Pages

19 January 2013

புத்தகக் காட்சி - 2013






கத்தியை தீட்டாதே தம்பீ புத்தியை தீட்டு என்று அடிக்கடி யாராவது சொல்வார்கள். அப்படிப்பட்ட புத்தியை கூர் தீட்டுகிற மகத்தான இடமாக புத்தக கண்காட்சி அமைந்திருக்கிது. முதல் நாள் போனபின் மீண்டும் அந்தப்பக்கம் கால் வைக்கிற எண்ணமேயில்லை.

பார்க்கிங்குக்கு பத்துரூபா சொளையாக கொடுக்க வேண்டியிருக்கிறது. இருபது ரூபா புத்தகம் வாங்கினால் பத்து பர்சென்ட் தள்ளுபடியில் இரண்டுரூபா மீதி கிடைக்குமா என ஏங்கி ஏங்கி கால்கடுக்க காத்திருந்து போராடி வாங்கி செல்லுகிற என்னைப்போல ஏழைகளுக்கு இந்த சத்யம் தியேட்டர் பார்க்கிங் கட்டண முறைமைகள் எப்படி ஏற்றுக்கொள்ள தக்கதாக அமையும்.

அதுபோக வண்டி நிறுத்துமிடத்திலிருந்து பல பர்லாங்குகள் நடந்துதான் புத்தக கண்காட்சியை அடைய வேண்டிய கொடுமைவேறு. என்னைப்போன்ற இளவட்டங்கள் பரவாயில்லை, முதியவர்கள்தான் பாவம். அவர்களுக்கென்று பஸ்வசதிகள் ஏற்பாடு செய்திருக்கலாம். அரங்கை அடைவதற்குள் ஆறு மலை ஏழு கடல் நாலைந்து டைனோசர்களையெல்லாம் தாண்டி செல்ல வேண்டியிருக்கிறது. ஒருவழியாக உள்ளே நுழைந்துவிட்டோமா!

நுழைந்தால் எங்கே டிக்கட் வாங்குவது என்று தெரியாமல் ஒரு அரைமணிநேரம் தவித்து. பிறகு ஒருவழியாக டிக்கட்டையும் வாங்கி உள்ளே நுழைந்தால் கண்ணை கட்டி கவர்மென்ட் ஆபீஸில் விட்டதுபோல எந்தபக்கம் இன்சைட் எந்தபக்கம் அவுட்டுசைட் என்பதும் விளங்காமல் தலை கிறுகிறுக்கிறது.

ஒருவழியாக ஏதோ ஒரு இன்னை பிடித்து உள்ளே நுழைந்தால் எப்போதும் போல மனுஷ் உயிர்மை வாசலில் தன்னுடைய ரசிகைகளுக்கு ஆட்டோகிராப் போடுவதில் பிசியாக இருந்தார். தூரத்தில் சாரு நடந்துவருகிறார். அடடா.. ஏதோ களேபரம் நடக்கபோகிறது என்று ஆர்வத்தோடு காத்திருந்தால்.. ஒரு மந்தையில் இரண்டு ஆடுகள்.. அதே சீன்தான். சந்தித்துக்கொண்டன. இரண்டும் சந்தித்தபோது.. நிறைய பேசினர். எத்தியோப்பிய மன்னரும் எத்தியோப்பிய எழுத்தாளரும் சந்தித்து பேசிக்கொண்ட அரிய காட்சியை நண்பர் புகைப்படமாக எடுத்திருக்கிறாராம்.வரலாற்று சிறப்புமிக்க அந்த புகைப்படத்தை விரைவில் வெளியிடுங்க முனீஸ்வரா!

ஞானபானுவில் ஞாநி உற்சாகமாக அமர்ந்திருந்தார். இந்த ஆண்டும் பாரதியார் படம் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. கொஞ்சம் விலையை ஏற்றலாம். ஐந்துரூபாய்க்கு வாங்கிப்போய் எந்த காப்பிரைட் உரிமையும் இல்லாமல் சகட்டுமேனிக்கு உபயோகிப்பதையாவது கட்டுபடுத்தலாம். பாவம் பாரதி. இந்த வருடமும் ஞாநி தன் கடையில் வாக்கெடுப்பு நடத்துகிறார்.

