Pages

31 July 2012

ஒலிம்பிக் - இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்?






கோலாகலமாக தொடங்கிவிட்டது 2012 ஒலிம்பிக் போட்டிகள். உலகத்தின் அனைத்துக் கண்களும் லண்டன் நகர் ,மீதுதான்! 205நாடுகள், பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள், லட்சக்கணக்கான விளையாட்டு ரசிகர்கள் என லண்டன் மாநகரமே திருவிழா மூடில்
இந்தியாவிலிருந்து 81 துடிப்பான இளம்வீரர்கள் பதக்க கனவுடன் லண்டனில் முகாமிட்டுள்ளனர். 13 வெவ்வேறு விளையாட்டுகளில் உலகின் முன்ணனி வீரர்களோடு போட்டிபோட அனைவரும் ரெடி! இந்த முறை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக போட்டிகளில் மிக அதிக எண்ணிக்கையிலான இந்திய வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக 250 கோடி செலவில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் அதிநவீன பயிற்சிக்கருவிகள், வெளிநாட்டிலேயே பயிற்சி எனப் பார்த்து பார்த்து பயிற்சி கொடுத்து ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் தயார் செய்திருக்கிறோம்!.

எப்போதும் போல ஒன்றிரண்டு பதக்கங்களோடு ஊர் திரும்ப போகிறோமா? அல்லது கைநிறைய பதக்கங்களைச் சுமந்து திரும்புவோமா?

இதுதான் இன்றைய மில்லியன் பவுண்ட் கேள்வி!

பத்து தங்கம்,இருபது வெள்ளி என அள்ளி வருவோம் எனக் கனவு காணவேண்டாம்.. ஆனால் சென்றமுறை ஒருதங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்றோம். இம்முறை அந்த எண்ணிக்கை நிச்சயம் ஏழு அல்லது எட்டு என்ற அளவிற்கு உயரும் என உறுதியாக நம்பலாம்.

சுட்டுத்தள்ளு!

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் 81பேரில் 11 பேர் துப்பாக்கிசுடுதல் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர். 2004ல் ரதோரின் வெள்ளி, 2008ல் அபினவ் பிந்த்ராவின் தங்கம் என இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் கடந்த பத்தாண்டுகளில் ஏறுமுகம்தான். பெய்ஜிங்கில் அபினவ் பிந்த்ரா செய்த சாதனையை இந்தமுறை ககன் நாரங் நிகழ்த்துவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த், ஆசியபோட்டிகள் எனச் சென்ற இடமெல்லாம் கலக்கினார் ககன். அவரிடமிருந்து ஒரு தங்கம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

ரஞ்சன் சோதிதான் 2012 ஒலிம்பிக்கிற்கு இந்தியா சார்பாக முதன்முதலில் தேர்வானவர். தேர்வானதுமே உடனடியாக பயிற்சியை தொடங்கி, ஒரே ஆண்டில் 25கிலோ எடை குறைத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் பனிரெண்டு மணிநேர கடும் பயிற்சி! ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்ற ரஞ்சன் சோதி இம்முறை போட்டியிடப்போகிற வீரர்கள் பலரையும் உலகசாம்பியன்ஷிப்பிலேயே ஓட ஓட விரட்டியவர்.

இவர்கள் தவிர்த்து சாகன் சௌத்ரி, அன்னுராஜ் சிங் என பெண்கள் அணியும் செம ஸ்ட்ராங். எப்படியும் இரண்டு அல்லது மூன்று பதக்கங்களை நிச்சயமாக இப்பிரிவில் எதிர்பார்க்கலாம்.

வச்ச குறி தப்பாது!

20 ஆண்டுகளுக்கு முன்பு பார்சிலோனா ஒலிம்பிக்கின் வில்வித்தைப்போட்டியில் நூலிழையில் வெண்கல பதக்கத்தினை தவறவிட்டவர் லிம்பா ராம். இந்திய வில்வித்தை அணியின் தற்போதைய பயிற்சியாளர். ‘’இப்போது எல்லாமே மாறிவிட்டது, பயிற்சியில் தொடங்கி நம் நம்பிக்கைகள் வரை.. எல்லாமே, இம்முறை வரலாறு மாற்றி எழுதப்படும்’’ என நம்பிக்கையோடு பேசுகிறார்.

