Pages

27 February 2017

எழுத்தாளர் முனிராஜின் S பட்டன்இது ஒரு கணினியின் கதை. ஒரு கணினிக்காக எழுதப்படும் கதை. அதே கணினியில்தான் இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தக் கணினி என்னுடையது அல்ல… பிரபல எழுத்தாளர் முனிராஜுடையது.

என்னைப் போலவே 90-களில் வளர்ந்த இளைஞர்கள் பலருக்கும் எழுத்தாளர் முனிராஜ் மிகப்பெரிய ஆதர்சம். அவருடைய துள்ளலான கதைகளும், தீராத இளமைத்துடிப்புமிக்க எழுத்து நடையும் வாசிக்கிற யாரையுமே உள்ளே இழுத்து, நான்கு சாத்து சாத்தி, கை வாயைப் பொத்தி, அடிமையாக்கி உட்காரவைத்துவிடும். அப்படி உட்காரவைக்கப்பட்ட பல ஆயிரம் பேரில் நானும் ஒருவன்.

முனிராஜ், முழுநேர எழுத்தாளர் எல்லாம் இல்லை. மருந்து ஆராய்ச்சி நிறுவன அதிகாரி. அவரின் எழுத்துக்களில் சற்றே தூக்கலாக விஞ்ஞானம் விளையாடும். முனிராஜ் மீதான பிரியத்தில், எத்தனையோ நாட்கள் யார் யாருடனோ விவாதித்து, சண்டை போட்டிருக்
கிறேன். குறிப்பாக, எங்களுடைய முக்கிய எதிரிகளான எழுத்தாளர் சுஜாதாவின் ரசிகர்களோடு.

சுஜாதா ரசிகர்களும் நாங்களும் பல இடங்களில் மோதிக்கொண்டாலும், எங்களுடைய மெயின் கோதா... தெருமுனை ஸ்டார் சலூன்தான். அங்குதான் அத்தனை வார - மாத இதழ்களும் குவிந்துகிடக்கும். சலூன் கடை அண்ணன், முனிராஜின் வெறியர். அதனாலேயே எங்கள் குழுவின் எல்லா போர்களுக்கும் அவரே தளபதியாக முன்நின்று போரிடுவார். அவருடைய தம்பிக்கோ சுஜாதாவைத்தான் பிடிக்கும் என்பதால், சுஜாதாயிஸ்ட்களும் அங்கே வந்து உரிமையோடு உட்கார்ந்திருப்பார்கள். சுஜாதாவின் கதைகளில் குறைகள் கண்டுபிடித்து நாங்களும், முனிராஜ் கதைகளின் சிக்கல்களை அவர்களும்... மாறி மாறி விவாதிக்க... சலூன் கடை விவாதம் குருக்ஷேத்திரம் ஆகும்.

எங்களைப்போலவே சுஜாதாவுக்கும் முனிராஜுக்கும் நடுவிலும்கூட அறிவிக்கப்படாத ஒரு போட்டி இருப்பதாக நாங்களாகவே நம்பினோம். பேட்டி ஒன்றில் முனிராஜிடம்…

‘`சுஜாதாவின் வாரிசு நீங்கள்தான் என்று சொல்கிறார்களே?’’ என்று ஒரு நிருபர் கேட்டார்.

முனிராஜைக் கோபப்படுத்தவே கேட்கப்பட்ட கேள்வி அது. ஆனால் முனிராஜ் சாந்தமாகப் பதில் சொன்னார்... ``அவர் கமல், நான் ரஜினி. ஒரே வானில் பறக்கும் இரண்டு சாட்டிலைட்கள். ஆனால், வெவ்வேறு வேலைகளுக்காக...’’

சுஜாதா தன் வாழ்நாளில் முனிராஜ் பற்றி ஒரு சொல்கூட எழுதியதும் இல்லை; சொன்னதும் இல்லை.

முனிராஜ் எப்போதுமே மிகவும் குறைவாகவே பேசுகிறவராகவும் எளிமையானவராகவும், தன் பிரபலத்தைப் பயன்படுத்தி காரியங்கள் சாதிக்காதவராக, ஏழை எளிய வாசகர்களுக்கு நிறைய உதவிகள் செய்பவராகவே முன்னிறுத்தப்பட்டார். இதை எல்லாம் அவர் விளம்பரத்துக்காகச் செய்கிறார் என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், அவர் அவை பற்றி கவலைப்பட மாட்டார். அவருக்கு யார் வாசகர் கடிதங்கள் அனுப்பினாலும் தவறாமல் பதில் அனுப்புவார்... திட்டி எழுதினாலும்கூட.

``முனிராஜோட பலமே நம்மளை மாதிரி சாதாரண வாசகர்கள் வார்த்தைகளை மதிக்கிற, அவங்க மேல அவர் வெச்சிருக்கிற மரியாதைதான்டா. அதுக்குக் காரணம் அவர் வாழ்க்கைடா’’ என்பார் சலூன் கடை அண்ணன்.

தொடக்கத்தில் முனிராஜ், கோவையில் வாழும் சாதாரண வாசகராகத்தான் இருந்தார். பண்ணையில் விவசாயக்கூலி வேலைபார்த்த ஒருவருடைய குடிசையில் பிறந்து முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் சென்றவர். படிப்படியாக முன்னேறி எழுத்தாளரான அவருடைய வாழ்க்கைக் கதை, வெளியாகாத பத்திரிகைகளே இல்லை.

எழுதத் தொடங்கிய காலத்தில், சம்பத்குமார் என்கிற தன் நிஜப்பெயரில் எப்போதாவது சிறு பத்திரிகைகளுக்கு விமர்சனக் கடிதங்கள் போடுவார். ஜெயகாந்தன் எழுத்துலகின் ராஜாவாக ஆட்சிசெய்த காலகட்டத்தில் முனிராஜ் ‘எழுத்தாணி முனை’ என்ற சிறுபத்திரிகையில் சின்னச்சின்ன விஷயங்கள்கொண்ட பத்தி ஒன்றை எழுத ஆரம்பித்திருந்தார். கணையாழியில், சுஜாதா தன் ஒரிஜினல் பெயரைக் கொஞ்சம் மாற்றி ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் அப்போதுதான் கடைசிப் பக்கங்கள் ஆரம்பித்திருந்தார். கிட்டத்தட்ட அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு முனிராஜ், சாதா சம்பத்குமாராகத்தான் இருந்தார்.

90-களில்தான் தொடங்கியது முனிராஜின் வளர்ச்சி. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் கதைகள் எழுதவே தொடங்கினார். சம்பத்குமார் ‘முனிராஜ்’ ஆனார் (குலசாமி முனியப்பன் + மனைவி ராஜலட்சுமி). அவருடைய கதைகள் அடுத்தடுத்து பல பத்திரிகைகளிலும் வெளிவரத் தொடங்கின. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு களம். கதைகளில் பெரிய தத்துவ விசாரணைகள் இருக்காது. ஹாலிவுட் சினிமா பாணியில் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், எதை எழுதினாலும் அவர் நம்புகிற அரசியலைத் தெளித்திருப்பார். போகிறபோக்கில் இலக்கிய நூல்களை அரசியல் எழுத்துக்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பார்.

``பிஹெச்.டி படிச்ச ஒருத்தன் ஒண்ணாங்கிளாஸ் பையனுக்குப் பாடம் எடுக்க வந்தான்னா எப்படி இருக்குமோ, அப்படிப்பட்டது முனிராஜ் ரைட்டிங்’’ என்று இலக்கியவட்டத்தில் பேசிக்கொள்வார்கள். முனிராஜ் தன் கதைகளில் பொட்டில் அறைவதுபோல் பொளேர் என்று ஒரு முடிவை வைத்திருப்பார். யாருமே கணிக்கவே முடியாத ஒன்றாக அது இருக்கும். அதனாலேயே அவரை ஓ.ஹென்றியோடு ஒப்பிட்டு விமர்சிப்பார்கள். ‘க்ளைமாக்ஸ் கிங்’ என்ற பட்டப்பெயர்கூட இருந்தது. கோடம்பாக்கத்துக்கான நுழைவு வாயிலை அந்தப் பட்டப்பெயர்தான் திறந்துவிட்டது. 90-களின் கடைசியில் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான இயக்குநர்கள் அத்தனை பேரும், க்ளைமாக்ஸுக்காக அவரை விரட்ட ஆரம்பித்தனர்.

ஒரு பக்கம் அவர் வளர்ந்துவந்தபோதும், இப்படி நல்ல கதைகளையும் சிறந்த முடிவுகளையும் எழுதுவது அவர் இல்லை என்ற பேச்சு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. அவருக்கு இந்தக் கதைகளைத் தருவது, அவருடைய கணினிதான் என தமிழ்நாடு முழுக்கவே ஒரு வதந்தி எப்போதும் நிலைத்து இருந்தது. இலங்கை கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஜெயசூர்யா சிக்ஸரும் ஃபோருமாக விளாசிக்கொண்டிருந்தபோது `அவருடைய பேட்டில் ஸ்ப்ரிங் வைத்திருக்கிறார், பேட்டின் மேல் மர்ம ரசாயனம் பூசுகிறார்’ என்று எல்லாம் வதந்திகள் உலவிக்கொண்டிருந்தன. அதற்கு இணையான வதந்திகள் முனிராஜ் குறித்தும் தொடர்ந்து பரவியது அல்லது பரப்பப்பட்டது. ஜெயசூர்யாவுக்கு பேட் மாதிரி முனிராஜுக்கு கணினி. பத்திரிகைகளில் வருகிற அவருடைய புகைப்படங்கள் அனைத்திலும் அவரோடு தவறாமல் இடம்பிடித்திருக்கும் அந்தக் கணினி. எல்லா படங்களிலும் ஒரே கணினிதான்.

சுஜாதா தன் ஒரு கதையில் கதை எழுதும் கணினியை உருவாக்கியிருப்பார். முனிராஜிடம் அதுபோன்று ஒன்று இருக்கிறது என்று நம்பினார்கள். இன்ன இன்ன விஷயங்கள் வேண்டும் என்று சொல்லிவிட்டால் கணினியே வேண்டியபடி த்ரில்லரோ, ஹாரரோ, ரொமான்ஸோ வேண்டிய ஜானரில் கதையை சிறப்பாக எழுதித்தந்துவிடும் என்று அவருடைய வாசகர்கள்கூட நினைத்தனர். ஆனால், வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். முனிராஜின் கணினி குறித்த கதைகள் எல்லாம் அமானுஷ்யத்தன்மையோடு, கைகால் முளைத்து வாசகர்கள் அத்தனை பேரிடமும் எப்படியோ நிலைபெற்றது. முனிராஜிடம் இதைப் பற்றி ஒருமுறை டி.வி பேட்டியில் கேட்டபோது, ‘இன்ட்ரஸ்ட்டிங்’ என்று கண்கள் சிமிட்டினார்... அவ்வளவுதான்.

அவர் தன் கதைகளை கணினியில் எழுதுகிறார் என்று முதன்முதலாக வெளிவந்த கிசுகிசு செய்தியே எங்களுக்குப் புல்லரிப்பாக, ஓர் அறிவியல் புனைக்கதைபோல் இருந்தது. கணினி என்பது கணக்கு போட மட்டும்தான் என நம்பிக்கொண்டிருந்த காலம். முனிராஜைப் பார்த்துதான் சுஜாதா கம்ப்யூட்டரில் ஆர்வம் வந்து அதைப் பற்றி படித்தார் என்று நாங்களும், சுஜாதாவைக் காப்பி அடித்துதான் முனிராஜ் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டார் என்று அவர்களும் எந்நேரமும் சண்டையிடுவோம். ஆனால், எனக்கு நன்றாகத் தெரியும் சுஜாதாதான் இதில் மூத்தவர் என்பது... இருந்தும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

இரண்டு அணிகளிலும் தலா ஐந்து சின்ன சுஜாதாக்களும், ஐந்து மினி முனிராஜ்களும் இருந்தோம். எங்கள் அணியிலேயே ‘கிட்டத்தட்ட முனிராஜ்’ நான்தான். அவரைப் போலவே உருவத்திலும், ஏதோ கொஞ்சம் எழுத்திலும். அவரைப் போலவே சதுரமான ஃப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்துகொள்வேன். இடதுபுறமாகத் தலைவாரிக்கொள்வேன். முனிராஜுக்காக கம்ப்யூட்டர் க்ளாஸுக்குப் போய் எம்எஸ்-தாஸ், பேசிக், ஃபோர்ட்ரான் எல்லாம் படித்தேன்.

ஐ.ஏ.எஸ் கோச்சிங் பெறுவதற்காக சென்னை வந்த பிறகு, முனிராஜ் சென்னையில் வாழ்ந்துகொண்டிருந்த ஏரியாவிலேயே நானும் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். அது யதேச்சையானது அல்ல. நான் எழுதிய கதைகளை அவரிடம் கொடுத்து பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்பது என் கனவு. அவருடைய வீட்டு வாசல் வரை செல்வேன். ஏதோ தயக்கமாக இருக்கும். போக மாட்டேன்.

ஒருநாள் தைரியம் வந்தவனாக வீட்டுக்குள் நுழைந்துவிட்டேன். முனிராஜ் போலவே தலை வாரி, அவரைப்போலவே உடை அணிந்து, வீட்டு முன் நின்றேன். முனிராஜ்தான் கதவைத் திறந்தார். எப்போதும் டிப்டாப்பாக மட்டுமே பார்த்து வியந்த ஆளுமை, லுங்கியோடு நின்றுகொண்டிருக்க, எனக்குச் சிரிப்பு வந்தது. அவருக்கும் என்னுடைய வேஷத்தைப் பார்த்து சிரிப்பு வந்திருக்கும். புன்னகையை அப்படியே மென்று முழுங்கினார். ``என்ன வேணும்?’’ என்று கேட்டார். விவரம் சொன்னேன். உள்ளே அழைத்து உட்காரவைத்தார்.

