Pages

22 January 2015

சென்னை புத்தகக்கண்காட்சி 2015

பெருமாள் முருகன்தான் இந்த புத்தக கண்காட்சியின் சூப்பர் ஸ்டார். அவரைதான் எல்லா கண்களும் தேடின. வாசக கண்மணிகள் அத்தனை பேரும் இலக்கியவெறியோடு காலச்சுவடு ஸ்டாலுக்கே அட்ரஸ்கேட்டு அலைந்தனர். மூச்சுவாங்க கடைவாசலில் நின்று ‘’மாதொருபாகம் இருக்கா’’. ‘’மாதுளைபாகன் இருக்கா’’ ‘’மதுரையின்பாகன்’’ ‘’மாதிரைபேகன்’’ ‘’மாத்ரூபாகம்’’ என விதவிதமாக கேட்டு அது இல்லை என்று தெரிந்து சோகத்தில் அங்கிருந்து துவண்ட நெஞ்சோடு கிளம்பி லிச்சி ஜூஸ் குடித்து மனசாந்தியடைந்தனர். தமிழ் இலக்கியம் விற்கிற கடைகளிலும் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. ‘’ஏன்ங்க இந்த உயிர்மை காலச்சுவடு பாரதி புத்தகாலயம், அடையாளம், என்சிபிஎச்சு இவனுங்க எல்லாரும் ஒரே ஆளுங்கதான்ங்க நடத்துறான், பேர் மட்டும் வேற வேற வச்சு ஏமாத்துறானுங்க’’ என்று பார்க்கிங்கில் ஒரு பெரியவர் பேசிக்கொண்டிருக்க, அதை கேட்டுக்கொண்டிருந்தவர் ‘’சத்தியமான உண்மைங்க, ஒரே முதலாளிதான், நம்மளோட ஒட்டாம ஒரு கும்பலாவே திரியறானுங்க கவனிச்சிங்களா, அவனுங்க ஆளுக்கு ஒரு பிரச்சனைனதும் என்னமோ ஓவரா துள்றானுங்க இதுவே நமக்கு ஒன்னுனா வருவானுங்களா’’ என்றார். நான் நகர்ந்துவிட்டேன். அவர் சொன்னதில் ஒரு உண்மை இருப்பதாக தோன்றியது.

***

பத்து சதவீதம்தான் புக்ஃபேரில் டிஸ்கவுன்ட் கொடுக்க வேண்டும் என ஒரு விதி சென்ற ஆண்டுவரை இருந்தது என்று நினைக்கிறேன். அதை இம்முறை தளர்த்தியிருக்கிறார்களா தெரியவில்லை. எல்லா கடைகளிலும் முப்பது சதவீதம், ஐம்பது என்றெல்லாம் விற்றுத்தள்ளினர். காலச்சுவடு கடையில் சுந்தர ராமசாமியின் கடைசி நாவல் சீண்டுவாரின்றி 60சதவீத கழிவில் கிடந்ததை பார்த்தேன். ஆனானப்பட்ட சுராவுக்கே இதான் நிலைமைனா என்று நினைத்துக்கொண்டேன். காலச்சுவடு கடையில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் நூல் வாங்கினால் 500ரூபாய்க்கு இலவசம் என சில பழைய கவிதைதொகுப்புகளை தள்ளிவிட்டுக்கொண்டிருந்தனர். ஒரு வாசகர் அந்த கவிதை தொகுப்புகளை எண்ணி பார்த்துவிட்டு, சார் இதை கூட்டினா 500 வரலை 350தான் வருது என்றார். காலச்சுவடு கடைக்காரர் சில விநாடிகள் யோசித்துவிட்டு "அப்படினா அந்த கவிதை தொகுப்புல எல்லாத்துலயும் ரெண்டு ரெண்டு எடுத்துக்கோங்க'' என்றார். வாசகர் பயந்துபோய் சுதாரித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். எல்லா கடைகளிலும் இதுபோல நூற்றாண்டுகளாக விற்காத புத்தகங்களையெல்லாம் நிறைய தள்ளுபடியில் விற்றனர்.

***

புத்தக கண்காட்சியின் முதல் நாள் எதுவுமே ஏற்பாடாகியிருக்கவில்லை. எங்கு பார்த்தாலும் சுத்தியலும் ரம்பமுமாக கரக்கரக் டொக்டொக் என்று மரத்தை அறுத்து ஆணி அடித்துக்கொண்டிருந்தார்கள். பாதைகளில் இரும்பு சட்டகங்கள் கிடக்க, அப்போதுதான் மேடை அமைப்பு, கடை அமைப்பெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் முதல் இரண்டு நாட்கள் வீணடிக்கப்பட்டதாகவே கருதலாம். விசாரித்ததில் புத்தகக் காட்சி நடந்த ‘’ஒய்எம்சிஏ மைதானம்’’ பத்து நாட்களுக்கு முன்புதான் ஏற்பாட்டளர் வசம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிந்தது. பத்துநாட்களுக்குள் ஏற்பாடு பண்ண முடியாது என எப்போதும் வேலைபார்க்கும் ரெகுலர் கான்ட்ராக்டர் கழண்டுகொள்ள, புது கான்ட்ராக்டரை தேடிபிடித்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். என்ன காரணம் என விசாரித்தால், ஆரம்பத்திலேயே ஒய்எம்சிஏ நிர்வாகம் மைதானம் தர மறுத்திருக்கிறது. காரணம் சென்ற ஆண்டை விட கூடுதல் தொகையை வாடகையாக கேட்டதாக சொல்கிறார்கள். எவ்வளவு தெரியுமா? சென்ற ஆண்டு கட்டணம் 10லட்சம்!. இந்த ஆண்டு ஒரு கோடி என்கிறார்கள். பபாஸிகாரர்கள் ஆடிப்போய் என்ன செய்வதென்று தெரியாமல் மந்திரிமார்களிடம் பேசி ஒருவழியாக 25லட்சங்களுக்கு பேசி முடித்திருக்கிறார்கள். கடைசியில் ஏற்பாடுகள் தாமதமாகி வாசகர்களை வருத்ததில் ஆழ்த்தியது. பபாஸி ஆள் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தபோது ‘’நமக்குனு சொந்தமா ஒரு இடம் இருந்தா இந்த பிரச்சனைலாம் இருக்காதுங்க, ஆனா அதுக்காகதான் கவர்மென்ட் கிட்ட பேசிகிட்டிருக்கோம்’’ என்றார். அரசாங்கத்திடம் சொந்த இடம் கேட்டால் செங்கல்பட்டு தாண்டி சென்னைக்கு மிக அருகில்தான் இனி நிலம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது! அங்குதான் இன்னமும் நிலம் கணிசமாக மிச்சமிருக்கிறது. மக்கள் முதல்வர் திரும்பி வந்தால் நிச்சயம் நிலம் கிடைக்கும்.

****

புத்தகக் கண்காட்சியில் டீயும் காப்பியும் எங்கும் கிடைத்தது ஆச்சர்யம். எங்கு பார்த்தாலும் பச்சையும் ஆரஞ்சுமாக இளைஞர்கள் கையில் டீகேனுடன் ஸ்டால்களுக்கு நடுவே அங்கிமிங்கும் சுற்றி சுற்றி டீ விற்றனர். இது ஒரு நல்ல ஏற்பாடாகவே தோன்றியது. காரணம் முந்தைய ஆண்டுகளில் டீ குடிக்க வேண்டும் என்று நினைத்தால் வெளியே கேன்டீனுக்கு சென்று டோக்கன் வாங்கி பில்லுப்போட்டு கூட்டத்தில் முண்டியடித்து ஒருமணிநேரத்தை வீணாக்க வேண்டியிருக்கும். இந்த முறை அந்த பிரச்சனையை ஜஸ்ட் லைக் தட் சரிசெய்திருப்பதற்காகவே அந்த கேன்டீன் காரருக்கு கோடானு கோடி நன்றிகள். நல்லதிலும் கெட்டது இருக்கும்தானே புத்தகக்காட்சியின் எல்லா மூலைகளிலும் டீக்கப்புகள்! ஆனால் அந்த குப்பைகளையும் வேறொரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இளைஞர்கள் அவ்வப்போது சுத்தமாக்கி கவனம் ஈர்த்தனர். புக்கெல்லாம் வாங்கி படிக்கிற சமூகம் குப்பையை குப்பைத்தொட்டியில் போடவேண்டும் என்கிற அடிப்படை நாகரீகத்தை எந்த நூற்றாண்டில் கற்றுக்கொள்ள போகிறதோ? லிச்சி ஜூஸ் கடைக்காரர் இரண்டு கடை போட்டிருக்கிறார். வர்க்கி கடைக்காரரும். இரட்டிப்பு லாபம்தான் போல!