தீபிகா குமாரி,லைஸ்ராம் பாம்பாய்ல தேவி,சுக்ரோவோலு ஸ்வ்ரோ என மூன்றுபேர் கொண்ட பெண்கள் அணி அவ்வளவு எளிதில் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுவிடவில்லை. சென்ற ஆண்டு ஜூலையில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கங்களை வென்று முழுபலத்துடன் ஒலிம்பிக்கில் நுழைந்துள்ளனர்.

உலக அளவில் வில்வித்தையில் இந்தியாவின் 18வயது தீபிகா குமாரிதான் நம்பர் ஒன்! கிராமத்தில் குறிவைத்து மாங்காய் அடித்துக்கொண்டிருந்த ஏழைச் சிறுமி இன்று ஒலிம்பிக் வரை உயர்ந்து நிற்கிறார். தீபிகா பதக்கம் வெல்லுவார் என இப்போதே சொல்லிவிடலாம்.
ஆண்கள் அணியில் ஜெயந்தா தலுத்கர் தவிர மற்ற இருவரும் நல்ல ஃபார்மில் இல்லை என்பதுதான் மிகப்பெரிய குறை. வில்வித்தைப்போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஆறுபேரில் நான்குபேருக்கு இதுதான் முதல் ஒலிம்பிக். ‘சர்வதேச போட்டிகளில் அனுபவமின்மை’தான் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. ஆண்கள் அணியைவிட பெண்கள் அணியின் சூப்பர் ஃபார்ம் நிச்சயம் இந்தியாவுக்கு இந்த முறை வில்வித்தையில் இரண்டு பதக்கங்களாவது உறுதியாக கிடைக்கும்!

ஒவ்வொரு குத்தும் பதக்கம்!

ஒரு ஒலிம்பிக் பதக்கம் என்ன செய்துவிடும்? இந்திய குத்துச்சண்டை விளையாட்டின் முகத்தையே மாற்றிக்காட்டியிருக்கிறது ஒரு வெண்கலப்பதக்கம். கடந்த ஒலிம்பிக் போட்டியில் விஜேந்தர் சிங் பீஜிங்கில் ஜெயித்த ஒற்றை வெண்கலப்பதக்கம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. நான்கே ஆண்டுகளில் இந்தியா ஏகப்பட்ட சாம்பியன்களை உருவாக்கி வைத்திருக்கிறது. இவர்களெல்லாம் சும்மா ஏனோதானோ லோக்கல் சாம்பியன்கள் கிடையாது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தகுதிகள் கொண்ட ரியல் சாம்பியன்ஸ்.

இந்த ஒலிம்பிக்கில் எட்டு இந்திய வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் விஜேந்தர் தவிர்த்து மற்ற அனைவரும் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வது இதுதான் முதல்முறை! பெண்களுக்கான போட்டியில் (51கிலோ எடைப்பிரிவு) போட்டியிடும் மேரிகோம் பற்றி சொல்லவே வேண்டாம். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை. தொடர்ந்து வெற்றிகளை குவித்துவருபவர்.

விகாஸ் கிருஷ்ணன் தொடர்ந்து சர்வேதசபோட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் திறமை கொண்டவராக இருக்கிறார். உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றது சமீபத்தியசாதனை. இந்த ஹரியானா பையன் நிச்சயம் இந்தியாவுக்கு பெருமைசேர்ப்பான் என்று நம்பலாம்!

கடந்த ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் இந்தியாவின் முதல் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங் தகுதிசுற்றுப்போட்டிகளில் சொதப்பினாலும் அதை சரிசெய்ய கடும் பயிற்சியில் ஈடுபடுவதாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

இவர்களைத்தவிர தேவேந்த்ரோ சிங்,ஜெய்பக்வான்,மனோஜ்குமார்,சுமித் சங்வான் என ஒரு பயமறியாத இளமைபட்டாளமே தங்களுக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறது, எட்டில் இரண்டு பேர் நன்றாக ஆடினாலும் கூட இரண்டு பதக்கமாகவது கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்!

இறகுபந்து தேவதைகள்!