அவர் எழுதுகிற அறை அது. என்னை அங்கே காத்திருக்கச் சொல்லிவிட்டு, எங்கோ சென்றுவிட்டார். என்னைச் சுற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புகளும் இருந்தன. அப்படியே பார்த்துக்கொண்டே வர, ஒரு திரைச்சீலைக்குப் பின்னால், ஓர் ஓரமாக அந்தக் கணினி இருந்தது. ஒரு பூதம் கைகால்களை மடக்கி அமர்ந்திருப்பதைப் போலவே அது இருந்தது. எத்தனை எத்தனை கதைகளை, முதன்முதலாக வாசித்த கணினி. அதன் கீபோர்டைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என விநோதமான ஆசை எழுந்தது. ஆனால், அதன் அருகில் செல்லவும் அச்சமாக இருந்தது. தைரியம் வந்தவனாக அந்தக் கணினிக்கு அருகில் சென்றேன். கீபோர்டில் ‘S’ என்ற எழுத்து மட்டும் அதிகமாகத் தேய்ந்திருந்தது. முனிராஜ் தன் நாயகிகளுக்கு ‘S’ என்ற முதல் எழுத்தில்தான் எப்போதும் பெயர்வைப்பார். செல்வி, ஸ்டெல்லாவில் தொடங்கி செண்பகவள்ளி வரை. அவருடைய முதல் காதலியின் பெயர்கூட சரோஜா அல்லது சந்திரா... இப்படி எதுவோ ‘S’-ல்தான் ஆரம்பிக்கும். திரைச்சீலையைத் தாண்டி நின்றுகொண்டி ருந்தேன். எதிரில் கணினி.

எனக்கு முன்னால் இருக்கிற இந்தக் கணினிக்குள்தான் ஏதோ ரகசியம் இருக்கிறது. இதை வைத்துதான் ஏதோ மாயாஜாலம் பண்ணுகிறார். ஒருவேளை முழுக்கதையைக் கொடுத்துவிட்டால், உலகின் மிகச்சிறந்த க்ளைமாக்ஸைக் கொடுக்கிற மென்பொருள் உள்ளே இருக்குமோ… இதுவரை உலகில் யார் யாரோ எழுதிய, அத்தனை கதைகளையும் உள்ளே தொகுத்து, அதன் வழியே தானாகவே கதைகளை உருவாக்கும் இன்ஜின் வைத்திருப்பாரோ... நாய்க்குட்டிபோல அமைதியாக நிமிர்ந்து, அமர்ந்திருந்த கணினியின் தலையைச் செல்லமாகத் தடவ கையை நீட்டினேன்.
‘`அங்கே என்ன பண்றீங்க?’’ என்ற முனிராஜின் குரல் ஒரு புல்லட்டைப்போல மூளையைத் தாக்கியது. பிலுக்கென்று கையை உள்ளே இழுத்துக்கொண்டேன். கையில் இரண்டு கோப்பை காபியோடு நின்றார்.

‘`சார் நிறைய வாசிப்பீங்களா?’’ என்று அப்பாவியாகக் கேட்டேன்.

‘`ஆயிரம் பக்கங்கள் வாசிச்சாத்தான், அஞ்சு பக்கங்கள் எழுத முடியும் குமார்’’ என்று கம்பீரமாகச் சொன்னார். அவருடைய தீவிர வாசகன் என்பதையும், அவருடைய சிறந்த கதைகளை நான் வாசித்த கதைகளையும் கொட்டினேன். அன்பாகக் கேட்டுக்கொண்டார். கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் என் கதைகள், கவிதைகளை எடுத்து நீட்டினேன். அதை வாங்கிப் புரட்டியவர். சில இடங்களில நிறுத்தி கண்ணாடியைச் சரிசெய்துகொண்டு படிக்க ஆரம்பித்தார். முகத்தில் சன்னமாகப் புன்னகை.

‘`நீங்க கல்யாண்ஜி, பசுவய்யா, பிரமிள், நகுலன் கவிதைகள்லாம் படிச்சிருக்கீங்களா?’’ எனக் கேட்டார்.

‘`நான் வாழ்க்கையில உங்க எழுத்துக்கள் மட்டும்தான் சார் படிச்சிருக்கேன், சுஜாதாவோட கதைகள்கூடப் படிக்க மாட்டேன்’’ என்று பெருமையோடு பொய் சொன்னேன். அந்த அறையில் சின்னதாகப் பூகம்பம் வருகிற மாதிரி சிரித்தார். முதல் சந்திப்பிலேயே என்னை அவருக்கு ரொம்பவே பிடித்துப்போனது என்பதை அவருடைய பார்வையில் கண்டுகொண்டேன்.

`‘நான் வெறும் வாட்ச்மேன்தான்ப்பா… இலக்கியத்துக்கு உள்ளே முதல்ல போங்க ஏகப்பட்ட கருணாமூர்த்திகள் இருக்காங்க, அவங்க கத்துக்கொடுப்பாங்க’’ என்று ஆசி கூறி அனுப்பிவைத்தார்.

``அவங்கள்லாம் வேண்டாம் சார், நீங்க சொல்லிக்குடுங்க’’ என்றேன்.

அதற்குப் பிறகு அடிக்கடி அவருடைய வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீட்டில் அவருடைய மனைவி ராஜலட்சுமி மட்டும் இருப்பார். அந்த அம்மாவுக்கு என்னை ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால் மளிகை சாமான் வாங்குவது, பிளம்பரை அழைத்து வருவது, வீட்டைச் சுத்தமாக்குவது மாதிரி வேலைகளுக்கு என்னைதான் அனுப்புவார். சாப்பாடு போடுவார். எனக்கு அவருடைய மகன் சாயல் எனச் சொல்வார். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் நான் எழுதிய கதைகளை முனிராஜிடம் கொண்டுபோய் காட்டுவேன். அவர் புரட்டிப்பார்த்துவிட்டு… ``நீ ஏன் என்னை மாதிரியே எழுதணும். உன்னை மாதிரி எழுது. எதுக்காக நீ என்னை மாதிரியே கண்ணாடியும் முடியும் வெச்சிருக்க? அதை மாத்து. உனக்கு நல்லா எழுத வருது. இன்னும் கொஞ்சம் பக்குவப்படணும். அவ்வளவுதான். புதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி இவங்க எழுத்துக்களைப் படி. தினமும் பேப்பர் படி’’ என்று அறிவுரை கொடுப்பார்.

அவரோடு அமர்ந்து சாப்பிடும்போதுகூட, ‘`ஜெயமோகனோட காடு நாவல் வாசிச்சு பாரு. நான் தர்றேன். அவ்ளோ பிரமாதமா இருக்கும்’’ எனச் சொல்லிக்கொண்டேதான் சாப்பிடுவார்.

எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துப் போக ஆரம்பித்தார். கடற்கரையில் அலைகளைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார். சுண்டக்கஞ்சி சாப்பிட்டுவிட்டு மணலில் தூங்குவார்.

அவர் சொன்ன கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து வாசிப்பேன். வாசித்து முடித்ததும் நான் தயாராகிவிட்டதாக நினைத்து அவரிடம் ஓடிப்போய்ச் சொல்வேன். அவர் இன்னொரு பட்டியல் சொல்வார். இந்த மனிதரை இம்ப்ரஸ் பண்ணுகிற மாதிரி ஒரு கதை எழுதிவிட வேண்டும் என வெறிவரும். ராஜலட்சுமி அம்மா ஆறுதலாகப் பேசுவார். ‘`அவர்தான் சொல்றார்ல... அதை எல்லாம் படியேன்டா’’ என்பார்.

‘`சார் க்ளைமாக்ஸ்ல எப்படி சார் அந்த மாதிரி ஒரு ட்விஸ்ட்டை உங்களால வைக்க முடியுது. அதைச் சொல்லிக்குடுங்களேன். நானும் எவ்வளவோ ட்ரைபண்றேன்’’ என்று கேட்பேன். அவர் சிரிப்பார்.

‘`புதுமைப்பித்தனோட `காஞ்சனை’ கதை படி...’’ என்று அனுப்பிவைப்பார்.

ஒருமுறையாவது அவர் எழுதுவதை அருகில் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், அவர் அனுமதிக்க மாட்டார். அவர் எழுதும்போது அறை உள்பக்கமாகத் தாழிட்டிருக்கும். மனைவிகூட தொந்தரவு செய்ய முடியாது. முனிராஜ் கதைகளைத் தட்டச்சுவதை ஒருமுறைகூட ராஜலட்சுமி அம்மா பார்த்தது இல்லையாம். ஆச்சர்யமாக இருந்தது. எங்கு சென்றாலும் அழைத்துச் செல்பவர் எழுதும்போது கிளம்பச் சொல்லிவிடுவார்.

எல்லோரும் சொல்வதுபோல அந்தக் கணினியில்தான் ஏதோ சூதுவைத்திருப்பாரோ என்று சந்தேகம் வரும். எப்படி இவரால் இதுமாதிரி யோசிக்க முடிகிறது... எங்கிருந்து கிடைக்கிறது இத்தனை கற்பனை? அறிந்துகொள்ளும் ஆர்வம் எப்போதும் அதிகரிக்கும். அவர் இல்லாத சமயத்தில் கணினியைத் திறந்துபார்த்துவிடாலம் என்று நினைப்பேன். ஆனால், செய்ய மாட்டேன். சிக்கினால், இனி எப்போதும் இந்த வீட்டுக்குள் நுழையவே முடியாது. கீபோர்டில் தேய்ந்துபோன அந்த ‘S’ எழுத்தைப் பார்க்கும்போது எல்லாம், `அதைப் போட்டு ஏன் தேய்த்திருக்கிறார்?’ என்ற எண்ணத்தோடு கடப்பேன். ஒருவேளை இந்த பட்டனைத் தொடர்ந்து தட்டினால் அலாவுதீனின் பூதம் வருமோ!

``சார் இந்த கம்ப்யூட்டரை எத்தனை வருஷமா வெச்சிருக்கீங்க?’’

யோசிப்பார்...

``இது எனக்கு கிஃப்ட்டா வந்துது. பத்து வருஷம் இருக்கும் குமார். அப்பப்ப நானே அப்டேட் பண்ணிப்பேன்’’ என்பார்.

‘`இதுலதான் உங்க கதைகளை எல்லாம் வெச்சிருக்கீங்களா?’’ என்று கேட்பேன்.

``உன்னை தி.ஜா-வோட `அம்மா வந்தாள்’ படிக்கச் சொன்னேனே என்னாச்சு?’’ என்று கேட்பார்.

நான் கிளம்பிவிடுவேன்.

‘`சார்... நீங்க கதை எழுதும்போது பக்கத்துல இருந்து பார்க்கணும்’’ என்று ஒருமுறை அவரிடமே கேட்டேன்.

``அதெல்லாம் அப்புறம், முதல்ல டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி எழுத்துக்களை எல்லாம் படி, மாப்பசான் சிறுகதைகள் படி’’ என்று எப்போதும்போலவே அனுப்பிவைத்தார்.

‘அதைப் படிக்கிறதுக்கும் நீ கதை எழுதுறதைப் பக்கத்துல நின்னு பார்க்குறதுக்கும் என்னய்யா சம்பந்தம்?’ என எனக்குள் கடுப்பாக இருக்கும். புத்தக அடுக்குகளுக்குப் பின்னால் மறைந்துகொண்டு, அவர் எழுதும்போது பார்க்கலாமா என்று திட்டம்போடுவேன். நாள்பட எனக்கு கணினியின் ரகசியம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வெறியாக மாறத் தொடங்கியிருந்தது.

நான் ஐ.ஏ.எஸ் ப்ரிலிம்ஸில் தோற்றுப்போன ஒருநாளில், முனிராஜ் மாரடைப்பில் இறந்துபோனார். அறைக்குள் எதையோ எழுதிக்கொண்டிருந்தபோது அல்லது எழுத நினைத்து அமர்ந்தபோது மாரடைப்பு வந்திருக்கிறது. எழுந்துபோய் அவரால் கதவைத் திறக்க முடியவில்லை. அறைக் கதவை உடைத்துத் திறந்தபோது… அவர் இறந்துபோய் சில மணி நேரமாகியிருந்தது. அவருடைய தலை கீபோர்டில் சரிந்துகிடந்தது. இடது ஆட்காட்டி விரல் மட்டும் ‘S’ எழுத்தின் மேல் அழுந்தியிருந்தது.

ராஜலட்சுமி அம்மாவுக்குக் குற்றவுணர்ச்சி. கதவைத் திறந்துவெச்சிருந்தா காப்பாத்திருப்பேனே... தாங்க முடியவில்லை. அவருக்கு ஆறுதல் சொல்லி அருகிலேயே இருந்தேன். நான் நான்கு நாட்களுக்கு எதுவுமே சாப்பிடாமல் பைத்தியம் பிடித்துத் திரிந்தேன். முனிராஜ் இல்லாத உலகத்தைக் கற்பனைசெய்யக்கூட மனம் இல்லை. என் காதலி செத்துப்போயிருந்தால்கூட அப்படி அழுதிருக்க மாட்டேன். யாரோ ஒரு மனிதனின் சில ஆயிரம் சொற்கள் அப்படி அழவைத்தன. அவருடைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அவருடைய இறுதிச் சடங்குக்கு வந்து குவிந்தனர். ராஜலட்சுமி அம்மா, வீட்டைக் காலி பண்ணி விட்டு மகனுடன் போகப்போவதாகச் சொன்னார்.