****

சென்ற ஆண்டைப்போலவே புத்தக கண்காட்சியில் ஒதுக்குப்புறமாக சிற்றரங்கு என்று ஒரு இடத்தை ஏற்பாடு பண்ணி அதை தமிழ் இலக்கியவாதிகளுக்கென டெடிகேட் செய்திருந்தார்கள். அங்கே தினமும் ஒரு எழுத்தாளர் பேச கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஏற்பாடு செய்திருந்தார். முதல்நாள் அ.மார்க்ஸ் வந்திருந்தார். பார்வையாளர்க்கு முன்பே அவர் வந்து தன்னந்தனியாக தாடைக்கு முட்டுக்கொடுத்து அமர்ந்திருந்த காட்சி கிரேக்க ரோமானிய சிற்பங்களை போலிருந்தது. ஆரம்பத்தில் பத்துபேரோடு தொடங்கி கூட்டம் முடியும் போது ஐம்பது பேரோடு முடிந்ததே அவர் எப்படி பேசினார் என்பதற்கு சாட்சி. இங்கே நடந்த மற்ற கூட்டங்களில் நேர சிக்கலால் கலந்துகொள்ள முடியாமல் போனதில் வருத்தமே. ஆனால் மெயின் அரங்கில் தமிழ் இலக்கியத்திற்கும் அதன் தீவிர செயல்பாட்டிற்கும் ஒரு சிங்கிள் பர்சென்ட் கூட தொடர்பில்லாதவர்கள் பேசிக்கொண்டிருக்க மூத்திர சந்தில் அரங்கு அமைத்துக்கொடுத்து முக்கிய எழுத்தாளர்களை பேசவைத்த பபாஸியை எவ்வளவு வேண்டுமானாலும் அடித்து துவைக்கலாம். போலவே கண்காட்ச்சிக்கு ஓரமாக இருட்டான பகுதியில் ஒரு சந்துகிடைத்தால் அங்கே ஆயிரக்கணக்கான ஆண்கள் உச்சாபோய் சாதா சந்தினை உவ்வேக் சந்தாக மாற்றுகிற நம்மையும் நாலு மிதி மிதிக்கலாம். இன்று பயோடாய்லட், வாட்டர்லெஸ் டாய்லெட், மூவபிள் டாய்லெட், மைக்ரோப் டாய்லெட் என வெரைட்டி வெரைட்டியாக நடமாடும் டாய்லெட்கள் வந்துவிட்டபோதும் இன்னமும் பழைய பாணியில் தண்ணீர் வசதி சரிவர இல்லாமல் ஒரு பெட்ரமாக்ஸ் லைட் கூட இல்லாமல் கும்மிருட்டில் பாத்ரூம் கட்டிவிட்டால் யார்தான் அங்க போவான்! ஒரே கன்ஃப்யூசனாருக்கு. பத்துலட்சம் வாசகர்கள் வருகிற ஒரு திருவிழாவுக்கு ஒரே ஒரு டாய்லெட் என்பது… இந்தவாட்டியாவது இதைபற்றி எழுதக்கூடாது என்று நினைத்து.. எழுதிவிட்டேன். இந்த சிற்றரங்குக்கு செல்லும் வழி காலச்சுவடு மற்றும் கிழக்கு ஸ்டால்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டது என்ன மாதிரி டிசைன் என்பது தெரியவில்லை.

****

நம்ம ஆட்டோ என்கிற புது முயற்சியை முன்னெடுத்த நிறுவனம் நினைவிருக்கிறதா? அந்த நிறுவனம் ‘’பயணி’’, ‘’சின்ன நதி’’ என்று இரண்டு புதிய இதழ்களை கொண்டுவந்திருக்கிறார்கள். பயணி தமிழில் வந்திருக்கும் முதல் ட்ரவலாக் இதழ் இது. கலரில் நல்ல அச்சில் தரமான காகிதத்தில் ஏகப்பட்ட போட்டோக்களுடன் பார்க்க வெளிநாட்டு இதழ் போல வளவளப்பாக இருந்தது. வாசிக்கவும் நிறைய பயணக்கட்டுரைகள் இருந்தது. கூடவே வைகறை என்கிற இணைய ரேடியோவையும் தொடங்கியிருக்கிறார்கள். இதற்காக என்னை ஒரு பேட்டி எடுத்தார்கள். நிறைய கேள்விகேட்டார்கள், எழுத்தாளனை போலவே பதில் சொன்னேன். சின்ன நதி இதழ் ஒரு பொக்கிஷம். அப்படியே பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன். எழுத்தாளர் யூமா வாசுகிதான் ஆசிரியராம். இப்படியெல்லாம் நான் சின்னப்பையனாக இருக்கும்போது சிறுவர் இதழ் வந்திருந்தால் பிக்பாக்கெட் அடித்தாவது வாங்கியிருப்பேன். அவ்வளவு சிறப்பாக கொண்டுவந்திருக்கிறார்கள். இப்போதைக்கு கடைகளில் கிடைக்காது. புத்தகக்காட்சியில் வாங்கியிருந்தால் லக்குதான். கவலைவேண்டாம் விரைவில் வரும். அப்போது மிஸ்பண்ணிடாதீங்க..

****

சென்ற ஆண்டு கடைக்குள்ளேயே மரம் வைத்து அசத்திய இயல்வகை கடையில் இம்முறை விதைகள் விற்றுக்கொண்டிருந்தனர். என்னென்னவோ விதைகள். இதையெல்லாம் போட்டால் வளருமா என்று விசாரித்தேன் ஆனால் எதையும் வாங்கவில்லை. சென்னையில் வாடகைக்கு குடியிறுப்பவன் இதையெல்லாம் வாங்கிச்சென்று தன் தலையில்தான் வைத்துதான் வளர்க்க வேண்டும். ஆனாலும் அவர்களுடைய முயற்சி அருமையானது. வீட்டிலேயே சின்னதாக தோட்டம் வைக்க நினைக்கிற ஆர்கானிக்விரும்பிகளுக்கு உதவியாக இருந்திருக்கும்.

****

மருத்துவர் சிவராமனை பூவுலகின் நண்பர்கள் கடையில் சந்தித்தேன். மனிதர் நொடிக்கு நான்குபேர் வீதம் கையொப்பமிட்டுக்கொண்டிருக்கிறார். அனேகமாக இது மனுஷ்யபுத்திரனின் நொடிக்கு மூன்றுபேர் ஆட்டோகிராப் சாதனையின் முறியடிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். மருத்துவராக இருந்தாலே அவரை நேரில் பார்த்தால் டாக்டர் லேசா முட்டி வலிக்குறாப்ல இருக்கு அதுக்கு என்ன பண்ணனும் என்று கேட்க தோன்றுமோ என்னமோ, ஆட்டோகிராபோடு இலவசமாக ஆலோசனையும் கொடுத்துக்கொண்டிருந்தார். எனக்குமே அவரை பார்த்ததும் இந்த கணுக்கால்ல லேசா ஒரு வலிஎன்று எதையோ கேக்கணும்போலிருந்தது. வாயை அடக்கிக்கொண்டேன். இந்த ஆண்டும் அவருடைய உணவு நூல்கள் சக்கைப்போடு போட்டதை கண்குளிர காண முடிந்தது. இதே மாதிரி காட்சிகளை அச்சு அசல் மாறாமல் போன முறையும் பார்த்த நினைவு. இதே வார்த்தைகளையும் எழுதிய நினைவு. சிவராமன் ஒருநாள்தான் இதை செய்துகொண்டிருந்தார். புத்தக காட்சியின் அத்தனை நாளிலும் விரல் தேய ஆட்டோகிராப் போட்டவர் மனுஷ்யபுத்திரன்தான். எப்படியும் வந்திருந்த பத்துலட்சம் வாசகர்களில் இரண்டு லட்சம் பேர் அவரிடம் நோட்டு புத்தகம், துண்டு சீட்டு, பஸ் டிக்கட் முதலான வஸ்துகளில் விதவிதமாக ஆட்டோகிராப் வாங்கினர். சளைக்காமல் போட்டுக்கொடுக்கிறார். ஒரு பையன் அவருக்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டு சார் உங்க கவிதைனா எனக்கு உயிர்சார் உங்க கையை பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு, நைட்டெல்லாம் உங்களோட ஒரு கவிதைய படிச்சி அழுதுகிட்டிருந்திருக்கேன் என்றெல்லாம் கதறிக்கொண்டிருந்தான். சிலிர்ப்பாக இருந்தது. ஒரு எழுத்தாளனுக்கு இதைவிட வேற என்ன வேணும்!