கடந்த பீய்ஜிங் ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறியவர் சாய்னா நெக்வால். அதற்கு பிறகு 15 சாம்பியன் பட்டங்களை வென்று அசுர ஃபார்மில் இருக்கிறார். சென்ற மாதம் மட்டுமே இரண்டு சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார். இந்த இரண்டு வெற்றிகள் ஒலிம்பிக் நேரத்தில் கிடைத்திருப்பது பதக்க வாய்ப்பினை பலமடங்கு அதிகமாக்கியுள்ளது. இதே ஃபார்மில் ஆடினால் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் நிச்சயம். அதே நேரம் சீனாவின் யிகான் மட்டும்தான் சாய்னாவுக்கு இருக்கிற ஒரே கண்டம். இதுவரை அவரோடு பலமுறை மோதியும் எந்த போட்டியிலும் சாய்னாவால் தோற்கடிக்கவே முடிந்ததில்லை. அவருடனான போட்டியில் கூடுதல்கவனம் செலுத்தி ஆடவேண்டியதாயிருக்கும்.

சாய்னா ஒற்றையரில் கில்லியென்றால் ஜ்வாலா குட்டாவும் அஸ்வினி பொன்னப்பாவும் இரட்டையரில் புலிகள். கடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்த இரட்டையர் ஜோடி அதே மேஜிக்கை லண்டனிலும் நிகழ்த்த்தினால் பாட்மின்டனில் நமக்கு முதல்தங்கமாக அமையலாம். இப்போதிருக்கும் ஃபார்மோடு நம் வீரர்கள் ஆடினால் பேட்மின்டனில் மட்டுமே இரண்டு பதக்கங்கள் இந்தியாவின் பதக்க கணக்கில் சேரும்.

நம்பிக்கையின் கிடுக்குபிடி!

மல்யுத்த விளையாட்டில் இதுவரை இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. 1952 கே.டி.ஜாதவ் ஒரு வெண்கலமும் அதற்கு பிறகு காத்திருந்து காத்திருந்து 56 ஆண்டுகளுக்கு பிறகு பீய்ஜிங்கில் சுஷில்குமார் வென்றதும்தான் தற்போதைய நிலை! 2008க்கு பிறகு இந்தியாவில் மல்யுத்த விளையாட்டின் போக்கில் மிகப்பெரிய மாற்றத்தினை காணமுடிந்தது. அதன் பலனை 2010 காமன்வெல்த் போட்டிகளில் தெரிந்தது. காமன்வெல்த் போட்டிகளில் 19 பதக்கங்களை வென்றது நம் இந்திய அணி அதில் பத்து தங்கம்.

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற சாம்பியன்களில் நான்குபேர் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவுள்ளனர். 2010ஆம் ஆண்டு சுஷில் குமார் மாஸ்கோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். உலக மல்யுத்த அரங்கில் இந்தியர்களின் பலத்தினை உணர்த்துவதாக இருந்தது. ஒலிம்பிக்கில் விளையாட தகுதிபெற்ற வீரர்கள் அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் அதிநவீன வசதிகளுடன் மிகச்சிறந்த பயிற்சியாளர்களின் உதவியோடு பயிற்சி பெற்றுள்ளனர்.

பதக்கம் வெல்லும் வாய்ப்பிருக்கிற வீரர்களில் சுஷில்குமார் நிச்சயம் இடம்பெறுவார். இவர்தவிர யோகேஸ்வர் தத் மற்றும் நர்சிங் யாதவும் வெற்றிபெறும் வாய்ப்புகள் அதிகம். இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இருக்கும் மல்யுத்த வீராங்கனை கீதாபோகத்தான். ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதே இந்திய அளவில் பெரியசாதனைதான். சுஷில்குமார் அல்லது யோகேஸ்வர் தத் இருவரில் ஒருவரிடமிருந்து ஒரு பதக்கமாவது நிச்சயம் கிடைக்கும். மற்றவீரர்களின் மேல் நம்பிக்கையிருந்தாலும் பதக்கவாய்ப்பு குறைவே.

தடகள அனுபவம்!

