Pages

29 October 2013

பட்ட கதை!




படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே தியேட்டரில் ஒரு அலறல் சத்தம்… கேட்கவும் சகிக்க முடியாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே ஒருவர் தியேட்டரை விட்டு ஓடுகிறார். ‘’டே மச்சான் நில்ரா.. நில்ரா’’ என பின்னாலே ஓடுகிறார் அவருடைய நண்பர்.

முதலில் ஓடியவர் நின்றார். பின்னால் துரத்தி வந்தவனை பார்த்தார். என்ன நினைத்தாரோ கன்னம் பழுக்கிற மாதிரி பொளேர் என ஒரு அறைவிட்டார். பொறிகலங்கி பூமி அதிர்ந்திருக்கும் அந்த ஆளுக்கு. ‘’ஏன்டா… &$%&% பையா, நான் உனக்கு என்னடா துரோகம் பண்ணினேன்.. என்னை ஏன்டா இந்த &%&*& படத்துக்கு கூட்டினு வந்த’’ என்று கத்தினான். அதற்குள் தியேட்டர்காரர்கள் வந்து இருவரையும் வெளியே அழைத்துச்சென்றனர்.

தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் என்னோடு படம் பார்த்துக்கொண்டிருந்தவருக்கும் கூட அதே உணர்வுதான். டீசன்ட் கருதி அமைதியாக அமர்ந்திருந்தோம். அண்மையில் வெளியான எத்தனையோ இல்லை இல்லை கடந்த பத்தாண்டுகளில் வெளியான எத்தனையோ மொக்கை படங்களில் எந்த படத்தினை பார்க்கும்போதும் இவ்வளவு கோபமும் வெறியும் ஆத்திரமும் வந்ததில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏஆர் ரஹ்மான் இசை என்ற ஒரே காரணத்திற்காக தியேட்டரில் போய் மாட்டிக்கொண்டு மரண அடி வாங்கின சக்கரைகட்டி படத்தை இந்த நேரத்தில் நினைவு கூறலாம். இது அந்த கொலைமுயற்சியை சர்வசாதாரணமாக தாவிச்செல்கிறது! படத்தின் டிரைலர் நன்றாக இருந்தால் படம் மொக்கையாக இருக்கும் என்பதற்கு இன்னொரு சாட்சி சுட்டகதை! டிரைலரையும் படத்தின் நடித்த நாசர்,பாலாஜியையெல்லாம் நம்பிப்போய் தியேட்டரில் உட்கார்ந்த பாவத்துக்கு கதறகதற... ஒன்றரை மணிநேரம்...

கொஞ்சம்கூட பொறுப்பேயில்லாமல் காமெடி என்கிற பெயரில் என்னத்தையோ போட்டு ரொப்பி , நடிப்பு என்கிற பெயரில் உவ்வ்வேக் நினைக்கும்போதே குமட்டுகிறது. காமெடி படம் என்பதால் எல்லோருமே லூசுமாதிரியே நடிக்கவேண்டுமா? பாலாஜி வெங்கி நாசர்.. என எல்லோருமே பைத்தியம் பிடித்ததுபோல நடந்துகொள்கிறார்கள்.

கதையும் லூசுத்தனமா… காட்சிகளும் லூசுத்தனமா… படம் எடுத்தவன் லூசா, நடித்தவன் லூசா இல்லை படம் பார்க்கும் நாம்தான் லூசா.. படம் பார்த்து முடிக்கும்போது நமக்கும் கூட லேசாக பைத்தியம் பிடித்தது போலத்தான் இருக்கிறது. கஞ்சா அடித்தால் மட்டும்தான் இப்படியெல்லாம் ஆகும்!

இந்த லூசுபடத்தில் தமிழ் காமிக்ஸ்களையும் அதை வாசிப்பவர்களையும்வேறு வேறு கேவலமாக கலாய்க்கிறார்கள். சகிக்கமுடியவில்லை.