‘`அம்மா இந்த கம்ப்யூட்டரை நான் எடுத்துக்கவா?’’ - தயக்கமாகக் கேட்டேன். அம்மா என்னை ஏற - இறங்கப் பார்த்தார். அவருக்கு என்மீது பரிதாபம் வந்திருக்கும்போல.

‘`நீ எடுத்துட்டுப் போடா’’ என்று மட்டும் சற்றே சத்தமாகச் சொன்னார் அம்மா. அன்று அவரது கருவிழிகள் அகன்றிருந்ததை முதன்முறையாகப் பார்த்தேன்.

பத்து ஆண்டுகளாக எப்படி ஒரு மனிதனால் ஒரே கணினியை வைத்திருக்க முடிந்தது, ஏன் இதைப் பற்றி பேச மறுக்கிறார்... இப்படி பல கேள்விகள் அந்தக் கணினியைக் கடக்கும்போது எல்லாம் எழும். அதைப் பார்க்கும்போது எல்லாம், உயிருள்ள ஒரு மனிதன் அல்லது கதைசொல்லி அமர்ந்திருப்பதைப்போலவே இருக்கும். அது லேசாக அசைவதாகக்கூடத் தோன்றும். இப்போது நான் அந்தக் கணினியோடு என் அறைக்கு வந்துவிட்டிருந்தேன்.

அன்றைய இரவு... அந்தக் கணினியையே உற்றுப்பார்த்தபடி அமர்ந்திருந்தேன். முனிராஜின் மாயக்கண்ணாடி, அற்புதவிளக்கு, கற்பக விருட்சம் இப்போது எனக்கு எதிரே இருக்கிறது. இதைத் திறந்தால் முனிராஜுக்கு வாய்த்த பொக்கிஷங்கள் எனக்கும் வாய்க்குமா? கணினியை ஆன் பண்ண யத்தனித்து எழ... மின்சாரம் தடைபட்டது.

அறைக்குள் இருள் சூழ்ந்துகொண்டது. மெழுகுவத்தியைத் தேட மனமின்றி, நான் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஒரு நெருக்கமான மரணத்துக்குப் பிறகு சந்திக்கிற முதல் இருளுக்கு சிநேக மனோபாவம் உண்டு. அது அடர்த்தியான துயரத்தையும் தனக்குள் கரைத்துக்கொள்ளும். நான் அப்படியே அமர்ந்திருந்தேன். அறையின் மூலையில் இருந்தது கணினி. நாற்காலியில் அமர்ந்திருக்கும் வெந்நிற மனிதனைப்போலவே இருந்தது. அது லேசாகக் காற்றில் அசைவதைப்போல இருந்தது. அதன் அசைவைப் பார்த்தபடியிருந்தேன். முனிராஜின் கதைகளும் அவருடைய சொற்
களும் குவியலாக மூளைக்குள் சிதறிக்கொண்டிருந்தன. யாருமற்ற தெருவில் ஒலிக்கும் ஒரு சைக்கிள் மணி ஓசை கேட்டது. இனி அந்த நபர் இல்லாத உலகத்தில் வாழ்ப்போகிறோம் என்ற எண்ணம் அச்சுறுத்தியது. அழத் தொடங்கினேன். திடீரென விழிப்பு வந்தவனாக இருளில் இருந்து விலக முயன்றேன்.

நான் இருட்டில் ஒரு மெழுகுவத்தியை ஏற்றிவைத்தேன். இப்போது கணினியின் நிழல் ஒரு மனித உருவம்போலவே பிரமாண்டமாக எழுந்து நின்றது. நிழல் காற்றில் சலசலத்து ஆடியது. யாரோ ஒரு மனிதன் அறையின் மூலையில் அமர்ந்தபடி என்னையே பார்ப்பதுபோல இருந்தது. மின்னுகிற ஒளியோடு இரண்டு கண்கள் என்னை கூர்மையாக... முனிராஜின் குரல்கூட கேட்டது. நான் அச்சத்தில் அறையைவிட்டு வெளியேற நினைத்தேன். ஏதோ என்னைத் தடுத்து நிறுத்துவதைப்போல் இருந்தது. மிகமிக சிறியதாக அந்தக் குரல் கேட்க ஆரம்பித்தது.

‘`டேய்... வண்ணநிலவனோட `எஸ்தர்’னு ஒரு கதைடா. உடைச்சுப்போட்டுடும். தேவிபாரதி யோட `பலி’னு ஒரு கதை, பாதசாரியோட `காசி’ படிடா, உயிரை உடைச்சுடும்’’ - மெதுவாக அந்த ஒலி அதிகரிக்க ஆரம்பித்தது. காதுகளைப் பொத்திக்கொண்டேன். கண்களை இறுக மூடிக்கொண்டேன். இரவு எல்லாம் அந்த ஒலி காதுக்குள் ரீங்காரமிட்டபடியே இருந்தது. தற்கொலை செய்துகொண்ட லைப்ரரியன் தூக்கத்தில் உளறுவதைப்போல், புத்தக கம்பெனி ஒன்றின் கேட்லாக்கை, குழந்தை ஒன்று மூச்சுவிடாமல் படிப்பதைப்போல அந்த ஒலிகள் காதுக்குள் ரீங்காரமிட்டதன.

விடிந்ததும் முதல் வேலையாக அந்த கணினியைக் கொண்டுபோய் எங்கேயாவது அரசுப் பள்ளிக்குத் தானமாகக் கொடுத்துவிட தீர்மானித்தேன். மின்சாரம் இல்லாமல் புழுக்கத்தில் இரவு எல்லாம் உறக்கம் இல்லாமல் தரையிலேயே புரண்டபடியிருந்தேன். விடியும்
போது உடல் தொப்பலாக நனைந்திருந்தது. மூலையில் கணினி புத்தரைப்போல அமர்ந்திருந்தது.

காலையில்தான் அந்த யோசனை வந்தது. கணினியை ஆன்செய்து பார்க்க முடிவெடுத்தேன். பாஸ்வேர்டு... யாரிடம் போய் கேட்பது. பாஸ்வேர்டை உடைத்து உள்ளே செல்லும் வழி எல்லாம் எனக்குத் தெரியாது. என்னோடு படித்த நண்பன் கிருஷ்ணகுமாரை அழைத்து வந்தேன். அவனிடம் இரவு நடந்த ஆவித் தொந்தரவுகளைப் பற்றி சொன்னேன். கலகலவெனச் சிரித்தான். அவன் சுஜாதா ரசிகன்…

``இன்னும் நீ அந்த முனிராஜை விடலையா ஃபன்னி பல்ப் ரைட்டர். அவரோட கதையிலதான் இப்படி லூஸுத்தனமா ஏதாவது வரும். சுஜாதா ஆல்வேஸ் கம்ஸ் வித் எ லாஜிக்டா’’ எனச் சிரித்தான். அவனுக்கு முனிராஜ் இறந்த விஷயம் தெரியாமல் இருக்கலாம். ``மூடிட்டு வேலையப் பாருடா நொன்னை’’ என்று கோபமாகக் கதவைச் சாத்தினேன்.

அரை மணி நேரத்தில் கணினியைத் திறந்துகொடுத்துவிட்டு சிகரட்டோடு வெளியே சென்றுவிட்டான். நான் முனிராஜின் ரகசிய வீட்டுக்குள் நுழைந்தேன். அத்தனை ரகசியமாக என்னுடைய விரல்கள் பட்டன்களைத் தட்டின. இங்கேதான் எங்கேயோ முனிராஜின் கதைகளுக்
கான ரகசியம் ஒளிந்திருக்கிறது. முனிராஜின் ஆவிகூட இங்கே ஏதாவது ஒரு ஃபைலுக்குள் இருக்கலாம். கண்களால் துளாவ ஆரம்பித்தேன். எதுவுமே தட்டுப்படவில்லை. கணினியை முழுக்க அலசி ஆராய்ந்தேன். எதுவுமே இல்லை. ஒரு சின்ன ஃபைல்கூட இல்லை. ஒரு புகைப்படம்கூட இல்லை.

சிகரட்டை அணைத்துப்போட்டுவிட்டு நண்பன் வந்தான். ‘‘டேய் எதுவுமே இல்லடா… ஒரு சின்னத் தகவல்கூட இல்ல’’ என்றேன். அவனுக்கும் எதுவும் தட்டுப்படவில்லை. ``சாகறதுக்கு முன்னால எல்லாத்தையும் அழிச்சிட்டுச் செத்துட்டாரா உன் குருநாதர்?’’ என்றான்.
``வாய்ப்பே இல்லைடா.. அவர் எழுதும்போதுதான் மாரடைப்பு வந்து செத்திருக்கார்’’ அழுத்திச் சொன்னேன்.

‘‘அவர் எழுதுறதை நீதான் பார்த்ததே இல்லையே... அவர் செத்துக்கிடந்தப்போ கம்ப்யூட்டர் ஆன்ல இருந்துதா?’’

‘‘இல்லடா, ஆஃப்லதான் இருந்தது.’’

சுஜாதாயிஸ்ட் யோசிக்க ஆரம்பித்தான். ‘‘மனசுக்குள் பெரிய கணேஷ்னு நினைப்பு. விசாரணை பண்றான் ராஸ்கல்’’ - கோபத்தால் நுரையீரல்களை நிரப்பினேன்.

``வெயிட்’’ என்றவன் உடனே தன் பேக்கில் இருந்து ஒரு சி.டி-யை எடுத்துப்போட்டு ஏதேதோ செய்யத் தொடங்கினான். அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டுத்தரும் மென்பொருள் ஒன்றைப் பதிவேற்றி அதன் வழி எதாவது தேறுமா எனத் தேடிக்கொண்டிருந்தான். ஒரு மணி நேரத் தேடலுக்குப் பிறகு, ``ப்ச்… ஒண்ணுமே இல்லடா இதுல இதுவரைக்கும் எதுவுமே சேவ் பண்ணலைடா. ஒரு ஃபைல்கூட இல்லடா...’’ என்றான்.

‘`ஒருவேளை முனிராஜ் ஆவி வந்து எல்லாத்தையும் அழிச்சிருக்குமோ…’’ என்றேன். அவன் ஏதாவது சொல்லிக் கிண்டல் செய்வானோ என்று நானே பேச்சை நகர்த்தினேன்.

``இதைக் கவனிச்சியா... இந்த மொத்த கீபோர்டுல `S’ எழுத்து மட்டும்தான் சுத்தமா அழிஞ்சிருக்கு. மத்த கீஸ் எல்லாம் அப்படியே புத்தம்புதுசா இருக்கே’’ என்றேன். தன்னுடைய சுண்டுவிரலால் அந்த `S’-ஐ நான்கு முறை அழுத்திப்பார்த்தான். ``வொய்?’’ என்றான். ``ஒருவேளை `S’ ஃபார் சுஜாதாவா இருக்குமோ?’’ என்றான். நான் எதுவும் பேசவில்லை. அவன் இன்னொரு சிகரெட்டை முடிக்கக் கிளம்பினான். எனக்கு அவனையே முடிக்க வேண்டும்போல இருந்தது.

ஒருவேளை முனிராஜுக்கு கணினி இயக்கவே தெரியாமல் இருக்குமோ? நான் யோசிக்கும்போதே சிகரெட் முடித்தவன் அதையே சொல்லிக்கொண்டு வந்தான். ``டேய் உன் ஆளு வெட்டிபந்தாவுக்காகப் பொய் சொல்லிருப்பாரோ. அவருக்கு கம்ப்யூட்டர் யூஸ் பண்ணவே தெரியாம இருக்குமோ?’’ என்றான்.

என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக முனிராஜ் தன் கோப்புகளை அழித்திருக்க வேண்டும். அவருக்கு ரெக்கவர் பண்ண முடியாத அளவுக்கு அழிக்கிற விஷயங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும். அல்லது இது அவருடைய ஆவியின் வேலையாக இருக்கலாம். தன் கற்பனையின் ஊற்றை யாரும் கண்டறியக் கூடாது என நினைத்திருக்கலாம். நான் நண்பனிடம் இதைப் பற்றி வெளியே சொல்லிவிடாதே என்று அன்பாகக் கேட்டுக்கொண்டேன். அவன் ``நான் சுஜாதா ரசிகன்டா... அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்’’ என்று கிளம்பினான்.

எனக்கு முன்னால் அந்தக் கணினி அப்படியே அமர்ந்திருந்தது. அந்த `S’ பட்டனின் புதிரை அவிழ்க்க மூளை முயன்றபடி இருந்தது. அது சுஜாதாவாக இருக்குமோ? சரோஜா? software? Secret? Self? Satisfaction? Search...


**********

ஆனந்தவிகடன் , அக்டோபர் 2016 இதழில் வெளியான சிறுகதை. 

