Pages

28 August 2013

ரோல்நம்பர் - 21
தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் ஏகப்பட்ட கார்ட்டூன் தொடர்களில் இப்போதெல்லாம் அதிகம் கவர்வது ‘’ரோல்நம்பர்21’’ தொடர்தான். எப்போதும் ‘பென்10’ மட்டுமே போட்டு தாளிக்கிற கார்ட்டூன் நெட்வொர்க்கில் ஆசுவாசம் தரக்கூடியதாக இந்த கார்ட்டூன் தொடர் இருக்கிறது.

இந்தத்தொடரிலும் அதே புராணகாலத்து லிட்டில் கிருஷ்ணன்தான் நாயகன். ஆனால் கிருஷ்ணன் பள்ளியில் படிக்கிற ஏழை அநாதை மாணவனாக வருகிறான். தலையில் மயிலிறகு கிடையாது, ஆடம்பர உடைகள் இல்லை, கழுத்தில் டன்கணக்கில் நகைகள் இல்லை.. வெள்ளை சட்டையும் காக்கி டவுசரும் போட்ட சாதாரண பள்ளி மாணவனாக கிருஷ்ணன். அதுதான் இத்தொடரை மற்ற புராண நாயக கார்ட்டூன் தொடர்களிலிருந்து வேறுபடுத்துகிறது.

கிருஷ்ண புராணத்தின் மற்ற எல்லா பாத்திரங்களும் இத்தொடரில் இருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே இன்றைய யுகத்தில் வெவ்வேறு வேலை செய்கிறவர்களாக மாடர்ன் ஆசாமிகளாக வருகிறார்கள் என்பதுதான் இத்தொடரின் ஸ்பெஷாலிட்டி!

கிருஷ்ணனுக்கும் கம்சனுக்கும் நடக்கிற போட்டிதான் கதை. செத்துப்போன கம்சன் மீண்டும் பிறக்கிறான். கற்பனையான இன்றைய மதுரா நகரில் இருக்கிற அநாதை ஆஸ்ரம பள்ளியில் கம்ஷன்தான் பிரின்சிபால். இப்போது அவன் பெயர் கனிஷ்க்! அதே அநாதைவிடுதியில் தங்கி படிக்கிற அநாதை சிறுவன்தான் கிருஷ்ணன் இந்த ஜென்மத்தில் க்ரிஷ்.

மகாபாரத காலத்தில் செத்துப்போன கம்சன் மீண்டும் பூமியில் பிறந்து மனிதர்களை அடிமைப்படுத்தி பூமியை ஆட்சி செய்ய நினைக்கிறான். அதற்காக வெவ்வேறு திட்டங்களை தீட்டுகிறான். அதோடு பள்ளியில் இருக்கிற குழந்நைகளையும் தீயவர்களாக மாற்ற முனைகிறான். சம்பவாமி யுகே யுகே என்பதற்கிணங்க நம்ம கிருஷ்.. பள்ளி மாணவனாக இருந்தாலும் அவ்வப்போது கம்சனின் திட்டங்களை முறியடித்து உலகை காப்பாற்றுகிறான்! அதோடு குழந்தைகள் தீயவர்களாக மாறுவதையும் தடுத்து நிறுத்துகிறான். கம்சன் பாதாள உலகத்திலிருந்து வெளிக்கொணரும் கொடூர அரக்கர்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டுகிறான்.

கிருஷ் ஒரு தெய்வக்குழந்தை என்பது தெரியாமலேயே மற்ற பள்ளிச்சிறுவர்கள் அவனோடு நட்பாக இருக்கிறார்கள். பிங்கி என்கிற பெயரில் ராதையும், பப்லு என்கிற பெயரில் சுதாமனும், சுகி என்கிற பெயரில் நாரதரும் கிருஷ்ணனின் நண்பர்களாக பிறந்து அவனுக்கு உதவுகிறார்கள். பள்ளியில் கணக்கு வாத்தியாராக எப்போதும் குழந்தைகளை போட்டு படாதபாடு படுத்துகிறவனாக தாரகாசுரன் மறுபிறவி எடுத்து தாரக் என்கிற பெயரில் வருகிறான். இவை தவிர இன்னும் பல கிருஷ்ண புராண டிக்கெட்டுகளும் வெவ்வேறு பெயரில் இக்கதைகளில் இடம்பெறுகிறார்கள்.

அதோடு பள்ளிமாணவர்களுக்கிடையே நிகழும் சின்ன சின்ன பிரச்சனைகள், அவர்களுடைய அடிதடி ரகளைகள் என செம ஜாலியான கார்ட்டூன் தொடர் இது. சோட்டாபீம் தொடரில் வருகிற காலியாவை போல இத்தொடரில் வருகிற கோலு ஒரு மாணவ வில்லன். அவனுடனான கிருஷ்ணனின் மோதல்கள் சுவாரஸ்யமானவை.

இத்தொடரின் அனிமேஷனும் பழைய பாணியில் இல்லாமல் மிக நேர்த்தியாக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும். கிருஷ்ணர் கதை என்பதால் கதை எங்கும் நீலம் நிறைந்திருக்கும்படி இத்தொடருக்கான பின்னணி உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு பாத்திரத்துக்கும் இருக்கிற தனித்துவம் இத்தொடரை பெரியவர்களும் பார்க்கிற ஒன்றாக மாற்றுகிறது. குட்டீஸ்களோடு உட்கார்ந்து ஒருமுறை பாருங்கள் அருமையான அனுபவமாக இருக்கும்.

21 August 2013

இலிப்பூச்சி ஃப்ரை!

நேற்று பெசன்ட்நகர் கடற்கரையோரம் ஒரு அற்புதமான கடல் உணவு வாங்கிக்கொடுத்தார் தோழர் கவின்மலர். இலிபூச்சி ஃப்ரை என்கிற அது குட்டி குட்டி நண்டுகளை கொண்டு செய்யப்படுவது என்றார். அவருடைய தோழி ஒருத்தி அறிமுகம் செய்துவைத்ததிலிருந்து இந்தப்பக்கம் வந்தாலே இந்த இலிபூச்சி ஃப்ரையை ஒரு கை பார்க்காமல் போவதில்லை என்றார். இந்த இலிபூச்சியை பார்க்க கொஞ்சம் பெரிய சைஸ் கரப்பான்பூச்சிப்போலத்தான் இருந்தது. பார்த்ததும் பிடிக்கவில்லை.

இலிப்பூச்சியா? இழிபூச்சியா? எல்லிப்பூச்சியா? எலிப்பூச்சியா? அந்த பிராணியின் பெயர் எதுவென்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஃப்ளக்ஸ் போர்டில் MINI CRAB என்று எழுதப்பட்டிருந்தது. நண்டுபோலவும் இல்லாமல் கடம்பா மீன் போலவும் இல்லாமல்.. புதுமாதிரியாக இருந்தது இந்த இலிபூச்சி. பெயர் எதுவாக இருந்தால் என்ன? நமக்கு ருசிதானே முக்கியம்.

முதலில் அந்த இலிபூச்சி ஃப்ரையை கண்டு தயங்கினாலும் தோழரின் வற்புறுத்தலின் பேரில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பீஸை எடுத்து வாயில் போட்டேன். ஆஹா அமிழ்தினும் இனிய சுவை. அப்படி ஒரு அற்புத ருசி இலிபூச்சி என்கிற இந்த மினிநண்டுக்கு இருக்கிறது. கொஞ்சம் லேசான மொறுமொறுப்போடு கூடிய சுவையான ஓடுகள் மத்தியில் லேசான சதை... உப்பும் காரமும் தூக்கலான மசாலா...

ஆரம்பத்தில் இதை சாப்பிடலாமா வேண்டாம என்கிற தயக்கத்தில் ஒரு பிளேட்தான் ஆர்டர் செய்திருந்தோம். ''ஷேர் பண்ணிக்கலாம் தோழர்'' என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால் கடைசியில் முக்கால்வாசிக்கும் மேல் நானே காலி பண்ணிவிட்டேன். இக்கடையில் ஏதோ ஸ்பெஷல் மசாலா உபயோகிக்கிறார்கள் போல. காரசாரமாக இருந்தது. குடிவெறியர்களுக்கு அருமையான துணையுணவாக இருக்குமென்று தோன்றியது. குறிப்பாக சுண்டகஞ்சி மாதிரியான கடல்சார் மதுவகைகளுக்கு மிகச்சிறந்த துணையுணவாக இருக்கும்.

