்ளம் உண்டாவதை தடுக்க இயலும்.

இந்த ஆகாயத்தாமரையை பயன்படுத்தி நம்மால் பயோ கேஸ் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரமாகவும் பயன்படுத்த முடியும். நாம் அதிகம் உபயோகிக்காத நீரில் இவை வளர்வதால் குறைந்தபட்சம் அந்த நீர் சுத்தமாகிறதே என நினைத்து மகிழ்ச்சியடையலாம்!,’’ என்கிறார் கபீர்.

கேரள மாநிலம் கொட்டாபுரத்தில் உள்ள கிட்ஸ் (KIDS) என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் அதை செய்தும் காட்டியுள்ளது. இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எந்திரந்தின் மூலமாக ஆகாயத்தாமரை கூழாக்கப்பட்டு, சரியான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வைக்கின்றனர். அதன்மூலமாக பயோ கேஸ் தயாரிக்கின்றனர் இந்த கிட்ஸ் அமைப்பினர். 700 லிட்டர் ஆகாயத்தாமரை கரைசலைக்கொண்டு 3600லிட்டர் பயோகேஸ் தயாரிக்கின்றனர். 15நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளை அகற்றி புதிய ஆகாயத்தாமரைகளை கொட்ட வேண்டும் அவ்வளவுதான்!

‘’எங்களுடைய கிட்ஸ் கல்லூரி கேன்டீனின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையையும் ஆகாயத்தாமரையைக் கொண்டே பூர்த்தி செய்கிறோம்’’ என்று பெருமையாக சொல்கிறார் அந்த அமைப்பின் ஜியார்ஜ்.

வெறும் பயோகேஸ் தயாரிப்போடு நின்றுவிடாமல் இந்த ஆகாயத்தாமரையை கொண்டு மண்புழு உரமும் தயார் செய்கின்றனர். நன்றாக அரைக்கப்பட்ட ஆகாயத்தாமரை செடிகளை சாணக்கரைசலோடு கலந்து தேங்காய்நாரின் மீது போட்டு வைத்து அதில் கொஞ்சம் மண்புழுக்களைவிட்டால் சில நாட்களில் மண்புழு உரம் தயார்! உரம் மட்டுமல்ல இந்த ஆகாயத்தாமரையை காயவைத்து அதன் நாரிலிருந்து நல்ல கைவினை பொருட்களை உள்ளூர் பெண்களை கொண்டே செய்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

‘’வாழைநார் போலவே இதற்கு நல்ல உறுதியான நார்த்தன்மை உண்டு. அதனால் இதன்மூலம் செய்கிற கைவினை பொருட்களுக்கு நல்ல மதிப்பு உண்டு, நம்மூர் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் இதனை செய்ய முன்வரலாம். அல்லது அரசே இதற்கென புதிய வாய்ப்புகளை உருவாக்கித்தர முன்வரவேண்டும், தற்போது கேவிஐசி ( காதி மற்றும் கிராமிய தொழில்கள் நிறுவனம்) எனப்படும் அரசு நிறுவனம் ஆகாயத் தாமரையிலிருந்து எரிவாயு தயாரிக்கப் பயன்படும் கலன்களை அறிமுகம் செய்துள்ளது. சாண எரிவாயு கலன்களிலிருந்து சிறிய மாறுதல்களுடன் இந்த எரிவாயு கலன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆகாயத்தாமரை இயற்கை உரம் அதிக அளவில் நுண்ணூட்ட சத்துகள் கொண்டுள்ளது. சேப்ரோபிக் பாக்டீரியா ஆகாயத்தாமரையை 60 நாட்களில் மக்கவைத்து சிறந்த இயற்கை உரமாக மாற்ற வல்லது. ஆகாயத் தாமரையை ஒரு களையாக, விவசாயத்திற்கு எதிராக கருதி வரும் நாம் அதன் நன்மைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் தாராபுரம் முகமது கபீர்.

நம்முடைய நீர்நிலைகளை காக்க என்னென்னவோ முயற்சிகளை நம் அரசும் தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் முயற்சிகள் மேற்கொண்டே வருகின்றன. இருப்பினும் இந்த ஆகாயத்தாமரை பிரச்சனைக்கு இதுவரை ஒரு நிரந்தரத் தீர்வு கிடைத்திடாத பட்சத்தில் கேரளாவின் கிட்ஸ் அமைப்பினை முன்மாதிரியாக கொண்டு இந்த ஆகாயத்தாமரையை நல்ல விதமாக உபயோகித்து இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் பயோகேஸ் உற்பத்தி மாதிரியான விஷயங்களை ஊக்கப்படுத்தலாம்.

(நன்றி - புதிய தலைமுறை)