****

இந்த முறை என்னுடைய நூலும் வந்திருப்பதால் எனக்கு இது ரொம்ப ஸ்பெஷலான புத்தக காட்சி. அந்த நூலை பலரும் வாங்கி வந்து என்னிடம் காட்டி கையெழுத்தெல்லாம் வாங்கி என்னை திக்குமுக்காட வைத்தார்கள். ஒருநாள் நானும் சில நண்பர்களுமாக கிளம்பி வெளியே போய்கொண்டிருந்த போது இரண்டு கல்லூரி மாணவிகள் மூச்சிரைக்க ஓடிவந்து ‘’சார் நான் உங்க பெரிய ஃபேன், உங்க புக்ல கையெழுத்து வாங்கதான் தேடிக்கிட்டிருந்தோம்’’ என்ற போது நமக்கே தெரியாமல் யாரோ பெரிய சதி செய்கிறார்கள் என நினைத்துக்கொண்டே கையெழுத்து போட்டு அனுப்பிவைத்தேன். படிக்கும்போது நம்ப முடியாமலிருக்கிற உங்களைப்போலவே நடந்தபோது என்னாலும் நம்பமுடியவில்லைதான்!

****

வாசலில் இருக்கிற பிரமாண்ட அரங்கு ஃபேஷன் ஷோ மேடைபோல அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் தினமும் நிறையபேர் பேசினார்கள். முதல்நாளில் நான் உள்ளே நுழைந்த நேரம் அரங்கில் உரையாற்றிக்கொண்டிருந்தவர் பெருங்குரலில் முழங்கிக்கொண்டிருந்தார். ‘’நம்முடைய ஒரு எதிரிதான் வீழ்ந்திருக்கிறான்… இன்னொரு எதிரி இந்தியா, இந்தியாவையும் நாம் தோற்கடிக்க வேண்டும்’’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். போஸ்டர்கள் வழி பழ.நெடுமாறனின் நூல் வெளியீடு என்பது புரிந்தது. இதே அரங்கில் ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சை முழுவதுமாக ஒருமாலையில் கேட்டு ரசிக்க முடிந்தது. பெருமாள் முருகன் நூல் எரிப்பு விவகாரம் எல்லோர்க்கும் தெரிந்திருக்கும். அந்த விஷயத்தை பற்றி மிகுந்த கோபத்தோடு பேசினார். அன்றைய தினம்தான் கண்காட்சி அரங்கின் வாசலில் இருந்த மைதானத்தில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சிலர் போராட்டம் நடத்தி போலீஸாரால் வெளியேற்றப்பட்டனர். அதே இடத்தில் அதே விஷயத்தை அத்தனை நாசூக்காக வாழைப்பழத்தில் கடப்பாரையை சொருகுவது போல பேசினார் பாரதிகிருஷ்ணகுமார். மற்றபடி இந்த ஆண்டும் அந்த மேடையில் நூற்றுக்கணக்கான நூல்களை பல சினிமா பிரபலங்களை வைத்து ஒரே நாளில் எட்டு மணிநேரம் இடைவிடாமல் வெளியிட்டு அசத்தியது மணிமேகலை பிரசுரம். கடைசிநாளில் இருபது கவிஞர்களின் கவிதை வாசிப்பு கூட நடந்தது.

****

ஐப்பானிய எழுத்தாளர் ஒருவருடைய மொழிபெயர்ப்பு நூல்கள் கடை ஒன்றை கண்டேன். சென்ற ஆண்டும் இவர் சென்னை புக வில் கலந்துகொண்டிருக்கிறார். பெயர் ரியுவா ஒகாவா! இதுவரை 1800 நூல்களை எழுதியிருக்கிறார். ஒரே வருடத்தில் எத்தனையோ புத்தகங்கள் எழுதி கின்னஸ் சாதனைகூட படைத்திருக்கிறார். 80களில் ஜப்பானில் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு முப்பது வயதில் ஞானம் வந்து சுயமுன்னேற்ற புத்தகங்கள் எழுத ஆரம்பித்துவிட்டாராம். இப்போது ஊர் ஊராக போய் உரையாற்றிக்கொண்டிருக்கிறார் போல! மகிழ்ச்சி அறிவியல் என்கிற தலைப்பில் நிறைய எழுதியிருக்கிறார். தமிழில் இப்படி பேய்மாதிரி விறுவிறுவென எண்ணற்ற நூல்களை எழுதுகிற எழுத்தாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்றால் மூத்த எழுத்தாளர் பா.ராகவனை கைநீட்டுவேன். அவர் ஒரே நாளில் ஒரு நூற்றிருபது பக்க நூலை எழுதியவர்!. அவருக்கு இணையான இன்னொரு அதிவேக தமிழ் எழுத்தாளர் சொக்கன். அவரும் ஒரே ஆண்டில் பத்து இருபது நூல்களை எழுதி தள்ளியவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஜப்பான் காரர் கடையில் எதுவும் வாங்கவில்லை. ஆனாலும் கடைக்கார ஜப்பானியர் புன்னகையோடு தமிழில் ''திரும்பி வந்துடுங்க… நூல் வாங்கிடுங்க'' என்றார். தமிழ் கத்துகிட்டார் போல! அவரிடம் உங்களுக்கு ''ஜெயமோகனை தெரியுமா'' என்று கேட்டேன், அவர் இல்லையே என்றார். ''உங்க ஆள் ஒகாவாவோட சமகால போட்டியாளர் ஜெயமோகன்தான். அவருக்கும் உங்காள் மாதிரியே முப்பது வயசுல ஞானம் வந்துடுச்சு.. அனேகமா அடுத்த வருஷம் உங்காளோட 1800புக் சாதனைய முறியடிச்சிடுவார்'' என்றேன். அவருக்கு என்ன புரிந்ததோ "அரிகாடோ'' என்றார்.

****

இந்த முறை கடைகள் ஏதோ திட்டமிட்டு அமைக்கப்பட்டது போல, இந்து நூல்களின் கடைகளுக்கு நேர் எதிர்பக்கமாக இஸ்லாமிய நூல்கள் விற்கிற கடைகள். விகடன் ஸ்டாலுக்கு பக்கத்திலேயே குமுதம் ஸ்டால் என போட்டியாளர்களை அருகே அருகே வைத்து ரசித்திருக்கிறது பபாஸி! ஆனால் எங்கும் எந்த அசம்பாவிதங்களும் நடக்காதது புதுமைபித்தன் பண்ணின புண்ணியமாகதான் இருக்க வேண்டும்.

****20 January 2015

சினிமா விமர்சனம் - FAQ and ANSWERS

ஓர் (இணைய) சினிமா விமர்சகனின் பேட்டி அல்லது FAQ and Answers

********

இன்னைக்கு பேஸ்புக்ல ட்விட்டர்ல அக்கவுன்ட் இருக்கிற எல்லாருமே தமிழ்சினிமா
விமர்சனம் எழுதுகிறார்கள், உங்களுக்கெல்லாம் வேறு வேலை வெட்டி கிடையாதா?

கிடையாது. ஒரு ஜோலி வெங்காயமும் கிடையாது. நல்ல வேலை இருந்தால் சொல்லி
அனுப்பவும். ரெஸ்யூம் ஃபார்வர்ட் செய்கிறோம்.

***********

விமர்சனம்னா என்னானு தெரியுமாடா உனக்கு? சினிமான்ற கலைல எத்தனை துறைகள்
இருக்குனு தெரியுமாடா உனக்கு?

முதல்ல அபிப்ராயம்னா என்னானு தெரியுமா உனக்கு. விமர்சனத்துக்கு
அபிப்ராயத்துக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா உனக்கு? ஃபேஸ்புக்ல
போடறது அபிப்ராயம். படம் முடிஞ்சி டீக்கடைல கொட்ற ஆதங்கம் மாதிரி.

*************

அப்படி போய் மொதநாளே ஒரு படத்தை பார்த்துட்டு வந்து வேலை மெனக்கெட்டு
திட்டி எழுதணுமா?

ஆமா எழுதிதான் ஆகணும். எழுதாட்டி செத்துப்போயிருவோம். கைநடுக்கம் வரும்.
அம்பதுவருஷமா எங்களுக்கு கலைனா சினிமாதான். இசைனா சினிமா பாட்டுதான்.
சினிமா பாக்காட்டி தலைசுத்தும் வாமிட் வரும், யாரையாச்சும் போட்டு மிதிக்கணும்னு தோணும். அவ்ளோ அடிக்ட்டு.

************

எங்க நீ ஒரு படத்தை எடுத்து காமியேன்டா? உன்னால ஒரு ஷார்ட் பிலிமாச்சும்
எடுக்க முடியுமா? கரெக்டா ஒரு ஷாட் வைக்க முடியுமாடா? டே சினிமான்னா
என்னானு தெரியுமாடா உனக்கு?

சினிமான்னா என்னானு தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் நீங்க படம்
எடுக்கறீங்களா? அவங்களுக்கு மட்டும்தான் உங்க படத்தை காட்டுவீங்களா?

************

இதுமாதிரி விமர்சனம் எழுதி நேரத்தை வீணடிக்கறீயே இந்த நேரத்துல
நாட்டுக்கு எதாவது உருப்படியா நல்லது செய்யலாம்ல?