பெசன்ட்நகர் கடற்கரையோரம் இருக்கிற இந்தக்கடை மிகவும் பிரபலம் என்று தெரிந்தது. குறிப்பாக இலிபூச்சி ஃப்ரைக்காகவே மிகவும் ஃபேமஸ் என்றார் கடைக்காரர். அதோடு பல நடிகர்கள் குறிப்பாக அப்பாஸ் பிரபுதேவா முதலானோர் இரவு பதினோறு மணிக்குமேல் வந்து பார்சல் வாங்கிக்கொண்டு போவார்களாம். சிலர் தங்களுடைய வீட்டு விருந்துகளுக்கு குறிப்பாக குடிவிருந்துகளின் போது நபருக்கு ஆயிரம் ரூபாய் என்கிற கணக்கில் கடலுணவு ஆர்டர் பண்ணுவார்களாம்!

இக்கடையில் இலிபூச்சி தவிர்த்து மற்ற பல வகை மீன ஃப்ரைகளும் கிடைக்கிறது. கடலுணவுகளில் எனக்கு மிகவும் பிடித்த கடம்பா ஃப்ரையும், இறால் பொறியலும் ஒரு கை பார்த்தோம். அதற்கே வயிறு நிறைந்துவிட்டது. நல்ல சுவையான வஞ்சிரம் மீனும் கிடைக்கிறது. ஒரு பீஸ் நூறுரூவாயாம்! கிழங்கா,வவ்வால்,அயிலை முதலான மற்ற வகை மீன்களும் கிடைக்கின்றன. அவை ஒருபிளேட் ஐம்பதுரூபாய்தான்.

பீச்சாங்கரையோரம் இருக்கிற அனேக மீன் வறுவல் கடைகளுக்கு மத்தியில் இருக்கிறது இம்மீன் உணவுக்கடை. மனதில் பதிகிற மாதிரி ஒரு அடையாளம் சொல்ல வேண்டுமென்றால்... ''கனிமொழி மீன் வறுவல்'' கடைக்கும், ''பூஜா மீன்வறுவல் கடை''க்கும் நடுவில் இருக்கிறது அந்த மீன்வறுவல் கடை. கடையின் பெயர் ஆண்பெயர் என்பதால் எப்போதும் போல நினைவில் இல்லை. புவனோ பவனோ யுவனோ..ஏதோ ஆண்பெயர்.

பெசன்ட்நகர் பீச்சாங்கரை பக்கம் போனால் இந்த இலிபூச்சி ஃப்ரையை மிஸ்பண்ணிவிடாதீர்கள்.

13 August 2013

லுங்கி டான்ஸு... லுங்கி டான்ஸு...பாலிவுட் பானிபூரி மசாலாவை கோலிவுட் சரவணபவன் போண்டாவுக்குள் வைத்து திணித்து வேகவைத்துக் சாம்பாரில் முக்கி கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ். ஷாருக்கானை வைத்து எடுக்கப்பட்ட ஒரு மோசமான மொக்கையான லாஜிக்கேயில்லாத கிறுக்குத்தனமான தமிழ்ப்படம். ஆனால் வயிறுகுலுங்க சிரித்து சிரித்து ரசித்து பார்க்க கூடிய சூப்பர்ஹிட் ஹிந்திப்படம்.

ஷாருக்கானை அவருடைய படங்களை உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமென்றால் உங்களால் சென்னை எக்ஸ்பிரஸை நொடிக்கு நொடி ரசிக்க முடியும். ஷாருக்கானை உங்களுக்கு பிடிக்காதென்றால் ரொம்ப ரொம்ப நல்லது. இந்தப்படம் இன்னும் அதிகமாக உங்களுக்கு ரசிக்கும். உங்களுடைய இடது மூளை இயங்கவே இயங்காதென்றால் இது உங்களுக்கு நிச்சயம் அனுகூலம்தான். இப்படம் ஒரு மகத்தான காவியமாக இருக்கும்!

ஒரு மிகப்பெரிய ஸ்டார் ஆக்சன் படங்களில் நடித்தவர், படம் தொடங்கியதிலிருந்து வண்டுசிண்டுகளுக்கெல்லாம் பயப்படுகிறார். திடீரென கிளைமாக்ஸில் ஆயிரக்கணக்கானவர்களை அடித்து நொறுக்கி விஸ்வரூபம் எடுக்கிறார். பழைய ஃபார்முலாதான். அதற்கு நடுவில் முத்து படத்திலிருந்து ஒரு சீன், கில்லியிலிருந்து இரண்டு சீன், ஜப்வீமெட்டிலிருந்து நாலு சீன் என இன்னும் பல படங்களிலிருந்து நிறைய சீன்களை பொறுக்கிப்போட்டு கதை பண்ணியிருக்கிறார்கள். இருந்தாலும் படம் பார்க்கும்போது நமக்கு பிடிக்கிறது. படத்தின் கதை நம்மூர் சுபாஷ் (சத்ரியன் புகழ்!)

தங்கபலி என்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே யாரும் பெயர்வைக்கமாட்டார்கள் ஆனால் படத்தில் வருகிற நெடிதுயர்ந்த வில்லனுக்கு அதுதான் பெயர். பெருமாள் கோயில் பூசாரி பட்டை போட்டுக்கொண்டு பூஜை பண்ணுகிறார். திபெத் பக்கம் இந்தியா பார்டர் பக்கமாக இருக்கிற தமிழ்கிராமம். ஊர்பேர் கொம்பனாம்? அதுபோதாது என்று ‘விடம்பா’ என்ற பெயரில் கூட ஒரு தமிழ்கிராமம்.. ஊரில் சகலரும் ஐயர் ஐயங்கார்களாக நிறைந்திருக்கிறார்கள். இதுபோக இன்னும் பல லூசுத்தனமான லாஜிக் மீறல்கள் நிறைந்திருக்கின்றன. இருந்தும் படம் ரசிக்கிறது.

தீபிகா படுகோன் போல எப்போதும் மார்பு தெரிய மாராப்பும், தொப்புளுக்கு கீழே இரண்டு அடி தள்ளி தாவணி போட்ட பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது. அவருடைய மேக் அப் கொஞ்சம் ஒல்லியான ஹேமாமாலினியையும் கவர்ச்சியான ஸ்ரீதேவியையும் நினைவூட்டுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் வந்தாலும் பார்த்துகொண்டே இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. படத்தின் மிகப்பெரிய பலமே தீபிகா படுகோனேவின் அழகுதான். அதிலும் லுங்கி கட்டிக்கொண்டு ஆடும்போது... ம்ம் க்ளாசிக்.

ஷாருக்கானைத்தவிர வேறு யார் இந்தப்படத்தில் நடித்திருந்தாலும் இப்படம் நன்றாக இருந்திருக்காது. ஏனென்றால் இது ஷாருக்கானுக்கே ஷாருக்கானுக்கான படம். ஒவ்வொரு காட்சியிலும் ஷாருக் நிறைந்திருக்கிறார். படம் முழுக்க ஷாருக்கான் நடித்த தில்வாலே துல்ஹனியாவில் தொடங்கி மைநேம்ஈஸ் கான் வரை சகல படங்களையும் கலாய்க்கிறார்கள்.

படத்தின் வசனங்கள் அத்தனையும் அப்படியே கிரேஸிமோகன் டைப். உதாரணத்துக்கு. ‘’எல்லாரும் டிரைனை மிஸ்பண்ணிட்டு ப்ளாட்பாரத்துல நிப்பாங்க.. நான் ப்ளாட்பாரத்தை மிஸ்பண்ணிட்டு டிரைன்ல நிக்கறேன்’’ என்று ஒரு வசனம் வருகிறது. படம் முழுக்க இதுமாதிரியான ஒன்லைன்கர்கள் நிறைந்துகிடக்கிறது. எல்லாமே ரகளை ரகம்.

பச்சை பசேல் எழிலான லொக்கசேன்கள். எப்போதும் எல்லா ஃப்ரேமிலும் நிறைத்திருக்கிற நிறங்கள் என ஒளிப்பதிவாளர் கஷ்டபட்டு வேலை பார்த்திருக்கிறார். படம் முழுக்க எல்லா காட்சியிலும் ஷாருக்கான்,தீபிகா தவிர்த்து ஒரு 500பேராவது ஃப்ரேமை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த 500 பேரில் ஒருவராக நம்முடைய மெகாசீரியல் நடிகர்கள் வந்துபோகிறார்கள் (சத்யராஜ், டெல்லிகணேஷ் உட்பட) .

