சில தூரத்து சொந்தங்களோடு அதிகம் பேசிபழகியிருக்கமாட்டோம். ஆனால் அவர்களை பற்றி நினைத்தாலே மிக நெருக்கமாக உணருவோம். அதுபோலதான் எனக்கு பிரபல எழுத்தாளர் ராஜூ முருகனும்.
நண்பர்களோடு விகடன் குறித்து பேசிக்கொண்டிருந்தால் நிச்சயம் வட்டியும் முதலும் பற்றி எல்லோருமே ஒரு முறையாவது பேசுவதை கவனித்திருக்கிறேன். என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல.. இந்த மனுஷனுக்குள்ளயும் ஒரு மந்திரக்காரன் இருந்திருக்கிறான். தமிழகத்தில் விகடன் வாசிக்கிற வாசகர்களின் அன்பை ஒட்டுமொத்தமாக வசூல் பண்ணியிருக்கிறார் இந்த லூசுப்பையன்.
''மச்சி விகடன்ல வட்டியும் முதலும் படிக்கிறீயா இன்னா மாரி எழுதறான்யா அந்தாளு.. பின்றான்.. மிஸ் பண்ணாம படிச்சிடுவேன்.. விகடன் வாங்கறதே அதுக்கொசரம்தான்'' என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன். அந்த நேரத்தில், என்னமோ என்னுடைய கட்டுரையையே புகழ்ந்து பேசுவதாக நினைத்து புளங்காகிதம் அடைந்துவிடுவேன். சிலிர்த்துக்கும்! காரணமே கிடையாது.முதல் பாராவில் சொன்னதுதான் காரணமாக இருக்கும்.
''மச்சி தட் கை ஈஸ் மை பிரண்ட் டா.. நானும் அவரும் இப்டி இப்டி, அவரு எழுதற கட்டுரைக்கெல்லாம் நான்தான் ஐடியா குடுப்பேன். நம்ம கைவண்ணமும் அதுல இருக்குடா'' என பீலாவிடுவேன். கொஞ்சம் தூரத்து நண்பர்கள் என்றால் பேசும்போது இன்னும் கூட நாலைந்து பிட்டுகள் எக்ஸ்ட்ராவாக போடுவதும் உண்டு.
''டே நிஜமாவா.. அவர் ஃபோன் நம்பர் குடுடா'' என்று கேட்ட பெண் தோழிகள் கூட உண்டு. அன்பார்சுனேட்லி என்னிடம் அவருடைய எண் இருந்ததேயில்லை.
சொல்லப்போனால் அவரை நான் ஒரே ஒரு முறை தேவி திரையங்க வாயிலில் சந்தித்திருக்கிறேன். நீங்கதான் அதிஷாவா என அவரும் நீங்கதான் அவரா என நானும் ஆச்சர்யமாக பேசியதுமட்டும்தான் நினைவிருக்கிறது. என்னுடைய வலைப்பூவை வாசிப்பேன் என்றார். அதற்கு பிறகு செல்போனில் பேசியதும் கூட ஒருமுறைதான் என நினைக்கிறேன். அந்த பேச்சும்கூட சில நொடிகளைத்தாண்டியதில்லை.
மற்றபடி அவரோடு நெருங்கிப்பழகவோ பேசவோ எனக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. அதற்கான தேவையும் இருந்ததேயில்லை. அவருதான் வாராவாரம் நம்மகிட்ட சொந்தக்கதை சோகக்கதைனு எல்லாத்தையும் வட்டியும் முதலுமா பேசித்தள்றாரே என்று நினைத்திருப்பேனாயிருக்கும். இருந்தும் அவரோடு பலநாள் பழகிய ஒருநண்பனைப்போல உணர்ந்திருக்கிறேன். இதற்குமுன் அப்படி ஒரு உணர்வு எழுத்தாளர் பாஸ்கர்சக்தியிடம் உருவாகியிருக்கிறது.
