Pages

14 January 2017

சுண்டோக்கு சுப்பாண்டியா சார் நீங்க?சுண்டோக்கு (tsundoku) என்று ஜப்பானிய மொழியில் ஆட்களை குறிக்கிற ஒரு சொல் உண்டு. இந்த சுண்டோக்குகள் உலகில் எங்கே எந்த படிக்கக்கூடிய பொருள் கிடைத்தாலும் அதை வாங்கி வாங்கி குவித்துவிடுவார்களாம். ஆனால் எதையுமே ஒருவரிகூட வாசிக்க மாட்டார்களாம். ஆனால் நூல்களை வாங்கி வாங்கி வீட்டு அலமாரியில் மட்டும் அடுக்கி வைத்துவிடுவார்களாம். அந்த களாம்களில் அடியேனும் ஒருவன். எனக்குள் விழித்துக்கொண்டிருக்கிற அதே சுண்டோக்கு மிருகம் உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கலாம். அல்லது அப்படி ஒன்று இருப்பதை அறியாமல் இருக்கலாம். இப்படி நானும் நீங்களும் மகத்தான சுண்டோக்கு சுப்பாண்டிகளாக ஆனதற்கு முக்கியகாரணம் புத்தக கண்காட்சிகள்தான் என்பது நம்மில் எத்தினி பேருக்கு தெரியும்.

ஒவ்வொரு ஆண்டு புத்தகக்காட்சியின் போதும் முதன்முறையாக முதலிரவுக்கு தயாராகிற மணமகனின் உற்சாக மனநிலைக்கு மாறிவிடுவேன். அதிலும் ஃபேஸ்புக் வந்தபின் அந்த உணர்வு வேறு எல்லைகளை கடந்து தாராளமாக இந்த நபரை மருத்துவமனையில் அட்மிட் செய்யலாம் என்கிற அளவை எட்டிவிட்டது. இந்த விநோத வியாதியால் ஒவ்வொரு ஆண்டும் உள்ளங்கையில் இருக்கிற கடைசி ஐம்பது காசையும் ரத்தம் வர சுரண்டி புத்தகங்கள் வாங்குவதை இலக்கிய களமாடல் சேவையாக செய்து வந்திருக்கிறேன்.

அப்படி புத்தகசந்தையில் வேட்டையாடி சேர்த்த நூல்களில் சென்ற ஆண்டு வரைக்குமே படித்த நூல்களின் எண்ணிக்கை வெறும் பதினைந்து சதவீதம்தான் இருக்கும். மீதியெல்லாம் சென்னை மழைக்கும், வர்தா புயலுக்கும், பசிகொண்ட எலிகளுக்கும் தப்பி என்றாவது ஒருநாள் வந்து கரம்பற்றுவேன் கண்திறக்கலாம் என முதல்மரியாதை மலைச்சாமி போல காத்திருக்கின்றன.

ஆனால் சுண்டோக்கு சுள்ளான்களாகிய நாமோ இத்துப்போய் காத்திருக்கும் பழைய புத்தகங்களை அப்படியே போட்டுவிட்டு, புது நூல்களை வாங்க புயலென பு.கவுக்கு புறப்படுவோம்.

நாம் ஏன் இப்படி லூசு மாதிரி ஏராளமான நூல்களை காசுகொடுத்து வாங்கி வாங்கி குவிக்கிறோம்? ஆனால் ஏன் எதையுமே வாசிப்பதில்லை? வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நூலுக்கும் ரூபாய் மதிப்பு மட்டுமில்லை. அதற்கு மரியாதையும் இருக்கிறதுதானே? அது தெரிஞ்சா நான் ஏஞ்சாமி படிக்காம இருக்கப்போறேன் என்கிற என்னுடைய உங்களுடைய நம்முடைய மைன்ட்வாய்சே எனக்கு கேட்கிறது.
இனி காரணங்கள்.

- ''புத்தக சந்தையில் நான் வாங்கிய நூல்கள்'' எனப் பட்டியல் போட்டு ப்ளாக், ஃபேஸ்புக், ட்விட்லாங்கரில் பகிர்கிற வெட்டிப் பீத்தலுக்காக...

இது ஒரு கொடிய நோய்... மிகவும் கொடிய நோய். இதிலிருந்து மீள்வது மிக எளிது. ஆனால் இதை செய்ய புத்தகங்களை வாங்கியே தீரவேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. ஒரு சிகரட் அட்டையில் நாலுகடை ஏறி இறங்கி எந்த புத்தகம் அதிகம் விற்கிறது என விசாரித்து அந்த நூல்களின் பெயர், பதிப்பக விபரம், விலை எழுதி அதை பட்டியலாக வெளியிட்டும் கூட பெருமைப்பட்டுக்கலாம். செலவும் மிச்சமாகும்.