படத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ராகுல்காந்தியை கிண்டலடித்திருப்பது தெரிகிறது. தமிழக மீனவர் படுகொலை விஷயத்தை ஏதோ டீசல் கடத்துகிற விஷயத்தைப்போல சித்தரித்திருப்பது நெருடல்.

இந்தப்படத்தை பார்க்க ஹிந்தி தெரிந்திருக்கத்தேவையில்லை. தமிழும் கூட தெரிந்திருக்கத்தேவையில்லை. படத்திலும் காதலுக்கு மொழியே தேவையில்லை என்கிறார்கள். காமெடிக்கு கூட மொழியே தேவை இல்லை!

12 August 2013

புல்லுக்கட்டு முத்தம்மா!
கையிலிருந்து கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தார் பிரபல எழுத்தாளர் குஜிலிகும்பான். தலையை குனிந்தபடி கண்களை மூடிக்கொண்டு... (பில்டப் குடுக்கறாராமா!) பேசத்தொடங்கினார்

‘’ம்ம்ம்ம்ம்ம்... வேற வழியில்ல ப்ரோ.. என்னோட லட்சக்கணக்கான..
கோடிக்கணக்கான... வா...வா... என்னது அது.. வானு தொடங்குமே.. வாவாவா...’’

‘’வாமிட் வருதா குஜிலி’’

‘’காமெடி பண்ணாதீங்க ப்ரோ... என்னோட கோடிக்கணக்கான வாசகர்களுக்காக இந்த படத்தை நான் பார்த்தே ஆகணும் ப்ரோ, அவங்க என்னோட விமர்சனத்துக்காக காத்திகிட்டிருக்காங்க..’’ என்றார் குஜிலி.

‘’அதான் படம் ரீலிஸே ஆகலையே அப்புறம் எப்படி விமர்சனம் எழுதுவீங்க’’ என்று குழப்பத்தோடு கேட்டேன்.

‘’இல்லையே வெற்றிகரமான இரண்டாவது வாரம்னு போஸ்டர் பார்த்தேனே’’ என்று குஜிலியும் குழப்பினார்.

‘’நீங்க எந்த படத்தை பத்தி சொல்றீங்க.. ’’ குழப்பத்தோடு கேட்டேன்.

‘’புல்லுக்கட்டு முத்தம்மா ப்ரோ’’

‘’அய்யய்ய மிஸ்டர் குஜிலி கும்பான்... நாம அந்தபடத்தையெல்லாம் பார்த்தா ஊரு என்ன நினைக்கும்.. அதுவும் நீங்க ஒரு முகநூல் பிரபலம்.. உங்க ஸ்டேஸ்க்கு உங்க கமென்ட்டுக்கு உங்க லைக்குக்கு உங்க அதுக்கு... இதுமாதிரி பிட்டுபடமெல்லாம் பார்த்து.. அதுக்குபோயி விமர்சனம்லாம் எழுதி வாட் இஸ் திஸ் ஈஸ் ஃபேமஸ் ரைட்டர்’’ என்று அதிர்ந்தேன்.

''ப்ரோ இதே படத்தை கொரியால யாராவது பம்-கி-மக்கு பார்க்-வான்-குக்குனு டைரக்டர் க்ராஸ்கட்டுபேர்ல்மதர் னு எடுத்தா பார்த்துட்டு உயிர்மைல காலச்சுவடுல விமர்சனம் எழுதினா ஏத்துப்பீங்க.. ஆனா அதே மாதிரி படத்தை தமிழ்ல எடுத்தா ஏன் ப்ரோ ஏத்துக்க மாட்டேங்கறாங்க.. சொல்லுங்க ப்ரோ சொல்லுங்க.. சொல்லுங்க ப்ரோ சொல்லுங்க...''

''ஆமா ஏன்?'' வெளங்காமல் விழித்தேன்.

''நாம மாத்துவோம் ப்ரோ நாம எல்லாத்தையும் மாத்துவோம், இனிமே இப்படிதான்'' சூளுரைத்தார் குஜிலி. தூரத்தில் மணி அடித்தது. டிங்டடிங்ட..

அதோடு கையிலிருந்த துண்டை என்னிடம் நீட்டினார்.

''இது எதுக்கு ப்ரோ''

''இங்கே கொள்ள பயலுக தலையில இத போட்டுகிட்டுதான் இந்த படத்தையெல்லாம் கமுக்கமா பாக்குறாய்ங்க ப்ரோ.. ஆனா வை-பை ஆன் பண்ணிட்டா அப்படியே உத்தமனா மாறிடுவாய்ங்க ப்ரோ.. அதான் நீங்க வேற ரொம்ப கூச்சப்படறீங்களே அதான்'' என்றார்.

வண்டி அண்ணாசாலை அண்ணாதியேட்டர் வாசலில் நின்றது. வாசலில் தலைவா படத்தின் மிகபிரமாண்டமான போஸ்டர். அதற்கு மாலையெல்லாம் போட்டிருந்தார்கள்.

''என்ன குஜிலி புல்லுக்கட்டு முத்தம்மாவ தூக்கிட்டாங்க போலருக்கே''

''தலைவா ரிலீஸ் ஆகாததால அதே படத்தைதான் கன்டினியூ பண்றாய்ங்க ப்ரோ'' என்றார்.

போஸ்டர்கள் அதிரிபுதிரியாக இருந்தன. மூன்று பெண்களின் படங்களை போட்டு ''அசத்த போவது யாரு'' என்று போட்டிருந்தது.

''எனக்கென்னவோ சார்லீஸ் ஏஞ்சல்ஸை கிராமத்து பேக்ட்ராப்ல எடுத்துருப்பாய்ங்கனு ஒரு டவுட்டு ப்ரோ'' என்று அதிர்ச்சியடைய வைத்தார் குஜிலி.

''ஆமாங்க எனக்கும் அதே டவுட்டுதான்''

டிக்கட் கிடைத்தது. விலை நாற்பதுதான். அண்ணா திரையரங்கில் நாற்பதுரூபாய் டிக்கட்டில் படம் பார்த்தால்தான் தலைமறைக்காமல் படம் பார்க்க முடியும். 50 ரூபாய் டிக்கட் வாங்கினால் விதவிதமான மண்டைகளைதான் பார்க்கமுடியும், திரையில் தெரிகிற சண்டைகளை பார்க்க முடியாது.

புதிதாக திருமணமான தம்பதிகள் திருமணம் முடிந்து முதலிரவுடன் வாழ்க்கையை தொடங்க படம் தொடங்கியது.

''ஆரம்பமே அமர்க்களமா இருக்கே ப்ரோ'' என்றார் குஜிலி.

எல்லா பிட்டுப்படங்களிலும் வருவதைப்போல அந்த நேரம் பார்த்து நாயகனுக்கு திடீரென தலைவலி வந்துவிட புரண்டு படுத்துக்கொள்கிறான். தியேட்டரே அந்த அப்பாவி நாயகனை திட்டி தீர்க்கிறது.

''நல்ல சீன் ப்ரோ.. ச்சே.. இப்படி ஆயிடுச்சே '' என்று சலித்துக்கொண்டார் குஜிலி. இதுபோல படம் முடிவதற்குள் பத்துமுறை சலித்துக்கொண்டார்.

அதற்கு பிறகு படம் சூடுபிடிக்கவே இல்லை. எங்காவது சூடுபிடிக்கிற மாதிரி இருந்தாலும் ஹீரோவின் முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டி பயமுறுத்துகிறார் இயக்குனர். இடைவேளைக்கு சற்றுமுன்புதான் புல்லுக்கட்டு முத்தம்மா வருகிறார்.

புல்லுக்கட்டு முத்தம்மா பாத்திரத்தில் ஒரு வயசான பாட்டியை நடிக்க வைத்திருக்கிறார்கள். அந்த பாட்டி எப்போதும் வாயில் வெத்தலை பாக்கோடு பாவமாக அங்கிமிங்கும் கூடையோடு நடக்கிறது. பாவமாக இருக்கிறது.

அந்த பாட்டியின் வாழ்க்கையில் விளையாடிவிடுகிறான் நாயகன். அந்த பாவத்துக்கு சரியான தண்டனை கிளைமாக்ஸில் கிடைக்கிறது. பயங்கர காமெடியான தண்டனைது. ஒட்டுமொத்த தியேட்டரும் பிட்டில்லாத விரக்தியில் இருந்தாலும் அழுகையை மறைத்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறது! ஆனால் குஜிலி சிரிக்கவேயில்லை.