குறும்படம் எடுக்கிற எல்லோராலும் சிறந்த முழுநீளபடத்தை எடுத்துவிட முடியாது என்பதற்கு இந்தப்படம் சாட்சி. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் சுபு இதற்கு முன்பு குறும்படம் எடுத்தாரா தெரியவில்லை ஆனால் இந்தபடமே யூடியூபில் கூட பார்க்க முடியாத ஒரு மொக்கை குறும்படத்தை ஒன்றரைமணிநேரம் திரையில் பார்த்தது போலத்தான் இருந்தது.

படத்தின் ஒரே நல்ல விஷயம் அது ஒன்றரை மணிநேரமே ஓடியது என்பதுதான் இதற்குமேல் பத்து நிமிஷம் ஓடியிருந்தாலும் இந்த விமர்சனத்தை எழுத அதிஷா உயிரோடு இருந்திருக்கமாட்டான்!

சைக்கோ மனநிலை கொண்டவர்கள் இன்னும் வெறியேற்றிக்கொள்ள உபயோகமான படம். மற்றபடி இந்த கெரகத்தை சுடாமலேயே இருந்திருக்கலாம்!

28 October 2013

தமிழில் ஒரு டான்ப்ரவுன்




6174 என்கிற தமிழ் நாவலை சென்றவாரம் ஓர் இரவில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். க.சுதாகர் என்கிற அதிகம் பரிட்சயம் இல்லாத எழுத்தாளர் எழுதிய நாவல் இது. இது இவருடைய முதல் நாவலாம். நம்பவே முடியவில்லை. 400 பக்கங்கள் கொண்ட அந்த சற்றே பெரிய நூலை ஒரே மூச்சில் படித்து முடிப்பேன் என்று நண்பர் மதன்செந்திலிடம் ஓசிவாங்கும்போதுகூட நினைத்து பார்க்கவில்லை.

முதல் நாலைந்து பக்கங்கள் பொறுமையாக தொடங்கினாலும் அதற்கு பிறகு நாம் என்னமோ பிஎஸ்எல்வியில் ஃபுட்போர்ட் அடிப்பது போல நம்மை உள்ளே இழுத்துக்கொண்டு பாய்கிறது கதை. அப்படி ஒரு வேகம்! அனேகமாக கடந்த சில ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட ஜனரஞ்சக அல்லது பல்ப் நாவல்களில் இதற்கே முதலிடம் கொடுக்கலாம். அதோடு தமிழில் இதுவரை வெளியான அறிவியல் புனைகதை நாவல்களிலும் இதற்கு முக்கிய இடம் கொடுக்கலாம்.

வரிக்குவரி அவ்வளவு தகவல்கள். ஆனால் எதுவுமே எங்குமே உறுத்தாமல் கதையோடு அதன் வேகத்துக்கு இணையாக பீட்சா டாப்பிங்ஸ் போல தூவிக்கொண்டே போகிறார். ஒரு பரபரப்பான ஹாலிவுட் படத்தின் திரைக்கதையை தமிழில் படிப்பது போல உணர முடிந்தது. அதற்கேற்ப க்ளைமாக்ஸில் இரண்டாம்பாகத்துக்கு அச்சாரமெல்லாம் போட்டுத்தான் கதையை முடிக்கிறார்.

லெமூரியா காலத்தில் தொடங்கும் கதை , உலக அழிவு, மூன்றாம் உலகப்போர், லெமூரியன் சீட் கிரிஸ்டல்,பிரமிடுகள், தமிழ் இலக்கணம்(!), எண்கணிதம்,கோலம்,வெண்பா, இன்றும் வாழும் டைனோசர்காலத்து மீன் சீல்கந்த், க்றிஸ்டலோகிராபி… இன்னும் நிறைய இருக்கிறது அதையெல்லாம் எழுதுவதே நூலுக்கு செய்யகூடிய துரோகமாகிவிடும். அவ்வளவும் ஸ்பாய்லர்ஸ். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் எளிமையான விளக்கங்கள் நூல்முழுக்க உண்டு.