- நமக்கு வேண்டப்பட்டவர், ஃபேஸ்புக் பிரண்ட், லைக் போடுபவர், சாட்டில் ஹார்ட்டின் போடுகிற சாட்டையடி தோழி எழுதிய நூல்கள் என்பதாலேயே வாங்கிவிடுவது.

ஃபேஸ்புக்கில் எல்லோருமே எழுத்தாளர்கள் ஆகிவிட்டபிறகு லைக் போடுவது போல மக்கள் புக் போட ஆரம்பித்துவிட்டார்கள். இணையத்தில் எழுதியதையே தொகுத்து புத்தகமாக்கி இணையத்தில் இருப்பவர்களிடமே விற்பதெல்லாம் சதுரங்கவேட்டை மோசடிகளில் வருமா தெரியவில்லை. பழகின பாவத்திற்காக நட்பூஸ்களின் நூல்களை வாங்கித்தொலைக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஒவ்வொருவரும் ஆளாக வேண்டியதாகிவிடும். அதிலும் செந்தேள் செங்காயிரம், டேபிள் பங்கர், பிதிஷா, கராத்து ஃப்ரீனிவாஸ், கவபிஸ்னா மாதிரி எங்கோ கேட்ட பெயர்களை பார்த்தாலே புத்தகத்தை வாங்கியே தீரவேண்டும் என கை குறுகுறுக்கும்.

கடை வாசலிலேயே சம்பந்தப்பட்ட சம்பவக்காரர்கள் வேறு கையில் பேனாவுடன் எல்லையில் நிற்கிற ராணுவ வீரர்கள் போலவே காத்திருப்பார்கள். நாம் அவர்களை கடக்கும்போது நம்மை பார்த்து மையமாக சிரித்து தொலைப்பார்கள். இவன் புக்கை வாங்காம விடமாட்டான் போலருக்கே பெரியப்பா என வேறு வழியில் தப்ப முயலுவோம். ஆனால் புத்தக சந்தைகளின் ராஜதந்திரமே பெரும்பாலான கடைகளுக்கு ஒருவழிப்பாதைதான். உயிர்மை மாதிரியான சில கடைகளுக்கு இரண்டு வழிப்பாதை இருந்தாலும் இன்னொரு பாதையில் மனுஷ்யபுத்திரன் அய்யனார் சிலை கணக்காக காவல் இருப்பார். இந்த இம்சையிலிருந்து தப்பிக்க ஒரு மகத்தான வழி வைத்திருக்கிறேன். அதை நேரில் சந்திக்கும்போது தெரிவிக்கிறேன்- கட்டணத்திற்கு உட்பட்டது.
புத்தக வெளியீட்டு விழாக்கள் நமக்கு வைக்கப்படும் எலிப்பொறிகள் என்கிற தெளிவு அவசியம் வேண்டும். அவ்ளோ பெரிய பிரபல பதிவர் நம்மளை மதிச்சி அழைக்கிறாரே என்று போனால்... அங்கே வந்திருக்கிற சிறப்பு விருந்தினர்கள், மேடையேற்றிய நன்றிக்கடனுக்காக மொக்கை புக்காக இருந்தாலும் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக இது போற்றபடும் என்று ஏத்திவிட்டு எம்எல்எம் ஏகாம்பரமாக நம்மை மூளைச்சலவை செய்ய முயலுவர்... இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் பிரண்ட்ஸ்.

- பிரபல எழுத்தாளர்களின் பதிவர்களின் பிரபலங்களின் பரிந்துரைகளை உண்மையான மெய்யான தீர்க்கமான பரிந்துரைகள் என நம்பி புத்தகங்கள் வாங்குவது.

பெரும்பாலான பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைப்பது எல்லாமே அவர்களுக்கு வேண்டப்பட்ட, அவர்களுடைய சொந்தக்கார, சிஷ்ய பையன்கள், கேர்ள்பிரண்டுகள் எழுதிய நூல்களைத்தான். பிரபல எழுத்தாளர்கள் என்பவர்கள் எல்லா நூல்களையும் படிக்க மாட்டார்கள். அவர்கள் வாசிப்பதெல்லாம் வெளிநாட்டு இங்கிலீஸ் லத்தீன் அமெரிக்க ஐரோப்பிய யூரோப்பிய நூல்களையோ அல்லது நூல் பெயர்களையோ மட்டும்தான். எனவே புத்தக பரிந்துரை பட்டியல்களை விட, ஆழமான விமர்சனம் இல்லாவிட்டாலும் அடிப்படையான ஒரு பக்க அறிமுகமாவது இருந்தால் மட்டுமே அதை வாசித்து படித்து புரிந்து நூல்களை தேர்வு செய்யலாம். லிஸ்ட்டுகள் என்பது வெற்று லிஸ்ட்டுகளே..