படம் முடிந்து வெளியே வந்து வண்டியை எடுக்கும்வரை குஜிலி சைலன்டாகவே இருந்தார். அவரால் அந்த கிளைமாக்ஸ் கொடூரத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

''ஏன் குஜிலி ஏன்.. ப்ளீஸ் பீல்பண்ணாதீங்க'' என்று கண்டித்தேன்.

தன் கண்ணீரை துடைத்தபடி அவர் கூறியது என்னை அசைத்துப்பார்ப்பதாக இருந்தது. என்னை மட்டுமல்ல அந்த இருண்ட திரையரங்கின் ஓரங்களில் ஏதாவது ஒரு சின்ன பிட்டாவது தேறாதா என்கிற எதிர்பார்ப்புடன் கள்ளமௌனங்களோடு அமர்ந்திருந்த நூத்திசொச்சம் பேரையும் அது அசைத்துப்பார்த்துவிடும்.

குஜிலி சொன்னார்

''WE MISS SHAKILA.. YES WE MISS SHAKILA DESPERATELY RESPECTFULY YOURS OBEDIENTLY"

09 August 2013

திராவிடர் இயக்கம் FOR DUMMIES!
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்கிற பழமொழிக்கு சரியான உதாரணம் கலைஞர் கருணாநிதிதான். அதை உணரவேண்டுமென்றால் அப்படியே ஜாலியாக இணையத்தில் சுற்றுப்பயணம் செய்தால் போதும். நேற்று முளைத்த நெல்லிவிட்டைகள் கூட கலைஞரை ஏகவசனத்தில் விமர்சித்துக்கொண்டிருப்பதை காணலாம். பெருமாள் கோயில் பொங்கலில் உப்பு இல்லையென்றாலும் கூட கருணாநிதியின் சதி என்று கூச்சலிடுவதை கண்டுசிரிக்கலாம்.

கலைஞர் மட்டுமல்லாது கடந்த சிலவருடங்களாக இணையத்திலும் வெவ்வேறு தளங்களிலும் இயங்குகிற இளைஞர்களும் தொடர்ந்து திராவிட இயக்கங்களையும் தாறுமாறாக விமர்சித்தே வருகின்றனர். ஆனால் இந்த இளைஞர் தலைமுறைக்கு திராவிட இயக்கங்கள் குறித்தும் அதன் பின்னணி குறித்தும், நூறாண்டுகளுக்கு மேலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தொடர்ந்து சமூகநீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிவருகிற அதன் வேர்களை பற்றியும் கொஞ்சமாவது தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

சொல்லப்போனால் இந்த இளைஞர்களுக்கு சமூகநீதி என்கிற வார்த்தைக்கே பொருள் தெரியாது. இடஒதுக்கீடு என்பதன் அர்த்தமும் அதற்கு பின்னால் இருக்கிற பலருடைய தியாகங்களும் தெரியாது. இன்று மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் அடைந்திருக்கிற முன்னேற்றமும் வந்தடைந்திருக்கிற மாற்றங்களுக்கும் அதற்கு காரணமான திராவிடர் இயக்கங்களின் போராட்டங்களும் புரியாது.

சாதிக்கெதிராக மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அதிகாரத்தின் சகல இடங்களையும் ஆக்கிரமித்திருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக திராவிட இயக்கங்களின் போராட்டங்களை பற்றி ஒன்றுமே தெரியாது.

எவ்வளவு பலமான அஸ்திவாரமிருந்தால் இத்தனை ஊழல்களுக்கு மத்தியிலும், அவப்பெயர்களுக்கு மத்தியிலும், குடும்ப ஆதிக்கங்களுக்கு மத்தியிலும். திராவிட இயக்கங்கள் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு இருக்க முடியும். அந்த வலுவான வேர்களை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்துகிறது கோவி லெனின் எழுதிய திராவிடர் இயக்கம் நோக்கம் தாக்கம் தேக்கம் என்கிற நூல்.

திராவிட இயக்கத்தின் நூறாண்டுகால வரலாற்றை ஒரு சுவாரஸ்யமான ஆக்சன் பட கதையைப்போல விறுவிறுப்பாக சொல்கிறது இந்நூல். டாக்டர் நடேசன் துவங்கிய பிராமணரல்லாதோர் சங்கத்திலிருந்து துவங்கி இதோ இப்போது எந்தக்கொள்கையுமேயில்லாமல் கட்சி தொடங்கி பத்து சதவீத ஓட்டுவங்கி வைத்திருக்கிற விஜயகாந்த் வரைக்குமான அரசியல் வரலாற்றினை 300 பக்கத்தில் எளிய நடையில் அறிமுகம் செய்கிறது இந்நூல். எத்தனை போராட்டங்கள், சறுக்கல்கள், தியாகங்கள், எழுச்சி, வீழ்ச்சி என திராவிடர் இயக்கத்தின் சகல விஷயங்களையும் தொட்டுச்செல்கிறது இந்நூல். திராவிடர் இயக்க அரசியலென்பது இம்மண்ணின் அரசியல், அது இந்த மக்களின் அரசியல், அவர்களுடைய விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட அரசியல் என்பதை படிக்கும்போது உணரமுடியும்.

அதற்காக ஒரேயடியாக பாராட்டித்தள்ளாமல் திராவிடர் இயக்கத்தின் மீதான காழ்ப்புணர்ச்சிகளின்றி பொறுப்புடனும் அக்கறையுடனும் அக்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார் லெனின். திராவிடர் இயக்கம் தொடர்பாக நமக்கு இருக்கிற அனேக கேள்விகளுக்கும் இந்நூலில் பதில்கள் உள்ளன.

அது என்ன திராவிடர்? ஏன் தமிழர் என்று பெயரில்லை? நீதிக்கட்சி ஏன் தொடங்கப்பட்டது? அது பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஏன் உதவுவதாக இருந்தது? அக்கட்சி ஏன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை? 17ஆண்டுகள் தொடர்ந்து சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சி ஏன் தோல்வியை சந்தித்தது? அதற்கு பிறகு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழித்து திராவிட முன்னேற்றகழகமாக எப்படி ஆட்சியை பிடித்தது? பெரியாரும் அண்ணாவும் ஏன் பிரிந்தனர்? பெரியார் திமுகவை ஏன் எதிர்த்தார்? பெரியார் தமிழை காட்டிமிராண்டி மொழி என்று சொன்னாரா? பெரியாரின் கொள்கைகளை திராவிடகட்சிகள் எந்த அளவுக்கு செயல்படுத்தி காட்டியுள்ளன? பெண்கள் விடுதலைக்காக என்ன செய்துவிட்டது திராவிடர் இயக்கம்? திராவிட நாடு கோரிக்கையை ஏன் அண்ணா கைவிட்டார்? மதுவிலக்கு பிரச்சனையில் திமுக மட்டும்தான் குற்றவாளியா? எம்ஜிஆரும் கலைஞரும் ஏன் பிரிந்தனர்? சர்க்காரியா கமிஷனின் விஞ்ஞானபூர்வமான ஊழலுக்கு பின்னுள்ள அரசியல் என்ன? ஈழ விவகாரத்தில் கலைஞர்மட்டும்தான் ஒரே குற்றவாளியா? வைகோவால் கம்யூனிஸ்ட்டுகளால் ஏன் தமிழக அரசியில் பிரகாசிக்க முடியவில்லை? விஜயகாந்தால் எப்படி கொள்கையே இல்லாமல் கட்சி நடத்தமுடிகிறது? திராவிடர் கட்சிகள் தமிழகத்திற்கு என்ன செய்து கிழித்துவிட்டன? நாம் என்ன அப்படி முன்னேறிவிட்டோம்? இந்துத்துவா கட்சிகள் ஏன் ஜெவை ஆதரிக்கின்றன? ஏன் எல்லா பத்திரிகைகளும் திமுகவையே குறிவைத்து அளவுக்கதிகமாக விமர்சிக்கின்றன?
உஃப் மூச்சு வாங்குகிறது.