கிழக்கு பதிப்பகத்திலும் விகடன் கடையிலும் எப்போதும் போல கூட்டம் கும்மி அடிக்கிறது. பத்ரி என்னை அழைத்து கிழக்கின் புதிய முயற்சியான டேப்லட்களில் புத்தக வெளியீடு குறித்து விளக்கினார். அதுகுறித்து தனியாக எழுதவேண்டும் என குறித்துக்கொண்டேன்.

காணும் பொங்கல் அன்று ஜெஜெ என்று கூட்டமாம். மாண்புமிகு அம்மா ஆட்சியில் மக்கள் எவ்வளவு சுபிட்சமாக இருக்கிறார்கள் பாருங்கள். கூட்டம் கும்மினாலும் யாரும் புத்தகமே வாங்குவதில்லையாம். இதற்கு நிச்சயமாக கலைஞர்தான் காரணமாக இருக்கவேண்டும். வாசலில் விற்கிற டெல்லி அப்பளத்தை இரண்டு கடி கடித்துவிட்டு ஓடிவிடுவதாக தகவல். பலரும் போன வருஷம் வாங்கின புக்கையே படிக்கல இதுல இந்தவருஷமுமா.. என்று சலித்துக்கொண்டனர். அதனால் கூட புத்தக விற்பனை குறைந்திருக்கலாம்.

உடுமலை டாட் காமில் ஒரு பேனர் பார்த்தேன். விஷ்ணுபுரம் விருது வென்ற கவிஞர் தேவதேவனின் புத்தகங்கள் இங்கு கிடைக்கும் என எழுதப்பட்டிருந்தது. விஷ்ணுபுரம் விருதுக்கு சந்தையில் நல்ல மரியாதைபோல! ஆச்சர்யமாக இருந்தது. பாவம் தேவதேவன். இன்னொரு கடையில் (இந்துபதிப்பகம் என்று நினைக்கிறேன்) உலக வரலாற்றிலேயே ரஜினிகுறித்து வெளியாகும் முதல் கவிதை நூல் என்று பேனர் வைத்து பயமுறுத்தினர்.

அஜயன் பாலா தன்னுடைய பதிப்பகத்திற்கென ஒரு ஸ்டாலை முதன்முறையாக எடுத்திருந்தார். சென்ற ஆண்டைப்போல ஆண்குறியை சித்தை மையபுனைவின் என்றெல்லாம் இந்த வருடம் அதிர்ச்சிகர புத்தகங்கள் வெளியிடவில்லை போல.. எம்ஜிஆர் எழுதிய ஒரு புத்தகமும் , அவரே எழுதிய உலக சினிமா இரண்டாம்பாகமும் ஈர்த்தன. வாங்கும் ஆசையிருந்தும் வாங்கவில்லை காசில்லை. அதோடு என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் இருவர் (பிரதாப்,பரணி) சந்தித்து நான் நன்றாக எழுதுவதாக பாராட்டி புகழ்ந்து கால்மணிநேரத்துக்கு மேலாக பேசினர். நான் அடக்கத்தோடு அதையெல்லாம் கேட்டு ரசித்தேன்.

நேற்று கிடைத்த இரண்டு மணிநேரத்தில் இவ்வளவுதான் சாத்தியமானது. இன்றும் போக நினைத்திருக்கிறேன். எல்லாம் வல்ல கர்த்தர் அதற்கு ஏற்பாடு செய்வார் என நம்புவோம். அல்லேலுயா. நேரம் கிடைத்தால் அடியேனின் அனுபவங்கள் இரண்டாம்பாகமும் இதே தளத்தில் வெளியாகலாம்.

முதல் வரியில் சொன்ன கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு என்கிற வரிகளுக்கிணங்க புத்தக கண்காட்சியில் புத்தியை ஓவராக தீட்டிவிட்டு வெளியே வந்தால்.. வாசலிலேயே கத்திகள் சாணை பிடிக்கிற புதிய மிஷின் அல்லது கருவி ஒன்றை விற்கிறார்கள். விலை இருபது ரூபாய்தான். விற்பவரே டெமோவும் செய்துகாட்டுகிறார். நன்றாக கத்தியை தீட்டுகிறது. கையில் சேஞ்சில்லாததால் நாளைக்கு வாங்கிக்கறேண்ணே.. என்றேன்.. சாவுகிராக்கி என மனதில் நினைத்திருப்பார். நமக்கென்ன!