- புத்தக சந்தைக்கு வருகிற இளம் வாசகிகள் முன்னால் சீன் போடுவதற்காக புத்தகங்களை வாங்குவது.

'என்னது உங்களுக்கும் நிழல்கள் ரவி பிடிக்குமா... ஐயாம் ஆல்சோ பிக்ஃபேன்'என்று உரையாடிய பெண்களைக்கூட அறிவேன். என் வாழ்நாளில் எந்தப்பெண்ணும் ஒரே ஒருமுறை கூட...'வாஆஆஆஆஆஆவ் ... ஓமைகாஆஆஆஆஆட் நீங்க ஜெயமோகன் ஃபேனா' என்று மயிர்கூச்செரிந்ததே இல்லை. இது ஆணாதிக்க கருத்தாகவே பெண்ணிய தோழிகள் அடித்தாலும், பெண்கள் ஒரு ஆண்மகனுடைய வாசிப்பு பழக்கத்தை வைத்தெல்லாம் இம்ப்ரஸ் ஆகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு வயது ஐம்பத்தி எட்டோ ஒன்பதோ இருக்கலாம்.

- ஆஃபர் போட்டிருக்கிறார்கள் என்று புத்தகங்கள் வாங்குவது

உலகத்திலேயே மரண மொக்கையான விஷயம் இதுதான். உள்ளதிலேயே மிகக்குறைவான டிஸ்கவுண்ட் கொடுக்கிற இடம் என்றால் அது புத்தக சந்தைதான். வெறும் பத்து பர்சென்ட்தான் கொடுப்பார்கள். அதற்கு மேல் ஒரு புத்தகத்துக்கு அதிகமான டிஸ்கவுண்ட் கொடுத்தால் அது சீக்குக்கோழி என்பதை அறிந்து அங்கிருந்து தப்பி ஓடிவிடவும். அம்பது பர்சென்ட் என ஆசையை தூண்டினாலும் சிக்கிவிடாதீர்கள். கிளாசிக்குகளை தவிர்த்து வேறெதையும் ஆபரில் வாங்குவது நல்லதில்லை. சாகித்ய அகாடமியில் சல்லிசு விலையில் குண்டுகுண்டாக நிறைய கிடைக்கும். ஆனால் அதில் ஒருசிலவற்றை தவிர மற்றதையெல்லாம் வாசிக்க நீங்கள் வேற்றுகிரகவாசியாக இருக்கவேண்டியது அவசியம். அந்த அளவுக்கு மொழியை பெயர்த்து இருப்பார்கள். இது உதாரணம்தான் இதுபோல பல கடைகள் உண்டு...

- புரட்சி போராட்டம்... என்றால் வாங்கிவிடுவது

புரட்சியான புத்தகம் அதுவும் சிகப்பு அட்டைபோட்டு நல்ல கனமாக இருந்தால் உடனே வாங்கிவிடுவதை வழக்கமாக வைத்திருபோம். உதாரணத்துக்கு இந்த ஆண்டு பரவலாக பேசப்படும் இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - வெண்டி டோனிகர் எழுதிய நூலை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். உடனே நூலை கடக்கும்போது அதைவாங்கியே தீரவேண்டும் என மனது துடியாய் துடிக்கும். இப்படித்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு என்கிற மொழிபெயர்ப்பு நூலை வாங்கினேன்... படிக்கிறேன் படிக்கிறேன்... முடியல்லல... நல்ல நூல்தான். நம்ம மண்டைக்கு ஏறவில்லை. அப்படி மண்டைக்குள் ஏறாத கடுமையான புரட்சி மொழிபெயர்ப்புகளை வாங்குவதற்கு முன் நிறைய யோசிக்கவும்.