தீபாவுக்கு என்ன வேண்டும்?
மேம்பாலங்களில் இதை கவனித்திருக்கலாம். யாராவது மேம்பாலத்தின் உச்சியில் வண்டியை நிறுத்தி கீழே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தால், இயல்பாக இன்னொருவரும் வண்டியை நிறுத்தி எட்டிப்பார்ப்பார்கள். அடுத்தடுத்து ஆட்களும் எதற்கு பார்க்கிறோம் என்பதே தெரியாமல் பார்ப்பார்கள். காவல்துறை வந்து கடமையை செய்தால்தான் கூட்டம் கலையும். ஜெயாடிவி அமைந்திருக்கிற ஈக்காட்டுத்தாங்கல் பாலத்திற்கு பக்கத்தில் அடிக்கடி இந்த காட்சி அரங்கேறும். நானும் கூட இப்படி வண்டியை நிறுத்தி எட்டிப் பார்க்கிற வழக்கம் உள்ளவன்தான். சிலநேரங்களில் அதிரவைக்கிற காட்சிகள் காணக்கிடைக்கும். பிணங்கள் கூட மிதந்துகொண்டிருக்கும்.

அப்படித்தான் இன்றும் பாலத்திற்கு கீழே சிலர் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தனர்... நானும் போய் நின்றேன். எப்போதும்போலவே விபரங்களை விசாரித்தேன். ''தீபாம்மா போறாங்க'' என்றார் ஒருவர். எனக்கு புரியவில்லை. ''என்னாம்மா போறாங்க'' என்றேன்... அதாங்க தீபாம்மா என்று அழுத்தமாகச் சொன்னார். புரியமாலே போயிருக்கலாம். அப்படியே மேம்பாலத்தில் இருந்து குதித்துவிடலாமா என்று இருந்தது.

மன்னார்குடி மாபியாவின் அரசியல் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நடுவில் நகைச்சுவை பகுதிபோல நடக்கிறது அண்ணன் மகள் தீபாவின் அடாவடி. அவர் எந்த அடிப்படையில் அதிமுகவை கைகொள்ள துடிக்கிறார். எதற்காக அவர் அதிமுகவிற்கு தலைமை தாங்க நினைக்கிறார் என்பது அம்மாவின் ஆன்மாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது. இருந்தாலும் கடுமையான இந்த வெயில் காலத்திலும் சாமக்கோடங்கி போல போர்வையை போர்த்திக்கொண்டு துணிச்சலாக திரிகிறார். கட்சியின் அடிமட்டத் தொண்டர் போல ''ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிக்கொள்ள கூடாது'' என்கிறார்.

புதிதாக தொடங்குகிற அமைப்புக்கு பெயர் வைக்கும்போது மறக்காமல் தன் பேரையும் சேர்த்துக்கொள்கிறார். பேர் வச்சியே சோறுவச்சியா என்கிற முதுமொழிக்கு இணங்க... கட்சிக்கு என்னம்மா கொள்கைகள் என விசாரித்தால்... ஜெயலலிதா மரண மர்மத்தை கண்டுபிடிப்பது, ஜெ சொத்துக்களை மீட்பது என்கிறார். இரட்டை இலையை காப்பாற்றுவது என்கிறார். இதையெல்லாம் சாதித்து அதை யாரிடம் கொடுக்கப்போகிறார் என்பதுதான் இந்தக்கதையில் இருக்கிறது சுவாரஸ்யமே!

எக்காலத்திலும் தீபாவை ஜெயலலிதா குறிப்பிட்டு பேசியதோ அல்லது ஊடகங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியதோ கூட இல்லை. இவரும் இத்தனை காலமும் எங்கும் எப்போதும் முன்வந்து உரையாடியதில்லை. தீபா தனி மனுஷியாகவும் மக்கள் பிரச்சனைகளுக்காகவோ... அல்லது தன்னுடைய அத்தையின் பிரச்சனைக்களுக்காகவோ கூட வாசல் தாண்டியதில்லை! எங்கோ பதுங்குகுழியில் பல ஆண்டுகளாக இருந்தவர். அத்தைக்கு உடம்புக்கு முடியவில்லை என சாலையில் இறங்கியிருக்கிறார். அவருக்கு அத்தையை தூரத்தில் நிறுத்தியாவது ''தோ பார் ஆன்ட்டி'' எனக்காட்டி அனுப்பியிருந்தால் தமிழ்நாடு இந்த காமெடிகளை தவறவிட்டிருக்கும். நல்லவேளையாக கைதி எண் 9234 புண்ணியத்தில் நமக்கு நல்ல டைம்பாஸ்!

ஒருவேளை இத்தனை ஆண்டுகளும் பதுங்கி இருந்ததே தமிழகத்திற்கான அடுத்த அம்மா ஆவதற்கான தகுதியாக நினைத்தாரோ என்னவோ.... ஆமாம் நம்முடைய முன்னாள் முதல்வரும் அப்படித்தானே... ஆட்சியில் இல்லாத போதெல்லாம் கொடநாட்டில் தானே பதுங்கி இருப்பதைத்தானே முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்தார். ஆட்சியில் இல்லாத போது எப்போதாவது போராட்டத்தில் ஈடுபட்டதை நாடு பார்த்ததுண்டா?

அப்படி பிஸியாக இவ்வளவு காலமும் சும்மாவே இருந்த தீபா... இப்போது திடீரென்று அதிமுகவின் மீதும், தமிழக மக்களின் மீதும் அன்பு உண்டாகி களமிறங்கி தினமும் தவறாமல் காலை மாலை இரண்டுவேளையும் பால்கனியில் நின்று கை ஆட்டிக்கொண்டிருக்கிறார். தன்னளவில் அதுவே இந்த மக்களுக்கு செய்கிற மாபெரும் புரட்சி என கருதுகிறாரோ என்னவோ... இதே காலகட்டத்தில் இங்கே எது எதுக்கோ ஆளாளுக்கு போராடிக்கொண்டிருக்க... இவர் மட்டும் அப்படி ஒன்று தமிழ்நாட்டில் நடப்பதே இல்லைபோல வாழ்ந்துகொண்டிருந்தார்.

இவர் அரசியலில் களமாடத்தொடங்கிய கடந்த நான்கு வாரங்களாக செய்திருக்கிற அதிரடியான அரசியல் நடவடிக்கைகளில் முக்கியமானது ஜெயலலிதாவை போலவே விளக்கெண்ணெய் போட்டு படிய படிய தலை வாரி சீவியது. ஜெவைப்போலவே உடை அணிவது. ஜெவைப்போலவே பால்கனியில் நின்று கைகாட்டுவது. ஜெவைப்போலவே மிமிக்ரி பண்ண முயல்வது... ஜெவைப்போலவே நம்பிவந்த அடிமைகளையும் பேட்டிக்கு வந்த ஊடகங்களையும் வாசலில் மணிக்கணக்கில் தேவுடு காக்கவைப்பது.... மதியம்தான் தூங்கி எழுவது... என எல்லாமே அப்படியே அச்சு அசலாக ஜெதான்!

இதே வேகத்தில் அதிகாரம் கிடைத்தால் நிறையவே ஊழல்கள் செய்து உடன்பிறவா சகோதரியை தத்தெடுத்துக்கொண்டு, தன் வளர்ப்பு மகனுக்கோ மகளுக்கோ பிரமாண்டமான காதுகுத்து விழாகூட நடத்தி நான்தான் உண்மையான அம்மாவின் வாரிசு என நிரூபித்தாலும் நிரூபிக்கலாம்.

செய்தி சேனல்கள் ஒரு சிலரை இரண்டு மூன்றுநாட்களுக்கு செய்திகளின் சுவைக்காக புரட்சி வீரனாக, புதிய நம்பிக்கையாகவெல்லாம் ப்ரேக்கிங் நியூஸ் நாயகர்களாக முன்னிறுத்தும். பிறகு கழட்டி எறிந்துவிட்டு வேறொருவருக்கு பின்னால் ஓடிவிடும். அப்படித்தான் ஜெ அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது ஒவ்வொரு நாளும் அதே புளித்துப்போன அப்பல்லோ அறிக்கைகளையும் வளர்மதிகளின் சரஸ்வதிகளின் முதலைக் கண்ணீர்களையும் காட்டிக் காட்டி மக்களை போராடித்து கொண்டிருந்தனர். அந்த வேளையில், நியூஸ் சேனல்களுக்கு லட்டுபோல வாகாக வந்து சிக்கியவர்தான் தீபா.

முதலில் மண்டையை படிய வாரி சீவிக்கொண்டார். அடுத்து பச்சை நிற சால்வை போர்த்திக்கொண்டார்... கண்களை உருட்டி உருட்டி பார்த்தார். அப்போதும் ஜெயலலிதா சாயல் வரவில்லை. சன்னமாக லிப்ஸ்டிக் அடித்துக்கொண்டு தாடையை மேல் நோக்கி இழுத்து ஒருமாதிரி சோக ஸ்மைலி போல முகத்தை வைத்துப்பார்த்தார்... தேர்ந்த மிமிக்ரி கலைஞரைப்போலவே ஜெயலலிதா பாணியில் பேச முயன்றார். ஆனால் என்னதான் உடலெல்லாம் சூடு போட்டுக்கொண்டாலும் மைக் முன்னால் மியாவ் மியாவ் என்றுதான் நமக்கு கேட்டது. ஏன் என்றால் ஜெயலலிதாவே புலி கிடையாது... நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊழல் பூனைதான். ஆனால் இத்தகைய ஒரு அரசியல் பிரவேசத்தை இந்தியா மட்டுமல்ல உலகமே கண்டிருக்காது!

ஏதோ இருட்டுக்குள் பார்க்கும்போது ஒரு சாயலில் ஜெயலலிதா போல வெள்ளையாக உருண்டையாக இருக்கவே அதையே பயன்படுத்தி பரபரப்பாக்கியது ஊடகங்கள்தான். தீபாவின் கதையில் ஒரு மர்மம் இருக்கிறது. அவர் ஜெ. சாயலில் இருப்பதால் அவர் ஜெயலலிதாவின் மகளாக இருப்பாரோ என எல்லோருக்குமே ஒரு சந்தேகம் இப்போதும் உண்டு. அதனாலேயே மக்களும் இரண்டு நாட்களுக்கு ''அதே கண்ணு அதே மூக்கு கன்பார்ம் அடுத்த ஜெயலலிதாதான்'' என ஏற்றிவிட... கங்கா தன்னை சந்திரமுகியாகவே நினைக்க ஆரம்பித்தார். அதற்கேற்ப வடமாவட்டங்களில் சிலர் அம்மாவின் ரத்த சொந்தம்தான் அதிமுகவின் வாரிசு என உளற... அதற்கு பிறகுதான் பால்வாடி கேர்ளின் பால்கனி பிரவேசம் தொடங்கியது.

அம்மாசாயல் இருக்கு இவங்கதான் அடுத்த முதல்வர் என மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல ஒரு குரூப் தீபாவின் பின்னால் அலைகிறது. சொல்லப்போனால் தீபாவை விடவும் அம்மாவின் சாயல் அதிகமுள்ளவர் ப்ரியாதம்பிதான். அவரைக்கூட வாரிசாக முன்னிறுத்தலாம். ஆனாலும் மானுடகுல வரலாறு இத்தகைய கொடூரமான அடிமைகளை கண்டிருக்கவே கண்டிருக்காது. அம்மாவின் ரத்த சொந்தம்தான் எங்களை ஆளவேண்டும் என போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். குனியறோம் ஏறி மிதிங்க என்று வான்டடாக போய் நிற்கிறார்கள்.

ஆனால் மன்னார்குடியர்களை எதிர்ப்பது அத்தனை சுலபமல்ல. பின்புலத்தில் வலிமையான ஆதரவுக்கரங்கள் இல்லையென்றால் இதைப்பற்றி யாருமே சிந்திக்கவும் தயங்குவார்கள். அந்தக்கரங்கள் பாஜகவின் தமிழக ஏஜென்டுகளுடையதாக இருக்கலாம்.

இங்கே கால்பதிக்க நினைக்கிற பாஜகவோ ஆட்சியை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக ஒருபக்கம் பன்னீர் செல்வத்தை இயக்குகிறது. சுனாசாமியைக்கொண்டு அதிமுகவிற்குள் காய்நகர்த்துகிறது. பாஜகவின் அப்படிப்பட்ட முன்னகர்வுகளில் சிறியரக ஆயுதமாக தீபாவை பயன்படுத்துகின்றன என தாரளமாக சந்தேகிக்கலாம். ஏன் என்றால் செத்துப்போன அத்தையின் சாவில் இருக்கிற மர்மத்தை அறிவதுதான் தீபாவின் தேவை என்றால் இவ்வளவு காமெடிகள் தேவைப்படாது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்கிற அமைப்புகள் வேண்டியதாயிருக்காது. ஆனால் அவருக்கு வேண்டியதெல்லாம் வேறு என்னவோ... அது கிடைத்ததும் நிச்சயம் கிளம்பிவிடுவார்.

24 February 2017

கட்சிகள் ஏன் போராடத் தயங்குகின்றன?
ஓர் எதிர்கட்சித் தலைவர் உண்ணாவிரதம் இருக்கிறார், அது எவ்வளவு முக்கியமான நிகழ்வு. ஆனால் மக்களுக்கு அதைப்பற்றி எந்தவித பரபரப்பும் இல்லை. இன்றும் இன்னுமொரு நாளே என்று கடந்துபோகிறார்கள். இணையத்தில் கூட சலசலப்பே இல்லை. அவருடைய பட்டினிப்போர் யாருக்குமே பதட்டத்தை உண்டாக்கவில்லை. அட வயசான மனுஷன் சோறுதண்ணி இல்லாம கிடக்காரே என்கிற பரிதாப உணர்ச்சியைக்கூட எழுப்பவில்லை.