இப்படி திராவிட இயக்கத்தை விமர்சிக்கிற ஆதரிக்கிற ஒவ்வொருவருடைய கேள்விக்கும் இப்புத்தகத்தில் ஆதாரங்களுடன், ஆய்வு நூல்களின் மேற்கோள்களுடன் விடையளிக்கிறார் கோவி லெனின். இக்கேள்விகளை ஒரு பேராண்டி கேட்பதாகவும் அதற்கு ஒரு திராவிடர் தாத்தா பதில் சொல்வதுமாக எழுதியிருப்பது படிக்கும்போது சுவாரஸ்யமாக இருந்தது. சில விடைகளே கூட கேள்விகளாக மாறி பின் அதற்கும் ஆய்வு நூல் ஆதாரங்களை அடுக்குகிறார் தாத்தா! திராவிடர் இயக்கம் தோத்துடுச்சா தாத்தா என்று பேரன் கேட்க பதறிப்போகும் தாத்தா அதற்கு சொல்கிற பதிலை படிக்கும்போது கலங்கிப்போன கலைஞரே பதில் சொல்வதாக உணர்ந்தேன். என்ன பதில் சொன்னார் என்பதை புத்தகத்தில் படித்துக்கொள்ளவும்.

அதோடு அண்ணா,பெரியார் மறைவுக்கு பிறகு எம்ஜிஆர் கலைஞர் காலத்தில் திராவிடர் இயக்க கட்சிகள் தன்னுடைய கொள்கை அரசியலை கைவிட்டு சுயவிருப்பு வெறுப்பு சார்ந்த அரசியலை கையிலெடுத்துகொண்டதையும், அதனால் இங்கே உருவான அரசியல் மாற்றங்களையும் விரிவாக விமர்சனம் பண்ணியிருக்கிறார் லெனின். அதோடு வெறும் கலைஞர் எதிர்ப்பை மட்டுமே வைத்துக்கொண்டு பண்ணுகிற ஜெவின் அரசியலையும் அதை தாக்குமுடியாமல் தடுமாறி திமுக தன் கொள்கைகளை கைவிட நேர்ந்ததையும் கூட விமர்சிக்கிறார்.

சாதிவிஷயத்தில் திமுகவும் அதிமுகவும் கொஞ்சம் முன்னபின்ன அட்ஜெஸ்மென்ட் பண்ணிக்கொண்டதால் உண்டான சறுக்கல்கள். குறிப்பாக தலித் மக்களுக்கு இன்றுவரை இழைக்கப்படும் அநீதிகளை திராவிடகட்சிகள் கண்டும் காணாமல் எதிர்கொள்ளும் நிலை. இக்கட்சிகளின் சில மோசமான நடவடிக்கைகளால் திராவிடர் இயக்கத்தின் அடிப்படையான சமூகநீதி என்கிற விஷயமே இப்போது கேள்விக்குள்ளாகியிருப்பது. ஒட்டரசியலுக்காக திருமங்கல் ஃபார்முலா வரை தரம் தாழ்ந்துபோனது, கலைஞரின் குடும்ப அரசியலால் உண்டான சலசலப்பு, ஜெவின் இந்துத்துவா நிலைப்பாட்டால் திராவிடர் கொள்கைகள் காற்றில் பறந்தது என பல விஷயங்களை தொட்டுச்செல்கிறது நூல்.

கடந்த நூறாண்டுகளில் சமூக தளத்திலும் பண்பாட்டு தளத்திலும் தமிழர்கள் வந்தடைந்திருக்கிற மாற்றத்தை நூலை படித்து முடிக்கும்போது உணர முடிகிறது. வருங்காலத்தில் திராவிட இயக்கம் தன்னை தமிழகத்தில் நிலைநிறுத்திக்கொள்ளவும் புதிய இளைஞர்களிடம் தன் சமூகநீதி சார்ந்த கொள்கைகளை கொண்டு செல்லவும் என்னவெல்லாம் செய்யலாம் என்கிற பரிந்துரைகளையும் வழங்குகிறார்.

நூலின் மிகப்பெரிய குறையாக நான் கருதுவது கடந்த பதினைந்தாண்டுகால அரசியல் வரலாற்றை விரைவாக தாண்டியதுதான். அதை இன்னும்கூட விரிவாக அணுகியிருக்கலாம். திராவிடர் இயக்கம் வீழத்தொடங்கியது இந்த காலத்தில்தானே! அது இன்னும்கூட வீழ்ச்சிக்கான காரணங்களை விரிவாக அலசியிருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம்.

கிளிப்பிள்ளைக்கு சொல்லித்தருவதைப்போல தமிழக அரசியலை அதன் பின்னணியை கற்றுத்தருகிறார் கோவிலெனின். தமிழக அரசியல் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள், திராவிட இயக்கங்களை பற்றி தெரிந்துகொள்ளவிரும்புபவர்கள், திராவிடர் இயக்கங்களை விமர்சிக்கவோ பாராட்டவோ திட்டவோ விரும்புகிறவர்கள் என அனைவரும் அவசியம் வாசிக்கவேண்டிய நூலாக இது இருக்கிறது. (திட்ட நினைப்பவர்களுக்கு நிறைய பாயின்டுகள் கிடைக்கும்) அதோடு தமிழக அரசியல் குறித்த சிறந்த அறிமுகத்தையும் தேடலையும் நமக்குள் உண்டாக்கிவிடுகிறது இந்நூல்.***

திராவிடர் இயக்கம் - நோக்கம்,தாக்கம்,தேக்கம்
கோவி.லெனின்
நக்கீரன் பதிப்பகம்
விலை.175

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க - http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

05 August 2013

மௌனராகம் ரீமேக்!
‘’ஜெய் சென்ன கேசவா’’ என்று தொடைதட்டி ரயிலையே திருப்பி அனுப்புகிற பாலகிருஷ்ணா படங்கள், மஞ்சள் சட்டையும் சிகப்பு பேண்ட்டுமாக ‘’மஞ்சிகொத்தவா. கஞ்சிகித்தாவா..’’ என ஊட்டி சூட்டிங் ப்ளேசில் தொப்புள் தெரிகிற நாயகியோடு குத்தாட்டம் போடுகிற வயதான ஹீரோ, அல்லது கையில் விதவிதமான வித்யாசமான ஆயுதங்களோடு ரத்தம் தெரிக்க தெரிக்க கூறுபோடுகிற படங்கள்தான் நமக்கு அதிகமாக பரிச்சயமான தெலுங்கு சினிமா. அதுமாதிரியான திரைப்படங்களே இங்கே தொடர்ந்து டப் செய்யப்பட்டும் வெளியாகின்றன.

ஆனால் ‘’அந்தால ராட்சசி’’ படத்தை பார்த்து முடிக்கும்போது, தெலுங்கு திரையுலகம் குறித்த நம்முடைய சகல முன்முடிவுகளும் உடைந்து நொறுங்கும். அடேங்கப்பா டோலிவுட்ல இப்படி கூடவா படம் எடுக்கிறாய்ங்க என்கிற எண்ணம் தலைப்படும். அப்படி ஒரு படம் ‘’அந்தால ராக்சசி’’ (தமிழில் அழகான ராட்சசி!). அந்த அளவுக்கு மென்மையான காதலையும் அன்பே உருவான யதார்த்த மனிதர்களையும் கொண்டிருக்கிறது இத்திரைப்படம்.

படத்தின் இயக்குனர் ஹனு ராகவப்பூடி ஒரு HARDCORE மணிரத்னம் ரசிகராக இருப்பார் என்று யூகிக்கிறேன். படத்தின் ஒவ்வொரு ஷாட்டிலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் லொக்கேஷனில் வசனத்திலும் பாத்திரங்களின் மேனரிசம் உடைகள் தொடங்கி சகலத்திலும் மணிரத்னம் தெரிகிறார். அதற்காகவே தென்னிந்திய சினிமாவை மணிரத்னம் ஆட்சி செய்த 90களின் துவக்கத்தை தன்னுடைய படத்தின் காலமாக வைத்திருக்கிறார்.
நாடிநரம்பெல்லாம் மணிரத்னத்தை நேசிக்கிற ஒரு ரசிகனால் மட்டும்தான் இப்படி ஒரு படத்தினை எடுக்க முடியும். படத்தின் கதையும் கூட மௌனராகம் கதையேதான்!