ஆமாங்க ராக்கெட் சைன்டிஸ்ட். நீங்க சொல்றது சரிதான். உண்மைதான். நாங்க
கூட உங்களாட்டம் இஸ்ரோவுல சேர்ந்துடலாம்னு நினைக்கிறோம்.
சேர்த்துவிடறீங்களாஜி.

*************

பெரிய அறிவுஜீவி ரோமம் என்று நினைப்பு, எல்லா படத்தையும்
குறைசொல்லுவாரு... நீயெல்லாம் விமர்சனம் எழுதலைனு யார் அழுதா?

எங்க பக்கத்துவீட்டு சீனுமாமா, எதிர்த்த வீட்டு கார்த்திகா ஆன்ட்டி,
அமெரிக்க அதிபர் ஒபாமா, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி இவங்கள்லாம்
அழறாங்களே சார். நம்ம விமர்சனத்தை பாத்துட்டுதான் அவங்க படமே
பாக்குறாங்க. அதுக்காகதான் எழுதறோம். நாங்க விமர்சனம் எழுதாட்டி
அவங்கள்லாம் விஷத்தை குடிச்சிருவாங்க.

**************

படம் ரிலீஸாகி மொத ஷோ முடியறதுக்குள்ளயே இது கொரியன் படத்தோட காப்பி ஜப்பான் பட காப்பினு சொல்லி ஒரு படத்தோட வியாபாரத்தையே காலி பண்றிங்களே இது நியாயமா? தர்மமா? அடுக்குமா? எங்க காப்பி அடிச்சாங்கன்னு கண்டுபிடிக்கவே படம் பாப்பீங்களாடா நீங்க?

ஆமா அதுக்குதான் படம் பாக்குறோம். நிச்சயமா நாங்க பண்றது நியாயமில்லைதான். ஆனா இந்த ஈரவெங்கயாத்தையெல்லாம் ரைட்ஸ் வாங்காம காப்பியடிச்சி படமெடுக்குறானே அவன்கிட்ட போய் கேக்கறதுதானே இதையெல்லாம். திருட்டுப்பயலுகளுக்கு என்ன திரு வேண்டிகெடக்கு. அந்த ட்டுப்பயலுகள விட நாங்க பண்ணுறது பெரியதப்பாக்கும்.

***************

ஒரு படத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு ஒருத்தன் எடுக்குறான் தெரியுமா? எத்தனை வருஷத்து உழைப்பு தெரியுமா? உழைப்புக்காச்சும் மரியாதை குடுங்கடா?

முடியாதுடா. என்னமோ இந்தியாவுல சினிமாக்காரங்க மட்டும்தான் உழைக்கிறாங்களா? வேற எவனுமே உழைக்கறதில்லையா? நாங்க என்ன உழைக்காம உக்காந்தா திங்கறோம். ஒரு படத்தை தியேட்டர்ல போய் பாக்கறதுக்கே நாங்க எவ்ளோ உழைக்கிறோம்னு தெரியுமா? நாய் மாதிரி அலைஞ்சு திரிஞ்சு சம்பாரிச்ச ஒரு நாள் கூலிடா! அது நக்கிட்டு போச்சுனா கோவம் வராம கோக்கோகோலாவா வரும்.

******************

உங்களுக்கெல்லாம் ஒரு படத்தை உருப்படியா சரியான கண்ணோட்டத்தோட பாக்க தெரியல?

ஆமா, நீங்களே ஏன் டிக்கட்டோட இந்த படத்தை எப்படி பாக்கணும்னு ஒரு கோனார் நோட்ஸூம் குடுத்துட கூடாது.

*******************

இப்படி எழுதி எழுதி தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை உண்டாக்குறீங்களே இது நியாயமா?

இப்படி மொக்கைப்படமா எடுத்து எடுத்து அப்பாவி ஜனங்களை ஏமாத்தி ஏமாத்தி அவங்களோட கஷ்டபட்ட ஊதிய உழைப்பை சுரண்டி காசு
புடுங்கறீங்களே அதுமட்டும் நியாயமா?

***************

டேய் நீங்க விமர்சனம் எழுதிட்டா படம் ஃப்ளாப்பாகிடுமாடா.. ?

அப்புறம் என்ன சாமந்திப்பூவுக்கு நாங்க எழுதறத பாத்து கோவப்படறீங்க யுவர் ஆனர்.


****************

DISC : இது ஒரு கற்பனையான பேட்டி. இதில் கேள்விகேட்டவரும் பதில்சொன்னவரும் செவ்வாய் கிரகத்தில் வாழ்கிறார்கள்.

16 January 2015

ஃபேஸ்புக் பொண்ணு
உயிர்மை வெளியிட்டுள்ள என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பான ''ஃபேஸ்புக் பொண்ணு'' என்கிற நூலுக்கு எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதியிருக்கும் முன்னுரை இது.

****

அதிஷாவை ஆரம்பத்தில் ப்ளாக்குகளில் அவர் எழுதுகையில் படித்திருக்கிறேன். சில கட்டுரைகள் சினிமா விமர்சனங்கள் சுவாரஸ்யமாக இருந்ததை கவனித்திருக்கிறேன். பிறகு அதிஷா ஃபேஸ்புக்கில் அதிகம் தென்பட ஆரம்பித்தார். புத்தக வெளியீட்டு விழாக்களில் அறிமுகமானார். பிறகு எனக்கு நல்ல நண்பராகி விட்டார். இப்போது அனேகமாக நாங்கள் தினமும் சந்தித்துக் கொள்கிறோம். அரட்டை அடிக்கிறோம்.சுற்றுகிறோம். ஆனால் முதல் முதலில் எங்கு சந்தித்தோம் என்பது எனக்கு நினைவில் இல்லை. அதிஷாவின் சிறுகதைத் தொகுதி வெளிவருவதற்கான நிமித்தங்கள் ஓரிரு ஆண்டுகளாகவே வால் நட்சத்திரம் போல் அவ்வப்போது தோன்றினாலும் இந்த ஆண்டுதான் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் இன்னும் ஒரு எழுத்தாளர். இளமைத் துடிப்போடும் அதிஷா என்கிற வித்தியாசமான பெயரோடும்..

`லிங்கா ரிலீஸ் மாதிரி தமிழ் சமூகத்தில இதுவும் ஒரு முக்கியமான நிகழ்வு. இதுக்கு நீங்க முன்னுரை எழுதணும் பாஸ்" என்று அதிஷா கேட்டதும் வழக்கம் போல சோம்பேறித்தனத்தை மறைத்துக் கொண்டு, `எதுக்கு அதிஷா என் கிட்டப் போய்? நம்மளை விட தகுதி வாய்ந்த பலபேர் தமிழ் இலக்கியப் பரப்பில இயங்கிக்கிட்டு இருக்காங்களே?...அவங்க கிட்ட கேக்கலாமே?" என்றேன் பாவனையான பெருந்தன்மையுடன்...அதிஷாவிடமிருந்து உடனே பதில் வந்தது. ` இல்லை பாஸ் என்னோட தொகுதிக்கு நீங்கதான் முன்னுரைன்னு நான் முடிவு பண்ணிட்டேன். இது இன்னைக்கு நேத்து எடுத்த முடிவு இல்லை. ரொம்ப காலத்துக்கு முன்னாடியே எடுத்த முடிவு " என்று சொல்ல எனக்கு சீரியல் டயலாக்குகள் நினைவுக்கு வந்தன...ஒருத்தரிடம் முன்னுரை கேட்பதற்குக் கூட சரித்திர ரீதியான காரணங்கள் இருக்குமா என்கிற குழப்பத்தை அதிஷாவிடம் கேட்டபோது அதிஷா உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியபடியே ~`எஸ் பாஸ்..இதுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கு" என்றார். ஒரு மெல்லிய மவுனம் அறையைச் சூழ அதிஷா தன்னைத் தயார் செய்து கொண்டு ஃப்ளாஷ் பேக்கை சொல்லத் துவங்கினார்....`சில ஆண்டுகளுக்கு முன்னால உரையாடல் அமைப்பு நடத்தின சிறுகதைப் பயிலரங்கில நீங்க பேசினீங்களே? நினைவு இருக்கா?."..ஆம் எனக்கு நினைவு இருந்தது...ஆனால் என்ன பேசினேன்? அதிஷா சொன்னார்.. அந்த பயிலரங்கில நான் உங்க கிட்ட ஆற்றாமையோட ஒரு கேள்வி கேட்டேன்...நீங்க நாட்டாமை மாதிரி பதில் சொன்னீங்க நினைவு இருக்கா? என்றார்...எனக்கு கொஞ்சம் பீதியாக இருந்தது..அப்படி என்ன கேள்வி அது? நான் அப்படி என்னதான் பதில் சொன்னேன்?. சமீபத்தில் பார்த்த மலையாளப் படமான ஹௌ ஓல்ட் ஆர் யூ' படத்தில் ஒரு பெண் இந்திய ஜனாதிபதியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டதன் விளைவுதான் அந்தப் படமே....அப்படிப் பட்ட ஒரு பின்னணி இந்த தொகுதிக்கும் இருக்கும் போலிருக்கே என்று நினைத்தபடி அதிஷாவிடம், `சொல்லுங்க அதிஷா சொல்லுங்க...அன்னைக்கு என்ன நடந்துச்சு?" என்று நான் கேட்க அதிஷா மறுமொழி பகர்ந்தார்.