தடகளப்போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு ஒலிம்பிக்கிற்கு செல்வதும் வெறுங்கையோடு திரும்புவதும்தான் வாடிக்கை. மில்கா சிங் தொடங்கி பிடி உஷா,ஸ்ரீராம்சிங் என நீளும் பட்டியிலில் பலரும் கடைசிவரை போராடி பதக்கமின்றி திரும்பியவர்களே! நம்முடைய ஆற்றலை பதக்கமாக மாற்றும் ரகசியம் நம்மவர்களுக்கு இன்னும் பிடிபடவே இல்லை. அதனாலேயே இந்தமுறையும் நம்மிடம் இப்பிரிவில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை.

நம்முடைய இளம் வீரர்களான டின்ட்டு லூகா,ஓம்பிரகாஷ்,குர்மீத் சிங்,தமிழக வீரர் ரெஞ்சித் மகேஸ்வரி மாதிரியான இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய அனுபவமாகவும், வெளிநாட்டு வீரர்களோடு போட்டி போடும்போது தங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இப்போட்டிகள் அமையலாம். அது அடுத்த ஒலிம்பிக்கில் உதவும்.

வட்டு எறிதல் வீரர்களான விகாஸ் கௌடாவும் கிருஷ்ணபூனியாவும் ஒரளவு நம்பிக்கை தருகின்றனர். விகாஸ் கௌடா அமெரிக்கவாசி.. அண்மையில் உலகசாம்பியன்ஷிப்பில் ஏழாமிடம் பிடித்தவர். அமெரிக்காவிலேயே தங்கி முன்னாள் உலக சாம்பியன் ஜான் காடினோவிடம் பயிற்சி பெற்றுவருகிறார். கிருஷ்ணபூனியா தொடர்ந்து இந்தியாவுக்காக காமன்வெல்த் போட்டிகளில் தொடங்கி பதக்கங்களை குவித்து வருபவர். இவருடைய பயிற்சியாளரும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான மேக் வில்கின்ஸ். அண்மையில் அமெரிக்காவில் நடந்த போட்டியொன்றில் தேசிய சாதனை ஒன்றை முறியடித்தார். ஒலிம்பிக் நேரத்தில் இது அவருக்கு நிச்சயம் ஊக்கமளிக்கும். இவர்கள் இருவரில் ஒருவராவது ஒரே ஒரு வெண்கலம் வென்றால் கூட நாம் நிறையவே பெருமை பட்டுக்கொள்ளலாம்.

கிடைத்தால் லாபம்!

கர்ணம் மல்லேஸ்வரி பளுதூக்குதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்று 12 வருடமாகிவிட்டது. சிட்னியில் வெண்கலபதக்கம் வென்றபோது நாடே மகிழ்ச்சியில் கொண்டாடியது. அதற்கு பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் எத்தனை எத்தனை பளுதூக்கும் வீரர்கள் புதிது புதிதாக உருவானார்கள். குஞ்சராணி தேவி, மோனிகா என சாம்பியன்கள் உருவாகி.. பின் எல்லாமே மாறியது. மோசமான பயிற்சியாளர்களால் ஊக்கமருந்து பிரச்சனையில் இந்தியாவின் பளுதூக்கும் விளையாட்டு சரியத்தொடங்கியது. எத்தனை சாம்பியன்கள் எவ்வளவு சாதனையாளர்கள் தொடர்ந்து தடைபெற்று.. இன்று பளுதூக்குதலில் நம்மிடம் சாம்பியன்களே இல்லை! இதோ இந்த ஒலிம்பிக்கில் இரண்டே பேர்தான் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த இருவர் மீதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ரவிக்குமார் இளம் வீரர், சோனியா சானு அனுபவசாலி, ஆனால் இருவரும் உலக சாம்பியன்களின் சாதனைகளின் அருகில் கூட இல்லை!

ஊரே வேடிக்கை பார்த்த பெயஸ்-பூபதி குடுமிப்பிடி சண்டைகள் ஓய்ந்து தீர்ந்து, ஒருவழியாக யார்யார் யாரோடு விளையாடுவது என்பது கடைசியில்தான் முடிவானது என்பதால் போட்டியில் ஆடவுள்ள சானியா மிர்சாவே வே பதக்கம் கிடைப்பதுலாம் கொஞ்சம் கஷ்டம்தாங்க என ஒப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துவிட்டார். போபண்ணா-பூபதி ஜோடி இன்ப அதிர்ச்சிதரலாம்.