படித்து முடித்ததும் நேராக கூகிள் தளத்துக்கு சென்று தேடலைத்தொடங்கினேன். பர்மாவில் இருக்கிற கட்டிமுடிக்கபடாத பகோடா, ஹர்ஷா எண்கள், நன்னீர் டால்ஃபின்கள், ரஷ்யன் போர்கப்பல்கள், க்ரிப்டிட் உயிரினங்கள் என இன்னும் நிறைய விஷயங்களை தேடி இவையெல்லாம் சரியான தகவல்தானா என உறுதிப்படுத்தி கொண்டேன். ஏன் என்றால் நான் படித்தது ஒரு தமிழ் நாவல்.

பொதுவாக வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என்கிற உயரிய தத்துவத்தின் படி டான்பிரவுன்களையும், சிட்னி ஷெல்டன்களையும், ஸ்டீபன் கிங்குகளையும் நான் ஒருநாளும் சந்தேகித்ததே இல்லை. ஏன் என்றால் அதெல்லாம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. தமிழில் அது போல முன்பு எழுதிக்கொண்டிருந்தவர் சுஜாதா. அவருக்கு பிறகு அறிவியல் விஷயங்களை யார் எழுதினாலும் அதில் ஏனோ நம்பிக்கையே வருவதில்லை. அதுபோக இன்று யாரும் போகிற போக்கில் எதையும் எழுதிவிட்டு தப்பவே முடியாது.

சாதாரண பல்ப் வகை துப்பறியும் கதைதான் என்றாலும் இதற்காக ஆசிரியரின் மெனக்கெடல் பிரமிக்க வைக்கிறது. அது இன்றைய ஜனரஞ்சக வாசகனின் தேவையாகவும் இருக்கிறது. டிஸ்கவரிசேனலும்,நேஷனல் ஜியாகரபியும் ஓர் எழுத்தாளன் சொல்லித்தருவதை அதிகமான விஷயங்களை வாசகனுக்கு தமிழ் டப்பிங்கில் மிக சிறப்பாக வீட்டிற்கே வந்து சொல்லிகொடுத்துவிடுகின்றன. கூகிள் காலத்தில் எழுத்தாளனால் ஈஸியாக கப்ஸாவிட்டு தப்பிக்க முடியாது.

அதையும் மீறி ஒரு அறிவியல் விஷயத்தை சுவாரஸ்யமாகவும் கச்சிதமாகவும் சொல்ல அதீத உழைப்பும் நிறைய க்ரியேட்டிவிட்டியும் வேண்டும். அது இந்நாவலில் நிறையவே இருக்கிறது. அந்த க்ரியேட்டிவிட்டிதான் லெமூரியன்களை சிவபெருமானோடு தொடர்பு படுத்துகிறது. நான்கே எண்களை கொண்டு ஒரு 400 பக்க நாவலை எழுதவைத்திருக்கிறது. பல்ப் வகை நாவல்களை படிக்கிறவர்களும், அறிவியல் புனைகதைகளில் ஆர்வமுள்ளவர்களும் மிஸ்பண்ணிவிடக்கூடாத நாவல் இது. இலக்கியவாதிகள் நிறைய லாஜிக் பார்ப்பார்கள் அவர்களுக்கு இது ருசிக்குமா தெரியவில்லை. அதோடு நாவலில் மனித உணர்வுகள் குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கதையை நகர்த்தியிருப்பதால் அவர்களுக்கு எரிச்சலூட்டலாம்.

டான்பிரவுனின் டாவின்சி கோட் என்கிற நாவல் சுதாகரை நிறையே பாதித்திருக்கும் என்று தோன்றுகிறது. நூலில் ஒரு இடத்தில் டான் பிரவுனின் பெயரும் இடம்பெறுகிறது. நாவல் முழுக்க ஏகப்பட்ட புதிர்கள். எல்லாமே அவரே உருவாக்கியவையாய் இருக்குமென்று நினைக்கிறேன்.