இப்பல்லாம் இப்படித்தான். கட்சிகளால் நடத்தப்படும் போராட்டங்கள் என்பது யாரோ யாருக்கோ எதற்கோ நடக்கிற ஒன்று... அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று மக்கள் விலகிக்கொள்கிறார்கள். கடைசியாக கட்சிகளோடு இணைந்து பொதுமக்களும் இணைந்து பொது விஷயம் ஒன்றுக்காக போராட்டத்தில் ஈடுபட்டது எப்போது? நினைவிருக்கிறதா?

ஆனால் பாருங்கள்... கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கெல்லாம் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்குகிறார்களோ... அது நியாயமான போராட்டமோ தூண்டப்பட்ட போராட்டமோ... நிச்சயம் கரைவேட்டிகளுக்கு அனுமதியில்லை என்று விரட்டுகிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவு தருகிற அரசியல்வாதிகளைக்கண்டு அஞ்சுகிறார்கள். கரைவேட்டிகளின் போராட்ட வரலாற்று பழைய ரெகார்டுகள் அப்படி...

சில நாட்களுக்கு முன்பு ரயில் மறியல் என்ற பெயரில் திமுகவினர் ஒன்றை நிகழ்த்தினார்கள்... ஜல்லிக்கட்டுக்காக...! ரயிலுக்கு பின்புறம் நின்றுகொண்டு ரயிலை மறித்து நகைச்சுவையெல்லாம் பண்ணினார்கள். அந்த அறப்போராட்டத்தை மக்களெல்லாம் கடுப்போடுதான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ''டேய் அதான் மறிச்சிட்டல்லா... எப்படா கிளம்புவீங்க ...'' எனக் காத்திருந்தனர். திமுக மட்டும் அல்ல வள்ளுவர் கோட்டத்திலும், சேப்பாக்கத்திலும் நடக்கிற பெரும்பாலான 'ஒற்றை மைக்கால் புரட்சி'களையும் உண்ணாவிரத போராட்டங்களையும் மக்கள் அப்படித்தான் கடந்து செல்கிறார்கள்.

பொதுமக்களே இல்லாமல் போராடுவதுதான் கட்சிகளின் சமகால போராட்ட முறையாக மாறி இருக்கிறது. பொதுமக்களுக்கும் பிரதான கட்சிகளின் போராட்டங்கில் ஈடுபாடு மட்டுமல்ல , மரியாதை கூட இல்லாமல் போக ஆரம்பித்திருக்கிறது. காசு கொடுத்து ஆட்களை கூட்டி வந்து போராட்டத்தில் ஈடுபட வைப்பதுதான் பெரிய கட்சிகளின் போக்காக மாறி இருக்கிறது. சிறிய கட்சிகளிலோ அடிவாங்குவதற்காகவே ஒரு கூட்டத்தை வளர்த்து இதற்காகவே காவுகொடுக்கிறார்கள். பெரிய கட்சிகளில் அதன் கொள்கைகளில் ஈடுபாடு உண்டாகி அதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிற தொண்டர்களின் எண்ணிக்கையை... யாராவது அப்படி இருப்பார்களா?

அண்ணாசாலையில் ஸ்பெசன்சர் அருகே எதோ காரணத்துக்காக திமுகவினர் போராட்டத்திற்கு வந்திருந்தனர். என்ன காரணத்திற்காக நிற்கிறார்கள் என்று அங்கிருந்த பொதுமக்கள் யாருக்குமே தெரியவில்லை. கைகோர்த்து நின்றவர்கள் எல்லோருமே காஞ்சிபுரம், வேலூரில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள். டீக்கடையில் கட்சி துண்டோடு நின்ற ஒருவரிடம் என்ன மேட்டர் என விசாரித்தேன். தலைமைல சொல்லிட்டாங்க தல கிளம்பிவந்துட்டோம் என்றார். நல்லவேளையாக இந்த மனித சங்கிலியால் போக்குவரத்து நெரிசல்கள் ஏதும் ஏற்படவில்லை. அந்த போராட்டத்தாலும் எதுவும் நடந்துவிடவில்லை.

ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அது தொடங்கிய சில நிமிடங்களில் போராட்டக்காரர்களை மொத்தமாக காவல்துறை வேனில் பூப்போல அள்ளிக்கொண்டு கிளம்பிவிடும். கல்யாண மண்டபத்தில் பாதிநாள் வைத்துவிட்டு புளியோதரையோ எலுமிச்சை சாதமோ போட்டு அனுப்பிவிடும் என்பது எல்கேஜி குழந்தைகளுக்கும் கூட தெரிய ஆரம்பித்துவிட்டது. அதிலும் சாலை அல்லது ரயில் மறியல்களால் அரசுக்கு எவ்வித பாதிப்புகளும் இருப்பதில்லை... பொதுமக்களுக்குத்தான் சங்கடங்கள்.

சட்டசபையில் அத்தனை உக்கிரமாக சட்டை கிழிய போராடிவிட்டு செயல்தலைவர் ஸ்டாலின் மெரீனாவில் போராட்டத்தில் அமர... அடுத்த நொடியே வாட்ஸ் அப்பில் செய்திகள் பறக்கிறது... ''அடுத்து என்ன... இன்னும் சில நிமிடங்களில் வேன்ல ஏத்தி கூட்டிட்டு போய்டுவீங்க அதானே!'' என்று...

மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கவனிக்கிறார்கள். கடைசியாக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையிடம் தடியடிகளை வாங்கி மண்டைகளை உடைத்துக்கொண்டது எப்போது? நினைவிருக்கிறதா? ஆனால் இதே திமுக... எம்ஜிஆர் ஆட்சிகாலத்திலும் அதற்கு முந்தைய காலங்களிலும் எத்தனையோ முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக நின்று அடிபட்டிருக்கிறது. சிறையில் வாடியிருக்கிறது. களத்தில் இறங்கி போராடியிருக்கிறது. தன்னலமற்று... தியாக உணர்வோடு...

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு போல இல்லை இன்றைய நிலை. அன்றைக்கு இருந்த வாழ்வியல் இன்று முற்றிலுமாக மாறிப்போயிருக்கிறது. அறம் என்பதற்கான அளவுகோல்கள் திருத்தி அமைக்கப்பட்டிருக்கின்றன. காந்தி காலத்து அறப்போர் அல்ல இன்றைய அறப்போர்கள். இன்றைய பெரும்பாலான அறப்போர்கள் கார்பரேட்களால் கச்சிதமாக வடிவமைக்கப்படுகின்றன. அப்படி இருக்க கட்சிகளின் போராட்டங்களும் அதற்கேற்ப மாறி இருக்க வேண்டும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாதிரியான ஊரிலேயே பிரதானமாக இருந்ததே நான்கு சாலைகள்தான். முப்பது ரயில்கள்தான். மக்களுக்கு இருந்த ஊடகங்களும் இன்றுபோல இல்லை. அன்றைக்கு உண்ணாவிரதம் இருந்தால் மக்களெல்லாம் பதறி இருக்கக்கூடும். சக மனிதன் பட்டினியாக கிடப்பதென்பது தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்த காலங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் இன்று ஒருவன் பட்டினியால் செத்துப்போனாலும் யாருக்கும் கவலைப்பட நேரமில்லை. அந்தக்காலத்தில் உண்ணாவிரதம் இருக்கிற அரசியல் தலைவர்கள் என்றாலே தியாகிகள் என நினைத்திருக்கலாம்.

ஆனால் இன்று மக்களுக்கு அரசியல் தெரிகிறதோ இல்லையோ அவர்களுக்கு எல்லாம் அரசியல்வாதிகளின் போராட்டங்களுக்கு பின்னால் இருக்கிற நோக்கங்கள் தெரிகிறது. இந்த போராட்டங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நிலைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.

மக்களுக்கும் போராட நேரமில்லை. டிவி இருக்கிறது. வாட்ஸ் அப்... ஃபேஸ்புக் வந்துவிட்டது. ஃபார்வர்டுகளில் போராட்டம் பண்ணத் தொடங்கிவிட்டார்கள். பணிச்சூழலும் வாழ்வியல் நெருக்கடிகளும் அவர்களை எந்நேரமும் பொழுதுபோக்குகளை நோக்கியும் பொருளாதார தேடலிலும் மூழ்கடித்து வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட அவர்களை கவர்கிற மாதிரியான போராட்டங்களை முன்னெடுப்பது அத்தனை சுலபமல்ல.

இன்று எதிரியாக பாவித்து அடையாள போராட்டங்களை நடத்துகிற கட்சிகள், சென்ற ஆண்டுகளில் இதே ஆட்களோடு கூட்டணி போட்டு கும்மி அடித்ததும், இனி வரும் காலங்களில் பதவிக்காக கூட்டணி வைக்கத் தயங்காது என்பதையும் இந்த திரளான மக்கள் குழு அறிந்தே வைத்திருக்கிறது. அல்லது இது எல்லாமே அவன் தன்னுடைய பதவிக்காக தன்னுடைய சுயலாபத்துக்காக செய்கிறான் என்பதையும் உணர்ந்து வைத்திருக்கிறது.

சென்ற மாதம் சென்னையில் கம்யூனிஸ்ட் தோழர்களால் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை மட்டுமல்ல இந்த நடவடிக்கையால் இந்தியாவே சூறையாடபட்டிருக்கிறது. மக்களெல்லாம் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக எளிமையான கம்யூனிஸ்ட் இயக்கம் போராட்டம் அறிவிக்கிறது. எத்தனை பேர் கூடியிருக்க வேண்டும். அங்கேயும் தோழர்களே தனியாகப்போய் போராடி தனியாகவே மிதிவாங்கினார்கள். பெண்கள் மீதெல்லாம் காவல்துறை முறைதவறி நடந்துகொண்டது... யாருக்கும் கவலையில்லை. காரணம் அது அவர்களுடைய போராட்டமில்லை என நினைக்கிறார்கள். ஏன்? அதற்கான விடைகளை கட்சிகள் கண்டறிய வேண்டும். எங்கே பொதுமக்களிடமிருந்து விலகி இருக்கிறோம் என்பதை கூர்நோக்க வேண்டும்.

கட்சிகள் இன்னமும் அந்தகாலத்து முறையில் நாள்முழுக்க உண்ணாவிரதம் இருப்பது, ரயிலை மறிப்பது என்று பழைய மாடல் போராட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் விமான மறியலாகவாவது செய்யலாம்! ரயிலாக இருந்தால் ஏழைகள்தான் சிக்கலுக்கு உள்ளாகிறார்கள், இதுவே விமானம் என்றால் பணக்காரர்கள்தான் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்... சிஎன்என், டைம்ஸ்நவ் கூட கவர் பண்ணுவார்கள். ஜாலிக்காக சொன்னாலும், கட்சிகள் புதுமையான போராட்ட முறைகளை சிந்திக்க வேண்டும்.

சமூகவலைதளங்கள் வந்துவிட்டன. இங்கே பெருவாரியான மக்களிடையே அடிப்படையான பிரச்சனைகளுக்கு எதிரான மனநிலையை எளிதில் உருவாக்க முடியும். ஆனால் பாருங்கள்கட்சிகள் இன்றும்கூட சமூகவலைதளங்களில் ஒரு கருத்தை வைரலாக்க காசு கொடுக்கிற நிலைதானே இருக்கிறது...? இதற்காக ஏஜென்ஸிகளை நியமித்து வைத்திருக்கிறார்கள். தொண்டர்களின் வழி கொள்கைகளை பரப்பிக்கொண்டிருந்தவர்கள்... இன்று கொள்கைகளை பரப்ப கார்பரேட்டுகளை நாடுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய காமெடி. கோடிகளை கொட்டி மீம்ஸ் போடுவது எவ்வளவு பெரிய சீரழிவு.
போராட்ட முறைகளை முற்றிலுமாக மாற்றுவது ஒருபுறம் என்றால், போராட்டங்களில் அடிப்படையான நேர்மை இருக்கிறது என்பதை மக்கள் மனதில் உருவாக்க முனைவது கட்சிகளின் கடமை. காரணம் நீங்கள் என்னதான் மறைத்தாலும் உங்களுடைய உள்நோக்கக்கொண்டை நிச்சயம் வெளியே தெரிந்துவிடும் என்பதுதான் நவீனதொழில்நுட்பங்களின் காலத்தில் மிகப்பெரிய சிக்கல்.

இதை எதிர்கட்சியான திமுகதான் முதலில் உணரவேண்டும். சட்டசபையில் இறங்கி அடித்ததை நிறையவே பேர் விமர்சித்தாலும் அந்த கெத்து நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை மறந்துவிடக்கூடாது. காரணம் அதில் சுயநலத்தோடு கொஞ்சம் பொதுநலனும் இருக்கிறது என்பதால்தான். #Standwithstalin என்கிற ஒரு ஹேஷ்டேக் சட்டசபையில் சபாநாயகரின் அத்துமீறல்கள் நடந்த நாளில் ட்ரெண்ட் ஆகிறது. அதை ட்ரெண்டாக்கியது மக்கள்தான். எத்தனையோ முறை காசுகொடுத்து முயன்றும் முடியாததை மக்கள் நடத்தியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை எங்கிருந்து உருவாகிறது...?

போராட்டங்களால்தான் இங்கே எல்லாகட்சிகளும் வளர்ந்திருக்கின்றன. ஆனால் இன்று போராட்டங்களில் இருந்து அவை விலக்கிவைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன. அது சரி திமுக மட்டும்தான் குற்றவாளியா... அதிமுக என்ன கிழித்துவிட்டது?