`பாஸ்...அன்னைக்கு நான் உங்க கிட்ட தமிழ்ல நகைச்சுவைக் கதைகள் வர மாட்டேங்குதே ஏன்?...ஏன் தமிழ்ல காமெடி ஸ்டோரீஸ் வராம இருக்கு...? அதுக்கு என்ன செய்யணும்னு கேட்டேன்..."
இதுக்கு நாம என்ன பதில் சொல்லி சமாளிச்சிருப்போம்? என்கிற பயம் மனதைக் கவ்வ `அதுக்கு நான் என்ன சொன்னேன்?" என்றேன் எச்சில் விழுங்கியவாறே...

`நீங்க எழுதுங்க அதிஷா....நீங்கதான் எழுதணும்னு சொன்னீங்க பாஸ்..அன்னைக்கு முடிவு பண்ணேன்...எழுதணும்னு முடிவு பண்ணேன்....அதுக்கு நீங்கதான் முன்னுரைன்னு முடிவு பண்ணிட்டேன் " என்று சொல்ல எனக்கு தேவர் மகன் சிவாஜி மாதிரி கண்ணீர் சுரந்தது...என் முன்னே நிற்கும் அதிஷா கமலஹாசன் போல் தெரிய `எழுதறேன்யா" என்று சொல்லி தோளைத் தட்டினேன்.
விளைவாக இம்முன்னுரையை எழுத வேண்டியதாகி விட்டது. முன்னுரை எழுதுவதன் பொருட்டு அதிஷாவின் சிறுகதைகளை மொத்தமாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில கதைகள் ஏற்கனவே படித்தவைதான். சில கதைகளை புதிதாக இப்போதுதான் படித்தேன். அதிஷாவின் சிறப்பாக நான் கருதும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதன்மையானது அதிஷாவின் உரைநடை..வாசிப்பதற்கு இலகுவாகவும் எளிமையாகவும் இருக்கிற அதிஷாவின் மொழி படிக்கிறவனை சுலபத்தில் ஈர்க்கிறது. அனாவசிய அலங்காரங்கள் இல்லாத அதே நேரம் கதைக்குத் தேவையான அழுத்தத்தை தரத் தவறவில்லை. இவ்விதமான உரைநடை தற்போது வாசிக்கத் துவங்கும் இளம் தலைமுறையை தொடர்ந்து வாசிப்பின் பக்கம் நிலை நிறுத்துவதற்கு அவசியமானது என்று கருதுகிறேன். அது மட்டுமல்லாது வாசிப்பவனுக்கு சுவாரஸ்யத்தையும் அதிஷாவின் நடை வழங்குகிறது....எளிமையும் சரளமும் சுவாரஸ்யமும் கைவரப் பெற்ற அதிஷா மாதிரியான எழுத்தாளர்கள் பலர் உருவாவதன் வழியாகத்தான் வாசிக்கும் பழக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது சாத்தியமாகும் என்று தோன்றுகிறது.
அடுத்ததாக அதிஷாவின் கதைகளில் தென்படும் குழந்தைகள். அதிஷாவின் கதைகளில் நிறையக் குழந்தைகள் இடம் பெறுகிறார்கள். குழந்தைகளின் உலகத்தையும் நடவடிக்கைகளையும் குழந்தைகளின் மொழியையும் மனப் போக்கையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதற்காக அதிஷாவை பாராட்டியே ஆக வேண்டும். (அதிஷாவின் இயல்பிலேயே ஒரு சிறுபிள்ளைத் தனம் இருப்பதை கவனித்திருக்கிறேன் குழந்தை உலகத்தை இயல்பாக சித்தரிப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.) மரம் செடி மலை,பத்து பத்து, நீலக்கை, ஓம்புயிர் ஆகிய கதைகளில் வரும் குழந்தைகளும் நாய்க் குட்டிகளும் மிகவும் சிறப்பாகவும் உண்மையாகவும் பூச்சுகள் இன்றி இருக்கின்றனர்.
குறிப்பாக நீலக்கை கதையை இந்தத் தொகுதியின் அற்புதமான சிறுகதை எனச் சொல்லலாம். கோவையில் நிகழ்ந்த கலவரம் ஒரு சிறுவனின் வாழ்வில் நிகழ்த்திய கொடூரத்தை பளிச்சென்று மனதில் தைக்கும் விதத்தில் சித்தரிக்கிறது இந்தக் கதை...எதிர்காலத்தில் இலக்கியத்தில் அதிஷாவின் இடத்தை இப்படிப்பட்ட சிறுகதைகளே நிலை நிறுத்தும்...அது போன்ற சிறந்த படைப்புகள் அதிஷாவிடமிருந்து நிறைய வர வேண்டும் என்பது என் ஆசையும் நம்பிக்கையும் ஆகும்....

அதிஷாவின் வாழ்க்கை அனுபவங்களை ஓரளவுக்கு நான் அறிவேன். சிறுவயதிலேயே பல்வேறு விதமான செறிவான வாழ்வனுபவங்கள் அதிஷாவுக்கு வாய்த்திருக்கிறது. அதனை சரியான மொழியில் அதிஷா பகிர்வதன் மூலம் இன்னும் அவரால் நிறைய எழுத முடியும்...எழுத வேண்டும்.

சென்ற வாரம் நடந்த சென்னை மராத்தானில் அதிஷா முதல் முறையாகப் பங்கேற்று வெற்றிகரமாக தான் ஓட வேண்டிய தூரத்தை கடந்தார்...அதற்காக தான் பட்ட சிரமங்களையும், அந்தப் போட்டிக்காக எவ்வாறு தன்னைத் தயாரித்துக் கொண்டேன் என்பதையும் ஒரு சிறப்பான ஃபேஸ்புக் பதிவாக அதிஷா எழுதி இருந்தார். விடாமுயற்சியும், சலியா உழைப்பும் மன உறுதியும் அதிஷாவுக்கு இருந்ததால் அந்த வெற்றி சாத்தியமானது. இலக்கிய உலகத்தில் அதிஷாவுக்கான மராத்தான் ஓட்டம் இந்த தொகுதி என்கிற புள்ளியில் துவங்குகிறது. அவர் கடக்க வேண்டிய தூரம் கண் முன்னால் இருக்கிறது. வெற்றிகரமாக ஓடி தான் அடைய வேண்டிய இலக்கை அவர் அடைவார் என நம்புகிறேன்.
ஒரு இளம் எழுத்தாளனின் முதல் தொகுதி என்பது அவனை இனங்காட்டக் கூடியது. இந்தத் தொகுதி அதிஷாவை சரியாகவே இனம் காட்டி இருக்கிறது இவரால் அடுத்தடுத்து சிறந்த படைப்புகளை நமக்குத் தர முடியும் என்கிற நம்பிக்கையுடன், ஒரு நண்பனாக அதிஷாவுக்கு நல்வரவு சொல்லி மனமார வாழ்த்துகிறேன்

பாஸ்கர்சக்தி

09 January 2015

புத்தகக் கண்காட்சியில் என்ன வாங்கலாம்?
புக்ஃபேர் தொடங்கிவிட்டது. ஆளாளுக்கு என்ன புக் வாங்கலாம் என்கிற குழப்பத்தில் இருப்பீர்கள். அப்படியெந்த குழப்பத்திலும் இல்லாமலும் இருக்கலாம். வாட் எவர்… புத்தக சீசனில் நமக்கு பிடித்த நாலு புத்தகங்கள் பற்றி பரிந்துரைகள் செய்ய வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.
சென்ற ஆண்டு வாசித்த நூல்களில் எனக்கு பிடித்த மற்றும் உங்களுக்கும் பிடிக்கலாம் என்று நான் நினைக்கிற புத்தகங்கள் இவை. இவற்றை வாங்கி படிக்காமல் வீட்டில் அழகுக்காகவும் ஷோக்கேஸில் வைத்துக்கொள்ள ஏற்றவை. அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டவை. குட்டி குட்டியாக நிறைய நூல் வாங்காமல் நச்சுனு நாலு புக்கு வாங்க நினைப்பவர்களுக்கும் ஏற்றவை. வீட்டில் வைத்தால் விருந்தினர்கள் இதை புரட்டிப் பார்த்து மிரண்டு போவார்கள். உங்களை அனேக அறிவுஜீவிகளில் ஒருவர் என்று நினைப்பார்கள். இவற்றின் விலையும் அதிகமில்லை. நல்ல வாசிப்பனுபவத்தையும் தரக்கூடியவை. இனி லிஸ்ட்.


எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறந்த சிறுகதைகள் – புதிதாக இலக்கிய சிறுகதைகள் வாசிக்க எழுத உத்தேசித்திருக்கிறவர்களுக்கு அற்புதமான பொக்கிஷம் இது. தமிழ் இலக்கியத்தில் கடந்த ஆண்டுகளின் பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட அருமையான கதைகளை சிறப்பாக தொகுத்திருக்கிறார் எஸ்ரா. நூலின் அளவும் பெரியது. பொறுமையாக வருடம் முழுக்க வைத்து வாசிக்கலாம். நான் போன ஜனவரியில் வாங்கி இந்த ஜனவரியில் முக்கால்வாசி முடித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது ஒரு கதை என்கிற அளவில். இந்த நூறுகதைகளும் ஏதோ ஒரு வகையில் நமக்குள் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எடை அதிகமாக இருப்பதால் தூக்கிவைத்து படிப்பது சிரமமாக இருக்கும் என்பது மட்டும்தான் பிரச்சனை. வெளியீடு – டிஸ்கவரி புக்பேலஸ் – விலை - 650மேற்கத்திய ஓவியங்கள் – பி.ஏ.கிருஷ்ணன் – ஓவியங்களை வெறும் பொம்மைப்படமாக மட்டுமே பார்க்கிற, நவீன ஓவியங்களை என்ன இது கிறுக்கி வச்சிருக்காய்ங்க என்று புரிந்துகொள்ளுகிற நிலையில் இருக்கிற என்னைப்போன்ற ஒவிய தற்குறிகளுக்கு இந்நூல் ஓவியம் குறித்த விசாலமான பார்வயை தருகிறது. பல ஆயிரம் வருடத்திற்கு முந்தைய குகை ஓவியங்கள் தொடங்கி ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு காலகட்டங்களில் ஓவியக்கலை எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதை மிக அருமையான க்வாலிட்டியான ஹை ரெசெல்யூசன் படங்களுடன் நல்ல அச்சில் கொடுத்திருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். விலைதான் அதிகம். ஆனால் கொடுத்த காசுக்கு மேல் 200 ரூபாய் வொர்த்தான நூல் இது. (சைஸ் சின்னதாக இருப்பதால் ஓவியங்களின் டீடெயிலிங்கை பார்க்க பூதக்கண்ணாடி தேவைப்படுவது சிறுகுறை. அதையும் காலச்சுவடு பதிப்பகத்தார் நூலோடு இலவசமாக கொடுக்கலாம்) – காலச்சுவடு வெளியீடு – விலை 850.

 

கவிதையின் கால்த்தடங்கள் – கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன் சமகால தமிழ்க்கவிஞர்களின் 400 கவிதைகளை மொத்தமாக தொகுத்துப்போட்டிருக்கிறார். கவிதையே தெரியாமல் வாழ்கிறவர்கள், கவிதையை கண்டாலே ஓடுகிறவர்கள். கவிதைக்கும் எனக்கு சம்பந்தமே இல்லைங்க என்று நினைக்கிறவர்கள் இந்நூலை அவசியம் வாசித்து கவிதைக்குள் நுழையலாம். அதற்கு பிறகு இந்த 50 பேரில் உங்களை அதிகம் பாதித்தவருடைய கவிதைகளை தேடி வாசித்துக்கொள்ளலாம். அகநாழிகை பதிப்பக வெளியீடு – விலை 230அந்நிய நிலத்தின் பெண் – அனேகமாக நான் ஒரே மூச்சில் வாசித்த கவிதை நூல் இதுதான். மனுஷ்யபுத்திரன் மீது அரசியல் நிலைப்பாடுகளுக்காக, பதிப்பாளராக நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு கவிஞராக இன்றைய தேதியில் அவர்தான் சூப்பர் ஸ்டார். அவருடைய லேட்டஸ்ட் தொகுப்பான இந்த நூலில் மலைக்கும் அளவுக்கு மொத்தம் 270 கவிதைகள் இருக்கிறது. எல்லாமே மிகச்சிறந்த கவிதைகள். இதில் பல கவிதைகளையும் நான் அவர் எழுதிய நாட்களிலேயே கேட்டிருக்கிறேன். இதில் உள்ள அனேக கவிதைகள் காமத்தை பற்றியும் அது சார்ந்த மனவலி மற்றும் வேதனைகளின் உணர்வுகளை பேசுகிறது. கவிதைக்குள் புதிதாக நுழைகிறவர்கள் நிச்சயம் வாசிக்கலாம். – உயிர்மை பதிப்பக வெளியீடு – விலை 480.இரண்டு நாவல்கள் – சென்ற ஆண்டு நான் அதிகமாக நாவல்களை படிக்கவில்லையென்றாலும் நண்பர்கள் பலருடைய பரிந்துரையின் பேரில் வாங்கிய நாவல் மிளிர்கல். இரா.முருகவேள் எழுதியது. இந்த ஆண்டு விகடன் விருதுகூட வாங்கியிருக்கிறது. மிகவும் அருமையான சுவாராஸ்யமான நாவல். நிச்சயம் வாங்கிப்படிக்கவேண்டிய ஒன்று. இன்னொரு நாவல் கானகன். லட்சுமி சரவணக்குமார் எழுதியது. காடும் காடுசார்ந்த வாழ்வுமாக அச்சு அசல் மனிதர்களின் வழி அருமையாக எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் இது. வாசகர்களை துன்புறுத்தாத எழுத்து லட்சுமியுடையது. சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமில்லாதது. நான் இந்த ஆண்டு விகடன் விருது பெரும் என்று எதிர்பார்த்த நாவலும் இதுதான்! நூலிழையில் மிளிர்கல் தட்டிசென்றிருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டு நாவல்களுமே படிக்கிற வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை தரக்கூடியவை. மிளிர்கல் , பொன்னுலகம் வெளியீடு, விலை – ரூ.200. - கானகன் , மலைச்சொல் பதிப்பக வெளியீடு – விலை 200.காகிதப்படகில் சாகசப்பயணம் – தன்னுடைய வாழ்க்கை பயணத்தின் வழி சுவையான சம்பவங்களின் மூலம் தமிழ் பத்திரிகை துறைகுறித்து ஒரு பரந்துபட்ட பார்வையை வழங்குகிறது இந்த நூல். இந்நூலை எழுதியிருக்கிற கருணாகரன் 25ஆண்டுகளாக தமிழின் பல்வேறு முன்னணி இதழ்களில் தான் பணியாற்றி அனுபவங்களையும் அங்கே தனக்கு கிடைத்த பாடங்களையும், அங்கே சந்தித்த பிரபலமான மனிதர்களையும் அவர்களுடைய குணங்களையும் பற்றி பேசுகிறார். (கடைசி பக்கங்களில் என்னைப்பற்றியும் எழுதியிருக்கிறார் என்பதில் எனக்கு பெருமைதான்!). பத்திரிகை துறை சார்ந்த இளைஞர்கள், அல்லது அதுகுறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் மட்டுமல்லாது எல்லாதரப்பினருக்கும் படிக்க சுவையான நூல் இது. கருணாகரன் இயல்பிலேயே ஒரு சிறுகதை ஆசிரியர் என்பதால் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையைப்போல எழுதப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு. குன்றம் பதிப்பகம் வெளியீடு, விலை - 150.


சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - எஸ்ராமகிருஷ்ணனின் சிறுவர் நூல் இது. புத்தகம் படிக்க விரும்பாத நந்து என்கிற சிறுவன் ஒரு நூலகத்தில் மாட்டிக்கொள்கிறான். அது ஒரு மாய நூலகம். அங்கே இருக்கிற பெனி எனும் சிறுவன் அந்த நூலகத்திற்கு கீழே இருக்கிற ரகசிய நூலகம் ஒன்றிற்கு அழைத்துச்செல்கிறான். அங்கே ஆடு மாடு முயல் என பல விலங்குகளும் எண்ணற்ற நூல்களை வாசிக்கின்றன. நந்து அங்கே பல நூல்களை பற்றியும் அறிந்துகொள்கிறான். மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்ட அருமையான சிறுவர்நாவல் இது. நம் வீட்டு குட்டீஸ்களுக்கு பரிசளிக்க ஏற்றது. அவர்களிடையே வாசிப்பை உருவாக்க உதவக்கூடிய நாவலும் கூட. உயிர்மை வெளியீடு - விலை -50ரூபாய் மட்டுமே.

08 January 2015

புள்ளிகள்,கோடுகள்,கோலங்கள்அடியேன் உயிருக்கு உயிராக காதலிக்கிற மிகச்சில ஆண்களில் முதன்மையானவர் நடிகரும் எழுத்தாளருமான பாரதிமணி. 77வயதான என்னுடைய அன்புத்தம்பி. ரஜினியை முதல்வராக்க ஒட்டுமொத்த பிரபஞ்சமும் முயன்று கொண்டிருக்கிற காலத்தில் தன்னுடைய பாபா படத்தின் மூலமாக ரஜினியே பர்சனலாக முதல்வராக்கி அழகு பார்த்த வெள்ளைத்தலை நேர்மை தாத்தா!