சுஜாதாவின் அறிவியல் புனைகதைகளை படித்துவிட்டதாலோ என்னவோ ஆங்காங்கே தொட்டுக்கொள்ள கொஞ்சமாக ஊறுகாய் போல செக்ஸும், அவ்வப்போது புன்னகைக்க வைக்கிற வசன காமெடிகளையும் எதிர்பார்த்தேன். ஆனால் அந்த பாதிப்பெல்லாம் இல்லாமல் முழுக்க சீரியஸாகவே கதையை புனைந்திருக்கிற்றார் சுதாகர். வளவளவென ஏகப்பட்ட தத்துவங்கள் பேச நிறைய வாய்ப்பிருந்தும் ஏனோ அதைக்குறித்து அதிகம் பேசாமல் அப்படியே தாண்டி சென்றது பிடித்திருந்தது. ஆனால் க்ளைமாக்ஸை ஒட்டி நடக்கும் களேபரங்கள் இன்னும் கூட எளிமையாக புரியும்படி எழுதியிருக்கலாம் நாலைந்து முறை படித்துதான் ஒவ்வொருவரியையும் புரிந்துகொள்ள வேண்டியதாகிவிட்டது.

இந்நாவலில் நிறைய புதிய அறிவியல் விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. சிலவற்றை பற்றி ஆழமாக தேடவும் தோன்றுகிறது. குறிப்பாக லெமூரியா குறித்து... இன்னொருமுறை கூட வாசிக்க நினைத்திருக்கிறேன். பொறுமையாக.

6174
க.சுதாகர்
வம்சி பதிப்பகம்
விலை 300

(நூலை பரிந்துரைத்ததோடு ஓசியிலும் கொடுத்து உதவிய நண்பர் மதன் செந்திலுக்கு நன்றி)

ஆன்லைனில் வாங்க - http://discoverybookpalace.com/products.php?product=6174


23 October 2013

ஜகத்குரு




இவ்வளவு வேகமாக படிக்க முடிகிற ஒரு ஆன்மீக புத்தகத்தை ப்ரியா கல்யாணராமன் மாதிரியான ஒரு மரணமசாலா ரைட்டரால்தான் எழுதமுடியும்.

ஹாரிபாட்டர்,லார்ட்ஆஃப்தி ரிங்ஸையெல்லாம் மிஞ்சும் சாகசமும் ஃபேன்டஸியும் ஏகப்பட்ட தத்துவங்களும் நிறைந்த ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூல் ‘’ஜகத்குரு’’. குமுதம் ஜங்கசனிலும் பின்பு குமுதம் பக்தியிலும் நூறுவாரங்கள் வெளியான தொடர் இது. இதை இப்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். 600 பக்க நூலை ஏக்தம்மில் படித்துமுடித்துவிடலாம்.

காலடியில் பிறந்து… அங்கிருந்து புறப்பட்டு இந்தியா முழுக்க சுற்றி திரிந்து வெவ்வேறு விதமாக பிரிந்துகிடந்த ஷண் மார்க்கங்களையும் திரட்டி இந்துமதம் என்கிற ஒரே கூரையின் கீழ்கொண்டுவந்த வரலாறுதான் இந்த ஜெகத்குரு. அவருடைய அந்த நீண்ட பயணத்தில் வெவ்வேறு விதமான மனிதர்களை சந்திக்கிறார். சிலரோடு வாதம் செய்து தோற்கடித்து தன்னுடைய அத்வைத கருத்தை ஏற்க வைக்கிறார். நிறைய இந்துசமய நூல்களுக்கு விளக்கவுரை எழுதுகிறார்.. கடைசியில் காஞ்சியில் வந்து காஞ்சிகாமகோடி பீடத்தை நிருவிவிட்டு முக்தியடைகிறார்.