இன்னொரு பக்கம் ஹாக்கியில் கடந்த சிலவருடங்களாக ஏற்ற இறக்கங்களோடு ஆடிவருகிறது நம் இந்திய அணி. வெளிநாட்டு பயிற்சியாளர் நாப்ஸின் வருகைக்குப்பின் ஓரளவு வெற்றிகள் கிடைத்தாலும் முக்கிய போட்டிகளில் சொதப்பலோ சொதப்பலாக ஆடுகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின் வென்ற முதல் ஒலிம்பிக் பதக்கம் ஹாக்கியில்தான்.. அதுவும் இங்கிலாந்தில்தான்! மீண்டும் அதேஇங்கிலாந்தில் 2008 சோகத்திற்கு (தகுதியேபெறவில்லை) இம்முறை விளையாடவுள்ளது. இந்தியா விளையாடும் குரூப்பில் கொரியா,ஜெர்மனி,நியூஸிலாந்து மாதிரியான பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குரூப் லெவல் தாண்டுவதே கஷ்டம்தான். வெண்கலம் வென்றாலே கொண்டாடலாம்!

இவர்கள் தவிர்த்து நீச்சலில் சிங்கிளாக இடம்பிடித்திருக்கிறார் ககன் உலால்மத், இவர் உலகின் முண்ணனி வீரர்களோடு போட்டி போட்டு முதல் பத்து இடங்களுக்குள் வந்தாலே பாராட்டலாம். ஜூடோவில் சண்டையிட காத்திருக்கும் வீராங்கனை கரிமா சவ்த்ரி உலக ரேங்கிங்கில் 88வது இடத்தில் இருக்கிறார். டேபிள் டென்னிஸில் விளையாடவுள்ள சோமய்ஜித் கோஸ் மற்றும் அங்கிதா தாஸ் இருவருமே மிக இளம் வீரர்கள் பதக்கம் வெல்லுவார்கள் என்று எதிர்பார்ப்பது குருவிதலையில் பனங்காயை வைப்பது போலதான்! படகுவிடும் போட்டிக்காக ஆந்திராவை சேர்ந்த மூன்று பேர் தேர்வாகியுள்ளனர், போட்டியில் 16வது இடம் பிடித்தாலே மகிழ்ச்சிதான் என்று பேட்டியளித்துள்ளனர்.

பதக்க வாய்ப்புகள் இல்லை என்றபோதும் ஒலிம்பிக்கில் விளையாட அதுவும் பல்வேறு விதமான போட்டிகளுக்கு இந்திய வீரர்கள் தேர்வாகியிருப்பதும், உலக சாம்பியன்களோடு போட்டி போட வாய்ப்புக்கிடைத்திருப்பதுமே நல்ல துவக்கம்தான்.

நாம் பதக்கம் வெல்கிறோமோ இல்லையோ இந்தியா உலக விளையாட்டரங்கில் தன்னை நிரூபிக்க தயாராகிவிட்டது என்பதையே இந்த ஒலிம்பிக் உணர்த்துகிறது. அதிக எண்ணிக்கையில் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்களை தயார் செய்ய கோடிகளை கொட்டவும் தயாராகிவிட்டது நம் நாடு!

இந்தியா இப்போதே 2020 ஒலிம்பிக்கிற்காக திட்டமிட தொடங்கி இருக்கிறது.. ஆயிரம் கோடிரூபாய் செலவில் சீனா ஐரோப்பாவைப்போல குழந்தைகளாக இருக்கும்போதே ஒலிம்பிக்கிற்கு தயார்படுத்தும் விஷன் 2020 திட்டத்தினை செயல்படுத்த இந்திய விளையாட்டுத்துறை திட்டமிட்டுவருகிறது. பேசத்தொடங்கிவிட்டோம்.. செயலிலும் காட்டினால் வருங்காலத்தில் ஒற்றை இலக்க பதக்க எண்ணிக்கை மூன்றிலக்கத்திணை எட்டும் என்பது நிச்சயம்!


(சென்றவாரம் வெள்ளியன்று புதியதலைமுறை வார இதழில் வெளியான என் கட்டுரை. புதியதலைமுறைக்கு நன்றி)