இந்தப்போராட்டக்களங்களில்... அதிமுகவுக்கு பிரச்சனையே இல்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஏன் என்றால் போராட்டகுணம் என்பது தன்னுடைய மரபணுவில் துளியும் இல்லாதவர்களால்தான் அந்தக்கட்சியில் உறுப்பினராகவே இருக்கமுடியும்.போராட்டங்களில் ஈடுபடாமல் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காமல் சும்மா இருந்தே ஆட்சியைப்பிடித்தவர்களும் அவர்கள்தான். அதுவும் சரிதான் போலியான அன்பைவிட உண்மையான வெறுப்பு எவ்வளவோ மேல்தானே...

20 February 2017

ஆதி யோகியின் ஆக்கிரமிப்புகள்


ஆன்மிக வணிகர்... தன்னை யோகி என சொல்லிக்கொள்கிறவர். நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி காட்டுயிர்களுக்கு தொல்லைகொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை வளைத்துப்போட்டு அத்துமீறல்களில் ஈடுபடுகிறார். அவருடைய அக்கிரம செயல்களுக்காக ஏராளமான வழக்குகளை போடுகின்றன பூவுலகின் நண்பர்கள் மாதிரியான சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள். பலரும் எதிர்ப்பு காட்டுகிறார்கள். ஆனால் அவர் தொடர்ந்து காட்டை அழிக்கும் வேலைகளில் குற்றவுணர்ச்சியே இல்லாமல் ஈடுபடுகிறார். 1993ல் 37ஆயிரம் சதுர மீட்டர் இருந்த ஆஸிரம அளவு... இப்போது 55ஆயிரம் சதுரமீட்டராக உயர்ந்து நிற்கிறது. அத்தனைக்கும் ஆசைப்படுகிற அந்த மன அமைதி வியாபாரியின் பெயர் ஜக்கிவாசுதேவ் அவருடைய வணிக நிறுவனத்திற்கு பெயர் ஈஷா.

''நாங்கள் பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளோம்... நாங்கள் செய்த பசுமை புரட்சிக்காக மத்திய மாநில அரசுகள் விருது கொடுத்துள்ளன... '' என்று இந்த காட்டுயிர் அழிப்பான்கள் எப்போதும் மறுப்புத்தெரிவிக்கின்றன.

# ஆனால் காட்டில் இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு நாட்டுக்குள் மரக்கன்றுகளை நடுவது ஏன்?

# காடுகளை அழித்துவிட்டு நாட்டை பசுமையாக்குவதுதான் பசுமைபுரட்சியா?

# காட்டில் இருக்கிற மரங்கள் என்பது வீணாக வளர்ந்து நிற்கிறதா... அந்த மரங்களை அழித்துவிட்டால் அதை நம்பி வாழ்கிற காட்டுயிர்கள் என்ன செய்யும்?

# வனச்சூழல் பாழானால் நம் வாழ்வுச்சுழலும் பாழாகாதா?

# ஏற்கனவே காடுகளின் பரபரப்பளவு குறைந்துவரும் நிலையில் மேலும் மேலும் ஆக்கிரமிப்பது தவறில்லையா?

# காட்டுக்குள் பல ஆயிரம் பேரைக்கூட்டி வைத்து சிவராத்திரி விழா நடத்துவதால் சூழல் சிதைவு உண்டாகும்தானே?

# காட்டுயிர்களின் இடங்களை ஆக்கிரமிப்பதால் அவை ஊருக்குள் வரநேரும். இதனால் MAN ANIMAL CONFLICT வராதா?

என்கிற எளிய கேள்விகளுக்கும் கூட ஈஷா பதில் சொல்லத்தயாராயில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம் வாடா என தொடைதட்டி அழைக்கும். அரசிடமிருந்து பெற்ற விருதுகளையே சாட்சிக்கு நிறுத்திவைக்கும். அதனால்தான் உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட போதும் விளக்கம் கேட்டபோதும்கூட... ''போடா அங்கிட்டு... அந்த அரசாங்கமே எங்க பக்கம்'' என்று ஈஷாவால் சீன்போட முடிகிறது. எத்தனை தடைகள் விதித்தாலும் கட்டிடங்கட்டுவதை நிறுத்தமாட்டோம் என கொக்கரிக்கிறது.

அயோக்கியத்தனங்களுக்கும் ஆன்மிகத்துக்கும் என்னமோ அப்படி ஒரு ஃபெவிகால் நெருக்கம். ஈஷா மட்டும் என்ன விதிவிலக்காக... ஏற்கனவே பெண்களை மயக்கி மொட்டை அடித்து வைத்திருக்கிறார்கள் என்றும் கூட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் உண்டு.

முதலில் லிங்கம் வைத்திருந்தாலும்... எங்களுக்கு மதமில்லை என்றனர். ஆனால் விபூதி கொடுத்தனர். பிறகு லிங்கத்திற்கு பின்னாலேயே சக்தி பீடமோ என்னமோ ஒன்றை வைத்து குங்குமம் கொடுக்க ஆரம்பித்தனர். மலைச்சுனையிலிருந்து இயற்கையாக வருகிற நீரை உறிஞ்சி குளம்வெட்டி உள்ளேயே புனிதக் குளியலுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இது எதுவுமே இந்துமதத்திற்கு தொடர்புடையது இல்லையாம்... எல்லாமே ஓர் இறை கொள்கைதானாம்... இப்போது ஆதியோகி என மிகப்பெரிய சிவன் சிலை ஒன்றை நட்டுவைக்க போகிறது ஈஷா. இதுவும் கூட இந்துமதம் தொடர்பானது இல்லையாம்...

போய்தொலையட்டும் அந்தக் கற்சிலை என்னவாகவும் இருக்கட்டும். ஆனால் அந்த சிலையை வைக்க வெறும் 300 சதுர மீட்டர் அளவுக்குத்தான் மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆனால் சிலையை சுற்றி ஒருலட்சம் சதுர அடியில் பார்க்கிங், மண்டபங்கள், பூங்கா என தன் வேலையை ஆரம்பித்துவிட்டது ஜக்கி வாசுதேவ் சாமியாரின் ஆஸிரமம். இந்த கட்டுமானங்களுக்கு மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் அனுமதி வாங்கப்படவில்லை. வனத்துறையின் அனுமதி பெறப்படவில்லை. சுற்றுசூழல் அனுமதியும் நொன்னைதான். இப்போது ஆக்கிரமித்திருப்பது நொய்யல்ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி.

அப்படிப்பட்ட ஒரு சிலையை திறக்கிற விழாவுக்கு தன்னுடைய இடைவிடாத பணிகளை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு டெல்லியிலிருந்து கோயம்புத்தூர் வரைக்கும் பாய்ந்தடித்துக்கொண்டு ஒரு நாட்டின் பிரதமர் கிளம்பி வருகிறார். அவருக்கு இந்த சாமியாரின் மீதிருக்கிற அத்துமீறல் வழக்குகள் பற்றி ஒன்றுமே தெரியாதா... இப்படி ஒரு முட்டாளைப்போல கிளம்பிவந்து அந்த சாமியாரோடு இழித்தபடி மேடையில் உட்கார்ந்திருந்தால்... அவனுடைய குற்றங்களுக்கு துணைபோவதாக ஆகிவிடாதா?

ஊரில் ஒரு திருடன்... அல்லது திருடன் என குற்றஞ்சாட்டப்பட்டவன். ஒரு காதுகுத்து கல்யாணம் வைக்கிறான். அதில் கலந்துகொள்ள திருடன் தன்னுடைய திருட்டில் பங்குகொடுத்து கவுன்சிலரை அழைத்து வருகிறான் என்றால்... அதற்கான காரணம் என்னவாக இருக்கும். 'இங்க பார் கவுன்சிலரே என் பிரண்டுதான்... பிராது குடுத்தா வகுந்துடுவேன்' என்பதாகத்தானே இருக்கும். ஈஷா செய்ய நினைப்பது இதைத்தான்.

நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியான ஒரு பிரதமர் இதை உணரவேண்டாமா? மலைகிராமத்து மக்களெல்லாம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்... அதுவெல்லாம் பிரதமருக்கு தெரிந்திருக்குமா? அல்லது தெரியாதது போல இருந்துவிடுவாரா? அந்தச் சாமியாரின் மீதும் இப்போது திறந்து வைக்கிற சிலைக்கு பின்னாலும் இத்தனை அத்துமீறல்கள் அல்லது குற்றச்சாட்டுகள் இருக்கும்போது அந்த சிலையை தன்னுடைய திருக்கரங்களால் திறந்துவைப்பது என்பது ஒரு குற்றவாளியின் குற்றத்திற்கு துணைபோவது என்பதைக்கூட அறியாதவரா நம் பாரதப் பிரதமர்.

காவிரி டெல்டாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக வந்திருக்கலாம்... மெரீனாவில் தமிழகமே திரண்டு போராடியபோதாவது வந்திருக்கலாம்... காவிரி பிரச்சனை வெடித்தபோதாவது எட்டிப்பார்த்திருக்கலாம்... அப்போதெல்லாம் வராத ஒரு பிரதமர்... ஒருசாமியாரின் பிஸினஸ் டெவலப்மென்ட்டுக்காக வருகிறார் என்றால் அவர் யாருக்கான பிரதமர்?

17 February 2017

இரண்டு நிமிடங்கள்சென்ற ஆண்டுமுழுக்க ஒவ்வொரு நாளும் எனக்கு நானே சொல்லிக்கொண்ட மேஜிக் நம்பர் - 90. ஒவ்வொரு நாளும் என் மாரத்தான் பயிற்சியை தொடங்கும் போதெல்லாம் 90... 90... 90... என்ற எண்களை உச்சரித்தபடியேதான் தொடங்குவேன். ஓடும்போது சோர்ந்துபோனால் இந்த எண்களை மனது தானாகவே உச்சரிக்கத்தொடங்கி ஊக்கப்படுத்திக் கொள்ளத் தொடங்கும். நைன்ட்டி கட்டிங் பார்ட்டிகளை விடவும் வெறியோடு என்னைத்துரத்தியது இந்த நைன்ட்டி தான்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த மாரத்தானில் 97 நிமிடங்களில் அரைமாரத்தான் தூரமான 21 கிலோமீட்டர்களை கடந்தேன். இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட அந்தப்போட்டியில் எனக்கு கிடைத்தது 128 வது இடம். என்னைப்போன்ற பல ஆண்டு புகைப்பழக்கமுள்ள ஓர் ஆளுக்கு... திடீர் ஓட்டக்காரனுக்கு இதெல்லாம் நினைத்துப்பார்க்கவே முடியாத மாபெரும் சாதனை. ஆனாலும் எனக்கு அதில் திருப்தியே வரவில்லை.

ஓட்டப்பயிற்சி அப்படித்தான்... உங்களை லூசு போல மாற்றிவிடும். எவ்வளவு ஓடினாலும் ஓயவிடாது. இலக்குகளை அதிகமாக்கிக்கொண்டேதான் செல்லும். இலக்குகளே இல்லையென்றாலும் புதிய இலக்குகளை தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். அதனால்தான் டைம்பாஸுக்கு ஓட ஆரம்பித்த பலரும்... சைக்ளிங்... ஸ்விம்மிங்... கோச்சிங் என அடுத்தடுத்து ஏதோதோ செய்துகொண்டிருக்கக்காரணம். பெங்களூரில் தோன்றிய அத்தகைய புதிய இலக்குதான் இந்த 90நிமிட இலக்கு!

எலைட் ரன்னராக ஆவதற்கான முதல் படி....

2016ஆம் ஆண்டின் சென்னை மாரத்தானில் 90நிமிடங்களுக்குள் பந்தய தூரத்தை கடப்பது. இதை சாதித்தால் நிச்சயம் டாப் 20 இடங்களில் ஒன்றை நிச்சயம் எட்டிவிட முடியும் என்பது என்னுடைய கணக்கு. நான்காயிரம் பேரில் 20வது இடம் என்பதெல்லாம் கனவில் கண்டுக்கலாம்... அல்லது சினிமாவில் பண்ணிக்கலாம்... பாணி இலக்கு!

நண்பர்கள் சிலர் ஊக்கப்படுத்தினாலும், எல்லோருக்குமே இதில் அச்சங்களும் சந்தேகங்களும் இருந்தன. காரணம் மிக அதிகப் பயிற்சியும், காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும்... அதோடு என்னுடைய புகைப்பழக்கத்தால் நார்நாராகிப்போன உடலும்... கூடவே இதுமாதிரியான இலக்குகள் கொடுக்கிற மன உளைச்சலும்... அச்சத்தை உண்டாக்கியது.

விளையாட்டு வீரர்களுக்கு இருக்கிற மிகப்பெரிய சாபக்கேடு இந்த காயங்கள். கண்களுக்கே தெரியாமல் உள்ளுக்குள் உருவாகி வலியால் உயிரை வாங்கிவிடும். காயம் வந்து ஓய்வுக்கு சென்றுவிட்டால் திரும்பிவரும்போது 90மினிட்ஸ் கோட்டையெல்லாம் அழித்துவிட்டு முதலில் இருந்து தொடங்கவேண்டும். எனவே ஜாக்கிரதையாகவும் திட்டமிட்டும் பயிற்சிகளை மேற்கொள்ளத்தொடங்கினேன். தனியாக பயிற்சியாளர் வைத்துக்கொள்கிற அளவுக்கு வசதிகள் கிடையாது. ஓட்டக்குழுக்களோடு இணைந்து பயிற்சி செய்வதிலும் ஏனோ எனக்கு ஈடுபாடு இல்லை. எனவே நானே கற்றுக்கொள்ள முடிவெடுத்து படிக்க வேண்டியதாக இருந்தது. யூடியூப் வீடியோக்கள் உதவின. சமூகவலைதளங்களில் இயங்குகிற ரன்னிங் குழுக்கள் உதவின.