இதற்கு நடுவில் அவர் சந்திக்கிற ஏகப்பட்ட வித்தியாசமான மனிதர்கள்,அவர்களுடைய கதைகள், ஞானிகள் அவர்களைப்பற்றிய கிளைக்கதைகள், ஆதிசங்கரர் சென்ற இடங்களைப்பற்றிய ஸ்தல புராணங்கள், அதற்கு பின்னால் இருக்கிற தத்த என ஆன்மீக விஷயங்கள் புத்தகம் முழுக்க நிறைந்திருக்கிறது. கைலாயம் வரை போய் சிவபெருமானை கூட சந்தித்து சௌந்தர்ய லகரியை வாங்கிவிட்டு வருகிறார் ஆதிசங்கரர். இதுமட்டுமல்லாமல் ஆதிசங்கரர் எழுதிய சில மிகமுக்கிய சமஸ்கிருத பாடல்களும் அதற்குரிய விளக்கங்களையும் பல்வேறு புத்தகங்களை ஆராய்ந்து புத்தகத்தின் நடுவில் அல்லது அது எழுதப்பட்ட சம்பவத்தின்போதே கொடுத்திருப்பது நன்றாக இருந்தது.

கன்னியாகுமரியில் தொடங்கி திருப்பதி,பூரிஜெகனாதர் ஆலயம்,கேதாரிநாத்,மாங்காடு,காஞ்சிபுரம் என இன்னும் ஏகப்பட்ட கோயில்களின் ஸ்தலபுராணங்களையும் புத்தகத்தில் ஆதிசங்கரரின் கதையோடு சேர்த்திருக்கிறார் ஆசிரியர். ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு இப்புத்தகம் நிச்சயம் பிடிக்கும்.. தினமும் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரங்களும், பாடல்களும் கூட புத்தகத்தில் உள்ளது.

புத்தகத்தில் ஆதிசங்கரர் பிறந்த காலம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு என்று கொடுக்கப்பட்டுள்ளது. அது சரியானதா ? அதோடு புத்த மதத்தினரையெல்லாம் கூட ஆன்திவே யில் வாதம்செய்து தோற்கடிக்கிறார் ஆதிசங்கரர். 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிராமணர்கள் அவா இவா.. நன்னா ஆத்துல என்பது மாதிரிதான் பேசியதாக எழுதியிருந்ததும் புன்னகைக்க வைத்தது. இப்படியெல்லாம் லாஜிக் பார்த்தால் புத்தகத்தில் 599 பக்கத்தையும் நிராகரிக்க வேண்டியிருக்கும். ஆன்மீக புத்தகத்தில் மட்டுமல்ல ஆன்மீக சமாச்சாரங்களிலும் லாஜிக் பார்ப்பது தவறு.

புத்தகத்தின் 450 வது பக்கத்திலேயே ஆதிசங்கரரின் வரலாறு முடிந்து போய்விடுகிறது. அதற்குமேல் சில பக்கங்கள் ஆதிசங்கரருக்கு பிறகிருந்த சங்கராச்சாரியார்கள் பற்றிய குறிப்புகளும் அதைத்தொடர்ந்து நூறுபக்கங்களுக்கு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஜெயந்திர ஸ்வாமிகள் பற்றிய வாழ்க்கை குறிப்புகளும் நிறைந்துள்ளன. அவையெல்லாம் செம போர்! காரணம் ஃபேன்டஸியான அல்லது சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் எதுவுமே இல்லை என்பதே.

ஆதிசங்கரர் குறித்த அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் நல்ல ஒரு புத்தகம் இது.

‘’ஜெகத் குரு’’
குமுதம் பதிப்பகம்
விலை 280

22 October 2013

காலம் விழுங்கிய நெருப்பு



எங்கோ குறிப்பிட்ட இடைவெளியில் மெலிதாக கேட்கிற ஒற்றை வேட்டு சத்தம் தீபாவளியின் வருகையை அறிவிக்கிறது

அனேகமாக யாரோ குட்டிப்பையன் அல்லது பெண் ஒரு பாக்கெட் நிறைய சிகப்பு நிற சின்னசின்ன ஊசிவெடிகளை வைத்து தன்னந்தனியாக கையில் ஒரு ஊதிபத்தியோடு வெடித்துக்கொண்டிருக்கலாம்

அதை பக்கத்துவீட்டு பையன்கள் ''நம்ம வீட்டுக்கு அப்பா எப்படா பட்டாசு வாங்கிட்டு வருவாரு'' என்கிற ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கலாம்

''டே நாமல்லாம் சேந்து வெடிக்கலாமா.. எங்க வீட்ல பட்டாசு வந்ததும் உனக்கு கொடுக்கறேன்.. ஒன்னே ஒன்னுடா'' என்று கெஞ்சிக்கொண்டிருக்கலாம்.