- பெரிய சைஸ் புத்தகம் என்பதால் வாங்குவது

அசோகமித்திரன் எழுதிய மொத்த கதைகளையும் ஆயிரம் பக்கத்துக்கு காலச்சுவடில் போட்டிருகிறார்கள். அதை வாங்கினால் மொத்தமாக படித்து முடிக்க பலமாதங்கள் ஆகும். ஃபேஸ்புக் காலத்தில் அதையெல்லாம் படிக்க நமக்கு பொறுமை கிடையாது. அதுவே தேர்ந்தெடுத்த கதைகள் தொகுப்பு சின்ன சின்ன பூந்திகணக்காக நிறைய கிடைக்கும். பொன்னியின் செல்வனை பார்த்தால் வாங்கவேண்டும் என தோன்றும். வாங்கினாலும் படிக்கமாட்டோம். அஞ்ஞாடி என்று ஒரு மிகப்பெரிய நூல் உண்டு. பெருமைக்கு வாங்கிக்கொள்ளலாம். அதை படிக்க மிகப்பெரிய பொறுமையும் உழைப்பும் தேவைப்படும். அவ்வளவு இருந்தால் மட்டும் வாங்கவும். ஆனால் இப்படி வாங்கிச்சேர்க்கிற படா புக்ஸ் வீட்டில் அழகாக அடுக்கிவைத்து சீன்காட்ட உதவும். அதற்கு இவ்வளவு கஷ்டப்படாமல் பழைய புக்ஸ்டால் போனால் ஆங்கிலத்திலேயே பெரிய சைஸ் நூல்கள் நிறைய கிடைக்கும். அதை வாங்கி அடுக்கிவைத்தால் இன்னும் கெத்துகாட்டலாமே பிரண்ட்ஸ்!

******

# எந்த நூலை வாங்குவதாக இருந்தாலும் அதில் பத்து பக்கங்களாவது வாசித்து பார்த்துவிட்டு முடிவுக்கு வரவும்.
# மற்றவர்களுடைய பரிந்துரைகள் என்பது அவரவர் ரசனை சார்ந்தது என்பதை உணருங்கள்
# தினமும் வாசிக்க நேரம் ஒதுக்குங்கள்
# ஒருநாளைக்கு குறைந்தது 30பக்கங்களாவது படிக்கிற பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளுங்கள்
# ஏற்கனவே வாங்கின நூல்களை பட்டியிலிடுங்கள். எக்ஸல் ஃபைல் என்றால் சிறப்பு. அதில் படித்தது படிக்காதை பட்டியலிடுங்கள். புத்தகசந்தைக்கு செல்வதற்கு முன்னால் இதை செய்தால் மோடியின் டிமானிட்டைஸ்ட் புதிய இந்தியாவில் நம் பர்ஸுக்கு நல்லது.
# புத்தக சந்தையில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது நோட்டமிட மட்டுமே செய்வது நல்லது. புத்தகங்கள் வாங்குவதாக இருந்தால் கூட்டமில்லாத பகல் நேரத்தில் வேலைநாளில் சென்றால் படித்துபார்த்து வாங்கமுடியும்.

கடைசியாக - ''ஒரு நூலை வாங்குவதை விட அதை திருடியாவது படித்துமுடிப்பதுதான் அந்நூலுக்கும் அதை இயற்றிய புலவருக்கும் நாம் செய்கிற ஆகப்பெரிய மரியாதை ஒரவுகளே...''

பொது நலன் கருதி வெளியிடுவோர்... சக சுண்டோக்கு சுப்பாண்டி!

03 January 2017

இணையம் இல்லாமல் ஓர் ஆண்டு!வீட்டை விட்டு ஓடிப்போய் பலநாட்களுக்கு பிறகு வீடு திரும்பிறவனின் அதே மனநிலை. சொல்ல நிறையவே இருந்தாலும் எதையும் கோத்து சொல்லவியலாத மௌனம் சுழன்று அடிக்கும் ஆரம்ப நாட்கள். இதோ ஓர் ஆண்டிற்கு பிறகு வீடு திரும்பி இருக்கிறேன்.

ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் ''சென்ற ஆண்டு எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்'' என்று எழுதுவதை ஒரு சடங்காகவே வைத்திருக்கிறேன். அதற்காகவெல்லாம் இந்த ஆண்டு அப்படி எழுதாமல் கடக்க முடியாது... காரணம், 2016ம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.