இதுபோன்ற அதிவேக ஓட்டத்திற்கு அவசியமே உடல்வலிமைதான். அதை அதிமாக்கவேண்டியது அவசியம் என்பதால் ஒவ்வொருநாளும் ஓட்டத்தை விட இரண்டுமடங்கு அதிகமான நேரத்தை உடற்பயிற்சிக்கென ஒதுக்கினேன். கூடவே என் உடல் எடையையும் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள, LCHF டயட் முறையை முடிந்தவரை பின்பற்றினேன். அது நிஜமாகவே நன்றாக உதவியது. தேவையான போஷக்கையும் அளித்தது. புத்தகங்கள் வாசிப்பது, ஓட்டப்பயிற்சியை திட்டமிடுவது என எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. 97 என்கிற என்னுடைய சாதனை எண்... படிப்படியாக குறைய ஆரம்பித்திருந்தது.

97... 96ஆக மாற மிகமிக மெனக்கெட வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு விநாடியைக் குறைப்பதற்கும் பல நூறு கிலோமீட்டர்கள் ஓடி பயிற்சிபெறவும்... உடற்பயிற்சிகள் செய்யவும்வேண்டியதாக இருந்தது.

ஒரு சிறிய விபத்து. 2016 ஏப்ரலில் மாதம் கணுக்காலில் காயம்.

நான் எப்போதும் பயிற்சி பெறும் பூங்காதான். அதன் ஒவ்வொரு இன்ச்சும் கண்ணுக்கு மட்டும் அல்ல மனதிற்கும் அத்துப்படி. இருந்தும் உடைந்து போயிருந்த டைல்ஸ் ஓன்று காலை பதம் பார்த்தது. கணுக்கால் அப்படியே மடங்கிவிட்டது. ஆரம்பத்தில் அது பெரிதாக வலியெல்லாம் இல்லாமல் இருக்கவே, உடைந்த காலோடேயே பயிற்சியை தொடர்ந்தேன். கொஞ்சமாக வலி வர ஆரம்பித்தது, அது நாள்பட சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஓட்ட வியாதிகள் பலவும் அப்படித்தான் பார்க்கிற பெண்கள் மேலெல்லாம் வருகிற காதல் போல அதுபாட்டுக்கு வரும் போகும்... ஆனால் இது ஏதோ டீப் லவ் போல... அப்படியே தங்கி விருந்து சாப்பிடத்தொடங்கிவிட்டது.

அடுத்த பத்து நாளில் கணுக்கால் மூட்டு பந்துபோல வீங்கிவிட...சுதாரித்துக்கொண்டு டாக்டரிடம் போனேன். அவர் அடுத்த ஒருமாதத்திற்காவது ரெஸ்ட் எடுங்க என சொல்லிவிட்டார். சிறப்பு... வெகு சிறப்பு...

பயிற்சிகளை நிறுத்தினேன். ஒவ்வொரு நாளும் 90 என்கிற அந்த எண் கனவில் எல்லாம் வந்து தொல்லை பண்ணும். நினைத்து நினைத்து குமைவேன். ஒருமாதம் எப்போது முடியும் என வெறியாக இருக்கும். ஆனால் தொலைதூர ஓட்டக்காரனுக்கு இருக்கவேண்டிய முக்கிய குணங்களில் ஒன்று காத்திருப்பது. இல்லையென்றால் மிக அதிக தூரத்தை பொறுமையாக ஓடிக்கடக்கவே முடியாது. அதனால் இந்தக் காயம்பட்ட காலகட்டம் பொறுமையாக இருப்பதற்கான வலிமையை கொடுத்த நாட்கள்... அது ஓட்டத்திற்கு மட்டுமான பயிற்சியாக இல்லாமல் வாழ்க்கைக்கான பயிற்சியாக இருந்தது.

ஒருமாதம் முடிந்தபின்னும் கால்களில் போதுமான முன்னேற்றம் இல்லை. இன்னும் பதினைந்து நாள் ஓய்வு நீட்டிக்கப்பட்டது. நாற்பத்தைந்து நாட்கள் கடந்த நிலையில் என்னுடைய எடை 70கிலோவை எட்டி இருந்தது. கன்னத்தில் கூட தொப்பை உருவாகி இருந்தது. ஓட ஆரம்பித்தால் பழைய வேகத்திற்கு அருகில் கூட வரமுடியாத அளவிற்கு வேகம் குறைந்து இருந்தது. உடலில் வலிமையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஓடத்தொடங்கி பழைய வேகத்தை எட்டமுடியாமல் போகும் போதெல்லாம் உடலைவிட அதிகமாக கண்களில் வேர்க்கும்... இருந்தாலும் பயிற்சி தொடரும். 90-90 மந்திரங்கள் எதுவுமே எடுபடவில்லை.

கொஞ்சம் ஓரளவுக்கு சுமாரான வேகத்தில் ஓடத்துவங்கியதும் இழந்த நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்தது. ஜூன் மாதம் நடந்த நள்ளிரவு மாரத்தான் (D2D) போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டேன். நள்ளிரவில் ஓடியே பழக்கப்படாததும், அந்த இரவில் அடித்த அனலும் கால்களில் மீண்டும் காயத்தை உண்டாக்க... போட்றா இன்னும் ஒருமாசம் ரெஸ்ட்டு.

இது... கலங்கிப்போனேன் கண்மணி சீசன் 2. சென்னை மாரத்தானுக்கு ஆறுமாதங்களே எஞ்சி இருந்தன. ஏற்கனவே வருடத்தில் பாதியை காயங்களுக்கு கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தேன். ஆனாலும் அப்படியெல்லாம் விட்டுவிட முடியுமா. ஏதோ ஒருநாளில் உள்ளுக்குள் இருந்து அந்த நைன்ட்டி பூதம் விழித்துக்கொண்டது. நூறு நாள் நூறு ஓட்டம் என்று முடிவெடுத்தேன்.

விடாப்பிடியாக ஓய்வே இல்லாமல் நூறு நாட்களுக்கு ஓடுவது அவ்வளவுதான். ஆனால் தினமும் குறைந்தது 5கிலோமீட்டர் ஓடவேண்டும் என்பது மட்டும்தான் நிபந்தனை. நமக்கு நாமேதான் நடுவர். இந்தப்பயிற்சி எனக்கு மிக அதிக சுயக்கட்டுப்பாட்டை கொடுத்தது. இந்த காலகட்டத்தில் கொஞ்ச கொஞ்சமாக பழைய வேகத்தை எட்ட ஆரம்பித்தேன். ஆனால் இந்த முறை அதிகமான கவனத்துடன் பயிற்சிகள் தொடர்ந்தன. இந்த பயிற்சிகள் அத்தனையும் வெறுங்காலில் ஓடிதான் என்பதால் அதற்குண்டான விஷயங்களையும் இணையத்தில் தேடி படித்து, எப்படி பாதங்களை பாதுகாப்பது என்பதையும் படிக்க ஆரம்பித்தேன்.

அடுத்த ஐந்து மாதங்களும் விடாத பயிற்சி. முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் சென்னை மாரத்தான் ஒருமாதம் ஓத்திவைக்கப்பட, அந்த ஒருமாதம் லம்ப்பாக கிடைத்தது. பயிற்சியை இன்னும் முடுக்கிவிட்டேன். இந்த ஐந்துமாத காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரத்தை அதிகமாக்கினேன். கிட்டத்தட்ட 7 கிலோவரை எடைகுறைத்தேன். வலிமையை கூட்டும் பயிற்சியை அதிகப்படுத்தினேன். வலிநிறைந்த காலகட்டம் இது.
இருந்தும் 90மந்திரம் முன்னெப்போதையும் விட மிக அதிக நம்பிக்கையோடு மனதில் ஜெபிக்கத் தொடங்கி இருந்தேன். நிச்சயம் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கை பந்தய நாள் நெருங்க நெருங்க அதிகரிக்கத் தொடங்கி இருந்தது. ஒரு கிலோமீட்டர் 4 நிமிடம் 15 நொடியில் கடந்தால் 21கிலோமீட்டர் எவ்வளவு என எந்நேரமும் மனம் கணக்குப்போட்டபடி இருக்கும்.

எங்குமே நிற்கக்கூடாது. தொழில்முறை அத்லெட்டுகளோடு போட்டி போட்டாலும் அவர்களுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாவிட்டால் விலகிவிடவேண்டும். பொறுமை முக்கியம். வெறுங்காலில் ஓடுவதால் பாதையில் கவனம் வேண்டும். எதாவது கூரான பொருட்கள் குத்திவிட்டால் போச்சு... என ஏராளமான நிபந்தனைகளை விதித்திக்கொண்டேன். ஏராளமான ஸ்ட்ராடஜிகள்... ஒவ்வொன்றையும் நானே உருவாக்கி அழித்து சரிசெய்து... இதோ கடந்த ஜனவரி 7ஆம் தேதி சென்னை விப்ரோ மாரத்தானில் ஓடிமுடித்துவிட்டேன்.

ஆனால் இரண்டு நிமிடங்கள் அதிகமாகிவிட்டது. 92 நிமிடங்களில்தான் முடித்தேன். நடுவில் சில கிலோமீட்டர்கள் ஓடமுடியாத அளவுக்கு உடல் சோர்ந்துவிட்டது ஒரு காரணம்... இன்னொரு காரணம் நடுவில் ஒரு மேம்பாலம் குறுக்கிடுகிறது... இன்னொரு காரணம் ஆரம்பத்திலேயே மிக அதிகவேகத்தில் ஓடியது... இப்படி இன்னொரு காரணம்... இன்னொரு காரணம் என இதோ இப்போது வரைக்குமே மனது ஆயிரம் காரணங்களை கண்டுபிடித்தபடிதான் இருக்கிறது.

ஆனால் தோற்றுவிட்டேன் என்று உறுதியாக நம்புகிற இந்த மனதை என்னால் சரிசெய்யவே முடியவில்லை. ஓராண்டாக பழக்கப்படுத்திய ராட்சசன்... அவனால் அத்தனை எளிதில் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மதிப்பெண் குறைந்தாலும் தேர்ச்சி இல்லைதான், ஒரு ரன்னில் தோற்றாலும் தோல்விதான் இல்லையா... இந்த முறை நான் தோற்றுத்தான் போயிருக்கிறேன். வேறு யாரிடமோ அல்ல என்னிடமே...!

சென்னை மாரத்தானில் என்னுடைய நேரம் 92 நிமிடங்களும் 36 நொடிகளும். இதைவிடவும் சிறப்பாக செய்து முடித்திருக்கலாம்தான். ஆனால் கலந்துகொண்ட 3600பேரில் நான் பிடித்திருந்த இடம் 29வது... என்பதில் பெரிய மகிழ்ச்சி!

2014ல் ஓடத்தொடங்கினேன்..  440வது இடத்திலிருந்து அடுத்த ஆண்டு 128ஆவது இடம். அங்கிருந்து இதோ இந்த ஆண்டு 29வது இடம். ஆனால் இது போதாது என்கிறான் உள்ளுக்குள் இருக்கிற ஓட்ட ராட்சசன்....07 February 2017

அவனும் நானும்...

''அவங்க எப்படி இருக்காங்க...''

''உடம்புக்கு முடியாம இருக்காங்க...''

''அதான் என்னாச்சு...''

''ஒன்னும் ஆகலை... சரியாகிட்டாங்க... அவங்க தண்ணி சாப்பிடறாங்க... இட்லி சாப்பிடறாங்க... பீட்ஸா ஆர்டர் பண்ணினாங்க... ஃபேஸ்புக்ல லைக் கூட போட்டாங்க...''

''அப்புறம் ஏன்டா இவ்ளோ நாளா ஹாஸ்பிட்டல்ல வச்சிருக்கீங்க... டேய் அவங்களுக்கு என்னடா ஆச்சு''

''நல்லா சுகமா இருக்காங்க... யூ டோன்ட் பேனிக்''

''அடேய் ஆர்ஜேபாலாஜிகளா... அப்டேட் குடுங்கடா''

''டோன்ட் பேனிக்... உப்புமா சாப்புட்டு உல்லாசமா இருக்காங்க... காபி சாப்பிட்டு கசமுசாவா இருக்காங்க... கொரில்லா கேர்ள்ஸ் அப்டேட் பண்ணுங்க...''

''ஆமாங்கசார்... அவங்க ஆஸ்கிங் டூ கம்மிங் டூ ஹோம்தோட்டம் சார்... செம ஹெல்தி பாடி... கன்னத்துலயே அறைஞ்சாங்க பாருங்க கன்னம் எப்படி பழுத்துருச்சுன்னு...உய் உய் உய்''

''பாரின் டாக்டர் நீங்களாச்சும் சொல்லுங்க... எய்ம்ஸ் டாக்டர்ஸ்.. நீங்களாச்சும் சொல்லுங்க என்ன ப்ராப்ளம்... எங்களை பாக்கவிடுங்க...''