அல்லது அப்பா வாங்கி வந்த பட்டாசுகளை கொடுக்காமல் அம்மா மறைத்து வைத்திருக்கலாம்.

அல்லது பட்டாசு வாங்கித்தர யாருமற்ற ஒருவன், வெடிக்காத பட்டாசுகளை பொறுக்கிசெல்ல ஒவ்வொரு வெடியை பற்றவைக்கையிலும் இந்த பட்டாசு புஸ்ஸா போயிடணும் என கடவுளை வேண்டிக்கொண்டிருக்கலாம்.

என்னிடமோ கைநிறைய பட்டாசுகள் இருந்தும் வெடிக்கமுடியாமல் எதையோ தொலைத்துவிட்டுக் காத்திருக்கிறேன். அது காலம் விழுங்கிய நெருப்பாக இருக்கலாம். அது திரும்ப கிடைக்குமா தெரியாது.

சத்தம் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது தீபாவளியின் வருகையை அறிவித்தப்படி.

07 October 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்...





இப்டியே போச்சின்னா ஒருநா விஜயசேதுபதி தல அஜித்தோட ஓபனிங் ரெகார்டையெல்லாம் அட்ச்சு தொம்சம் பண்ணிட்வார்னுதான்பா தோண்து.. தேட்டர்ல இன்னா க்ரவ்டுன்ற… ஆல்ஏரியா ஃபுல்லு… டிக்கட்லாம் டபுள் ரேட்டு… ப்ளாக்ல போவுது! எங்கபார்த்தாலும் ஆல் லேடீஸ் வித் பேபீஸ்… ஆல் பேம்மிலீஸ் க்ரவுடு வித் கண்ணாடி போட்ட மாமாஸ்! சுக்குரன் *த்துல அட்ச்சா அப்டியே கூரைய பொத்துகினு ஊத்தும்பானுங்க.. அப்டி ஊத்துது விஜய்சேதுப்பதி காட்ல! இதற்குத்தானே ஆசப்பட்டாய் பாலக்குமரா!

பட்த்தோட ஹீரோ சுமார் மூஞ்சி குமாரு… நார்த் சென்னைல வெட்டி சீன் போட்னு சுத்துற பிட்டு அட்டு டப்பா பக்கெட்டு டவுசர் மாமா. அவனுக்கு ஒரு பிரண்ட்டு அவன் பேர் ரொம்ப சுமார் மூஞ்சூ கும்மாரு! அவனும் வெட்டி சீன் போட்னு சுத்ற பிட்டு அட்டு டப்பா பக்கெட்டு டவுசர் மாமாதான்! அப்படியாப்பட்ட ஹீரோ சும்மா இருக்காத எதுர்வூட்டு பிகர டாவடிக்கரான்.

அது இன்னா ஃபிகருன்ற.. சரியான கும் பாப்பா, குஜிலி குஸ்து குலோப்ஜாமூன்! அந்த ஃபிகர உஷார் பண்ண ரூட் வுட்டுகினு சுத்த சொல்ல அவன் அப்பனுக்கு தெரிஞ்சு அவன் நேரா கெத்து காட்டிகினு சுத்துற பேஜார்பாண்டி அண்ணாச்சியாண்ட போயி ‘’அண்ணாச்சி அண்ணாச்சி என் பொண்ணு பின்னால இந்த பொறுக்கி ராஸ்கல் திரிறான் அவன என்னானு கேளுங்க’’ னு சொல்ல… அண்ணாச்சி அவன் மஞ்சாசோற எத்துரேனு கெளம்ப.. உதார் வுட்டு உஷார் பண்ற ஹீரோவுக்கு இன்னாச்சி… அதுக்கப்பறம் ழவ்வு இன்னாச்சி.. நம்ம ஹீரோ லவ்வு செட்டாச்சா? இல்ல அட்டாச்சான்றதை சில்வர் ஸ்கிரீன்ல பாருங்கோ!