கடந்த பத்தாண்டுகளில் சமூகவலைதளங்களில் இருந்து ஒருநாள் கூட முற்றிலுமாக என்னை துண்டித்துக்கொண்டது இல்லை. ஃபேஸ்புக்கிலிருந்து அவ்வப்போது வெளியேறினாலும், ஒட்டுமொத்தமாக துண்டித்துக்கொண்டது இப்போதுதான். இணையத்தில் எதையுமே எழுதாமல், யாரிடமாவது ஒரண்டை இழுக்காமல், தோழிகளிடம் ஆதுரமாக உரையாடாமல் இருந்ததே இல்லை. கடந்த ஓராண்டாக இதையெல்லாம் முற்றிலுமாக துறந்து ஐம்புலன்களை அடக்கிக்கொண்டு ஓர் இணையதுறவியாய் 7.60416666 மண்டலங்கள் தவமிருந்தேன். இது எத்தகைய கடுப்பான கடினமான காலகட்டம் என்பது என்போன்ற சக-சமூகவலைதள அடிமைகளுக்குத்தான் தெரியும்.

இந்த காலகட்டத்தில் பெற்றது நிறையவே; போலவே இழந்ததும். இணையத்தில் இல்லாமல் போனதாலேயே நல்லது பொல்லதுகளுக்கென்று யாருமே அன்போடு அழைக்கவில்லை. எந்த பஞ்சாயத்துகளிலும் கலந்துகொள்ள முடியவில்லை. பிறந்தநாளுக்கு யாரும் வாழ்த்தவில்லை. செத்துப்போன ஒருத்தரைப்பற்றி மூன்றுமாதங்கள் கழித்துதான் சேதி வந்து சேர்ந்தது. என்னது உனக்கு தெரியாதா... டேக் பண்ணினேனே... என்று விநோதமாக சொன்னார் ஒரு நண்பர். ''போன வாரம் நீங்க போட்ட ஸ்டேடஸ் ரொம்ப நல்லாருந்து ப்ரோ...'' என்பது மாதிரியான அதிர்ச்சி தருகிற பாராட்டுகளை ஷேரிங் பெருமாள் மீது போட்டுவிட்டு புன்னகையோடு கடந்தேன்.

விருப்பக்குறிகளை விரட்டாத, கமென்டுகளுக்கு கலங்காத விசித்திரமான காலகட்டத்தில் வாழ நேர்வது சமகாலத்தில் கொடுமையானது. இருந்தும் சாகச விரும்பிகள் ஒருமுறையாவது செய்து பார்க்கவேண்டிய சற்றே கடினமான முயற்சி சமூகவலைதள துறவு.

தேர்தல் நேரத்தில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, அப்போலோ நாட்களில், தரமணி டீசரில் என கருத்து சொல்லியே தீரவேண்டியக் கட்டாய தினங்களில் உறக்கத்தில் கனவில் ஸ்டேடஸ்கள் போடுவேன். ஸ்டேடஸ் வெறி ஏறி... கைகள் பரபரக்கும். உடுக்கை அடிக்கிறவன் கைபோல மனது கிடந்து தவிக்கும். அலறி அடித்துக்கொண்டு விழிப்படைந்து ஞானத்தின் போத்தலை அடித்து திறந்து எல்லா ஸ்டேஸ்களையும் வேரிலேயே எரித்து கரைத்து குடித்துவிட்டு எனக்கு நானே எனக்கு 2.5k லைக் போட்டுக்கொண்டு விரைப்பாக கடந்துபோவேன்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் காசா பணமா அடிச்சி விட்ரா என சில பல லட்சியங்களை பட்டியில் போட்டு வைத்திருந்தேன். அதில் முதன்மையானது நூறு நூல்களையாவது வாசித்து முடிப்பது. அதை கடந்த ஆகஸ்டிலேயே முடித்துவிட்டேன். சமூகவலைதளங்களில் இல்லையென்றால் ஆதிமனிதனாக மாறி இதுமாதிரியான வேலைகளில் மூழ்கிவிடநேருகிறது. அதனால் மேலும் மேலும் நூல்களை தேடிபிடித்து வெறித்தனமாக சிங்கம்3 போல வேட்டையாடியதில் ஆண்டின் இறுதியில் அந்த எண்ணிக்கை எகிறிவிட்டது. இதில் பல நூல்களும் சமகால இளம் எழுத்தாளர்கள் எழுதியது. அந்த நூல்களுக்கெல்லாம் அறிமுகம் எழுதினால் அடுத்த ஆண்டு இதேமாதிரியான ஒரு திரும்பிப்பாரை இரண்டு கைகளும் இல்லாமல் கால்களால்தான் தட்டச்சு செய்ய நேரும்...

அமேசான் கிண்டில் உதவியோடு அதிக நூல்களை அதிவேகமாக வாசிக்க முடிந்ததது. குறிப்பாக சில ஆங்கில நூல்களை பல ஆண்டுகளுக்கு பிறகு படிக்க முடிந்தது. சமூகவலைதளங்களில் இல்லாமல் இருப்பதால் ஒரு நூலை கீழே வைக்காமல் ஐம்பது பக்கங்களுக்கு மேல் கவனித்து வாசிக்க முடிவதாக உணர்ந்தேன்.