''அவங்களுக்கு சுகர்ல காய்ச்சல் வந்து மூச்சு முட்டி அதுக்காக பிஸியோதெரப்பி குடுக்கும்போது ஹார்ட் அட்டாக் வந்து, நுரையீரல்ல இன்ஃபெக்‌ஷன் ஆகிடுச்சு... அதனால பாக்க முடியாது''

''ஓஹ்ஹ் பெரிய வியாதிதான்... எங்க போட்டோ காட்டு''

''டேய் நீ திமுக காரனா... கெளம்புடா ராஸ்கல்... அவங்க குணமாக பிரார்த்தனை பண்ணும் போது டிஸ்டர்ப் பண்ணாத... கொன்னுடுவோம்''

*********
சில நாட்களுக்கு பிறகு

''அடேய் அநியாயமா கொலை பண்ணீட்டீங்களேடா... பாவிகளா ''

''ஹார்ட் அட்டாக்காகிடுச்சு... காப்பாத்த முடியல...''

''மெடிக்கல் ரிப்போர்ட் குடுங்கடா..."

''அதான் சொல்றோம்ல இதயம் துடிக்கல...''

''அந்த பாரின்டாக்டர கூப்புடுங்கடா...''

''டாக்டர்ஸ்லாம் பிஸிங்க... இப்போதைக்கு முடியாது... பதவியேற்பு விழா இருக்கு அப்புறம் பேசுவோம்''

''எம்பால்மிங்லாம் பண்ணிருக்கீங்களேடா... காலை காணோமேடா...''

''டாக்டர் இவனைப்பார்த்தா பாகிஸ்தான் உளவாளி மாதிரி இருக்கு... ஒரு விஷ ஊசிய போட்டு கொல்லுங்க...''

***********

சிலநாட்களுக்கு பிறகு...

''என்ன டாக்டர் என்ன வேணும்''

''உண்மைய சொல்லணும்''

''அப்படி ஓரமா உக்காந்து சொல்லிட்டுப்போ''

''அவரை யாருமே கொலை செய்யவில்லை
அவர்களாகத்தான் செத்தாங்க...''

''யாரு டாக்டர்...''

''அதான் அவங்க''

''எவங்க''

''அதான் செத்துப்போனாங்களே...''

''ஓ அவங்களா... மறந்தே போச்சு... அதான் செத்துட்டாங்களே... பாவம் ரொம்ப நல்லவங்க... இரும்புமாதிரி இருந்தாங்க''

''ஆங் அவங்கதான்... அவங்களேதான் அவங்களைதான் யாரும் கொலை பண்ணலை... அவங்களாதான் ...''

''அதான் தெரியுமே...''

''அதை சொல்லதான் பாரின்லருந்து வந்தேன்...''

''ஓ நன்றி டாக்டர்... வரிங்களா ஜல்லிக்கட்டு பாக்கலாம்...வந்தேறிமாடு சாப்ட் மாடு... நாட்டு மாடு ஒன்லி வெரி ஷார்ப் கொம்பு... யூ டோன்ட் வொர்ரி தமிழன்ஸ் அடக்கிபையிங்''

''இல்லைங்க... அவங்களுக்ககு யாரும் விஷம் வைக்கல.. தப்பான மருந்து கொடுக்கல ''

''யாரு...''

''அவங்கதான்... பதவி ஏத்துக்கப்போறாங்களே அவங்கதான்... அவங்க நிரபராதி... சுத்தமானவங்க... நம்புங்க ப்ளீஸ்''

''அதை ஏன் இப்ப வந்து சொல்றீங்க...''

''அன்னைக்கு கேட்டீங்களே''

''ஆமா... அதான் இயற்கையா செத்துட்டாங்கனு நீங்கதான் சொல்லிட்டீங்களே...''

''இருந்தாலும் உங்க டவுட்டை க்ளியர் பண்ணனும்ல...''

"சரி சொல்லுங்க எப்படி செத்தாங்க...''

''அதான் அவங்களே செத்துட்டாங்க''

''டீடெயில்லா சொல்லுங்க...சிசிடிவி பூட்டேஜ் காட்டுங்க... ரிப்போர்ட் எங்க ''

''வித் இன் பாராமீட்டர்ஸ்தான் சொல்லமுடியும்''

''ஓஓஓஓஓ அப்ப சரி... பாராமீட்டரே சொல்லிட்டார்னா கரெக்டாதான் இருக்கும்... ஏன்னா அவர் அருவா கத்திலாம் வச்சிருப்பார் பார்த்துகிடுங்க''

''எம்பால்மிங்...''

''எம்ஜிஆருக்கே பண்ணோமே...''

''காலு...''

''அது காமராஜருக்கே பண்ணோமே...''

''மெடிக்கல் ரிப்போர்ட்ட்''

''பாராமீட்டர்ர்ர்...''

''ஓஓஓஓ அப்ப ஓகே...''

''சரி டவுட்டு க்ளியர் ஆய்டுச்சா''

''எங்களுக்குத்தான் டவுட்டே இல்லையேடா...''

''இல்லை நாளைபின்ன டவுட்டு வந்தா''

''வந்தா சும்மா வுடுருவீங்களா வீடு புகுந்து மண்டைய உடைச்சிற மாட்டீங்க''

''அப்ப உனக்கு டவுட்டு வராது''

''வராது''

''ரைட்டு''

''ஆமா ஹாஸ்பிட்டல்ல வசூல் குறைஞ்சிருச்சா... அதான் ஆள் அனுப்பி விளக்க சொன்னாய்ங்களா''

''இல்லையே...''

''வேற யாரு...''

''அவங்கதான்''

'' அவங்கன்னா யார்ரா...''

''அதான் பாஸ் விஷம் வச்சாங்களே... அவங்கதான்...இய்ய்ய்ய்.... இல்ல இல்ல... கவர்மென்ட்தான்... அரசுதான்... அய்யோ அவங்கள யாரும் கொல்லல அவங்களாதான் செத்தாங்க... ''

''வா நாம ஜல்லிகட்டு பாப்போம்... நீயும் என்னை மாதிரிதான் போல... இவளோ அப்பாவியா இருக்க... இப்படிலாம் உளறாத... ஆசிட் அடிச்சி உயிரோட எரிச்சிருவாங்க... அப்புறம் நீயும் இயற்கையாதான் செத்தனு உங்க ஊர்லருந்தே ஒருத்தன் வந்து சொல்லுவான்... உங்க தாத்தா பாட்டிலாம் எவ்ளோ அறிவுள்ளவங்க தெரியுமா... சரி விசிட்டிங் கார்ட் வச்சிருக்கியா... ஒன்னு குடு பாப்போம்''

04 February 2017

கன்னிவாடி கண்டெடுத்த ஆல்ரவுண்டர்...


எழுத்தாளர்கள் குறித்தும் எழுத்துகள் குறித்தும் பரிச்சயம் உண்டான போது நான் பேசிப்பழக நினைத்த இரண்டு எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தியும், க.சீ.சிவகுமாரும். இலக்கியம் என்றாலே அது சிடுமூஞ்சிகளுக்கானது என்பகிற மரபான இயல்புகளை உடைத்தெறிந்த விசித்திரர்கள் இந்த இருவரும். ஒரே காலத்தில் உருவாகி வந்த தமிழின் மிகமுக்கியமான இரண்டு படைப்பாளிகள். நம் வாழ்வில் அன்றாடம் கடக்கிற சோகமான தருணங்களையும் கூட எளிய பகடியோடு களுக்கென புன்னகைக்க வைக்கிற இரண்டு வரிகளை வீசிச்செல்கிற அபாரமான எழுத்துக்காரர்கள். நான் எழுத விரும்புகிற மொழியை நடையை அவர்களிடமே இப்போதும் எடுத்துக்கொள்பவனாக இருக்கிறேன். ஆனால் பாஸ்கர்சக்தியோடு வாய்த்த நட்பும் பழக்கமும் சிவகுமாரோடு சரியாக அமையவில்லை. அதற்கு அவர் அச்சு அசலாக என் தந்தையின் சாயலில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு என் தந்தையை பிடிக்காது. அதனாலேயே என் தந்தையில் சாயலற்ற அவருடைய எழுத்துகளோடுதான் அதிகமும் பழகியிருக்கிறேன்.

க.சீ.சிவகுமாரின் எழுத்துகள் எனக்கு ஆதிமங்கலத்து விசேஷங்களின் வழிதான் அறிமுகம். முகத்தை சிரித்தமாதிரியே வைத்துக்கொண்டு ஒரு மொத்த நூலையும் வாசித்தது அதுதான் முதல்முறை. முதல் முறை படித்து பித்துப்பிடித்தது போல அடுத்தடுத்து மூன்று... நான்கு... ஐந்து என பல முறை படித்து தீர்த்த நூல் அது. அங்கிருந்துதான் அவருடைய சிறுகதைகளுக்குள்ளும் கட்டுரைகளுக்குள்ளும் பயணித்திருக்கிறேன். எல்லா கதைகளிலும் சிவகுமார் இருப்பார். கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பார். கிரிக்கெட்டும் காதலும்தான் சிவகுமாரின் கதைகளில் நிறைந்து இருந்தன. அவர் எப்போதும் இப்போதும் கிரிக்கெட் ஆடுகிறவராகவே இருந்தார்.

வேலை இல்லாத கிராமத்து வாலிபனாக, சைக்கிளில் திரிந்து பெற்றோரிடம் எந்நேரமும் திட்டுவாங்குகிற, ஊருக்குள் ஒரு பெண்ணையும் விடாமல் விரட்டி விரட்டி காதலித்து தோற்கிற வாலிபனாக... சோகமாக திரியும் காதலனாக, காசின்றி கையறு நிலையில் குடும்பத்தை எதிர்கொள்கிறவனாக, தான்தோன்றியாகத் திரியும் நாடோடியாக, என்று க.சீ.சிவகுமாரின் கதைகளில் தோன்றுகிற நாயகர்கள் எல்லோருமே வாழ்வை வேதனையோடுதான் எதிர்கொள்வார்கள். ஆனால் அந்த வேதனைகளைத்தாண்டிய ஒரு கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் அவர்களிடம் நிலைத்து இருக்கும். அதுதான் சிவகுமாரின் இயல்பாகவும் இருந்தது. எல்லா வேதனைகளையும் புன்னகையோடு கடக்கிற மனிதராகவே அவர் இருந்தார். புன்னகைக்காத அவருடைய புகைப்படங்களை நான் கண்டதேயில்லை.

தமிழ் இலக்கிய உலகம் குரூரமானது. அது யாரைக் கொண்டாடும் யாரை நிராகரிக்கும் யாரை வேண்டுமென்றே தள்ளிவைக்கும் என்று கணிக்கவே முடியாது. க.சீ.சிவகுமார் தன்னுடைய அபாரமான மொழி ஆளுமைக்காகவும் அழகான கதைகளுக்காகவும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இருக்கவேண்டியவர். அவரைவிடவும் சுமாராக எழுதுகிற மொழிகுறித்த எவ்வித பயிற்சியோ ஆற்றலோ இல்லாதவர்களுக்கு கிடைத்த பீடங்கள் கூட சிவகுமாருக்கு கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் எனக்கு எப்போதுமே இருந்து இருக்கிறது. அவருக்கு விருதுகளும் கூட அதிகமாக கிடைத்ததாக நினைவில்லை. சமகாலத்தின் டாப் சிறுகதை எழுத்தாளர்கள் குறித்த குறிப்புகளில் அவர் பெயர் இடம்பெறாமல் போயிருக்கிறது. மிகசிறந்த நூறு கதைகள் பட்டியல்களில் அவருடைய கதைகள் இருந்ததே இல்லை. அதை அவரிடமே கூட நான் பகிர்ந்துகொண்டது உண்டு. அதையும் தன்னுடைய புன்னகையோடு அடபோங்க பாஸு என்று கடந்து போகிறவராகவே அவர் இருந்து இருக்கிறார். நான்குநாட்களுக்கு லைக் வரவில்லை என்றாலே எழுதுவதை நிறுத்துகிறவர்களின் காலகட்டத்தில், சிவகுமார் எவ்வித வாழ்த்துகளும் இன்றி மரியாதைகளைப்பற்றி கவலையின்றி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். சிறுகதைகளின் மீது தீராப்ரியம் கொண்டவராகவும் அவர் இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு காட்சிப்பிழை இதழில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் பற்றி எழுதியிருந்த கட்டுரை நினைவுக்கு வருகிறது. சினிமா ஒரு அம்மாஞ்சி எழுத்தாளனை எப்படி வஞ்சித்து சுரண்டிவிட்டு சக்கையாக தூக்கி அடித்தது என்பதை எழுதியிருப்பார். அதையும் கூட புன்னகைக்கவைக்கும் படிதான் எழுதி இருப்பார். அந்த அனுபவங்கள் நமக்கு நேர்ந்திருந்தால் என்று எண்ண ஆரம்பித்த தருணத்தில் நான் அழுதுகொண்டிருந்தேன். என் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. அத்தகைய மோசமான அனுபவங்களை அவர் எதிர்கொண்டிருந்தார். அதனாலேயே சினிமாவிலிருந்து விலகி இருந்து இருக்கிறார்.

தமிழ் இலக்கிய உலகம் எவ்வளவு விசித்திரமானது என்றால், ஒரு எழுத்தாளனை பற்றி அறிந்துகொள்ள அவன் சாகவேண்டியதாக இருக்கும். இரங்கல் குறிப்புகளின் வழிதான் எழுத்தாளர்களை அடையாளங்காணும். எழுத்தாளர்கள் இறந்தபிறகுதான் அவரை வாசிக்கும். அவருடைய எழுத்துகளை ஆய்வுக்கெல்லாம் உட்படுத்தும். இதோ இப்போது சிவகுமார் இறந்துவிட்டார். இனியாவது வாசிக்கட்டும். இனியாவது கொண்டாடட்டும்.
கன்னிவாடி ஆல்ரவுண்டருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.