இது இல்லாத பட்த்துல இன்னும் மூனு ஸ்டோரிகீது.. மெய்ன் ஸ்டோரி ஒரு ட்ராக்ல போக சொல்ல சைட் ஸ்டோரி இன்னொரு ட்ராக்ல போவ்து.. அதுல மார்க்கெடிங் பய்யினா வரானே ஒரு செவத்த பீட்டர் பய்யன்… அவன் ஒரு மேரி பொண்ண உஷார் பண்ணி லவ்ஸ்பண்ணி பேஜாராகி கெடுகுறான்.

போதாகொறக்கு அவன் ஆபீஸ்ல மல்லு மாமா மேனேஜர் வேற டார்ச்சர் பண்ண.. அவன் அதுலருந்து எப்படி எஸ்ஸாகி லவ் பண்ணுன மிஸ்ஸோட மிங்கில் ஆவறான்றது இன்னொரு ஸ்டோரி. இன்னா.. பீட்டர் பையன் ஸ்டோரிய இவ்ளோ.. லென்த்தா சொல்லிருக்க தேவல்ல.. நடுவுல பாரின் சாங் வேற.. இன்னா வழி,.. வழிச்சி.. பஸ்ட் ஆஃப் முடிய சொல்ல பத்து படத்த கண்ணு முழிச்சி பார்த்தப்போல ஒரு எபேக்ட்டு! ஆனாலும் இன்டர்வெல் வரசொல்ல அல்லு வுட்டுதுன்றத ஒத்துகினுதான் ஆவணும்.

பஸ்ட்ஆப்தான் லென்த்து… செகன்ட் ஆப் செம கெத்து! செரி குத்து. சிர்ச்சி சிர்ச்சி நெஞ்சு கீஞ்சிருச்சி. விஜய்சேதுபதி இன்னா டக்குரா நட்ச்சிருக்கான்… அந்த செவப்பா வர பீட்டர் பையனுக்குதான் அவ்வுளுவா நடிக்க வர்ல.. பசுபதி,ரோபாஷங்கர்,லிஃப்ட்டு மாமா னு தம்த்தூண்டு கேரக்டர்லாம் கூட செம காட்டு காட்டினுருக்காங்க…

பரோட்டா சூரிதான் இன்னாத்துக்கு வந்து அவ்ளோநேரம் சலும்புறார்னே புர்ல.. அன்னெசசரி வேஸ்ட் ஆஃப்தி பரோட்டா அன் சால்னா! பட்த்துக்கு வசனம் மதன்கார்க்கியாம்.. பின்னிருக்காப்போல.. டொச்சு கதைல பிச்சி பின்னி பூவைக்கிற டயலாக்குதான்! அப்புறம் ப்ரேயர் சாங் அன் ஒபனிங் சாங் இரண்டுமே செம..

லேட்டஸ்டா இவ்ளோ லோக்கலா ஒரு படம் பார்த்தாப்ல நெனைவில்ல.. இது அக்மார்க் சுத்தமான சி சென்டர் மூவி! ஆடியன்ஸ் அப்படி என்ஜாய் பண்றாங்க… படம் ஃபுல்லா ஆடியன்ஸ் ஹேப்பி! ஐயாம் ஹேப்பி... ஆல் ஹேப்பி. அவ்ளோதான்.

படம் பார்த்து முட்ச்சதும் ‘’இதற்குதான் ஆசைப்பட்டோம் பாலகுமாரா’’ன்றானுங்க பசங்க… அவ்வுளோ ஹேப்பி. செம டைம்பாஸ்.

பட்த்துல சம்முகத்துக்கு தேவையான மெசேஜ்லாம் வேறருக்குது.. ஆனா என்னானுதான் மறந்துபோச்சி. அதப்பத்தி யாருக்கும் பெரிசா கவலையுமில்ல.