மௌனராகம் படத்தின் கிளைமாக்ஸ்தான் இந்தபடத்தின் இடைவேளை. இறந்து போன பழைய காதலனை மறந்துவிட்டு தன்மீது உயிராய் இருக்கிற கௌதமோடு புதிய உறவில் அடியெடுத்து வைக்கிறாள் மிதுனா. அந்த நேரத்தில் அதிர்ச்சிகரமான ஒரு தகவல் கௌதமுக்கு வருகிறது. இறந்துபோனதாக நினைத்துக்கொண்டிருந்த சூர்யா இறந்துபோகவில்லை இன்னும் உயிருடன்தான் இருக்கிறான்!
தன்னுடைய அடையாளங்களை மறைத்துக்கொண்டு சூர்யா குடிகாரனாக அவளைநினைத்து பைத்தியக்காரனைப்போல வாழ்ந்துகொண்டிருக்கிறான். எதற்காக சூர்யா இப்படி தலைமறைவானான்? கௌதம் இப்போது என்ன செய்யப்போகிறான்? மிதுனா யாருடன் சேர்ந்தாள்? என்பதை எல்லாம் பர்மாபஜார் டிவிடியில் காணலாம்.

மிதுனாவாக நடித்திருக்கிற லாவன்யா திரிபாதி நிஜமாகவே அழகான ராட்சசிதான். ஒல்லிபிச்சானாக இருந்தாலும் அக்னிநட்சத்திரம் அமலாவை நினைவூட்டுகிறார். அதோடு மணிரத்னம் படங்களில் வருவதைப்போலவே குழந்தைகளை அடிக்க ஓடும்போது நாயகனை சந்திப்பதும், முதலில் அவனை வெறுத்து திட்டுவதும்.. பிறகு அவனுக்காக கிடந்து உருகுவதும் சோக்யூட்!

தளபதி அர்விந்த்சாமியின் சாயலில் இருக்கிறார் படத்தின் ஒரு ஹீரோ ராகுல் ரவீந்திரன். இவர் சென்னை பையனாம். விண்மீன்கள் என்கிற படத்திலும் மாஸ்கோவின் காவேரி என்கிற படத்திலும் நடித்தவராம்! முதல் பாதி முழுக்க மாறாத புன்னகையும் முகமெங்கும் தவழும் அமைதியுமாக வருகிறவர் இரண்டாம்பாதியில் உண்மையை சுமந்துகொண்டு கதறியபடி திரிகிறார். சூர்யாவாக வருகிற நவீன் சந்திரா மீரா படத்தில் வருகிற விக்ரமைப்போல அழகாகவும் மேன்லியாகவும் இருக்கிறார். அதோடு அவருடைய இயல்பான நடிப்பும் மேனரிசமும் ரசிக்க வைக்கின்றன.

படம் முழுக்க ஒளியைவிட நிழலை பிரமாதமாக பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் முரளி. பிசி ஸ்ரீராம்-மணிரத்னம் காம்போ படங்களில் மட்டுமே பார்த்திருந்த அந்த இருட்டு மேஜிக். படம் முழுக்க நீள்கிறது. குறிப்பாக ஊட்டியில் படம்பிடிக்கப்பட்டிருக்கிற காட்சிகள் எல்லாமே அற்புதம்தான். பாசிபடர்ந்த எப்போதும் ஈரம் மிஞ்சி இருக்கிற மொட்டைமாடியும் அங்கே எப்போதும் பேசிக்கொண்டிருக்கிற காதலர்களும், தூரத்திலிருந்து குரல்கொடுக்கிற குழந்தைகளும், ஓடும் பஸ்ஸில் தாவி ஏறி காதலியிடம் வம்பு பண்ணு காதலன் என படத்தில் ரசிக்க ஏராளமான காட்சிகள்.

இளம் இசையமைப்பாளர் ராதன் படத்துக்கு நன்றாகவே இசையமைத்திருந்தாலும் இந்தப்படத்துக்கு இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால் இதே படத்தை வேற லெவலுக்கு எடுத்துச்சென்றிருப்பாரோ என படம் பார்க்கும் போது தோன்றியது. மௌனராகம் படத்தின் பலமே ராஜாசார்தானே!

அனைவரும் பார்த்து ரசிக்க ஏற்றபடம்தான் என்றாலும் நீங்கள் மணிரத்னம் ரசிகராக இருந்தால் இந்தப்படத்தை நிச்சயமாக ரொம்பவே ரசிப்பீர்கள். உங்கள் நாஸ்டால்ஜியாவுக்கு சரியான தீனிபோடக்கூடியதாகவும் இப்படம் இருக்கும்.

(தெலுங்குபடங்களுக்கே உரிய எந்த அடையாளங்களும் இன்றி, இயல்பாக இனிமையாக அதிக ஆர்பாட்டமில்லாமல் எளிமையான காதலை சொன்ன இப்படத்தை தயாரித்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி! பிரமாண்ட படங்கள் மட்டுமே எடுக்கிற டோலிவுட் ஷங்கர். (நான் ஈ படத்தின் இயக்குனர் என்றால் எளிதாக புரிந்துகொள்ளலாம். 2012ல் வெளியான இப்படத்தின் டிவிடி பர்மாபஜாரில் சப்டைட்டிலுடன் கிடைக்கிறது வாங்கி பார்த்து ரசிக்கலாம். )

02 August 2013

பள்ளிகொண்டபுரம்
அனந்தன்நாயர் திருவனந்தபுரம் தெருக்களில் நடந்து சலித்து புத்தகத்திலிருந்து குதித்து மனது முழுக்க இன்னமும் சுற்றிக்கொண்டேயிருக்கிறார். திருவனந்தபுரம் தெருக்களும் பத்மநாபஸ்வாமி கோயிலும் சாலை பஜாரும் பழவங்காடி பிள்ளையார் கோயிலும் மனதை விட்டு அகலமறுக்கின்றன. உடனே டிரைனை பிடித்து திருவனந்தபுரத்தை ஒரு ரவுண்டு சுற்றிவிட்டு வரலாம் என்று தோன்றுகிறது.

நீல.பத்மநாபன் எழுதிய பள்ளிகொண்டபுரம் நாவல் முழுக்க முழுக்க திருவனந்தபுரத்தின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. அவ்வூரின் அனந்தன்நாயரின் இரண்டுநாட்களே முழுநாவலும்! (ஆனால் நாவலில் எங்குமே திருவனந்தபுரம் என்கிற சொல் பயன்படுத்தப்படவில்லை!)

தன்னுடைய ஐம்பவதாவது பிறந்தநாளில் விடியற்காலையில் கோயிலுக்கு செல்வதில் தொடங்கும் நாவல் அடுத்தநாள் இரவு முடிகிறது. இதன் நடுவே அனந்தன் நாயர் கடக்கிற மனிதர்களும் இடங்களுமாக அவருடைய வாழ்க்கை சொல்லப்பட்டுள்ளது. முழுபுத்தகமும் அனந்தன் நாயரின் மனவோட்டங்களால் நிறைந்திருக்கிறது. அவருடைய பார்வையிலேயே திருவனந்தபுரமும் அதன் மனிதர்களும் அனந்தன்நாயரின் ஐம்பதாண்டுகால வாழ்க்கையும் வெவ்வேறு சம்பங்களின் ஊடாக முன்பின்னாக சொல்லப்படுகிறது.

உடைத்து உடைத்து சம்பவங்களை சொல்வதால் இதனால் உண்டாகும் கால இடைவெளியை படிக்கிற நாமே நிரப்பத்தொடங்கி விடுகிறோம். இது மிகவும் பழையபாணி என முன்னுரையில் எழுதியிருக்கிறார் சுகுமாரன்.

அனந்தன் நாயர் திருவனந்தபுர சமஸ்தானத்தில் சாதாரண குமாஸ்தாவாக இருக்கிறார், அவருடைய அழகிய மனைவி கார்த்தியாயினியின் மேல் மோகம் கொள்கிறான் உயர்பதவியிலிருக்கிற விக்கிரமன்தம்பி. அவன் கார்த்தியாயினியை முன்னிட்டு வீட்டுக்கு வருவதும் அடிக்கடி குடும்பத்தினரோடு ஈஷிக்கொண்டு திரிவதுமாக இருப்பது அனந்தன் நாயருக்கு எரிச்சலை கொடுக்கிறது. ஒருகட்டத்தில் கார்த்தியாயினி விக்கிரமன் தம்பியை மணம்முடித்துக்கொண்டு தனியாய் சென்றுவிட, பதினைந்தாண்டுகள் ஒருமகனையும் மகளையும் தனியாக வளர்த்து ஆளாக்குகிறார் அனந்தன்நாயர். இந்த நாட்களில் ஒரு சன்னியாசியைப்போலொரு வாழ்க்கையை மேற்கொள்கிறார்.