விகடனில் வட்டியும் முதலும் தொடர் ஆரம்பித்த புதிதில்.. அதை படித்து செம காண்டேனான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் அதற்கு முன்பு செய்துவந்த லூசுப்பையன் பகுதி என்னுடைய வாழ்நாள் ஃபேவரட். பிரமாதமான நகைச்சுவையுணர்வும், கொஞ்சமும் சலிக்காத எழுத்து நடையும், எழுதுவது நகைச்சுவையே என்றாலும் தன்னை அப்டேட் செய்துகொண்டு எது சொன்னாலும் லேட்டஸ்ட் விஷயங்களோடு சொல்கிற திறனும் ரொம்ப ஈர்த்தது.
அப்படிப்பட்ட ஒரு திறமைசாலியை ஏன்தான் இந்த விகடன் ஆசிரியர் சீரியஸா எழுதவச்சு கடுப்படுக்கிறாரோ என தோழரிடம் நொந்துபோய் பேசியிருக்கிறேன். அதற்கு காரணமிருந்தது. அந்தத்தொடரை படிக்க தொடங்கினாலே ஒரு சோகம்தான்.
வாராவாரம் ஏன்தான் இந்தாளு இப்படி கண்ணீர் பழத்தை பிழிந்து ரசம் வச்சி ஊத்து ஊத்துனு ஊத்துறாரு.. காமெடியா எதுனா எழுதலாம்ல.. ஜாலியாருக்கும் என்று வருத்தப்பட்டதும் உண்டு. ஆனால் வாரங்கள் செல்ல செல்ல இந்த வட்டியும் முதலும் அவருடைய ரசிக வாசகர்களைப்போலவே என்னையும் வெகுவாக கவர்ந்தது.
சில நேரங்களில் அழவைப்பார், சில நேரங்களில் சிந்திக்க வைப்பார். சமயங்களில் சிரிக்க வைப்பார். பகிர்ந்துகொள்வார். கவிதையே பிடிக்க எனக்கும் கூட இந்தத்தொடரில் அவர் பகிர்ந்துகொண்ட கவிதைகளை பிடித்தது.
அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் மற்ற மனிதர்களின் மீதான அன்பும் கரிசனமும் கருணையும் பொங்கி வழிவதைக்கண்டேன். நட்பு அன்பு உறவுகள் ஊர்பாசம் ஊடல் கூடல் காதல் என எல்லாமே நிறைந்திருந்தது. இவர் ஒரு எழுத்து விக்ரமனாக இருப்பாரோ என்றுகூட தோன்றும். இத்தொடரை படிக்கும் போது சமயங்களில் பின்னணியில் எஸ்ஏ ராஜ்குமாரின் கோரஸ் இசையும் அந்த லாலாலாவும்க்கூட கேட்கும்னா பாருங்களேன்!
அதற்காக ஒரேயடியாக இதை சூப்பர் என்றும் சொல்லிவிடமுடியாது. ஒரு சிலவாரங்களில் செம மொக்கையாகவும் இருக்க தவறியதில்லை. ச்சே இந்தவாரம் ஏமாத்திட்டார்பா இந்தாளு.. வரவர ரொம்ப போரடிக்கிறாரு.. ஒரே ரீப்பிட்டு அப்பீட்டு! என்று சலித்துக்கொள்வேன்.
இந்த வார விகடனில் அவருடைய தொடரில் என்னுடைய பெயர் ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக இருந்தது. வரலாற்றுல இடம்பிடிச்சிட்டேன் போலனு நினைத்துக்கொண்டேன்.
ஊருக்குள்ள பொய் சொல்லி ஏமாத்தின பயலுக எல்லாருமே மொத்தமா போன் போட்டு ''மச்சி நீ சொன்னப்ப கூட நம்பலடா.. இப்ப நம்புறேன்டா'' என்கிறார்கள்.
''ஆமான்டா மச்சி.. நான்கூட உங்கிட்ட சொல்லும்போது நம்பல.. ஆனா இப்ப நம்புறேன்டா'' என்று பதில்சொல்கிறேன். அது அவர்களுக்கு புரியாது. எனக்கு புரியும். உங்களுக்கும் புரியக்கூடும்.