பாரதிமணியோடு பேசிக்கொண்டிருந்தால் நாட்கணக்கில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கலாம். ஐம்பதாண்டுகால இந்திய தமிழ்நாட்டு வரலாறு அவரிடம் இருக்கிறது. நாம் பாடபுஸ்தகத்தில் படித்த பல தலைவர்களோடு கைகுலுக்கியவர். செம்மீன் திரைப்படம் தேசிய விருதுபெறக்காரணமானவர். பாய்ஸ் கம்பெனியில் இருந்தவர்! காவியத்தலைவன் படம் பார்க்கும்போது பாரதிமணி இப்படம் குறித்து என்ன சொல்வார், அவரை அழைத்துவந்து அருகில் உட்காரவைத்து இப்படத்தை பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். கநாசுவின் மருமகன்! குடிக்கலாச்சாரம் பற்றி பேச ஆரம்பித்தால் நாமும் கூட அவரோடு ஒரு பெக்காவது அடிக்கவேண்டும் என்கிற ஆசைவரும். அந்தக்கால கிசுகிசு சமாச்சாரங்களை அள்ளி வீசுவார். இலக்கியம், சினிமா, நாடகம் என எல்லா துறைகளிலும் கில்லாடி! கைகால் முளைத்த வரலாற்று நூல் என் ப்ரியப்பட்ட பாரதிமணி!

அவரிடம் அடிக்கடி நீங்க இப்படி பேசுற விஷயத்தெல்லாம் தொகுத்து புக்கா போடுங்க என்று மன்றாடுவேன். என்னைப்போலவே நிறையபேர் மன்றாடியிருக்கிறார்கள். எஸ்கேபி கருணாவெல்லாம் சட்டையை பிடித்து கழுத்தை நெறிக்காத குறை. ஆனால் ஆள் எதற்கும் அசராதவர். அவரையே எப்படியோ சமாளித்து புக்கு போட்டிருக்கிற பவாவுக்கு தனியாக பாராட்டுவிழா எடுக்க வேண்டும்.
ஒரு வழியாக வெளியாகியிருக்கிற அவருடைய ‘’புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’’ என்கிற நூல்வெளியீடு நேற்றுதான் புக்பாயிண்டில் நடைபெற்றது.

எப்போதும் போலவே லேட்டாகத்தான் சென்றேன். வாசலிலேயே பவா செல்லதுரை எல்லோரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார். நான் வணக்கம் சொன்னேன். அவரும் வணக்கம் என்றார். என்னிடம் சரியாகவே அவர் பேசவில்லை. எனக்கு மிகுந்த மனவருத்தமாகிவிட்டது. ச்சே நம்ம மேல இவருக்கு என்ன கோவம், ஒருவேள பிஸியாருந்திருப்பாரோ, பதட்டமாருக்காரு ஒரு புரோகிராம் ஆர்கனைஸ் பண்ணனும்னா கஷ்டம் இருக்கும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். எழுத்தாளர் ஸைலஜாதான் (எந்த ஸை…? ஷை? சை?) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவருடைய குரலும் மாறாத புன்னகையும் பேச்சும் அவ்வளவு சிறப்பாக இருந்தது. நேர்த்தியாக நிகழ்ச்சியை தொகுத்துப்பேசினார்.

இந்த (புக்ஃபேர்) சீசனின் மிகச்சிறந்த பேச்சினை எஸ்ரா இவ்விழாவில் பேசினார். அவர் தலைக்கு முன் நீண்டிருந்த மைக் ஒரு மகுடியாக மாறி ஒலிக்க…. அவர் பேச பேச அமர்ந்திருந்த ஒட்டுமொத்த கூட்டமும் தலையை ஆட்டி ஆட்டி… கேட்டுக்கொண்டிருந்ததை பார்க்க ஒரு மேஜிக் ஷோ பார்ப்பதுபோல் பிரமிப்பாக இருந்தது. கொஞ்சம் கூட தொய்வில்லாமல் 45நிமிடங்களுக்குமேல் நீண்ட பேச்சில் பாரதி மணி குறித்தும் அவருடைய இந்த நூல்குறித்தும் ஏகப்பட்ட விஷயங்களை தொட்டுச்சென்றார். குறிப்பாக கநாசு- அமிதாப் பச்சனை சந்தித்த ஒரு நிகழ்ச்சியைப்பற்றி பேசியது மிகவும் பிடித்திருந்தது. அது என்ன நிகழ்ச்சி அங்கே என்ன நடந்தது என்பதை பற்றியெல்லாம் புக்கில் இருக்கிறது. வாங்கி படித்து…

இதே நிகழ்வில் எடிட்டர் லெனின் அருமையான ஒரு பாடலை பாடினார். இந்த மனுஷன் எவ்வளவு நல்லா பாடுகிறார் என்று அங்கே வந்திருந்த பலருக்கும் நிச்சயம் வியப்பிருந்திருக்கும். அவருடைய குரலில் சந்திரபாபு சொர்க்கத்திலிருந்து அப்படியே இறங்கிவந்து அமர்ந்துகொண்டதைப்போல அப்படி ஒரு பரவசம். அவருடைய பேச்சைவிட ஒருநிமிடம் பாடிய அந்தப் பாடல் இன்னமும் காதில் கேட்பது போலிருக்கிறது. அடுத்த முறை அவரை எங்காவது தனியாக பிடித்து வைத்து நாள்முழுக்க பாடச்சொல்லி கேட்க நினைத்திருக்கிறேன்.

தன்னுடைய இரண்டாவது நூலை வெளியிட்டிருக்கும் இளம் எழுத்தாளர் பாரதிமணிக்கு வாழ்த்துகள். இந்நூலை வம்சிபதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை மதிப்பற்ற இந்த வரலாற்று பொக்கிஷத்துக்கு 550ரூபாய் விலை வைத்திருக்கிறார்கள். குறைவுதான். சுவாரஸ்யமாக படிக்க ஏதாவது பரிந்துரைங்க என்று சாட்டில் கேட்கிற நண்பர்களுக்கு இந்த நூலைதான் பரிந்துரைத்துக்கொண்டிருக்கிறேன்.

வெளியீட்டு விழா முடிந்த பின் ஒரு நண்பர் என்னை அதிஷா என்று தூரத்திலிருந்து அழைத்தார். நான் திரும்பிப்பார்க்க எனக்கு கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டிருந்த பவாவும் அந்த குரலை கேட்டு தேட… பவா திடீரென்று என்னை திரும்பிப்பார்த்து ‘’அதிஷா நீங்களா.. என்னங்க அடையாளமே தெரியல'' என்றார். நான் ஒன்றும் புரியாமல் திருதிருவென விழிக்க... அவரே பிறகு ''மொட்டை அடிச்சிருந்தீங்களா அதான்!’’ என்றார். நான் ஷாக்காகிவிட்டேன்.

02 January 2015

குடிங்க சார் குடலுக்கு நல்லது
புத்தாண்டு என்பதால் குடிக்கிறார்களா? அல்லது குடிப்பதற்காகவே புத்தாண்டு கொண்டாடப்படுகிறதா? என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. வேறெந்த பண்டிகைகளின் போதும் இந்த அளவுக்கு குடியும் வெடியும் இருக்குமா என்பது சந்தேகமே! ஆண்டுதோறும் குடிப்பவர்களும் குடித்துவிட்டு வண்டியோட்டுபவர்களும் அதிகரித்துவருகிறார்கள். குடிப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட அனேக பண்டிகைகளில் ஒன்றாக ஆங்கிலப்புத்தாண்டு மாறிவருகிறது. குடிப்பது ஃபேஷனாக இருந்தகாலம் போய் அது ஒவ்வொரு ஆண்டும் அல்லது ஒவ்வொரு பண்டிக்கைக்கும் கட்டாயம் செய்தேயாகவேண்டிய சடங்காக மாறிவிட்டது. ஒவ்வொரு பண்டிகைக்கும் முந்தைய பண்டிகையில் குடித்த அளவினை முறியடித்து வெற்றிவாகை சூடுகிறார்கள் குடிகாரர்கள். குடித்துவிட்டு மட்டையாகிற மாவீரர்களை விடவும் ஆபத்தானவர்கள் அரைபோதையில் வண்டியோட்டி யார்மீதாவது ஏற்றி விபத்துகளை உருவாக்குகிறவர்கள்.

புத்தாண்டையோட்டி சென்னை குடிகாரர்கள் சில சாதனைகளை செய்திருக்கிறார்கள்.