இந்த ஆண்டில் செய்த இரண்டாவது உருப்படியான விஷயம் 'நூறு நாள் நூறு ஓட்டம்'...! மாரத்தான் பயிற்சிக்காக தினமும் ஓடினாலும் வாரத்திற்கு ஐந்து நாட்கள்தான் தொடர்ச்சியாக ஓட முடியும். மீதி இரண்டு நாட்களாவது ஓய்வும் மாற்றுப்பயிற்சிகளும் அவசியம். அப்போதுதான் உடலில் காயங்கள் உண்டாகாமல் சோர்வோ மனசலிப்போ இல்லாமல் பயிற்சியை தொடர முடியும். இதற்கு நிறையவே பலாபலன்கள் இருக்கிறது. அது வேற டிபார்ட்மென்ட் பெரிய சப்ஜெக்ட். சிம்பிளாக 'நூறு நாள் நூறு ஓட்டம்' என்பது தொடர்ச்சியாக தினமும் நூறு நாட்களுக்கு ஓடுகிற டெய்லி மாரத்தான். அதாவது நூறு நாட்கள் தினமும் மாரத்தான் ஓடுவது. தினமும் குறைந்தது 5 கிமீகளாவது ஓடியே தீரவேண்டும் என்பது சவால்.

எந்த ஊரில் இருந்தாலும், என்ன வேலை செய்தாலும் அங்கே ஓடவேண்டும். காதலியோடு டேட்டிங் போயிருந்தாலும், காய்ச்சலாக இருந்தாலும்... எந்த சாக்குபோக்கு சொல்லியும் தவிர்க்க முடியாது. நடுவர்களோ பார்வையாளர்களோ கிடையாது. நமக்கு நாமேதான் மார்க் போட்டு நம்மை நாமே பாராட்டி பரிசு பதக்கம் எல்லாம் கொடுத்துக்கொள்ள வேண்டியதுதான். நாம்தான் அம்பயர் என்பதால் ஏமாற்றவும் வசதி உண்டு. இது என் வாழ்நாள் பக்கெட் லிஸ்டில் இருந்த ஒரு கடினமான சவால்களில் ஒன்று. அதை இந்த ஆண்டு வெற்றிகரமாக முடித்தேன். என்னுடைய இந்த அபார சாதனையை பாராட்டி எனக்கு நானே ஒரு காஸ்ட்லியான ஜிபிஎஸ் வாட்ச் (GARMIN 910xt) ஒன்றை பரிசளித்துக்கொண்டேன்.

நீயாநானாவில் இரண்டு முறை தோன்றி நாட்டுமக்களை உய்விக்க நல்ல கருத்துகளை சொன்னேன். என்னதான் மாஞ்சி மாஞ்சி மணிக்கணக்கில் எழுதினாலும் காட்சி ஊடகத்தின் தாக்கத்தை உணர்ந்தது அந்த சமயத்தில்தான். எங்கு சென்றாலும் நீ.நா ரசிகர்கள் சிலர் அடையாளம் கண்டுபிடித்து உரையாடினர். சொந்தக்காரர்கள் எல்லாம் திடீரென மரியாதை கொடுத்து கௌரவித்தனர். இதெல்லாம் மகிழ்ச்சியோடு அதிர்ச்சி தருவதாக இருந்தது. நமக்கும் ஓரளவுக்கு மைக்கில் பேசவருகிறது என்கிற நம்பிக்கையை தந்தது உயிர்மை மேடைதான். இந்த ஆண்டு பிரபுகாளிதாஸ் நூல்வெளியீட்டில் பேசிய பேச்சு அதற்கான முழுமையான கான்பிடன்ஸை தருவதாக இருந்தது.