கார்த்தியாயினியின் செயலை பாவமாகவும், தன்னுடைய இந்த வாழ்க்கையை ஒரு தியாகமாகவும் நினைத்துக்கொண்டு அதை மிகப்பெருமையாக கருதுபவராகவும் இருக்கிறார். அதை நியாயப்படுத்துகிற விதத்திலேயே எல்லா பிரச்சனைகளையும் அணுகுகிறார்.

ஆனால் அவருடைய வாழ்க்கை வேறுமாதிரி இருக்கிறது. கார்த்தியாயினியின் அழகும் அதனால் உண்டான இயல்பான பயமும் விக்கிரமன் தம்பியை எதிர்க்கமுடியாத இயலாமையும் அவரை ஒரு மிருகமாக மாற்றுகிறது. அதன் விளைவால் தொடர்ந்து கார்த்தியாயினியை ஒடுக்குவதிலும் அவள்மேல் வன்முறையை பிரயோகிப்பதுமாக இருக்கிறார் அனந்தன்நாயர். ஆனால் இறுதிவரை தன்னுடைய செயலை நியாயப்படுத்த கார்த்தியாயினியை மோசமானவளாக சித்திரிக்கவே அனந்தன் நாயரின் மனம் முயல்கிறது. (மகனுடனான வாக்குவாதத்தில் கார்த்தியாயினி விக்கிரமன் தம்பியோடு சென்றபிறகும் வேறுவழியின்று வேற்று ஆணோடு உறவிலிருக்க நேர்ந்த்தையெல்லாம் கூட குறிப்பிட்டு தன்னை தியாகியாக்க முயல்வது குறிப்பிடத்தக்கது)

இரண்டு வெவ்வேறு காலங்கட்டங்களில் வாழ்கிறவராக அனந்தன் நாயரும் திருவனந்தபுரமும் இந்நாவலில் வருகின்றன. மன்னராட்சி காலத்தில் கோலகலமாக தினமும் ஆயிரம் பேருக்கு பத்மநாபசுவாமி கோயிலில் சோறுபோட்டு வளர்ந்த ஊர், மன்னராட்சி வீழ்ந்து மக்களாட்சி காலத்தில் தன்னுடைய பெருமைகளை இழந்து ஒரு புதிய மாற்றத்துக்கு தயாராகிறது.

மன்னரின் சமஸ்தானத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த அனந்தன்நாயரும் மாற்றத்தினால் வேலைபோய் ஒரு செட்டியார் கடையில் கணக்கராக வேலைபார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதோடு பழைய பஞ்சாங்கமான சாதிப்பெருமைகளும், அரசியலும், குடும்பு உறவு சிக்கல்களும் என சகமும் கண்முன்னே மாறிக்கொண்டிருக்க அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார் அனந்தன்நாயர். அவரைப்போலவே அந்நகரமும் தவியாய் தவிப்பதை உணர்கிறார். மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் மாங்கு மாங்கென்று நடையாய் நடந்து உம் உம் உம்.. என பெருமூச்சுவிடுகிறார் அனந்தன் நாயர்... அவரோடு அந்நகரமும் புதியமாற்றத்தின் சுமையால் மூச்சுதிணறுகிறது.

நமக்குள் இருக்கிற ஒரு மிக சாதாரண எளிய மனிதனின் மிகையில்லா சித்திரிப்பாக அனந்தன் நாயரை கருதலாம். ஒரு காமன்மேன் எப்படியெல்லாம் சிந்திப்பானோ அப்படித்தான் அனந்தன்நாயரும் சிந்திக்கிறார். தான் இதுவரை தியாகம்,பொறுப்பு,பெருமை என்று கருதியதெல்லாம் தன் மகனுடைய செயலால் உடைந்து சுக்குநூறாகும்போது அவரும் உடைந்து நொறுங்கிப்போகிறார். அதே சமயம் மகள் அனந்தன் நாயரின் செயல்களை பெருமையாக சொல்லும்போது பூரிக்கிறார். கார்த்தியாயினியின் விஷயத்தில் மட்டுமல்லாது ஊரெங்கும் உள்ள அவர் சந்திக்கிற மற்ற மனிதர்கள் விஷயத்தில் அனந்தன் நாயர் அப்படித்தான் நடந்துகொள்கிறார். எது நடந்தாலும் தன்னுடைய வாழ்க்கையோடு முடிச்சிப்போட்டு ஃபீல் பண்ணத்தொடங்கிவிடுகிறார்.

அனந்தன் நாயர் ஒருவகையில் நம்மையே பிரதிபலிக்கிறார். நம்முடைய குரூரமான மனதுக்கும் அதை நியாயப்படுத்துகிற எண்ணங்களுக்குமான போராட்டம்தான் இந்நாவலின் அடிச்சரடாக இருக்கிறது. அனந்தன்நாயரின் கதையோடு ஒட்டிவருகிற திருவனந்தபுரத்தின் கதையும், மற்ற சின்ன சின்ன கிளைக்கதைகளும் நாவலுக்கு சுவாரஸ்யம் தருவன. மலையாளம் கலந்து எழுதியிருப்பது படிக்க நன்றாகவே இருந்தாலும் சில இடங்களில் கதையை புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்கவே செய்கின்றன.

#பள்ளிகொண்டபுரம்
நீல.பத்மனாபன்
காலச்சுவடு பதிப்பகம்
01 August 2013

கால்சென்டர்களில் கலையும் கனவுகள்ஊர்க்கார பையன்கள் சிலர் சென்னைக்கு வந்து தங்கி வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே சென்ற ஆண்டு பொறியியல் படிப்பை முடித்தவர்கள். வெவ்வேறு கல்லூரிகளில் மெக்கானிக்கல்,ஈசிஈ,எலக்ட்ரிகல் படித்தவர்கள். நல்ல மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் வாழ்வின் மீது முழுக்க முழுக்க அவநம்பிக்கையை சுமந்தபடி சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் எனக்கு மிக நெருங்கிய நண்பனின் தம்பியும் ஒருவன். அவனுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறதென்றும் அதை கொடுக்கவும் நண்பன் சொல்லியிருந்தான். பணம் கொடுப்பதற்காக தம்பியின் அறைக்கு சென்றிருந்தேன். அந்த பையன்களோடு சில மணிநேரங்கள் பேசியபோது மிகுந்த மனவருத்தத்தோடு பேசினர்.

கடந்த ஒரு வருடமாக வேலை தேடிக்கொண்டேயிருக்கிறார்கள் இந்த பையன்கள். இன்னும் எங்கும் உருப்படியான வேலை கிடைத்தபாடில்லை. சில சாஃப்ட்வேர் கோர்ஸ்களை படித்துவிட்டு சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும், ஒருசிலர் துண்டுதுக்கடா கால்சென்டர்களில் சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்க்கிறார்கள். மற்ற நண்பர்களும் கூட கால்சென்டர்களில்தான் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சாஃப்ட்வேர் கம்பெனிகளில் சுத்தமாக வேலைக்கு ஆளே எடுப்பதில்லை என்பதுபோல பேசினர்.

இணையம்தான் இவர்களுக்கான தேடுதலுக்கான இடமாக மாறிப்போயிருக்கிறது. இரவுபகல் பாராமல் இணையத்தில் வேலை தேடுகிறார்கள்! எப்போதும் ஃபேஸ்புக்கிலேயே பழியாய் கிடக்கின்றனர். தினமும் எங்காவது வாக் இன் இன்டர்வியூவில் கலந்துகொள்கிறார்கள். தினமும் ஹிந்துபேப்பர் மற்றும் வோர்ட் பவர் மேட் ஈஸி வாங்கி படித்து ஆங்கில அறிவை அவசரமாக வளர்க்க நினைக்கிறார்கள். ஆனாலும் வேலை கிடைத்தபாடில்லை.. என்னப்பா ஆச்சு என விசாரித்தேன்.

கால்சென்டர்களில் இப்போதெல்லாம் நன்றாக படித்து மதிப்பெண் பெற்றவர்களை வேலைக்கு எடுப்பதில்லை என்றனர். ஒரு பிரபல பிபிஓ நிறுவனம் 70சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களைதான் வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்களாம். அரியர்ஸ் இருந்தால் உங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிறார்களாம் சில நிறுவனங்கள். பத்து அரியர்ஸ் இருந்தால் உடனே அப்பாயின்மென்ட் ஆர்டரை கொடுத்துவிடுகிறார்களாம்!