1.புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் இரவு 300 பேர் விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்து நேற்று அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கால்வாசிதான் குடித்துவிட்டு வண்டியோட்டிவர்கள். மீதிபேர் குடிகாரர்கள் மோதியதால் பாதிக்கப்பட்டவர்கள்.

2.மெரீனா பீச்சில் மட்டுமே புத்தாண்டு அன்று 4.5 டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதில் முக்கால்வாசிக்கும் மேல் பீர் முதலான மது பாட்டில்களும் சைட்டிஷ் குப்பைகளும்!

3.ஐந்து பேர் செத்துப்போயிருக்கிறார்கள். அதில் 70வயது பாட்டி ஓருவர் மீது யாரோ குடிபோதையில் வண்டி ஏற்றி கொன்றிருக்கிறார்கள். குடிபோதையில் ஒருவர் மாடியிலிருந்து தலைகுப்புற விழுந்து மாண்டிருக்கிறார்.

4.மாங்காட்டில் 18வயது குடிகார இளைஞனை இன்னும் சில அப்பகுதி குடிகார இளைஞர்கள் அடித்து கொன்றிருக்கிறார்கள்!

5.டாஸ்மாக் விற்பனை சாதனை அறிக்கை இதுவரை வெளியாகவில்லை ஆனதும் அதுவும் இந்த பட்டியலில் நிச்சயம் சேர்க்கப்படும்.

இதில் இந்த கொலை விஷயம் மட்டும் மிகவும் அதிர்ச்சிகரமானது. மாங்காடு பகுதியில் ஏதோ கிரவுண்டில் நன்றாக குடித்துவிட்டு கிரவுண்டை விட்டு வெளியே வரும்போது வேறு சில குடிகார இளைஞர்கள் உள்ளே நுழைய குடிகாரர்களுக்குள் ஏதோ சண்டை ஏற்பட கைகலப்பு கொலையில் முடிய, புத்தாண்டுக்கு சரக்கடித்த நண்பர்கள் இரண்டுபேர் போதை தெளியும்போது லாக்அப்பில் இருந்தனர். யாரோ பெற்றோர் தன்னுடைய 18வயது ஒற்றை மகனை இழந்து பரிதவிக்கிறார்கள். அந்தப்பையனுக்கு வயது பதினெட்டு என்பதுதான் அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருந்தது. கொலை செய்தவர்களுடைய வயதும் கிட்டத்தட்ட அதே அளவுதான். இன்று மிக இளம் வயதிலேயே பிள்ளைகள் குடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதாவது எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கும்போதிருந்தே. குடிப்பது மட்டுமல்ல குடித்தபின் நாம் நினைத்துப்பார்க்க முடியாத வன்முறையை வெளிப்படுத்துகிறார்கள்.

நண்பருடைய மகன் பத்தாம் வகுப்புதான் படிக்கிறான். அவன் தன் நண்பர்களோடு புத்தாண்டை கொண்டாட மொட்டை மாடியை திறந்துவிடக்கோரியிருக்கிறான். அதற்கு சம்மதித்து அனுமதித்திருக்கிறார் நண்பர். காலையில் விடிந்ததும் மொட்டைமாடியை சுத்தம் செய்யும்போது பத்துக்கும் அதிகமான பீர் பாட்டில்கள் கிடைத்திருக்கிறது. பையனை அழைத்து என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா என்று கண்டித்திருக்கிறார். அந்தப்பையனோ ‘’அப்பா பாரின்லலாம் என்னை விட சின்ன பசங்கள்லாம் தண்ணி அடிக்கறாங்கப்பா.. ஒரு நாள்தானப்பா.. விடுப்பா நீகூடதான் நேத்து பார்ட்டில சரக்கை போட்டுட்டு வந்துருந்த, அம்மா எதுனா கேட்டுச்சா’’ என்றிருக்கிறான். அதற்கு நண்பரிடம் சொல்ல எதுவுமே இருக்கவில்லையாம்.

இன்று பையன்கள் குடிப்பதற்கும் குடித்தபின் வெளிப்படுத்தும் வன்முறைக்கும் பல்வேறு உளவியல் காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமானது பள்ளிகள் அவர்கள் மீது திணிக்கிற தாங்கமுடியாத படிப்பு சுமை. மார்க்கெடுக்க வேண்டும் என இன்னொரு பக்கம் பெற்றோர்கள் தருகிற அழுத்தம். குடி என்பது குழந்தைகளுக்கும் ரீச்சபிளாக மாறிப்போயிருப்பது. கேளிக்கையான விஷயங்களை பள்ளிகள் குறைத்துக்கொண்டது என நிறைய காரணங்கள் உண்டு. குடி என்பது வெளிநாடுகளில் இருப்பது போல கேளிக்கையான விஷயமாக நம்மூரில் இல்லை. போலவே அங்குள்ளது போல இங்கு நல்ல மதுவும் கிடைப்பதில்லை.

கடந்த பதினைந்தாண்டுகளில் குடிப்பது என்பது மிகவும் சகஜமான விஷயமாக மாறிவிட்டிருக்கிறது. எல்லோருமே குடிக்கிறார்கள் ‘’நான் குடிக்காமலிருந்தால் எனக்கு அவமரியாதை உண்டாகும்’’ என்கிற எண்ணம் பையன்களின் மனதில் எப்படியோ ஆழமாக பதிந்துவிட்டிருக்கிறது. குடிப்பதற்கான முதன்மையான காரணம் தங்களுடைய ஆண்மையை ஹீரோயிசத்தை நண்பர்கள் மத்தியில் வெளிக்காட்டிக்கொள்ளுகிற முனைப்புதான். அதிலும் அதிகமாக குடிக்கிறவன்தான் பிஸ்தா என்கிற மனநிலையும் உண்டு.

இன்று எல்லா பையன்களும் குறைந்தபட்சம் 150சிசிக்கும் அதிகமான சக்தியுள்ள பைக்குகளையே பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். இந்த பைக்குகளையும் வாங்கிக்கொடுத்து கூடவே குடிக்க காசும் கொடுப்பது பெற்றோர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த பைக்குகளை ஓட்டும்போது சைட் ஸ்டான்ட்டை போட்டுக்கொண்டு வேண்டுமென்றே தரையில் உராய வண்டியோட்டி பொறிபறக்க வைப்பது, பின்னால் அமர்ந்திருப்பவர் எழுந்து நின்று ஆடுவது, வீலிங் சாகசங்கள், ரேஸ் விடுவது என பைக் ஓட்டுவதை தற்கொலை முயற்சிகளுக்கு ஒப்பாக செய்யவும் இந்த பையன்கள் தயங்குவதில்லை, இவர்கள் யாரும் ஹெல்மெட் அணிவதுமில்லை!

புத்தாண்டு தினத்தன்று எண்ணற்ற காவலர்கள் இரவெல்லாம் கண்விழித்து குடித்து விட்டு வண்டியோட்டுபவர்களை பிடித்து வைத்து போதை தெளிந்த பின் விட்டிருக்கிறார்கள். சாலைகளில் அதிவேகத்தில் பறக்கும் குடிகார வண்டிகளின் வேகத்தை குறைக்க சக்திவாய்ந்த விளக்குகளை பாய்ச்சியும் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் எத்தனை பேரை கட்டுப்படுத்த முடியும்.

யாரையும் குடிக்க வேண்டாம். ஒட்டுமொத்த மதுவையும் ஒழித்துவிட்டால் நாடு தூய்மையாகிவிடும், பார்ட்டி பண்ணாதீங்கோ என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நிச்சயமாக இளைஞர்கள் புத்தாண்டு தினத்தன்று உற்சாகமாக கொண்டாடுவது உசிதமானதே. ஆனால் அதை பாதுகாப்பாக செய்யவேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. காரணம் மது அருந்துதலை முறைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இங்கே மது அருந்துதலை ஆரோக்கியமான கலாச்சாரமாக மாற்ற வேண்டிய அவசியமிருக்கிறது. வீட்டிற்குள்ளேயோ அல்லது பாரிலேயோ குடித்துவிட்டு யாருக்கும் தொந்தரவில்லாமல் பாதுகாப்பாக வீடு போய் சேர்கிற எண்ணற்ற நண்பர்களை நானறிவேன். இந்த குடிகார வண்டியோட்டி எமதர்மன்களோடு ஒப்பிடும்போது அவர்களெல்லாம் மகாத்மாக்களாக உயர்ந்து நிற்கிறார்கள்.

குடித்துவிட்டு பைக்கும் காரும் ஓட்டுவது நமக்கு மட்டுமல்ல மற்றோருக்கும் ஆபத்து என்பதை உணர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அப்படிப்பட்ட விஷயங்களை செய்ய முடிந்தால் மது அருந்துவதை நிச்சயமாக இருகரம் கூப்பி வரவேற்கலாம். அதுவரைக்கும் குடிகாரர்களின் ஹேப்பி நியூ இயர் யாருக்கும் மகிழ்ச்சி தராது.