உள்ளே போய் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்ட ஓர் அலுவலகம். அங்கே உதவி பொறுப்பாசிரியாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஆனந்தவிகடன் இதழை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறேன்... நேற்றுதான் சிறுவர் மலர் பொறுப்பாசிரியருக்கு மஞ்சள் அட்டையில் ப்ரில் இங்க் பேனாவில் வாசகர் கடிதம் எழுதியதுபோல இருக்கிறது. இப்போது நானே அப்படி ஒரு பொறுப்பில் உட்கார்ந்து இருக்கிறேன். 2009ல் புதியதலைமுறை வார இதழில் அப்பாவி நிருபராக பணிக்கு சேர்ந்து ஆசிரியர் மாலனோடு ஆறு வருடங்கள் பணியாற்றி முடித்து, அங்கிருந்து 2015ன் இறுதியில் விடைபெற்றேன். அடுத்த ஸ்டாப் இங்கே விகடனில் இப்போது ஆசிரியர் கண்ணனோடு... முற்றிலும் வேறு களம்... வேறொரு தளம். சற்றே பெரிய பொறுப்பு. ஸ்பைடர்மேனின் ஒன்றுவிட்ட மாமா பென் பார்க்கர் சொன்னபடி ''கிரேட் பவர்ஸ் கம்ஸ் வித் கிரேட் ரெஸ்பான்சிபிலிட்டி''. ஆகவே ஆண்டு முழுக்க ஏராளமான வேலைகள்... வாழ்நாளில் அதிகமாக மிக மிக அதிகமாக வேலை பார்த்து இந்த ஆண்டு சாதனை படைத்தேன்.

இந்த ஆண்ட ஆனந்தவிகடனுக்காக ஏராளமான கட்டுரைகளை எழுதினேன். குறிப்பாக சமூகவலைதளங்களுக்கு நாம் எந்த அளவுக்கு அடிமைகளாக இருக்கிறோம் என்பதை குறித்த ஆய்வுக்கட்டுரை கவர்ஸ்டோரியாக வெளியானது. ஆனால் என் மனதிற்கு நிறைவை அளித்த கட்டுரை என்றால் அது திருவள்ளூர் பாலவாக்கத்தில் சந்தித்த பூபாலன்-சரண்யா இருளர் தம்பதியின் பேட்டியும் ரோகித் வெமூலா குறித்த கட்டுரையும்தான். இருளர் இனத்தில் கொத்தடிமைகளாக பிறந்த பூபாலனும் சரண்யாவும் வறுமையில் தவிக்கிற ரைஸ் மில் கூலிகள். ஆனால் இந்த வறுமையிலும் குடிசையில் வாழ்ந்தாலும் 60 இருளர் இன குழந்தைகளுக்கு கல்வி தீபம் ஏற்றி படிக்கவைக்கிறார்கள். அவர்களைப்பற்றிய விகடன் கட்டுரை வெளியான பின் சர்வதேச அளவில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. குழந்தைகள் கல்விகற்க வசதியாக கட்டிடம் ஒன்று தன்னார்வலர்களால் கட்டித்தரப்பட்டது. ஊடகங்களில் பணிபுரிகிற ஒருவனுக்கு அரிதாக கிடைக்கிற மன நிறைவு அது.

சமீபத்தில் பெங்களூரிலிருந்து ஒரு பாட்டிம்மா அழைத்திருந்தார். ''நீங்கதான் அதிஷாவா.. ரொம்ப நன்றிப்பா'' என்று நடுங்கிக்கொண்டே சொன்னார். ''என்னம்மா என்ன விஷயம் எதுக்கு'' என்று விசாரித்தேன். விகடனில் வெளியான என்னுடைய ''உசேன் போல்ட்டையே ஓடவிடுவோம்டா'' என்கிற காமெடி கட்டுரையை படித்துவிட்டு அழைத்திருக்கிறார். ''பல வருஷத்துக்கு பிறகு மனசுவிட்டு சிரிச்சேன்பா... இத்தனை வருஷமா வராத சிரிப்பை உன்னோட கட்டுரை வரவழைச்சிருச்சுப்பா.. அதான் உன்கிட்ட பேசணும்னு தோணுச்சு ஆபீஸ்ல நம்பர் வாங்கிட்டு கூப்டேன்'' என்றார்.

நகைச்சுவையாக எழுதுவது குறித்து எனக்கு ஒரு தாழ்வான மனநிலை எப்போதுமே உண்டு. நம் சமூகம் கோமாளிகளை அவ்வண்ணமே அங்கீகரித்து வைத்திருக்கிறது. இங்கே அழவைக்கும், கோபம் கொள்ளவைக்கும் துடிக்கவைக்கும் புரட்சிகர எழுத்துகளுக்கு கிடைக்கிற மரியாதையில் ஒரு சதவீதம் கூட நகைச்சுவை எழுத்துக்கு கிடைக்காது. சொல்லப்போனால் போர்னோ படத்தில் நடிக்ககிற ஆணைப்போலவேதான் நகைச்சுவை எழுத்தும் இங்கே டீல் செய்யப்படுகிறது. பாட்டிம்மாவின் சொற்கள் இதையெல்லாம் தாண்டி மகிழ்ச்சி கொள்ள வைத்தது. இத்தனைக்கும் அது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்லைதான்!