நல்ல மதிப்பெண் பெற்ற பையன்கள் ஆறுமாதம் ஒருவருடத்தில் ஓடிவிடுவதால் இப்படி ஒரு ஏற்பாடு என்றான் ஒருதம்பி. ஒவ்வொரு கம்பெனியிலும் எபவ் செவ்ன்டி பர்சென்ட்லாம் கிளம்பலாம்னு சொல்லும்போது எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சி மார்க் வாங்கினோம் என்ன பிரயோஜனம்னு தோணும்ண்ணா சமயத்துல அழுகையே வந்துடும் என்று சோகமாக சொன்னான் ஒரு தம்பி. ப்ளஸ்டூ படித்திருந்தால் கூட சில நிறுவனங்கள் போதும் என்று என்ஜினியரிங் படித்தவர்களை விரட்டிவிடுகிறார்களாம்.

சில நிறுவனங்களில் நைட்ஷிப்ட்டுக்கென ஆண்டுக்கணக்கில் கான்ட்ராக்ட் போட்டு ஆளெடுக்கிறார்கள். எப்படித்தெரியுமா அசல் சான்றிதழ்களை வாங்கிவைத்துக்கொண்டு இரண்டாண்டு மூன்றாண்டு என கான்ட்ராக்ட் போட்டுக்கொண்டுதான் வேலை கொடுக்கப்படுகிறதாம்.
அப்படி என்னதான் இந்த கால்சென்டர்களில் சம்பளம் குடுக்கறாங்க என்று விசாரித்தால் வெறும் ஐந்தாயிரமும் ஆறாயிரமும்தான் கிடைக்கிறது.

சரி துறைசார்ந்த வேலைகளுக்கு போனால்தான் என்னவாம்? ஊர் உலகத்தில் கால்சென்டரை விட்டால் வேறு வேலையே இல்லையா?
‘’எல்லா இடத்துலயும் மினிம்ம் டூத்ரீ இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் கேகறாங்க.. அப்படியே வேலை கிடைச்சாலும் அதுலலாம் க்ரோத் ரொம்ப ஸ்லோனா... கோயம்புத்தூர்லயே மெக்கானிக்கல்க்கு சில வேலைகிடைக்கும்.. நாலாயிரம் ரூவாதான் குடுப்பாங்க.. இரண்டு வருஷம் ஆகும் பத்தாயிரம் ரீச் பண்ண.. அதே கால்சென்டர் சாஃப்ட்வேர்னா இரண்டுவருஷத்துல ட்வென்ட்டி ஃபைவ் கிராஸ் பண்ணிடலாம்’’ என்றான் ஒருபையன். அவன் சொல்வதற்கிணங்க அறையில் ஒரு பையன் எட்டாயிரம் சம்ளத்தில் வேலைக்கு சேர்ந்து குறைந்தகாலத்தில் இன்று பதினாறாயிரம் பெறுகிறான்!

எல்லோருக்கும் துறைசார்ந்த வேலைகளை தேடுவதில் ஒரு சலிப்பும் எரிச்சலும் இருக்கிறது. அதோடு துறை சார்ந்த வேலைகளை பூதக்கண்ணாடி வைத்துதான் தேடவேண்டியதாகவும், அனுபவமில்லாதவர்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவுமே உள்ளன. எங்கும் நிறைந்திருக்கிற கால்சென்டர்களில் வேலை தேடுவது சுலபமாக இருக்கிறது. கொஞ்சம் ஆங்கிலம் மட்டும் தெரிந்திருந்தால் வேலை கிடைத்துவிடுகிறது. இதுபோக அழகான பெண்கள், நிறைய பணம், நுனிநாக்கு ஆங்கிலம், லைஃப் ஸ்டைல் என வேறு காரணங்களும் கடந்த பத்தாண்டுகளாக தொடரும் கால்சென்டர் மோகத்துக்கு காரணமாக நீடிக்கிறது. தம்பியின் நண்பர்களில் சிலர் ஊரில் இருக்கிற பொறியியல் கல்லூரிகளிலும் பாலிடெக்னிக்குகளில் லெக்சரராக பணியாற்றுகிறார்கள். ஆனால் சம்பளம் சாதாரண எல்கேஜி டீச்சர்களுக்கு கொடுக்கப்படுவதைவிடவும் மிகமிகக் குறைவு!

இவர்களுடைய குடும்பங்களை பர்சனலாகவே நான் அறிவேன். எல்லோருமே லோயர் மிடில்கிளாஸ் குடும்பங்களை சேர்ந்தவர்கள். எல்லோருமே மிகுந்த கஷ்டங்களுக்கு நடுவே கடன்வாங்கியும் நகைகளை அடகுவைத்தும் கல்விக்கடன் வாங்கியும் அலுவலகத்தில் லோன்போட்டும் என்ஜினியரிங் படிக்க வைத்திருக்கிறார்கள். எல்லோருக்குமே பையனை எப்படியாவது மிகப்பெரிய பணக்காரனாக்கிவிடும் கனவு நிறைந்திருக்கிறது. அந்த கனவுகளையே இந்த பையன்களும் சுமந்தபடி திரிகிறார்கள்.

கஷ்டப்பட்டு படிக்க வைக்கிற பெற்றோர்கள் பையன்கள் படித்து முடித்ததும் சம்பாதிக்க தொடங்கிவிடுவான் கடன்களை அடைத்துவிடுவான் என எதிர்பார்க்கின்றனர். வீட்டில் பையன்களை தொடர்ந்து நச்சரிக்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். பாரு அந்த பையன் எவ்ளோ சம்பாதிக்கிறான் இவன் எவ்ளோ காசு அனுப்பறான் என தொல்லை தாங்கமுடியாமல் பையன்கள் உடனடி உபாயமாக இந்த கால்சென்டர்களில் விட்டில் பூச்சிகளைப்போல வந்து விழுவதை பார்க்க முடிகிறது. வீட்டில் வெட்டியாக இருப்பதைவிட இந்த வேலை கொஞ்சம் டீசன்டாகவும் அதேசமயம் ஜாலியாகவும் இருப்பதாகவே கருதுகின்றனர். ஒருமுறை இந்த கால்சென்டனர்களில் காலெடி எடுத்து வைத்தவன் பிறகு அவன் படித்த துறைசார்ந்த வேலைக்கு போகவேமாட்டான் என்பதே வரலாறு. இருந்தும் உடனடி நிவாரணியாக இந்த கால்சென்டர்களே கைகொடுக்கின்றன.

இந்த பையன்களிடம் என்ஜினியரிங் குறித்த வெறுப்பு மனது முழுக்க நிறைந்துகிடக்கிறது. அதில் எடுத்த மதிப்பெண்ணும் அதற்காக கொட்டிய உழைப்பும் வீண் என்று கருதுகின்றனர். அதில் உண்மை இருக்கவே செய்கிறது. தன் தங்கைக்கு கவுன்சிலிங்கில் சீட் கிடைத்தும் வீட்டில் சண்டைபோட்டு ஆர்ட்ஸ் அன் சைன்ஸ் கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறான் ஒரு தம்பி. அப்படி ஒருவெறுப்பு என்ஜினியரிங்கின் மேல்! இதே என்ஜினியரிங் கல்லூரிகளில் என்ஜினியரிங் முடித்து அதற்குமேல் லட்சங்களை கொட்டி எம்பிஏ முடித்துவிட்டு மார்க்கெட்டிங்கில் சொற்ப சம்பளத்துக்கு மாடாக உழைக்கிறவர்களின் கதை தனி!

‘’இந்த வருஷமும் கவுனிசிலிங்குல மெக்கானிக்கல்தான் அதிகபேர் எடுத்திருக்காங்கண்ணா.. பாவம் என்ன பண்ணப்போறாங்களோ’’ என்று வருத்தப்பட்டான் ஒரு தம்பி. அவனும் மெக்கானிக்கல் படித்தவன்தான்.

குறுக்குவழியில் பணக்காரராக வெறிபிடித்தாற்போல லட்சக்கணக்கில் காசைக்கொடுத்து வீடுதோறும் வளர்க்கப்பட்ட ஈமுகோழிகளை நினைவூட்டுகின்றனர் இந்த பையன்கள். இன்று ஏமாந்துபோய் தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு வளர்த்துவிட்ட ஈமுவை கொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிற அதே நிலையில்தான் இந்த இன்ஜினியர்களின் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.