இப்படி இந்த ஆண்டை சிறப்பாக்க எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், வருத்தம் கொள்ள செய்த விஷயங்களும் இருக்கவே செய்தன. 2016ல் நிறைய மாரத்தான்களில் கலந்துகொள்ள திட்டம் வைத்திருந்தேன். சில மாரத்தான்களில் பதக்கம் வெல்கிற திட்டமும் இருந்தது. அதற்காக வெறித்தனமான பயிற்சிகளை செய்துகொண்டிருந்தேன். ஓவர் பயிற்சியால் எடை தாறுமாறாக குறைந்து... உடம்பு ரொம்பவே ஒல்லியாகி பார்க்கவே கென்யா, ஜிம்பாப்வே வீரர்களைப்போலவே உருமாற ஆரம்பித்திருந்தேன். அலுவல் வேலைகளால் நான்கு மாரத்தான்கள் மிஸ் ஆக, கலந்துகொண்டது ஒரே ஒரு மிட்நைட் மாரத்தான் மட்டும்தான். பழக்கமில்லாத அர்த்த ராத்திரியில் ஓடி காலை புண்ணாக்கிக்கொண்டது மட்டும்தான் மிச்சம். அந்த காயத்திலிருந்து மீள மூன்று மாதங்கள் ஓய்வெடுத்து மீண்டு வரவேண்டியதாக இருந்தது.

ஆண்டு முழுக்க மாராத்தான் பயிற்சியில் ஏராளமான காயங்களோடு மல்லுக்கட்டினேன். காரணம் இந்த வயதில் தொழில்முறை ப்ரோபஷனல் அத்லெட்டுகளின் வேகத்தோடு போட்டி போட நான் மேற்கொண்ட கடினமான பயிற்சிகள் எல்லாமே சொதப்பின. ஐயர்ன்மேன் சால்ஞ்சிற்காக நீச்சல் கற்க நினைத்து, கால்களில் உண்டான காயங்களால் அதுவும் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போய்விட்டது. இந்த முறை விட்டதை அடுத்த ஆண்டு செய்வோம்.

நிறையவே பயணம் பண்ண நினைத்து எந்தப்பயணத்தையும் உருப்படியாக செய்யமுடியாமல் போனது. கோவா, சிரபுஞ்சி, இலங்கை, மலேசியா என போட்டுவைத்த பயணத்திட்டங்கள் அனைத்தையும் போட்டுத்தள்ள வேண்டியதாக இருந்தது. கிட்டத்தட்ட கூண்டுகிளி கணக்காக அலுவலகத்தின் உள்ளேயே அடைந்து இருந்தேன். ஒவ்வொரு மாதமும் ஒரு பயணத்திட்டத்தை போட்டு பயணநாளுக்கு முன்பாக அதை மனத்தாங்கலோடு ரத்து செய்தேன். பயணம் பண்ணுவதற்கு தேவை காசோ பணமோ நேரமோ அல்ல மனசுதான்... என் மனதுக்கு இந்த ஆண்டு என்ன ஆனது என்று தெரியவில்லை. புதிய வேலை குறித்த அச்சமும் அது சார்ந்த அளவுக்கதிகமான சிந்தனை காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் சிறுகதை என்று நானாக நினைத்துக்கொண்டு பத்து சிறுகதைகளையாவது எழுதுவது உண்டு. ஆனால் இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக எழுதியதெல்லாம் ஒரே ஒரு சிறுகதை மட்டும்தான். அது விகடனில் வெளியானது. அதை படித்தவர்கள் பாராட்டினார்கள். படிக்காதவர்களும் பாராட்டினார்கள். படித்தவர்களை பார்த்தவர்களும் பாராட்டினார்கள்.

நீண்ட ஓய்வுக்குப்பின் இதோ மீண்டும் சமூகவலைதளங்களுக்கு திரும்பிவிட்டேன். அடுத்த ஆண்டு ஏராளமான பொறுப்புகளோடும் கனவுகளோடும் சவால்களோடும் பிறக்கிறது. இலக்குகளை நோக்கி ஓடுவதில் எப்போதும் ப்ரியம் இருந்தது இல்லை. இலக்குகளின் வழிப் பயணங்களே வாழ்வை சுவாரஸ்யப்படுத்துகின்றன. அந்தப் பயணங்களே எனக்கான பாடங்களையும் வழங்குகின்றன.